Advertisement

 

அத்தியாயம் – 18

கோபி மேலும் மேலும் தவறுகளின் பக்கம் போவதாய் இருக்க, ஏற்கனவே செய்த ஒரு தவறை மறைக்கவே இத்தனை பாடுகள். ஒருவனை உயிரோடு படுக்கவும் வைத்தாகிவிட்டது. இதில் அதற்கும் மேலே வேறொன்று என்றால்?!

மகன் தவறான பாதையில் செல்கிறான் என்று தெரிந்த நொடியில் அவனை கண்டித்திருந்தால், தண்டித்திருந்தால் இப்போது கோபிக்கு இப்படியான சிந்தனை வந்தே இருக்காதோ என்னவோ?!

அதைவிட்டு, குடும்ப கௌரவம் காக்கிறேன் என்ற பெயரில், மகனின் தவறை அவனுக்கு உணர்த்தாமல், மூளை சலவை செய்து, ஷாலினியை அவனிடம் இருந்து விலக்க, அவளையும் அழைத்துப் பேசி, அதாவது கிட்டத் தட்ட மிரட்டி, என்று எல்லாம் செய்தது இவர்தானே.

அப்போது கோபிக்கு என்ன தோன்றும், அப்பா எதுவும் செய்வார் என்றுதானே..!

அதனால்தான் இப்போதும் இப்படி சொல்ல, வெற்றிவேலனுக்கு தான் செய்த செயலின் வீரியம் புரிந்தது.

அதிர்ந்து நின்றவர் அப்படியே இருக்க “ப்பா என்னப்பா?! அமைதியா இருக்கீங்க.. அவன் அடுத்து என்னவேனா செய்யலாம். அருண் நிலைமை பார்த்தீங்க தானே?! இதெல்லாம் இந்த தியாகுவோட வேலையா தான் இருக்கும்.. எனக்கு நல்லா தெரியும்…” என்று கோபி பல்லைக் கடிக்க,

“சரி போ… போய் அவன்மேல போலீஸ் கம்ப்ளைன்ட் குடு…” என்றார் பட்டென்று.

“அப்பா…!!!”

“என்னடா சும்மா சும்மா.. அதுக்காக கொலை செய்ற அளவுக்கு யோசிப்பியா நீ? பண்ண தப்பெல்லாம் போதாதா. அதுக்குத்தானே நம்ம வீட்ல ஒருத்தன் இப்படி படுத்துக் கிடக்கான்…” என்றவர், முயன்று தன் பொறுமையை இழுத்துப் பிடித்து,

“அடுத்து அவனைப் பார்த்தா என்கிட்டே கூட்டிட்டு வா. பேசிக்கலாம். நீயா எதுவும் எனக்குத் தெரியாம செய்றேன்னு இன்னும் என்னை பாவம் பண்ண வச்சிடாத…” என்றுவிட்டு போனார்.

பேச்சை அதோடு முடித்திருந்தாலும், வெற்றிவேலனுக்கு, கோபி இதோடு இந்த விசயத்தை விடுவான் என்று அவருக்கு திண்ணமாய் தெரியவில்லை. கண்டிப்பாக ஏதாவது செய்வான் என்றே தோன்ற, சிறிது நாட்களுக்கு இந்த கோபியை வேறெங்கிலும் அனுப்பி வைக்கலாம் என்று எண்ணினான்.

அதுதானே அவர் எப்போதும் செய்யும் ஒன்று!

மகனை இங்கிருந்து அகற்றிவிட்டுத்தானே அவர் எந்தவொரு காரியமும் செய்வது.

ஆனால் இம்முறை எப்படி? என்ன செய்வது என்பது அவருக்குப் புரியவில்லை. தியாகுவின் திட்டம் என்ன என்றும் புரியவில்லை.

தியாகு பழி வாங்கிட வேண்டும் என்றிருந்தால் அவன் கோபியை அல்லவா விபத்துக்குள்ளாக்கி இருக்க வேண்டும்?! அருணுக்கு நடந்த விபத்து, நிஜமாகவே இவன் செய்த வேலைதானா என்பதும் ஊர்ஜிதம் ஆகிடவில்லை.

இப்படி தலையும் புரியாது காலும் புரியாது இருக்க, அவனை அழைத்துப் பேசுவது என்பது சரியாய் இருக்குமா என்று யோசித்தார். அவனின் திட்டம் தெரிந்தாலாவது ஏதேனும் செய்யலாம், இல்லை அதற்கு ஏற்ப அவனிடம் பேசலாம்.

இப்படியே யோசித்தே அமர்ந்திருக்க, அங்கே தியாகு மெது மெதுவாய் தன் திட்டத்தில் முன்னேறிக்கொண்டு இருந்தான். அதிலும் அவன் இப்போது எடுத்து வைத்திருக்கும் அடி, இளம்பரிதியை நோக்கி.

ஆம்! இளம்பரிதியை சந்திக்க நேரம் பார்த்துக்கொண்டு இருந்தான்.

அன்று கோவிலில் வைத்து இளாவைப் பார்த்தது, அவனின் உடல் மொழி எல்லாம், எல்லாமே அவன் என்னவோ வெற்றிவேலன் குடும்பத்தில் முக்கியஸ்தன் போல என்றதொரு தோற்றம் கொடுக்க, அவனைப் பற்றி உடனடியாக விசாரித்து இருந்தான்.

விசாரித்த அளவிற்கு, இளம்பரிதி பற்றி நல்லவிதமாகவே செய்தி கிடைக்க, அவனிடம் ஒருமுறை பேசிப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. முடிந்தால் அவனின் உதவியை நாட வேண்டும் என்றும் யோசித்தான்.

வெற்றிவேலனுக்கு விசுவாசி என்கிற போர்வை எப்போதுமே இளம்பரிதி மீது படியவில்லையே.

ஊழியன்..! நேர்மையான ஊழியன்… இப்போது அதுவுமில்லை.

அதனாலேயே தியாகு, இளாவை சந்திக்க முயல, இளம்பரிதியோ மும்முரமாய் வானதிக்கு ‘ஜிங்கிள்ஸ்..’ புதிதாய் ஆரம்பிக்கும் வேலையில் இருந்தான்.

அன்று மறுநாளே அழைத்துப் போகிறேன் என்றவன், என்னவோ நான்கைந்து நாட்கள் நீட்டிவிட்டான். பார்க்கும் இடங்கள் முதலில் அவனுக்குத் திருப்தியை இருந்தால் மட்டுமே வானதியை அழைத்துக் கொண்டு செல்லவேண்டும் என்பது அவனின் முடிவு.

அவனுக்கே திருப்தி இல்லையெனில் அவளுக்கு எப்படி மனதிற்கு பிடிக்கும் என்ற யோசனையில் நாட்களை கடத்த,

“அஞ்சு நாள் ஆச்சு…!” என்றாள் வானதி கடுப்பாக.

“பாக்குறப்போ எனக்கே ஒகே தோணனும் தானே.. அப்படி இல்லாதப்போ நான் எப்படி உன்னை கூட்டிட்டு போவேன்…” என்றான் அவனும்.

“ம்ம்ம்ம்…” என்றவளுக்கு, தன் அண்ணனிடம் சொல்லியிருந்தால் இந்நேரம் வேலையே முடிந்திருக்கும் என்றும் தோன்ற, இளம்பரிதியை மீறி அவளால் அதனை செய்திட முடியும் போலவும் இல்லை.

இவன் – என் கணவன் என்ற எண்ணம் அவள் மனதில் நன்கு பதிந்து போனது என்றுதான் சொல்லவேண்டும்.

சொல்ல முடியா மாறுதல்கள் ஒவ்வொரு முறையும் அவனோடு நேரம் செலவிடுகையில் அவளுக்கு ஏற்பட, மனதிற்குள் சந்தோசமாகவே தான் வானதி இருந்தாள். என்ன பெரிதாய் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை அவ்வளவே.

தெய்வா வேறு ஊருக்குச் சென்றிருக்க, வீட்டினில் அவளும் மோகனாவும் மட்டும் தானே. இளம்பரிதி அவனின் அப்பாவோடு அவர்களின் சூப்பர் மார்கெட் சென்றுவிடுவான்.

“இங்க செட் பண்றது வரைக்கும்  அங்க போயிட்டு வர்றேன்…” என்று இளாவிடம் சொல்ல,

“அம்மாவையும் கூட கூட்டிட்டு போ..” என்றான்.

“அத்தையா?!!”

“ம்ம்… சும்மா வர்றீங்களா கேளு. வந்தா கூட்டிட்டு போ.. எதிர்பார்ப்பாங்க…” என, அதுபோலவே வானதி மோகனாவிடம் கேட்க,

“நானா??!!” என்றார் அவர்.

வானதியோடு சகஜமாய் பேசினாலும், இன்னும் அவருக்கு ஏனோ ஒட்டுதல் இல்லாதது போலவே இருந்தது. அதை கவனித்துத் தான் இளா இப்படி சொல்லியிருக்க,

“வாங்கத்தை.. வீட்ல வேலை முடிச்சிட்டு சும்மாதானே இருக்கீங்க…” என,

“அங்க வந்தும் நான் சும்மாதான் இருப்பேன்…” என்றவர் “அங்க டிவி எல்லாம் இருக்கா?!” என்றார்.

அவளுக்குப் புரிந்துபோனது இங்கே ஓடும் நாடகம் அங்கே சென்றும் பார்க்கவென்று. இங்கே டிவியில் நாடகம் ஓடினாலே இவளுக்குப் பிடிக்காது. அதனாலேயே அறைக்குள் இருந்துகொள்வாள். அதையும் அவன் கவனித்தே இருக்க, இப்போது வானதி லேசாய் அவனை முறைக்க,

வந்த சிரிப்பை அடக்கி “ம்மா.. போய் நீயும் பழகும்மா..” என,

“ஆமான்டா… பேரன் பேத்திய குளிப்பாட்டுற வயசுல என்னைய நாய் பூனைய குளிப்பாட்ட சொல்றியா…?” என்றுவிட்டு போய்விட, இப்போது வானதி பகீரங்கமாகவே இளம்பரிதியை முறைக்க, அவனுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

“போதும் போதும் நானே போயிட்டு வந்திருப்பேன்…” என்றவளுக்கு எரிச்சல் வந்தது அவனின் சிரிப்பினில்.

பின்னே இப்போதெல்லாம் அடிக்கடி கிண்டல் செய்து சிரிக்கிறான்.

சந்தோசமாக இருந்தாலும், சில நேரம் கடுப்பாகவும் இருக்கும். இளாவினை போல் பல நேரம் அவளால் உரிமை எடுத்துக்கொள்ள முடிவதில்லை. அவ்வப்போது திடீரென எதுவும் யோசனை வந்துவிடும் இவன் நம்மை என்ன நினைப்பான் என்று.

இப்போது அப்படி யோசனை இல்லை என்றாலும், அவனின் கிண்டல் அவளை சீண்ட 

“ரொம்ப சிரிக்காதீங்க…”

“இல்ல நினைச்சுப் பாரேன்.. ஒரு பக்கம் நீ உன்னோட பெட்ஸ் குளிப்பாட்டு. இன்னொரு பக்கம் எங்கம்மா நம்ம குழந்தைய குளிப்பாட்டட்டும்..” என்று சிரிப்பினூடே அவன் சொல்ல,

தான் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து அவனும் பேச்சை நிறுத்தி அவளைப் பார்க்க, அவளும் அது போலவே பார்க்க, இருவருக்கும் இடையில் இன்னும் ஓர் நெருக்கம் கூடுவதாய் தான் இருந்தது.

‘உன் பொண்டாட்டி டா.. அவக்கிட்ட மட்டும் தான் இப்படியெல்லாம் நீ பேச முடியும்…’ என்று அவனின் மனதும்,

‘இதெல்லாம் ரசிக்க பழகு.. உன்னோட வாழ்க்கை அழகா இருக்கும்…’ என்று அவளின் மனதும் சொல்ல,

“சரி.. இப்போ நான் எப்படி போறது..?” என்றாள் ஒரு மென்னகையோடு.

தான் சொன்னதை அவள் தவறாக எடுக்கவில்லை என்றதும், இளாவிற்கு ஏக குஷியாகிப் போனது.

“இத்தனை நாள் எப்படி போன…?” என்றவன், வேலை இருப்பது போல் பாசாங்கு செய்ய,

“ம்ம்ச்.. இப்போவும் நான் பாட்டுக்கு கார் எடுத்துட்டு போயிடுவேன்…” 

“போ..!”

“அதெப்புடி..!! எனக்கு காலம் முழுக்க டிரைவர் வேலை பார்க்க நீங்க இருக்கீங்களே…” என்று வானதி சொன்ன விதத்தில் இளாவிற்கு மேலும் சிரிப்பு வந்தது.

இதே வார்த்தைகளை அவன் எத்தனை எரிச்சலாய், கோபமாய் எல்லாம் நினைத்து இருக்கிறான். இன்று அதுவே அவள் சொல்கையில் சந்தோசமாக அல்லவா இருக்கிறது.

“அது சரி..!!” என்றவன் “கிளம்பு…” என,

“நான் ரெடி…” என்று அவள் சொல்ல, பின் அவனும் கிளம்பி வானதியை அழைத்துக்கொண்டு சென்றான் அவளின் ‘ஜிங்கிள்ஸ்’ பார்க்க.

காரில் தான் பயணம்…!!

இனிமையாகவே இருந்தது இப்பயணம். இருவரின் மனதிலும் ஒரு மெல்லிய இதமான உணர்வு. இதழில் உறைந்த புன்னகை என்று ஜிங்கிள்ஸ் சென்று சேரும் வரைக்கும் கூட. அதிகம் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் அந்த பொழுது இருவருக்கும் ரசிப்பானதாக இருந்தது.

ஜிங்கிள்ஸ் உள்ளே வானதி நுழையும் போதே சொல்லிவிட்டாள் “உள்ள வந்து நான் என்ன சொல்றேனோ அதை அப்படியே பாலோ பண்ணனும்…” என்று.

பின்னே இவனுக்கு செல்ல பிராணிகளோடு அத்துனை பரிட்சயம் இல்லையே..!

‘இதுவேறயா…!’ என்று இளா பார்க்க,

“சரின்னா உள்ள வாங்க…”

‘தோடா..!!’ என்று அவனின் பார்வை மாற,

“சரி சரி.. உள்ள வந்து அமைதியா உக்கார்ந்துக்கோங்க…” என்று வானதி முன்னே போக,

‘நேரம் டா…!!’ என்று எண்ணிக்கொண்டு உள்ளே செல்ல காலை வைக்க, இளம்பரிதியின் அலைபேசி தன்னிருப்பை காட்டியது.

எடுத்துப் பார்க்க, புதிய எண்ணாய் இருக்கவும் அவன் முகம் யோசனையில் சுருங்க, “பேசிட்டு வாங்க…” என்றாள் வானதி.

“புது நம்பர்… கால் பண்ணி லோன் வேணுமா அது இதுன்னு கேட்பாங்க…”  என்றவன் அழைப்பை ஏற்காது, அவளோடு செல்லப் போக, திரும்பவும் அழைப்பு வர,

“தெரிஞ்சவங்களா இருக்கப் போறாங்க. பேசிட்டு வாங்க…” என்றவள், உள்ளே சென்றுவிட, இளம்பரிதிக்கு அழைத்தது வேறாரும் இல்லை தியாகு தான்.

அவனோடு தனியே பேசிட வேண்டும் என்று.

இளாவின் முகம் அப்படியே மாறிட “ப்ளீஸ்.. முடியாதுன்னு சொல்லிட வேண்டாம்…” என்ற தியாகுவின் குரலில்

“சொன்னா என்ன செய்வ..” என்றான் இளா.

“என் தங்கச்சிக்கு நியாயம் கேட்டு உங்களோட பேச வரல. சில சந்தேகம் கேட்கணும். ஒரு அண்ணனா என்னோட நிலை உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன்…” என்றதும் இளம்பரிதிக்கு சாட்டையால் அடித்தது போலிருந்தது.

அவனுக்கும் தானே ஒரு தங்கை இருக்கிறாள்..!

ஷாலினியும் தானே அவனை அண்ணா என்று அழைத்தாள்..!

ஆனால் அவளை மருத்துவமனை அழைத்துச் சென்ற பின்னும் கூட ஏன் எதற்கு என்ற காரணங்கள் தெரியாதே இவனுக்கு.

வெற்றிவேலன் வந்து ‘தெரிந்தவர்களின் பெண்.. பாவம் வசதியில்லை. கவனிக்கவும் ஆள் இல்லை. வயிற்றினில் கட்டி.. ஆப்ரேசன் செய்ய வேண்டும் என்று உதவிக் கேட்டாள். நீ கொஞ்சம் என்னன்னு பார்த்து செஞ்சு குடு…’ என்று சொல்ல, முதலில் இளம்பரிதி தயங்கினான்.

ஆண் என்றால் கூட பரவாயில்லை. அதிலும் வயதுப் பெண் வேறு..

“நீ ஒன்னும் தயங்காத இளா… ஹாஸ்பிட்டல், டாக்டர் எல்லாம் நான் ஏற்பாடு பண்ணிட்டேன்.. அந்த பொண்ணோட தங்குறதுக்கும் ஆள் ஏற்பாடு பண்ணிட்டேன். நீ கூட போய் சேர்த்துவிட்டுட்டு, மற்ற தேவை என்னவோ அது மட்டும் பண்ணி கொடு.. பில் எனக்கு வந்திடும். ஒன்னும் பிரச்சனை இல்லை…” என,

‘இவ்வளோதானா?!’ என்று எண்ணியவனுக்கு அப்போது எதுவும் தெரிந்திருக்கவில்லை.

ஷாலினிக்கு கருகலைப்பு செய்து, மேலும் ஒரு வாரம் வரைக்குமே கூட அவள் மருத்துவமனையில் தங்க வைக்கப் பட்டிருக்க, இளாவிற்கு முதல் சந்தேகம் என்பது அப்போது தான் வரத் தொடங்கியது.

அதிலும் அவளோடு தங்கவென்று ஏற்பாடு செய்திருந்த பெண்மணி தான் “வயித்துல கட்டின்னு தான் சொன்னாங்க.. ஆனா இப்படின்னு தெரியாதே…” என்று இளாவிற்கு எல்லாம் தெரியும் என்பதுபோல் அவனிடம் பேச,

“என்ன சொல்றீங்க?!” என்றான்.

“அட அந்த பொண்ணுக்கு…” என்று ஆரம்பித்து அந்தப்பெண் விபரம் சொல்ல, இளம்பரிதிக்கு முதலில் நம்பிடவே முடியவில்லை.

எதையோ அரைகுறையாய் புரிந்துகொண்ட சொல்கிறார் என்றே நினைக்க, இருந்தும் மனதில் ஒரு சந்தேக சத்தம் ஒலிக்கத்தான் செய்தது.ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொன்றாய் யோசித்துப் பார்க்க, எதுவோ சரியில்லை என்றுபட, முதல்முறையாய் ஷாலினி இருந்த அறைக்குள் தன் பார்வையை செலுத்தித்தான்.

அவளின் முகத்தில் அதீத சோகம், பயம் எல்லாம் இருந்தது. அதாவது சோர்வை தாண்டிய உணர்வுகள் தெரிய, இளாவிற்கு இங்கே நடப்பது சரியானதாய் இல்லை என்று தோன்றவும் அவன் நேரே வெற்றி வேலனிடம் தான் சென்று நின்றான்.

கோபியின் போக்கில் மாற்றம் தெரியவுமே அவரிடம் சொன்னவனும் இளாதானே.

“நான் பார்த்துக்கிறேன்…” என்றவர், அதன்பின் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை.

ஆனால் இத்துனை தூரம் தன்னை வைத்தே எல்லாம் செய்வார் என்று அவன் நினைக்கவில்லை. இப்போதும் கூட அவர் சரியாய் பதில் சொல்லாது “அட தெரிஞ்ச பொண்ணுதான்..” என்று முன்னர் சொன்னதையே சொல்ல,

“சரி அந்த பொண்ணு யாருன்னு நான் அம்மாக்கிட்ட கேட்டுக்கிறேன்…” என்று இளா கிளம்ப,

“இளா…!!” என்று அதிர மட்டுமே முடிந்தது.

“அப்போ சொல்லுங்க..!”

“சொல்லுங்க என்ன நடக்குது இங்க.. என்ன செய்றீங்க நீங்க…” என்று நேருக்கு நேரே அவரைப் பார்த்துக் கேட்க, வெற்றிவேலனுக்கு அப்போதைக்கு உண்மையை சொல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

இல்லையெனில் இவன் நேரே சரோஜா முன்னே போய் நிற்பானே…!

அனைத்தையும் சொல்லிட, இளம்பரிதி என்பவன் வாழ்வில் முதல் முறையாய் ஆடித்தான் போனான்.

‘எத்தனை பெரிய பாவம்..!!’

இதுமட்டுமே அவனுக்கு அப்போது தோன்றியது…!!

நல்ல உறவோ, கள்ள உறவோ… அவனால் என்னவோ இதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதைக் காட்டிலும், தன்னிடம் ஒருவார்த்தை சொல்லாது, தன்னை அங்கே அனைத்தும் செய்ய வைத்து, இப்பெரிய பாவ செயலுக்கு அவனையும் அல்லவா உடந்தையாக இருக்க வைத்து விட்டார்.

ஷாலினியின் முகம் கண்முன்னே வந்து போனது..!

‘அண்ணா..!’ என்றுதானே அழைத்தாள்..

‘ஓ…!! கடவுளே…’ என்று தலையில் அடித்தவன், ஆடித் தீர்த்துவிட்டான் வெற்றிவேலனை.

அவரோ “எனக்கு வேற வழி தெரியலை…” என்று சொல்ல,

“அதுக்கு..?! நானா கிடைச்சேன்… உங்க கௌரவம்னு நீங்க பண்ற பாவத்துக்கு நான் தான் கிடைச்சேனா.. அந்த பொண்ணு என்னை என்ன நினைச்சிருக்கும். ச்சே…” என,

“இளா இது வெளிய தெரியவே கூடாது…” என்றார் மன்றாடும் விதமாய்.

“ஏன்? ஏன் தெரிய கூடாது. கோபிக்கு என்ன தண்டனை குடுக்கப் போறீங்க? ”

“அ.. அவன்.. அவனை நான் பேசி சரி பண்ணிடுவேன்…”

“ஓ..!! உங்க பையன் இல்லையா… அதனால பேசி சரி பண்ணிடுவீங்க.. அந்த பொண்ணு யாரோ தானே.. அதனால மிரட்டி இப்படி அடிபணிய வச்சாச்சு…”

“இளா.. கண்டிப்பா அதெல்லாம் இல்லை. அந்த பொண்ணு  பேர்ல இருபது லட்சம் போட்டிருக்கேன்.. உடம்பு சரியானதும் இன்னும் ஏதாவது குடுத்து அனுப்பி விடனும்…” என, பண விஷயம் என்றதும் இன்னும் இளாவிற்கு கோபம் ஏறி விட்டது.

“நீங்க குடுக்கிறத, திரும்ப உங்களுக்கே குடுத்துட்டு, கோபிய கேட்டா அவளோட அனுப்பிடுவீங்களா?!” என்றான் ஆத்திரம் அடங்காது.

“டேய்…!!!”

“வருதுல்ல.. கோபம் வருதுல்ல… ச்சே இனி உங்க முகத்துல கூட நான் முழிக்க விரும்பல.. உண்மையா உங்கக்கிட்ட வேலை பார்த்ததுக்கு ஆயுசுக்கும் மறக்காதபடி எனக்கு தண்டனை குடுத்துட்டீங்க..  ரொம்ப சந்தோசம்…” என்றவன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

அதன்பின் வெற்றிவேலன் வீட்டிற்கு அவன் செல்லவில்லை. ஆனாலும் இப்போது வரைக்கும் கூட அவனை அவர்கள் விடுவதாய் இல்லை.

எந்த முகத்தை வைத்து ஷாலினியைக் காண்பது என்று அவன் மருத்துவமனைக்கும் போகாது இருந்தான். இருந்தும் மனது கேளவில்லை. அவளிடம் ஒருமுறை மன்னிப்பாவது வேண்ட வேண்டும் என்று தோன்ற, மருத்துவமனைக்கு கிளம்பினான்.

அன்றுதான் ஷாலினி அங்கிருந்து கிளம்பும் நாள்..

ஒருவித பரிதவிப்போடு தான் அவள் முன்னே நின்றான். இளம்பரிதியின் முகத்தினை ஏறிட்டு பார்த்தவள் “ரொம்ப தேங்க்ஸ்…” என்று மட்டும் சொல்ல,

“நா… எ.. எனக்கு நிஜமா நடந்தது என்னன்னு தெரியாதும்மா…” என்றவன் மேற்கொண்டு பேசும் முன்னே,

“ப்ளீஸ்… இதுபத்தி எதுவும் பேச வேண்டாமே…” என்று கரம் குவித்தவள், ஏற்கனவே அங்கே வரவைக்கப் பட்டிருந்த காரில் ஏறி சென்றும் விட்டாள்.

தொய்ந்த நடை, சோர்ந்த முகம், வேதனையும் விரக்தியும், ஒருவித அவமானமும் படிந்த பார்வை. அதிலும் அவனுக்கு ‘தேங்க்ஸ்…’ சொல்கையில் ஷாலினி முகத்தினில் வந்து போன உணர்வுகளுக்கு பெயர் சொல்லிடக் கூட முடியாது…!!

அதை ஜென்மத்திலும் இளம்பரிதிக்கு மறக்கவும் முடியாது.

அதே பார்வை இதோ இப்போது, தியாகுவோடு பேசுகையில் நியாபகம் வர, அவனோடு பேசிடக் கூடாது என்று நினைத்தாலும் இளம்பரிதியால் முடியவில்லை.

விளைவு, இதோ தியாகுவைப் பார்க்க கிளம்பிவிட்டான் ..

Advertisement