Advertisement

அத்தியாயம் –19

எதிர் எதிர் இருக்கையில் இளாவும், தியாகுவும் அமர்ந்திருக்க, இளம்பரிதிக்கு தியாகு கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியவில்லை. இதற்கும் இளாவின் கவனிப்பில் தான் ஷாலினி மருத்துவமனையில் இருந்தாள் என்பது அவனுக்குத்  தெரிந்திருக்கவில்லை.

இளம்பரிதி நினைத்துக் கூட பார்க்கவில்லை, தனக்கு வாழ்வில் இப்படியொரு சூழல் வரும் என்று. தானுண்டு தன் வாழ்வுண்டு என்று வாழ நினைத்தாலும், அனைவரும் தேடி வந்து, இப்படி அவன் நிம்மதி கெடுக்கையில், அவனும்தான் என்ன செய்வான்.

‘ஏதேனும் கேட்டுவிட்டால், என்ன செய்வது? என்ன சொல்வது?’ என்ற யோசனையிலேயே இளா இருக்க,

“ரொம்ப தேங்க்ஸ் கூப்பிட்டதும் வந்ததுக்கு…” என்றான் தியாகு.

“பரவாயில்ல. சொல்லுங்க. என்ன சந்தேகம் உங்களுக்கு என்ன தெரிஞ்சுக்கணும்…?”

“நீங்க இப்போ அங்க வேலையில இல்லைதானே..”

“ம்ம்…”

“உங்களுக்கு விஷயம் எல்லாம் தெரியும்தானே…”

இளம்பரிதி அதற்கும் “ம்ம்..” என்றுமட்டும் சொல்ல,

“ஷாலினி பண்ணது எல்லாம் சரின்னு நான் சொல்லல.. எந்தவொரு குடும்பத்திலேயும் அதை ஏத்துக்க மாட்டாங்க.. ஆனா ஒருதடவை எங்கள கூப்பிட்டு பேசிருக்கலாம்…” என,

“அதுக்கு நான் என்ன செய்யணும் இப்போ…” என்றான் இளம்பரிதி.

“அது… அவளோட ஹாஸ்பிட்டல்ல யார் இருந்தாங்கன்னு தெரியுமா?!” என்றதும் இளாவிற்கு பக்கென்று ஆகிப்போனது.

அவனின் திடுக்கிடலை வெளிக்காட்டவில்லை என்றாலும், இக்கேள்விக்கு அவனால் உண்மையான பதில் சொல்ல முடியுமா என்ன?! அவன் அமைதியாகவே இருக்க,

“ப்ளீஸ் சொல்லுங்க. அபார்ஷன் பண்ணிருக்காங்கன்னு தெரியும். ஆனா  இப்போவரைக்கும் அவளுக்கு என்ன மாதிரியான ட்ரீட்மென்ட் நடந்தது எதுவுமே தெரியலை. அந்த ஹாஸ்பிட்டல்ல போய் கேட்டதுக்கு அவங்க சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க. சோ ப்ளீஸ்.. அவளோட அங்க யார் இருந்தாங்கன்னு சொல்ல முடியுமா..?” என,

இளா என்ன சொல்வான்..?!

“அ.. அது…” என்று யோசிக்க,

“ஷாலினிக்கிட்ட எதுவும் கேட்க முடியாது.. ஆனா இப்படியே அவளை விடவும் முடியாது. அடுத்தது என்னன்னு பார்க்கணும். அதுக்கு அவளோட ஹெல்த் கண்டிசன் எப்படிருக்குன்னு தெரியனும்… அதனால தான்…”

“ம்ம்ம்…”

“ப்ளீஸ்…”

“இல்.. இல்ல.. அது… எ.. எனக்கு…” என்று வார்த்தைகளை தேடியவனால் துணிந்து இவ்விசயத்தில் பொய் சொல்ல முடியவில்லை.

‘எனக்குத் தெரியாது..’ என்றோ,

‘சொல்ல முடியாது…’ என்றோ,

இல்லை ‘எனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை…’ என்றோ சொல்லிவிட்டு கிளம்பிடலாம்.

ஏற்கனவே அவனுள் இருக்கும் குற்றவுணர்வு, இப்படியான பொய்யை சொல்வதன் மூலம் ‘இவ்வளவு தானா இளா நீ?!’ என்கிற எண்ணத்தை அவனுள் விதைத்து விடும்.

அதை வாழ்நாள் முழுதும் அவனால் சுமந்திட முடியாது என்பது திண்ணம்.

அப்படியொரு சுமையை தாங்கிக்கொண்டு, வானதியோடு நல்லதொரு வாழ்வு வாழ்ந்திட எப்படி இளாவினால் முடியும்?!

அனைத்தையும் தாண்டி இளாவிற்கு ஒரு நிம்மதியான வாழ்வு வேண்டும்.!

‘சொல்லிடு இளா… எது வந்தாலும் பார்த்துக்கலாம்.. உண்மையை சொல்லிடு இளா…’ என்று அவனின் மனசாட்சி சொல்ல, தியாகுவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

“சொல்லுங்க இளம்பரிதி… என் தங்கச்சிக்கு இனியாவது நல்லதொரு வாழ்க்கை அமைச்சுக் குடுக்கணும்…” என்று தியாகு சொல்ல, அவன் எதற்காக மருத்துவ விபரம் கேட்கிறான் என்பது புரிந்தது.

ஷாலினியால் திருமண வாழ்வில் நல்லதொரு முறையில் வாழ முடியுமா என்பதனை தெரிந்துகொள்ளவே இந்த சந்திப்பு என்று புரியவும், அப்பெண்ணிற்கு நல்லதொரு வாழ்வு அமைய வேண்டும் ஆண்டவா என்று மனதார வேண்டினான் இளா.

பொதுவாய் இறை நம்பிக்கை என்பது இல்லை. இல்லை என்பதை காட்டிலும், அதிகம் அதில் கவனம் செலுத்தியது இல்லை. இப்போது நிஜமாகவே ஷாலினிக்காக அவன் மனம் வேண்டியது.

இதற்காகவேனும் தான் உண்மையை சொல்லவேண்டும் என்று நினைத்தவனுக்கு சட்டென்று மனதில் வேறெதுவோ தோன்ற “இதுபத்தி விபரம் எல்லாம் எனக்கு தெரியும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றான் தியாகுவிடம்.

“உங்களைப் பத்தி விசாரிச்சேன்…”

“அப்போ இதைப் பத்தியும் நீங்க விசாரிச்சாலே தெரிஞ்சு இருக்குமே…” என்றவனுக்கு, ஒருவேளை அனைத்தும் தெரிந்துகொண்டே கேட்கிறானோ என்று இருந்தது.

“ஹாஸ்பிட்டல்ல என்ன நடந்ததுன்னு மட்டும் தெரியலை… ஷாலினிக்கிட்ட இதை கேட்கவும் முடியாது…”

“ம்ம்ம்…” என்றவன், ஆழமாய் மூச்செடுத்து விட்டு, நிமிர்ந்து அமர்ந்து “ஷாலினிக்கு ஹாஸ்பிட்டல்ல நானும் இருந்தேன்னு சொன்னா என்ன செய்வீங்க??” என்றான் ஒரு திடமான பார்வையோடும், குரலோடும்.

“என்னது?!” என்று தியாகு திகைத்துப் பார்க்க,

“சொல்லுங்க.. என்ன செய்வீங்க?!” என,

“நி.. நிஜமா நீ.. நீங்களா இருந்தீங்க…” என்றான் நம்பாத தன்மையோடு.

அதில் ஒரு வலியும் இருந்ததுவோ என்னவோ?!

“ம்ம்… முழுசா நான் இருக்கல.. பட் அட்மிட் பண்ணது நான்தான்…” என்ற இளம்பரிதிக்கே மனதில் மீண்டும் பாரம் கூடிவிட்டது.

அந்த நொடி, அந்த பெண் ஷாலினி, அவள் மனது என்ன பாடுபட்டிருக்கும். இளா அதனை நினைக்க, தியாகுவின் முக பாவனை அப்படியே மாறிவிட்டது.

“உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா.. அவளுக்குன்னு அண்ணன் அம்மான்னு குடும்பம் இருக்கே. எங்க பொண்ணை எங்கக்கிட்ட விட்டிருந்தா நான் என்ன செய்யணுமோ செஞ்சிருக்க மாட்டோமா…” என்று வெகுண்டு விட,

“ஷ்…!!!” என்று அவனை அடக்கிய இளா,

“இதோ பாருங்க.. பொது இடத்துல பேசிட்டு இருக்கோம்.. கொஞ்சம் அமைதி.” என,

“என்ன அமைதி… உங்களைப் பத்தி விசாரிக்கவும் நான் என்னவோன்னு நினைச்சேன்.. ச்சே.. கடைசியில நீங்க…” என்று பேசியவன் “உனக்கெல்லாம் என்ன மரியாதை… நீயும் அவனுங்க மாதிரிதான்…” என,

“போதும்..!” என்று கையை உயர்த்தினான் இளம்பரிதி.

“உங்க சூழ்நிலை புரியுது. அதுக்காக எப்பவும் நான் இப்படி பொறுமையா போக மாட்டேன். இப்போ நான் பொய் சொல்லிருக்க முடியும். சொல்லிருந்தா என்ன செஞ்சிருக்க முடியும் உங்கனால?” என்றவனுக்கு பழைய நிமிர்வு வந்திருக்க,

‘உன்னால் என்ன செய்ய முடியும்?’ என்ற பார்வையே.

உண்மைதானே…!!

இளாவின் வார்த்தைகளின் தியாகு அப்படியே அடங்கிட, அவனிடம் அப்படியொரு தொய்வு…

பதில் பேசாது தியாகு அமர்ந்திருக்க, இளம்பரிதி அப்போது நடந்தது எல்லாம் சொல்ல “இதெல்லாம் தப்புன்னு உங்களுக்குத் தெரியலையா…” என்றான் தியாகு.

“தெரிஞ்சதுனால தான் அங்கிருந்து வந்துட்டேன்..”

“ஆனா அவங்க வீட்டு பொண்ணயே கல்யாணம் பண்ணிருக்கீங்க…”

“ம்ம்ச்.. இங்க பாருங்க.. நீங்க என்ன பேச வந்தீங்களோ அதை மட்டும் பேசணும். என் கல்யாணம், என் பொண்டாட்டி இதெல்லாம் இதுல சம்பந்தப்படல. அதை உங்களுக்கு விளக்கனும்னு அவசியமும் இல்ல…” என்ற இளாவினுள்,

வானதிக்கும் சரி, அவர்களின் திருமணத்திற்கும் சரி இந்த பாவங்களில் எவ்வித பங்கும் இல்லை, அதை யார் சொன்னாலும் ஏற்கவும் முடியாது என்று முடிவோடு இருந்தான்.

“ஓகே.. ஓகே…” என்ற தியாகு “ஷாலினிக்கு ஆப்ரேசன் பண்ண டாக்டர்கிட்ட நீங்க பேச முடியுமா…?” என,

“எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.. யோசிக்கணும்.. எனக்கு மறுபடி மறுபடி இந்த விசயத்துல தலையிடுறது சரின்னு படல… முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்னு தோணுது..” என்றான் இளம்பரிதி.

“உங்கள நான் வேறெதுவும் கேட்கலையே…?”

“என்னோட நிலைல இருந்து பார்த்தா மட்டும்தான் உங்களுக்குப் புரியும்… இப்போ கூட நான் நினைச்சா மறைச்சிருக்கலாம். ஆனா அப்படி செய்யல.. காரணம், உங்களுக்கும் சரி எனக்கும் சரி மனசுக்கு ஒரு அமைதி வேணும். அடுத்தடுத்து வாழ்கையில முன்னேறி போகணும்…” என்றவன்

“ஆனா ஒரு விஷயம் அருண் மட்டும் குணமாகாம இருக்கட்டும், நிச்சயம் நான் உங்களை சும்மா விட மாட்டேன்…” என,

‘அதெப்படி தெரியும்..?’ எனும்விதமாய் தியாகு பார்க்க,

“என்னால யூகிக்க முடியாதுன்னு நினைச்சீங்களா..?” என்ற இளா,

“ஏன் அப்படி பண்ணனும். அருணுக்கு எதுவுமே தெரியாது. நடந்ததுல அவன் எங்கயுமே இல்ல.. அதுவும் அவன் கல்யாண நாள் அன்னிக்கு இப்படி?” என,

“என் தங்கச்சிக்கு கொடுமை பண்ணிட்டு, அவங்க சந்தோசமா அவங்க மகனுக்கு கல்யாணம் செய்வாங்க.. நான் சும்மா இருக்கனுமா?” என்றான் தியாகு கோபமாய்.

அவனின் அதே கோபம் இப்போது இளாவிடமும் தொற்றிக்கொள்ள, “உங்க தங்கச்சிக்கு தெரியாம எதுவுமே நடக்கல. இவ்வளவு நடந்ததுதானே, ஷாலினி ஒருதடவ கூட ஏன் உங்களுக்கு சொல்லல? அவரவருக்கு அவரவர் நியாயம்.. ஆனா உங்க நியாயம், அருணை இப்படி செஞ்சிருக்கக் கூடாது…” என்றான் காட்டமாய்.

“அந்த குடும்பத்து மேல இவ்வளோ பாசமா?!” என்ற தியாகுவிற்கு ஒரு கசப்புணர்வு.

“அருண் என்னோட பிரன்ட்…”

“ஓ..! நீங்களே சொல்லிட்டீங்களே அவரவருக்கு அவரவர் நியாயம்னு.. எனக்கு சரின்னு பட்டத நான் செஞ்சேன்…”

“அப்போ… எனக்கும் எது சரின்னு படுதோ அதைதான் செய்வேன். இனிமே என்னை காண்டாக்ட் பண்ண முயற்சி செய்ய வேண்டாம்… முடிஞ்சது எல்லாம் முடிஞ்சதாவே இருக்கட்டும்…” என்றபடி இளா எழுந்துவிட,

“அத்தனை சீக்கிரம் நீங்க இதுல இருந்து வெளிய வர முடியாது இளம்பரிதி. நெக்ஸ்ட் டைம் கால் பண்றப்போ நான் கேட்ட டீடெய்ல்ஸ் சொல்லுங்க…” என்ற தியாகுவும் எழுந்துகொள்ள,

‘மிரட்டலா…’ எனும்விதமாய் தான் பார்த்தான் இளா.

“ஹா ஹா மிரட்டல் எல்லாம் இல்லை. உங்களை நான் பாலோ பண்ணது போல, ரெண்டு நாளா கோபி அப்பாவோட ஆளுங்க என்னை பாலோ பண்றாங்க. இப்போ நம்ம பேசினது கூட அவருக்கு தெரிஞ்சிருக்கலாம்…” என்றவன் முகத்தில் அப்படியொரு குரோதப் புன்னகை.

“என்னது?!!!!” என்று முறைத்த இளா, “என் மனசுக்கு ஒரு அமைதி கிடைக்கனும்னு தான் உங்கக்கிட்ட உண்மையை ஒத்துக்கிட்டேன். அதோட எல்லாம் முடிஞ்சது. இதுக்கு மேல யாராலயும் என்னை அது இதுன்னு சொல்லி எதுவும் பண்ண முடியாது. என்ன தெரியனுமோ அதை கோபி அப்பாக்கிட்ட நேராவே கேட்டுக்கோங்க. யாரா இருந்தாலும் சரி முடிஞ்சத பார்த்துக்கோங்க…”  என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.

இனி யாராலும் அவனை கட்டுப்படுத்த முடியாது..!!

அவன்.. அவனது வாழ்வு.. அதுமட்டுமே அவனின் சிந்தையில்..!

சம்பந்தப்பட்டவரிடமே நடந்ததை ஒப்புகொண்டாகி விட்டது. பாதிப்படைந்தவள் பாதுகாப்பாய் அவளின் குடும்பத்தோடு இருக்கிறாள். கோபியை வெற்றிவேலன் பார்த்துக்கொள்வார். அருண் மட்டும் குணமாகிவிட்டால் போதும்.

‘போங்கடா நீங்களும் உங்க பிரச்சனையும்… முட்டி மோதனும்னா நேரா மோதுங்கடா.. நான் எதுக்கு நடுவில…’ என்ற எண்ணங்களோடு திண்டுக்கல் வந்துவிட்டான்.

காலையில் கிளம்புகையில் இருந்த இதம் இப்போதில்லை. வானதி அங்கே ஜிங்கிள்ஸ் விட்டு இன்னும் வந்திருக்கவில்லை. வீட்டிற்கு வரவும் மோகனா “எங்கடா மருமக..?!” என்று கேட்டபின்னே தான் அவனுக்கு அவளிடம் சொல்லாமல் கூட இங்கே வந்தது நினைவு வர,

“ச்ச்…” என்று தலையில் அடித்தவன், மீண்டும் கிளம்ப,

“டேய் டேய் இளா…” என்றார் அம்மா.

“என்னம்மா?!”

“எங்க போற?”

இளாவோ பதில் சொல்லாது முறைக்க, “மருமக எங்கன்னு கேட்டா அதுக்கும் பதில் இல்லை. எங்க போறன்னு கேட்டா அதுக்கும் முறைக்கிற…” என,

“என்னதான் ம்மா வேணும்?!” என்றான் சலிப்பாய்.

உடலும் உள்ளமும் சிறு ஓய்வு கேட்பதாய் இருக்க, அவனுக்கு யாரோடும் பேசவும் கூட பிடிக்கவில்லை அப்போதும். இருந்தும் வானதியிடம் சொல்லாது விட்டு வந்தது தப்பென்று பட, அதன்பொருட்டு தான் மீண்டும் கிளம்பினான்.

“ஒண்ணுமில்ல அப்பாக்கு சாப்பாடு குடுத்துவிட தான் கேட்டேன்…”

“ஓ..!!” என்றவன் “எடுத்து குடு…” என,

“நீ இவ்வளோ சலிப்பா எல்லாம் கொண்டு போக வேணாம்…” என்றார் மோகனா.

“ம்மா.. எனக்கு ஏற்கனவே எரிச்சலா இருக்கு. நீவேற கடுப்பேத்தாத… குடுக்குறதுன்னா குடு..” என,

‘எப்போ பாரு இவன் இப்படித்தான் மூஞ்சில முள்ளு கட்டிட்டு இருப்பான்…’ என்று அவனுக்கு முனங்கியபடி மோகனா உள்ளே போனதும், சட்டென்று இளா அங்கே இருந்த கண்ணாடியில் தன் முகம் பார்த்தான்.

‘அம்மாவே இப்படி சொல்லிட்டு போனா, வானதியும் அப்படித்தான் நினைப்பாளோ…’ என்று அவனின் நினைப்புப் போக,

‘ச்சே ச்சே நீ நல்லாத்தான்டா இருக்க…’ என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டான்.

அடுத்து மோகனா கொடுத்த சாப்பாட்டை, அவனின் அப்பாவிற்குக் கொடுத்துவிட்டு, மீண்டும் ஜிங்கிள்ஸ் செல்ல, அத்தனை வேகத்தில் பறந்தான் என்றுதான் சொல்லவேண்டும்.

‘சும்மாவே அது இதுன்னு சொல்லுவா… இப்போ கேட்கவே வேணாம். கேள்வியா கேட்டுத் தள்ளப் போறா…’  என்று ஒரு சிறிய படபடப்பு அவனுள் ஏற்பட, ஜிங்கிள்ஸினுள்ளே போக, வானதியோ சாதாரணமாய் பார்த்து வைத்தாள்.

“அது கொஞ்சம் வேலை…” என்று அவன் எதோ சொல்ல வர,

“இட்ஸ் ஓகே அதனால ஒண்ணுமில்ல…” என, எதோ ஒரு ஏமாற்றம் அவனுக்குத் தோன்றியது.

“உக்காருங்க…” என்று தன் முன்னிருந்த சாய்வு இருக்கையை காட்டியவள், “பைக் சத்தம் கேட்டது..?” என,

“ம்ம் திண்டுக்கல் போயிட்டேன்.. திரும்ப வந்தேன்…” என்று இவன் சுரத்தே இல்லாது சொல்ல,

“அட ஏன்?!!” என்றாள்.

“ம்ம்ச்… உனக்கு சொல்லவும் இல்லை தானே…”

“அதனால என்ன. ஒரு கால் பண்ணிருந்தா போதுமே.. இதுக்காக நீங்க திரும்ப வரணுமா என்ன?!”என,

“இப்போ என்ன நான் வந்திருக்கக் கூடாது அவ்வளோதானே…” என்றான் சுல்லேன்று.

இவளுக்காக வந்தால் இப்படி சொல்கிறாளே..! என்று தோன்ற, ஏமாற்றம் கடந்து எரிச்சலும் மண்டிக்கொள்ள “சரி நான் கிளம்புறேன்…” என்று எழுந்துகொண்டான்.

“அடடா..!! இப்போ நான் என்ன சொல்லிட்டேன்…” என்றவளுக்கு அப்போதும் புரியவில்லை அவனின் இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன என்று.

“ஒண்ணுமில்ல…” என்றவன் திரும்பி நடக்க,

“நில்லுங்க…” என்றபடி அவன் முன்னே வந்து நின்றாள் வானதி.

அப்போதும் அவளுக்கு இலகுவான பாவனையே இருந்தது. காலையில் அவனோடு வருகையில் இருந்த இதழ் இன்னமும் அப்படித்தான் இருந்தது. அதனை அவள் கெடுத்துக்கொள்ளவோ, மாற்றிக்கொள்ளவோ விரும்பவே இல்லை. இது அவனுக்குப் புரியவேண்டுமே!

இளாவிற்கு ஏதோ அழைப்பு என்றதும் அவன் தாமதமாக வந்தாலும் சரி, இல்லை வேலை என்று சொன்னாலும் சரி தான் பெரிது செய்திடக் கூடாது என்று இருந்தாள். அவன் திண்டுக்கல் சென்று திரும்பி அவளுக்காக வந்தது சந்தோசமே என்றாலும், அலைச்சல் தானே என்று இப்படி சொல்ல, அவனோ முறுக்கிக்கொள்ள

“நான் ரொம்ப ரிலாக்ஸா இருக்கேன்.. மார்னிங் வர்றப்போ இருந்த ஒரு குட் பீல் அதை நான் கெடுத்துக்க விரும்பலை…” என்று அவன் முகத்தின் நேரேயே சொல்லிவிட்டாள்.

“ஹா…!!” என்று இளா பார்க்க,

“புரியலையா?!” என்று கைகளை ஆட்டி வானதி கேட்க, இளம்பரிதி அமைதியாகவே நின்றான்.

இதற்குமேல் அவளுக்கு எப்படிச் சொல்வது என்பதும் தெரியவில்லை.

“சரி வாங்க கிளம்பலாம்…” என,

“இல்ல.. நீ உன்னோட வொர்க் பாரு. நான் கிளம்புறேன்…” என்று இளா சொல்ல, அப்போதும் அவனின் குரலோ முகமோ மாறுதல் அடையவில்லை.

அவனை உறுத்துப் பார்த்தவள் “அம்மா போன் பண்ணாங்க… இங்க வந்திருக்கேன் சொல்லவும் வீட்டுக்கு வர சொன்னாங்க.. நீங்க திரும்ப வந்தா போகலாம்னு நினைச்சேன்…” என்றாள்.

“அதை முன்னமே சொல்லிருக்கலாம்ல. என்னவோ ஏன் வந்த அப்படிங்கறது போல பேசினா?!”

“திண்டுக்கல் போயிட்டு திரும்ப வந்ததுக்கு தான் அப்படி…”

“ம்ம்ம்… சரி…” என்றவன் அதற்குமேல் ஒன்றுமில்லாதது போல் முடித்துக்கொள்ள,

“போலாமா?!” என்றாள் திரும்ப.

அவனுக்கு வீடு செல்லவேண்டும் போல இருந்தாலும், இதனை எப்படி மறுப்பது. வேண்டாம் என்றாலும் அதற்கு ஒரு காரணம் சொல்லவேண்டுமே?! என்ன சொல்வது என்று யோசிக்கையில், ராதா மீண்டும் வானதிக்கு அழைத்துவிட

“ம்மா இப்போதான் அவர் வந்தார்.. பேசிட்டு இருக்கோம்…” என்று அவளும் சொல்ல,

ராதா இளாவிடம் அலைபேசி கொடுக்கும்படி சொன்னாரோ என்னவோ “இதோ தர்றேன்…” என்று அவனிடம் நீட்டினாள்.

‘நீயே பேச வேண்டியது தானே…’ என்று சைகை செய்தபடி இளா ராதாவோடு பேச, அவரோ “வீட்டுக்கு வாங்க…” என்று அழைப்பு விடுக்க, திருமணம் என்ற ஒன்று ஆகி, குடும்பஸ்தனும் ஆகிவிட்டால் இதெல்லாம் மறுக்க முடியாதவை தானே.

“சரி…” என்றவன் வானதியிடமே அவளின் அலைபேசி நீட்ட,

“வர்றோம்மா…” என்று சந்தோசமாக சொல்லி வைத்தவள் “போலாமா…” என்றாள் அதே சந்தோசத்தோடு.

அவன் பைக்கில் வந்திருக்க, இவளது காரும் இங்கிருக்க, இளா எதில் செல்வது என்று யோசிக்கும் முன்னம், “பைக்ல போலாம். பக்கம்தானே.. பைக்லயே வீட்டுக்கும் போயிடலாம். நாளைக்கு வந்து என்னை டிராப் பண்ணிடுங்க. தென் நான் கார் எடுத்துட்டு வந்துடுவேணாம்…” என்று வானதி சொன்ன கதைக்கு அவனால் சரி என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்.

Advertisement