Advertisement

அத்தியாயம் – 28

யார் என்ன சொல்லியும் இருவரும் கேட்பதாய் இல்லை. முதலில் இருவருக்கும் இடையில் என்ன பிரச்சனை என்று யாருக்கும் புரியவில்லை. இருவரும் வாய் திறந்தால் தானே. மோகனாவும், விஜயனும் மகனோடு எத்தனையோ பேசி பார்த்தாகிவிட்டது. ம்ம்ஹும்.. எவ்வித பிரயோஜனமும் இல்லை.

“நான் போய் பேசுறேன் டா…” என்று மோகனா கிளம்பியதற்கு கூட, இளம்பரிதி விடவில்லை.

“கொஞ்சம் பொறுமையா போவோம்…” என்று விஜயன் சொல்ல, அப்படி பொறுமையாய் போனது தான் இந்த இரண்டு மாதமும்.

அதற்குமேல் மோகனா கேட்பாரா என்ன?!!

மகனுக்கே தெரியாது போய் மருமகளைப் பார்த்தார்.

அங்கே ஜிங்கிள்ஸில் பெறும் அமைதி நிலவ, வானதி அவளுக்கான அறையில் இருந்தாள், முன்னர் இருந்த செழுமையும், பொலிவும் அவளிடம் அறவே இல்லை. எதோ கடனுக்கே என்று இருப்பது போல் ஓர் தோற்றம் அவளிடம்.

மோகனாவுக்கு மருமகளின் முகம் பார்த்தே புரிந்தது, அவளும் ஒன்றும் நன்றாய் இல்லை என்று.

“இதோ இப்படி இருக்கத்தான் நீ வந்து தனியா இருக்கியா?!!” என்று நேரடியாகவே ஆரம்பித்தவரை, வியந்து தான் பார்த்தாள்.

எப்போதுமே அவர் அப்படித்தானே.

“என்ன பாக்குற?! சரி பெரிய இடத்துல இருந்து வசதி வாய்ப்பா வளர்ந்த பொண்ண மருமகளா கொண்டு வந்திருக்கோம்னு நானும் இத்தனை நாள் பொறுமையா போனேன். விட்டுப் பிடிக்கலாம்னு. ஆனா புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் கிணத்துல போட்ட கல்லு மாதிரி இப்படி இருந்தா என்ன அர்த்தம்.

இங்க பாரும்மா.. நீ வாழறதுக்குத்தான் என் பையனை கல்யாணம் பண்ண. அவனும் வாழனும். நீயும் வாழனும். பசங்க சந்தோசத்துக்காக பெரியவங்க சிலது விட்டுக்கொடுப்பாங்க. அதுக்காக எப்படியோ இருங்க என்னவோ பண்ணுங்கன்னு கண்டுக்காம எல்லாம் இருக்க முடியாது.

ஒன்னு இப்போ என்கிட்டே என்ன பிரச்சனை அப்படின்னு சொல்ற.. இல்லையா இப்படியே என்னோட கிளம்பி நீ வர்ற.. அதுவும் இல்லையா நேரா உங்க அண்ணன்கிட்ட போய் பேசிடுவேன் பார்த்துக்கோ…” என்றார் மோகனா.

கிட்டத்தட்ட மிரட்டாத குறைதான் அவர் பேச்சில். நீ யாராக வேண்டுமானாலும் இரு, ஆனால்  நான் உன் மாமியார் என்ற தோரணை அப்படியே தெரிந்தது.

வானதி அப்போதும் திகைக்க “என்ன திகைச்சுப் போய் பாக்குற. எனக்கும் ஒரு பொண்ணிருக்கு.. அவ எல்லாம் இப்படி பண்ணா நான்லாம் சும்மா இருக்க மாட்டேன். ரெண்டு விட்டு ஒழுங்கு பண்ணிருப்பேன் எப்பவோ. உங்க வீட்ல என்னவோ கொஞ்சிட்டு இருக்காங்க…” என்று அவளின் பிறந்த வீடு பற்றி பேச,

“அவங்களைப் பத்தி பேச வேணாம் அத்தை..” என்றாள் மெதுவாய்.

“ஏன்??!! நீ இப்படி பண்ணா அப்போ யாரைக் கேட்கிறது? என் மகன் என்னன்னா என்னவோ யாரையும் எதையும் பேசக் கூடாது நான் பார்த்துக்கிறேன் அப்படிங்கிறான்.. பின்ன நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்…” என்று பேசி தீர்த்து விட்டார்.

எதற்குமே வானதி எதுவும் சொல்லவில்லை.. அவளுக்கு கோபமெல்லாம் இப்போது கவலையாய் மாறி இருந்தது.

என்ன நடந்திருந்தாலும் சரி, அதில் யார் மீது தவறு இருந்தாலும் சரி, அண்ணனே கெஞ்சி தன்னை மணக்க வைத்திருந்தாலும் சரி, இல்லை பிருந்தாவே ஏதோ ஒரு காரணம் சொல்லி சம்மதிக்க வைத்திருந்தாலும் சரி, அனைத்தையும் தாண்டி நான் அவன் மனைவி தானே..!

தன்னிடம் என்ன ஒளிவு மறைவு…!

நான் எப்படி என்னுடைய அனைத்து சிறு சிறு விசயங்களை கூட அவனோடு பகிர்ந்தேன். அப்படியிருக்கையில், மனதில் இத்தனை சுமந்துகொண்டு எப்படி இவனால் தன்னிடம் இயல்பாய் இருக்க முடிந்தது?!!

எப்படி தன்னிடம் நெருங்க முடிந்தது?!!

நதி… நதி… என்று அத்தனை கொஞ்சல்கள் எப்படி அவனால் முடிந்தது?!

மனதில் ஒரு சின்ன உறுத்தல் கூட இல்லையா?!

அப்படி இருந்திருந்தால் என்னிடம் தானே உண்மையை சொல்லி ஆறுதல் தேட தோன்றியிருக்கும்..?!

அப்.. அப்போ… நான் யார் அவனுக்கு. என்னை பிடிக்கும் என்றாலும் கூட  கட்டாயத்தில் ஓர் திருமணம்.. அதன் பிறகான ஒரு வாழ்க்கை அவ்வளவே. அந்த பிடித்தம் என்பதை கூட சலனம் என்றுதானே சொன்னான். காதல் சொல்லவில்லையே..

இப்படி என்னென்னவோ நினைத்து, தன்னை தானே வருத்திக் கொண்டாள் வானதி..!!

தனிமை மேலும் மேலும் அவளை குழப்பம் கொள்ளச் செய்தது.

அண்ணனோடும் சரி, அம்மாவினோடும் சரி… யாரினோடும் மனம் விட்டு பேச முடியவில்லை. பேசி அது மேலும் ஏதாவது பூதாகரத்தை கிளப்பிவிட்டால், அதெல்லாம் அவளால் தாங்கிக்கொள்ளவே முடியாது.

இதெல்லாம் இப்படியிருக்கையில் இப்போது மோகனா வந்து இப்படி பேச, மௌனமாய் தான் இருந்தாள் வானதி..

“அமைதியா இருந்து எதுவும் ஆகப் போறது இல்லை வானதி. கல்யாண வாழ்கையில பிரச்சனை ஆயிரம் வரத்தான் செய்யும். சொல்றேன்னு தப்பா நினைக்காத, என் மகனைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். கோபக்காரன் தான். ஆனா காரணமில்லாம அதுவும் இருக்காது. உங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ, உன்னோட இடத்துல மட்டும் இருந்து யோசிக்காம அவனோட இடத்துல இருந்தும் யோசி. சில விசயங்களுக்கு காரண காரியம் சொல்லிடவே முடியாது. ஆனா நடந்திடும். ஏன் எதுக்குன்னு கேட்டிட்டு இருந்தா வாழ முடியாது.. இதுதான் எதார்த்தம். புரிஞ்சுக்குவன்னு நினைக்கிறன். ரெண்டு நாள்ல எனக்கு ஒரு பதில் சொல்லு.. அவ்வளோதான்…” என்றவர் கிளம்பியும் விட்டார்.

அங்கே கதிர்வேலனோ பிருந்தாவைப் போட்டு பாடாய் படுத்திக்கொண்டு இருந்தான்.

“நானும் கவனிச்சிட்டேன்.. வானதி உன்னோட பேசுறதே இல்லை. அப்போ உன்னால தான் எதோ நடந்திருக்கணும்…” என்று.

“ஏங்க நீங்க வேற.. நான் என்ன அப்படி பண்ணிருக்க போறேன். முதல்ல நான் அப்படி செய்வேனா?! என்னை பழி போடுறீங்க…” என்று பிருந்தாவும் எத்தனையோ முறை சொல்லியாகிவிட்டாள்.

என்ன பேசினாலும், கடைசியில் கதிர்வேலன் இந்த இடத்தில் தான் வந்து நிற்பான்..

ராதா கூட “கதிர்.. இதென்ன பேச்சு. நானும் இங்கதானே இருக்கேன். நீ சொல்ற மாதிரி எதுவுமே நடக்கலையே…” என்று சொல்லிப் பார்த்துவிட்டார்.

எதற்கும் கதிர்வேலன் மசிவதாய் இல்லை.

அவளுக்கு ஒரு வாழ்வு அமைந்ததே பெரிது. சந்தோசமாய் வாழ்கிறாள் என்று நினைக்கையில் இப்படி ஆனால் யார்தான் சும்மா இருப்பார்.

“அப்போ தம்பி தம்பின்னு சொல்றல இளா.. அவனைக் கூப்பிட்டு என் முன்னாடி பேசு…” என்றான்.

“அவனே என்கிட்டே பேசுறது இல்லை…”

“ஹா…!! இதோ இதுல தெரியுதே.. ரெண்டுபேருமே உன்கிட்ட பேசலைன்னா அப்போ பிரச்சனை உன்னாலத்தான்னு..” என்று கதிர்வேலன் சுற்றி சுற்றி அதிலேயே வந்து நிற்க பிருந்தாவிற்கு அழுகையே வந்துவிட்டது.

எதையும் சொல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாது தவிப்பது அவளும் தானே. வானதியிடம் சொல்லி ஒருவேளை அதெல்லாம் கதிர்வேலனுக்கு தெரிந்துவிட்டால்?!! இந்த விசயமே பிருந்தாவிற்கு பெரும் தயக்கம் கொடுக்க, அதுவே தடையாகவே இருந்து, அவளுக்கு வாய் பூட்டு போட்டு விட்டது.

ஆரம்பத்தில் அவளும் கூட இளம்பரிதியிடம் கேட்டாளே “என்ன இளா என்ன விஷயம்.. சொல்லு நான் பேசுறேன்…” என்று.

இளம்பரிதி தானே ஒரேதாய் மறுத்துவிட்டான் “போதும்… எனக்கு நீ.. உன் குடும்பம் செஞ்சது எல்லாம் போதும்.. இது எனக்கும் அவளுக்கும் இருக்கிறது. நானே பார்த்துக்கிறேன். நல்லது செய்றேன்னு யாரும் கிளம்பி வந்துடாதீங்க…” என்று தீர்மானமாய் சொல்லிவிட்டான்.

“இப்படி சொன்னா எப்படி இளா?!!” என,

“அ…!! போ.. போய் சொல்லு கோபி பண்ணது.. உங்கப்பா பண்ணது.. அதுக்கு என்னையே யூஸ் பண்ணது.. எல்லாம் சொல்லு… அதனால தான் அருணுக்கு ஆக்சிடன்ட் ஆனது இப்படின்னு எல்லாம் சொல்லு… அதெல்லாம் சொன்னாதான் அவ வருவா.. சொல்வியா நீ? இதெல்லாம் போய் வானதிக்கிட்ட சொல்ல முடியுமா?!!” என்று இளம்பரிதி எகிற,

“எ.. என்ன.. என்னடா சொல்ற…?!”

“ஆமா… அவளுக்கு கல்யாணத்து அன்னிக்கு நீயும் மாமாவும் என்கிட்டே பேசினது எல்லாம் தெரிஞ்சு இருக்கு.. எங்க எப்படி நீ உளறி வச்சியோ..”

“சத்தியமா நான் இதெல்லாம் பேசவே இல்லடா…”

“பின்ன? வேறெப்படி தெரியும்.. கண்டிப்பா மாமாவும் சொல்லிருக்க மாட்டார்…” எனவும், அதன் பின்னே தான் பிருந்தாவிற்கு புரிந்தது தானும் அம்மாவும் பேசியதை வானதி கேட்டிருக்கக் கூடும் என்று.

ஏனெனில் சிறிது நேரத்தில் வந்து தேஜுவை படுக்க வைத்துவிட்டு போனாளே..!

அதனை சொல்ல, “நல்லா பேசினீங்க போ. அர்த்த ராத்திரில பேச எங்க விஷயம் தானா கிடைச்சது.. ஏன் எதுக்குன்னு எல்லாம் கேட்கிறா?! சொல்லட்டுமா நானு?!” என்று இளாவும் எகிற, பிருந்தா பயந்தே போனாள்.

“இளா…!!” என்று அஞ்ச,

“ஹ்ம்ம் தப்பு பண்ணவன் எல்லாம் நல்லா இருக்கான். நான் பாரு எப்படி இருக்கேன்னு.. என் விசயம்னா எப்பவோ சொல்லியிருப்பேன். ஆனா இது அப்படி இல்லையே. நாளைக்கே மாமாக்கு தெரிஞ்சா என்னாகும் சொல்லு. எல்லாம் தெரிஞ்சே உன் தம்பிக்கு பேசினியா அப்படின்னு உன்னை அனுப்பினாலும் அனுப்பிடுவார்…” என, பிருந்தா அவ்வளோ தான்.

அவளுக்கு எல்லாமே ஆட்டம் கண்டுவிட்டது.

“அதனால நீ சும்மா இரு.. எது நடக்கணுமோ நடக்கட்டும்.. நான் பார்த்துக்கிறேன்..” என, இவள் அமைதியாகிப் போக, கதிர்வேலன் சும்மா இருப்பானா?!

தினம் தினம் இப்படிதான் ஏதாவது பேசி அவளை வருத்த, பிருந்தாவிற்கு தான் சில நேரம் மிகவும் சுயநலமாய் இருக்கிறோமா என்று இருந்தது.

இதில் யார் மீது குற்றம்?!!

யாரோ செய்த செயலுக்கு, வாழவேண்டிய இருவர் இப்படி தனியே இருப்பதா?!!

துணிந்து வானதியிடம் பேசிடலாம் என்று நினைத்தாலும், அந்த துணிவு தான் இன்னும் வரமாட்டேன் என்கிறது.

மீண்டும் ஒருமுறை இளாவிடம் பேசலாம் என்று அவனுக்கு அழைத்துப் பேச “நான் என்ன செய்யனும்னு சொல்ற..?” என்றான் அவன்.

“இல்ல இளா.. ஒருதடவ நீ வானதி கிட்ட பேசி பாரேன்…”

“பார்த்து…”

“கொஞ்சம் புரிய வை…”

“வச்சு?!”

“ம்ம்ச் இளா…”

“அக்கா… நீ கவலைப்படாத. நான் உன்னை தப்பா எல்லாம் நினைக்கல. நான் சொல்லி புரிய வைக்க ரொம்ப நேரம் எல்லாம் ஆகாது. ஆனா என்னோட வார்த்தைல அவளுக்கு முதல்ல நம்பிக்கை இருக்கணும். அது ரொம்ப முக்கியம். அதுவே இல்லைங்கிறப்போ நான் என்ன பேசினாலும் எதுவும் ஆகப் போறது இல்லை..”

“இந்த ஒருதடவ பேசிப் பாரேன்…” என்றாள் கெஞ்சலாய்..

“ம்ம்ம்…” என்றவனுக்கும், அந்த எண்ணம் ஏற்கனவே இருந்ததுதான்.

அவளில்லாமல் அவனால் இருந்திடவும் முடியவில்லை. நாள் செல்ல செல்ல,  தினம் தினம் அவளின் நியாபகம் மிகவும் போட்டு படுத்தியது.

‘திமிர் பிடிச்சவ…’ என்று நினைத்தாலும், அந்த திமிர் கூட அவனுக்கு பிடித்தமாய் இருப்பது நன்கு உணர முடிந்தது.

‘இப்படி சட்டமா போய் உக்கார்ந்துக்கிட்டாளே… அப்போ என்னை விட்டு அவளால இருக்க முடியுமா?!!’ என்று தோன்ற

“இருந்திடுவாளா?? விட்டிடுவேனா நான்…?!” என்று இறுமாப்பும் அவனுக்குத் தோன்றியது.

மோகனாவோ வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் மகனை ஜாடை மாடையாய் பேச, “ச்சே ஒரு நிம்மதி இருக்கா…” என்று கத்திவிட்டே கிளம்பியவன், நேராய் வானதியைப் பார்க்கத்தான் சென்று நின்றான்.

அதிகமாய் செல்லப் பிராணிகள் இல்லை அன்று. ஆகையால் வேலையும் அதிகமில்லை. அங்கே வேலைப் பார்ப்பவர்கள் சிறு சிறு வேலைகள் செய்துகொண்டு இருக்க, பறவைகள் இருக்கும் பகுதியில் வானதி இருந்தாள். ஏனோ இந்த பறவைகளின் கீச் கீச் ஒலியில், அவள் தன்னை மறக்க முயன்றாள்.

ஆனாலும் அடி நெஞ்சில் ‘இவ்வளோ நடந்தும் என்னால அவனை விட்டு இருக்க இவ்வளோ கஷ்டமா இருக்கு. ஆனா அவனுக்கு அப்படி இல்லை போல.. அதான்.. அதான் இப்படி தனியா விட்டுட்டான்….’ என்ற நினைப்பும் எழாமல் இல்லை.

அந்த நினைப்பே, அவள் முகத்தில் மேலும் வேதனை கூட்ட, தானாய் சென்று அவனை அணைத்துக் கொஞ்சியது எல்லாம் நினைவில் வந்தது..

‘ச்சே அப்போ என்னை என்ன நினைச்சிருப்பான்…’ என்று நினைக்க, இப்போதும் உடல் கூசியது..!!

வானதி அப்படியே சிலையென நிற்க, உள்ளுணர்வு சொல்லியது இளம்பரிதியின் வருகையை. தன்னைப்போல் உடல் விறைக்க, அப்படியே நின்றிருந்தாள். இளம்பரிதி அவளிருக்கும் இடம் தேடி வந்தவன், கைகளை கட்டிக்கொண்டு அவள் பின்னே நிற்க, அவள் திரும்பவே இல்லை.

வந்திருக்கிறான் என்பது ஒரு சிறு மகிழ்வு கொடுத்தாலும், இத்தனை நாள் ஏன் வரவில்லை என்பது மன வருத்தத்தை கொடுக்கவே செய்தது.

எத்தனை நேரம் இருவரும் அப்படியே நிற்க முடியும்?!

இவர்கள் நிற்பதைத் தான் அங்கிருந்த கிளியும், புறாவும் இன்னும் சில பறவைகளும் எத்தனை நேரம் வேடிக்கைப் பார்க்க முடியும்?!

மீண்டும் அவைகள் சப்தம் எழுப்ப, “வானதி…” என்று இளாவும் அவளை அழைத்தான்.

அப்போதும் அவள் திரும்பிடவில்லை..!

“கடைசியா சொல்றேன்.. என் வார்த்தைல நம்பிக்கை இருந்தா என்னோட வா…” என்று இளா அழைக்க,

“அந்த நம்பிக்கை உங்களுக்கு என்மேல இல்லையே. அதுதான் பிரச்சனையே…” என்றாள் ஒரு விரக்தியில்.

அவளின் கோபம் காணாது போயிருப்பது நன்கு புரிந்தது.. இருந்தும் அவளின் கோபத்தினை கூட தாங்கிடலாம் போல, இந்த அவளின் இக்கோலம், விரக்தி, இதெல்லாம் அவனால் பொறுக்க முடியாது போலிருக்க, வேகமாய் அவளை தன் பக்கம் திருப்பியவன், அவளின் முகம் பற்றி, தீவிரமாய் அவள் விழிகளில் தன் பார்வையை செலுத்தினான்..

ஆங்காரம்.. ஆக்ரோசம்.. எல்லாம் காணாமல் போய், வருத்தமும் வேதனையுமே அதில் தெரிந்தது.

“நீ… நீ இப்படி இருக்கக் கூடாது நதி…” என்றவனின் முகத்தினிலும், அதே வேதனையின் சாயல் படிய, வானதி கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

அவளால், அவனை எதிர்கொள்ள முடியவில்லை..!

“நதி… என்னைப் பாரு…”

இச்சொற்கள் அவளுக்கு அவர்களின் பிரியமான பொழுதுகளை எல்லாம் நினைவூட்ட, வானதிக்கு உடல் மேலும் இறுகியது.

தான் இத்தனை பலகீனமானவளா?!!

அதுவே அவளை மேலும் இறுகச் செய்ய, கண்களை இன்னும் இறுக மூடிக்கொண்டாள்.

“வா… நதி….” அழுத்தம் திருத்தமாய் அவனின் குரல் கேட்க,

“நாங்க உள்ள வரலாமா?!!” என்று சரோஜாவின் குரலும் கேட்க, சட்டென்று விலகி நின்றனர் இருவரும்.

சரோஜாவோடு, பிருந்தாவும் அங்கிருந்தாள்.

காலையில் தானே தன்னோடு பேசினால் என்று பார்த்தான் இளா. இருந்தும் சரோஜாவை அங்கே யாரும் எதிர்பார்க்கவில்லை.

வானதி திகைத்துப் போய் “வா.. வாங்க..” என்று திணறிச் சொல்ல, இளாவும் “வாங்கம்மா…” என்றான்.

Advertisement