Advertisement

எந்தன் காதல் நீதானே

அத்தியாயம் 11 

மாலை மற்றவர்கள் வந்த நேரத்திற்கு ஜெய்யும் வீடு வந்து சேர்ந்திருக்க… அன்றும் மழை பெய்தது. அமுதா மழை நேரத்திற்குக் கொறிக்க வேர்கடலை அவித்துக் கொண்டு வந்து ஹாலில் வைக்க… எல்லோரும் பேசியபடி கடலையை உடைத்து சாப்பிட்டனர். 


இரவு உணவுக்குப் பிறகு, “உன் அத்தை இன்னைக்குப் போன் பண்ணி அம்மாகிட்ட பேசி இருக்கா. ரெண்டு நாள் உங்களை அங்க அனுப்பி வைக்கச் சொன்னாளாம். நீயும் வெண்ணிலாவும் இந்த வாரம் சனி ஞாயிறு அங்க போயிட்டு வந்திடுங்க.” என ஜெயராமன் ஒரு குண்டைப் போட… 

“அதெல்லாம் முடியாது.” என்ற பதில் ஜெய்யிடம் இருந்து வேகமாக வர… மொத்த குடும்பமும் அவனைத் தான் பார்த்தது. 

“ஏன்?” என்ற தந்தையின் கேள்விக்கு, சட்டென்று என்ன காரணம் சொல்வது எனத் தெரியாமல். 

“நாங்க ஊட்டிக்கு போறோம்.” என்றான். 

“ஓ… சரி அப்ப போயிட்டு வந்து. அப்புறம் ஒருநாள் உங்க அத்தை வீட்டுக்கு போங்க.” என ஜெயராமன் முடித்துக் கொண்டார். 

ஹனிமூன் போக வேண்டும் என்ற எண்ணமெல்லாம் ஜெய்க்கு இல்லை. எதோ வாயில் வந்த காரணத்தைச் சொல்லி இருந்தான். தந்தை மறுக்காமல் சரியென்றதும், போய் விட்டு வரலாமே எனத் தோன்றி விட… அப்போதே உட்கார்ந்து அறை பதிவு செய்தான். 

ஜெய் அறைக்கு வந்த போது வெண்ணிலா அவள் அண்ணன் ராஜுடன் பேசிக் கொண்டிருந்தாள். அவள் பேசிவிட்டு வருவதற்குள், உடை மாற்றிப் படுத்து விட்டான். 

கணவனை நினைத்து ஆச்சர்யமே, என்ன அமைதியா இருக்காங்க என நினைத்துக் கொண்டே , தானும் உடை மாற்றி வந்து படுத்துக் கொண்டாள். 

மறுநாள் வியாழக்கிழமை ஜெய் அன்று விடுப்பு முடிந்து அலுவலகம் செல்லக் கிளம்பினான். முழுக்கை சட்டை பேண்ட் அணிந்து, ஷாம்பூ போட்டு அலசிய சிகையை மேலே தூக்கி வாரி, கேசம் துள்ள படிகளில் அவன் இறங்கி வர… “நல்லா ஹீரோ மாதிரி தான் இருக்கான்.” என வெண்ணிலா நினைக்க… 

“என்ன என்னைச் சைட் அடிக்கிறியா?” என அவன் கண் சிமிட்ட… அவனைப் பதிலுக்கு முறைத்தபடி சென்றாலும், எப்படித்தான் கண்டு பிடிக்கிறானோ என நினைத்தபடி வெண்ணிலா சமையல் அறைக்குள் சென்றாள். 

“நீ இட்லி சாப்பிடு வெண்ணிலா. ஜெய்க்கு இதைக் கொடு.” எனக் கெட்டி தயிர் போட்ட பழையதும், கடித்துக்கொள்ள வத்தலும் வைத்து அமுதா கொடுக்க… அதை எடுத்து சென்று வெண்ணிலா உணவு மேஜையில் வைக்க… ஜெய் உண்ண அமர்ந்தான். 

“நான் துணி துவைச்சிட்டு வரேன்.” என அமுதா அறைக்குச் சென்று விட.. வேறு யாரும் வீட்டில் இல்லை. காமாக்ஷி மாடியில் இருந்தார். 

ஜெய் பழையதையும் வெண்ணிலா இட்லியையும் உண்டனர். 

“நீங்க ஆபீஸ்க்கு சாப்பாடு எடுத்திட்டு போக மாட்டீங்களா அத்தான்.” 

“இல்லை.. அங்க ஆபீஸ் பக்கத்தில சாப்பிட்டுப்பேன்.” 

“ஏன் அத்தான் சாப்பாடு எடுத்திட்டுப் போகலாம் இல்ல.. நான் வேணா நாளைக்குச் சாப்பாடு கட்டி தரவா?” 

“ஐயோ நம்மால இந்த டிபன் பாக்ஸ் எல்லாம் தூக்கிட்டு போக முடியாது. நான் பெரும்பாலும் காலையில பழையது சாப்பிடுறதுனால, மதியம் டிபன் தான் சாப்பிடுவேன். அதோட சாயங்கலாம் டீ குடிக்கக் கூட வீட்டுக்கு வந்திடுவேன்.” 

“ஓ… டெய்லி பழையது சாப்பிட கஷ்டமா இல்லை.” 

“இதுல என்ன கஷ்ட்டம்? நீ வேணா சாப்பிட்டு பாரு நல்லா இருக்கும்.” என்றவன், வத்தல் வைத்து அவளுக்குப் பழையதை ஊட்டி விட… 

“நல்லத்தான் இருக்கு தயிர் சாதம் மாதிரி.” 

ம்ம்.. இன்னும் கொஞ்சம் சாப்பிடு.” என மேலும் இரண்டு வாய் அவன் ஊட்டி விட.. யாரும் வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பயந்து கொண்டே வாயை திறந்தாள். 

“ஞாயிற்றுக்கிழமை காலையில அம்மா கறி தெறக்கி கொடுப்பாங்க. பழையதுக்குச் சாப்பிட செம ருசியா இருக்கும். அன்னைக்குப் பாரு எல்லாம் எனக்கு உனக்குன்னு பழையதுக்குப் போட்டி போடுங்க.” 

“அம்மம்மா இருக்கும் போது நானும் சாப்பிட்டு இருக்கேன்.” 

“ம்ம்.. அதுதான்.” என்றவன், உண்டு விட்டு அலுவலகம் சென்றான். 

வெண்ணிலாவின் நேரம் டிவி பார்ப்பது, சமையலில் உதவுவது, அவள் அம்மாவுடன் போன்னில் பேசுவது எனப் போகும். மதியம் உணவுக்குப் பிறகு கீழே இருக்கும் அறையிலேயே படுத்து உறங்கி விடுவாள். மாலை முதலில் அகல்யாவும் ராதிகாவும் வர… சத்யா ஸ்பெஷல் கிளாஸ் முடிந்து லேட்டாகத்தான் வருவான். அதன் பிறகு நேரம் றெக்கைக் கட்டிக் கொண்டு பறக்கும். 

அன்று ஜெய்க்கு அலுவலகத்தில் நண்பர்களின் கேலி கிண்டலுக்கு இடையில் தான் வேலை நடந்தது. பத்து நாள் விடுமுறையும் வீணாகத்தான் போனது என்று சொன்னால் நம்பவா போகிறார்கள் என நினைத்துக் கொண்டான். 

ஜெய் அன்று மாலை வீடு திரும்ப மொத்த குடும்பமும் வீட்டில் இருந்தது. வெண்ணிலா அன்று மாலை சிற்றுண்டிக்குப் பிரட் சேண்ட்விச் செய்திருந்தாள். 

வெண்ணிலா தான் எல்லோருக்கும் தனித் தனித் தட்டில் வைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். ஜெய்யிடம் கொடுக்க அவன் உண்ணுவதில் ஆர்வம் காட்டவே இல்லை. டீயை மட்டுமே குடித்தான். 

“அண்ணா, நீ சாப்பிடலை நல்லா இருக்கு.” என்ற சத்யாவிடம், “இதையும் சாப்பிடு.” எனக் கொடுத்து விட… வெண்ணிலாவின் முகம் வாடி விட்டது. 

தான் முதல் முதலாக ஒன்று செய்து கணவன் உண்ணவில்லை என்ற வருத்தம். அவளைக் கவனித்த ஜெய், டீ குடித்தபடி அவள் அருகில் சென்று உட்கார்ந்தவன், “என்ன?” என்றான். 

“ஏன் நல்லா இல்லையா? நீங்க ஏன் சாப்பிடலை?” என அவள் கேட்க, 

“அங்கப் பாரு உங்க மாமாங்க ரெண்டு பேரும் ரசிச்சுச் சாப்பிடுறாங்களே போதாதா…” என்றான். 

ஜெயராமனும், சந்திரனும் பிரட்டை பியித்துத் தக்காளி சாஸில் தொட்டு, எதோ தோசையைப் போல உண்டவர்கள், “மருமக செஞ்சது நல்லா இருக்கு.” என்று வேறு சொல்ல… வெண்ணிலாவின் முகத்தைப் பார்த்து ஜெய்கு சிரிப்பாக வந்தது. 

“இதுக்கு மேல என்ன வேணும் உனக்கு.” என ஜெய் கேட்க, வெண்ணிலா அவனை முறைத்தவள், எனக்கும் வேண்டாம் எனத் தட்டை மேஜையில் வைக்க… 

“ரொம்பப் பிடிவாதம்.” என்றவன், அவளுடையதில் பாதி உண்டு விட்டு மீதியை வெண்ணிலாவிடம் கொடுக்க… 

“நல்லா இருக்கா…” எனக் கேட்டபடி வெண்ணிலா மீதியை உண்டாள். இவர்கள் இருவரும் டைனிங் ஹாலில் இருக்க.. மற்றவர்கள் ஹாலில் இருந்தனர். 

எனக்கு இப்ப இருக்கப் பசியே வேற என இவளுக்கு எப்படிப் புரிய வைப்பது என நினைத்தவன்,
“மாடியில துணி காயப் போட்டியே எடுத்தியா?” ஜெய் கேட்டதும், நினைவு வந்து வெண்ணிலா மாடிக்கு ஓட… யார் கவனத்தையும் கவராமல் ஜெய்யும் சற்று நேரம் சென்று மாடிக்குச் சென்றான்.

அறையின் கதவை சாற்றிவிட்டு வந்தவன், துணிகளை மடித்துக் கொண்டிருந்தவளை பின்னால் இருந்து அணைக்க… திடிரென்று நடந்த தாக்குதலில் வெண்ணிலா பயந்து போனாள். 


“இப்படியா பண்ணுவீங்க?” என்றவள் நெஞ்சில் கைவைக்க… 

“கல்யாணம் முடிஞ்சு பத்து நாளுக்குப் பிறகும் வெறும் கட்டிதான் பிடிச்சிருக்கேன்.” என்றான். அவன் சொன்னது வெண்ணிலாவுக்குப் புரியவில்லை. 

“புரியுற மாதிரி பேச மாட்டீங்களா?” என்றவள் துணியை மடிக்க… 

“ம்ம்… எல்லாம் நேரம்.” என்றான். 

“ஒரு ஸ்னாக்ஸ் கொடுத்தா சாப்பிடுறதுக்கு என்ன? ரொம்பப் பண்றீங்க அத்தான்.” 

“சாப்பிட கூடாதுன்னு எல்லாம் இல்லை. வீட்ல நாங்க நிறையப் பேர். வீட்ல தான் கடலை சுண்டல்ன்னு எதாவது பண்ணுவாங்க. எப்போவோ தான் வெளியே வாங்குவோம். அகல்யா, ராதிகா, சத்யா எல்லாம் என்னை விட ரொம்பச் சின்னவங்க. அவங்க தான் இதெல்லாம் சாப்பிட ரொம்ப ஆசைப்படுவாங்க. அதனால நான் எப்பவுமே ஆர்வமா இதெல்லாம் சாப்பிட மாட்டேன். அது அப்படியே பழகிடுச்சு.” 

எப்போதுமே ஜெய் ஆர்வமாக உண்டு வெண்ணிலா பார்த்ததே இல்லை. அவன் பசிக்கு தான் உண்ணுவான். ருசிக்கு உண்பவன் அல்ல… அவன் உயரத்திற்கு ஆள் மெலிவு தான். 

“இப்ப எல்லாம் வளர்ந்துட்டாங்க. அதுவும் இப்ப தாராளமா இருக்கு. நீங்க ஒன்னும் உங்களோடது தியாகம் பண்ண வேண்டாம். கொடுக்கிறதை ஒழுங்கா சாப்பிடுங்க.” மனைவியின் மிரட்டல் கூட ஜெய்க்கு அழகாகத் தெரிந்தது. 

தன் மேல் இருக்கும் அன்பிலும் அக்கரையிலும் தானே சொல்கிறாள் என்பதில் மகிழ்ச்சி உண்டானது. உடளவில் இன்னும் அவன் மனைவி ஆகவில்லைதான். ஆனால் மனதளவில் அவன் மனைவியாகத் தான் இருக்கிறாள் எனப் புரிந்தது. 

மறுநாள் ஜெய் அலுவலகம் செல்லக் கிளம்பி வந்த போது, வெண்ணிலா தலைக்குக் குளித்துவிட்டு கீழே சாமி அறையில் விளக்கேற்றிக் கொண்டிருந்தாள். 

ஜெய்க்கு அலுவலகம் செல்லவே மனமில்லை. வீட்டில் இருந்தாலும், வெண்ணிலா எதற்கும் ஒத்து வரமாட்டாள் எனத் தெரியும். அதனால் அலுவலகமே சென்று வரலாம் என நினைத்துக் கொண்டு சென்றான். 

மாலை அலுவலகம் முடிந்து வந்த ஜெய்யின் கண்கள் மனைவியை ஆர்வமாகத் தேட… “ஜெய், இன்னைக்கு வெள்ளிக்கிழமை நீயும் வெண்ணிலாவும் கோவிலுக்குப் போயிட்டு வந்திடுங்க.” என அமுதா சொல்லும் போதே, வெண்ணிலா சந்தன நிறத்தில் அரக்கு பார்டர் வைத்த பட்டுப் புடவையில் தேவதையாக இறங்கி வந்தாள். 

வீட்டில் தம்பி தங்கைகள் இருக்க.. அவர்கள முன்பு எதையும் காண்பித்துக் கொள்ளாமல், “நான் டிரஸ் மாத்திட்டு வரேன்.” என்றவன் மாடிக்குச் சென்றான். 

அவன் வேஷ்ட்டி சட்டையில் கிளம்பி வர… வெண்ணிலாவுக்கு அகல்யா மல்லிகையைத் தலையில் சூடிக் கொண்டிருந்தாள். அமுதா மகனுக்கு டீ கொண்டு வந்து கொடுக்க.. அதைக் குடிக்கும் சாக்கில் மனைவியை யாருக்கும் தெரியாமல் ரசித்துக் கொண்டும் இருந்தான். 

வெண்ணிலா சோபாவில் இருந்து எழுந்தவள், “நீங்களும் வரலாம் இல்ல… நாம எல்லாம் சேர்ந்து போகலாமே.” என்றாள் அகல்யாவிடம். 

“இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க. அடுத்த வாரம் வேணா எல்லாம் சேர்ந்து போங்க.” என்றார் அமுதா. சரியென்று இருவரும் விடைபெற்று வெளியில் வந்தனர். இருவரும் பைக்கில் தான் சென்றனர். 

வீட்டில் இருந்தே அர்ச்சனைக்குத் தேவையானது எடுத்து வந்ததால்… நேராகக் கோவிலுக்குத்தான் சென்றனர். வெண்ணிலாவுக்கு அந்தக் கோவில் மிகவும் பிடிக்கும். வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் கூட்டம் இருந்தாலும், சந்நிதியில் தான் ஆட்கள் நின்றனர். பெரிய கோவில் என்பதால்… பிரகாரம் காலியாகத்தான் இருந்தது. 

சிவனின் சந்நிதானத்தில் அர்ச்சனை செய்து தரிசனம் முடிந்து, பிரசாதம் பெற்றுக் கொண்டு, பிரகாரத்தில் இருந்த மற்ற சுவாமிகளை இருவரும் வணங்கியபடி சென்றனர். கர்ம சிரத்தையாக வேண்டியபடி வந்த மனைவியை ஜெய்யின் பார்வை அடிக்கடி தொட்டு மீண்டது. அடுத்து தாயார் சந்நிதியிலும் அதே போல அர்ச்சனை முடிந்து, குருக்குள் தந்த குங்குமத்தை வகுட்டில் இட்டுக் கொண்டாள். பிறகு கோவிலின் வெளிப் பிரகரத்தையும் சுற்றினர். அங்கேயும் மற்ற சுவாமிகளை வணங்கி விட்டு, கடைசியில் நவகிரங்களைச் சுற்றியவர்கள். கொடி மரத்தின் அருகே விழுந்து வணங்கி, அங்கேயே சிறிது நேரம் உட்கார்ந்தும் இருந்தனர். 

கோவிலில் விபுதி சந்தனத்தோடு தேவாரமும் மனம் பரப்பியது. வெண்ணிலா வீட்டில் இருப்பவர்களுக்குக் கொடுக்க… கையில் வைத்திருந்த தீருநீரை போட பேப்பர் கேட்க, 

“சிவன் சொத்துக் குலம் நாசம் சொல்லுவாங்க. கோவிலில் இருந்து திருநீர் கூட எடுத்திட்டுப் போகக் கூடாது. அங்க கிண்ணம் இருக்கும் அதுல போட்டுடு.” என்றான். 

வெண்ணிலாவுக்கு இதெல்லாம் தெரியாது. அவள் கணவன் சொன்னபடி செய்தவள், அவர்களின் திருமணம் நடந்த இடத்தில் சென்று நின்றிருக்க, ஜெய்யும் அங்கே வந்தான். 

“இது தானே சம்பவம் நடந்த இடம். ஆசையோடு பார்க்கிறியா.. இல்லை இப்படி வந்து மாட்டிகிட்டோமேன்னு பார்க்கிறியா?” என ஜெய் அவளை வம்பிழுக்க… 

“நீங்க நினைக்கிறது எல்லாம் என்னைச் சொல்லாதீங்க.” என்றாள். 

“நான் ஏன் அப்படி நினைக்கப் போறேன். நீ எனக்கான்னு தெரியாத போதே… உன்னோட கற்பனையில் வாழ்ந்தவன்.” என்றவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் வெண்ணிலா பார்க்க… 

“வா போகலாம்.” என அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான். 

கோவிலை விட்டு வெளியே வர… அங்கே தெப்பக் குளம் இருக்கும். ஆனால் யாரும் அதில் இறங்க முடியாமல் பூட்டி வைத்திருந்தனர். சிறிது நேரம் அங்கே நின்று வேடிக்கை பார்த்து விட்டு, கோவிலில் இருந்து கிளம்பினர். அப்போதே ஒரு மணி நேரம் ஆகி இருந்தது. 

வெளியில் வந்த வெண்ணிலா அங்கிருந்த கடைகளை வேடிக்கை பார்க்க… “எதாவது வேணுமா நிலா?” ஜெய் கேட்க, 

“கண்ணாடி வளையல் போடணும்னு எனக்கு ரொம்ப ஆசை. வாங்கித் தரீங்களா?” என்றாள். 

பாரேன் தங்க வளையல் டசன் கணக்கில வச்சிட்டு கண்ணாடி வளையல் கேட்கிறதை. ஒருவேளை நம்மால இதுதான் வாங்கித் தர முடியும்னு நினைச்சு கேட்கிறாளோ என்று கூட ஜெய் நினைத்தான். ஆனால் வெண்ணிலா அப்போது கட்டியிருந்த புடவைக்கு மட்டும் அல்லாமல் வேறு புடவைகளுக்கும் பொருத்தமாக வாங்கியவள், வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் வாங்கினாள். 

உண்மையாகத்தான் கேட்டு இருக்கிறாள் என்பதில் ஜெய்க்கு மகிழ்ச்சியே… வெள்ளிக்கிழமை அதுவுமா எல்லோருக்கும் வளையல் வாங்கி வந்தது அமுதாவுக்கும் மகிழ்ச்சியே.
அணிந்திருந்த தங்க வளையல்களுக்கு நடுவே அரக்கு நிற கண்ணாடி வளையல்களை வெண்ணிலா அப்போதே அணிந்து கொண்டாள். 

சிறிது நேரம் சென்று புடவை மாற்ற என அவள் மாடிக்கு கிளம்ப… “இரு சாப்பிட்டு போகலாம்.” என ஜெய் அவளை நிறுத்தி வைத்தான். 

வார இறுதி என யஸ்வந்தும் வந்திருக்க, இரவு உணவு கலாட்டாவாகச் சென்றது. கோயம்புத்தூரில் இருந்து அவன் நிறையத் தின்பண்டங்கள் வாங்கி வந்திருக்க… வெண்ணிலா அதை உண்டு விட்டு உணவை சரியாக உண்ணவில்லை. 

“இருங்க டிரஸ் மாத்திட்டு வரேன்.” என வெண்ணிலா மடிக்கு செல்ல… 

அவள் மாடிக்குச் சென்றதும், “நாளைக்கு ஊட்டிக்கு போக இன்னும் எடுத்து வைக்கலை… இனிதான் எடுத்து வைக்கணும். காலையில பார்க்கலாம்.” என வெண்ணிலாவுக்கும் சேர்த்து சொல்லிக் கொண்டு ஜெய் மாடிக்கு விரைந்தான். 

ஜெய் கதவைத் தட்ட, உடனே திறந்த வெண்ணிலா, “அத்தான் பட்டுப் புடவை பாத்ரூம்ல மாத்தினா வீணா போகும். நீங்க கொஞ்ச நேரம் வெளியவே இருங்க.” என மீண்டும் கதவடைக்கச் செல்ல….

அவள் வாயை தன் கைக்கொண்டு அழுத்தமாக மூடியவன், அவளை அப்படியே தள்ளிக் கொண்டு அறைக்குள் வந்து கதவை சாற்றித் தாழிட்டான். 


தான் இப்போது என்ன தவறாகச் சொன்னோம் என அவள் விழிக்க… 

“உனக்கு இப்ப புடவை வீணாகாம கழட்டனும். அவ்வளவுதானே… அதை நான் பார்த்துகிறேன்.” என்றவன், மனைவியை நெருங்க… சிறிது நேரம் சென்றே அவன் சொன்னதின் அர்த்தம் வெண்ணிலவுக்கு விளங்க… அதற்குள் ஜெய் அவளை அடைந்திருந்தான். 

அவளை அப்படியே கட்டிலில் தள்ளி பக்கத்தில் அவன் படுத்துக் கொள்ள… என்ன வாப்போகிறது என்பது வெண்ணிலாவுக்குப் புரிந்து விட… எதிர்பார்ப்பிலும் பயத்திலும் நெஞ்சம் படபடத்து, வயிற்ருக்குள் பட்டாம் பூச்சி பறந்தது. 

“அத்தான் ப்ளீஸ் லைட்டாவது அணைங்களேன்.” என்றது, காதில் விழுந்தது போலவே அவன் காட்டிக்கொள்ளவில்லை. 

கணவன் நெருங்குவதை உணர்ந்த வெண்ணிலா தான் தன் கண்களை மூடும்படி ஆனது. 

“செஞ்சூரியன் ஜோதியில் சந்திரன் ஒளி சேர்ந்ததோ
அசைந்தாடும் ஆழியில் அழகிய நதி கலந்ததோ
காலம் என்னும் நதியில் விழுந்து இரவும் நகர்ந்தது
பகலும் நகர்ந்தது இதயமும் நகர்ந்தது ஓ….

இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே
இது தானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…”

Advertisement