Advertisement

எந்தன் காதல் நீதானே

அத்தியாயம் 14 

ஜெய் இருந்த கோபத்திற்கு என்ன வேண்டுமானாலும் பேசி இருப்பான். ஆனால் அவன் முன்பு வெண்ணிலா நின்ற தோற்றம் அவனைக் கொஞ்சம் கட்டுப்படுத்தியது என்னவோ உண்மை. 


“நான் இந்த வீட்ல எதுவுமே பேசக் கூடாதா? பேசினா வீட்டை விட்டு போன்னு சொல்வீங்களா?” 

“சரி போறேன். ஆனா அகல்யா கல்யாணம் முடிஞ்சதும் போறேன்.” 

“அண்ணன்காரன் கல்யாணம் பண்ணதும் தனியா போயிட்டான்னு என்னைத்தான் மத்தவங்க கேவலமா நினைப்பாங்க. அதனால அகல்யா கல்யாணம் முடிஞ்சதும் போறேன். எனக்கு அந்த ஒரு கடமை இருக்கு.” ஜெய் பேசி முடிக்க, வீட்டில் குண்டூசி விழுந்தால் கேட்கும் அளவு நிசப்தம். 

அமைதியை கலைத்தது சந்திரன்தான். “ஜெய் நீ ஒன்னும் போக வேண்டாம். அண்ணே, நீங்க ஏன் அவனைத் தனியா போகச் சொல்றீங்க? இந்த வீடு அவன் இல்லைனா வந்திருக்குமா?” 

“நாம இருந்த வீட்டை வச்சு தானே சமாளிச்சிட்டு இருந்தோம். அவன் தானே அங்க இங்க இருக்கிற பணத்தைப் புரட்டி, பேங்க்ல லோன் வாங்கி, அவனால முடிஞ்ச பணனத்தையும் போட்டு இந்த வீட்டைக் கட்டினான்.” 

“பொம்பளை பிள்ளைங்க கல்யாணம் முடிஞ்சதும் போயிடுவாங்க. யஸ்வந்த் படிச்சிட்டு கோயம்புத்தூர்ல இருக்கான். சத்யா படிச்சிட்டு எங்க இருப்பான்னு தெரியாது. நம்மோட இருக்க ஒருத்தனையும் அனுப்பிட்டு, நாம இங்க தனியா இருக்கவா, இந்த வீடு கட்டினோம்.”
தம்பி பேசியதுக்கு ஜெயராமன் மறுப்பாக எதுவும் பேசவில்லை. அவர் அமைதியாக இருக்க… 

“எல்லாம் போங்க போய் வேலையைப் பாருங்க.” எனச் சந்திரன் சொல்ல, எல்லோரும் களைந்து செல்ல.. ஜெய் தன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான். 

காலையில் சென்றவன் மதிய உணவுக்கும் வரவில்லை. அவன் வந்ததும் உண்ணுகிறேன் என வெண்ணிலாவும் உண்ணாமல் இருக்க… ஆளாளுக்கு அவளை உண்ண சொல்லி சொல்லியும் அவள் உண்ணவில்லை. 

வீட்டில் யாரும் யாரோடும் பேசவில்லை. எப்போது வேண்டுமானால் அழுதுவிடுபவள் போல வெண்ணிலா இருக்க, காமாட்சிக்கே தான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம் எனத் தோன்றிவிட்டது. அவர் பெற்ற பிள்ளைகளே அவரை உன்னால்தான் என்பது போலத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர். 

அமுதா கண்கள் கலங்கியபடி இருந்தாலும், அவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அகல்யாவும் அமைதியாக இருந்தாள். 

இரவு உணவு நேரத்திற்கும் ஜெய் வரவில்லை என்றதும், அகல்யா தனியாகச் சென்று ஜெய்யை அழைக்க, காரணமில்லாமல் தங்கை அழைக்க மாட்டாள் என அவனுக்குத் தெரியும். அதனால் அவன் எடுக்க, “அண்ணா நீ முதல்ல வீட்டுக்கு வா… மதியத்துல இருந்து வெண்ணிலா சாப்பிடவே இல்லை. யார் சொன்னாலும் கேட்கலை.” என்றதும், 

“ம்ம்… வரேன்.” என வைத்து விட்டவன், அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டில் இருந்தான். வெண்ணிலாவுக்காக ஜெய் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை. 

“சாப்பாடு எடுத்து வை.” என்றவன், “நீ சாப்பிட்டிய?” என, அவள் இல்லையென்றதும், “ரெண்டு பேரும் சாப்பிடுவோம்.” என்றவன், வெண்ணிலாவோடு உட்கார்ந்து உண்டுவிட்டு, யாரோடும் பேசாமல் மாடிக்கு சென்றுவிட்டான். 

அவரவர் அறைக்குச் சென்றாலும் யாரும் உறங்கவில்லை. காலையில் இருந்து அடக்கிக் கொண்டிருந்த அமுதா கணவரை பிடி பிடியெனப் பிடிக்க, ஜெயராமன் அப்போதும் யோசனையில் தான் இருந்தார். 

முதல் தளத்தில் சந்திரனின் குடும்பம் இருக்க, “வீட்டு வேலைக்கு ஆள் வைக்கிறேன்னு சொன்னா சரி நல்லதா போச்சுன்னு இருக்காம? எப்படியும் அண்ணன் தானே பணம் கொடுக்கப் போறார், உங்களுக்கு என்ன மா வந்தது?” எனச் சத்யா கேட்க, ராதிகாவோ கோபத்திலும் அழுகையிலும் இருக்க, 

இவ ஏன் இப்படி இருக்கா என்பது போல, மற்றவர்கள் அவளைப் பார்க்க, 

“அகல்யா கல்யாணம் முடிஞ்சதும் அண்ணன் வீட்டை விட்டு போயிடுறேன்னு சொன்னாங்க. அகல்யா கல்யாணம் மட்டும் தான் அவங்க பொறுப்பா… அவங்க கூடப் பிறந்த தங்கையை மட்டும் தானே நினைச்சாங்க. அப்ப நான் அவங்க தங்கை இல்லையா?” 

“இனி நான் அவங்களோட பேசவே மாட்டேன்.” என ராதிகா அழுகையுடன் சொல்ல, எல்லோருக்கும் வருத்தமாகி விட்டது. 

பார்த்தியா உன் பிள்ளைகளை என்பது போலச் சந்திரன் மனைவியைப் பார்க்க, “நான் எதோ யதார்த்தமா சொன்னேன். உங்க அண்ணன் உடனே அவனைத் தனியாப் போகச் சொல்வாருன்னு, நான் என்ன கனவா கண்டேன்.” 

“இனிமே நான் இந்த வீட்ல வாயை திறந்தா கேளுங்க.” என்றவர், சென்று படுத்துக் கொண்டார்.
அறைக்கு வந்த வெண்ணிலா அவள் வேலைகள் எல்லாம் முடித்துப் படுக்கைக்கு வந்தவள், கணவனுக்கு முகம் காட்டாமல் திரும்பி படுத்துக்கொண்டாள். 

“வெண்ணிலா என்னைப் பாரு.” 

கணவன் சொன்னது காதில் விழுந்தாலும் வெண்ணிலா திரும்பவில்லை. மீண்டும் சொல்லிப் பார்த்தவன், அவள் திரும்ப வில்லை என்றதும் பொறுமை இழந்து, அவனே அவளைத் தன் பக்கம் திருப்பினான். 

“என் மேல கோபமா?” அவன் கேட்க, 

இல்லை என மறுப்பாகத் தலையசைத்தவள், “என்னால தானே.” என்றாள். 

அவள் சொல்ல வருவது புரிந்து, “என்ன உன்னால… நீ என்ன பண்ண? இந்த வீடு இப்படித்தான். இவங்களும் காலத்துக்குத் தக்க மாற மாட்டாங்க, நம்மையும் மாற விட மாட்டாங்க.” 

“இந்த வீட்டை கட்ட வைக்கிறதுக்குள்ள நான் எவ்வளவு போராடினேன் தெரியுமா?” 

“தோட்டத்திலேயும் எதுவும் செய்யவிடுறது இல்லை. அண்ணனும் தம்பியும் ஏட்டிக்குப் போட்டியா செஞ்சு, எல்லாத்திலேயும் நட்டம்தான்.” என்றான். 

கணவன் வருந்துவது பொறுக்காமல், “சரி விடுங்க எல்லா வீட்டிலயும் அப்படித்தான். எங்க வீட்ல எங்க அப்பாவும் அப்படித்தான். அவர் சொல்றது தான் நாம கேட்கணும். நாம சொல்றது அவர் கேட்கவே மாட்டார்.” என அவனுக்குச் சமாதானம் சொன்னவள், “மாமா நம்மைத் தனியா போகச் சொல்லிட்டாங்களே…. இப்ப என்னங்க பண்றது?” என்றாள். 

“அவர் நமக்காகத்தான் சொல்றார். தனியா போனா நம்ம இஷ்டத்துக்கு இருப்போம்னு நினைச்சு சொல்றார். அவர் கோபத்துல சொல்லலை. எனக்கு அது தெரியும்.” 

“அவர் சொல்ற மாதிரி எல்லாம் இப்ப என்னால செய்ய முடியாது. இவர் பொறுப்புல அகல்யா கல்யாணத்தை விட்டா, உங்க அப்பா மாதிரி மாப்பிள்ளை பார்த்து வைப்பார்.” எனப் பேச்சு வாக்கில் ஜெய் சொல்லிவிட.. வெண்ணிலா கணவனை முறைத்தாள். 

அவள் முறைத்த பிறகே ஜெய் தான் என்ன பேசினோம் என யோசித்தவன், “அது ஒரு ப்ளோல வந்திடுச்சு.” எனச் சமாளித்து, “முதல்ல அகல்யாவோட நகையைத் திருப்பனும். அதோட இன்னும் கொஞ்சம் நகை வாங்கணும். நீ கொண்டு வந்த சீர்வரிசை அளவு இல்லைனாலும், ஓரளவுக்குச் சீர்வரிசை செய்யணும்.” என்றதும், வெண்ணிலாவின் கவனம் அதில் செல்ல, இருவரும் சேர்ந்து திட்டமிட ஆரம்பித்தனர். 

வெண்ணிலா மறுநாள் தன் அம்மாவிடம் மாமா தங்களைத் தனிக் குடித்தனம் போகச் சொன்னதைச் சொன்னவள், “கல்யாணம் முடிஞ்சதும் தனியாப் போனா என்னைத் தானே மா எல்லாம் தப்பா நினைப்பாங்க. நீங்க மாமாகிட்ட சொல்லுங்க.” என்றாள். 

மகேஸ்வரி ஜெயராமனை அழைத்துக் காரணம் கேட்க, ஜெய் ஊகித்தது சரிதான். 

“நாங்க அந்தக் காலம் மாதிரியே பழகிட்டோம். தனியா இருந்தா அவங்க இஷ்டத்துக்கு இருப்பாங்க. இங்க அவ்வளவு வசதி பத்தாது. அதுக்குத்தான் சொன்னேன்.” என்றார். 

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். வெண்ணிலா தனியா எல்லாம் இருந்துக்க மாட்டா. அவளே தன்னால குடும்பம் பிரிஞ்சிடப் போகுதுன்னு பயந்து போய் இருக்கா.” 

“நாம் வீடு தானே கொஞ்சம் முன்ன பின்னே இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிப்பா. நம்மக் காலம் மாதிரி இல்லை. இப்ப பிள்ளைங்க சொல்றது தான் நாம கேட்கணும்.” 

“நம்ம பிள்ளைகளை முதல்ல நாம நம்பனும். அகல்யா கல்யாணத்தை நல்லா செய்யணும்னு ஜெய் நினைக்கிறதா வெண்ணிலா சொன்னா. அவன் இஷ்டத்துக்கு விட்டுடுங்க அண்ணா.” 

“நீ சொன்னா சரிதான்.” என்றார் ஜெயராமன்.
மகேஸ்வரி தன் அண்ணி அமுதாவையும் அழைத்துப் பேச, அவர் தன் ஆதங்கத்தைக் கொட்டினார். 

“இவர் பாட்டுக்கு அவனைப் பட்டுன்னு தனியா போயிடுன்னு சொல்லிட்டார். பிள்ளை முகம் எப்படி வாடி போச்சு.” என்றதும், மகேஸ்வரி ஜெயராமன் எதற்குச் சொன்னார் எனக் காரணம் சொன்னவர், 

“வெண்ணிலாவுக்குத் தனியா போக விருப்பமே இல்லை அண்ணி. நீங்களே சொன்னாலும் அவ போக மாட்டா. நான் அண்ணன்கிட்ட பேசிட்டேன். இனி அவர் அப்படிப் பேச மாட்டார். நீங்க டென்ஷன் ஆகாம இருங்க.” 

மகேஸ்வரியுடன் பேசிய பிறகு தான் அமுதாவுக்கு நிம்மதி ஆனது. 

எதற்கு வம்பு என நினைத்த காமாக்ஷி, அவரே இரண்டு வேளைகள் பாத்திரம் தேய்க்க ஆள் பார்த்து வைத்துவிட்டார். வீட்டிலும் சலசலப்புகள் இல்லாமல் அமைதியாக இருந்தது. 

மழை காலம் என்பதால் தோட்டம் போடும் வேலைகள் துரிதமாக நடக்க, ஜெய் காலையில் சென்றால், வீடு திரும்ப இரவாகி விடும். அவன் யாரோடும் எந்தப் பேச்சும் வைத்துக்கொள்வது இல்லை. அதனால் அவனுக்கு ராதிகா தன்னோட பேசாமல் இருப்பது தெரியவும் இல்லை. ராதிகா வெண்ணிலாவோடு நன்றாகத்தான் பேசினாள். 

ஒரு வார இறுதி மகேஸ்வரி மகளைப் பார்க்க வந்திருந்தார். அவர்கள் வீட்டில் டிரைவர் இல்லை. அதனால் யுவராஜ் அம்மாவை அழைத்து வந்திருந்தான். 

யுவராஜ் செல்வது கற்பகத்திற்குப் பிடிக்கவில்லை. அம்மாவை தனியாகப் பஸ்சில் அனுப்ப முடியாது என அவனும் உடன் செல்வதாகச் சொல்ல, கற்பகம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தான் வழியனுப்பினார். 

அத்தை வருகிறார் என்று அன்று ஜெய்யும் வீட்டில் இருக்க… பதினோரு மணி போல இருவரும் வந்து விட்டனர். 

மகேஸ்வரியும் தன் அண்ணிகளோடு சமையல் அறையில் பேசியபடி வேலைப் பார்க்க, யுவராஜ் ஹாலில் ஆண்களோடு பேசிக் கொண்டிருந்தான். 

மதிய உணவு முடிந்து மகளோடு நேரம் செலவழிக்க எண்ணி மகேஸ்வரி வெண்ணிலாவோடு மாடிக்குச் சென்றிருந்தார். 

பெரியவர்கள் ஓய்வு எடுக்க, இளையவர்கள் கீழே ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். 

ஜெய்யை வம்பிழுக்க எண்ணிய ராதிகா வேண்டுமென்றே யுவராஜிடம் பேச்சை ஆரம்பித்தாள். 

“நீங்க ஞாயிற்றுக் கிழமை என்ன செய்வீங்க அத்தான்.” 

“வீட்ல ரெஸ்ட் எடுப்பேன் இல்லைனா பிரண்ட்ஸ் கூட எங்காவது வெளிய போவேன்.” 

“நீங்க லீவுக்கு இங்க வந்து கூட நான் பார்த்தது இல்லை. இப்ப என்ன அதிசயமா வந்திருக்கீங்க?” 

“அம்மா கூட வந்தேன்.” 

“அத்தை இதுக்கு முன்னாடி இங்க தனியா வந்தது இல்லையா என்ன? வேற எதோ காரணம் இருக்கு.” என ராதிகா யுவராஜையும் அகல்யாவையும் குறுகுறுவெனப் பார்க்க, ஜெய் கொதி நிலைக்குச் சென்றான். யுவராஜ் முன்பு எதுவும் சொல்ல முடியாத நிலை. 

இவள் விளையாட்டுக்கு பேசுகிறாளா அல்லது உள்ளர்த்தம் வைத்து பேசுகிறாளா என யுவராஜுக்கும் புரியவில்லை. உண்மையாகவே அவன் மனதில் அப்படியொரு எண்ணமே இல்லை.

அமைதியாக இருந்தால் அதுவேறு தப்பான அர்த்தத்தை உண்டு பண்ணிவிடுமோ என அஞ்சியவன், “அம்மாவுக்கு ப்ரெஷர் இருக்கு, அதனால இப்ப அவங்களை எங்கையும் தனியா அனுப்புறது இல்லை. அதோட வெண்ணிலாவும் இப்ப இங்க இருக்கா இல்லையா… நான் என் தங்கையைப் பார்க்க வந்தேன்.” என்றான் யுவராஜ் தெளிவாக. 


“அவ அப்படித்தான் லூசு மாதிரி பேசுவா.” என அகல்யாவும் சாதாரணமாகச் சொல்வது போலச் சொன்னாள். எங்கே யுவராஜ் அவளைத் தவறாக நினைத்து விடுவானோ என்று அவளுக்குப் பயம். 

அகல்யா சொன்னதற்குச் சத்யாவும் யஸ்வந்தும் சிரித்துவிட, உனக்கு இது தேவையா என்பது போல ஜெய் வேறு பார்க்க, கடைசியில் தனக்கு லூசு பட்டம் கிடைத்ததில், ராதிகா அங்கிருந்து கோபமாகச் சென்றுவிட்டாள். 

அன்று மாலையே மகேஸ்வரியும், ஜெய்யும் கிளம்ப, அம்மாவை பிரியப் போகும் ஏக்கத்தில் வெண்ணிலா இருக்க, அதைப் பார்த்த ஜெய், “அம்மா, வெண்ணிலாவும் அத்தையோட போகட்டும். நான் போய் அடுத்த வாரம் கூடிட்டு வரேன்.” என அமுதாவிடம் சொல்ல, அவர் ஜெயராமனைப் பார்க்க, அவரும் போய்விட்டு வரட்டும் என்றார். 

அம்மா வீடு செல்ல விரும்பாத பெண்கள் இருப்பார்களா என்ன? வெண்ணிலாவும் விதிவிலக்கல்ல… அவள் சந்தோஷம் முகத்தில் நன்றாகவே தெரிய, அவள் தயாராகி வரும் நேரத்திற்குள், இவர்கள் தோட்டத்து காய் கனிகளைக் காரில் ஏற்றியிருந்தனர். 

வெண்ணிலா அவள் அண்ணனோடு முன்பக்கம் இருக்க, ஜெய் அவளிடம் சென்று சீட் பெல்ட் போட்டுக்கொள்ளச் சொன்னவன், போயிட்டு வா எனச் சந்தோஷமாகவே வழியனுப்பினான்.
அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்த ஜெய், “சித்தி, ராதிகா பேச்சு ஒன்னும் சரியில்லை.” என்றவன், இன்று அவள் பேசியதையும் சொல்ல, 

“பேச்சை குறை கழுதை.” எனச் சந்திரனும், 

“நீயேன் என்கிட்டே சொல்ற? நீயே அவ வாயில போட வேண்டியது தானே…” எனக் காமாக்ஷி மகளை முறைத்தபடி சொல்ல… 

“அந்த அளவுக்கு இந்த வீட்ல உரிமை இருக்கான்னு உண்மையாவே எனக்குத் தெரியலை.” என ஜெய் சொல்ல, 

“சும்மா பாசமா இருக்கிற மாதிரி நடிக்காதீங்க அண்ணா. அன்னைக்கு நீங்க தானே சொன்னீங்க அகல்யா கல்யாணம் என்னோட கடமைன்னு… அப்ப என்னைப் பிரிச்சு தானே பார்த்தீங்க. நீங்க மட்டும் என்ன?” என ராதிகா கேட்க, 

“நான் சொன்ன அர்த்தம் அது இல்லை. என் கல்யாணத்துக்காக அகல்யாவோட நகையை அடமானம் வச்சிருக்கோம். அதை நான்தான் மீட்கணும். அதோட அகல்யாவுக்கு அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணனும். அதனால அதுவரையாவது இருந்திட்டு போறேன்னு சொன்னேன்.” 

“உனக்குக் கல்யாணம் பண்ண இன்னும் மூன்னு வருஷமாவது ஆகும். நான் இந்த வீட்ல இருந்தாலும் இல்லைனாலும் உன் கல்யாணத்துக்கு அண்ணனா என்ன செய்யணுமோ செய்வேன்.” என்றான். 

“நீங்க இங்க இருந்துதான் எனக்கும் செய்யணும்.” என ராதிகா முறுக்கிக்கொண்டு சொல்ல, ஜெய்கு சிரிப்பு வந்துவிட்டது. 

ஜெய் இரவு உணவு வரை கீழேயே இருந்துவிட்டு தான் அறைக்குச் சென்றான். அப்போது தான் மனைவி இல்லாத தனிமை தெரிந்தது. அவன் வெண்ணிலாவின் நினைவாக இருக்க, அங்கே அவளோ அண்ணனோடும் அம்மாவோடும் உணவகத்தில் நன்றாக உணவை வெட்டிக்கொண்டு இருந்தாள். 

பத்து மணிக்கு மேல்தான் வீடு சென்று சேர்ந்தனர். மகளைப் பார்த்ததும் ராஜகோபாலுக்கும் மகிழ்ச்சி தான். 

தினமும் இரவு வெண்ணிலா ஜெய்யை அழைத்துப் பேசிவிடுவாள். மனைவி மகிழ்ச்சியாக இருக்கிறாள் அதைக் கெடுக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் ஜெய்யும் அவன் தனிமையைக் காட்டிக்கொள்ளவில்லை. 

நான்கு நாட்கள் அம்மா வீட்டின் சுகத்தை அனுபவித்தவள், ஐந்தாம் நாளில் இருந்து கணவன் வரும் நாளை ஆவலோடு எதிர்பார்க்க ஆரம்பித்து இருந்தாள். 

கணவன் வீடு செல்ல அவள் தாயராக இருப்பததைப் பார்த்த யுவராஜ் வேண்டுமென்றே, “அத்தானுக்கு இந்த வாரம் வர முடியாதாம் அடுத்த வாரம் வர்றாங்களாம்.” என்றதும், வெண்ணிலாவின் முகம் வாட… 

“என்கிட்டே சொல்லலையே… உன்கிட்ட எப்ப சொன்னாங்க.” என்றவள் கணவனுக்கு அழைக்கக் கைப்பேசியை எடுக்க… 

“ஏய் சும்மா சொன்னேன்?” என்றதும் வெண்ணிலா அவனை முறைக்க, 

“இன்னும் ஒரு வாரம் இருக்கலாம்னு சந்தோஷப்படாம. எப்ப போறதுன்னு இருக்கா பார்த்தீங்களா மா?” என ராஜ் கேலி செய்ய… மகேஸ்வரியும் மகளைப் பார்த்து சிரிக்க, 

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.” என வாய்தான் சொல்லியதே தவிர, கணவனை எப்போது பார்ப்போம் என மனம் ஏங்க ஆரம்பித்து இருந்தது.

Advertisement