Advertisement

அத்தியாயம் – 29

பறவைகளின் ஒலியைத் தவிர அங்கே வேறெதுவும் இல்லை. அப்படியொரு நிசப்தம். நால்வரின் மனதிலுமே கலவையான எண்ணங்கள். வானதிக்கு தான் கேட்டது எல்லாம் நிஜம்தானா என்பது போல இருந்தது.

‘இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?!’ என்று தோன்ற, அப்படியே தான் அமர்ந்திருந்தாள்.

ஆம்! சரோஜா எல்லாம் சொல்லியிருந்தார் அவளிடம்.

“தப்பு பண்ணது கோபி.. அதை மூடி மறைச்சது என் புருஷன்.. இதுல ரொம்ப சிரமத்துக்கு உள்ளானது இளா மட்டும்தான்.. அப்படியிருக்கப்போ இப்போ அவனோட வாழ்க்கையே சிக்கலா இருக்குன்னு தெரியும்போது, நான் எப்படி சும்மா இருக்க முடியும்…” என்றுதான் அனைத்தையும் சொல்லிவிட்டார்.

ஒரு விசேசத்திற்கு பழநி வந்தவர், மகளையும் பார்த்துவிட்டு வரலாம் என்று அங்கே செல்ல, அங்கேயோ பிருந்தாவின் முகத்தில் தெரிந்த கவலை கண்டு என்னவென்று விசாரிக்க, இத்தனை நாள் மனதிற்குள் வைத்திருந்ததை அப்படியே கொட்டித் தீர்த்துவிட்டாள்.

“நான் என்னம்மா செய்யட்டும். எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலையே…” என,

“அடிப்பாவி… அதுக்காக இவ்வளோ நாள் நீ அமைதியா இருந்தியா?! எப்படி இருக்க முடிஞ்சது உன்னால? மனசு உறுத்தல.. எது நடந்தாலும் நீ உன் புருஷன் பிள்ளை கூட தானே இருக்க. இப்போ தனி தனியா நிக்கிறது அவங்க ரெண்டு பேரும் தானே. சுயநலம் கூடிப்போச்சா உனக்கும்…” என்று சரோஜா கேட்க,

“ம்மா நிச்சயமா அப்படி இல்லை. வானதியும் சரி இளாவும் சரி எனக்கு என்ன யாரோவா?! ஆனா இதெல்லாம் அவருக்கு தெரிஞ்சிட்டா, அதைதான் என்னால நினைக்க முடியலை…” என்றாள் நிஜமாகவே வருந்தி.

“தெரிஞ்சா தெரியட்டும். வந்து உங்கப்பாவை கேள்வி கேட்கட்டும்.. பதில் சொல்ல நம்ம கடமை பட்டிருக்கோம். அதுக்காக இவங்க ரெண்டுபேரும் கஷ்டம் அனுபவிக்கனுமா?” என்றவர் “கிளம்பு இப்போவே… நான் பேசுறேன் வானதிக்கிட்ட…” என்று கிளப்பிக்கொண்டு வந்துவிட்டார்.

அவரின் தைரியம் அப்போதும் கூட பிருந்தாவிற்கு இல்லை..!

வானதி எல்லாம் தெரிந்தபின்னே என்ன நினைப்பாளோ?! தன்னை, தன் பிறந்த வீட்டினரை எல்லாம் என்ன நினைப்பாள் என்று தோன்ற, மனது கலக்கமாய் இருந்தது.

இருந்தும் வேறு வழியில்லையே..!

இளாவும் கூட, சரோஜா பேச ஆரம்பிக்கையில் “ம்மா அதெல்லாம் வேணாம் நீங்க சும்மா இருங்க…” என,

“இல்ல இளா.. நீ வேற எனக்கு என் பசங்க வேற இல்லை. என்னால இதெல்லாம் தெரிஞ்சும் சும்மா இருக்க முடியாது…” என்றவர் வானதியிடம் எல்லாம் சொல்லிட,

அடுத்து பிருந்தாவும் வானதியின் கரம் பற்றி “நிச்சயமா நான் உனக்கு கெடுதல் செய்யனும்னு எதுவுமே பண்ணல வானதி. இளாக்கிட்ட நான் பேசினது எல்லாம் அவன் சம்மதிக்கணுமே அப்படின்னு தானே தவிர வேற எதுக்காகவும் இல்லை. என்னை நம்பு…” என்றாள்.

வானதி சரோஜாவிடமும் சரி, பிருந்தாவிடமும் சரி என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் திணற, இளாவிற்கு அவளின் நிலை நன்கு புரிந்தது.

“போதும்.. சொல்லியாச்சு தானே.. விடுங்க. திரும்ப திரும்ப இதை பேசி எதுவும் ஆகப் போறது இல்லை…” என்றான் இளம்பரிதி.

“வானதி… உன் மனசு என்ன பாடுபட்டிருக்கும்னு எங்களுக்கு புரியாம இல்லை. அதே நேரம் நீ இளாவையும் புரிஞ்சுக்கணும். அவன் எங்களுக்காக மட்டும் பார்த்து எதுவும் சொல்லாம இல்லை. பிருந்தாவை தன் சொந்த அக்காவா நினைச்சும் தான் இதெல்லாம் உன்கிட்ட அவன் சொல்லலை.

எங்களையே இப்படி நினைக்கிறவன், நீ அவனோட பொண்டாட்டி அப்போ உன்னை எங்கயாவது விட்டுக்கொடுப்பானா?! உன்னை அவன் எவ்வளோ உயர்வா நினைப்பான். அது ஏன் உனக்கு தெரியாம போச்சு. வேகம் மட்டும் போதாது. விவேகமும் வேணும். அதை மனசுல வச்சு நடந்துக்கோ…” என்றவர் எழுந்துகொள்ள,

பிருந்தா தயங்கி “வா.. வானதி…” என்று அழைக்க,

“தைரியமா போங்க அண்ணி.. அண்ணனுக்கோ இல்லை அம்மாவுக்கோ  இது எப்பவுமே தெரியாது…” என்றாள்.

அதன்பின்னே தான் பிருந்தாவிற்கு நிம்மதியாய் மூச்சு விட முடிந்தது.

“பார்த்துக்கோ இளா…” என்று பிருந்தாவும், சரோஜாவும் கிளம்பிவிட, இப்போது மீண்டும் இளாவும், வானதியும் மட்டுமே.

அவனது இடத்தில் இருந்து யோசிக்க வேண்டுமாமே..!

இவ்வெண்ணம் தோன்றவும், இளம்பரிதியை திரும்பிப் பார்த்தாள். அவனோ இப்போது உர்ரென்று இருக்க, வானதிக்குமே சற்று சங்கடமாய் தான் இருந்தது.

என் வார்த்தைகளை நம்பு என்று அவன் சொல்லும் போதெல்லாம் கேட்காமல் இருந்துவிட்டு, இப்போது மற்றவர்கள் சொல்லி அவனை நம்பியது போல் அவன் நினைத்தால்? நினைத்தால் என்ன நினைத்தால் அப்படித்தானே யாருக்கும் நினைக்கத் தோன்றும்.

அந்த சூழலில் அவனுக்கு அப்போது எப்படி இருந்திருக்கும்?!

சுதிர் போன்ற ஆட்களும் இருக்கிறார்கள். கோபி போன்றவர்களும் இருக்கிறார்கள். வெற்றிவேலன் போன்ற ஆட்களும் இருக்கிறார்கள். இத்தனை பேருக்கு இடையில் இளம்பரிதி போன்றவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். 

அதையெண்ணி கண்களை மூடி, தன்னை சமன் செய்தவள், உடனே வெள்ளைக் கொடி பறக்க விடவும் இல்லை.

என்ன இருந்தாலும் இவன் என்னிடம் இதெல்லாம் சொல்லியிருந்தால், ஆரம்பத்தில் கஷ்டமாய் இருந்தாலும், வானதியும் எதார்த்தம் உணர்ந்து நடந்திருப்பாள் தான். தன்னிடம் தான் கேட்டு, என் கணவன் சொல்லவில்லையே என்ற ஆதங்கம் அவளுக்கு இருக்கவே செய்தது.

இளம்பரிதியும் வானதி எண்ணியது போல்தான் எண்ணிக்கொண்டு இருந்தான். இருவரும் இருவருக்காக மாற்றி மாற்றி நினைக்க, மோகனா மருமகளுக்கு அழைத்துவிட்டார்.

“ரெண்டு நாள் டைம் கொடுத்தேனே.. என்ன யோசிச்ச நீ? என்ன முடிவு பண்ணிருக்க நீ…” என்று எடுத்த எடுப்பிலேயே கேட்க, அவர் கேட்டது இளாவிற்கும் கேட்டது.

‘இதென்ன புது கதை…!’ என்று அவன் பார்க்க,

“அதுவந்து அத்தை…” என்றாள் தயக்கமாய்.

“இந்த வந்து போய் கதை எல்லாம் வேணாம் வானதி. நீ என்ன முடிவு பண்ணிருக்க?” என்றவர்

“சரிம்மா உன்னையோ உன் புருசனையோ யாரும் நாங்க எதுவும் கேள்வி கேட்கலை. நீங்க என்னவோ பண்ணுங்க. ஆனா இனி அவனை நான் இங்க இருக்க வைக்க முடியாது. அனுப்பி விட்டிடுறேன் அங்க. நீ என்னவோ பண்ணிக்கோ…” என, வானதிக்கு சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது.

இளம்பரிதிக்கோ தன் அம்மாவின் பேச்சைக் கேட்டு முகத்தில் ஈ ஆடவில்லை.

‘என்னடா இளா உன் நிலைமை கடைசியில இப்படி ஆகிடுச்சு…’ என்றுதான் நினைத்தான். அதையே வானதியும் பார்வையில் சொல்ல, கடுப்பாகிப் போனது அவனுக்கு.

“என்ன சிரிப்பு..? நிஜமாதான் சொல்றேன். எதுக்கெடுத்தாலும் வல்லுன்னு விழறான்.. என்னால எல்லாம் பொறுத்துக்க முடியாது. எனக்கு பொண்ணு வேற இருக்கா. அவளுக்கு அடுத்து என்னன்னு பார்க்கணும். ஒன்னு நீ வந்து இருந்து உன் புருசன கவனி. இல்லையா அவனை அனுப்புறேன் என்ன செய்வீங்களோ அது உங்க பாடு..” என,

“இ.. இல்லத்தை. அது.. அவரு.. அவர் இங்கதான் இருக்கார்…” என்று வானதி சொல்லவும், ஒருநிமிடம் மோகனாவிற்கு அதிர்ச்சிதான்.

இருந்தும் சட்டென்று சுதாரிதவர் “ஓ..!! அப்படியா.. நல்லது சீக்கிரம் கிளம்பி வந்து சேருங்க…” என்றவர் வைத்தும் விட்டார்.

அதே நேரம் தெய்வா தன் அண்ணனிற்கு அழைத்து “ண்ணா நாளைக்கு நான் வர்றேன்.. வந்து பிக்கப் பண்ணிக்கோ..” என,

“இப்போ என்ன உனக்கு லீவு…” என்றான்.

“ம்ம்ம் லீவ் என்னவோ ரெண்டு நாள் தான். அதுக்காக இப்படியே உன்னை விட முடியுமா? நான் வந்து அண்ணிக்கிட்ட பேசிக்கிறேன்…” என,

“யாரும் பேசி, சமாதானம் செஞ்செல்லாம் உங்கண்ணி மனசு மாறவேணாம். நீ எப்பவும் போல வர்றதுன்னா வா. இல்லைன்னா இரு…” என்று அவளை கடிந்துவிட்டு அலைபேசியை ஆப் செய்துவிட, இளாவின் இந்த பேச்சினில் முறைத்தவள் ‘திருந்தவே மாட்டான்…’ என்று முணுமுணுத்து, வேகமாய் சென்று காரினில் அமர்ந்துகொண்டாள்.

‘சரியான ராங்கி பிடிச்சவ…’ என்று எண்ணியவனும், வந்து பார்க்க, காரில் ஓட்டுனர் இருக்கை காலியாகவே இருக்க,

‘இவளுக்கு டிரைவர் வேலை வேற செய்யனுமா நானு…’ என்று சற்று நேரம் அப்படியே நின்றுகொண்டான்.

தான் ஒரு வார்த்தை சொல்லாது கிளம்பிவிட்டாள் என்பது சந்தோசமே இருந்தும், தான் மட்டுமே சொல்லி அவள் கிளம்பவில்லையே. இத்தனை பேர் ஆறுதல் சொல்லி அல்லவா கிளம்பி இருக்கிறாள்?!

என் மீது காதல் என்ற ஒன்று இருந்திருந்தால், தீரா நம்பிக்கையும் இருந்திருக்கும் தானே என்று நினைத்தான். ஆகமொத்தம் இருவரின் இதயமும் கேட்டது ஒன்றே ஒன்றைத்தான். அது காதல் தான்.  ஆறுதல் தாண்டிய காதல்.

என்ன ஒன்று, இருவருமே அதனை வெளிக்காட்டாது இருக்க, மற்றவர்கள் இடைபுக வேண்டிய நிலையை இருவருமே ஏற்பாடு செய்துகொண்டனர்.

இளம்பரிதி வருவான் என்று பார்த்தவள் அவன் வரவில்லை எனவும், கார் ஹாரனை விடாது ஒலிக்கவிட, ஜிங்கிள்ஸில் வேலை செய்பவர்கள் கூட வெளிவந்து என்னவென்று பார்க்க ‘ஐயோ..!!’ என்று எரிச்சல் ஆனது இளாவிற்கு.

கணவன் மனைவி இருவரையும் மாறி மாறி அவர்கள் பார்க்க ‘மானத்தை வாங்குறா…’ என்று எண்ணியவன், அவளுக்கு டிரைவர் வேலைப் பார்க்கப் போக, ‘அப்படி வா..’ என்று ஒரு அலட்சியப் பார்வை தான் வீசினாள் வானதி.

‘திமிர் டி உனக்கு…’ என்று அவனும் அதே அலட்சியப் பார்வை பார்க்க, முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

வீடு போய் சேரும் வரைக்கும் இருவரும் பேசவில்லை. மோகனாவும் சொன்னதுபோல இருவரையும் எதுவும் கேட்கவில்லை. விஜயன் மருமகளை பார்த்தவர் “சந்தோசம்மா நீ வந்தது…” என்று மட்டும் சொல்ல, ஒரு புன்னகை சிந்திவிட்டு தங்களின் அறைக்குள் சென்றுவிட்டாள் வானதி.

இளம்பரிதி கதிருக்கு அழைத்து வானதி தன்னோடு வந்துவிட்டதை சொல்ல “நிஜம்மா மாப்ள.. ரொம்ப சந்தோசம்… நாளைக்கு வந்து நானே பார்க்கிறேன்…” என,

“அத்தைக்கிட்டயும் சொல்லிடுங்க மாமா…” என்று பேசி வைத்தவன், வானதியைத் தேடித் போக, அவளோ அங்கே குளித்துக்கொண்டு இருப்பது தெரிந்தது.

‘வரட்டும்… இன்னிக்கு இருக்கு.. நான் அவ்வளோ சொல்லியும் கேட்கல…’ என்று ஆதங்கப்பட்டவன், அவள் வரவும் முறைத்துக்கொண்டே பார்வையை தொடர்ந்தான்.

குளித்து வந்தவளின் முகத்தில் அப்படியொரு பொலிவு. ஒரு அமைதி தெரிய, அவன் இன்னும் அவளை பார்வையால் தொடர “ம்ம்ச்…” என்றாள் வேண்டுமென்றே.

அறைக்குள்ளேயே அதை இதை எடுப்பது போல் இங்கும் அங்கும் நடக்க “வச்சது ஒன்னு கூட வச்ச இடத்துல இல்ல.. ரூம் மாதிரியா இருக்கு…” என்று சத்தமாகவே சொல்ல,

“ஆமா.. மகாராணி எல்லாம் அடுக்கி வச்சிட்டு போனாங்க.. நாங்க எல்லாம் களைச்சு விட்டுட்டோம்…” என்று இளாவும் பதிலுக்கு பேச,

“வாய் மட்டும் இல்லன்னா…” என்று வானதி சொல்லும்போதே, அவளை பிடித்து நிறுத்தியவன் “நில்லு.. நின்னு என்னைப் பார்த்து பேசு. அதென்ன நடந்துக்கிட்டே பேசுறது.. ஜாடை பேசுறது…” என்றான்.

“கையை விடுங்க.. நான் எப்படியோ பேசுறேன்.. என்னவோ பேசுறேன்.. உங்களுகென்ன…?”

“என்னைப் பேசினா கேட்பேன்…” என்றவன் “நான் அவ்வளோ சொல்லியும் என்மேல உனக்கு நம்பிக்கை வரல தானே…” என்றான் சற்றே வருந்தி.

“அதையே நானும் திருப்பி சொல்லலாம் தானே…” என்றாள் அவளும் அவனைப் போலவே.

“என்னது?!!”

“ஆமா பொண்டாட்டின்னு நம்பிக்கை இருந்திருந்தா, இவளோட நம்ம எதுவும் ஷேர் பண்ணலாம்னு நீங்க நினைச்சு இருப்பீங்க… அப்படி தோணலை தானே…” என, அப்போது தான் அவனுக்கு புரிந்தது இவளின் வருத்தம் இதனால் தானா என்று.

“பொண்டாட்டி அப்படின்னு நினைச்சதுனால தான். உன்னைக் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நான் எதுவும் சொல்லலை..” என்றவன் “இங்க பார் வானதி.. நீயும் சரி நானும் சரி வாழ்க்கைல எவ்வளவோ பார்த்திருக்கோம். ஒரு பிரச்சனைன்னா அதை எப்படி ஹேண்டில் பண்ணனும்னு அனுபவம் இருக்கு. அதுக்காக இனிமே நமக்குள்ள சண்டையே வராதுன்னு எல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஆனா  இனி ஒரு தடவ நீ என்னை விட்டு எல்லாம் போய் இருந்திடாத…” என,

“இருந்தா… இருந்தா என்ன செய்வீங்களாம்?!” என்றாள் வேண்டுமென்றே அவனை சீண்டும் நோக்கில்.

“போகாதன்னா போகாத… அவ்வளோதான்…”

“அது நீங்க போக விடாம பண்ணிருக்கணும்…” என,

“எப்படி.. இப்படியா?” என்றவன், அவளை இறுக அணைத்துக்கொள்ள, இருவரும் சொல்லிக்காமலேயே, இருவரின் இதயமும் கேட்ட ஆறுதலும், காதலும் அங்கே பரிமாற்றம் செய்யப்பட்டது.

கண்களில் நீர் தளும்ப, அவனை நிமிர்ந்து பார்த்தவள் “எனக்கும்தான் உங்களை விட்டு இருக்க முடியலை. அதை உணர்ந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு இன்னும் வருத்தமா போச்சு. நம்ம இப்படி நினைக்கிறோம். ஆனா மனசுவிட்டு எதையும் இவங்க ஷேர் கூட பண்ணலையே. அப்போ அவ்வளோதானா என்னோட இடம்… அப்படின்னு..” என்றாள்.

“ம்ம்ம்…”

“உங்களுக்கே என்னைப் பத்தி எல்லாம் தெரியும் தானே. நானே எவ்வளோ பேசியிருக்கேன் உங்களோட. அப்படியிருக்கப்போ, நீங்க என்கிட்டே ஒரு விஷயம் மறைக்கிறீங்கன்னு தெரிஞ்சு எனக்கு கஷ்டமா போச்சு…” என்றவள்,

“ஒன்னே ஒன்னு நானும் உங்கக்கிட்ட சொல்லலை…” என்றாள்.

“என்னது?! கல்யாணத்துக்கு முன்னாடியே உன் மனசுலயும் கொஞ்சம் டிஸ்டர்ப் இருந்தது.. அதுவா?” என,

“ஹேய்..!! எப்படி?!” என்றாள் வியந்து.

“ம்ம் அதெல்லாம் நீ பாக்குறது வச்சே தெரியும்…”

“தெரிஞ்சும் நீங்க சும்மா இருந்தீங்க…?!” என்று முறைக்க,

“வேறென்ன செய்ய சொல்ற வானதி…” என்றான் அன்றைய அவனின் மன உளைச்சல் எண்ணி.

“ம்ம்ம் சரி விடுங்க. இப்போ எல்லாம் கிளியர் ஆகிடுச்சே…” என்றவள் “அண்ணன் உங்க கால்ல விழுந்து கேட்டது எனக்கு தெரியும்னு எப்பவும் அண்ணாக்கு தெரியக் கூடாது…” என்றாள் தீவிரமாய்.

“கண்டிப்பா தெரியாது.. தெரியவும் வராது…”

“தெரிஞ்சா ரொம்ப பீல் பண்ணுவாங்க…”

“நீ இங்க இருக்கன்னு நான் சொல்லிட்டேன்.. அதனால இப்போதைக்கு நீ வேறெதுவும் நினைக்காத. மத்ததை எல்லாம் மறந்திடு. எனக்கு எப்பவுமே நம்ம லைப் ரொம்ப முக்கியம் வானதி. என் மனசார நான் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யலை. அதை நீ இப்போ மட்டுமில்ல எப்பவுமே நம்பனும். அது போதும்…” என,

“ம்ம்ம்…” என்றவள் வாகாய் அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

இதற்குமேல் என்ன விளக்கம் சொல்வது என்பது இருவருக்கும் தெரியவில்லை. விளக்கம் தேவையா என்றும் யோசிக்கவில்லை. இருவர் மனதிலும் இப்போது வேறெந்த சஞ்சலமும் இல்லை. ஆக இதுவே போதும் என்று தோன்ற, இளம்பரிதியின் அணைப்பு இப்போது வானதியின் அணைப்பும் என்றாகி இருந்தது.

“பொண்டாட்டி ரெண்டு மாசம் கூட இல்லையே.. மெலிஞ்சு இருப்பீங்கன்னு பார்த்தா.. அப்படி இல்ல போலவே…” என்று வானதி கிண்டல் செய்ய, அவளை மேலும் இறுக அணைத்தவன்,

“நீயும் கூடத்தான் அப்படியில்லை…” என்று வேறெதுவோ சொல்ல “நீங்க இப்படியெல்லாம் என்கிட்டே பேசக் கூடாது…” என்று விரல் நீட்டி வெட்க மிகுதியில் வானதி சொல்ல,

“ஹா… ஹா…!” என்று சந்தோசமாய் சிரித்தான் இளம்பரிதி.

சிறிது நாட்கள் கழித்து…

இளம்பரிதியும், வானதியும் தங்களின் இரண்டாவது தேனிலவிற்கு சென்றிருக்க, அருண் கண் விழித்துவிட்டான் என்ற செய்தி கேட்டு உடனே கிளம்பி வருவதாய் சொல்லவும், சரோஜா மற்றும் வெற்றிவேலன் உறுதியாய் மறுத்துவிட்டனர்.

“நீங்க இங்க வந்ததுக்கு அப்புறம் வந்து பார்த்துக்கலாம்…” என்று இருவரும் கண்டிப்பாய் சொல்லிட, 

“நம்ம போய் பார்க்கணும் நதி…” என்ற கணவனிடம்,

“கண்டிப்பா போகணும். ஆனா அவங்க இவ்வளோ சொல்றாங்களே.. போய் பார்த்துக்கலாம்…” என்றுவிட்டாள்.

அதேபோல் திண்டுக்கல் வந்ததும் மறுநாளே அருணைப் பார்க்கக் கிளம்ப, இருவரும் கிளம்புகையில், இளம்பரிதியின்  பார்வை கூறிய செய்தி கண்டு “டோன்ட் வொரி.. நான் எதுவும் எனக்கு தெரிஞ்சது போல எல்லாம் காட்டிக்க மாட்டேன்…” என, இருவரும் அருணைப் பார்க்க கிளம்பிச் சென்றனர்.

கோமாவில் இருந்து மீண்டுவிட்டான். உடலில் சிறு சிறு அசைவுகள் இருந்தது. மற்றவர் சொல்வதை அவன் புரிந்துகொள்கிறான் என்பது அவன் முகம் காட்டும் பாவனைகளில் தெரிந்தது.

இளாவிற்கு ‘அருண் என்ன நினைப்பானோ…’ என்று தோன்ற, அருணுக்கோ இருவரையும் ஜோடியாய் பார்த்து கண்களில் ஒரு மின்னல் வெட்டியது. இதழ்கள் புன்னகை சிந்த முயல, “உங்களைப் பார்த்து அவனுக்கு ரொம்ப சந்தோசம்…” என்றார் சரோஜா.

“நீ சீக்கிரம் சரியாகிடனும்டா…” என்று இளா மனதார சொல்ல, அருண் அதற்கு ஆமோதிப்பாய் தலையாட்டியவன், கண்களிலேயே சரோஜாவிடம் எதுவோ சொல்ல,

“என்னம்மா என்ன சொல்றான்?” என்றான் இளம்பரிதி.

வானதியும் என்னவென்று பார்க்க “அதுவா.. உங்களுக்குத்தான் பொருத்தம் நல்லாருக்காம்.  சந்தோசம்னு சொல்றான்…” என்று சரோஜா சொல்ல,

“டேய் நீ தப்பிச்சிட்டன்னு நினைக்காத.. நீ சரியாகி வரவுமே முதல் வேலை உனக்கு கல்யாணம் பண்றது தான்…” என்று இளம்பரிதி சொல்ல, வானதியும் புன்னகைத்துக் கொண்டாள்.

மேலும் சற்று நேரம் இருந்துவிட்டு, இருவரும் கிளம்ப, அப்படியொரு ஆசுவாசம் இளம்பரிதிக்கு. விசிலடித்தபடியே காரினை செலுத்த “என்ன ஒரே ஜாலி போல…” என்றாள் வானதி.

“ஆமா..!! இப்போதான் நிம்மதியா இருக்கு வானதி…”

“என்ன இருந்தாலும் நான் உங்களோட திரும்பி வந்தப்போ இப்படி எல்லாம் விசில் அடிக்கலையே…” என்றாள் கிண்டலாய்.

“அடிப்பாவி பொறாமையா உனக்கு…” என்றவன், “பரவாயில்லை பொறாமை பட்டுக்கோ…” என, பேச்சும் சிரிப்புமாய் தான் இருந்தது அந்த பொழுது இருவருக்கும்.

இருவருக்கும் முகத்தினில் இருந்த சந்தோசமும், வார்த்தையில் தெரிந்த உற்சாகமும், கண்களில் தெரிந்த காதலும் எப்போதுமே அவர்களுக்கு நிலைத்திருக்கட்டும் என்று நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்…!            

Advertisement