எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 13
சனிக்கிழமை காலை உணவை எட்டு மணிக்கே முடித்துக் கொண்டு வெண்ணிலாவின் பிறந்த வீட்டிற்குக் கிளம்பினர். பொளாச்சியில் இருந்து பஸ்சில் தான் சென்றனர். அங்கே கரூரில் இறங்கி ஆட்டோ பிடித்து வீட்டுக்கு சென்று சேரும்போது மதியம் ஆகி இருந்தது.
மகளைப் பார்த்த மகிழ்ச்சியில் பெற்றோர் இருக்க… “என்ன இப்படிக் கருத்து மெலிஞ்சு போய் வந்திருக்க.” என்ற கற்பகத்தின் பேச்சை யாரும் கண்டு கொள்ளவில்லை.
மகேஸ்வரி மகளைத்தான் கண்ணில் நிரப்பிக் கொண்டு இருந்தார்.
“அவங்களுக்குப் பசிக்கும் சாப்பாடு எடுத்து வை.” என ராஜகோபால் சொன்னதும், மகேஸ்வரி உணவை எடுத்து வைக்கச் செல்ல.. உடன் வெண்ணிலாவும் சென்றாள்.
ஜெய்யுடன் யுவராஜ் பேசிக் கொண்டு இருந்தான். மகேஸ்வரி மதிய உணவை தடபுடலாகச் செய்திருந்தார்.
“எல்லாம் வாங்க சாப்பிடலாம்.” என அவர் அழைக்க, எல்லோரும் எழுந்துகொள்ள, “நீங்க சாப்பிடீங்களா பாட்டி?” என ஜெய் கேட்க,
“இல்லை…” என்றார் கற்பகம்.
“நீங்களும் எங்களோட சாப்பிட வாங்க.” என ஜெய் அழைக்க,
“ஆமாம் நீங்களும் வாங்க மா.” என்றார் ராஜகோபால்.
பாட்டியோட நீங்க எப்ப சமரசம் ஆனீங்க என்பது போல வெண்ணிலா கிண்டலாகப் பார்க்க, ஜெய் அவளைப் பார்த்து கண்சிமிட்டி விட்டு கைகழுவ சென்றான்.
எல்லோரும் சேர்ந்து உண்டு பிறகு ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்தனர். முதலில் ராஜகோபால் மதிய உறக்கத்திற்குச் செல்ல, இவர்களையும் சென்று மகேஸ்வரி ஓய்வு எடுக்கச் சொன்னார்.
அறைக்கு வந்து கணவனுக்குத் தேவையானது பார்த்து அவன் படுத்ததும், “நான் அம்மாகிட்ட பேசிட்டு வரேன்.” என வெண்ணிலா வெளியே வந்து விட்டாள். அவள் அம்மாவுடன் பேசட்டும் என ஜெய்யும் உறங்கிப் போனான்.
வெண்ணிலா வாய் ஓயாமல் அவள் அம்மாவுடன் பேசிக்கொண்டு இருக்க, அப்போது வந்த ராஜ், “படத்துக்கு டிக்கெட் புக் பண்றேன். போயிட்டு வர்றீங்களா… உனக்குப் பிடிச்ச விஜய் படம்.” என்றதும்,
“நாங்க அடுத்த வாரம் எல்லோரும் குடும்பத்தோட போறதா இருக்கோம். அகல்யா ராதிகாவுக்கும் விஜய் பிடிக்கும்.” என்றாள்.
“குடும்ப இஸ்திரியாவே மாறிட்ட போல….”
“டேய், அவளே ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கா, ரெண்டு நாள் நம்மோட இருந்திட்டு போகட்டும்.” என மகேஸ்வரி சொல்ல, வெண்ணிலாவும் ஆமோதிக்க, ராஜ் சரியென்று ஹாலில் சென்று டிவி பார்த்தான்.
உறங்கி எழுந்து வந்த கற்பகம் பேத்தியின் வாயைக் கிளறி, அங்கே என்ன செய்வாள் எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்.
“நான் ஒன்னும் பெரிசா எல்லாம் வேலைப் பார்க்கிறது இல்லை பாட்டி. அத்தையும் சின்ன அத்தையுமே பண்ணிடுவாங்க. நான் கூடமாட ஒத்தாசைதான் செய்வேன்.” என்று விட்டிருந்தாள்.
ஜெய் உறக்கத்தில் இர௮உந்து எழுந்ததும், வெண்ணிலா அவனுக்கு சிற்றுண்டி எடுத்துக் கொண்டு அறைக்கே சென்று கொடுக்க, அவன் ஒரு வடையோடு போதும் என்றுவிட்டான்.
“இவருக்கு எல்லாம் டிபன் பண்ணாதீங்க வேஸ்ட்ன்னு சொன்னேன். உங்க அத்தை தான் கேட்கலை.”
“மதியம் சாப்பிட்டதே அதிகம். டீ கொண்டு வா… நானே ஹாலுக்கு வரேன்.” என்றவன், எழுந்து ஓய்வறைக்குச் சென்றான்.
டீ குடித்து விட்டு, வெளியே போய் வருவதாகச் சொல்லி ஜெய் வெளியே சென்று விட்டான். சிறிது நேரம் நடந்து விட்டு ஏழு மணி போலத் தான் வீட்டுக்கு வந்தான்.
வெளியே இருந்து வந்த ராஜ், ஹோட்டலில் இருந்து பிரைட் ரைஸ் நூட்லஸ் என வாங்கி வந்திருக்க.. அதோடு வீட்டில் இருந்ததும் சேர்த்து இரவு உணவை உண்டனர்.
இரவு அறைக்கு வந்த வெண்ணிலா தனது நகைகளைக் கழட்டி வைத்தபடி, “என்ன பாட்டி மேல பாசம் பொங்கி வழியுது?” எனக் கேட்க,
“முன்னாடி சொந்தக்காரன் மட்டும் தான். அதுவும் உங்க பாட்டிக்கு எங்களைப் பிடிக்கவும் படிக்காது. அதனால ஒதுங்கி போயிடுவேன். இப்ப இந்த வீட்டு மாப்பிள்ளை. அப்படியிருக்க முடியுமா? அதுவும் அவங்க வயசுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கணும் தானே…” என ஜெய் நீளமாக விளக்க… வெண்ணிலா கேட்டுக் கொண்டாள்.
மறுநாள் மதியம் அவர்கள் சின்ன அத்தையின் வீட்டில் விருந்துக்குச் சென்றனர். கொஞ்சம் தூரம் தான். வெண்ணிலா வீட்டுக் காரில் டிரைவர் போட்டு இருவரையும் அனுப்பி வைத்தனர்.Advertisements
மதிய உணவு நேரத்திற்குத் தான் சென்றனர். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவர்கள், சாப்பிட அழைக்கவும் உணவ உண்ண சென்றனர்.
Advertisements