Advertisement

அத்தியாயம் – 24

கொடைக்கானல்…

அழகிய மலையகம். மிதமான குளிரையும் தாண்டி, அந்த காலைப் பொழுதில் உடலை சில்லிட வைக்கும் குளிர். பொழுது விடிந்து பல நேரம் ஆகியும் கூட இன்னும் எங்களுக்கு விடியவில்லை என்பதுபோலவே இருந்தனர் இளம்பரிதியும், வானதியும்.

முதல் நாள் மதியம் வந்திருந்தனர். இதற்கு முன் இருவருமே இங்கே வந்திருந்தாலும், இது ஒரு புதிய உணர்வு.

ஒரு புது அனுபவமாய் இருந்தது.

தாங்கள் மட்டுமே தங்கள் உலகில்.

மதியம் வந்தவர்கள் எங்கும் செல்லவில்லை. உணவருந்திவிட்டு சற்று நேரம் ஓய்வெடுக்க, மாலையில் தான் வெளி சென்று வந்தனர். எங்கும் எதிலும் அவசரம் காட்ட வில்லை. வானதி தானாகவே இளாவின் கரத்தினை பற்றிக்கொண்டு நடந்தாள்.

அவளுள் அப்படியொரு உற்சாகம். அப்படியொரு உல்லாசம்.

“இது ஒரு தனி பீல் இல்ல…” என்று இளம்பரிதியைப் பார்த்துக் கேட்க,

“ம்ம்ம்..” என்று ஆமோதிதத்தவனுக்கும் அதே உணர்வு.

வானதியின் பார்வை சும்மா ஒரு இடத்திலோ இல்லை ஏதேனும் பொருட்களின் மீது படிந்தால் கூட “அது வேணுமா? வாங்கலாமா?” என,

“அடடா… சும்மாதான் பார்த்தேன்…” என்பாள்.

“ம்ம்ம் எது வேணுமோ கேளு…”

“நிஜமா எனக்கு எதுவும் வேணும்னு தோனல…”

“ஏன்.. ஏன் அப்படி.. தெய்வா மட்டும் இருந்திருந்தா வை, இந்நேரம் அது இதுன்னு நிறைய வாங்கிருப்பா…” என,

“அது… ம்ம்ம் என்ன சொல்றது.. தப்பா எடுத்துக்கக் கூடாது…” என்றவள் “ எனக்கு இப்படி ரோட் சைட் ஷாப்பிங் பண்ணி எல்லாம் பழக்கம் இல்லை… பண்ணவும் தெரியாது…” என்று உதடு பிதுக்க,

“ஓ..!!!” என்றவன் “சரி வா…” என்று ஒரு கடைக்கு அழைத்துச் செல்ல, அங்கே நிறைய கை வேலைபாடுகள் கொண்ட உல்லன் உடைகள் இருந்தன.

“இங்க எதுக்கு இப்போ…?!”

“சும்மாதான் உனக்கு ஏதாவது வாங்கணும் போல இருந்தது.. நீயும் எதுவும் கேட்கப் போறதில்லைன்னு தெரியும். எனக்கும் பெருசா ஷாப்பிங் எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லை. ஆனா தோணும் போது வாங்கிடனும்…” என்றவன் பார்வையை ஓட்ட, வானதிக்கு இன்னும் குஷியாகிப் போனது.

ஒரு பதினைந்து பதினாறு வயது வரைக்கும் ராதா அவளுக்காக பார்த்து பார்த்து எல்லாம் வாங்குவார். அதன் பின் விடுதி வாசம். தோழிகளோடு வெளியே செல்லும் பழக்கமும் ஜாஸ்தியாக, அவளுக்கு வேண்டியது எல்லாம் அவளே வாங்கப் பழகினாள்.

எது தேவை, எது தேவையில்லை என்பதெல்லாம் இல்லை. கண்ணில் பட்டது, பிடித்தது என்று நிறைய. இப்போது வரைக்கும் கூட நிறைய பொருட்கள் அப்படித்தான் வாங்குவாள். அதிலும் ஆன்லைன் ஷாப்பிங் சொல்லவே வேண்டியதில்லை.

இப்போது தனக்காக ஒருவன், என்ன வாங்குவது என்று யோசித்து நிற்க, அவளுக்கு ‘என்ன வாங்கப் போகிறான்…’ என்று பார்க்க ஆசையாய் இருந்தது.

கையைக் கட்டி நின்றுகொண்டாள். சிறிய கடைதான். இவள் ஒரு ஓரத்தில் நின்றுகொள்ள, இளம்பரிதியோ என்ன வாங்குவது என்று பார்த்துக்கொண்டு இருக்க “சார் என்ன பாக்குறீங்க..?” என்றாள் கடையில் இருக்கும் பெண்.

“அதுதான் யோசிக்கிறேன்…” என்றவன் வானதியைப் பார்த்து “என்ன நீ இப்படி நின்னுட்ட..?” என,

“நீங்க என்ன வாங்குறீங்கன்னு பாக்குறேன்…” என்றாள் சந்தோசமாய்.

“ஹேய் நீயும் பாரு…” என,

“ம்ம்ஹும்…” என்று தோள்களை குழுக்கியவள், “நீங்கதான் பார்க்கணும் செலக்ட் பண்ணனும், வாங்கணும்…” என,

“நீ இருக்க பாரேன்…” என்று பேசிக்கொண்டு இருக்க, கடைப் பெண் இவர்களின் சம்பாசனையில் புதிதாய் திருமணமான ஜோடி என்று புரிந்து

“சார் புதுசா கல்யாணம் ஆனவங்களுக்குன்னு ஸ்பெசலா ரெடி பண்ண சால்வை இருக்கு பாக்குறீங்களா?” என்றபடி ஒரு பெரிய கவரினை எடுத்து டேபிள் மீது வைக்க,

வானதி சற்றே ஆவலாய் தான் பார்த்தாள். அவள் பார்வை உணர்ந்து இளா “ம்ம் காட்டுங்க…” என, அழகிய கை வேலைபாடுகள் நிரம்பிய பல வண்ண ஷால்கள்.

“இன்னிக்குதான் வந்தது…” என்றபடி கடைப் பெண் ஒவ்வொன்றாய் விரித்துக் காட்ட, ஒவ்வொன்றாய் பார்த்தவன், நிறைய வேலைபாடுகள் உள்ளதை விட்டுவிட்டு, ஆங்காங்கே பூக்கள் தெரித்தார் போல இருந்த இளம் ரோஜா நிற ஷால் ஒன்றை எடுத்து “பிடிச்சிருக்கா?” என்றான் வானதியிடம்.

வெகு நேரமாய் வானதிக்கு இந்த ஷால் மீது தான் கண் படிந்தது. இருந்தும் இளம்பரிதி எதை எடுக்கிறான் என்பதை பார்க்கவென்று அவள் அமைதியாகவே நிற்க, அவனும் அதையே எடுத்துக் கேட்டதில் அத்துனை சந்தோசம்.

“ம்ம்ம்…” என்று இரு புருவங்களையும் ஏற்றி இறக்கி சொல்ல,

“இது பேக் பண்ணுங்க…” என்றுவிட்டான்.

அதன்பின் வெறுமெனே கூட மற்ற பொருட்கள் மீது பார்வை திருப்பவில்லை அவன். அவனுக்கு ஏதேனும் வாங்குவானா என்று பார்க்க ம்ம்ஹூம் இளாவிற்கு அப்படியொரு எண்ணமே இல்லையே.

“என்ன நீங்க உங்களுக்கு எதுவும் பார்க்கலையா?”

“என்ன பார்க்கணும்.. வாங்கணும்னா பார்க்கலாம். எதுவும் தோணல…”

“அப்போ இருங்க நான் பாக்குறேன்…” என்று வானதி திரும்ப,

“அதெல்லாம் வேணாம் வா..” என்று அவள் கை பிடித்து இழுத்து நடக்க, “அட ஏன்…” என்றபடி அவனோடு நடந்தாள்.

“ஏன்.. இந்த ஷால்ல எனக்கு நீ இடம் தர மாட்டியா என்ன?!” என்று இளா கேட்க, பதிலேதும் சொல்லாது வானதி அவனது கரத்தினை இறுகப் பற்றிக்கொண்டாள்.

அதுபோலத்தான் இப்போதும். அவனது அணைப்பில் அவனையே இறுகப் பற்றி படுத்திருக்க, அன்றைய நாளும் அவர்களுக்கு இனிமையாய் தான் ஆரம்பித்தது.

ஏற்கனவே சுற்றிப் பார்த்த இடம் என்றாலும், இப்போதும் சுற்ற அவர்களுக்கு அலுக்கவில்லை. அன்றைய தினம் முழுக்க ஊர் சுற்றலும், அறைக்கு வந்து கும்மாளமும் தான். 

பேச்சு, சிரிப்பு, கேலி, கிண்டல், கொஞ்சல் என்று கேட்கவே வேணாம். அதிலும் வானதி தான் அதிகம் பேசினாள். பள்ளி கதை, கல்லூரி கதை என்று தங்கு தடையின்றி அவள் பேச பேச, இளம்பரிதிக்கு மனதில் ஒருவித சங்கடம் கூட லேசாய் ஏற்பட்டுவிட்டது.

‘இப்படி அவ எல்லாமே ஷேர் பண்றா? ஆனா நீ நிறைய விஷயம் மறைச்சு வச்சிருக்கியே…’ என்று தோன்ற, அவன் முகத்தில் தெரிந்த மாறுதல் கண்டு

“என்னாச்சு..?” என்று கேட்டவளிடம்,

“அட அதெல்லாம் இல்ல… நீ சொல்லு…” என்று அவளை ஊக்க, பேச்சும், கொஞ்சலுமாய் அன்றைய இரவும் கழிய இதோ மறுநாளும் விடிந்துபோனது.

இந்த ஒருநாள் மட்டுமே..!

முதல்நாளே சொல்லியிருந்தாள் நாளை சைக்கிளிங் போவோம் என்று. விடிந்ததும் இருவரும் கிளம்பி வந்து, ஆளுக்கு ஒரு சைக்கிள் எடுத்துக்கொண்டு லேக் சுற்றி ஓட்டி வர, ரம்யமாய் இருந்தது.

இளம்பரிதியோ ‘கண்டதையும் போட்டு நீயே உன்னை குழப்பிக்காத இளா. நீ மறைச்ச எதுவும் நீ சம்பந்தப்பட்டது இல்லை.. உன்மேல அதுல எந்தவொரு தப்பும் கூட இல்லை. சொல்லப்போனா நீயே ஏமாத்தப்பட்டு தான் இருக்க.. அதுனால நீ பீல் பண்ணவேண்டியது இல்லை…’ என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டான்.

‘உன் வாழ்க்கை டா… உன் பொண்டாட்டி டா.. சந்தோசமா வாழு…’ என்று உறுப்போட்டவனை அடுத்த ஐந்து நிமிடம் கூட விதி நிம்மதியாய் இருக்க விடவில்லை.

அவனது அலைபேசி விடாது ஒலிக்க, சைக்கிளை நிறுத்துவிட்டு, யாரென்று பார்க்க அழைத்தது தியாகு.

‘இவனா?!!’ என்று பார்வையை சுற்றிலும் ஓட்டினான்.

இங்கேதான் எங்கேனும் இருக்கிறானா என்று..

வானதியும் சைக்கிளை நிறுத்திவிட்டு பார்க்க, விடாது அழைப்பு வந்துகொண்டே இருந்தது.

“எடுத்து பேசுங்க.. அர்ஜன்ட் காலா கூட இருக்கலாம்…” என, வேண்டா வெறுப்பாய் தான் இளா அழைப்பை ஏற்றான்.

காதினில் வைத்ததும் “கொடைக்கானல் வந்திருக்கீங்க.. ஒருவார்த்தை சொல்லலையே…” சற்று கிண்டலாகவே ஒலித்தது தியாகுவின் குரல்.

“ம்ம்ச்.. இப்போ எதுக்கு கால் பண்ணீங்க?!”

“எதுக்குன்னு உங்க புது பொண்டாட்டி முன்னமே சொல்லனுமா என்ன?”

“தியாகு..!” என்று பல்லைக் கடித்தான்.

“எஸ்… தியாகுதான்… உங்களோட பேசணும். நேர்ல…”

“இப்போ அதெல்லாம் முடியாது…”

“முடியும்.. முடியனும்… இல்லன்னா உங்க முன்னாடி நான் நிப்பேன் இப்போவே…” என, இளாவிற்கு புரிந்தது, இங்கேதான் எங்கேயோ நின்றுகொண்டு பேசுகிறான் என்று.

பார்வையை ஓட்டியவன் “ஒருதடவ சொன்னா புரியாதா உங்களுக்கு…”

“புரியலை இளா…” என்றான் தியாகுவும் திடமாய்.

“நம்ம இன்னொரு நாள் மீட் பண்ணலாம் தியாகு. நான் என்னோட பெர்சனல் வொர்க்கா வந்திருக்கேன்…” என்று இளம்பரிதி பொறுமையை இழுத்துப் பிடித்துச் சொல்ல,

“நீங்க மனசு வைச்சா முடியும்… யோசிங்க… இதை இன்னிக்கோட முடிக்கிறதும் இல்லைங்கிறதும்…” என, இளாவிற்கு தியாகுவை உண்டு இல்லை என்று ஆக்கும் வேகம் வந்தது.

வானதியின் முன் நிற்பதால் அவனால் முகத்தினில் கூட எதையும் காட்டிக்கொள்ள முடியவில்லை. அதே நேரம் இந்த தியாகு பிடிவாதமாய் பேச, இங்கிருந்தாலும் சரி, ஊர் சென்றாலும் சரி  நிம்மதியாய் இருந்திடவும் விடமாட்டான் என்பதும் புரிய “ஓகே நான் ரூம் போயிட்டு கால் பண்றேன்…” என,

“ரொம்ப சந்தோசம்… நான் இங்கயே தான் இருப்பேன்…” என்று வைத்துவிட்டான் தியாகு.

இளம்பரிதியின் முகத்தினில் இருந்து எதுவும் கண்டுகொள்ள முடியவில்லை என்றாலும், அவன் பேச்சு சாதாரணமாய் இல்லை என்பது நன்கு புரிந்தது வானதிக்கு. அழைப்பினை ஏற்கவே தயங்கினான் தானே.

“என்னாச்சு?? எப்படியோ பேசினீங்க..?” என்று வினவ,

“ம்ம்ச் ஒண்ணுமில்ல.. தெரிஞ்சவர் ஒருத்தர்.. நம்மள இங்க பார்த்திருப்பார் போல. மீட் பண்ணனும் சொன்னார்.. சொன்னாலும் புரியலை அவருக்கு…” என,

“ஓ..!! அதுல என்ன இருக்கு. ரொம்ப இம்பார்டன்ட் அப்படின்னா வர சொல்லுங்க…” என்றாள்  வானதி இலகுவாய்.

“ரூம் போயிட்டு பேசிக்கலாம் வானதி…” என்றவன் மீண்டும் சைக்கிள் ஏற, அவனிடம் அந்த உற்சாகம் காணாது போனது.

‘என்னடா இது… விடாது இவ்விசயம் துரத்துகிறது…’ என்று.

மேலும் ஒரு அரைமணி கடந்திருக்கும். இருவரும் அறைக்குச் செல்ல, காலை உணவை வானதி தான் ஆர்டர் செய்தாள். இளாவிற்கு மனது ஒரு நிலையாய் இல்லை. முதலில் எதிலும் லயிக்கவும் இல்லை. அவன் எதோ டிஸ்டர்பாக இருப்பது கண்டு வானதி எதுவும் கேட்கவில்லை.

இருந்தும் அவளுக்கும் மனதில் யோசனை. தெரிந்தவர் பேசினால் இப்படி இருந்திட வேண்டுமா?!! இல்லை வேறெதுவுமா?!

அடிக்கடி இளம்பரிதியைப் பார்க்க, அவனோ அதனை கவனிக்கும் நிலையில் இல்லை. எது எப்படி என்றாலும் சரி இன்றோடு இதனை பேசி முடித்திட வேண்டும் அவ்வளவே. இதற்குமேல் இது தொடருமாயின், வானதியின் பொய் சொல்லவும் மனம் வராது. உண்மையை சொல்லிடவும் முடியாது.

‘வரட்டும் பேசிக்கிறேன்…’ என்று எண்ணியவன், காலை உணவு வரவும், இருவரும் சேர்ந்து உண்ண, இளா என்னவோ சாதாரணமாய் இருப்பது போலத்தான் காட்டிக்கொண்டான். இருந்தும் வானதிக்கு இந்த சிறிது நேர மாற்றங்கள் எல்லாம் மனதில் பதிந்து போனது.

அவள் ஒன்றும் பேசாது உண்ண “நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு வானதி.. நான் போய் அவரை மீட் பண்ணிட்டு வந்திடுறேன்…” என,

“ம்ம்ம்…” என்றாள்.

‘என்ன அமைதியாகிவிட்டாய்…’ என்று கேட்பானோ என்று பார்த்தாள், ஆனால் அதெல்லாம் இளா கேட்கும் ரகமில்லையே.

உண்டுவிட்டு இளம்பரிதி எழுந்துகொள்ள, வானதியும் உண்டு முடித்திருக்க, “வந்திடுவேன் கொஞ்ச நேரத்துல…” என்றான்.

“ம்ம்ம்…” என்று அப்போதும் தலையை ஆட்ட, “பார்த்து இரு வானதி…” என்றான் ஒருவித குரலில்.

அவனின் குரல் மாறுபாட்டில் தான் வானதி அவன் முகம் பார்க்க, அவளை தனியே விட்டுச் செல்லும் வருத்தம் அவன் கண்களில் நன்கு தெரிய “அட… என்னைவிட்டு என்னவோ ரொம்ப தூரம் போறதுபோல பீல் பண்றீங்க.. போய்ட்டு ஒரு டென் மினிட்ஸ் ஆகுமா நீங்க வர. அதுக்கேன் இப்படி ஒரு ரியாக்சன்.. போங்க போங்க…” என்று அவனைத் தள்ளினாள்.

“ம்ம் இருந்தாலும் பார்த்து இரு…” என,

“நான் இருந்துப்பேன்…” என்றாள் புன்னகை பூத்தே.

இருந்தும் இளா கிளம்பிய பின்னே, வெறுமையாய் தான் இருந்தது. சற்று அவளுக்கே வியப்பாய் கூட இருந்தது.

யாரிவன்?!

திடீரென யாரோபோல் தன் வாழ்வில் வந்தான்.

இப்போது அவனோடு தான் வாழ்வு என்றாகிவிட்டது..

“ஹ்ம்ம்…!!” என்று ஒரு பெருமூச்சு விட்டவள், கட்டிலில் பொத்தென்று விழுந்தாள்.சந்தோசமாய் இருந்தாலும், மனதின் ஓரத்தில் ஒரு சிறு உறுத்தலும் இருந்தது.

கொடைக்கானலில் ஒரு சிறிய டீ கடைதான். அங்கே தான், தான் இருப்பதாய் தியாகு சொல்ல, இளம்பரிதியும் சென்றான். இவர்கள் தங்கியிருந்த ரிசார்ட்டில் இருந்து நடந்து செல்லும் தூரம் தான்.

“வாங்க வாங்க இளா சார்…” என்றவனின் பேச்சில் கிண்டல் தெரிய,

“ஏன் இப்படி பண்றீங்க..? ஒருதடவ சொன்னா புரியாதா உங்களுக்கு…” என்றான் இளம்பரிதி அப்பட்டமாய் கோபப்பட்டு.

“நானா எதுவும் செய்யலை.. நான் கேட்ட உதவியை நீங்க செஞ்சிருந்தா நானும் என் வேலையைப் பார்த்துட்டு இருந்திருப்பேன்..” என்றவன் “இப்போவும் சொல்றேன்.. உங்களை தொல்லை செய்யனும்னு எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. உங்கமேல தப்பில்லன்னு எனக்கும் தெரியும்…” என்றான் தியாகு.

“அந்த டாக்டர் இப்போ அந்த ஹாஸ்பிட்டல்ல இல்லை…” என்றான் கடுப்பாய் இளா.

“ட்ரீட்மென்ட் சம்மரி இருக்குமே…” என்றான் தியாகு.

“கேட்டுப் பார்த்தாச்சு. அவங்க அப்படியெல்லாம் குடுக்க முடியாது சொல்லிட்டாங்க. இன்னுமொன்னு ஷாலினிய அட்மிட் பண்ணது வெற்றிவேலன் குடும்பத்துல இருந்துன்னு ஹாஸ்பிட்டல்ல நல்லா தெரியும். நம்ம போய் கேட்டாவெல்லாம் சொல்லமாட்டாங்க…”

தியாகுவும் எத்தனையோ முயற்சி செய்துவிட்டு தானே இளாவிடம் உதவி நாடியது. அவனிடமும் இதே பதிலைத் தானே சொன்னார்கள். இளம்பரிதியைப் பார்த்தால் பொய் சொல்பவன் போலவும் இல்லையே. சொல்லப்போனால் உண்மையை ஒத்துக்கொண்டானே. அதுவே அவனின் குணத்தினைக் காட்டியது தியாகுவிற்கு.

சிறிது நேரம் அமைதியாய் இருந்தவன் “ஷாலினி அப்பப்போ சோர்ந்து படுத்துக்கிறா.. மன சோர்வு தாண்டி உடம்புக்கும் ஏதோ முடியலையோன்னு தோணுது.. அதனால தான் இதெல்லாம்…” என,

“நீங்க சொல்றது எனக்குப் புரியாது…” என்றவன், என்ன நினைத்தானோ “கோபியோட அப்பாவைப் பார்க்க, நான் வேணா ஏற்பாடு செய்றேன். என்ன பேசணுமோ நீங்க பேசிக்கோங்க…” என, தியாகுவே இதனை எதிர்பார்க்கவில்லை.

வெற்றிவேலனை சந்திக்க, அவனும் எத்தனை முயன்று பார்த்தான். ம்ம்ஹூம். அவர் மனது வைக்காது அது நடக்காது அல்லவா. ஆனால் தியாகுவிற்கு தெரியவில்லை, மகனை பாதுகாப்பாய் வெளிநாடு அனுப்பிவிட்டு, தியாகுவை சந்திக்க எண்ணியிருந்தார். அது இளம்பரிதிக்குக் கூட தெரியாதே.

‘நிஜமாகவா?!’ என்பதுபோல் தியாகு பார்க்க,

இளாவோ “ஆமா… இதெல்லாம் என்னிக்காவது ஒருநாள் முடிவுக்கு வரணும் இல்லையா.. தெரிஞ்சோ தெரியாமலோ காலம் என்னை இந்த பிரச்சனைக்குள்ள திரும்ப திரும்ப இழுக்குது. ஆனா இதை இப்படியே இழுத்தடிக்க நான் விரும்பலை. முடிக்கணும்னு நினைக்கிறேன்.

எல்லாருக்கும் அவங்கவங்க வாழ்க்கை ரொம்ப முக்கியம். உங்க மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியலை. ஆனா அவரைப் பார்க்க நான் ஏற்பாடு செய்றேன். அதுக்குன்னு கொஞ்சம் நேரம் எடுக்கும். உடனே முடியாது. உறுதியா சொல்றேன் இதை என்னால செய்ய முடியும். அதுவரைக்கும் நீங்க பொறுமையா இருக்கணும்…” என, 

இளம்பரிதியின் சொற்களை நம்பிடவே முடிந்தது தியாகுவினால்.

“ம்ம்ம்…”

“அப்புறம்… ஷாலினி… அவங்கக்கிட்ட இதைப் பத்தி நீங்க பேச முடிஞ்சா, என்னோட தரப்பு விசயங்களையும் சொல்லிடுங்க…” என்றான் இளா.

“அதை நீங்களே சொல்லலாமே…”

“இல்ல வேண்டாம். என்னைப் பார்த்தா, அவங்களுக்கு அந்த ஹாஸ்பிட்டல் நாட்கள் தான் நியாபகம் வரும். வேண்டாம். சங்கடமா பீல் பண்ணுவாங்க… முடிஞ்சா நீங்க சொல்லுங்க. இல்லையா அதுவும் வேண்டாம்…” என்றவன் அவ்வளோதானே என்று பார்க்க,

“உங்களோட போன் காலுக்கு வெய்ட் பண்ணிட்டு இருப்பேன்…” என்றான் இளா தன்மையாகவே.

“அதுக்காக என்கிட்டே இப்படி மிரட்டலா எல்லாம் பேசக்கூடாது…” என்றவனிடம் கண்டிப்புத் தெரிய,

“பேச வேண்டிய சூழ்நிலை. பட் இப்போ நீங்க சொல்றதை நம்பி வெய்ட் பண்றேன்…” என்றான் தியாகுவும்.

Advertisement