Advertisement

எந்தன் காதல் நீதானே

அத்தியாயம் 10 

பொள்ளாச்சியில் வேளாண் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி பணியில் தான் ஜெய் ஆனந்தனுக்கு வேலை. மண்ணை ஆராய்ந்து அதில் என்ன சத்து இருக்கிறது, அதில் என்ன விதைத்தால்… விளையும் என மண்ணை ஆராய்ந்து கண்டுபிடிப்பது தான் அவன் வேலை. 


இடம் இருக்கிறது என எல்லா இடத்திலேயும் நினைத்ததை விதைத்து விட முடியாது. மண்ணின் தன்மைக்கு ஏற்பே விளைச்சல் இருக்கும். அதனால் மண்ணைப் பற்றித் தெரிந்து விதைத்தால் தான் நல்ல விளைச்சல் கிடைக்கும். 

காலை பத்து மணியில் இருந்து மாலை ஐந்து மணி வரையே அங்கே அவனுக்கு வேலை. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை. அரசாங்க பணியில் இருக்கிறோம். அது மட்டும் போதும் என்று ஜெய் நினைக்கவில்லை. மண்ணைப் பற்றி நன்றாகத் தெரிந்தவன் என்பதால்… பொள்ளாச்சியைச் சுற்றி இருக்கும் பெரிய பண்ணை வீடுகளுக்கு, அவர்கள் விருப்பத்தின் பேரில் தோட்டம் அமைப்பது கொடுப்பான். 

விதவிதமான பூ செடிகள், காய்கறிகள், பழ மரங்கள் என மண்ணின் தன்மைக்கு ஏற்ப ஆட்களைக் கொண்டு தோட்டம் அமைத்து கொடுப்பான். ஒருவருக்குச் செய்ய ஆரம்பித்து, அதைப் பார்த்து மற்றவர்கள், அவர்கள் நண்பர் என இப்போது அவனுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். 

தோட்டம் அமைத்துக் கொடுப்பது மட்டும் அல்ல. அதை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தன்னுடைய ஆட்களை வைத்து தேவையான உரங்கள் வைத்து பராமரித்தும் கொடுப்பான். தேவைப் பாட்டால் அவனே நேரில் சென்றும் மேற்பார்வையிடுவான். 

அவன் இந்த வேலை செய்வது ஜெயராமனுக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. நம்ம தோட்டத்திலேயே வேலை இருக்கிறது என்பார். ஆனால் புதிதாக எதாவது முயற்சி செய்ய ஜெயராமனும் சரி, சந்திரனும் சரி ரொம்பவும் யோசிப்பார்கள். இன்னும் அந்தக் காலத்திலேயே இருப்பார்கள். இந்தக் காலத்திற்கு ஏற்ப செய்வோம் என்றால் கேட்கமாட்டார்கள். இவர்களோடு தன்னால் மல்லுக்கட்ட முடியாது என்றுதான் ஜெய், அவனுக்கான ஒரு தனிப் பாதையை அமைத்துக் கொண்டான். 

பணக்காரர்களுக்குப் பில்லை தீட்டினாலும், “என்னேனே தெரியலைப்பா… எது போட்டாலும் சரியா வர மாட்டேங்குது.” எனப் புலம்பும் ஏழை விவசாய்களுக்கு, எந்தப் பணமும் வாங்காமல் அவர்கள் தோட்டத்திற்கு நேரில் சென்று என்ன பிரச்சனை எனப் பார்த்துச் சொல்லுவான். 

“நீங்க இதுக்கு இந்த மருந்து அடிக்கணும். முடிஞ்ச அளவு இயற்கையாவே உரம் தயார் பண்ணுங்க. சில உரம் மட்டும் கடையில வாங்கி அடிச்சுக்கலாம். இப்போ இதைப் போடுங்க சரியா வரும்.” எனச் சொல்லிவிட்டு வருவான். 

அகல்யாவின் நகையை அடகு வைத்தது, அவனுக்குப் பெரிய உறுத்தல். அதைச் சீக்கிரம் மீட்டுக் கொடுக்கக் வேண்டும் என்றே, இந்த நேரத்தை அவன் தோட்டடம் அமைக்கும் வேலைக்குப் பயன்படுத்திக் கொண்டான். 

அன்று அமுதாவும் காமாட்சியும் கோவிலுக்குச் சென்றிருந்தனர். பெண்கள் மூவரும் முற்றத்தில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். 

அப்போது ராதிகா தான் ஆரம்பித்தாள். “நாம மூன்னு பேரும் இப்படியெல்லாம் இங்க உட்கார்ந்து பேசி அரட்டை அடிப்போம்ன்னு நினைக்கவே இல்லை. வெண்ணிலா வேற எங்கையோ இருக்க வேண்டியது. இப்ப இங்க இருக்கிறது எல்லாமே ஆச்சர்யம் இல்லை.” என்றதும், அகல்யா தொடர்ந்தாள். 

“ஆமாம், எனக்கும் சில நேரம் அப்படித்தான் தோணும். வெண்ணிலா மட்டும் கரணைக் கல்யாணம் பண்ணி இருந்தா, அண்ணன் எப்படி இருந்திருக்கும் நினைச்சு பார்க்கவே முடியலை.” 

“வெண்ணிலா நிச்சயம் முடிஞ்சு, நாங்க திரும்பி வந்து போட்டோ காட்டின போது, அண்ணனோட முகம் எப்படி வாடிப் போச்சு.” 

சகோதரிகள் இருவரும்பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த வெண்ணிலாவுக்கு, “ஆமாம் பெரிய காதல் மன்னன் ரேஞ்சுக்குப் பில்ட் அப் கொடுத்திருப்பான் போல… ஆனா இப்ப ஒன்னையும் காணோம்.” என மனதிற்குள் சலித்துக் கொண்டாலும், கணவனை நினைத்து மனம் மென்மையாகவே செய்தது. 

அதன் பலனாக அன்று அவளாகவே சென்று ஜெய்யிடம் பேசினாள். 

“என்ன கோபம் போச்சா?” என அவன் சிரிக்க… 

“நான் ஒன்னும் கோபமா இல்லை. நீங்கதான் கோபமா இருந்திட்டு வீட்ல கூட இருக்காம சுத்திட்டு இருக்கீங்க.” என்றாள் மனதை மறையாமல். 

“ஏய் உன் மேல கோபத்தில எல்லாம் போகலை…” என்றவன், தன் மனைவிக்கு எல்லாம் தெரிய வேண்டும் என்று, அகல்யாவின் நகை அடகு வைத்ததில் இருந்து, அவன் தனியாகச் செய்யும் தோட்டம் அமைக்கும் பணி வரை எல்லாம் சொன்னான். 

கணவனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில், “இது தானா… என்கிட்டே தான் அவ்வளவு நகை இருக்கே. நான் அகல்யாவுக்குக் கொடுக்கிறேன்.” என்றாள் வெண்ணிலா உடனே. 

“ஹே… அதெல்லாம் வேண்டாம்.” என ஜெய் மறுக்க… 

“ஏன்? நான் கொடுக்கக் கூடாதா?” என அவள் உரிமையாகக் கேட்க, 

“நீ கேட்டதே சந்தோஷம். ஆனா உன் நகையை வாங்கி நாங்க எப்படி அகல்யாவுக்குப் போட முடியும். அதோட இந்த விஷயம் உன் வீட்ல தெரிஞ்சது. அவங்க எங்களை மதிப்பாங்களா? சும்மாவே மதிக்க மாட்டாங்க. அதனால இந்த மாதிரி எல்லாம் தயவு செய்து பேசாத.” என்றான். 

வெண்ணிலா முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ள… “நீ எனக்காகத் தான் சொல்ற எனக்குப் புரியுது. ஆனா இது மட்டும் வேண்டாம்.” என அவன் மனைவியைத் தோளோடு அனைத்துக் கொண்டு சொல்ல… 

நகையை வேண்டாம் என்ற கோபத்தில் வெண்ணிலா அவன் கையைத் தட்டி விட்டாள். தான் அணைத்தது பிடிக்கவில்லையா எதற்காகத் தட்டி விட்டாள் என ஜெய்க்கு புரியவில்லை. 

அவளுக்கு நிச்சயத்த திருமணம் நடக்கவில்லை. அவள் மனதில் என்ன இருக்கிறது என்றும் தெரியவில்லை. அவனாக எதையும் அவளிடம் வலுக்கட்டாயமாகத் திணிக்க விரும்பவில்லை. அவளுக்கு இன்னும் நேரம் தேவைப்படலாம் என எப்போதும் போல விலகியே படுத்துக் கொண்டான். 

மறுநாள் மாலையே இருட்டிக்கொண்டு இருக்க… எல்லோரும் வீடு திரும்பி இருக்க… ஜெய் மட்டும் ஏழு மணி ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. 

ஜெய் எப்போதும் மாலையில் வந்துவிடுவான். ஆனால் அன்று எப்போதையும் விடத் தாமதமாக… மழை வேறு வருவது போல இருக்க… வெண்ணிலா வீட்டிற்கும் வாசலுக்கும் அவனை எதிர்பார்த்து நடந்து கொண்டிருந்தாள். 

மருமகள் மகனைத் தேடுவதைப் பார்த்து, பெரியவர்கள் ஒருவரையொருவர் ஜாடையாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். 

மழை ஆரம்பிக்கவும் ஜெய் வரவும் சரியாக இருக்க… வெண்ணிலா ஓடிச்சென்று துண்டு எடுத்து வந்து அவனுக்குக் கொடுத்தாள். 

லேசாகத்தான் நனைந்து இருந்தான். அதனால் இரவு உணவை முடித்துக் கொண்டே அறைக்குச் செல்லலாம் எனக் கீழேயே இருந்து விட்டான். 

இரவு உணவு முடிந்து வெண்ணிலா மேலே அறைக்குச் சென்றிருக்க… மற்றவர்களும் படுக்கச் சென்றிருந்தனர். ஜெய் டிவியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தவன், டிவியை அனைத்து விட்டு அவனும் எழுந்தான். 

“தோட்டம் போடுறது எல்லாம் அப்புறம். முதல்ல கல்யாணம் கட்டி வந்த பெண்ணைக் கவனிக்கச் சொல்லு. அந்தப் பொண்ணு இன்னைக்கு வீட்டுக்கும் வாசலுக்கும் இவனைக் காணாது நூறு தடவையாவது நடந்திருக்கும். பொண்டாட்டி மனசு புரியலை… இவனெல்லாம் என்ன விரும்பி கல்யாணம் பண்ணான்.” என ஜெயராமன் மனைவியிடம் சொல்வதைப் போல மகனுக்குச் சொல்லிவிட்டு செல்ல… 

“நாம வாழுற லட்சணம் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு போல…” என நினைத்தபடி ஜெய் அறைக்குச் சென்றான். இருந்தாலும் மனைவி தன்னைத் தேடினாள் என்பது ஆர்வத்தை உற்பத்தி செய்திருக்க… மனைவியைக் காணும் ஆவலில் இரண்டிரண்டு படிகளாகத் தாண்டி சென்றான். 

அங்கே வெண்ணிலா குளிக்கத் தயாரகிக் கொண்டிருந்தாள். ஆளும் சோர்வாக இருக்க… மழை நேரத்தில் எதற்குக் குளிக்கிறாள் என ஜெய் யோசிக்கும் போதே… கதவை தட்டும் சத்தம் கேட்க, ஜெய் சென்று திறக்க, வெளியே அகல்யா நின்று கொண்டிருந்தாள். 

“என்ன அகல்யா?” அவன் கேட்கும் போதே வெண்ணிலா வந்து விட… 

“நீ போ அண்ணா…” என்றவள், எதோ மறைவாக வெண்ணிலாவிடம் கொடுத்து விட்டு, “இந்நேரம் தலைக்கு ஊத்தாத… காலையில ஊத்திக்கலாம்.” எனச் சொல்லிவிட்டு செல்ல, ஜெய்க்கு புரிந்து விட்டது. 

வெண்ணிலா குளித்து விட்டு நைட்டியோடு வந்தவள், படுக்கத் தயாராக… “நீ ஓரத்தில படு. உனக்கு வசதியா இருக்கும்.” என்றவன், கட்டிலில் தள்ளி படுத்துக்கொள்ள… வெண்ணிலா ஓரத்தில் படுத்துக் கொண்டாள். 

வெகு நேரமாகியும் வெண்ணிலா உறங்காமல் புரண்டு புரண்டு படுக்க.. அதில் அவனுக்கும் உறங்க முடியவில்லை. 

“என்ன வெண்ணிலா தூங்கலையா?” 

“கால் வலிக்குது அத்தான். தூக்கமா வருது ஆனா தூங்க முடியலை.” என்றாள். 

ஜெய் எழுந்து சென்று விளக்கை போட்டவன், தைலம் எடுத்துக் கொண்டு வந்து, கட்டிலில் அமர்ந்து அவள் கால்களை எடுத்து தன் மடியில் வைத்துக்கொள்ள, வெண்ணிலா திகைத்து போனவள், “நானே போட்டுகிறேன்.” என அவள் கால்களை உறுவ பார்க்க.. ஜெய் விட்டால் தானே… 

“ஹே சும்மா இரு.” என்றவன், அவள் வாழைத்தண்டு கால்களில் தைலத்தை ஊற்றி நீவி விட… கூச்சமாக இருந்தாலும், இருந்த வலிக்குச் சுகமாக இருக்க… கண்ணை மூடிக் கொண்டாள். 

ஜெய் அவளின் இரண்டு கால்களையும் நன்றாக உறுவிவிட்டு, பாதத்தை இதமாகப் பிடித்து விட்டவன், விளக்கணைத்து மீண்டும் படுத்துக் கொண்டே, “உனக்குத் தான் உடம்பு சரியில்லைன்னு தெரியுது இல்ல… எதுக்குச் சாயங்காலத்துல இருந்து அந்த நடை நடந்தே…” என்றான். 

அவன் பக்கம் திரும்பி படுத்த வெண்ணிலா, “உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்க, 

“ம்ம்.. உன் மாமா சொன்னார்.” என்றான். 

மாமா கவனிக்கும் படியாகவா இருந்தோம் என நினைத்தவள், “அது நீங்க எப்பவும் வர்ற நேரத்துக்கு வரலை. மழை வேற வர்ற மாதிரி இருந்துச்சு. அதுதான் பார்த்திட்டு இருந்தேன்.” 

“இருக்கும் போது கண்டுக்க மாட்டேங்கிற… இல்லைனா மட்டும் தேடுறியா?” என்றான். 

வெண்ணிலா பதில் சொல்லவில்லை. அவன் அருகில் சிறிது நெருங்கி வர… ஜெய்யும் அவள் பக்கம் திரும்பி படுத்தவன், “இத்தனை நாள் வரலை… இன்னைக்குக் கிட்ட வந்து என்ன பண்றது?” எனப் புன்னகையுடன் கேட்க, 

வெண்ணிலா உடனே விலகி படுக்க நினைக்க… ஜெய் அவளது இடையில் கைகொடுத்து தன் அருகில் இழுத்துக் கொண்டவன், “ஹே.. விளையாட்டுக்கு சொன்னேன். ப்ளீஸ்.. என்கிட்டவாவது இரேன்.” என்றான் குரலில் ஏக்கம் வழிய… 

வெண்ணிலா சரியெனப் படுத்துக்கொள்ள… வெளிச்சத்துக்காகக் கட்டிலின் அருகே இருந்த ஜன்னலை ஜெய் திறந்து விட… சில்லென்று மழை காற்று வீசியது. 

அதில் வெண்ணிலாவின் உடல் சிலிர்க்க, ஜெய் குளிருக்கு இதமாக அவள் மீது கைப் போட்டுக் கொண்டான். 

“புது இடம் எப்படி இருக்கு? இங்க பிடிச்சிருக்கா?” 

“இது ஒன்னும் புது இடமில்லை. எப்பவுமே இங்க வர எனக்குப் பிடிக்கும்.” 

“நீ லீவுக்கு வர்றதும், இப்ப என்னைக் கல்யாணம் பண்ணி வந்திருக்கிறதும் ஒண்ணா.” 

“எனக்கு ஒரே மாதிரி தான் இருக்கு.” வெண்ணிலா வேண்டுமென்றே சொல்ல… 

“அது உன் தப்பு இல்லை. நீ அப்ப வந்ததும், இப்ப வந்ததும் ஒன்னு இல்லைன்னு நான்தான் புரிய வச்சிருக்கணும்.” என்றவன், வெண்ணிலாவை இறுக அனைத்து, அவள் இதழில் முத்தமிட்டு இருந்தான். 

இந்தத் திடீர் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை என்றாலும், வெண்ணிலா எதிர்க்கவும் இல்லை. அது போதாதா ஜெய்க்கு. மனைவியை அணைப்பில் வைத்திருந்தவன், முத்த மழையில் அவளை நனைய வைத்துக் கொண்டும் இருந்தான். 

போதும் என்று நிறுத்தவும் மனமில்லை. மேற்கொண்டு முன்னேறும் சூழ்நிலையும் இல்லை. அவன் தவிப்பதைப் பார்த்தவள், “தூங்குங்க அத்தான்.” என்றாள். 

“நீ ஒரே ஒரு முத்தம் கொடு தூங்கிடுறேன்.” என அவன் பேரம் பேச… 

வெண்ணிலா வெகுவாகத் தயங்க, “என்னைப் பிடிக்கலையா.. என் மேல கோபமா?” என்றான். 

வார்த்தையால் பதில் சொல்லாமல், அவள் அவன் இதழில் முத்தமிட்டு விட… ஜெய்கு அதுவே அவன் மன சஞ்சலத்தைப் போக்கி விட…. அவளை அணைத்தபடி கண்களை மூடிக் கொண்டான். 

வெண்ணிலா சிறிது நேரத்திலேயே உறங்கி விட… ஜெய் நேரம் சென்றே உறங்கினான். 

காலை அவனுக்கு முன்பே எழுந்தவள், பொட்டுச் சத்தம் வராமல் குளித்துவிட்டு, கீழே இறங்கி சென்று விட்டாள். இரவில் இருந்த தைரியம் இப்போது இல்லை. கணவனைப் பார்க்கவே தயக்கமாக இருந்தது. 

கீழே சென்ற வெண்ணிலா தயங்கி நிற்க… அகல்யா சொல்லியிருப்பாள் போல… “நம்ம வீட்ல ஒரு தடையும் இல்லை. சாமி ரூம் பக்கம் மட்டும் போகாதே..” என்றார் அமுதா. 

காலையில் எழுந்த ஜெய் ஆர்வமாகப் பக்கத்தில் பார்க்க, வெண்ணிலா இல்லை. சரி குளிக்கிறாள் வருவாள் எனப் படுத்தே இருந்தவன், பிறகே அவள் குளியல் அறையில் இல்லை என்பதை உணர்ந்தான். வெளி மாடி கதவு திறக்காமலே இருக்க… எழுந்து வேகமாகப் பல் துலக்கி விட்டு கீழே சென்றான். 

பள்ளிக்கு கல்லூரிக்கு என அவன் தம்பி தங்கைகள் கிளம்பிக் கொண்டிருக்க.. தோசை ஊற்றுவது போல வெண்ணிலா சமையல் அறையிலேயே நின்று கொண்டாள். 

வெளியே ஜெய்யின் குரல் கேட்க, முகம் சிவந்து படபடப்பில் தோசை கூட ஒழுங்காக ஊற்ற வரவில்லை. 

காபி கலக்கிய அமுதா அவளிடம் கொடுத்து ஜெய்க்குக் கொடுக்கச் சொல்ல… அவன் அருகே சென்று முகம் பார்க்காமல் காபியை கொடுக்க… அவளின் சிவந்த முகமே… அவளின் நிலையை உணர்த்த, ஜெய் காபியை வாங்கிக் கொண்டு மாடிக்கு சென்று விட்டான். 

சிறிது நேரம் தோட்டத்தில் நின்றவன், தாமதமாகவே குளித்து எல்லோரும் சென்ற பிறகே கீழே வந்தான். 

அமுதாவும் வெண்ணிலாவும் மட்டுமே இருந்தனர். மகனைப் பார்த்ததும், “நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க.” எனச் சொல்லிவிட்டு அறைக்குச் சென்று விட்டார். 

வெண்ணிலா தோசை ஊற்றிக் கொடுக்க, ஜெய் உண்டபடி மனைவியைப் பார்த்தவன், “ஒருத்திக்கு இருட்டா இருக்கும் போது தான் தைரியம் வரும் போல….இந்த சூரியனை மறைய வைக்கும் சக்தி எல்லாம் எனக்கு இல்லையே…” என வருத்தம் போல சொல்ல,  

வெண்ணிலாவின் முகம் குப்பென்று சிவக்க, ஜெய் அதை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். வெண்ணிலா அவன் முகம் பார்க்காமல் உண்டு முடிக்க… அதற்காகக் காத்திருந்தவன், “சாயங்காலம் சீக்கிரம் வரேன். நீ நடந்திட்டு இருக்காம ரெஸ்ட் எடு.” எனச் சொல்லி விட்டு வெளியே செல்ல… வெண்ணிலா நாக்கை கடித்துக் கொண்டாள்.

அன்று முழுவதும் வெண்ணிலா மந்திரித்து விட்டது போலத்தான் இருந்தாள். எப்போதும் காலை பதினோரு மணிப் போல அவள் அம்மா அழைப்பார். அவர் பேசுவதை சரியாக கவனிக்காமல் வேறு நினைவில் இருந்தவள், அவர் எதோ கேட்க, “என்ன சொன்னீங்க மா?” என மீண்டும் கேட்க, 
“ஒன்னும் இல்லை… நான் நாளைக்கு பேசுறேன்.” என்றவர் வைத்து விட்டு, சிறிது நேரம் கழித்து தன் அண்ணியை அழைத்து, “என்ன வெண்ணிலா ஒருமாதிரி இருக்கா?” என்றார்.
“தலைக்கு குளிச்சிருக்கா வேற ஒன்னும் இல்லை.”
“அது இல்லை அண்ணி. நான் ஒன்னு கேட்டா அவ ஒன்னு சொல்றா. எதுவும் ஜெய் கூட சண்டையா இருக்குமோ?”
“இல்லையே… நேத்துக் கூட ஜெய் வர நேரம் ஆகிடுச்சு… வீட்டுக்கும் வாசலுக்கு நடையா நடந்தாளே. அவங்க மாமா கூட அதை மகன்கிட்ட சொன்னாரே…காலையில கூட அவனுக்கு அவ தான் தோசை ஊத்திக் கொடுத்தா.” என்றதும், மகேஸ்வரியின் முகம் மலர… 
“ஓ அப்படியா?” என்றவர், “அண்ணி கல்யாணம் முடிஞ்சு போனது, பொண்ணு மாப்பிள்ளையும்  ஒரு ரெண்டு நாள் இங்க அனுப்பி விடுங்க.” என 
“அதுகென்ன உங்க அண்ணன் வந்ததும் சொல்றேன்.” என அமுதா வைத்து விட… மகள் வரும் நாளை எண்ணி இப்போதே மகேஸ்வரி ஆர்வமானார்.     

Advertisement