Advertisement

அத்தியாயம் – 23

மறுநாளே விஜயனும், மோகனாவும் ஜிங்கிள்ஸ்கான புதிய இடத்தினை பார்த்துவிட்டு வர, ஒரு நல்ல நாள் பார்த்து முன் பணம் கொடுத்து பேசி முடித்துவிடலாம் என்று முடிவானது.

வானதிக்கும் சரி, இளம்பரிதிக்கும் சரி மனதிலும் உடலிலும் ஒரு புதிய உற்சாகம் தோன்ற, கிடைக்கும் தனிமைகளை எல்லாம் தங்களுக்கு ஏற்ற வகையில் ரசித்துக்கொண்டு இருக்க,  வானதியோ “நம்ம எங்க போலாம்…” என்றாள்.

முதலில் அவனுக்குப் புரியவில்லை. ஹனிமூன் என்ற ஒன்றை பற்றியெல்லாம் இளா இதுவரைக்கும் யோசிக்கக் கூட இல்லை.

“எங்க?” என்று புரியாது கேட்க,

“அட அப்போ என்னை எங்கயும் கூட்டிட்டு போக மாட்டீங்களா?” என்றாள் இடுப்பினில் கை வைத்து.

அவள் நின்ற விதமும், கேட்ட தோரணையும் அவனை அவள்பால் இழுக்க, இடுப்பினில் இருந்த கரத்தினை எடுத்து அவன் தோள் மீது போட்டுக்கொண்டவன், அவள் இடை தன் கரம் கொண்டு சுற்றி அணைத்து “எங்க கூட்டிட்டு போறது?” என்றான்.

“ஹனிமூன்னு ஒன்னு நியாபகம் இருக்கா??” என்றவளுக்கு இப்படி பகல் பொழுதில் அவனோடு உரசி நிற்பது ஒருமாதிரி லஜ்ஜையாய் இருந்தது.

லேசாய் நெளிந்தபடி தான் நின்றாள்..!

“ஓ..!! ஹனிமூனா..?!!”

“என்ன? அதெல்லாம் யோசிக்கக் கூட இல்லை போல…” என்றவள் “சொல்லுங்க எங்க போலாம்…” என,

அதன்பின்னே தான் அவனுமே யோசிக்கத் தொடங்க “பாஸ்போர்ட் இருக்கா உங்கக்கிட்ட..?” என்றாள்.

“இருக்கு… இருக்கு… ஆனா அது எதுக்கு இப்போ?” என்றவனுக்கு எங்கே இவள் வெளிநாடு அது இதென்று கிளம்புவாளோ என்று தோன்றியது.

அவளுக்கு அதெல்லாம் சாதாரணம். ஆனால் அவனுக்கு அதெல்லாம் கணக்கிட்டு, யோசித்து செயல்பட வேண்டிய ஒன்று அல்லவா?

“ம்ம்ம்ம்…” என்று யோசித்தவள், அவன் முகம் பார்த்து என்ன உணர்ந்தாளோ, “சரி அது ஒருப்பக்கம் இருக்கட்டும்.. நம்ம கொடைக்கானல் போலாம்…” என்றாள்.

கொடைக்கானல் என்றதுமே இளம்பரிதிக்கு ஷாலினி மற்றும் தியாகுவின் நியாபகம் தான் வர, அவனுக்கு அங்கே செல்ல அத்துனை ஒன்றும் மனது ஒப்பவில்லை.

“ம்ம்ம்…” என்று யோசித்தவன் “கொடைக்கானல் நீயும் பார்த்தது இல்லையா இல்லை நானும் பார்த்தது இல்லையா?” என்றான்.

“வேற போகலாம்தான்.. வர வியாழன் விருந்துக்கு போகணும்.. நடுவில இன்னும் அஞ்சு நாள் இருக்கே… சோ ஒரு ஷார்ட் ட்ரிப்…” என்று அசல்ட்டாய் தோள்களை குலுக்கி வானதி அவனிடம் கேட்க, அவள் கண்களில் தெரிந்த ஆசையைக் கண்டு அவனால் மறுக்கவே முடியவில்லை.

யாரோ சிலருக்காக என் மனைவியின் ஆசையை நான் நிராகரிக்க வேண்டுமா?!!!

நினைக்கையில் அவனுக்குமே ஆசையாய் தான் இருந்தது…!

“சரி நீயே ப்ளான் பண்ணு…” என,

“நிஜமா?!!” என்றாள் அவலாய்.

“ம்ம்…”

“ஓகே… இன்னும் கொஞ்ச நேரத்துல சொல்றேன்….” என்றவள் அவனின் கரம் விலக்க,  “இப்படி இருந்துட்டே சொல்லலாம்…” என்றான் சலுகையாய்.

“நோ நோ… நீங்க என்னை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது… சோ நீங்க இப்போ வெளிய கிளம்புங்க…” என்று புன்னகைத்தபடி அறையின் வாசலை நோக்கி கை கட்ட,

“அடப்பாவி….” என்றபடிதான் கிளம்பிச் சென்றான் இளம்பரிதி.

வானதிக்கு பெரிதாய் யோசிக்க எதுவுமில்லை. அலைபேசியில் சில நிமிடங்கள் அவ்வளவே. புதுமண தம்பதிகளுக்கு என்றே பெயர்போன ரிசார்ட் ஒன்றில் மூன்று நாட்களுக்கு அறைகள் புக் செய்துவிட்டுத் தான் இளாவிற்கு அழைத்துச் சொல்ல,

“அதுக்குள்ளயா..??!!” என்றான் சற்றே வியப்போடு.

“சிலது எல்லாம் டிலே பண்ணக் கூடாது…”

“ம்ம் நீ செம பாஸ்ட்…” என்று அவன் அழுத்திச் சொல்ல,

“யாராவது ஒருத்தர் அப்படி இருக்கணுமே…” என்றாள் கிண்டலாய்.

“ஏய்..!! பார்த்தியா நீ… எனக்கே திருப்புற…”

“உங்களுக்கு மட்டும் தான் திருப்ப முடியும்…” என்றவள் “நாளைக்கு மார்னிங் டிபன் முடிச்சிட்டு கிளம்புறோம்…” என,

“அதை அப்படியே எங்கம்மா அங்கதானே இருக்காங்க… அவங்கட்ட சொல்லிடு..” என்றான் நமட்டு சிரிப்போடு.

“எது??!! நானா… நோ நோ நோ…”

“நீதானே அரேஞ் பண்ற.. சோ நீதான் சொல்லணும்.. எனக்கு ஒன்னும் தெரியாதுப்பா…”

“இது.. இதெல்லாம் நான் எப்படி சொல்ல முடியும்?” என்றவளுக்கு நிஜமாகவே தயக்கம்.                          

“நீதான் சொல்லணும். என்கிட்டே சொன்ன தானே.. அப்போ எங்கம்மாட்டயும் சொல்லு.. எனக்கெல்லாம் கூச்சமா இருக்கு…” என்றான் வேண்டுமென்றே.

“இதெல்லாம் டூ மச்…” என்றவளுக்கு நிஜமாகவே டென்சன் ஆகிவிட்டது.

“நீ மெதுவா ஆரம்பிச்சு வை.. நான் வந்து முடிச்சிக்கிறேன்…” என்றவன் அலைபேசியை வைத்துவிட, வானதி திரு திருவென முழித்துத் தான் நின்றாள்.

இதேது அவளின் வீடேனில் “நாங்க ட்ரிப் போறோம்…” என்று சர்வ சாதாரணமாய் சொல்லியிருப்பாள்.

இங்கே எப்படி ஆரம்பிக்க, என்று யோசிக்க மோகனாவே “வானதி…” என்று அழைக்க, வேகமாய் சென்றாள்.

“என்னம்மா வேலையா இருந்தியா.. ஆளவே காணோம்…” என,

“இல்லத்தை அது…” என்றவள் யோசிக்க “அ.. அது.. நானும் அவரும் வெளிய…” எனும் முன்னே,

“அவன் அப்போவே வெளிய போயிட்டானே…” என்றார்.

“அதில்ல… நாளைக்கு.. நாங்க வெளிய போலாம்னு…” என, 

“அதுக்கென்ன தாராளமா போயிட்டு வாங்க…” என்றார்.

‘ஓ..! காட்…’ என்று  நொந்தவள் “அத்தை நாங்க நாளைக்கு கொடைக்கானல் போலாம்னு இருக்கோம்…” என்று ஒரே மூச்சில் சொல்லிவிட,

“கொடைக்கானலா?!!” என்று அவளை ஒரு நொடிப் பார்த்தார்.

“ம்ம்… இப்போதான் ரூம் புக் பண்ணேன்… அவருக்கே அப்புறம்தான் சொன்னேன். உங்கட்ட சொல்ல சொன்னார்…” என்று எதார்த்தமாய் சொல்ல,

‘ஏன் அதை அவன் சொல்லமாட்டானா?!!’ என்று கேட்கத் தோன்றினாலும், மோகனா அதனை அப்படியே விழுங்கிவிட்டார்.

பெரிய இடத்தில் இருந்து மருமகளாய் வந்தவள், அவளுக்கு இதெல்லாம் சகஜம்.. கொடைக்கானல் எல்லாம் அவளுக்கு மிக மிக சாதாரணம். இதனை நாம் பெரிது செய்யக் கூடாது என்று நினைத்தவர் “சரிம்மா.. நல்லபடியா போயிட்டு வாங்க…” என்று முடித்துவிட்டார்.

அதற்குமேல் ஒரு கேள்வி கூட கேட்டிடவில்லை. எதுவும் சொல்லவும் இல்லை. வானதி தான் அவர் முகத்தைப் முகத்தைப் பார்க்க, “அதெல்லாம் சரி நம்ம இடம் வாங்கப் போறது உங்க வீட்ல சொன்னியாம்மா..?” என்றார்.

“இல்லையே…”

“சொல்லனுமா இல்லையா?!”

‘ஓ..!! சொல்லனுமா?!!’ என்று யோசித்தவள் “வாங்கின பிறகு சொல்லிக்கலாம்னு இருந்தேன்..” என,

“முன்னமே ஒரு வார்த்தை சொல்றது தான் மரியாதை…” என்று மோகனா சொல்லவும், சரி என்றவள், இளாவிற்கு அழைத்து மோகனாவிடம் பேசியதை சொல்ல “வேற எதுவுமே அம்மா கேட்கலையா?” என்றான்.

“ம்ம்ஹூம்…”

அவனுக்குப் புரிந்தது, வானதி மிக எதார்த்தமாய் இதனை சொல்லியிருப்பாள் என்று. மோகனா அதனை அப்படி எடுத்திருக்க முடியாது, அவளிடம் காட்டவும் முடியாது அமைதியாகி இருப்பார் என்று. சிறிது யோசித்தவன், அப்பாவிடம் சொல்ல,

“அதுக்கென்னடா போயிட்டு வாங்க…” என்றார்.

“இல்லப்பா.. திடீர்னு வானதி சொல்லவும், வேணாம் சொல்லவும் முடியலை..”

“அடடா.. இதுல என்ன இருக்கு.. எல்லாரும் இப்போ போறது தானே…” என்றவர் “நல்லவேள மருமக கொடைக்கானல் போதும்னு இப்போ சொல்லுச்சே…” என்று மகனைப் பார்த்து சிரிக்க,

“எடுத்ததுமே பாஸ்போர்ட் இருக்கான்னு தான் கேட்டா…” என்றான் அவனும் சிரித்து.

அப்பாவினோடு இப்படி சிரித்து பேசி எல்லாம் வெகு நாட்கள் ஆனது..! இப்போது தான் இளம்பரிதி கடைக்கு வர ஆரம்பித்த பிறகு தான் இப்படியான சுமுக பேச்சுக்களே.

“ஹா ஹா…” என்று சிரித்தவர் “வானதி பிறந்து வளர்ந்தது எல்லாமே வேற… நம்ம இறங்கி வான்னு சொல்லவே முடியாது.. போக போக அந்த பொண்ணே புரிஞ்சு நடக்கும். அதுவரைக்கும் நம்மதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்…” என்றவர் மகன் முகம் பார்த்து “அம்மாக்கிட்ட நான் சொல்லிக்கிறேன்..” என,

‘தேங்க்ஸ் பா…’ என்று சொல்லவில்லை. அதனை பார்வையில் காட்டினான் இளம்பரிதி.

“டேய் டேய்… உன்னோட வயசு தாண்டி தான் நாங்களும் வர்றோம்… ஆகா வேண்டிய வேலையைப் பாரு…” என, அதன்பின்னே தான் அவனுக்கு மனது நிம்மதி.            

வானதி புதிதாய் இடம் வாங்குவது பற்றி  தன் அம்மாவிடம் சொல்ல,

ராதாவோ சும்மா இறாது “ஏன் வானதி… முன்னாடியே அண்ணன் கிட்ட சொல்லியிருந்தா வேற ஏற்பாடு செஞ்சிருப்பான்ல…” என,

“ஏன்மா இதனால என்ன??” என்றாள்.

“இல்ல அவங்களுக்கு செலவு தானே…”

“அதெல்லாம் பார்த்துக்கலாம்னு இவர் சொல்லிட்டார் ம்மா.. ஏற்கனவே இடம் வாங்கனும்னு இருந்திருப்பாங்க போல…” என, ராதாவிற்கோ மகளுக்கு இதை எல்லாம் தாங்கள் யோசித்து செய்திருக்கவேண்டும் என்று எண்ணம் போனது.

முன்னே அருணோடு தானே திருமணம், ஆக பணம் வசதி பற்றி எவ்வித பிரச்சனையும் இல்லை. அதனால் இதை பற்றிய யோசனை எல்லாம் இல்லவே இல்லை. இளாவின் வீடு அப்படியில்லையே.

நடுத்தர குடும்பத்தைக் காட்டிலும் சற்று மேலே. அவ்வளோதானே. அப்படியிருக்கையில் என்று யோசிக்க, கதிர்வேலனிடம் இதனை ராதா சொல்ல,

“ஆமாம்மா.. இதெல்லாம் நம்ம யோசிக்கலை பாருங்க…” என்றவன்,

“ம்மா வானதிக்கு அப்பா வாங்கினது, அது போக புதுசா வாங்கின தோட்டம், திண்டுக்கல்ல ஒரு காம்ப்ளக்ஸ் இருக்கே அதெல்லாம் அவ பேருக்கு மாத்தி குடுத்திடலாம்.. நானே யோசிச்சு செஞ்சிருக்கணும். கல்யாண டென்சனே ரொம்ப இருந்ததுனால எதுவும் செய்ய முடியலை…” என,

இதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பிருந்தாவோ “எது செய்றதுக்கு முன்னாடியும் வானதிக்கிட்ட ஒருவார்த்தை கேட்டுக்கோங்க… ஏன்னா இதுனால அவளுக்கும் இளாவுக்கும் நடுவில பிரச்சனை வந்திடக் கூடாது. அவன் ரொம்ப ரோசம் பார்ப்பான்..” என்றாள் சரியாய் யூகித்து.

“இதுல என்ன இருக்கு பிருந்தா.. நம்ம கல்யாணம் முடிஞ்சதும் உனக்குக் கூடத்தான் உங்கப்பா இப்படி பண்ணார். இதெல்லாம் வழக்கம்னு சொல்லிக்கலாம்…” என்றான் கதிர்வேலன்.

அவனுக்கு பிருந்தா சொன்னதின் உள்ளர்த்தம் புரியவில்லை போலும். கணவனிடம் இதனை பேசி பிரயோஜனம் இல்லை என்று நினைத்து, அவன் வெளியே கிளம்பவும்,   ராதாவிடம் “அத்தை சில விசயங்கள்ல இளா ரொம்ப சென்சிடிவ். நம்ம நினைக்கிறது போல எல்லாம் இல்லை…” என,

“சரிம்மா பேசிக்கலாம் விடு…” என்றுவிட்டார்.

மேல்தட்டு ஆட்களுக்கு, சில விஷயங்கள் எடுத்துச் சொன்னாலும் கூட புரியாது என்பது நிஜமே!!

பிருந்தா இளாவை நன்கு அறிந்தவள் ஆகிற்றே. விருந்துக்கு அம்மா வீடு செல்கையில் இதனைப் பற்றி வானதியிடம் பேசிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

இப்படி ஆளாளுக்கு ஒன்று நினைக்க, கொடைக்கானலில் தியாகுவின் மனதோ தனது தங்கை ஷாலினிக்கு நல்லதொரு வாழ்வு அமைத்துக் கொடுக்கும் வரைக்கும் ஓயாது, உறங்காது உழண்டு கொண்டே இருக்கும்.  

எப்படியாவது ஷாலினியின் மனதினை மாற்றி அவளுக்கு என்று ஒரு வாழ்வு அமைத்துக் கொடுத்திடவே அவன் நினைக்க, மனது இன்னொரு புறம் அந்த கோபியையும் அவன் அப்பாவையும் சும்மா விடுவதா என்று எண்ணியது?

ஷாலினி மருத்துவமனையில் இருந்த தருணங்களில் அவளின் மனது எப்படி பயந்திருக்கும்? என்னென்ன நினைத்தாளோ?! நல்லவேளை உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவு எல்லாம் எதுவும் அவள் போகவில்லை.

அப்படி ஒன்று நடந்துவிடக் கூடாது என்றுதானே அவளோடு உடன் இருந்து கவனிக்க என்று ஒரு பெண்மணியை ஏற்பாடு செய்திருந்தார் வெற்றிவேலன்.

தியாகுவிற்கு எப்படியாவது வெற்றிவேலனை நேரில் சந்தித்து பேசிட வேண்டும் என்ற வெறியே கிளம்பியது. அவன் விசாரித்த வரையில் கோபியை வெளிநாட்டிற்கு அனுப்பும் வேலையில் அவர் இருக்கிறார் என்பது தெரிய, கோபம் தலைக்கு ஏறியது.

“பண்றது எல்லாம் பண்ணிட்டு.. என் தங்கச்சிய இப்படி உக்கார வச்சிட்டு மகனை பாதுகாக்க வெளிநாடு அனுப்புறானாம்…” என்று தன் அம்மாவிடம் தியாகு பேசிக்கொண்டு இருக்க அது ஷாலினியின் செவியிலும் விழுந்து வைத்தது.

யாரைப் பற்றி பேசுகிறார்கள் என்பது புரிய “ண்ணா ப்ளீஸ் இதை நீ விடவே மாட்டியா?” என்றாள் கண்ணீரோடு.

“எப்படி விட சொல்ற?! சரியான காரணம் இருக்கா உன்கிட்ட?! சொல்லு ஷாலினி. ஏன் உனக்கு கோவமே வரலையா?!” என,

“என்னை யாரும் நம்ப வச்சு ஏமாத்தலையே…” என்றாள் மனதில் இருந்த வேதனை மறைத்து.

“அதுக்கு..!! உனக்கு குடும்பம்னு நாங்க இருக்கோமே.. உன்னை எங்கக்கிட்ட தானே ஒப்படைச்சு இருக்கணும். யாருமே இல்லாதவ போல அவங்களா எல்லாம் பண்ணி அனுப்பிட்டா சரியாகிடுமா?! உனக்கு ஏதாவது ஆகியிருந்தா சொல்லு ஷாலினி சொல்லு…” என்று பேச பேச அவனின் சத்தம் கூடியது.

இருவரையும் பெற்ற அன்னைக்கோ மனதோடு சேர்த்து பெற்ற வயிறும் தீயாய் தகிக்க “ஏன் டி உனக்கு இப்படி ஒரு புத்தி…” என்று மகளை ஆற்றாமையோடு கேட்க,

“ம்மா…!!” என்றாள் விசும்பலாய்.

“அம்மா தான்.. அம்மாவேதான்.. ஆனா நான் உன்னை இப்படி வளர்க்கலையே…”

“கோபிக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சும் அவரோட பழகினது என்னோட தப்புதானே…” என்றாள் தலை குனிந்து ஷாலினி.

“தப்புதான். உன்னோட தப்புதான்.. ஆனா நீ மட்டுமே இதுல தப்பில்ல.. கோபி என்ன விலகியா போனான். இல்லையே.. அப்போ தண்டனை ஏன்  உனக்கு மட்டும். அவன் குடும்பமா சந்தோசமா தானே இருக்கான். அதை பார்த்துட்டு என்னை சும்மா இருக்க சொல்றியா?” என்று தியாகு எகிற,

“வேண்டாம்ணா… கோபத்தை விட்டிட்டு… நாம நம்ம வாழ்கையை பார்த்துட்டு இருக்கலாம். ப்ளீஸ். திரும்ப அவங்களைப் பத்தின பேச்சு கூட எனக்கு பேசவோ, கேட்கவோ பிடிக்கலை..” என்றாள் ஷாலினியும் பிடிவாதமாய்.

“அப்போ இதுல நீ தலையிடாத… எதுன்னாலும் நான் பார்த்துக்கிறேன்…”

நிர்தாட்சன்யமாய் ஒலித்தது தியாகுவின் குரல்..!!

“அண்ணா ப்ளீஸ். அவங்க பெரிய இடம்.. பெரிய ஆளுங்க… உன்னை.. உன்னை அப்புறம் சும்மா விடமாட்டாங்க..” என்றவளுக்கு மன்றாட மட்டுமே முடிந்தது.

“அதெல்லாம் அப்போ ஷாலினி… இப்போ அவங்கனால எதுவும் முடியாது. அதனால தான் பயந்துட்டு பையனை பாரின் அனுப்புறார் அந்த பெரிய மனுசன்…” என்றான் நக்கலாக.

“என்னவோ பண்ணட்டுமே… நீ அருணுக்கு இப்படி பண்ணதே போதும்… அதுவே பெரிய பாவம்…”

“அப்போ உனக்கு அவங்க பண்ணது??!” என்று நேர்கொண்டு கேட்ட தியாகுவின் பார்வையை ஷாலினியால் எதிர்கொள்ள முடியவில்லை.

“என்ன அமைதியாகிட்ட… உன்னோட தப்பு நீ உணர்ந்துட்ட சரி.. ஆனா அவங்க உணர்ற மாதிரி தெரியலை…”

“உணர்ந்ததுனால தானேண்ணா பயந்துட்டு இருக்காங்க.. பண்ணது தப்புன்னு புரிஞ்சதுனால தானே ண்ணா, நீ எதுவும் செஞ்சிடுவியோன்னு நினைக்கிறாங்க…” என்ற தங்கையின் பதில் கேட்டு தியாகு சில நொடிகள் வாயடைத்துப் போனான்.

பதில் சொல்ல முடியவில்லை..!

ஆனால் நிஜமும் அதுதானே..!

“என்ன ஷாலினி அண்ணன் பேசுறதுக்கு பதிலுக்கு பதில் பேசிட்டு இருக்க…” என்று அம்மா அதட்ட,

“உண்மையை தானம்மா சொன்னேன்…” என்றாள்.

“அதுக்காக?!!”

“ம்மா உனக்கும் புரியலையா?! அண்ணனுக்கு ஏதாவது ஒண்ணுன்னா அதை கொஞ்சம் யோசி. அதைவிட்டு நீயும் தூண்டிவிடாத…” என்றவள்,

தியாகுவிடம் “எனக்கும் அம்மாக்கும் நீ மட்டும் தான். அதை கொஞ்சம் நீ மனசுல வச்சு நடந்துக்கோ.. பழி வாங்கனும்னு கிளம்பினா, கண்டிப்பா இந்த உலகத்துல யாருமே இருக்க முடியாது. யாரோ ஒருத்தருக்கு நம்மளும் கூட நமக்கே தெரியாம கெட்டது செஞ்சிருப்போம்.. அப்போ நம்மளையும் யாரோ பழி வாங்கனும்னு கிளம்பி வந்தா என்ன செய்வ அண்ணா…?” என,

தியாகு நின்று நிதானமாய் ஷாலினி முகம் பார்த்தவன் “இவ்வளோ பேசுறியே நீ… இப்போ கூட அந்த கோபிய காப்பாத்த மட்டும் தான் இதெல்லாம் பேசுற. மனசார நீ இதுல இருந்து வெளிய வரணும்.. இல்ல வந்துட்ட அப்படின்னா கண்டிப்பா நான் சொல்றதுக்கு சரின்னு தான் சொல்வ…” என்றான் அழுத்தம் திருத்தமாய்.

அண்ணன் என்ன சொல்வான் என்று தெரியாதா என்ன?!

மாப்பிள்ளை பார்க்கிறேன் என்பான்..

திருமணம் செய் என்பான்…

அதற்கு சம்மதம் சொல்ல, இப்போது வரைக்கும் அவளுக்கு மனது ஒப்பவில்லை.

தியாகு கேட்பதற்கு பதிலும் சொல்ல முடியவில்லை. விளைவு, மௌனமாய் அவன் முகம் பார்த்தவள் “ப்ளீஸ் ண்ணா…” என,

“நீ மாறாம நானும் என் முடிவை மாத்தப் போறது இல்லை…” என்றான் உறுதியாய்.

Advertisement