Advertisement

எந்தன் காதல் நீதானே

அத்தியாயம் 12 

இரு சக்கர வாகனத்தில் பொள்ளாச்சி வரை வந்து, அங்கு அவனுக்குத் தெரிந்தவர் இடத்தில் வண்டியை விட்டுவிட்டு, இருவரும் கோயம்புத்தூர் செல்லும் பேருந்தில் ஏறினர். 


பேருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே இருவரும் உறங்கி விட்டனர். இரவு நேரம் சென்று உறங்கியது, அதிகாலை எழுந்து அவசரமாக எடுத்து வைத்து கிளம்பியது என இருவருக்கும் போதுமான உறக்கம் இல்லை. 

காலை ஐந்து மணிக்கு ஜெய் அலாரம் வைத்து எழுந்தவன், மனைவியை எழுப்ப, வெண்ணிலாவால் கண்ணைத் திறக்கவே முடியவில்லை. 

அவளைப் பார்க்கவும் பாவமாக இருந்தது. முன்தின இரவு அவளை வெகு நேரம் சென்று தான் உறங்க விட்டிருந்தான். 

“சரி முதல்ல நான் போய்க் குளிச்சிட்டு வரேன். பிறகு நீ எழுந்துக்கோ.” என்றவன், அவன் குளித்து விட்டு வந்து வெண்ணிலாவை எழுப்பி விட்டான். 

அதற்கு மேல் காலம் தாழ்த்த முடியாது என வெண்ணிலா எழுந்து கிளம்ப, அவள் வருவதற்குள் ஜெய் அறையை ஒழுங்கு செய்து வைத்திருந்தான். 

வெண்ணிலா சுடிதார் அணிந்து தலையில் துண்டை சுற்றியபடி குளியல் அறையில் இருந்து வர… அதன் பிறகே கொண்டு செல்ல தேவையானது எல்லாம் இருவரும் சேர்ந்து எடுத்து வைத்தனர். 

வெண்ணிலா அவளது ஆடை அணிமணிகளை அங்கிருந்த மேஜையில் வைக்க, ஜெய் எடுத்துப் பெட்டியில் அடுக்கியவன், இன்னும் வேறு என்னென்ன வேண்டும் எனப் பார்த்து எடுத்து வைத்தான். ஊட்டியில் நினைத்த நேரம் மழை பெய்யும் என்பதால்.. ஒரு குடையும் எடுத்து வைத்துக் கொண்டான். 

இருவரும் கீழே இறங்கி வர… பெரியவர்கள் மட்டும் விழித்திருந்தனர். அமுதா அவர்களுக்குக் காபி கொண்டு வந்து கொடுத்தார். 

ஜெயராமன் மகனை அறைக்குள் அழைத்தவர், “பணம் எதுவும் வேண்டுமா?” எனக் கேட்க, 

“தேவையானது இருக்கு.” என்றான். 

நிஜமாகத்தான் சொல்கிறானா என்பது போல ஜெயராமன் மகனைப் பார்க்க, ஜெய்கும் அது புரிந்தது. 

“தோட்டம் போட்டுக் கொடுத்ததுல கொஞ்சம் பணம் வர வேண்டியது இருந்தது. அதோட இந்த மாசம் சம்பளமும் வாங்கிட்டேன்.” என்றான். 

அதன் பிறகு எல்லோரிடமும் விடைபெற்று கிளம்ப ஏழு மணி ஆகி இருந்தது. 

கோயம்புத்தூர் வந்துவிட்டது என நடத்துனர் குரல் கொடுத்ததும் தான் இருவரும் விழித்தனர். அங்கே இறங்கி ஒரு நல்ல உணவகத்தில் காலை உணவை முடித்துக் கொண்டு, ஊட்டிக்குச் செல்லும் ஆம்னி வேன்னில் ஏறினர். 

சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த வெண்ணிலாவுக்கு மலை ஏறும் போது தலை சுற்ற… கண்ணை மூடி சாய்ந்து கொண்டாள். 

“என்ன ஆச்சு?” ஜெய் கேட்க, 

“தலை சுத்துது, வாந்தி வர்ற மாதிரி இருக்கு.” என்றதும், 

தன்னிடம் இருந்த லிம்காவை கொடுத்துக் குடிக்கச் செய்தவன், அவன் மடியில் அவளைப் படுக்க வைத்துக் கொண்டான். 

வெண்ணிலாவும் சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள். அவளை மடி தாங்கியவன், அவள் விழுந்து விடாமல் அணைவாகப் பிடித்துக்கொண்டு வெளியே வேடிக்கை பார்த்தபடி இருந்தான். மேலே வந்தவுடன் தான் மனைவியை எழுப்பினான். 

உறங்கிக் கொண்டு வந்ததால் தலை சுற்றல் வாந்தி எதுவும் இல்லை. இப்போது நன்றாக இருந்தாள். 

“ரொம்ப நேரம் படுத்து தூங்கிட்டேனா… உங்களுக்குக் கால் வலிச்சிருக்கும். என்னை எழுப்பி இருக்கலாம்.” என மனைவியின் கவலையைப் பார்த்து, ஜெய் புன்னகையுடன் இல்லையென மறுத்தான். 

முன் மதிய நேரத்தில் ஊட்டியில் சென்று சேர்ந்திருந்தனர். நேராக அறைக்குச் சென்றவர்கள், சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு மதிய உணவுக்குச் சென்றனர். 

இருவரும் நல்ல பசியில் இருக்க, மதிய உணவை நன்றாக உண்டனர். மழை தூறிக் கொண்டே தான் இருந்தது. 

ஜெய் ஒரு கையில் குடையை வைத்திருந்தவன், மறுகையால் மனைவியை அணைத்தபடி நடந்தே அருகில் இருந்த கார்டனுக்கு அழைத்துச் சென்றான். 

அங்கேயே ஒரு மணி நேரம் போல இருந்தனர். பிறகு மழை வலுக்க, ஒரு ஆட்டோவில் அறைக்கு வந்து விட்டனர். 

அறையில் ஹீட்டர் இருந்ததால்… குளிரை சமாளிக்க முடிந்தது. இருவரும் இருந்த அசதியில் நன்றாகப் படுத்து உறங்கி விட்டனர். வெண்ணிலாவுக்கு மீண்டும் விழுப்பு வந்த போது, மாலை ஏழு மணி ஆகி இருக்க… இவ்வளவு நேரமா உறங்கினோம் என நினைத்தவள், ஜெய்யை எழுப்பி விட்டாள். 

இருவரும் பால்கனியில் நின்று சுற்றிலும் பார்க்க, மழை பெய்ததால்… தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை. மழை நேரத்தில் வந்தால் இப்படித்தான். வெளியில் செல்லாமல் அறையில் தான் அடைந்து கிடக்க நேரிடும். 

முகம் கழுவி தயராகிக் கீழே சென்றவர்கள், அங்கே இருந்த உணவகத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு மேலே அறைக்கு வந்தனர். 

வெண்ணிலா இரவு உடை மாற்றி வர… இருவரும் கட்டிலில் படுத்து பேசிக் கொண்டிருந்தனர். 

“களைப்பா இருக்கா?” 

“இல்லையே…” 

“நல்லா சாப்பிட்டியா?” 

“ம்ம்…” 

“பால் எதுவும் வேணுமா?” 

“இப்பத்தானே சாப்பிட்டோம். கொஞ்ச நேரம் கழிச்சு வேணா பார்க்கலாம்.” 

ஜெய்யும் எழுந்து சென்று உடைமாற்றி வந்தவன், விளக்கணைக்க… “திடுக்கிட்ட வெண்ணிலா அதுக்குள்ளவா தூங்கப் போறோம்.” என்றதும், ஜெய்கு சிரிப்பு வந்து விட்டது. ஆனால் இருட்டில் அவன் சிரிப்பது அவளுக்கு எப்படித் தெரியும். 

கட்டிலில் மனைவியின் அருகே நெருங்கிப் படுத்தவன், அவளை அனைக்க… பிறகே வெண்ணிலாவுக்கு விஷயம் புரிந்தது. நேற்று விளக்கனை என்றால் கேட்காதவன், இன்று இருட்டில் மட்டுமே கூடல் கொண்டான். 

வீட்டில் இருப்பது போல வெளியிடத்தில் இருக்க முடியாது என நினைத்திருக்கலாம். 
கூடல் முடிந்தது உடனே இருவரும் உறங்கி விடவில்லை. டிவியை போட்டுக் கொண்டு உட்கார்ந்தவர்கள், அறைக்கே சில உணவுகள் வரவழைத்து உண்டு என இரவு பன்னிரெண்டு மணி வரை விழித்திருந்தனர். 
மறுநாள் காலை மழை இல்லாமல் லேசாக வெயிலும் அடிக்க.. இருவரும் கிளம்பி முக்கியமான இடங்களை மட்டும் சென்று பார்த்து விட்டு, மதியத்திற்கு மேல் ஊட்டியில் இருந்து கிளம்பி விட்டனர். 

திரும்ப வரும் போது, போக்குவரத்து நெரிசல் இருக்க.. மெதுவாகத்தான் வர முடிந்தது. அதுவும் கோயம்பதூரில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்ற பேருந்தும் கூட்டமாக இருக்க… வெண்ணிலா மிகவும் துவண்டு போனாள். அவள் பெரிய பெண் ஆனதில் இருந்தே வீட்டில் கார் இருக்கிறது. எங்குச் சென்றாலும் கார்தான். இப்படிக் கஷ்டப்பட்டு எல்லாம் எங்கும் சென்றது இல்லை.

ஜெய்கும் எதுவும் செய்ய முடியாத நிலை. வேறு யாரையும் திருமணம் செய்திருந்தால் வசதியாக இருந்திருப்பாள். தன்னைத் திருமணம் செய்ததால் தான் கஷ்டப்படுகிறாளோ என்றும் தோன்றியது. 


வீடு வந்து சேரும்போது இரவு பதினோரு மணி ஆகி இருக்க, மறுநாள் காலை எழும் போதே வெண்ணிலாவுக்கு லேசான காய்ச்சல் இருந்தது. தலை வேறு பாரமாக இருக்கிறது என்றாள். 

ஜெய் மாத்திரை வாங்கி வந்து கொடுக்க.. தலையில் இருந்து நீரை எடுப்பதற்கு, அமுதாவும் கஷாயம் வைத்துக் கொடுத்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு சரியாகி விட்டாள். 

அகல்யாவுக்குத் திருமணம் செய்ததும் முதலில் கார் வாங்க வேண்டும் என ஜெய் நினைத்துக் கொண்டான். 

திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகி இருந்தது. தேன்நிலவில் இருந்து வந்த பிறகு ஒரு வாரம் ஜெய்யின் தாய் மாமா வீடு, அதற்கு அடுத்த வாரம் விமலாவின் வீடு என விருந்துக்குச் சென்று வந்தனர். 

“மகேஷ் வேற கூப்பிட்டுகிட்டே இருக்கு. இந்த வாரமாவது வெண்ணிலாவின் வீட்டிற்குப் போய் விட்டு வாங்க.” என்றார் ஜெயராமன். 

“இந்த வாரம் என்னால முடியாது. எனக்கு ஒரு புது ஆர்டர் வந்திருக்கு.” 

திருமணம் முடிந்து வந்து இத்தனை நாட்கள் ஆகி விட்டது. அவள் பெற்றோரை சகோதரனை பார்க்க வேண்டும் என வெண்ணிலாவுக்கும் ஆசை இருக்கும் அல்லவா… ஜெய் போக முடியாது என்றதும், அவள் கண்கள் கலங்க, யாருக்கும் காட்டாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். 

அவள் முகம் மாறிய விதமும், கண் கலங்கியதையும் எல்லோரும் கவனித்தே இருந்தனர். அவளைப் பார்த்து ஜெய்கு டென்ஷன் ஆகி விட்டது. எப்போதுமே வெண்ணிலாவின் கண்ணீர் அவனைப் பாதிக்கும். இப்போதும் அதே நிலை தான். 

அவர்கள் அறைக்கு வந்ததும், “நான் வேணா உன்னைக் கொண்டு போய் அங்க விட்டுட்டு வரேன். நீ ரெண்டு நாள் இருந்திட்டு வர்றியா?” என்றதும், 

“அப்படி ஒன்னும் நீங்க யாரோ மாதிரி வந்ததும் விட்டுட்டு போறதுக்கு, நாம போகவே வேண்டாம்.” என்றாள். 

“சரி இந்த ஒருமுறைதான். அடுத்த முறை எல்லாம் நீ மட்டும் போய் இருந்திட்டு வா… என்னை அங்க கூப்பிடாதே.” என்றான் கறாராக. 

அவர்கள் செல்வது தெரிந்து, ராதிகா வேண்டுமென்றே அண்ணனை வம்பிழுத்துக் கொண்டிருந்தாள். 

“நம்ம அத்தை வீடு தானே நாங்களும் உங்களோட வரட்டுமா… அத்தை எங்களையும் வர சொன்னாங்க.” 

“வாங்க ராதிகா, எல்லோரும் போனா நல்லாத்தான் இருக்கும்.” என வெண்ணிலா சொல்ல, ஜெய் முறைத்தபடி நின்றிருந்தான். 

“எங்க இதை உங்க வீட்டுக்காரரை சொல்ல சொல்லுங்க பார்ப்போம்.” என்றாள் ராதிகா சவாலாக.

“நீ என்கிட்டே அடி வாங்கப்போற டி… போய் வேற வேலை இருந்தா பாரு.” எனச் சொல்லிவிட்டு ஜெய் சென்று விட… இவ்வளவு கோபம் ஏன் என வெண்ணிலா பார்த்துக் கொண்டிருந்தாள். 

“எனக்குத் தெரியாம வேற எதோ இருக்கா என்ன? உங்க அண்ணனுக்கு என்ன கோபம்?” என வெண்ணிலா கேட்க, 

“இப்பத்தான் நீ பாயிண்ட்டுக்கு வந்திருக்க அண்ணி. எங்க அண்ணனுக்கு எங்க நாங்க உன் அண்ணனை லவ் பண்ணிட போறோம்னு பயம்.” 

“பாருங்க இவன் மட்டும் உங்களை லவ் பண்ணி கல்யாணம் பண்ணுவானாம். நாங்க பண்ணக் கூடாதாம். நீயே சொல்லு இது நியாயமா?” என்றாள். 

இப்படி ஒரு கதை வேறு ஓடுகிறதா என நினைத்தவள், இவர்கள் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அகல்யாவைப் பார்த்தாள். அகல்யா அண்ணனுக்கு மிகவும் பொருத்தம் என்றே தோன்றியது. 

கணவனிடம் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டாள். பேசி நான்றாக வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறாள் என அப்போது அவளுக்குத் தெரியவில்லை. 

இரவு உணவு உண்டு அறைக்கு வந்ததும், வெண்ணிலா அதைப் பற்றிப் பேச…
“நடக்காததைப் பேசாத வேறு பேசு.” என்றான். 

“ஏன்?” 

“உனக்குச் செஞ்சு அனுப்பினதுக்குக் குறையாம உங்க வீட்ல உங்க அண்ணனுக்கு எதிர்ப்பார்ப்பாங்க தான… அதுல பாதித் தான் எங்களால முடியும். அது கூடச் சமாளிக்கலாம் வை. ஆனா அகல்யாவுக்குப் போடுறது போல ராதிகாவுக்கும் செய்யணும்.” 

“இவ்வளவு செஞ்சு அனுப்பினாலும், உங்க வீட்ல வந்து என் தங்கை நிம்மதியா இருக்க முடியுமா என்ன?” 

“ஒவ்வொரு நாளும் உங்க பாட்டி குத்திக் காட்டி பேச மாட்டாங்க. அதைச் சகிச்சிட்டு வாழனும்னு அவளுக்குத் தலையெழுத்து இல்லை.” 

“அப்படித்தான் நடக்கும்னு இல்லையே அத்தான். நாம ஏன் அப்படி நினைக்கணும்.” 

“அப்படி எதாவது நடந்துச்சு வை, நான் உன் அண்ணனை தான் அடிப்பேன். பிறகு எங்க ரெண்டு பேர் நடுவுல வெட்டு குத்துன்னு தான் முடியும். பரவாயில்லையா உனக்கு.” 

“எப்படிப் பேசுகிறான்?” என வெண்ணிலா கணவனை முறைத்துப் பார்க்க… 

“நம்ம பாட்டி அவங்க பெண்ணைப் பார்க்க வரும் போது எல்லாம், எதோ சோத்துக்கு இல்லாம வந்த மாதிரியே, உன் பாட்டி பேசுவாங்க. அதனால தான் அவங்க பெண்ணைப் பார்க்கணும்னு ஆசை இருந்தாலும், பாட்டி அங்க உங்க வீட்டுக்கு போகவே மாட்டாங்க.” 

“நாங்க எதாவது விசேஷத்துக்கு வந்தாலும், ஏன் வந்தோம்னு போலத்தான் பார்ப்பாங்க. அதெல்லாம் அத்தைக்காக நாங்க சகிச்சிகிட்டோம். ஆனா என் தங்கைக்கு அப்படியொரு நிலைமை வந்தா… நான் சும்மா இருக்க மாட்டேன்.” 

“உங்க வீடு அளவு வசதி இல்லைனாலும், என் தங்கை போற இடத்தில நிம்மதியா இருக்கணும்.” 

“நீங்க ரொம்ப நல்லவர். எங்க அண்ணன் கெட்டவரா… உங்களைப் போலத்தானே எங்க அண்ணனும் இருப்பாங்க.” 

“நான் உன் அண்ணனை கெட்டவன்னு சொல்லலை… உன் அண்ணன் இருபத்திநாலு மணி நேரமும் வீட்ல உட்கார்ந்து பொண்டாட்டியை பார்த்திட்டு இருப்பானா… அதெல்லாம் சரி வராது விட்டுட்டு.” 

“நாமதான் இப்படிப் பேசிட்டு இருக்கோம். ஆனா உங்க வீட்ல யாருக்கும் அப்படியொரு நினைப்புக் கூட இருக்காது. இப்படி ஒரு பேசுச்சு இருக்குன்னு தெரிஞ்சா… எங்களைத் தான் கேவலமா பார்ப்பாங்க.” 

“நான் எதோ என்னோட விருப்பத்துக்காக உன்னைக் கல்யாணம் பண்ணிகிட்டேன். ஒரு நாள் பஸ்ல அலைஞ்சிட்டு வந்ததுக்கே நீ காய்ச்சல்ல படுத்திட்ட…” 

“என் விருப்பத்துக்காக உன்னைக் கல்யாணம் பண்ணி கஷ்டபடுத்துறேனோன்னு எனக்கே குற்ற உணர்வா இருக்கு. இங்காவது உனக்கு வசதி தான் குறைவு. ஆனா உங்க வீட்ல எல்லாம் இருந்தும் அகல்யாவால எதுவும் அனுபவிக்க முடியாது. அவ நிம்மதியா இருக்க முடியாது.” 

முதலில் கணவன் பேசுவது அதிகப்படி என வெண்ணிலாவும் நினைத்தாள். ஆனால் மகேஸ்வரியே ஒருமுறை சொல்லி இருக்கிறார். 

“என்னோட மாமன் மகனுக்கே என்னைக் கேட்டாங்க. ஆனா வசதி இல்லைன்னு இங்க கொடுத்தாங்க. அங்க கட்டி கொடுத்திருந்தா கூட நான் நிம்மதியா இருந்திருப்பேன்.” என அவள் அம்மா சொன்னது, இப்போது நினைவு வந்தது. 

ஒரு பெண்ணுக்கு மகிழ்ச்சி தரக் கூடியது, கணவனின் பணமோ வளமான செல்வமோ அல்ல… மன நிம்மதியான வாழ்க்கை தான். அந்த விதத்தில் தான் அதிர்ஷ்ட்டசாலி என்றே வெண்ணிலாவுக்குத் தோன்றியது. 

எல்லோர் முன்பும் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும், கணவனுக்குத் தன் மீது உள்ள அன்பும், தனக்கு ஒன்று என்றால்… அவன் எப்படிப் பார்த்துகொள்வான் என்றும் அவளுக்குத் தெரியும்.
கோபமாக இருப்பாள் என நினைத்து ஜெய் மனைவியைப் பார்க்க, அவள் எதோ கனவில் இருப்பது போல முகம் மலர்ந்து கிடந்தது. 

“என்ன டி?” என அவன் ஆர்வமாக, 

மறுப்பாகத் தலையசைத்தவள், அவனை நோக்கி கையை நீட்ட, ஜெய் அவள் கையைப் பற்றியபடி கட்டிலில் அவள் அருகில் உட்கார்ந்தான். 

அவன் தோளில் சாய்ந்து கொண்டவள், நிமிர்ந்து அவன் கன்னத்தில் முத்தமிட… இதுநாள் வரை அவளாக முத்தமிட்டது இல்லை. ஜெய் கேட்டால் தான் போனாள் போகிறது எனக் கொடுப்பாள். 

இன்று அவளாகவே முத்தமிடவும் ஜெய் மனம் மகிழ்ந்து போனான். அதைத் தன் வழியில் மனைவிக்கும் உணர்த்தினான்.

Advertisement