Advertisement

அத்தியாயம் – 21

வானதி ஏக முறைப்பில் அமர்ந்திருந்தாள்.. திண்டுக்கல் வந்திருந்தனர்.. வானதி, இளம்பரிதி இருவரும் எண்ணியது போல இருவருக்குள்ளும் தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்சனையும் இல்லை. பிறரால் தான் ஏதாவது ஒன்று வந்துவிடுகிறது.

இம்முறை வெற்றிவேலனால்..!!

அவரோடு பேசிய பின்னே இளா மிகவும் மன குழப்பத்திற்கு ஆளாகி இருந்தான்..!!

அவர் கேட்டதை சட்டென்று முகத்தில் அடித்தது போல் மறுக்கவும் முடியவில்லை.

முழு மனதாய் ஏற்கவும் முடியவில்லை..!

என்ன சொல்வது? என்ன செய்வது? என்று அவனும் மீண்டும் குழப்பம் ஏற்பட்டு விட்டது.

‘வேணாம் இளா.. இப்போதான் எதோ எல்லாம் சரியா நடந்துட்டு இருக்கு. மறுபடியும் நீ இதுல உள்ள நுழையாத..’ என்று அவனின் புத்தி சொல்ல,

‘அவ்வளோ பெரிய மனுஷன் கையெடுத்து கும்பிட்டு, கண்ல தண்ணியோட கேக்குறாரு.. நீ அவ்வளோ கல் நெஞ்சக்காரனா டா…?’ என்று அவனின் மனது சாடியது.

இதற்கும், வானதி இளாவிடம் கோபம் கொண்டதற்கும் என்ன என்றால்? இருக்கிறது தானே. அவளே அன்றே சொன்னாளே அங்கே மறுபடியும் வேலைக்கு என்று செல்லக் கூடாது என்று. இத்தனைக்கும் வெற்றிவேலன் வேலைக்கு என்று கேட்கவேயில்லை.

சிறிது நாட்கள் தன்னோடு உதவியாய் இருக்கும்படி தான் சொன்னார்.

அதாவது அருண் கண் விழிக்கும் வரைக்கும்..!

அதுதான் எப்போது என்று உறுதியாகவே சொல்லிட முடியாதே.

இளா கூட “அதான் கோபி இருக்கானே…” என,

“இல்ல இளா அவனை நினைச்சா தான் பயமா இருக்கு…” என்றார்.

“ஏன்?!”

அன்றைய தினம் கோபி, தியாகுவை இல்லாது செய்திட வேண்டும் என்று சொன்னதை சொல்ல, இளாவிற்கே இத்தனை தூரம் போகவேண்டுமா என்று தோன்றியது. மேலும் மேலும் தவறு செய்து இன்னும் சிக்கல்களை இழுத்து விட்டுக்கொள்ள  வேண்டுமா என்றும் இருக்க,

“தியாகு என்னையும் பார்த்து பேசினான்..” என்றான் இளா.

“ம்ம்ம் தெரியும்…” என்றவர்க்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை.

“ஹாஸ்பிட்டல்ல என்ன மாதிரி ட்ரீட்மென்ட் குடுத்தாங்க. ஷாலினியோட ஹெல்த் கண்டிசன் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்னு கேட்டான்…” என்றவன்.

 

“இவ்வளோ நேரம் இதெல்லாம் உங்களுக்குத் தெரியாம இருக்காது…” என்றும் சொல்ல,

“தெரிஞ்சு என்ன செய்யப் போறேன்…” என்றார் அப்போதும் அதே விரக்தி குரலில்.

இளம்பரிதி பதிலேதும் பேசாது அவரைப் பார்க்க “எல்லாமே கை மீறிப் போறது போல ஒரு உணர்வு இளா. சரோ இப்போல்லாம் ரொம்ப ரொம்ப கவலைப் படுறா… அதெல்லாம் கோவமா வெளிப்படுது. கோபி அவனை நினைச்சாதான் எனக்கு ரொம்ப பயமா கூட இருக்கு.

ஏதாவது செஞ்சிட்டு வந்து நின்னா, என்ன செய்றதுன்னு. பாவம் ரேணு நடக்குற எதுவுமே தெரியாம இருக்கு. அருண் விஷயம் அதுக்குமேல… என்ன செய்றதுன்னே தெரியலை…”

“நான் சொல்றேன்னு தப்பா நினைக்கவேணாம். கோபிய ஒரு ஒருவருசமோ இல்லை ரெண்டு வருசமோ வெளிநாடு அனுப்பிடுங்க.. இங்க எல்லாமே ஒரு அமைதிக்கு வந்திடும். அதுக்குள்ள ஷாலினிக்கு தியாகு ஒரு வாழ்க்கை அமைச்சுக் குடுத்துடுவான். அருண் கண்டிப்பா குணமாகியும் வந்திடுவான்…” என,

“ம்ம்ம்ம்…” என்றவர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

யோசிக்கிறார் என்பது நன்கு புரிந்தது. யோசித்தவர் தான் அவனிடம் ஓர் உதவியை யாசித்தார்.

வேறொன்றும் இல்லை.. இளா சொன்ன இவை எல்லாம் நடக்கும் வரைக்கும் அவன் அவரோடு இருந்திடவேண்டும். அதாவது அருணும், கோபியும் அவருக்கு தொழில், மற்றதில் எல்லாம் எப்படி பக்கபலமாய் உதவியாய் இருந்தார்களோ அதுபோல இளா அவர்களின் இடத்தில் இருந்திட வேண்டும்.

இதனைத் தான் அவர் கேட்டார்.

அவ்வார்த்தைகளை தாங்கி நின்றவனுக்கோ ‘மீண்டும் நானா?!’ என்ற எண்ணம்தான்.

“செய்வியா இளா..?!” என,

“மறுபடியுமா?!” என்றான்.

“கோபிய கண்காணாம அனுப்பிடுறது தான் சரின்னு எனக்கும் தோணுது. ஆனா அருண் இப்படி இருக்கானே. நான் எப்படி யாரை நம்பி எல்லா பொறுப்பையும் குடுப்பேன்..” என்றார்.

உடனடியாக எந்த பதிலும் இளா சொல்லவில்லை. இங்கே ஏதேனும் பேசினால், அது பிருந்தாவிற்கு போகும். இதுதான் சாக்கென்று தேவையில்லாத சில காட்சிகளும் அரங்கேறும். பின்னே வானதிக்கு பதில் சொல்லும் நிலை கூட வரும்.

அதை எல்லாம் தவிர்க்கவே இளா “நான் யோசிக்கணும்…” என்றுவிட்டான்.

யோசித்தாலும் ஒரு முடிவிற்கு வரவும் முடியவில்லை.. இதோ இப்போது விஷயம் அறிந்து வானதி முறைத்தும் கொண்டாள்.

அங்கே பழனியில் கூட, அன்றைய இரவில் இளாவிற்கு சரியாய் உறக்கம் வராது இருக்க, “என்னாச்சு?!” என்று வினவினாள் தான்.

“தெரியலை.. இன்னும் எனக்கு இங்க செட் ஆகலை போல. அதான்…” என,

“நான்லாம் எப்படி அங்க வந்து தூங்குறேன்..?” என்றாள் பட்டென்று.

“அதானே…”

“அதேதான்… தூங்கனும்னு நினைச்சு தூங்கினா தூக்கம் வரும். அதைவிட்டு அதை இதைன்னு நினைச்சா தூக்கம் வராது…”

“ம்ம்ம்…” என்றவன் புரண்டு படுக்க, அதே நேரம் வானதியும் புரண்டு படுக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து படுக்கும் நிலை.

உறக்கத்தில் இது நேரும் ஒன்றுதான். ஆனால் இத்தனை நாட்களில் விழித்திருக்கையில் இப்படியான விஷயங்கள் இருவருமே தவிர்ப்பது இருவரும் அறிந்த ஒன்றே. இன்றோ எதிர்பாராவிதமாய் நடக்க, இருவருமே மற்றவரின் பார்வையை தவிர்த்தனர்.

பேச்சும் கூட நின்றுவிட்டது..!!

ஆனால் பேசிக்கொண்டே படுப்பது இருவருக்கும் பிடித்த ஒன்றும் கூட.

அடுத்த கட்டம் என்ற ஒன்று அனைத்திற்கும் உண்டுதானே… அது அறியாத சிறு பிள்ளைகள் இல்லையே இருவரும்.

இளா அமைதியாய் இருந்தாலும், வானதி தான் “உங்களைப் பார்த்தா வேறென்னவோ சீரியசா யோசிக்கிறது போல இருக்கு..” என்றாள் இம்முறை அவன் முகம் பார்த்து.

“ம்ம் அப்படியும் சொல்லலாம்…”

“எதுவும் ப்ராப்ளமா?!”

“இல்ல…” என்று யோசித்தவன், இவளிடம் மறைத்து என்னாகப் போகிறது என்றெண்ணி வெற்றிவேலன் உதவி கேட்டதை மட்டும் சொல்ல, வானதியின் முகம் மாறியதை அந்த அரைகுறை வெளிச்சத்திலும் அவனால் உணர முடிந்தது.

“ஹேய்..!! நான் இன்னும் என்னோட முடிவு சொல்லல…”

“ஆனா என்னோட முடிவு அன்னிக்கே சொல்லிட்டேன்…” என்றாள் காட்டமாய்.

‘போச்சுடா…’ என்று நினைத்து இளம்பரிதி அமைதியாய் இருக்க,

“நான் தெரியாமத்தான் கேக்குறேன். அப்படி என்ன உங்கட்ட அவங்க எல்லாருக்கும்.. ஆரம்பத்துல இருந்தே நானும் கவனிச்சேன்.. எல்லாருமே எல்லாத்துக்குமே இளா… இளா… இளா தான். நீங்க வேலை செஞ்சீங்க சரி. ஆனா இதெல்லாம் கொஞ்சம் இல்லை ரொம்பவே அதிகமா இல்லை..” என்று படபடத்தாள்.

இதற்கு இளம்பரிதி என்ன பதில் சொல்வான்?!

முன்பிருந்தவனாய் இருந்தால் “ஆமா டி. ரொம்ப அதிகம் தான். இப்போ என்ன அதுக்கு?!” என்று கேட்டிருப்பான்.

இப்போதோ அமைதியாய் இருக்க “சொல்லுங்க. சம்திங் எனக்கு தோணிட்டே இருக்கு. என்னவோ உங்க எல்லாருக்கும் நடுவில் ஏதோ இருக்குன்னு…” என, ஒரு நொடி அவனுக்கு பக்கென்று தான் ஆனது.

என்ன சொல்கிறாள் இவள்?! என்று.

“உண்மைதானே.. எனக்கு என்னோட உள்ளுணர்வு சொல்றது எப்பவுமே சரியா இருக்கும்.. என்னவோ இருக்குதானே…” என,

“அட… நீயா ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிற?!” என்றான் பேச்சினை சகஜம் ஆக்குவது போல்.

“நானா எல்லாம் யோசிக்கல. நடக்குறத வச்சு யூகிக்கிறேன்…”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல..”

“பின்ன எதுக்கு எல்லாரும் நீங்களே தான் வரணும்… வேணும்னு சொல்றாங்க…”

அவளது கேள்வியில் ‘அவ்வளோ பெரிய அப்படக்கரா நீ?!’ என்ற தொனி இருக்க, “நீ என்னை கிண்டல் பண்றதுபோலவே இருக்கு…” என்றான் சலுகையாய்.

“கிண்டல் எல்லாம் இல்லை…” என்றவள் “ஆனாலும் கொஞ்சம் அப்படித்தான்…” என்றவள்

மீண்டும் “நிஜமா எதுவுமில்லை தானே…” என,

“அப்படி என்ன இருந்திட போகுதுன்னு நீ நினைக்கிற..?!” என்றான் இளா தெரிந்துகொள்ளும் நோக்கோடு.

“நானா எதுவும் அவ்வளோ தூரம் கெஸ் பண்ணல. பட் ஒரு விஷயம், நம்ம லைப்ல தேவையில்லாத பிரச்சனைகள் எதுவும் வரவேண்டாம்னு நினைக்கிறேன்…”

“பிரச்சனை இல்லாத வாழ்க்கை யாருக்கும் இருக்கா என்ன?”

“இல்லைதான். ஆனா நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில நம்மனால பிராப்ளம் அப்படிங்கிறது பெருசா இல்லைதானே…”

“ம்ம்ம்…!”

இப்படியே பேச்சுக்கள் நீள, அவர்களை மீறி எப்போது உறங்கினர் என்பது தெரியாது. எப்படியும் இளம்பரிதி இதற்கு சம்மதிக்க மாட்டான் என்று வானதி நினைத்திருக்க, மறுநாள் மாலை தான் இருவரும் திண்டுக்கல் வந்தனர். வீடு வந்தபின்னும் இளம்பரிதி யோசனையாய் இருப்பதைக் கண்டு மோகனா என்னவென்று கேட்க, இளாவும் என்னவென்று சொன்னான்.

“அவ்வளோ பெரிய மனுசர்… உதவின்னு தானேடா சொல்றார். செஞ்சா என்ன?” என்றார் மோகனா.

வானதி சட்டென்று இளாவைப் பார்க்க “அதான் ம்மா யோசிக்கிறேன்…” என, இதோ அவளுக்கு கோபம் வந்துவிட்டது. ஒரு மனைவியாய்  அவளையும் மீறி அவளின் உரிமை என்று இருவருக்கும் இருந்த சிறு இடைவெளியையும் வானதி தகர்த்து விட்டாள்.

இளாவை முறைத்தபடியே அறைக்குள் சென்றவள் வெகு நேரமாகியும் வெளிவராது இருக்க,

“என்னடா இப்போ நான் என்ன சொல்லிட்டேன்…” என்றார் மோகனா.

“நீ ஒன்னும் சொல்லலை.. நான் யோசிக்கிறேன் சொன்னேன் இல்லையா?! அதான் கோபம்..”

“ஏனாம்?!”

“வானதிக்கு நான் அங்க வேலைக்கு போறதுல இஷ்டம் இல்லை…”

“ஓ..!! அப்போ நீங்க ரெண்டு பேர் பேசி முடிவுக்கு வாங்க..” என்றுவிட்டார் மோகனா.

இளம்பரிதிக்கோ வானதி தன்னிடம் உரிமை எடுப்பது பிடித்தே இருந்தாலும், வெற்றிவேலன் மனம் நோகாது இதனை எப்படி மறுப்பது என்று யோசித்தான். அவர் முன்போல் அதிகாரமாய் பேசியிருந்தால் முகத்திற்கு நேரே அப்போதே முடியாது சொல்லியிருப்பான்.

அவர் முகத்திலும் குரலிலும் தெரிந்த மாற்றம், அவர் நிஜமாகவே வருந்துகிறார் என்று தோன்ற, தானும் ஏன் மேலும் போட்டு வாட்டிட வேண்டும் என்று எண்ணினான்.

அறைக்குள் சென்றவள் இன்னும் வெளிவராது இருக்க, இளா உள்ளே சென்று பார்க்க, முகத்தை உர்ரென்று வைத்துத் தான் அமர்ந்திருந்தான். சிறு குழந்தை ஒன்று பிடிவாதம் பிடித்து அமர்ந்திருப்பது போல் இருந்தது அவனுக்கு.

“ஏன் இப்படி உக்காந்து இருக்க??!” என்றபடி அருகே அமர, அவளோ வேகமாய் தள்ளி அமர்ந்தாள்.

“அட…” என்றவன், மீண்டும் அருகமர, அவளும் தள்ளியமர, இப்படியே இருவரும் மாறி மாறி செய்ய, கட்டிலின் ஓரம் வந்துவிட்டது.

வானதி வேகமாய் எழுந்துகொள்ள, “வானதி…!” என்றவன் அவள் கை பிடிக்க, கோபமாகவே முகத்தை திருப்பி நின்றிருந்தாள்.

“இப்போ ஏன் இவ்வளோ கோபம்???!” என்றவனும் எழுந்து அவள் முன் நின்று முகம் பார்க்க, இப்போது பார்வையை திருப்பிக்கொண்டாள்.

“என்ன பாரு…” என்று அவள் முகம் பற்றி தன்னை நோக்க வைக்க, அவளோ கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

கோபத்தையும் தாண்டி இப்போது வேறெதுவோ ஒரு மாற்றம் இருவருக்குள்ளும் நிகழ, இளா அவளிடம் நெருங்கித்தான் நின்றிருந்தான். வானதியின் மூடிய இமைகளுக்குள் கருமணிகள் அலைபாய்ந்து தான் கொண்டிருந்தது.

அடுத்தது என்ன செய்வான்?!

இப்படியோர் எதிர்பார்ப்பு அவளுள் தோன்ற, மெதுவாய் அவளின் மென்னிதழ்கள் நடுங்கிடத் தொடங்கியது.

“பாரு வானதி.. இவ்வளோ கோபமா?!” என்றவனின் குரல் வெகு அருகில் கேட்க,

‘ஒண்ணுமில்லை…’ என்றுசொல்லி விலகிட நினைத்தாலும், அவளால் முடியவில்லை.

“வானதி…” என்று அழைத்தவனுக்கு அவள் முகமோ, தன்னை நோக்கி வாயேன் என்று அழைப்பது போலவே இருக்க, மெதுவாய் அவளின் கண்களின் மீது ‘ஊப்…’ என்று ஊதினான்..

ம்ம்ஹூம் அவள் எதற்கும் கண் திறக்கக் காணோம்.

இளாவிற்கோ அவனின் கட்டுபாடுகள் காணாது போய் கொண்டிருக்க, அவளின் இந்த பிடிவாதம் எல்லாம் சீண்டிப் பார்க்கவே வைக்க, அதையும் மீறி ஒரு உற்சாகம் அவனுள்.

அதையும் தாண்டி அவனின் அருகாமைக்கு சம்மதித்து வானதி நிற்க, “ந… நதி…” என்றான் மெல்லமாய் அவளின் முகத்தினை வருடி..

முன்னே பறந்து கொண்டிருந்த கேசம் ஒதுக்கியவனின் கரம், கன்னம் தொட்டு அவள் கழுத்தை வருட, வானதிக்கோ தேகம் கூசிச் சிலிர்த்தது.

அப்போதும் கூட அவள் கண் திறக்காது இருக்க “ நதி… என்னைப் பாரு…” என்றவனோ அவளின் செவியில் தன் இதழ் உரசப் பேச, வானதியின் நிலையை சொல்லவும் வேண்டுமா என்ன?! 

இளம்பரிதியின் உணர்வுகளைத் தான் கேட்கவும் வேண்டுமா?!

வானதியின் செவியில் தீண்டிய இதழ்கள், அடுத்த அவளின் கழுத்தில் தன் இருப்பைக் காட்ட, வானதியின் கரம் மெல்ல இளம்பரிதியைத் தழுவ, அடுத்தது அடுத்தது எல்லாம் இருவருக்கும் எதுவுமே தடையாய் இருந்திடவில்லை.

Advertisement