Advertisement

எந்தன் காதல் நீதானே 

அத்தியாயம் 1 

அன்றைய விழாவுக்கான ஒப்பனையுடன் சக்தி திருமண மண்டபம் சீரியல் விளக்குகளால் ஜொலிக்க, உள்ளே உறவும், சுற்றமும், நட்பும் கலந்த கலவையாக மனிதத் தலைகள். விழாவுக்கான பிரத்யேக ஆடையில் அனவைரும் இருக்க… அனைவரின் கவனத்தையும் கவரும் வகையில் மேடையில் நிச்சயம் நடந்து கொண்டிருந்தது. 


பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் வெற்றிலை பாக்கு மாற்றியதும், முடிக்க, நிச்சய பட்டை எடுத்துக் கொண்டு மணமகள் அறைக்குப் பெண்கள் சிலர் செல்ல, எல்லோரின் விழியும் மணமகளின் வரவை ஆவலாக எதிர்பார்த்து இருக்க.. அங்கிருந்தோரின் எதிர்பார்ப்பை பொய் ஆக்காமல், தங்க நிறத்தில் நீல வண்ண பார்டர் வைத்த பட்டுடுத்தி, வெண்ணிலா தேவதையாக நடந்து வந்தாள். 

மேடைக்கு எதிர்புறம் இருந்து வந்தவள், அவளைப் பார்த்ததும் மலர்ந்து புன்னகைத்த உறவுகளுக்குப் பதிலுக்குத் தானும் அவரக்ளைப் பார்த்து புன்னகைத்தவாறு சென்றவள், தனது தாய்மாமன் ஜெயராமை பார்த்ததும் ஆர்வம் தாங்காமல் மலர்ந்து முகத்துடன், “வாங்க மாமா.” என்றாள். 

அவரும் பதிலுக்குப் புன்னகைக்க, அதற்குள் மேடையில் இருந்து அவளை வேகமாக வர சொல்லி அழைப்பு வர.. தங்கை மகளின் தோளில் தட்டிக் கொடுத்த ஜெயராமன், “போ மா…” என்றார்.
வெண்ணிலா மேடையை நோக்கி சென்றாலும், முன்பு போல அவளால் நடக்க முடியவில்லை. 
யாரோ தன்னை உறுத்துப் பார்ப்பதைப் போல உணர்ந்தாள். அதன் பிறகு அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. மேடைக்குச் சென்றதும் சபைக்கு நமஸ்காரம் செய்தவள், அவளுக்குகாகப் போடப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்து கொள்ள, முதலில் அவளின் வருங்கால மாமியார் நலங்கு வைக்க, அடுத்து அவள் அம்மா என வரிசையாகப் பெண்கள் நலங்கு வைக்க, வந்திருந்த பார்வையாளர்கள் பக்கம் பார்ப்பதை மட்டும் வெண்ணிலா கவனமாகத் தவிர்த்தாள். 

எல்லோரும் நலங்கு வைத்து முடிக்க, அவர்களில் நிச்யத்தின் போது மணமக்கள் சேர்ந்து நிற்பது வழக்கம் இல்லை என்பதால்… அவளின் வருங்காலக் கணவன் கரன் தன் நண்பர்கள் புடைசூழ வந்தவன், அவளோடு நின்று சில புகைப்படங்கள் மட்டும் எடுத்து விட்டு கீழே சென்று விட்டான். 

அவளுக்கு அவனிடம் புதிதாக வெட்கமோ படபடப்போ இல்லை. சின்ன வயதில் இருந்தே அவனைத் தான் திருமணம் செய்யப்போவதாக இரு வீட்டிலும் பேசி வைத்திருந்தனர். 

கூட்டம் எல்லாம் குறைந்த பின்தான் வெண்ணிலாவின் தாய்மாமன் குடும்பம் மேடை ஏறி வந்தது. 
கூடவே வெண்ணிலாவின் தாய் மகேஸ்வரியும் வந்தார். தனது தாய் வீட்டுச் சொந்தம் என்பதால்… அவரின் முகம் மலர்ந்திருப்பதைப் பார்த்தவள், மனம் கனிந்தது. அவர்களை வரவேற்கும் விதமாகப் புன்னகைத்தவளின் முகம், எதிர்பார்த்தவர் வராததால் சிறிது ஏமாற்றம் கொண்டது. 

தனது அருகில் நின்ற தாய்மாமாவின் பிள்ளைகளைப் பார்த்து புன்னகைத்தவள், “ஜெய் அத்தான் எங்க?” எனக் கேட்க, எல்லோரின் பார்வையும் திகைப்பை காட்ட… “அவன் வரலைன்னு சொல்லிட்டான்.” என்றார் அவளின் அத்தை அமுதா பட்டென்று. 

எல்லோரும் வீட்டை போட்டுட்டு வர முடியாது இல்லையா… கல்யாணத்துக்கு வருவான் என ஜெயராமன் சொல்ல, வெண்ணிலா கேட்டுக் கொண்டாள். 

ச்ச.. வரவே இல்லாதவனை நினைச்சு தான் நாம இவ்வளவு நேரம் பயந்திட்டு இருந்தோமா என நினைத்தவளுக்கு, ஒரு பக்கம் விடுபட்ட உணர்வு இருந்தாலும், சிறிது ஏமாற்றமும் எட்டிப் பார்த்தது. 

திமிர் பிடிச்சவன் நல்லவேளை வரலை என நினைத்துக் கொண்டாள். அவள் அருகில் நின்ற யஸ்வந்த் மற்றும் அகல்யாவுடன் சந்தோஷமாகச் செல்பி எடுத்துக் கொண்டாள். 

சின்ன மாமா மட்டும் வந்திருந்தார். அவர் குடும்பத்தைத் திருமணத்திற்கு அழைத்து வருவதாகச் சொன்னார். சித்தி முன் தினமே தனது குடும்பத்துடன் வந்துவிட்டார். அன்றே எல்லோரும் சேர்ந்து ஊர் திரும்பினர். 

வீட்டிற்கு வந்து ஒப்பனையைக் கலைக்கும் போதும் வெண்ணிலாவுக்கு அவன் நினைவு தான். நகைகள் ஒவ்வொன்றாகக் கழட்டியபடி, வேறு எதோ நினைவுகளில் இருந்தாள். 

“ஏன் வரலை?” 

“இன்னும் கோபமா?” 

சின்ன வயதில் விடுமுறைக்குத் தாயுடன் பாட்டி வீட்டிற்குச் சென்றிருக்கிறாள். இரண்டு தாய் மாமாவும் அதே வீட்டில் தான் இருக்கிறார்கள். சித்தி சற்று தள்ளி இருக்கிறார். வளர்ந்த பிறகு அவள் தந்தை வழி பாட்டி அவளை அங்குச் செல்ல விட்டது இல்லை. 

கடைசியாக அவனை அவர்கள் பாட்டி இறந்த அன்று பார்த்தது. இவள் காரில் சென்று இறங்க, ஹாலில் கைகளைக் கட்டிக் கொண்டு இவளையே பார்த்து இருந்தான். அவன் பார்வையில் இருந்து ஒன்றும் அறிய முடியவில்லை. 

பாட்டியை கொண்டு செல்லும் வரைதான் அங்கே இருந்தாள். அதன்பிறகு அவள் அப்பா அவளைத் தனது தங்கை மாற்றம் தாயுடன் அனுப்பி வைத்து விட்டார். 

வெண்ணிலாவுக்கு இருக்க வேண்டும் என ஆசைதான். ஆனால் யார் அவளது விருப்பத்தைக் கேட்டது. 

எப்போதோ ஒருமுறை தான் பாட்டி வீட்டிற்குச் செல்ல அனுமதி கிடைக்கும். அம்மா இவளையும் இவள் அண்ணனையும் அழைத்துக் கொண்டு செல்வார்கள். ஒரு வயதுக்கு மேல்… அது கிராமம் என அண்ணன் வர மறுக்க, இவள் மட்டும் அம்மாவோடு செல்வாள். எப்போதோ ஒருமுறை வரும் பேத்தி என்பதால்… தாத்தாவும் பாட்டியும் கண்ணுக்குள் வைத்து தாங்குவார்கள். மாமாக்களும் அப்படித்தான். 

பெரிய அத்தை அமுதாவும் வெண்ணிலவுக்குப் பிடித்தது சமைத்துக் கொடுப்பார். சின்ன அத்தை ஜெயந்தி அப்படி மெனக்கெடும் ரகம் இல்லை. 

தாத்தா பாட்டிக்கு அடுத்து அவளை எதோ பொக்கிஷம் போலப் பாதுகாப்பது பெரிய மாமாவின் மூத்த மகன் ஜெய் ஆனந்த்தன் தான். இவளை விட ஆறு வயது மூத்தவன். அவளின் விளையாட்டு தோழன். இவள் வந்துவிட்டால் இவளோடு தான் இருப்பான். விளையாட்டில் கூட இவளை வேறு யாரும் ஜெயிக்க விட மாட்டான். எப்போதும் தன்னை ஒரு இளவரசி போல உணர வைப்பான். 

இப்போது மட்டும் ஏன் மாறிப் போனான்? 

அவள் உடை மாற்றும் போது வெளியே அவளின் அத்தை அன்பரசியின் குரல் கேட்டு, உடைமாற்றி விட்டு வெண்ணிலா வெளியே செல்ல, அங்கே அன்பரசியோடு கரனும் இருந்தான். 

“அவன் இன்னைக்கே சென்னைக்குப் போறான். அதுதான் சொல்லிட்டு போக வந்தான்.” என அன்பரசி சொல்ல, 

“வரேன் வெண்ணிலா…” என்றவன், மற்றவர்களிடமும் விடைபெற்று செல்ல, 

“பிறகு உனக்குப் போன் பண்ணி பேசுவான்.” என்றார் அன்பரசி . இவரே மகனுக்கும் சேர்த்து பேசுவார் என நினைத்தவள், அறைக்குள் சென்று விட.. மற்றவர்களும் களைந்து சென்றனர். 

வெண்ணிலா படுக்கச் செல்லும்போது நேரம் நள்ளிரவுக்கும் மேல். அவளுக்குத் தனியாக அறை எல்லாம் இல்லை. அவளுக்கும் அவள் பட்டிக்கும் ஒரே அறை தான். பாட்டில் முன்பே அலுப்பில் உறங்கி இருக்க, விளக்கை போடாமல் பூனை நடை நடந்து சென்று தனது கட்டிலில் படுத்துக் கொண்டாள். 

பாட்டி மட்டும் விழித்தால் அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது. சரியான கில்லாடி பாட்டி. பேத்திக்கு தனது பேரனை முடிக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை மகள் முலம் மகனிடம் பேச வைத்துச் சாதித்துக் கொண்டவர். 

வெண்ணிலா பெரிய பெண் ஆனதுமே. வெண்ணிலாவின் அப்பா ராஜகோபாலிடம் அன்பரசியை விட்டுப் பெண் கேட்க வைத்து, வாக்கும் வாங்கிய பின் தான் அமைதியானார். 

கரன் அவர்களுக்கு ஒரே மகன். வெளியிடத்தில் செய்தால்… வரும் மருமகள் எப்படி இருப்பாளோ…. வெண்ணிலா என்றால்… அந்தக் கவலை இல்லை என்றுதான் அம்மாவும் மகளும் நினைத்தனர்.
வெண்ணிலா பேருக்கு ஏற்றார் போல… மதி முகமும் பால் நிறமும் கொண்டவள், அதோடு அமைதியான குணம். 
எங்கே பேத்தியை காதல் என யாரும் கலைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில்… எப்போதும் கண்ணும் கருத்துமாக அவளது பாட்டி காவல் காத்தார். சில நேரம் வெண்ணிலாவுக்கே கடுப்பாக இருக்கும். 

கற்பகம் பாட்டி இதில் மட்டும் இல்லை. வெண்ணிலா பெரிய பெண் ஆனதும் அதைச் சாக்கிட்டு, வருடம் ஒருமுறை சென்ற அவள் அம்மம்மா வீட்டிற்கும் விடுவது இல்லை. 

அங்க இருக்கிறது எல்லாம் இளவட்ட பையன்கள். அங்க எதுக்கு இவளை அனுப்பனும். நாளைக்கு ஒன்னு கிடக்க ஒன்னு நடந்தா… நாம அங்க சம்பந்தம் செய்ய முடியுமா? என மகனை வேறு தூண்டி விட்டு, மருமகளையும் அவள் அம்மா வீடு செல்லாமல் தடுத்த புண்ணியவதி. 

மகேஸ்வரியின் பிறந்த வீடு செல்வாக்கானது தான். ஆனால் நடுவில் ஏற்பட்ட வியாபார நஷ்ட்டத்தில் கொஞ்சம் நொடித்து விட… ராஜகோபால்அதன் பிறகு மனைவி வீட்டினரை மதிப்பதில்லை. அவர்கள் இங்கே வீட்டிற்கு வந்தால் கூடப் பெரிதாக உறவு கொண்டாட மாட்டார். அதனால் அங்கிருந்து யாரும் இங்கு வருவது இல்லை. 

எப்போதோ ஒருமுறை ஜெய் தான் வருவான். ஊரில் இருந்து கடலை, சோளம், காய்கறி என அவர்கள் தோட்டத்தில் விளைந்தது எல்லாம் கொண்டு வருவான். அதோடு மகேஸ்வரிக்கும் வெண்ணிலாவுக்கும் உடைகள் என நிறையவே எடுத்து வந்தாலும், கற்பகம் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார். அதோடு முனங்கிக் கொண்டும் முறைத்துக் கொண்டும் இருப்பார். 

ஒருமுறை ஜெய் உணவருந்தும் போது அவர் எதோ மனம் நோகும்படி சொல்லிவிட… பாதி உணவிலேயே அவன் எழுதுகொள்ள… மனம் பொறுக்காமல் மகேஸ்வரி மாமியாரை எதிர்த்து பேசி விட…. கற்பகம் மகனிடம் வத்தி வைத்து ஒரு ஆட்டம் ஆடினார். 

அவள் அண்ணன் மகனை மகளுக்குத் திருமணம் செய்ய நினைத்து தான் இப்படிச் செய்வதாகச் சொல்லி விட… அன்று ராஜ கோபால் அப்படியா எனக் கேட்டு, வார்த்தையால் வசைமாரி பொழிய…. மகேஸ்வரி துடித்துப் போனார். அன்று தாயின் கண்ணீரை பார்த்து வெண்ணிலா அதன்பிறகு ஜெய் வந்தாலும், அவனோடு நின்று பேசுவதில்லை. அவனும் வந்தாலும் சிறிது நேரம் இருந்துவிட்டு சென்று விடுவான். 

மகேஸ்வரிக்குக் கரனைப் பிடிக்கும். அவர் நாத்தனார் வீட்டில் மகளைச் செய்யக் கூடாது என்றெல்லாம் நினைக்கவில்லை. அப்படியிருந்துமே அவரைக் கற்பகம் படுத்தித் தான் எடுத்தார். 

வெண்ணிலாவுக்கு மட்டும் இந்தக் கட்டுபாடுகள் இல்லை. கரனுக்குமே உண்டு. இங்கே இவளுக்குப் பாட்டில் என்றாள்… அவனுக்கு அவனது அம்மா. எங்கே அவன் காதல் என்று யாரையும் இழுத்து வந்து விடுவானோ என்ற அச்சத்தில். அவனையுமே டார்ச்சர் செய்ய…. வெண்ணிலா போல அடங்கிப் போகவில்லை அவன். 

அவன் கரூரில் இருந்த கல்லூரிகளை எல்லாம் விட்டுச் சென்னையில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து விட்டான். அவன் அம்மாவின் அனத்தல் தாங்காமல் மாதம் ஒருமுறை ஊருக்கு வருவான். இரண்டு நாட்கள் இருப்பான் பிறகு சென்று விடுவான். 

பூவை அடித்து மலர வைக்க முடியுமா? திருமணத்திற்குப் பேசி இருந்தாலும், கரன் வெண்ணிலா இருவருக்கும் இடையே காதல் போல ஒரு விசயம் தோன்றவில்லை. ஒருமுறை பேசியதோடு விட்டிருந்தால் கூட விருப்பம் என்பது இருவருக்கும் வந்திருக்கலாம். ஆனால் கற்பகம் மற்றும் அன்பரசி அதையே எந்நேரமும் நினைவு படுத்த… இந்த உறவு என்பது திணிப்பது போலத்தான் இருவருக்கும் இருந்தது. 

நிச்சயம் முடிந்த இரவு, வருங்காலக் கணவனைப் பற்றிய கனவில் இருக்காமல் வேறு எதைதையோ நினைத்துக் கொண்டிருந்த வெண்ணிலாவுக்குமே தன்னை நினைத்து ஆச்சர்யம். திருமண நிச்சயமான தோழிகள் பேசி அவளும் கேட்டிருக்கிறாள் தானே… நமக்கு ஏன் அப்படியெல்லாம் இல்லை என யோசித்தவள், ஒரு வேளை கரனை சின்ன வயதில் இருந்து தெரியும் என்பதால் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு வரலாம் என நினைத்துக் கொண்டு உறங்கிப் போனாள்.

திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம் என்பதை நிறையப் பேர் உணருவதே இல்லை.

Advertisement