Advertisement

அத்தியாயம் – 26                        

இளம்பரிதி நினைத்தது போலவே எல்லாம் நடந்தாலும், அவன் எதிர்பாரா ஒன்றும் நடந்தது. அவன் மட்டுமல்ல யாருமே எதிர்பாரா ஒன்று.

அதுதான் இளம்பரிதி – வானதி இருவருக்கும் நடந்தேறிய பிளவு…!

ஆம்..! பிளவு தான்….

பிரிவு என்பதனை தாண்டி அதை பிளவு என்றுதான் சொல்ல வேண்டுமோ எனும் அளவு இருந்தது.

ரேணுவும் கோபியும் ஆஸ்திரேலியா கிளம்பும் முன்னர் இவர்களை வெற்றிவேலன் வீட்டினில் இளாவையும், வானதியையும் விருந்திற்கு அழைக்க, அவர்களும் சென்றிருந்தனர். அங்கே பிருந்தாவும், கதிரும் கூட வந்திருக்க, உடன் ராதாவும் வந்திருந்தார்.

வானதி முதலில் சம்பிரதாயத்திற்கு சரி என்று சொல்லியிருந்தாலும், இப்போது சந்தோசமாகவே அங்கே கிளம்பிச் சென்றாள். அவள் முகத்தில் தெரிந்த ஒரு பூரிப்பே அனைவருக்கும் சொல்லியது, இருவருக்கும் இடையில் சந்தோசமானதொரு வாழ்வு அமைந்து போனது என்று. இளாவும் கூட கதிரிடம் நல்லமுறையில் பேச, பிருந்தாவிற்கு அப்பாடி என்றதொரு உணர்வு.

இவர்கள் விருந்திற்கு வருகிறார்கள் என்றதுமே கோபி வீட்டினில் இல்லை. அவன் இல்லை என்பதை யாரும் பெரிதாய் எண்ணவில்லை. என்ன பிருந்தா தான் தன் அம்மாவிடம் “என்ன இருந்தாலும் வானதி அவரோட தங்கச்சி.. அந்த முறைக்காவது கோபி வீட்ல இருந்திருக்கணும்…” என்று சொல்ல,

விடு பிருந்தா. அவனுக்கும் இளாவுக்கும் எப்பவுமே முட்டும். விட்டிடு. எல்லாம் சந்தோசமா இருக்க நேரத்துல இதுவேற ஏன்…” என்று சரோஜா சொல்லிவிட்டார்.

கதிர்வேலன் கூட கேட்டான் “கோபி எங்க…” என்று.

வெற்றிவேலன் மருமகனிடம் எதையோ சொல்லி சமாளித்துவிட “ஏன் மாமா இங்க என்ன இல்லைன்னு ஆஸ்திரேலியா அனுப்புறீங்க..?” என்று கதிர்வேலன் கேட்க, வெற்றிவேலனுக்கு என்ன பதில் உடனே சொல்வதென்று தெரியவில்லை.

என்னவோ நீங்க செய்றது எல்லாம் இப்போ ரொம்ப வித்தியாசமா இருக்கு. அருண் ஆக்சிடன்ட் பத்தி ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்னா அதுவும் வேண்டாம் சொல்றீங்க. இப்போ கோபிய அனுப்புறீங்க…” என்று கதிர்வேலன் பேச, வெற்றிவேலனுக்கு வியர்த்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

எங்கே கோபியின் லீலை தெரிந்து, மருமகன் தங்களை தரக்குறைவாய் நினைத்துவிட்டால்?!

அதிலும் மகள் வாழ்வு வேறு… இதெல்லாம் தெரிந்து தானா என் தங்கையை உன் தம்பிக்கு பேசினாய் என்று அவளைக் கேள்வி கேட்டுவிட்டால், சுத்தம் நன்றாய் இருக்கும் அவளின் வாழ்வும் நிம்மதியிழக்கும் தானே.

பிருந்தா எங்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேங்கிறா.. இல்ல வேற எதுவும் பிரச்சனையா மாமா? சொல்லுங்க நான் என்ன செய்யணுமோ செய்றேன்…” என்று ஆதரவாகவே கதிர்வேலன் பேச,

அ.. அதெல்லாம் இல்லை மாப்பிள்ள.. ஜா.. ஜாதகம் பார்த்ததுல கோபி எங்களைவிட்டு கொஞ்சம் தள்ளி இருக்கணும் சொன்னாங்க. அதுதான்…”

அதுக்கு நீங்க இங்கயே வேற ஏற்பாடு செஞ்சிருக்கலாம் மாமா…”

அவனுக்கு பாரின் போகணும்னு ரொம்பநாள் ஆசை…” என்றுவிட்டார் முடிவாய்.

அதன்பின்னே தான் கதிர்வேலன் வாய் மூடிக்கொள்ள, அன்றைய விருந்து என்னவோ நல்லபடியாய் தான் நடந்தது. அதிலும் பிருந்தா வானதியை தனியே அழைத்து அவளின் அம்மாவும் அண்ணனும் இடம் எழுதி வைக்கவேண்டும் என்று சொன்னதை சொல்ல,

அண்ணி இப்போ எதுக்கு இதெல்லாம்…” என்றாள்.

ஹ்ம்ம் நான் சொல்லிட்டேன்… ஆனா உங்கண்ணா உனக்கெல்லாம் உங்க வீட்ல கொடுத்தாங்க தானே அப்படின்னு கேட்கிறாங்க… இளாவுக்கு இது தெரிஞ்சா அவன் என்ன நினைப்பான்னு சொல்ல முடியாது…”

சரி அண்ணி நீங்க வொரி பண்ணிக்கவேண்டாம். அம்மாவோ அண்ணாவோ என்கிட்டே பேசினா நான் பதில் சொல்லிக்கிறேன். நம்மளா இதை பெரிசு பண்ணிக்கவேணாம்…” என்றுவிட்டாள் வானதி.

கண்டிப்பாய் இளம்பரிதிக்கு இப்போது இது தெரிந்தால் கோபப்படுவான் என்று தெரியும். அவர்கள் இடம் வாங்கும்போது இப்போது நாங்கள் தருகிறோம் என்று வந்தால், எங்களுக்கு என்ன ஒன்றுமே இல்லையா என்றுதானே கேட்கத் தோன்றும். எல்லாம் நன்றாய் செல்லும் நேரத்தில் இப்போது இப்படியான குழப்பங்கள் வர வானதி விரும்பவில்லை.

இதனால பெரிசா எதுவும் ஆகிடக் கூடாதுன்னு தான் நானும் உன்கிட்ட சொல்லி வைக்கிறேன்…” என்றாள் பிருந்தாவும்.

பார்த்துக்கலாம் அண்ணி…” என்றுவிட்டாள் வானதி

கதிர்வேலனோ “மாப்ள ரெண்டு மூணு நாள் அங்க வந்து நம்ம வீட்ல இருந்தா என்னவாம்?!! அன்னிக்கு வந்து மறுநாளே கிளம்பியாச்சு.. அங்க அப்பா பக்கம் சொந்த பந்தமெல்லாம் உங்களை வீட்டுக்கு கூப்பிடனும்னு கேக்குறாங்க..” என,

இளம்பரிதி யோசிக்கவெல்லாம் இல்லை “ம்ம் வானதி என்ன சொல்றான்னு பார்த்துக்கலாம் மாமா..” என்றான்.

அட.. வரமாட்டேன்னா சொல்ல போறா…” என்ற கதிர்வேலன் வானதியை அழைத்து நேராகவே கேட்க, அவளோ கணவன் முகம் பார்த்தாள்.

சரிதான் ரெண்டுபேரும் ஜாடிக்கு ஏத்த மூடியா இருக்கீங்க…” என்று கதிர் கிண்டல் செய்ய, இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.

அங்க வீட்லயும் பேசிட்டு சொல்றோம் அண்ணா…” என்றாள் வானதி.

இப்படித்தான் அன்று விருந்தும் நல்லமுறையில் முடிய, அடுத்து கோபியும் குடும்பத்தோடு  ஆஸ்திரேலியா கிளம்பிவிட, தியாகு ஷாலினி விசயமும் நல்ல முறையில் முடிய, அருண் சரியாகிவிட்டால் போதும் என்று நினைத்தான் இளம்பரிதி.

வானதியை பொறுத்தமட்டில் அருண், உறவினன்.. ஆனால் இளாவிற்கு நண்பன் அல்லவா..

இப்போதெல்லாம் சில நேரம் இளாவே அருண் பற்றி வானதியிடம் பேசிடத் தொடங்கியிருந்தான்.

எனக்கும் அவனுக்கு அப்படி சண்டை வரும் ஆரம்பத்துல…” என்பான்..

உங்களுக்கு யாரோடையும் சண்டை வரலன்னா தான் ஆச்சர்யம்…” என்று கிண்டல் செய்வாள் வானதி.

நமக்குமே அப்படித்தானே.. ஆனா நீ மட்டும் என்னவாம்?!!” என்று திரும்ப அவளை வாருவான் இளம்பரிதி.

இதெல்லாம் அவர்களுக்குள் சகஜமாகி இருக்க, இதோ ஜிங்கிள்ஸ்கான புதிய இடத்திற்கும் அட்வான்ஸ் கொடுத்து பேசி முடித்து இருந்தனர். பத்திரப் பதிவு அதன் வேலைகளில் இளா இருக்க, வானதியின் சித்தப்பா வீட்டினர் விருந்திற்கு அழைக்கவென்று திண்டுக்கல்லே வந்திட, மோகனாவும், விஜயனும் இவர்களை பழநிக்கு சென்று வர சொல்லிவிட்டார்கள்.

கால்ல சுடுதண்ணி பட்டதுபோல உடனே வராம, ரெண்டு மூணு நாள் இருந்துட்டு வாங்க… கொஞ்சம் அவங்க பக்கத்து ஆளுங்களையும் பழகி வச்சுக்கோ.. நாளைக்கு நம்ம தெய்வாக்கு சம்பந்தம் ஏதாவது அங்குட்டு அமைஞ்சா கூட நல்லது…” என்றார் மகனிடம் மோகனா..

ம்மா…!!!”

டேய்.. நிஜமாத்தான் சொல்றேன்.. இதுல தப்பென்ன இருக்கு. நம்மளும் இப்போ எதுவுமே இல்லாம இல்லை.. தெரியுதா…” என்று மகனின் வாயை அடைத்துவிட்டார்.

இப்படி பழநிக்கு கிளம்பிச் செல்கையில் தான் வானதி தன் பிறந்த வீட்டில் இருந்து சொத்துக்கள் கொடுப்பது பற்றி இளம்பரிதியிடம் சொல்ல, மோகனா பேசியது வேறு நினைவு வர

இதை நீ எங்கம்மாட்ட சொன்னியா?!” என்றான்.

உங்கக்கிட்டயே இப்போதான் சொல்றேன்.. பின்ன எப்படி அத்தைக்கிட்ட சொல்லிருப்பேன்..” என்றாள் தலை சரித்து..

ம்ம்.. உனக்கு வேணும்னா வாங்கிக்கோ.. அவ்வளோதான்..” என்றான் என்னவோ எனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போல்.

இளம்பரிதியின் இந்த பதில் அவளுக்கு ஒரு ஏமாற்றம் கொடுக்க “நீங்க சொல்லுங்க என்ன நினைக்கிறீங்க…” என்றாள்.

நான் நினைக்க என்ன இருக்கு..?! எனக்கு இதெல்லாம் யோசிக்கவும் முடியாது நதி.. அவங்க உனக்கு செய்யனும்னு நினைச்சா அதை வேண்டாம் சொல்றதுக்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. உனக்கு விருப்பம் இருந்தா வாங்கிக்கோ. இல்லையா வேணாம்னு சொல்றதுன்னாலும் சொல்லிக்கோ.. முழுக்க முழுக்க உன்னோட முடிவு தான்..”

ம்ம்ம்…” என்றதோடு சரி வானதி அமைதியாகி விட்டாள்.

அதன் பின் அவனிடம் இதனைப் பற்றி பேசிடவில்லை. ஆனால் ராதாவிடம் சொல்லிவிட்டாள் “ம்மா எனக்கு குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் இதெல்லாம் செய்ங்க இப்போ வேணாம்…” என்று.

ராதாவோ “அட..! உன் குழந்தைக்கு செய்யாம போயிடப் போறோமா என்ன?! இது உனக்குன்னு செய்றது…” என,

என்னவோ.. எதுவா இருந்தாலும் மொத்தமா அப்போ பண்ணிக்கோங்க.. இப்போதைக்கு எதுவும் வேணாம்..” என்றுவிட, மகள் இத்தனை அழுத்தமாய் சொல்கிறாள் என்றால் அதில் அர்த்தம் இருக்கும் என்று அவரும் ஒன்றும் சொல்லவில்லை.

கதிர்வேலனிடம் சொன்னவர், அவனின் ஏமாற்றம் கண்டு “கதிர்.. அவ வேணாம் சொல்றா அப்படின்னா காரணம் இல்லாம இருக்காது தானே. விடு. ஒரேதா வேண்டாம்னு சொல்லலையே.. பார்த்துக்கலாம்…” என, கதிர்வேலனுக்கு சரி என்பது தவிர வேறு வழி இருக்கவில்லை.

பழநிக்கு சென்றவர்கள், அன்றைய மாலை வானதியின் சித்தப்பா வீட்டிற்கு சென்று வர, மறுநாள் கோவில் சென்று வர என்று நேரம் போனது. வானதிக்கு சரி வீட்டினில் எப்படியோ பொழுது கழிந்துவிட, இளம்பரிதிக்கு தான் என்னவோ நேரத்தை கடத்துவது சிரமமாய் இருக்க,

ரொம்ப போர் அடிச்சதுன்னா வெளிய போயிட்டு வரலாமா?!!” என்றாள் வானதி.

போர் அப்படின்னு இல்லை… கடைல இன்னிக்கு கொஞ்சம் அல்டர் வொர்க் எல்லாம் பண்றாங்க.. அப்பா மட்டும் தனியா பார்க்கணும். அதுதான் யோசிச்சிட்டு இருந்தேன்..” என்றான்.

நிஜமும் கூட அதுவே..

வேலை இருக்கையில், சும்மா இங்கே இருப்பது அவனுக்கு மனதிற்கு ஒப்பவில்லை..!

ஓ..!! அப்படின்னா ஒன்னு செய்ங்க.. நீங்க போய் வேலை முடிச்சிட்டு திரும்ப இங்கவே வந்திடுங்க…” என்றவர் அவனின் பார்வை கண்டு “சரி சரி.. எப்படியும் நாளைக்கு கிளம்பத்தானே போறோம்.. இன்னிக்கு போயிட்டு நாளைக்கு வந்து என்னை கூப்பிட்டுக்கோங்க…” என,

ஏன்.. அதை நீயே இன்னிக்கு வந்தா என்னவாம்?!!” என்றான் ஆசையாய்.

அவளை விட்டுச் செல்லவும் எப்படியோ இருந்தது..

வரலாம்தான்.. ஆனா எனக்கும் இப்படி ஜாலியா பிறந்த வீட்ல இருக்கணும்னு ஆசை இருக்குமே…” என்றவள் வேண்டுமென்றே சிரிப்பினை அடக்க, தன்னை சீண்டவென்று சொல்கிறாள் என்று அவனுக்கு நன்கு புரிந்தது.

ஓ..!! சரிங்க மேடம். மகாராணி நீங்க ஆசைப்பட்ட அதை வேண்டாம் சொல்ற தைரியம் யாருக்கு இருக்கு…” என்று அவனும் சீண்ட,

தோடா..!!’ என்று பார்த்தாள்.

ஹேய்…!! நிஜமா சொல்றேன்.. உன்னை விட்டுட்டு போறது சங்கடம் தான். ஆனா இதுபோல எல்லாம் சின்ன சின்ன சந்தோசம் பொண்ணுங்க அனுபவிக்கனும்…” என்றவன், அவளை ஆசைதீர கொஞ்சித் தீர்த்தே கிளம்பினான்.

வானதிக்கோ ரெக்கை ஒன்றுதான் இல்லை. இருந்திருந்தால் மனதில் இருக்கும் பெரும் அமைதிக்கும், நிம்மதிக்கும், இளம்பரிதி உடனான மகிழ்வான இல்லறத்திற்கும் வானில் பறந்திருப்பாள். இளம்பரிதி கிளம்பிய பின்னும் கூட சந்தோசமாய் தான் வீட்டினில் அம்மா அண்ணி, தேஜு என்று அவர்களோடு பேசி உலா வந்துகொண்டு இருந்தாள்.

எல்லாமே அன்றைய இரவில் கதிர்வேலனும், பிருந்தாவும் பேசுவதை கேட்கும் வரைக்கும் தானே.

கதிர்வேலன் அவர்களின் மில் சென்றிருந்தவன், வீடு வர வெகு நேரமாக, பிருந்தா காத்திருந்தாள். உடன் வானதியும் இருக்க தேஜு அரைகுறை உறக்கத்தில் சிணுங்கியபடி இருக்க, “நீ இவளை தூங்க வையேன்…” என்றாள் பிருந்தா.

அப்போ என்கூட படுக்க வச்சிக்கிறேன்…” என்று வானதி தேஜுவை அவளோடு தூக்கிச் சென்றுவிட, பிருந்தாவோ கதிர்வேலனுக்கு அழைத்துப் பார்க்க “நீ தூங்கு பிருந்தா.. நான் வர லேட்டாகும்..” என்றுவிட்டான்.

சரி என்று பிருந்தா தங்களின் அறைக்கு வந்துவிட, சரோஜா அழைத்தார் அந்த நேரத்தில்.

என்ன இந்நேரத்துல…” என்று பதறியபடியே பிருந்தா கேட்க,

அட ஒண்ணுமில்ல.. சும்மா உன்கூட பேசணும்னு தோணிச்சு…” என்றவர் மகளோடு பேச, அம்மாவிற்கும் மகளுக்கும் பேச்சு நீண்டு கொண்டே போனது.

அதே நேரம் தேஜு தூங்காது சிணுங்கியபடி இருக்க “தூங்கு குட்டிம்மா…” என்று வானதி எவ்வளவு சமாதானம் செய்தும் ஒன்றும் எடுபடவில்லை.

அம்மாட்ட…” என்று குழந்தை அழவே தொடங்க, “சரி வா…” என்று தேஜுவை தூக்கிக்கொண்டு வெளியே வர, பிருந்தா அவர்களின் அறையில் இருப்பது கண்டு அங்கே சென்றாள் வானதி.

கதிர் வருவானே என்று பிருந்தா அறையின் கதவை முழுதாய் சாற்றாமல் இருக்க, அம்மாவோடு தானே என்று அவளும் மனம் விட்டு பேசிக்கொண்டு இருந்தாள்.

கோபி செய்தது எல்லாம் பேசி, இறுதியாய் வானதி, இளா கல்யாணம் பற்றியும் பேச சரியாய் வானதி அங்கே அறை கதவு மீது கை வைக்கவும் சரியாய் இருந்தது.

ம்மா சும்மா இல்ல.. இளா எவ்வளோ சொல்லியும் சம்மதிக்கல. கால்ல விழுந்தார் இவர்.. அப்படியும் அவன் தயங்கித்தான் நின்னான்.. அப்புறம் நான்தான் தனியா அவன்கிட்ட, நீ யாரோ ஒரு பொண்ணுக்கு பாவம் பண்ணதா நினைக்கிற. ஆனா அதுக்கெல்லாம் பிராயசித்தமா இதை நினைச்சுக்கோ.. வானதிய கல்யாணம் பண்ணுன்னு கெஞ்சி கேட்டேன்…” என்று சொல்ல, இவை எல்லாம் காதில் விழுந்து வானதி அப்படியே சிலையென ஆகிவிட்டாள்.

அண்ணன் காலில் விழுந்தானா?!!!’

செய்த பாவத்திற்கு பிராயசித்தமாய் என்னை மணந்தானா?!!’

ஐயோ…!!’ என்று ஆனது வானதிக்கு.

சட்டென்று உடலும் மனதும் கூசிச் சுருங்குவதாய் இருக்க, பாவத்தின் பிராயசித்தமா இந்த வாழ்வு?!! அண்ணன் கெஞ்சியதின் பலனா இந்தத் திருமணம். வானதியின் உள்ளம் போர்க்களம் போலானது..

Advertisement