Advertisement

அத்தியாயம் – 25            

கிட்டத்தட்ட இரண்டு மாதம் கடந்திருந்தது…

அனைவரும் எதிர்பார்த்த பல நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும், யாருமே எதிர்பாராத சில கசப்புக்களும் நடந்தது நிஜமே..

கோபி, ரேணு மற்றும் நிகிலோடு வெளிநாடு சென்றுவிட்டான். ஆஸ்திரேலியா. அங்கே அவரின் நண்பர் குடும்பம் பல வருடங்களாக ஹோட்டல் தொழில் நடத்தி வர, அவரிடம் பேசி, தானும் அதில் ஒரு பங்குதாரறாய் சேர்ந்து, மகனை அங்கே அனுப்பிவிட்டார்.

கோபிக்கு ஆரம்பத்தில் இதில் எல்லாம் இஷ்டம் இல்லை. அதிலும் இதெல்லாம் இளம்பரிதியின் யோசனை என்றதும்

“அவன் சொல்றான்னு என்னை அனுப்புறீங்களா?” என்று கேட்க,

“சரி உன் பொண்டாட்டி, உன் மாமனார் வீட்டு ஆளுங்கக்கிட்ட பேசி உண்மையை சொல்லிடுறேன். அதுக்குமேல அவங்க என்ன சொல்றாங்களோ செய்றாங்களோ சரி…” என,

“அப்பா..!!” என்றான் அதிர்ந்து.

என்ன செய்தாலும் அப்பா தன்னை காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கையை தான் உடைத்தார் வெற்றிவேலன் முதலில்.

“என்னடா அப்பா… நீ தப்பு மேல தப்பு செய்வ. நான் ஒவ்வொன்னுக்கும் பழி பாவம் சேர்த்துக்கிட்டே இருக்கனுமா.. முடிஞ்சா சொல்றது கேளு இல்லையா நான் என்ன செய்யணுமோ செய்வேன்…” என்று திடமாய் சொல்ல, சரோஜாவிற்கு இந்த விஷயங்கள் தெரிந்தாலும் அவர் பெரிதாய் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

மகனது சங்கதியும், அதற்கு கௌரவம் காக்கிறேன் என்று கணவர் செய்த வேலையும் ஒரு பெண்ணாய் அவரை நிறையவே பாதித்து இருந்தது. என்ன ஒன்று இதனை எல்லாம் ரேணுவிற்கு யாரும் தெரிய விடுவது இல்லை. விடப் போவதும் இல்லை.

அவளுக்கு ஒன்று மட்டுமே நன்கு புரிந்தது. ஏதோவொரு பிரச்சனை நடந்திருக்கிறது. அதை யாரும் சொல்லவில்லை என்று. அவளாய் புரிந்த அளவில் மாமானாரின் எதிரிகள் யாரோ அருணை இப்படி படுக்க வைத்திட, கோபியையும் ஏதேனும் செய்திடுவரோ என்று தங்களை குடும்பமாய் வெளிநாடு அனுப்புகிறார்கள் என்று.

அதையே சரோஜாவிடமும் அவள் கேட்க, “வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு நீ. நீ சந்தோசமா இருந்தா தான் இந்த குடும்பம் நல்லாருக்கும்.. பார்த்து இரு.. கொஞ்சம் விவரமா இரு…” என்றதோடு முடித்துக்கொண்டார்.

கோபி ஆரம்பத்தில் முரண்டு பிடிக்க “சரி இதுல கையெழுத்து போட்டுட்டு நீ என்னவேனா செய்…” என்று வெற்றிவேலன் ஒரு வெற்று பத்திரம் காட்ட,

“அப்பா என்னப்பா இதெல்லாம்…” என்றான்.

“போடு டா… உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த சொத்துல எதுவும் பங்கில்லை. பொண்டாட்டி பிள்ளை மேல உரிமை இல்லை. இப்படி என்னென்னவோ நான் எழுதிப்பேன்.. நீ கையெழுத்துப் போட்டுட்டு உனக்கு என்ன செய்யணுமோ செய். எங்க போவியோ போ..” என, அவனுக்கு இப்போது வேறு வழியில்லை.

இந்த வசதிகள் இல்லாது அவனால் வாழ்ந்திட முடியுமா என்ன?!!

மௌனமாகிப் போனான்.

“அங்க போய் ஒழுங்கா இருக்கணும். ஏதாவது உன்மேல அது இதுன்னு பேச்சு வந்தது, இல்லை ரேணு ஏதாவது கவலைப்படுற மாதிரி தெரிஞ்சது, எங்களுக்கும் எங்க பெரிய மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு நானே சொல்லிடுவேன்…” என்று மிரட்டியே அவனை அனுப்பி வைத்திருந்தார்.

கோபி ஆஸ்திரேலியா சென்று, வேறெந்த பிரச்சனையும் இல்லை என்று ஆகவும் தான் வெற்றிவேலனுக்கு ஓரளவு மனது நிம்மதியானது. அவரின் இந்த மன நிம்மதிக்கு பெரும் காரணம் இளம்பரிதியும் கூட, அதாவது அவன் தியாகுவை சந்திக்க ஏற்பாடு செய்தது.

ஆம்! சொன்னது போலவே இளம்பரிதி தியாகுவும் வெற்றிவேலனும் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தான். அதாவது கோபி இங்கிருந்து கிளம்பிய பின்னே. தியாகுவும் கொடைக்கானலில் இளாவை சந்தித்து பேசியதோடு சரி. அதன் பின்னே இளா சொன்னதுபோல் காத்திருக்க, இளம்பரிதி தான் சொன்னதை செய்திருந்தான்.

கோபி கிளம்பியதும், வெற்றிவேலனிடம் இளா சொன்ன முதல் விசயமே “தியாகுக்கிட்ட பேசுங்க…” என்பதுதான்.

‘என்னடா இவன்…?!’ என்றுதான் பார்த்தார் அவர்.

“ஆமா.. இல்லன்னா அவன் சும்மா இருக்க மாட்டான். உங்களுக்கு எப்படி உங்க பிள்ளைங்க வாழ்க்கை முக்கியமோ, அதேபோல அவனுக்கும் அவன் தங்கச்சி வாழ்க்கை முக்கியம் தானே…” என,

“எவ்வளோ பணம் வேணாலும் தர்றேன்…” என்றார் எடுத்ததுமே.

“ம்ம்ச்… உங்க பணத்தை தூக்கி இல்லாதவங்களுக்கு குடுங்க.. அவன் பணம் எதிர்பார்க்கலை…” என,

“பின்ன? வேறென்ன?!” என்றார்.

தியாகு இளாவிடம் சொன்னதை சொல்ல, வெற்றிவேலன் அமைதியாய் இருந்தார்.

“கௌரவம் கௌரவம் சொல்றீங்களே.. எல்லாருக்குமே அது இருக்கு. வசதி இருக்கவங்களுக்கும், இல்லாதவங்களுக்கும் சரி எல்லாருக்குமே கௌரவம் இருக்கு. அதை முதல்ல புரிஞ்சுக்கோங்க. அதையும் தாண்டி மனிதாபிமானம்னு ஒன்னு இருக்கு. நியாயம்னு ஒன்னு இருக்கு.

அந்த பொண்ணுக்கு உடம்புல என்ன பிரச்சனைன்னு தெரியலை. அடிக்கடி சோர்ந்து போறதா சொல்றான் தியாகு. மெடிக்கல் சம்மரி வேணும். அது நீங்க சொன்னா மட்டும் தான் கொடுப்பாங்க…” என,

“அதுக்கும் அவனைப் பார்க்கிறதுக்கும் என்ன சம்பந்தம்…” என்றார் பெரிய மனிதர்.

“ம்ம்ம் மன்னிப்பு கேளுங்க…” என்று இளா சற்று கண்டிப்புடனே சொல்ல,

“என்னது?!!!” என்று அதிர்ந்து போனார்.

“ஆமா… சொல்லப்போனா நீங்க ஷாலினிக்கிட்ட மன்னிப்பு கேட்கணும்…” எனவும்

“இளா….” என்றார் கோபமாய்.

“ம்ம்ச் சும்மா இப்படி கத்தாதீங்க.. தப்பு கோபி ஷாலினி ரெண்டு பேர் மேலயும் தான் இருக்கு. இருந்தும் இப்போ கோபி பாதுகாப்பா அவனோட குடும்பத்தோட இருக்கான். ஆனா அந்த பொண்ணு? யோசிங்க… நிராதரவா நிக்கவச்சு அந்த பொண்ண மிரட்டி நீங்க கருகலைப்பு செய்ய வச்சு அனுப்புனீங்க..

அப்போ அந்த பொண்ணோட உயிருக்கே ஏதாவது ஆகிருந்தா கூட ஒன்னும் சொல்ல முடிஞ்சிருக்காது. நீங்க ஒன்னு அவங்க அண்ணனை கூப்பிட்டு பேசி ஷாலினியை அனுப்பி இருக்கணும். அதுவும் செய்யலை. இல்லை ஹாஸ்பிட்டல்ல இருந்து ஷாலினிய தனியா அனுப்பி இருக்கக் கூடாது. மரியாதையா அவங்க வீட்ல கொண்டு போய் விட்டிருக்கணும்…” என, வெற்றிவேலன் எதுவும் சொல்லவில்லை.

என்ன சொல்ல முடியும் அவரால்?!

இளம்பரிதி சொல்வதெல்லாம் நிஜம்தானே..!

ஆனால் அதற்காக மன்னிப்பா? என்று யோசித்தார். இதுவரை அவரது வாழ்நாளில் இப்படி நடந்தது இல்லையே…

தயக்கமாய் இருந்தது..!

“மன்னிப்பு கேட்டுப் பாருங்க.. அதுக்கப்புறம் உங்களுக்கு மனசுல ஒரு அமைதி கிடைக்கும்… அந்த மன்னிப்பே கூட அருணை சீக்கிரம் குணமாக்கிடும்…” என, வெற்றிவேலன் பதிலே சொல்லவில்லை.

யோசிக்கிறார் என்பது புரிந்தது…

“சொல்லிட்டேன்… அதுக்கப்புறம் உங்க விருப்பம். ஆனா தியாகுவை உங்களோட சந்திக்க வைக்கிறேன் சொல்லிருக்கேன்.. நீங்க சம்மதிக்கலைன்னாலும் நான் செய்வேன்…” என,

“நா… நான் என்னன்னு சொல்றேன்…” என்றவருக்கு குரல் பிசிறு தட்டியது.

சரி யோசித்து சொல்லட்டும் என்று இளாவும் கிளம்பிவிட, கணவரின் இந்த திடீர் அமைதி கண்டு சரோஜா என்னவென்று பார்த்தார்.

இப்போது வீட்டினில் இவர்கள் இருவரும் தானே..!!

அருணை வீட்டிலேயே சகல மருத்துவ வசதிகள் கொண்டு வந்து வைத்திருந்தனர். அவனை கவனித்துக்கொள்ள ஒரு ஆண் நர்ஸ் வேறு. வேலையாட்களும் வேலை முடித்து சென்றுவிட்டால், வீடே அமைதியாய் இருக்கும். அந்த அமைதியே சரோஜாவிற்கும் சரி, வெற்றிவேலனுக்கும் சரி பெரும் தொல்லை கொடுத்தது.   

ஆட்கள் நிரம்பியிருந்த வீடு.. இப்போது இப்படி அமைதி சூழ இருக்க, வெறுமையை கொடுத்தது.

அதிலும் இந்த வெற்றிவேலன் வேறு இப்படி மௌனத்தை குத்தகைக்கு எடுத்துக்கொள்ள, சரோஜா பார்த்தவர் கேட்டேவிட்டார் “என்னாச்சு? இன்னமும் என்கிட்ட எதுவும் மறைக்கிறீங்களா..?” என்று

“அ… அதெல்லாம் இல்லை…”

“அப்புறம் என்ன திடீர்னு இப்படி..?”

ஒரு பெருமூச்சு விட்டு, இளம்பரிதி சொன்னதை வெற்றிவேலன் சொல்ல, சரோஜா கணவரின் முகத்தை ஆழ்ந்துப் பார்த்தவர் “அவன் சொன்னதுல என்ன தப்பிருக்கு..?” என,

“என்ன சரோ நீயும் இப்படி சொல்ற…” என்றார்.

“நிஜம்தானே.. கோபிக்கு என்ன தண்டனை நீங்க கொடுத்தீங்க… எதுவுமில்ல. சொல்லப்போனா அவன் மனசார வருத்தப்பட்ட மாதிரி கூட தெரியலை.. இனியும் அவன் ஒழுங்கா இருப்பானா சொல்ல முடியாது. ஆனா அந்த பொண்ணுக்கு வாழ்நாள் முழுக்க மனசுல உறுத்தல் இருக்கும். ஒருவித பயம் இருக்கும்.. அது எவ்வளோ பெரிய தண்டனை தெரியுமா?

அப்படிப் பார்த்தா தப்பு உங்கமேலயும் தானிருக்கு. மன்னிப்பு கேட்டா நம்ம குறைஞ்சிட மாட்டோம்.. நல்லதா ஒரு மாற்றம் வந்தா நல்லது தானே…” என, வெற்றிவேலனுக்கு இதெல்லாம் சரிதான் என்று தோன்றினாலும், இறங்கிப் போய் பேசவும் இன்னும் முழு மனதாய் சரி சொல்ல முடியவில்லை.

வெற்றிவேலனைப் போலவே தியாகுவும் வேறொரு யோசனையில் இருந்தான். அது ஷாலினியின் பேச்சினால்.

ஆம்..! அவளாகவே வந்து மனம் விட்டு தன் அண்ணனோடு பேசினாள்.

“அண்ணா… தெரிஞ்சோ தெரியாமலோ அருண் இப்படியாக நம்ம காரணம் ஆகிட்டோம்.. குணமானா சரி. இல்லைன்னா அதுவே அவங்களுக்கு வாழ்நாள் வலி தானே.. இன்னும் ஏன் பழி வாங்கனும்னு நினைக்கிற நீ.. விட்டுடலாமே. நம்ம வழி பார்த்துக்கலாம்…” என்றாள்.

“நீ சொல்றது சரிதான்… ஆனா நீ எத்தனை நாளுக்கு இப்படி இருக்க முடியும்?” என,

“எனக்கென்ன… நான் நல்லாதானே இருக்கேன்… நீ அம்மா எல்லாம் இருக்கீங்க தானே…”

“ம்ம்ச் இதெல்லாம் சும்மா ஷாலினி.. உனக்குன்னு ஒரு லைப் அமையனும்… அதுவரைக்கும் என்னால சும்மா இருக்க முடியாது.. நீ சந்தோசமா வாழ்றது பார்க்கணும். இல்லைன்னா ஒவ்வொரு நிமிசமும் அவனுங்களை ஏதாவது செய்யனும்னு எனக்கு தோணும்.. வேற நான் என்ன செய்யட்டும் நீயே சொல்லு…” என்றான்.  

ஷாலினி பதிலேதும் சொல்லாது இருக்க “என்னோட கருத்துல எதுவும் தப்பிருக்கா?” என்றான் தியாகு.

“ம்ம்ஹும்…”

“பின்ன ஏன் நீ சம்மதிக்க மாட்டேங்கிற…”

“நா.. நான்.. என்ன சொல்லட்டும் ண்ணா.. எ.. எனக்கு பயமா இருக்கு. கொஞ்ச நாள் போகட்டுமே…” என்றாள்.

“பயமா?!! அதெல்லாம் தேவையே இல்லை. உன்னை யாரும் வந்து தொல்லை செய்யப் போறதும் இல்லை. ஆனா நீ உனக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு வாழ்ந்தா எனக்கு ரொம்ப சந்தோசம்…”

“ம்ம்ம்…”

“நல்லா யோசி ஷாலினி… இதெல்லாம் கடந்து வந்துடலாம்…” என,

தான் சரி என்று சொல்லாது அண்ணனும் இந்த விசயத்தை விடப் போவதில்லை என்று ஷாலினிக்கு நன்கு புரிந்தது. எத்தனை நாளுக்கு இதனை பிடித்துத் தொங்க முடியும்?! தியாகுவும் அவனுக்கு ஒரு வாழ்வு அமைத்து வாழ வேண்டும் தானே.

“அண்ணா.. எனக்கு கொஞ்சம் டைம் குடு.. நான் யோசிக்கிறேன்..”  என்றாள் தெளிவாய்.

“யோசி வேண்டாம் சொல்லலை.. டைம் எடுத்துக்கோ… ஆனா நல்ல முடிவா சொல்லு…”

“ம்ம் சரிண்ணா…” என்றிட, தியாகுவிற்கு மனது சற்று ஆசுவாசம் அடைந்தது.

கண்டிப்பாய் ஷாலினி ஒரு நல்ல முடிவிற்கு வருவாள் என்று தோன்ற, இளாவும் அவன் சொன்னதுபோல வெற்றிவேலனை சந்திக்க ஏற்பாடு செய்திடுவான் என்ற நம்பிக்கையும் பிறக்க, எல்லாம் சுமுகமாகும் என்ற உறுதியில் இருந்தான்.

அருண் உடலில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றாலும், வெற்றிவேலனும் சரி சரோஜாவும் சரி தங்களின் நம்பிக்கையை விடவில்லை. நிச்சயம் அவன் குமாவான் என்று திண்ணமாய் இருந்தனர். என்ன நாட்கள் செல்ல செல்ல வருத்தம் கூடியது நிஜமே.

அதிலும் சரோஜா ஒரு அம்மாவாய் நிறைய வருந்தினார்…!!

இந்த வயதில் தனிமை அவருக்கு நிறைய வேதனையை கொடுத்தது.

கோடி கோடியாய் பணமிருந்து என்ன பயன்?!

ஒரு பிரயோஜனமும் இல்லையே..

“எனக்கென்னவோ நீங்க பண்ண தப்புக்கு பிராயச்சித்தம் தேடினா நல்லாருக்கும்னு தோணுது…” என்றார் கணவரிடம்.

“நான் என்ன பண்றது?!!”

“ஒருதடவ இளா சொல்றது போல செய்ங்க… முடிஞ்சளவு நம்ம மனசுக்காவது ஒரு அமைதி கிடைக்கும்…” என, வெற்றிவேலன் தியாகுவை சந்தித்து பேசும் முடிவிற்கு வந்திருந்தார்.

அதன் பொருட்டு இளாவை அழைத்துச் சொல்ல “ஹ்ம்ம் கூட்டிட்டு வர்றேன்…” என்றவன் சொன்னது போலவே தியாகுவை அழைத்துச் சொல்லி, அவனை வரவழைத்து, அழைத்தும் சென்றுவிட்டான் வெற்றிவேலனிடம்.

வெற்றிவேலன் இது போன்றதொரு உணர்வை இதுநாள் வரைக்கும் உணர்ந்தது இல்லை.

‘என்னால் எதுவும் முடியும்…’ என்ற கர்வம் அடிபட்டு போனது.

ஒரு மகனுக்கு உயிர் மட்டுமே இருக்கிறது. இன்னொரு மகன் உயிரோடு இருந்தால் போதும் என்று அனுப்பியாகிவிட்டது. கண்களை இறுக மூடித் திறந்தவர் தியாகுவிடம் எதுவும் பேசவில்லை. என்ன பேசவென்றும் தெரியவில்லை. வெற்றிவேலனோடு சரோஜாவும் உடனிருந்தார்.

தியாகுவிற்கும் கூட அப்படித்தான். நன்றாய் கேட்டிட வேண்டும் என்றுதான் வந்தான். இருந்தும் என்னவோ அது முடியவில்லை. தவறு அவன் தங்கையின் மீதும் உண்டே…

அனைவருமே அமைதியாய் இருக்க, இளம்பரிதி பார்த்தவன் “சரி பேசிக்கோங்க.. நான் கிளம்புறேன்…” என,

சரோஜா “நீ இரு இளா..” என்று அமர்த்திவிட்டார்.

“இல்லைம்மா…” என்று அவன் எதுவோ சொல்ல வர, “இதுல மனவுளைச்சலுக்கு உள்ளானது நீயும் தான்.. உன்கிட்டயும் தான் நாங்க மன்னிப்பு கேட்கணும்…” என்றார் சரோஜா..

“ம்மா…!!!”

“உண்மைதான்…” என்றவர் தியாகுவிடம் திரும்பி, கை கூப்பி “எங்களை மன்னிச்சுடுப்பா…” என, தியாகு இதனை எதிர்பார்க்கவில்லை.

சற்றே திகைத்துப் பார்க்க “ஆமாம்… சொல்லப்போனா உன் தங்கச்சிக்கிட்டயும் நாங்க மன்னிப்பு கேட்கனும்…” என்று வெற்றிவேலனும் சொல்ல,

“இல்லை.. வேண்டாம்.. அவ உங்களை எல்லாம் பார்க்கவேண்டாம்…” என்றான் தியாகு மறுப்பாய்.

“ம்ம் வாஸ்தவம் தான்..” என்றவர் ஒரு பைலை அவனிடம் கொடுத்து “இது மெடிக்கல் சம்மரி… நீ நினைக்கிறது போல எல்லாம் எதுவும் உன் தங்கச்சி உடம்புல பிரச்சனை இல்லை…” என்று கொடுக்க, அதனை வாங்கிக்கொண்டான்.

“கண்டிப்பா அந்த பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமையும்…” என்றார் சரோஜா.

அதனைக் கேட்டு தியாகுவிற்கு ஒரு விரக்தி சிரிப்பு மட்டுமே.. அதற்கு அவர்கள் எத்தனை பிரயத்தனப் படவேண்டும் என்பது அவனுக்குத் தானே தெரியும்.

“நான் செய்றது எல்லாம் சரின்னு வாழ்ந்து பழகிட்டேன். அந்த நேரத்துல இப்படி செய்றதுதான் சரின்னு நினைச்சு எல்லாம் பண்ணிட்டேன். ஆனா அது என் குடும்பத்தை இப்படி ஆக்கும்னு நினைக்கல. ஆளுக்கு ஒரு பக்கம் நிக்கிறோம் இப்போ…” என்றார் வெற்றிவேலன்.

“உங்களுக்கு எதையும் சமாளிக்கிற வசதி இருக்கு. எங்களுக்கு அப்படிஇல்ல. ஒரு சின்ன பிரச்சனைன்னா கூட நாங்களே தான் சமாளிச்சு எந்திரிச்சு வரணும்…” என்ற தியாகு ஒரு சிறு அமைதிக்கு பிறகு “ம்ம்ச் போனது போகட்டும்.. எனக்கு என் தங்கச்சி நல்லாருந்தா போதும்..” என்று எழுந்து கொண்டான்.

இளம்பரிதியோ வெற்றிவேலனை ஒரு கண்டனப் பார்வை பார்த்தான். நீங்கள் இன்னும் மன்னிப்பு என்ற ஒன்றை கேட்கவில்லை என்று. அது அவருக்கும் புரிந்ததுவோ என்னவோ, அவரும் எழுந்து நின்றவர் “உன் தங்கச்சிக்கிட்ட நான் மனசார மன்னிப்புக் கேட்டன்னு சொல்லிடுப்பா…” என்றார் இரு கரம் கூப்பி.

அவரின் வார்த்தைகளில் தெரிந்த வேதனை, நிஜமாகவே மனதார வருந்துகிறார் என்பது அனைவருக்குமே புரிந்தது. தியாகு எதுவும் சொன்னான் இல்லை. மௌனமாய் ஒரு பார்வை பார்த்து, லேசாய் தலையசைத்து சென்றுவிட்டான்.

Advertisement