Advertisement

எந்தன் காதல் நீதானே 

அத்தியாயம் 16 

சிறிது நேரம் சென்று ஜெய் அறைக்கு வந்து பார்த்த போது, வெண்ணிலா படுத்திருந்தாலும் உறங்காமல் தான் இருந்தாள். 


கதவை சாற்றி விட்டு மனைவியைச் சமாதானம் செய்யும் எண்ணத்தில், அவள் அருகில் படுத்து, “சாரி, அடிக்கணும்னு அடிக்கலை கோபத்துல அடிச்சிட்டேன்.” என அவன் அவளது கன்னத்தைத் தொட, பட்டென்று அவன் கையைத் தட்டி விட்டு வெண்ணிலா திரும்பிப் படுத்துக்கொண்டாள். 

“திமிரு டி உனக்கு. உனக்குப் போய்ப் பாவம் பார்த்தேன் பாரு என்னைச் சொல்லணும்.” என ஜெய்யும் திரும்பிப் படுத்துக் கொண்டான். 

மறுநாள் காலை ஜெய் எழுந்த போது வெண்ணிலா அறையில் இல்லை. அவன் எதிர்பார்த்தது தான். 

சும்மாவே அப்பா தனியாப் போகச் சொன்னார், இப்ப இவளை அடிச்சது வேற தெரிஞ்சது, என்னை மட்டும் தனியா போகச் சொன்னாலும் சொல்லுவார். எல்லார் முன்னாடியும் இவ எப்படி இருப்பா தெரியலையே என நினைத்தபடி ஜெய் அலுவலகம் செல்ல கிளம்ப ஆரம்பித்தான். 

மாமாக்கள் இருவரின் முன்னிலையில் நைட்டியில் செல்லக் கூடாது என அவள் அம்மா சொல்லியிருப்பதால், வெண்ணிலா குளித்துச் சேலை அணிந்து கீழே செல்வதுதான் வழக்கம். 

இன்று குளிக்காமல் சுடிதார் மாற்றிக் கொண்டு கீழே வந்துவிட்டாள். காலை சமையலில் நின்று உதவியவள், ஜெய் கீழே வந்ததும், “அத்தை, நான் குளிச்சிட்டு வந்திடுறேன்.” என மாடிக்கு சென்று விட… பிறகே மகன் கீழே இருப்பதை அமுதா கவனித்தார். 

“அவ லேட்டா எழுந்தா அதுதான் குளிக்காம கீழே வந்திட்டா… குளிச்சிட்டுதான் அவ சாப்பிடுவா, நீங்க எனக்கு எடுத்து வைங்க.” என்றதும், அமுதா உணவு கொண்டு வந்து வைக்க, ஜெய் உண்ண ஆரம்பித்தான். 

அவன் மட்டும் தனியாக உட்கார்ந்து உண்ணுவதைக் காமாக்ஷி ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டே மாடிக்கு சென்றார். கணவன் அலுவலகம் செல்லும் வரை வெண்ணிலா அவனுடன் தானே இருப்பாள். 

ஜெய்க்கு அந்தப் பார்வை புரியாமல் இல்லை. ஆனால் கைப்பேசியைப் பார்த்துக் கொண்டு உண்டு முடித்தவன், அப்படியே அலுவலகம் சென்றால் சந்தேகம் வரும் என மாடிக்கு செல்ல, வெண்ணிலா குளித்துக் கொண்டிருந்தாள். 

இவன் அலுவலகம் செல்லும் வரை அவள் வெளியே வரமாட்டாள் எனத் தெரியும். அதனால் கதவை தட்டி, அலுவலகம் சென்று வருவதாகச் சொல்லிவிட்டுத்தான் சென்றான். 

குளித்துவிட்டு வந்தவள், அப்படியே அறையிலேயே உட்கார்ந்து விட்டாள். 

மற்றவர்கள் கூட அவளை அப்படி நினைக்கலாம். ஆனால் ஜெய் கேட்டது உண்மையாகவே வலித்தது. அவனுடன் எப்படி வாழ்கிறேன் என அவனுக்குப் புரியாதா.. இப்படியே விட்டால் மீண்டும் இதையே கேட்டு வைப்பான். ஒரு தடவை இப்படி இருந்தால்தான் மீண்டும் இப்படிப் பேச மாட்டான் என நினைத்தாள். 

அன்று ஜெய் அலுவலகத்தில் இருந்து நேரமே வீட்டுக்கு வந்துவிட்டான். மனைவிக்குப் பிடித்த நொறுக்குத் தீனிகள் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்திருந்தான். 

வெண்ணிலா அன்றுதான் பூஜை அறையைத் தீவிரமாகச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். “வந்து சாப்பிட்டு பண்ணு.” என்றால், வருகிறேன் எனக் குரல் மட்டும் வரும். ஆனால் ஆள் வருவதாகக் காணோம். அமுதா காமாக்ஷி எல்லாம் சொல்லியும் கேட்கவில்லை. 

வெண்ணிலா முழுவதும் ஒதுங்க வைத்து, பூஜை சாமான்கள் எல்லாம் விளக்கி விட்டு வரும் பொழுது, அவளுடைய பங்கு அப்படியே இருக்க… மற்றவர்களுக்காக அதை எடுத்து கொரித்தவள், கணவன் எங்கே என்று நோட்டம் விட, ஜெய் அங்கு இல்லை. 

கணவன் அங்கு இல்லாதது ஏமாற்றமாக இருந்த போதிலும், மற்றவர்களுடன் பேசும் சாக்கில் அதை மறைத்துக் கொண்டாள். 

ஜெய் உணவு உண்ணும் நேரத்திற்குத் தான் இறங்கி வந்தான். உணடுவிட்டு உடனே அவன் மாடிக்கு சென்றுவிட, வெண்ணிலா தாமதமாகவே சென்றாள். 

அறைக்கு வந்தவள் அவனைக் கண்டுகொள்ளாமல் நைட்டியை எடுத்துக் கொண்டு குளியல் அறை நோக்கி செல்ல, 

“நீ ரொம்ப ஓவரா போற, என் மேல கோபம்னா அதை நான் தனியா இருக்கும் போது காட்டு, காலையில நான் தனியா சாப்பிடுறதை சித்தி சந்தேகமா பார்த்தாங்க. நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா, மத்தவங்களுக்கும் சந்தேகம் வரும். சும்மாவே உன் பெரிய மாமாக்கு என்னைக் கண்டா ஆகாது. அதுக்குப் பிறகு உன் இஷ்டம்.” என்றவன், கைப்பேசியை எடுத்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தான். 

“நீங்க அப்ப ஒண்ணுமே பண்ணலை. நீங்க ரொம்ப நல்லவர். நான்தான் தேவையில்லாம பிரச்சனை பண்ணிட்டு இருக்கேன்.” என்றாள் வெண்ணிலா. 

“நான் அப்படிச் சொல்லலை. என் மேலத்தானே கோபம் அது எனக்கு மட்டும் தெரிஞ்சா போதும் ஊருக்கே தெரிய வேண்டாம்.” 

ஜெய் சொன்னதற்கு வெண்ணிலா பதில் சொல்லாமல் இருக்க, “நீ என்ன பண்ணாலும் நான் பொருத்து போவேன்னு நினைக்காத. காலையில நான் சாப்பிடாம கிளம்பிப் போக எவ்வளவு நேரம் ஆகி இருக்கும். என் கோபத்தைக் கிளறாதே சொல்லிட்டேன்.” 

“கோபம் வந்தா என்ன என்னைத் திருப்பி அடிப்பீங்களா? அடிக்கிறதுன்னா அடிச்சுக்கோங்க எனக்கு ஒன்னும் கவலை இல்லை.” 

“என்னை எதோ கொடுமைக்காரன் மாதிரி பேசுற, நான் அடிச்சது இல்லை, நான் அப்படிக் கேட்டது தான் உனக்குக் கோபம்.” 

“நீயே சொல்லு, கல்யாணத்துக்கு முன்னாடி நான் உனக்காகத்தான் வருவேன். ஆனா நீ என் கூடப் பேச கூட யோசிப்ப.” 

“அதுல உன் தப்பு ஒன்னும் இல்லை. சின்ன வயசுலேயே உனக்குக் கரண் தான்னு முடிவு பண்ணி வச்சிருந்தாங்க. நீ உன் வீட்ல சொல்றது தான் கேட்க முடியும்.” 

“கரணோட கல்யாணம் நின்னதும், நீ சாகிற அளவுக்குப் போனதா, கல்யாணத்துக்குப் பிறகு உன் பாட்டி சொல்லி கேட்டிருக்கேன். அப்போ எல்லாம் என் மனசு என்ன பாடுபட்டுச்சு தெரியுமா?” 

“இந்தப் பொண்ணு மனசுல என்ன இருந்துச்சுன்னு கேட்காம கல்யாணம் பண்ணிக்கிடோமேன்னு எவ்வளவு தவிச்சு போனேன் தெரியுமா? நான் இதைப் பத்தி வேற யார்கிட்டயும் பேச முடியுமா? உன்கிட்ட கூடப் பேச முடியலை.” 

“நமக்குக் கல்யாணம் ஆகிடுச்சு, இனி எதுவும் மாறப் போறது இல்லை. நான் சந்தோஷமா இருக்கேன். நீ இருக்கியான்னு கேட்டேன் அவ்வளவுதான்.”

வெண்ணிலா அப்போதைக்கு எதுவும் பேசாமல் குளிக்கச் சென்று விட்டாள். ஜெய்யும் பேசாமல் படுத்துக் கொண்டான். 


குளித்து விட்டு வந்தவள், துவைத்த உடைகளை மடித்துக் கொண்டே கணவனைப் பார்க்க, அவன் உறங்காமல் தான் இருந்தான். 

“எனக்கு எப்படி உங்களுக்குப் புரிய வைக்கிறதுன்னு தெரியலை.” 

“நீங்க சொல்ற மாதிரி உங்களைத் தவிர்த்ததுக்குக் காரணம் எங்க வீடும், அங்கிருந்த சூழ்நிலையும்தான். ஆனா அதோடு எனக்கே எங்க நான் உங்களை விரும்பிடுவேனோன்னு பயம்.” 

“அது மாதிரி எதாவதுனா ரெண்டு வீட்டுக்கும் சண்டை வந்து, நாம ஒருத்தருக்கு ஒருத்தர் பேசாமலே போய் இருப்போம். எங்க அம்மாவுக்குப் பிறந்த வீடுன்னு ஒன்னு இல்லாமலே போய் இருக்கும்.” 

“ஓ… அப்ப உனக்கு என்னைபிடிச்சு தான் இருந்திருக்கு.” என ஜெய் வெகு நேரம் கழித்து வாயைத் திறக்க, 

“ம்ம்…ஆனா அது நடக்காதுன்னு எனக்குத் தெரியும். கரணோட கல்யாணம் நின்ன போதும், அதுக்காக நான் உங்களோட கல்யாணம் நடக்கும்னு எதிர்பார்க்கலை. எங்க அம்மா சொன்ன போது கூட எனக்கு நம்பிக்கை இல்லை.”

“கரண் அத்தானுமே வீட்ல சொன்னாங்கன்னு போலத்தான் இருந்தார். அதனால கல்யாணம் நின்ன போதும் அது எனக்குப் பெரிய பாதிப்பை எல்லாம் உண்டு பண்ணலை. அப்படியிருக்க நான் ஏன் தற்கொலை பண்ணிக்கப் போறேன்? அது எங்க பாட்டி கட்டின கதை.” என்றவள், அன்று நடந்ததையும் விவரித்தாள். 


“நீ பூசி மொழுகினாலும், எனக்கு ஒன்னு புரிஞ்சிடுச்சு.” என ஜெய் சொல்ல, 

“என்ன?” என்பது போல வெண்ணிலா பார்க்க, 

“உனக்கு என்னைத்தான் பிடிச்சிருந்திருக்கு. ஆனா வீட்ல சொன்னாங்கன்னு நீ கரணை கல்யாணம் பண்ணிக்க இருந்த.” 

“நீ உன்னை ஏமாத்திகிட்டது போலக் கரணையும் ஏமாத்த இருந்த. ஆனா உன்னை விதி காப்பாத்திடுச்சு.” என்ற கணவனை வெண்ணிலா முறைக்க, 

“என்ன பார்க்கிற? உண்மையைச் சொன்னா கசக்குதா?” 

“நீயே சொல்லு உனக்குக் கரண் மேல கோபம் இருக்கா? அப்படி வருத்தம் இருந்திருந்தா… நீ அவன் போன் பண்ணும் போது சண்டை தான் போட்டிருப்ப… அவனை நலம் விசாரிச்சு இருக்க மாட்ட.” ஜெய் சொல்ல, வெண்ணிலா யோசித்தாள். 

“இதுல நான் பொய் சொல்லி கல்யாணம் பண்ணிட்டேன்னு என்மேல கோபம் வேறபட்ட. உண்மையா சொன்னா நீதான் டி ப்ராடு.” 

கணவன் சொன்னது உண்மை என மனதுக்குப் புரிந்தாலும், வெண்ணிலாவுக்கு ஏற்றுக்கொள்ள மனமில்லை. 

“அப்போ என்னைத் தப்பு சொல்றீங்களா?” என அவள் மனம் தாங்காமல் கேட்க, 

“இதுல யார் தப்பும் இல்லை. சின்னதுலேயே கல்யாணம் பேசி வைக்கிற பெரியவங்க மேலத்தான் தப்பு.” 

“வீட்ல சொன்னாங்கன்னு கடனேன்னு கல்யாணம் பண்ணி வாழ இருந்த நீயும் சரி, கரனும் சரி தப்பிச்சிடீங்க. நான் விருப்பம் இல்லாத பெண்ணைக் கல்யாணம் பண்ணலை… அது எனக்கு நிம்மதி.” 

“அம்மா தாயே இப்பவாவது வாயைத் திறந்து சொன்னியே… இதுக்குத்தான் கேட்டேன். அதுக்கு என்ன குதி குதிச்ச.” என ஜெய் சிரிக்க, வெண்ணிலாவுக்கும் சிரிப்பு வந்து விடும் போல இருந்தது. ஆனால் அடக்கிக் கொண்டு இருந்தாள். அவளுக்கே சில விஷயங்கள் இப்போது தெளிவானது. மனதில் இருந்த பெரிய பாரம் இறங்கியது போல இருந்தது. ஆனாலும் கணவனிடம் வம்பிழுத்தாள். 

“சரி நீங்க என்னை அடிச்சீங்களே அது என்ன கணக்கு?” 

“நீயும் வேணா அடிச்சிடு.” என்றவன், அவள் கையை எடுத்து தன் கன்னத்தில் வைக்க, 

“நான் அடிச்சா உங்களுக்கு வலிக்காது.” என்றவள், அவன் கையை இழுத்துக் கடிக்கச் செல்ல, ஜெய் சட்டென்று கையை இழுத்துக்கொண்டவன், “பார்த்தா பூனை மாதிரி இருக்க, ஆனா நாய் போலக் கடிக்க வர…” என, 

“நாய்ன்னு சொன்னீங்க இல்ல… நாய் என்ன பண்ணும் பாருங்க.” என வெண்ணிலா அவனைக் கடிக்கச் செல்ல, கடிபடாமல் இருக்க ஜெய் எழுந்து அறையில் இங்கும் அங்கும் ஓட… வெண்ணிலாவும் விடவில்லை. 

“விட்டா நிஜமாவே கடிச்சிடுவியா?” என்றவன், அவள் எதிர்பாரா நேரம் அவள் காலைத் தட்டி விட, வெண்ணிலா கட்டிலில் விழ, அவள் மீது விழுந்தவன், “சரி கடிச்சுக்கோ.” என்றான். 

இதுதான் சந்தர்ப்பம் என வெண்ணிலா அவன் இதழை கடிக்கச் செல்ல, 

“ஆனா யாராவது என்ன காயம்னு கேட்டா, நீ கடிச்சேன்னு தான் சொல்லுவேன்.” 

அதுதானே பார்த்தேன், இவனாவது விட்டுக் கொடுப்பதாவது என நினைத்தவள், கணவனைத் தள்ள முயல… அவளை விடும் எண்ணத்தில் ஜெய் இல்லை. அதுவும் மனைவியின் காதலை அறிந்த நிலையில், விடுவானா என்ன? 
இந்த நாளுக்கு பிறகு இருவரும் மனம் விட்டு பேசுவது வாடிக்கை ஆனது. கொஞ்சலும் மிஞ்சலுமாக நாட்கள் சென்றாலும், ஜெய் தன் வேலைகளுக்கு தான் முதலிடம் கொடுப்பான். எப்போதுமே காதலித்துக் கொண்டு மட்டும் இருக்க முடியாதே. 

Advertisement