Advertisement

அத்தியாயம் – 20

எதிர்பாராததை எதிர்பார் – திருமண வாழ்வில் இது எத்துனை நிஜம்…!

இளம்பரிதி இதனை நன்கு உணர்ந்த தினம் இது என்றுதான் சொல்லிட வேண்டும். ராதாவின் அழைப்பை மறுக்க முடியாது, அதுவும் வானதியும் பைக்கில் செல்வோம் என்று சொல்லியபிறகு, முடியாது என்று சொல்ல முடியாது, இருவரும் கிளம்ப, அங்கே சென்று சிறிது நேரம் வரைக்கும் அனைத்தும் நன்றாய் தான் இருந்தது.

அதாவது வெற்றிவேலன் அங்கே வரும் வரைக்கும்.

முன்னர் எப்படியோ, இப்போது சொந்தம் வேறு அல்லவா?!!

பிருந்தாவின் அப்பா என்கிற முறைக்கும், கதிர்வேலின் மாமனார் என்கிற முறைக்கும் சேர்த்து அவரை பொறுத்துக்கொள்ள வேண்டிய சூழல் இளாவிற்கு.

இளம்பரிதி இங்கிருப்பது அவருக்கு ஏற்கனவே தெரிந்தே இருந்தது போலும். இல்லை ஒருவேளை பிருந்தா சொல்லியிருக்கக் கூடும் என்று யூகித்தான். ஆனால் அவரின் வருகை பற்றி பிருந்தா அந்த நொடி முதல் வாயே திறக்கவில்லை என்பது தான் அவனுக்கு வியப்பு.

முன்பு போலவென்றால் இளாவும் அங்கே சென்றிருக்கும் நிலையில் “அப்பாவும் இங்க வர்றாராம்…” என்று சொல்லி ஒரு விருந்துக்கே ஏற்பாடு செய்திருப்பாள்.

இப்போது கப்சிப் என்றிருக்க, இளா பிருந்தாவை தான் பார்த்தான்.

“எனக்கே இப்போதான் தெரியும்…” என்றாள் மெல்ல,

“ஆனா இப்போவரைக்கும் கூட நீ சொல்லல தானேக்கா…” என,

“சொன்னா உடனே நீ கிளம்பிடுவ.. இங்க நான் அதுக்கு ஒரு காரணம் சொல்லணும்.. மறுவீடுக்கு பிறகு இப்போதான் வந்திருக்கீங்க..”

“அதுக்காக…” என்று எதையோ கேட்க வந்தவன், வானதி இவர்கள் இருவரும் பேசுவதை கவனிப்பது கண்டு பேச்சை நிறுத்திக்கொண்டான்.

இருந்தும் முகத்தில் அந்த கடுகடுப்பு மாறாது இருக்க, வெற்றிவேலன் கதிரோடு பேசியவர், வானதியைப் பார்த்து “எப்படிம்மா இருக்க..?” என்றும் விசாரிக்க,

“நல்லாருக்கேன்…” என்று அவளும் பதில் சொல்ல, அடுத்து அவரின் பார்வை பிருந்தா அருகில் நின்றிருந்த இளம்பரிதி மீதுதான் படிந்தது.

அவனும் அவரை நேர் கொண்டுதான் பார்த்தான்.

தியாகு சொன்னதுபோல், அவனை பின்தொடரவென ஏற்பாடு செய்திருந்த ஆள், இவனையும் அவனோடு சேர்த்து பார்த்து ஏதேனும் சொல்லியிருப்பானோ என்று இளாவிற்குத் தோன்றியது.

எதுவும் கேட்பாரோ என்றும் நினைக்க,

‘கேட்டா கேட்கட்டும்… எனக்கென்ன பயம்…’ என்று நெஞ்சை நிமிர்த்தி தான் நின்றிருந்தான்.

“ப்பா.. உக்காருங்கப்பா…” என்ற பிருந்தா, “இளா நீயும் உக்காரு…” என்று சொல்லி நகர்ந்து நிற்க, இருவருக்குமே ஒரு மௌனம்.

வானதியோ என்னடா இவர்கள் புதியவர்கள் போல நடந்துகொள்கிறார்கள் என்று பார்த்து வைத்தாள். ஆனால் இளாவின் முகத்தைப் பார்த்து என்னவோ சரியில்லை என்று மட்டும் தோன்ற “அண்ணி நா.. நாங்க என்னோட ரூம்ல இருக்கோம்…” என,

இளம்பரிதிக்கு ‘அட..!’ என்ற ஆச்சர்யம் தான்.

பிருந்தா “அ..!! அப்படியா?! ஜூஸ் போட சொல்லப் போனேன்…” என,

“மேல குடுத்துவிடுங்க அண்ணி..” என்றவள் “கொஞ்சம் வந்து ரெஸ்ட் எடுங்க…” என்று இளாவை பார்த்து சொல்ல, இளம்பரிதியும் எழுந்துகொண்டான்.

வெற்றிவேலனின் பார்வை முழுவதும் இளா மீதுதான் இருந்தது. அவருக்கு வேண்டுமானால் அவரிடம் அவன் வேலை செய்தவன். அந்த வீட்டினை பொறுத்தமட்டில் அவன் வீட்டு மாப்பிள்ளை அல்லவா. அவரின் பார்வையே சொல்லியது விஷயம் தெரிந்து தான் மனிதர் அமைதி காக்கிறார் என்று. அவனோடு தனியே பேசும் சந்தர்ப்பம் பார்க்கிறார் என்று.

கதிர்வேலனோ, தங்கை இப்படி செய்வதை மாமனார் ஏதேனும் நினைப்பாரோ என்று பார்க்க “புதுசா கல்யாணம் ஆனவங்க.. கொஞ்சம் தனியா இருக்கட்டுமே…” என்று கதிரிடம் சிரித்தபடி சொன்னவர்,

“நீ போ இளா…” என,  ஒரு மரியாதைக்காக அதன் பின்னர் தான் இளம்பரிதி வானதியோடு சென்றான்.

அறைக்குள் சென்றதுமே வானதி கேட்ட முதல் கேள்வி இதுதான் “ஏன் டென்சனா இருக்கீங்க…?” என்று.

அதற்கு அவன் பதில் சொல்லும் முன்னமே “அப்படியெல்லாம் இல்லைன்னு மட்டும் சொல்லக் கூடாது…” என்று பாவனையாய் சொல்ல,

“டென்சன் எல்லாம் இல்லை…” என்றான் ஒரு புன்னகையோடு.

தனக்காக ஒவ்வொன்றும் பார்க்கிறாள் என்று உணர, அவனுக்கு ஒரு சிறு நிம்மதி உண்டானது. ஜிங்கிள்ஸில் ஏன் வந்தாய் என்று கேட்டவள், இப்போது அவனின் டென்சன் பற்றி வினவு ‘இதுக்குத்தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்றாங்க போல…’ என்று நினைத்து ஒரு சிறு புன்னகையும் அவனுக்குத் தோன்ற,

“அட இப்போ என்ன சிரிப்பு?” என்றாள் ஏசி ஆன் செய்தபடி.

“ஏசி போடற அளவுக்கு வேர்க்கல…”

“அது பழக்கமாகிடுச்சு…” என்றவள், ஏசி ஆப் செய்து அவனுக்கு ஃபேன் போட்டுவிட, சட்டையின் மேல் பட்டன்களை கலட்டியபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.

“சின்னதா ஒரு குளியல் போட்டா இன்னும் பிரெஷா இருக்கும்…”

“அதுக்கு சோப் வச்சு நீ ஒரு கதை சொல்லுவ…” என்று அவனும் சொல்ல,

இருவருக்குமே புரிந்தது, இருவருக்கும் தனியே இருக்கையில், பேச்சுக்கள் எல்லாம் சுவாரஸ்யமான ஒன்றாகவே அமைகிறது என்று. பிணக்குகள் எல்லாம் பிறரால் ஏற்படும் ஒன்றே. இருவருக்கும் இடையில் இருக்கும் இடைவெளி என்பது, இருவருமே சிறிது நேரம் மனம் விட்டு பேசினால் சரியாகிப் போகும் ஒன்றென புரிவதற்கு அத்துனை நேரம் எல்லாம் அவர்களுக்கு எடுக்கவில்லை.

இருந்தும் தயக்கம் என்னும் அந்த மெல்லிய திரை விலகவேண்டுமே..!!

இவர்கள் அதற்கெல்லாம் சரிபட்டு வரமாட்டார்கள் என்று தயக்கமே எண்ணியதோ என்னவோ, தானே இருவருக்கும் இடையில் இருந்து விலகத் தொடங்க,

“சோப் கதை எல்லாம் சொல்லமாட்டேன்..” என்றவள் மாற்றுடை ஒன்றை எடுத்துக்கொண்டு, குளிக்கச் செல்ல, அடுத்த பத்து நிமிடத்தில் வெளியும் வந்துவிட்டாள்.

ஒரு கமகம வாசனை அந்த அறையை நிரப்ப, கண்கள் மூடி சாய்ந்து இருந்தவன், மெல்ல கண்களைத் திறக்க, தன் ஈரக் கூந்தலை துவட்டிக்கொண்டு இருந்தாள் வானதி.

அதிக நீளமும் இல்லை. ஆனால் நல்ல அடர்த்தியான கேசம் அவளுக்கு. வீட்டினில் அணியும் ஒரு சாதாரண உடை.. எவ்வித ஒப்பனையும் இல்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கிணங்க, இதழில் ஒட்டிக்கொண்டு இருக்கும் மென்னகை ஒன்று அவளை மேனகையாய் தான் காட்டியது.

இமைக்காது தான் இளா பார்த்துக்கொண்டு இருந்தான்.

முன்பிருந்த சலனத்தையும் தாண்டி இப்போது வானதி என் மனைவி என்ற உணர்வல்லவா அவனுக்கு..!

அவனும் மனிதன் தானே..!

அவள் நிற்பது, நடப்பது, தலை துவட்டுவது, கண்ணாடி பார்ப்பது என்று ஒவ்வொன்றையும் இளா பார்க்க, தன்னைப் பார்க்கிறான் என்று தெரிந்தே வானதி அவ்வறைக்குள் இங்கும் அங்கும் அலைந்துகொண்டு இருந்தாள். பேச்சில்லை.. பேச வேண்டிய அவசியமும் இல்லை என்பது போல், இருவரின் உணர்வும் இருவருக்கும் புரிய, அதனை லேசாய் தொல்லை செய்யும் விதமாய் அவ்வறையில் இருந்த கார்ட்லெஸ் ஒலிக்க,

வானதி “சொல்லுங்கண்ணி…” என்றாள்.

“ஜூஸ் குடுத்து விடவா?!!” என

“ஜூஸ் குடிக்கிறீங்களா…?” என்றாள் வானதி இளாவைப் பார்த்து.

“ம்ம்…” என்று இளா கண்களை மூடித் திறக்க “குடுத்துவிடுங்க அண்ணி…” என்று வைத்தவள்,

“கொஞ்சம் பிரெஷ் ஆகுங்க..” என்றாள் மீண்டும்.

“வேணாம்… கொஞ்ச நேரத்துல கிளம்பனும் தானே…”

“கிளம்பனுமா?!”

“ஏன்.. உனக்கு இங்க இருக்கனுமா?!”

“இருக்கலாம்னு சொன்னா இன்னும் நல்லாருக்கும்…” என்று சொல்லி சிரித்தவள், “ரொம்ப நாள் ஆனதுபோல இருக்கு. இன்னிக்கு இருந்துட்டு நாளைக்கு போலாமா?!” என்றாள்.

வந்ததுமே ராதா சொன்னார்தான். இருந்துவிட்டு தான் செல்லவேண்டும் என்று. அது ஒரு சம்பிரதாயப் பேச்சு என்றுதான் நினைத்தான் இளா. ஆனால் வானதிக்கும் ஆசை இருக்கும்தானே. இங்கே வந்து நாளும் ஆனதுதானே.

இத்தனை நாட்களில் ஒன்று அவனாகவாது கேட்டிருக்கவேண்டும். அதுவும் செய்யவில்லை. இப்போது அவளாக கேட்கையில் மறுக்கும் அளவுக்கு நாகரீகம் அற்றவனும் அல்ல அவன். இருந்தும் அவனின் வீட்டில் சொல்லிட வேண்டுமே?!

என்ன சொல்லப் போகிறான் என்று வானதி அவனின் முகம் பார்க்க “நம்ம இங்க வந்தது இன்னும் வீட்ல சொல்லவே இல்ல. ஸ்டே பண்றோம்னா சொல்லிடனும்..” என்றபடி அப்பாவிற்கு அழைக்க, அவர் எடுக்கவில்லை.

அடுத்து மோகனாவிற்கு அழைத்துச் சொல்ல, ஏற்கனவே இளம்பரிதி வீட்டினில் இருந்து வருகையில் அவரோடு சரிவர பேசாது தானே வந்தான். அந்த கடுப்பில்

“ஓ..! இதுக்குத்தான் அவ்வளோ வேகமா கிளம்பினியா நீ…” என்றார்.

“ம்ம்ச் ம்மா..!”

“அதை போறப்போவே சொல்லிட்டு போகுறதுக்கு என்னடா?!”

இதற்குமேல் வானதி முன்னம் எதுவும் பேசிட முடியாது அவரோடு. ஆக “ஹலோ… ஹலோ..!” என்று சொல்லியபடி அவன் எழ,

“பால்கனில சிக்னல் கிடைக்கும்…” என்றாள் மெதுவாய்.

இளா பால்கனி சென்று நின்று “உனக்கு இப்போ என்னாச்சும்மா?!” என,

“எனக்கொண்ணும் ஆகல..” என்றார் பட்டென்று.

அம்மாக்களுக்கே உரித்தான கோபம் இது..! என்னோடு சரியாய் பேசாது கூட சென்றுவிட்டு இப்போது மனைவியோடு அவளின் வீட்டினில் இருந்துவிட்டு நாளை வருகிறேன் என்றால்?! இதற்கு முன்னமும் கூட இளா அவரோடு அமர்ந்து கதை பேசியது எல்லாம் இல்லை. இனியும் அவன் பேசுவானா என்று தெரியாது.  இருந்தும் திருமணம் ஆகிவிட்டால், ஆண்களும் தான் சில நேரம் இப்படியான சென்டிமென்ட் சிக்கல்களில் சிக்கிக்கொள்கிறார்கள்.

“பின்ன என்ன?!”

“ஒன்னுமில்லையே.. உனக்கு எது சரியோ அது செய்…”

“சரிம்மா…” என்றவன் வைத்துவிட, அதற்குள் அங்கே ஜூஸ் வந்திருக்க, திரும்பி வானதியிடம் வந்தவன் “நான் பிரஷ் ஆகிட்டு வர்றேன்…” என,

“இதை தானே முன்னமே சொன்னேன்…” என்றாள் சலுகையாய்.

“அதான் இப்போ செய்றேன்…” என்றவனிடம், வேகமாய் ஒரு டவல், அவனுக்கான மாற்றுடை எல்லாம் எடுத்துக் கொடுக்க,

“நீயும் கால் பண்ணி அம்மாக்கிட்ட பேசிடு…” என்றுவிட்டு போனான்.

வானதிக்கு நானுமா?!  என்று தோன்றியது. அதுதான் சொல்லியாகிவிட்டதே யார் சொன்னால் என்ன என்று. சொல்லவேண்டாம் என்றெல்லாம் எண்ணமில்லை. இவன் பேசிவிட்டானே பின் நான்வேறா என்று நினைத்தாள்.

நினைத்ததை அவனிடம் சொல்லவும் செய்ய “சிலது எல்லாம் பாலோ பண்ணனும்…” என்றான்.

அவன் சொல்வது புரியவில்லை என்றாலும் “ம்ம்ம்…” என்றவள், மோகனாவிற்கு அழைத்துப் பேச, மருமகளோடு எப்போதும் போலவே பேசினார்.

வானதி பேசி முடிக்கும் வரைக்கும் இருந்தவன் பின்னரே குளியல் அறைக்குள் செல்ல, அவனுக்குமே தன் வாழ்வில் இத்துனை மாற்றங்களா என்று இருந்தது. சொல்லப்போனால் தியாகுவிடம் பேசியது ஒரு மன அமைதியை கொடுக்க, அருண் மட்டும் சரியாகி வந்துவிட்டால் போதும் என்று நினைத்தான். அதுதான் எப்போது என்று தெரியவில்லை.

வானதி அதற்குள் ராதாவிடம் தாங்கள் நாளைதான் கிளம்புவதாய் சொல்லியிருக்க, அது பிருந்தா வழியாக வெற்றிவேலன் காதிலும் விழ, அவருக்கே இளம்பரிதியை எண்ணி சற்று வியப்புதான்.

அவனைப் பற்றி அவர் அறியாதவரா என்ன?!

திடீரென்று நடந்த திருமணம்… அதிலும் எப்பேர்பட்ட சூழலில். இதெல்லாம் தாண்டி அவனை ஒருத்தியால் இங்கே பிடித்து வைக்க முடிகிறது என்றால்?!

அதிலும் வானதி…

ஏற்கனவே ஒரு திருமணம் அது தோல்வியை தழுவ, மீண்டும் ஏற்பாடு செய்த திருமணம் நடக்குமா என்ற சூழலில் கடைசி நேரத்தில் மாப்பிள்ளையே மாறிட, இப்போது அதெல்லாம் இருவரையும் பார்த்தால் மற்றவர் கூட மறந்துவிடுவர் போல.

எப்படி இப்படியான ஒரு ஒட்டுதல் சாத்தியம் என்று நினைத்தார்.

நிஜமாகவே இருவருக்கும் இடையில் எல்லாம் சுமுகமாய் இருக்கிறதா இல்லை வெளிவேசமா?!!

இளம்பரிதி மீது அவருக்கு எவ்வித கோபமோ, வருத்தமோ எல்லாம் இல்லை. அவனின் வாழ்வும் நன்றாய் இருந்திட வேண்டும் என்றுதான் நினைத்தார். முதல் அதிர்ச்சியே அவன் அவரிடம் இருந்து விலகியது. அடுத்தது வானதியை திருமணம் செய்ய சம்மதம் சொன்னது.

அடுத்தது இப்போது நடக்கும் நிகழ்வுகள்..

தன்னால் அவனை தன்னிடம் பிடித்து வைக்க முடியவில்லை..!!

ஆனால் சில நாட்களே ஆனாலும் அதனை வானதி செய்துவிட்டாள் என்கையில் அவருக்கு சற்று வியப்பே..

சிறிது நேரத்தில் கீழே வந்த இருவரையும், ஒரு சிறு ஆராய்ச்சிப் பார்வை தான் பார்த்தார். மேலே செல்கையில் அவன் முகத்தில் இருந்த உணர்வுகள் மாறி இப்போது அமைதியாய் இருந்தது. வானதி காலையில் இருந்ததை விட இன்னும் புன்னகையோடு இருந்தாள்.

வெற்றிவேலனுக்கு, வானதி அருண் திருமணம் பேசியது தவறோ என்று இப்போது தோன்ற, மனதில் ஒரு பெரும் பாரம் கூடிக்கொண்டது.

பெரியவன் வாழ்வில் எப்போது என்ன நேரும் என்பதை அவரால் சொல்ல முடியவில்லை. அருண் இப்படி படுப்பான் என்றும் நினைக்கவில்லை. குடும்ப கௌரவம் காக்க தான் செய்த செயல் இத்துனை தூரம் பாதிக்குமா என்று மனது வேதனை கொண்டது.

ஏனோ அந்த நொடி இளம்பரிதியைக் கண்டு சற்று பொறாமையாய் கூட இருந்தது அம்மனிதருக்கு.

சாதாரண மனிதன் தான் அவன்..!! இருந்தும் அவனுக்கு இருக்கும் நிமிர்வு, இதோ இந்த நொடி அவன் முகத்தினில் இருக்கும் அமைதி, யாரையும் நேர்கொண்டு சந்திக்கும் துணிவு இப்போது அவருக்கில்லையே..!!

வானதியை விட்டு, இளாவையே அவர் பார்க்க, இளம்பரிதிக்கு என்ன தோன்றியதோ “என்னாச்சு??!!” என்றான் மெதுவாய் அவர் பக்கம் அமர்ந்து.

“ஒண்ணுமில்ல இளா.. இங்க ஒரு விசேசம்… வந்துட்டு பிருந்தாவை பார்க்காம போக முடியுமா?! அதுதான்…” என,

“இல்ல திடீர்னு என்னவோ யோசனைக்கு போயிட்டீங்களே…” என்றான் அவனும்.

இருவரும், வரவேற்பறையில் இருந்து சற்று தள்ளி போடப்பட்டிருந்த ஒரு சிறு சோபாவில் அமர்ந்திருக்க, அவர்களின் பேச்சினை யாரும் கவனிக்கவும் இல்லை. வானதி தன் அம்மாவினோடு பேச சென்றிருந்தாள். இவர்கள் இருவரும் பேசுவது கண்டு பிருந்தா ஒதுங்கியே நின்றுகொண்டாள். கதிர்வேலனும் வேலை என்று வெளி சென்றுவிட்டான்.

“யோசனை என்ன பெரிய யோசனை?!! ம்ம்ச் மனசுல நிம்மதி இல்ல அவ்வளோதான்…” என்றார் வெற்றிவேலன் வேதனையாய்.

“ம்ம்ம்…” என்று மட்டும் இளா சொல்ல, அதற்குமேல் அவனுக்கு என்ன சொல்ல என்றும் தெரியாது, “அருண் எப்படி இருக்கான். சென்னை கூட்டிட்டு போகணும் சொன்னீங்க. ஆனா இப்போ வரைக்கும் எதுவும் செய்யலை..” என,

“பாரின்ல இருந்து கூட டாக்டர் வந்து பார்த்துட்டு போயாச்சு.. இதுக்குமேல ட்ரீட்மென்ட் இல்லை.. ஆண்டவனா பார்த்து கருணை காட்டினாதான் உண்டு…” என்றவர், கண்களை இறுக மூடி ஆழ மூச்செடுத்து விட்டு,

“நீ எப்படி இருக்க?!” என்றார்.

இளம்பரிதி சற்று வியப்போடு தான் இந்த கேள்வியை எதிர்கொண்டான்.

கோபி பிரச்சனையின் போது கூட இவர் இத்துனை தளரவில்லை. பதில் சொல்லாது அவரையே பார்க்க,

“சொல்லு இளா… என்னை பாவம் பண்ண வச்சிட்டீங்கன்னு தானே உனக்கு என்மேல கோபம்.. இப்போவும் அதே கோவமா?!” என, நிச்சயம் இப்படியொரு மாற்றத்தை இளம்பரிதி அவரிடம் எதிர்பார்க்கவில்லை.

தியாகுவோடு பேசியது தெரிந்திருக்கும், தன்னிடம் அது இதென்று பேசுவார் என்றே நினைக்க, அவரோ முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தில் பேச, அவரைப் போலவே அவனும் ஆழ மூச்செடுத்து விட்டவன் 

“அருண் குணமாகி வந்துட்டா போதும்.. சந்தோசமா இருப்பேன்…” என்றான் தீர்க்கமாய்.

“ஹ்ம்ம்…” என்றவர் “எனக்கு ஒரு உதவி செய்வியா இளா..?” என்றார்.

செய் என்று கட்டளையாய் சொல்லவில்லை. செய்கிறாயா? என்று கேட்டார்.

கிட்டத்தட்ட யாசகம் கேட்கும் குரல் அவரது…

Advertisement