Advertisement

அத்தியாயம் – 22

அழகிய சங்கமம்…!

இருவருக்கும் இடையில் அனைத்தும் அப்படியே தான் இருந்தது. பேசிக்கொள்ள வேண்டியதும் தெரிந்துகொள்ள வேண்டியதும் நிறையவே இருந்தது. இருந்தாலும் வாழ்வின் அடுத்த கட்டம், இந்நிலை என்பது பல விசயங்களுக்கு பதிலை கொடுத்துவிட்டதாகவே தான் இருவரும் நினைத்தனர்.

உறக்கம் என்பது வெகு நேரம் கழித்தே என்றாலும், உறங்கியதும் வெகு சிறு நேரமே.. விழிப்பு வந்துவிட, இளம்பரிதியின் கை அணைப்பில் தான் வானதி படுத்திருந்தாள்.

இளாவின் மனதில் என்ன எண்ணவோட்டங்களோ, நிமிடத்திற்கு ஒரு முறை வானதியின் உச்சியில் இதழ் பதிக்க, அவளோ அவனின் ஒவ்வொரு முத்தத்திற்கும் அவன் மார்பில் மேலும் மேலும் முகம் புதைத்துக் கொண்டு இருந்தாள்.

“நதி…!!” என்று அழைத்தவனின் குரல், இதற்கு முன் அவள் கேட்டிராத அவனின் குரல்.

முன்னிரவில் அவன் அழைத்தமைக்கு எல்லாம் அவளின் பதில்கள் வேறாகவே இருந்தது. அவளின் பதில்கள் அனைத்திற்கும் அவனின் தேடல் ஒவ்வொருமுறையும் தொடங்க, முடிவு என்பது இல்லையோ என்றுதான் இருவரும் எண்ணினர்.

ஆசையாய்… ஆர்வமாய்.. ஆவலாய்.. காதலாய்… என்று இருவரின் உறவும் அடுத்த கட்டம் செல்ல, இதோ இப்போதும் அவனின் அழைப்பு கேட்டு அவளுக்கு முகம் புதைக்கவே தோன்ற “என்ன நீ பாக்கவே மாட்டேங்கிற…” என்றான் வேண்டுமென்றே குறைபட்டு.

“ம்ம்ம்…”

“இப்போக்கூட பார்க்கலன்னா எப்படி…?”

“பார்க்கிற மாதிரி நீங்களும் இல்லை நானும் இல்லை…” என்றவளின் சொற்கள் மிக மிக மெதுவாய் கேட்க,

“எனக்குக் கேட்கல…” என்றான் வேண்டுமென்றே..

“பரவாயில்லை…” லேசாய் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, இதழ் புன்னகையில் விரிந்து, இமைகள் மூடி ஒரு ஏகாந்த உணர்வோடு படுத்திருந்தான் இளம்பரிதி.

அவளின் அசைவு கண்டு, அவள் தன்னைப் பார்க்கிறாள் என்பது புரிந்தே தான் இளா கண்களை மூடியிருந்தான்.

“இப்போ நீங்களும் தான் என்னைப் பார்க்கலை…”

நகைப்பினூடே “இதோ பார்த்துட்டேன்…” என்று அவளை நேராய்க் காண,

“நீங்க இருக்கீங்களே…” என்றபடி தலையணையில் தலை வைக்க,

“எப்படி இருக்கேன்னு சொல்லவே இல்லை..” என்றான் இளம்பரிதி.

“அடடா..!!! ரொம்ப மோசம் நீங்க…” என்றவள் போர்வையை இழுத்துப் போத்தி படுத்துக்கொள்ள, இளா இன்னும் சத்தமாய் சிரித்தபடி அதே போர்வைக்குள் நுழைந்து கொண்டான்.

பொழுது விடிந்து, எப்போதும் இளம்பரிதி எழுந்து வரும் நேரம் தாண்டியும் அவன் வராது போக, வானதி தான் அவனுக்கு முன்னே குளித்து அறை விட்டு வெளி வந்திருந்தாள்.  மோகனா மருமகளின் முகம் பார்த்தவர், ஒன்றும் கேட்கவில்லை.

“உனக்கும் அவனுக்கும் டீ எடுத்துட்டு போம்மா…” என,

“அவர் இன்னும் எழுந்துக்கவே இல்லை…” என்று வானதி சொல்ல,

“ஓ..!!” என்றவர் “இளா அங்க மறுபடியும் போறது உனக்கு பிடிக்கலையா?” என்றார்.

கேட்க கூடாது என்றுதான் எண்ணினார். இருந்தும் அவரது வாய் சும்மா இருக்கவில்லை.

‘இவங்களுக்கு எப்படி தெரியும்…’ என்று பார்த்தவள் “பிடிக்கலன்னு இல்ல.. முன்னாடி வேற.. இப்போ வேற இல்லையா.. இவர் கடை பார்த்துக்கிட்டாலே போதுமே…”

“அதுவும் சரிதான் இருந்தும். அவங்க உதவின்னு தானே கேட்கிறாங்க… எல்லாருமே இளாவ அவங்க வீட்டு பையன் போலத்தான் நினைக்கிறாங்க… அருண் நல்லாகிட்டா அப்புறம் எல்லாம் சரியாகிடும்…”

மோகனாவிற்கு, இதனால் கணவன் மனைவி இருவருக்குள்ளும் பிரச்சனை வந்திடக் கூடாது என்று மருமகளை சமாதானம் செய்யும் விதமாய் பேச, “அதான் கோபி இருக்காங்களே…” என்ற வானதி,

“அத்தை…” என்று அவரின் தோளில் கை வைத்து, “இவர் இல்லைன்னாலும் அங்க எல்லாம் செய்றதுக்கு ஆள் இருக்காங்க. நம்ம சொன்னா கேட்டுப்பாங்க அப்படின்னு தான் இவரை கூப்பிடுறாங்க. எப்பவுமே எங்கயுமே யார் இருந்தாலும், இல்லைன்னாலும் நடக்க வேண்டியது நடந்துதான் ஆகும். அதனால நம்ம ரொம்ப எல்லாம் யோசிக்க வேண்டாம்…” என்று பொறுமையாகவே சொல்லிவிட்டு டீ பருக,

அதற்குமேல் மோகனாவினால் தான் எதுவும் சொல்ல முடியாது போயிற்று.  அவருக்கு மற்ற விஷயங்கள் எல்லாம் தெரியாது தானே. தெரிந்தால் வெற்றிவேலனை முகத்திற்கு நேரே கேள்வி கேட்கும் தைரியம் அவருக்குண்டு.

இவர்களின் பேச்சு சமையல் அறையில் கேட்டுக்கொண்டு இருக்க, இளா சத்தமில்லாது ஹாலில் வந்து அமர்ந்திருந்தான்.

வானதி டீ குடித்துக்கொண்டு வெளி வந்தவள், அவனைக் கண்டதும், நொடிப் பொழுது நின்றுவிட்டு பின் மீண்டும் சமையல் அறை வந்து அவனுக்கும் டீ எடுத்து வர, அமைதியாய் வாங்கிக்கொண்டான்.

அம்மாவும் மனைவியும் பேசியது எல்லாம் அவனுக்கும் கேட்டது. வானதி அவளின் முடிவினில் உறுதியாய் இருக்கிறாள் என்பதும் புரிந்தது. இதற்கு மேலே மீறி அவன் அங்கே வேலைக்கு என்று சென்றால் வானதிக்கு அது பெருத்த ஏமாற்றம் கொடுக்கும் என்று நினைத்தவன், நேரம் பார்த்தான், வெற்றிவேலன் இந்நேரம் நடைபயிற்சியில் இருப்பார் என்பது தெரியும்.

அவருக்கு அழைக்கவுமே “என்ன இளா? எப்போ வர..” என்றுதான் முதலில் கேட்டார்.

“இல்லை அது சரிபட்டு வரும்னு தோணலை…”

“ஏன் இளா?!” என்றவருக்கு பெருத்த அதிர்ச்சி.

அவன் உதவி என்று கேட்டால் கண்டிப்பாக வருவான் என்று தெரியும் என்றுதான் வெற்றிவேலன் அந்த வார்த்தையை தூண்டிலாய் போட்டது. அதாவது அருண் சரியாகும் வரைக்கும் என்று சொன்னால் இன்னும் அவனது மனது இலகும் என்றுதான் எண்ணி பேசினார்.அவரது மன வருத்தம் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், இருந்தும் இளாவை வரவைப்பது எப்படி என்று யோசித்தவருக்கு இந்த வழி தான் கிடைத்தது.

அவன் வந்திடுவான் என்று நம்பிக்கையாய் இருக்க, இளம்பரிதியோ இப்படி சொல்ல, அதிர்ச்சி தான் அம்மனிதருக்கு.

“இல்ல.. இதுக்கு முன்ன வேற இப்போ வேற.. ஆனா நீங்க உதவின்னு சொன்னதுனால ஒரு விஷயம் என்னால செய்ய முடியும். ரொம்ப முக்கியமான விஷயம், அதாவது வெளியாளுங்கக்கிட்ட கொடுத்திட முடியாதுன்னு நீங்க நினைக்கிறது. அதை வேணும்னா, அதுவும் என் மனசுக்கு சரின்னு பட்டுச்சுன்னா, நான் கண்டிப்பா செஞ்சு தர்றேன்…” என்று எதிரில் இருப்பவர் மறுத்திடவே முடியாத குரலில் இளம்பரிதி சொல்ல,

இதனைக் கேட்டுக்கொண்டிருந்த வெற்றிவேலனுக்கு அதற்குமேல் என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை. இதற்குமேலே இறங்கிப் போய் பேசவும் அவருக்குத் தெரியாதே. ஒருவித ஏமாற்றத்தோடு “ம்ம் சரிப்பா…” என்றுவிட்டார்.

இளா பேச்சினை வானதியும் கேட்டுக்கொண்டு தானே இருந்தாள். கண்களில் ஒரு மெச்சுதல் பார்வையோடு அவனை கடந்து சென்றுவிட, மோகனாவிற்கு தான் மனது அங்கலாய்ப்பாய் இருந்தது. இருந்தும் என்ன சொல்லிட முடியும்.

“இளா அப்பா கடைக்கு போயாச்சு… இன்னிக்கு லோட் எல்லாம் வருதாம். என்னையும் சீக்கிரம் வர சொன்னார். டிபன் செஞ்சதும் கொண்டு வந்து கடைல குடுத்திடு…” என்றவர் கிளம்பிவிட்டார்.

இளம்பரிதிக்கு தெரியும், அம்மாவிற்கு இது சற்று ஏமாற்றமே என்று. இருந்தும் அவனால் மேலும் மேலும் அவன் வாழ்விலும் பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்த்துக்கொள்ள முடியாதில்லையா?!

“நீதான் டிபன் செய்யணுமாம்…” என்றபடி அவர்களின் அறைக்குள் செல்ல, வானதி அதற்குள் வேறு உடை மாற்றி தயாராகி நின்று இருந்தாள்.

“என்னது நானா?!!”

“அப்படிதான் எங்கம்மா சொல்லிட்டு போனாங்க.. டிபன் செய்யவும் கடைக்கு கொண்டு போகணும் நான்.. சீக்கிரம் சீக்கிரம்…” என்று அவளை விரட்ட,

“நான் என்ன செய்றது?!” என்றாள் விழித்து.

“டிபன் மா டிபன்.. தெரியாதா உனக்கு…”

“ம்ம்ச் கிண்டல் பண்ணாதீங்க..” என்றவள் “நீங்க போய் எல்லாம் எடுத்து வைங்க…” என,

“அதுசரி…” என்றவன் கிண்டல் விட்டு கிறக்கப் பார்வைப் பார்க்க, “சமைக்கணும் சமைக்கணும் வாங்க.. வாங்க…” என்று இழுத்துக்கொண்டு சென்றாள்.

‘ஹப்பாடி…!!’ என்றதொரு உணர்வு இளம்பரிதிக்கு..

சமையல் ஒருபுறம், பேச்சு ஒருபுறம், சீண்டலும் சிணுங்கலும் ஒரு புறம் என்று நேரம் போனதே தெரியவில்லை. அப்பாவிற்கும் அம்மாவிற்கும் எடுத்து வைத்து, “குடுத்துட்டு வந்துடுறேன்..” என்று கிளம்பியவன், குடுத்துவிட்டும் வர, கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே உண்ண, ஒரு நிறைவான உணர்வு.

விஜயனிடமும் இளம்பரிதி ‘ஜிங்கிள்ஸ்’ காக இடம் பார்க்க சொல்லியிருக்க, இப்போது கடைக்கு போனவனிடம், அவரும் ஒரு இடம் சொல்ல,

“சரிப்பா போய் பார்த்துக்கிறேன்…” என்றான்.

“ரெண்டு பேருமே பார்த்துட்டு வாங்க…” என்று அப்பா சொல்லவும் “சரி..” என்றவன்,

இப்போது வானதியிடமும் சொல்ல, “ஓ…! போலாமே…” என்றாள் சந்தோசமாகவே.

“அப்பாவோட பிரன்ட் ஒருத்தர் இடம் தான். சுத்தி கொஞ்சம் தோட்டம் இருக்கும்.. ரோட் முன்னாடி தான் வீடு போல… உனக்கு பிடிச்சா அதை அல்டர் பண்ணிக்கலாம்..” என,

“ம்ம்.. நானுமே இப்படி இருந்தா நல்லாருக்கும் நினைச்சேன்…” என்றவள், இளாவோடு கிளம்பிச் செல்ல, இருவருக்குமே அந்த இடம் பிடித்தது.

கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் இருக்கும். தென்னை, பப்பாளி, சப்போட்டா என்று நிறைய வெள்ளாமை போட்டிருந்தனர். தோட்டத்தின் முன்னே நுழைவிடத்திலேயே வீடு ஒன்றும் இருந்தது. அழகாய் இருந்தது. நிச்சயம் இவ்விடம் செல்லப் பிராணிகள் வளர்ப்பிற்கும், பராமரிப்பிற்கும் நன்றாய் இருக்கும் என்று இளாவிற்கு தோன்ற,

“கொஞ்சம் தான் அல்டர் பண்ண வேண்டியது வரும்…” என்றான் வானதியிடம்.

“ம்ம்.. ஆமா.. நிறைய மரமெல்லாம் இருக்கு இல்லையா.. பறவைங்களுக்கு அதுல சின்ன சின்ன மர வீடு, கூடு போல எல்லாம் செட் பண்ணா நல்லாருக்கும்… டாக்ஸ் எல்லாம் நல்லா தோட்டத்த சுத்தி வரும்…” என்று வானதியும் சொல்ல,

“பிடிச்சிருக்கு தானே…” என்றான் இளம்பரிதி..

“ம்ம்ம் நேத்து மட்டும் நதி நதின்னு யாரோ சொன்னாங்க…” என்றவள், பேசியபடியே நடக்க,

“அ..!! அது ஒரு ப்ளோல வந்தது…” என்றவன் “நீ கூடத்தான் நேத்து என்னென்னவோ பேசின…” என்று சீண்ட,

“சரி சரி…” என்று ஜகா வாங்கிக்கொண்டாள் வானதி.

தோட்டம் முழுக்க இருவரும் பேசியபடி சுற்றி வந்தவர்கள், அங்கே காவலுக்கு இருந்தவரோடும் பேசிவிட்டு சிறிது நேரம் அங்கே அமர, “அமௌன்ட் எவ்வளோ சொல்றாங்க?” என்றாள் வானதி.

இளாவும் சொல்ல, “ம்ம்ம் அங்க ஜிங்க்ளிஸ் இருக்குற பில்டிங் ஒருத்தர் கேட்டாங்க… அதை கொடுத்துடலாம்…” என,

“அதெல்லாம் வேண்டாம்…” என்றான் பட்டென்று.

“ஏன்??!!” என்று அதே வேகத்தில் வானதி கேட்க,

“இது நம்ம வாங்கலாம்…” என்றான்.

“ஆனா இவ்வளோ பணம்…?!”

பணம் அவளிடம் இல்லை என்று சொல்லவே முடியாது. அவன் சொன்ன தொகையும் அவளுக்கு பெரியது இல்லை. கதிரிடம் சொன்னால் ஒரே நாளில் வாங்கிவிடுவான். ஆனால் இதற்கு எதற்குமே இளம்பரிதி சம்மதிக்க மாட்டானே. அதனால் தான் அங்கே ஜிங்கிள்ஸ் இருக்கும் இடத்தை கொடுத்துவிட்டு இதை வாங்கலாம் என்று சொல்ல,

“நான் ஏற்கனவே தோட்டம் வாங்கனும்னு பார்த்துட்டு தான் இருந்தேன்…” என்றான் இளா.

“இல்ல அதுக்கில்ல, எல்லாத்தையும் இதுல இன்வஸ்ட் பண்ணிட்டா அப்புறம், தெய்வா கல்யாணம் அது இதுன்னு…” என்று வானதி சொல்ல,

“அதெல்லாம் அது அதுக்குன்னு எல்லாம் தனி தனியா இருக்கு நதி…” என்றான் அவளை சமாதானம் செய்யும் விதமாய்.

“ஓ…!!!”என்றவள் அமைதியாய் இருக்க,

“அந்த பில்டிங் குடுக்கவேணாம். ரெண்ட்க்கு விட்டிடு… இது நம்ம வாங்கிக்கலாம்…” என, வானதி உடனே சரியென்று சொல்லவில்லை.

“நீங்க இவ்வளோ இன்வெஸ்ட் பண்றீங்க.. அதுக்கு உங்களுக்கு ப்ராபிட் வரணுமே.. ஜிங்கிள்ஸ் என்னோட ஆசைக்காக நான் ரெடி பண்ணது. அதுல அவ்வளோ எல்லாம் வராது..” என,

“ஹா ஹா…” என்று சிரித்தவன் “இந்த பில்டிங் உனக்கு, தோட்டம் எனக்கு… போதுமா… நீ வந்து உன்னோட வேலை பாரு.. நான் வந்து எனக்கான வருமானம் பார்த்துக்கிறேன்…” என்றான் இலகுவாய்.

அதன்பிறகே தான் வானதிக்கு சற்று மனம் சமாதானம் ஆக, “அத்தை மாமா எல்லாம் வந்து பார்க்க வேணாமா?!” என்றாள்.

இளம்பரிதி, வானதியையேப் பார்க்க, “என்ன சொல்லுங்க..?” என்று அவளும் கேட்க,

“எப்போ இருந்து நீ இப்படி, இவ்வளோ யோசிக்க ஆரம்பிச்ச? முன்ன எல்லாம் இப்படி இல்லையே நீ…” என்றான்.

ஆம்.! முன்னே அவள் அப்படி இல்லைத்தானே. நான், என் முடிவு.. அதை செய்வேன்.. என்பது போல் தான் இருப்பாள் இப்போது அப்படியில்லை. இருக்கவும் முடியவில்லை. முன்னே அவளுள் ஓர் இறுக்கம் இருந்தது அதையே பிடிவாதம் எனும் முகமுடியாய் அணிந்திருந்தாள்.

இப்போது அவளின் இறுக்கங்கள் தளர்ந்து, ஒரு இலகுத் தன்மை வந்திருந்தது. இளாவின் குடும்பத்தில் தான் பொறுந்திட வேண்டும் என்ற எண்ணமும் இருக்க, சொல்லப் போனால் ஒரு இயல்பான திருமணம், குடும்ப வாழ்வு என்பதற்கு ஏற்ப அவளிருந்தாள்.

இளம்பரிதி இப்படி கேட்கவுமே, வானதிக்கு லேசாய் ஒரு சிரிப்பு கூட வந்துவிட்டது. அன்றைய காலையில் கூட அவள் இதனைத் தான் நினைத்தாள். ‘நம்ம மாறிட்டோமோ…’ என்று.

யோசிக்கையில் இல்லை என்றுதான் தோன்றியது…

ஆனால் மனது லேசாய் இருப்பது போலிருக்க ‘இதுவும் நல்லாத்தான் இருக்கு…’ என்று எண்ணிக்கொண்டாள்.

இப்போது  இளா கேட்கவும் “அப்படியா தெரியுது…” என்றாள் வேண்டுமென்றே நமட்டு சிரிப்பொன்று சிரித்து.

“அப்பட்டமா தெரியுது…”

“ம்ம்ம்…” என்று யோசிப்பது போல் பாவனை செய்தவள், “இதுவே என்னோட நேச்சரா கூட இருக்கலாம்…” என,

“ஆனா நான் முன்னாடி பார்த்த வானதி வேற இல்லையா?” என்றான் அப்போதும் விடாது.

“அப்போ நமக்கு கல்யாணம் ஆகலையே…” என்றவள் பின் யோசித்து “லைப்ல நான் எதிர்பார்க்காத எல்லாமே நடந்தது. அப்போ சில நேரம் யாரை நம்புறதுன்னு கூட தெரியாது. க்ளோஸ் பிரண்ட்ஸ் இருக்காங்கதான். ஆனா பாருங்க அவங்களோடவே லிமிட்ல இருக்கவேண்டிய நிலை ஆகிடுச்சு.

ஐயோ பாவம்னு என்னை யாரும் பார்த்தா எனக்கு சுத்தமா பிடிக்காது. அப்புறம் என்னை யாரும் ஜட்ஜ் பண்றதும் பிடிக்காது. கல்யாண வாழ்க்கை எல்லாருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆனா எனக்கு கல்யாணம்ங்கற வார்த்தையே கொடுமையா இருந்தது.

இதுல மறுபடியும் கல்யாணம் அது இதுன்னு பேச்சு எடுத்தப்போ எனக்கு ரொம்ப குழப்பம் வேற.. யாரையும் நம்ப முடியும்னு தோணலை. இன்னும் நாள் போகட்டுமேன்னு தான் நினைச்சேன்… அதுக்காக எல்லாம் தான் நானே என்னை ஒருமாதிரி இறுக்கமா வச்சுக்கிட்டேன்.. வீட்ல இருக்கவங்க கூட என்னோட நெருங்க முடியாத அளவுக்கு இருந்தேன்…” என்று மடை திறந்த வெள்ளமாய் பேசினாள் வானதி.

சுற்றி இருந்த சூழ்நிலையும், இருவரின் தனிமையும், வானதியை மனதில் இருந்ததை எல்லாம் இளம்பரிதயிடம் எவ்வித தயக்கமும் இல்லாது பேச வைத்தது.

இளாவும் அமைதியாகவே கேட்டுக்கொண்டான். அவள் பேசட்டும் என்று. ஆரம்பத்தில் ‘திமிர் பிடித்தவள்…’ என்றுதானே அவனும் நினைத்தான்.

ஆனால் பல பெண்களில் திமிருக்கு பின்னே ஒளிந்திருக்கும் காரணங்கள் யாருக்கும் தெரிவதில்லை. அவர்கள் தெரிய விடுவதுமில்லை.வானதி இப்போது முற்றிலும் அவனுக்கு வேறொரு பரிமாணத்தில் தெரிந்தாள். 

“நிஜமா சொல்றேன்.. உங்களோட எனக்கு இவ்வளோ ஸ்மூத்தா உக்கார்ந்து எல்லாம் பேச முடியும்னு நான் நினைச்சது கூட இல்லை..” என்றாள் சிரிப்போடு.

“ஹா…! அப்போ வேறென்ன நினைச்ச?!”

“தெரியலை.. நம்ம பாக்குறப்போ எல்லாம் நமக்கு சண்டை தானே.. ரொம்ப பண்றான் இவன்.. அவ்வளோ பெரிய அப்பாட்டக்கரா இவன்.. இப்படித்தான்  தோணும்…”

“ம்ம்ம்…”

“ஆனா என்ன, நமக்கு கல்யாணம் நடந்தப்போ மனசுல ஒரு சின்ன ரிலாக்ஸ்.. உங்களுக்கு என் லைப்ல நடந்தது எல்லாமே தெரியும். சோ முதல்ல இருந்து எதையும் புதுசா விளக்க வேண்டியது இல்லை அப்படின்னு…”

“அவ்வளோதானா?!” என்றான் இளா சற்றே ஏமாற்றமாய்.

நிச்சயம் இதனால் மட்டுமே அவள் சம்மதித்து இருக்க மாட்டாள் என்பது தான் அவனது இத்தனை நாள் எண்ணம். வானதி இப்போது இப்படி சொல்ல, ஏனோ ஒரு ஏமாற்றம்.

“நான் ரிலாக்ஸா இருந்ததுன்னு தானே சொன்னேன். கல்யாணம் பண்ணதுக்கு இதுதான் காரணம்னு சொல்லலையே…”

“அப்போ காரணம் வேற இருக்கா நதி…” என்று இளா ஆர்வமாய் கேட்க, கண்களை சுறுக்கி அவனை கூர்மையாய் பார்த்தவள்,

“நீங்க சொல்லுங்களேன்.. எப்படி டக்குனு ஓகே சொன்னீங்க..?” என்று அவளும் அதே ஆர்வத்தோடு கேட்க, அவனால் சொல்லிட முடியுமா என்ன?

கதிர்வேலன் அவனின் காலில் விழுந்தது. பிருந்தா அவனின் கை பிடித்து கெஞ்சியது. பாவம் செய்தாய் என்று நினைத்தாயா, இப்போதொரு பெண்ணிருக்கு வாழ்வு கொடு என்று சொன்னது எல்லாம் சொல்ல முடியுமா. நிச்சயமாய் இளம்பரிதி இதனால் எல்லாம் சம்மதம் சொல்லிடவில்லை தான். இருந்தும் உன்மீது எனக்கு சிறு சலனம் இருந்தது என்றும் கூட சொல்லிட முடியாது இல்லையா?

நண்பனுக்கு பார்த்த பெண்ணிடம் சலனமா என்று அவள் கேட்டால் ? அதற்கு அவனிடம் எவ்வித பதிலும் இல்லைதானே.

இளம்பரிதி பதில் சொல்லாது அமைதியாய் இருக்கவும் “ரொம்ப யோசிக்கிறீங்களே?” என்றாள்.

“இல்ல அதெல்லாம் இல்ல…” எனும்போதே,

“எனக்குத் தெரியும்.. அண்ணி கண்டிப்பா ஒரு சீன் கிரியேட் பண்ணிருப்பாங்க. அண்ணனும் வந்து பேசிருப்பாங்க…” என, இளாவும் ஒரு புன்னகையோடு நிறுத்திக் கொண்டான்.

போதும் இதையே அவள் நினைத்துக்கொள்ளட்டும் என்று. உண்மைகள் எல்லாம் தெரிந்தால் நிச்சயம் வானதி மிகுந்த மன வேதனைக்கு உள்ளாவாள் என்று இதோடு நிறுத்திவிட்டான். மேற்கொண்டு வானதி எதுவோ கேட்க வர, அதற்குள் அவளுக்கு ஜிங்கிள்ஸில் இருந்து அழைப்பு வந்துவிட்டது.

‘நல்லவேளை…’ என்று இளா நினைக்க, அவனுக்குமே சரோஜா அழைத்தார்.

வெற்றிவேலன் எதுவும் சரோஜாவிடம் சொல்லியிருப்பாரோ என்று எண்ணி அழைப்பினை ஏற்க “இளா உங்க வீட்டுக்குத் தான் வந்துட்டு இருக்கோம்…” என்றார் சரோஜா.

“எ.. எங்க வீட்டுக்கா? நா.. நானும் வானதியும் வெளிய இருக்கோமே ம்மா…” என்றான்.

“அப்படியா… அம்மா இருக்காங்களா வீட்ல..?” என,

என்ன விஷயம் என்று தெரியாது, “எ.. என்ன விஷயம்?” என்றான்.

“வேறது எல்லாம் எதுவுமில்லை. நீ சொல்லு அம்மா இருக்காங்களா?”

“கடைல இருப்பாங்க.. நான் போன் பண்ணி சொல்லிடுறேன்…” என்றவன் மோகனாவிற்கும் அழைத்துச் சொல்ல “சரி… நீங்களும் சீக்கிரம் வந்திடுங்க…” என்று வைத்துவிட்டார்.

வானதி பேசி முடிக்கவும், இளா விசயத்தினை சொல்ல, “அப்போ கிளம்பனுமா?” என்றாள்.

“பின்ன… உனக்கு கிளம்புற ஐடியா இல்லையா?!”

“அப்படியல்ல.. சரி போலாம்…” என்று இருவரும் கிளம்பி வீடு செல்ல, வெற்றிவேலன், சரோஜா, ரேணுகா வந்திருந்தனர்.

உள்ளே பேச்சு சத்தமாய் இருக்க “வாங்க…” என்று எல்லாரையும் பார்த்து இளா சொல்ல, வானதியும் அதுபோலவே சொல்ல,

“உங்களை விருந்துக்கு கூப்பிட வந்திருக்காங்க…” என்றார் மோகனா.

“விருந்தா?!!” என்று இளா கேட்க,

“ஆமா இளா, கல்யாண விருந்து நாங்க செய்யணுமே..” என்றார் சரோஜா.

“இல்லம்மா.. இப்போ அதெல்லாம் வேண்டாம்…” என்று இளம்பரிதி உறுதியாய் சொல்ல,

“என்ன இளா நாங்க எது சொன்னாலும் மறுப்பு சொல்லனும்னே இருக்கியா?” என்றார் வெற்றிவேலன்.

மோகனா மகனை முறைக்க, வானதியும் அவனைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“அப்படியில்ல.. அருண் இந்த நிலைல இருக்கப்போ, விருந்து அது இதுன்னு அதெல்லாம் வேண்டாமே..” என்று இளா உண்மையான காரணம் சொல்ல,

“இல்ல இளா.. நாங்க இன்னும் பத்து நாள்ல பாரின் போயிடுவோம்.. நாங்க இருக்கப்போவே விருந்து குடுக்கனும்னு நான்தான் சொன்னேன்…” என்று ரேணு முதல் முறையாய் மாமனார் மாமியார் முன்னே வாய் திறக்க,

“அது அண்ணி…” என்று தயங்கியே நின்றான் இளம்பரிதி.

அவர்கள் உதவி என்று கேட்டதை மறுத்தாகிவிட்டது. அதன்பின்னே விருந்து என்று அங்கே செல்வதில் அவனுக்கு உடன்பாடில்லை.

“எதுவும் சொல்லக் கூடாது இளா… இது என்னோட விருப்பம்…” என்று ரேணு உறுதியான குரலில் சொல்ல, இளா அமைதியாய் இருக்க, வானதி தான் “அக்கா… என்னிக்குன்னு சொல்லுங்க நாங்க வர்றோம்…” என்றாள்.

‘அட என்னடா இது!!’ என்றுதான் பார்த்தனர் அனைவரும்.

ரேணுவிற்கு அதன்பின்னே தான் முகத்தில் மகிழ்ச்சி பரவ “வர வியாழன் நல்ல நாள்…” என,

சரோஜாவும் “ஆமா வானதி. பிருந்தாவையும் மாப்பிள்ளையும் கூட கூப்பிடனும்…” என்று சொல்ல,

வெற்றிவேலன் “என்ன இளா அமைதியா இருக்க?” என்றார்.

“வியாழன் தானே.. வர்றோம்…” என்று இளாவும் சொல்ல, அதன்பின்னே தான் அனைவருக்கும் ஒரு நிம்மதி.

Advertisement