Advertisement

அத்தியாயம் – 27

இளம்பரிதிக்கு வானதியின் பார்வையை எதிர்கொள்ளவே முடியவில்லை. அப்படியெனில் அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் மட்டும் எப்படி சொல்லிடுவான்.

மறுநாள் அவளை அழைக்கவென்று இளம்பரிதி வந்திருக்க, வானதி எதுவும் காட்டிக்கொள்ளாது அவனோடு கிளம்பினாள்தான். என்ன பிருந்தாவிடம் முகம் கொடுத்து பேசிட முடியவில்லை. அதெப்படி முடியும் அவளுக்கு?!

இளா ஆவலாய் அவள் முகம் பார்க்க, அவளோ முன்னர் இருந்ததை விட இறுகிப் போய் இருந்தாள். அவளின் இலகு எல்லாம் எங்கோ ஓடி மறைந்து போனது. இளம்பரிதியை காணும் ஒவ்வொரு நொடியும் சட்டையை பிடித்து உலுக்கும் எண்ணம் வர, முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க, ராதா மதிய உணவு உண்டுவிட்டு கிளம்புங்கள் என்றதற்கு கூட

இல்லம்மா.. புதுசா வாங்கின இடம் பார்க்கணும்.. கொஞ்சம் அங்க வேலை இருக்கு…” என்றுவிட்டாள் வானதி.

இது இளம்பரிதிக்கே புதிது தானே.

கேள்வியாய் அவள் முகம் பார்க்க “எனக்கு அங்க போகணும்…” என்றவள், கிளம்புகையில் காரினை தானே தான் செலுத்தினாள்.

வானதியின் கரத்தில் கார் படாதபாடு பட “ஹேய்..!! நதி என்னாச்சு? ஏன் இப்படி இவ்வளோ ஸ்பீட்..?” என்று இளா கேட்க, அவளோ பதிலே சொல்லவில்லை.

அவன்பக்கம் திரும்பக் கூட இல்லை.

தான் கேட்டு பதில் இல்லை என்றதும் “வானதி…” என்று திரும்ப அழைக்க, ம்ம்ஹும் அவளிடம் எவ்வித மாற்றமும் இல்லை.

சரி வேறு எதுவோ டென்சனில் இருக்கிறாள் போல என்று இளாவும் அதோடு அமைதியாக, சரியாய் அவர்களின் அந்த இடம் வந்தபின்னே தான் காரை நிறுத்தினாள்.  நிறுத்தியதும் அல்லாது, இறங்கி வேகமாய் நடந்து அங்கே தோப்பின் உள் பகுதிக்கு சென்றுவிட்டாள்.

தான் என்ன செய்கிறோம் என்பது அவளுக்குப் புரியாது இல்லை. நேற்றிலிருந்து முட்டிக்கொண்டு இருக்கும் அழுகையையாவது அவள் இறக்கிட வேண்டுமே?!!

அழுகை தான்..!!!

தன்னை திருமணம் செய்ய ஒருவனிடம் கெஞ்சும் அளவிலா என் நிலைமை இருக்கிறது என்ற எண்ணம் அவளை வெகுவாய் அசைத்தது.

பழையபடி, ‘எனக்கேன் இந்த நிலை…’ என்ற கேள்வி அவளுள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.

அங்கே வீட்டினில் கூட யாரிடமும் அதிகம் பேசவில்லை. அவளுக்கு அது முடியவும் இல்லை. கதிர்வேலன் கூட கிளம்புகையில் கேட்டான் “என்ன வானதி எப்படியோ இருக்க..?” என்று.

எங்கே இன்னொரு முறை யாரேனும் எதுவும் கேட்டுவிட்டால், பின் வானதி கண்டிப்பாய் ஏதாவது பேசியிருப்பாள். அதில் அவளுக்கு இஷ்டமில்லை. அண்ணன் தனக்காக ஒருவனின் காலைப் பிடித்திருக்கிறான் என்றால்?!!! அவளால் அதை நினைக்கக் கூட முடியவில்லை.

நினைக்க நினைக்க அழுகை கூடியது…

அதையும் தாண்டி பிருந்தா சொன்ன மற்றொரு விஷயம்.. ‘செய்த பாவத்தின் பிராயச்சித்தம்…’ இந்த சொற்கள் அவளை கொல்லாமல் கொன்றது என்றுதான் சொல்லவேண்டும்..

பாவமா?!!’

அப்படியென்ன பாவம்?!!’

அப்படி என்ன மா பாதக செயலை செய்துவிட்டு அதிலிருந்து மீண்டு வர தன்னை திருமணம் செய்தான் இவன்…?!!’

யோசிக்க யோசிக்க தலை வெடித்தது.

முகத்தை மூடிக்கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்துவிட்டாள் வானதி. உடல் அழுகையில் குலுங்க, அப்படியொரு அழுகை அவளுக்கு.

ம்பரிதியோ “வானதி நில்லு… நில்லு…” என்று அழைத்தபடி அவளின் பின்னோடு வர, அவள் இப்படி அமர்ந்து முகத்தை மூடி அழுவது கண்டு திகைத்துத் தான் போனான்.

அழுகிறாளா?!!’

வானதியா..?!’

அவனறிந்த வானதிக்கு அழுகை என்பது தெரியாது. அதிகாரம் தான் தெரியும். அவளின் அத்தனை உணர்வுகளையும் தோரணை ஒன்ற போர்வைக்குள் போட்டு மூடிக்கொள்வாளே. அப்படியிருக்க இப்போதென்ன அழுகை. அதுவும் தானிருக்கையில்.

அதிலும் சமீபத்திய நாட்களில் எல்லாம் அவள் தங்கு தடையின்றி அவனோடு எல்லாம் பேசுகிறாளே. அப்படியிருக்கையில் என்ன?!

வானதி… என்னாச்சு?!!” என்று அவள் தோள் தொட்டு அவனும் அருகே அமர, வேகமாய் அவன் கரத்தை தட்டியவள், ஆங்காரமாய் தான் அவனைக் கண்டாள்.

ஏய் என்னாச்சும்மா?!” என்றான் அவளின் சிவந்த கண்களைப் பார்த்து.

இளாவின் இந்த உரிமையான பேச்சு, அவளுக்கு மேலும் கோபம் தர, அவன் முன் விரல் நீட்டி “இனி நீ இப்படி என்கிட்டே பேசக் கூடாது…” என்றாள் பழையபடி.

அடுத்தநொடி இளம்பரிதியின் பார்வை மாறிவிட்டது.

இருந்தும் “என்னாச்சு?!!” என்றான் திரும்ப.

அவனை முறைத்தவள் “இன்னும் எத்தனை எத்தனை மறைச்சு வச்சிருக்கீங்க எல்லாரும்..?” என்றவள் “எ.. என்னை.. என்னை கல்யாணம் பண்றது, நீங்க எல்லாம் பண்ண பாவத்துக்கு பரிகாரமா?!” என,

அவ்வளோதான் இளம்பரிதி ஆடிப்போனான்..!

எ.. எப்படித் தெரிந்தது?!!!’

எல்லாம் தெரிந்துபோனதா…?!!’

எப்படி?!!!’

திகைத்த முகமும், அதனால் விரிந்த கண்களுமாய் அவன் பார்க்க “பதில் சொல்லுங்க…” என்றாள் வானதி.

என்ன சொல்வான்?! எதை சொல்வான்?! எப்படிச் சொல்வான்?!

ந.. நதி…” என்று அவன் மீண்டும் திகைக்க,

ச்சே… அப்படி சொல்லக் கூட கூடாது…” என்று முகத்தை சுறுக்கியவள், “நான் கேட்டதுக்கு பதில் வேணும்…” என்றாள் உறுதியாய்.

இ.. இல்ல வானதி.. அது…” என்றவன் நிஜமாய் இப்படி ஒரு நிலை தனக்கு ஏற்படும் என்று நினைக்கவே இல்லை.

பதில் மட்டும்தான் சொல்லணும்…” என்றவளின் குரல் இருக்க இருக்க கடினபட்டுக்கொண்டே இருக்க,

அ.. அது.. அது நான் சம்பந்தப் பட்டது இல்லை…” என்றான் அவனுமே சற்று உறுதியாய்.

வெற்றிவேலன், கோபி பற்றிய சங்கதிகளை எப்படி சொல்ல முடியும். அதிலும் ஷாலினி என்ற ஒரு பெண்ணும் அதில் சம்பந்தப்பட்டு இருக்க, அவன் அதனை தன் சுய லாபத்திற்காக எப்படி சொல்ல முடியும்?!

அப்போ தாராளமா சொல்லலாம். தப்பு உங்கமேல இல்லைன்னா…”

என்மேல தப்பில்ல தான். அதை எங்கனாலும் எப்போனாலும் உறுதியா என்னால சொல்ல முடியும். ஆனா மத்த விஷயம் எல்லாம் சொல்ல முடியாது. அது நிறைய பேர் வாழ்க்கை சம்பந்தப் பட்டது…” என்றவன், அவளைத் தன்புறம் திருப்பி

நான் தப்புப் பண்ணிருப்பேன்னு உனக்குத் தோணுதா?!!” என, அவன் கண்களில் தெரிந்த உண்மை அவளை தடுமாறத் தான் செய்தது.

இருந்தும் இன்னமும் பிருந்தாவின் வார்த்தைகள் எல்லாம் அவளுள் ஒலித்துக்கொண்டு இருக்க, எதை நம்புவது எதை விடுவது என்று தெரியவில்லை. இவனின் மனைவி தானே நான். என்னைப் பற்றி எல்லாமே அவனுக்குத் தெரியும் போது, அவனைப் பற்றி அவனின் வாழ்வில் நடந்தவை பற்றி என்னோடு பகிர்ந்துகொண்டால் என்ன?!!

அப்.. அப்போது இவன் தன்னை என்ன நினைத்திருக்கிறான்?! எந்த அளவில் நம்பிக்கை வைத்திருக்கிறான்?!!

இதெல்லாம் மனதில் வம் வர, “உங்கமேல தப்பில்லைன்னா நீங்க எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே…” என்றாள் சற்றே எகத்தாளமாய்.

ம்ம்ச் வானதி…!!”

நோ…!! நோ..!! இப்போ நீங்க பதில் மட்டும்தான் பேசணும்.. இப்படியெல்லாம் என்கிட்டே முகம் காட்டக் கூடாது..” என்றவள்

டெல் மீ…” என,

அவனுக்குமே இவள் சொல்வதை நம்பாமல் இப்படி பேசுகிறாளே என்று இருந்தது. தான் சொல்லும் சொல்லில் வானதிக்கு இவ்வளவு தான் நம்பிக்கையா?! அப்போது இத்தனை நாள் தன்னை என்னவென்று இவள் நினைத்துக் கொண்டு இருந்தாள்?!

ஒருவிசயம் சொல்ல முடியவில்லை என்றால் அதை புரிந்துகொள்ள வேண்டாமா?!!!

கண்களை இடுக்கி “சொல்ல முடியாது அப்படின்னா என்ன செய்வ?!” என்றான் அவனும் பழைய மிடுக்கில்.

ஓ..!!” என்றவள் “லைப்ல ஏமாந்தது போல ஒரு உணர்வு கொடுத்துட்டீங்க நீங்க…” என,

ஏய்… என்ன வார்த்தை இது…” என்றவனுக்கு எங்கே அவளை அடித்துவிடுவோமோ என்றுகூட இருந்தது.

அவள் சொன்ன சொல்லிற்கு தான் அவளை ஏமாத்தியது போல் தானே ஆகிறது. இருந்தும்… இருந்தும்… சற்றே தன்னை கட்டுப் படுத்தியவன் “இங்க பார் வானதி.. நான் சம்பந்தப் பட்டிருந்ததுன்னா, என்மேல தப்பே இருந்தாலும் கூட உன்கிட்ட நான் மறைச்சு எதுவும் வச்சிருக்க மாட்டேன்.. புரிஞ்சுக்கோ… உன்கிட்ட சொல்லாம என்னால இருந்திருக்கவும் முடியாது.. ஆனா இது.. இதெல்லாம் வேற…” என்றான் திரும்பவும்.

என்ன வேறன்னு, சொன்னாதானே எனக்குப் புரியும்.. அப்… அப்போ என்மேல இவ்வளோதான் உங்களுக்கு நம்பிக்கை அப்படித்தானே… இல்ல உண்மை எல்லாம் தெரிஞ்சு நான் யார்க்கிட்ட போய் என்ன பேசிட போறேன்..” என்றாள் அவளும்.

உனக்கு ஒருதடவ சொன்னா புரியாதா?!!”

அதே தான் உங்களுக்கும்… சொன்னா புரியாதா?!” என்றவள்

அதுசரி… உங்களைத் தானே எல்லாரும் தலையில தூக்கி வச்சிட்டு ஆடுறாங்க. அப்போவே எனக்கு சந்தேகம் தான். என்னவோ இருக்குன்னு.. ஆனா நான்தான் அதெல்லாம் பெருசா எடுக்கல. ஹ்ம்ம் என் அண்ணன் எவ்வளோ பெரிய ஆளு.. கால்ல விழுந்து கேட்கிற அளவு அவனை கெஞ்ச வைச்சிருக்கீங்க.. பிடிக்கலன்னா சொல்லிட்டு போயிட்டே இருந்திருக்க வேண்டியது தானே..

எதுக்கு இப்படி ஒரு சீன் கிரியேன் பண்ணனும்? என்னவோ உங்களை விட்டா யாருமே அங்க இல்லை அப்படின்னு…” என்றதும்,

வானதி நீ ரொம்ப பேசுற…” என்றான் இளம்பரிதி.

பேசுவேன்.. அப்படித்தான் பேசுவேன்… என்ன செய்வ?!! சொல்லு.. என்ன செய்வ…?” என, அவளின் மனநிலை அவனுக்கு நன்கு புரிந்தது.

மொத்தமாய் காயப்பட்டிருக்கிறாள் என்று… தானும் இப்படியே பேசியபடி இருந்தால் நிச்சயம் இது பெரிதுதான் ஆகும் என்று தோன்ற,

என்னாலையும் பதில் சொல்ல முடியாது வானதி. ஆனா ஒன்னு மட்டும்.. உன்னை எனக்குப் பிடிக்கும்.. கல்யாணத்துக்கு முன்னாடியே.. பிடிக்கும் அப்படிங்கிறதை நான் உணரல அவ்வளோதான். ஆனா நிச்சயமா உன்னால எனக்குள்ள ஒரு சலனம் இருந்தது நிஜம்.

எ.. என்னோட.. பிரன்ட்.. அருண்.. அவனுக்கு உன்னை பேசுறப்போ நான் அப்படி நினைச்சது தப்புன்னு நினைச்சேன்.. ஆனா கல்யாணம் அது இதுன்னு எல்லாமே மாறிப்போச்சு. திடீர்னு அவனுக்கு ஆக்சிடன்ட்.. அதை யோசிக்கிறப்போவே, மாமா வந்து என்.. என் காலை பிடிச்சார்.. அப்.. அப்போ எனக்கு எப்படி இருந்ததுன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.. அதை என்னால மட்டும் தான் உணர முடியும்..

பிருந்தாக்கா வந்து பேசுறப்போ, நான் நினைச்சது எல்லாம் ஒன்னே ஒண்ணுதான்.. உன்னைக் கல்யாணம் பண்ண கொடுத்துத் தான் வைச்சிருக்கணும்னு. இது முழுக்க முழுக்க உண்மை.. உன் வரைல, அதாவது நம்ம பெர்சனல் வாழ்கையில நான் எப்பவுமே உன்னை கீழ இறக்கியோ, இல்லை வேற எப்படியுமோ பார்க்கல.. இதை நீ நம்பித்தான் ஆகணும்…” என, வானதி சில நேரம் அமைதியாகவே இருந்தாள்.

இத்தனை சொல்கிறோமே, அவளும் சிந்திக்கட்டும் என்று இளம்பரிதியும் அமைதியாய் இருக்க, சிறிது நேர அமைதிக்குப் பிறகு

இவ்வளோ சொல்றீங்களே, அப்போ என்னை நம்பி ஏன் எல்லாத்தையும் முழுசா சொல்லலை…” என்றதும், அவனுக்கு பொறுமை சுத்தமாய் விட்டுப் போனது.

ஏய்…!! நானும் இவ்வளோ சொல்றேன்.. புரிஞ்சுக்காம பேசுற நீ. இங்க பார் உன்னை பிடிச்சுத்தான் டி கல்யாணம் பண்ணேன்.. உன்னோட சந்தோசமா தான் வாழறேன். இதுக்கு மேல உனக்கு நான் என்ன சொல்லணும்.. அடுத்தவங்க விஷயம் அதெல்லாம் நான் கிண்டி கிளற விரும்பல.. சொன்னா புரிஞ்சுக்கப் பாரு. அப்போ உனக்குத் தெரியலையா, இவன் ஒரு விஷயம் சொல்லாம விடுறான்னா அதுக்கு ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கும்னு..” என்று பதிலுக்கு இளம்பரிதி எகிற,

வாவ்…!! சூப்பர்…! இப்படி கத்தி என்னை கண்ட்ரோல் பண்ணனும் நினைக்காதீங்க.. முழு விசயமும் தெரியாம என் மனசு சமாதானம் ஆகாது…”

ரொம்ப நல்லது…” என்றான் பட்டென்று.

வானதி அவனை வெறிக்க “என்ன பாக்குற.. என் வார்த்தைல நம்பிக்கை இல்லை. பின்ன என்ன?!! சொல்ல முடியாது.. என்ன செய்வ நீ? என்ன செய்யணுமோ செஞ்சிக்கோ…” என்று அவனும் சொல்ல,

ரொம்ப நல்லது….” என்று அவனைப் போலவே சொல்லி கிளம்பிவிட்டாள், அவளின் ஜிங்கிள்ஸ் நோக்கி.

போகும் அவளை நிறுத்தவும் இல்லை இளா..!!

பார்த்தபடி நின்று இருந்தான்..!

என் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லையா என்று அவனும், நான் அப்படி என்ன செய்துவிடுவேன் என்று மறைக்கிறான் என்று இவளும் நினைக்க, நாள் செல்ல செல்ல இருவரின் பிடிவாதம் தான் கூடியது.

வானதி அங்கே அவளின் பிறந்த வீடும் செல்லவில்லை. அவளின் ஜிங்கிள்ஸில் தங்கிக்கொண்டாள்.

யார் என்ன கேட்டும் இருவரும் வாய் திறக்கவும் இல்லை. தங்களின் நிலையில் இருந்து இறங்கிவரவும் இல்லை…

அப்படி இப்படி என்று இதோ இரண்டு மாதங்கள் ஓடிப் போனது…       

Advertisement