Advertisement

என்னிதயம் கேட்ட ஆறுதல் – 16

வீட்டினுள் நுழைந்த வானதிக்கு அப்படியொரு கோபம். இன்னதென்று அளவிட முடியாத அளவு ஓர் உணர்வு வந்து அவளை அழுத்தியது. நான் என்ன பேச போனேன், அதற்கு அவன் என்ன இப்படி பேசிவிட்டான் என்று.

அதிலும் இளா, திருமணம் பற்றி பேசியது, தாங்கிடவே முடியவில்லை. தனக்கு மட்டும் ஏன் இப்படி திருமணம் என்ற சொல் கூட சிக்கலாகிப் போனது என்று அவளுக்கு விளங்கவில்லை. சிந்தை முழுவதும் அதிலேயே இருக்க, வானதி வீட்டினுள்ளே நுழையவுமே மோகனா எதோ சொல்ல, அது அவள் காதிலேயே விழவில்லை.

வேக வேகமாய் அவர்களின் அறைக்கு சென்றுவிட, மோகனாவோ ‘என்ன இந்த பொண்ணு இப்படி போகுது…’ என்று பார்க்க,

சில நொடிகளில் பின்னேயே இளா ஒரு புன்னகையோடு வர, “டேய்…” என்றார் சத்தமாகவே.

“என்னம்மா என்ன இவ்வளோ சவுன்ட்…”

“சத்தமா கூப்பிட்டா உனக்காவது காது கேட்குமேன்னு…” என்று மோகனா சொன்ன தினுசில், அங்கிருந்தா தெய்வா சிரிக்க,

“ஏய் என்ன??” என்றான் அதட்டலாய்.

“எனக்கொண்ணும் இல்லையே…” என்றவள் “சொல்லும்மா சொல்லு.. உனக்கு நடந்த பெரும் அவமானத்தை சொல்லு…” என்று மோகனாவிடம் சொல்ல,

“போ டி அந்த பக்கம்…” என்று விரட்டியவர் “வானதிக்கு யாரும் மெதுவா கூப்பிட்டா காது கேட்காதா டா??” என்று கேட்க,

“ம்மா… என்னம்மா…” என்றான் இளம்பரிதி விளங்காது.

“இல்ல பின்னாடி இருக்க செடிக்கு தண்ணி விடச் சொல்லி கூப்பிட்டேன்.. அதுபாட்டுக்கு உள்ள போயிடுச்சு…” என,         

“திரும்பி கூட பார்க்கலையா..?” என்றான் அம்மாவின் முகத்தை உற்றுப் பார்த்து.

“ம்ம்ஹூம்…” என்று மோகனா சொல்ல,

அண்ணன் என்ன சொல்லப் போகிறானோ என்று ஆர்வமாய் தெய்வா பார்க்க “இதோ இவ சும்மாதானே இருக்கா? இவளை விட சொல்ல வேண்டியது தானே…” என்றான்.

அம்மாவும், தங்கையும் ஒருசேர முறைக்க “அவளுக்கு கொஞ்சம் மூட் அப்செட்…” என்றான்…

“அதுக்கு… வீட்டு வேலை எல்லாம் செய்யவேணாமா?!” என்றார் சத்தமாகவே மோகனா.

“செய்யலாம்… கொஞ்சம் கொஞ்சமா பழகலாம்மா…” என்றவன் “வானதி…” என்றழைக்க,

அங்கோ அவள் தன மனதை சமாதானம் செய்யும் பொருட்டு வேக வேகமாய் மூச்சுக்கள் எடுத்து விட்டுக்கொண்டு இருக்க, அவனின் இவ்வழைப்பு எரிச்சலாய் இருந்தது. 

கதவும் சாத்தியிருக்க, சற்று சத்தமாகவே தான் அழைத்தான் இளா.

‘இவன் கூப்பிட்டதுமே என்னங்கன்னு போயி நிக்கணுமோ..!’ என்ற பிடிவாதம் தோன்ற ‘போடா.. கத்திட்டே நில்லு…’ என்று தலையை சிலுப்பிக்கொண்டாள். சிறிது நேரத்தில் கதவு தட்டும் ஓசை கேட்க “ம்ம்ச்…” என்ற கடுப்புடனே கதவைத் திறந்தாள்.

இளாவோ ஒன்றுமே நடவாதது போல் “அம்மா கூப்பிடுறாங்க..” என,

“என்னங்க அத்தை…” என்று வந்து நின்றாள் சாதாரணமாய்.

“ம்ம் ஒண்ணுமில்லம்மா சும்மாதான்…” என்றவர் பின் என்ன நினைத்தாரோ “நீயும் தெய்வாவும் சமையல் செய்ங்க…” என,

‘எதே..!’ என்று முழித்தாள் வானதி.

இளம்பரிதிக்கு நிஜமாகவே இப்போது சிரிப்பை அடக்கிட முடியவில்லை. தெய்வா ஓரளவு சமைப்பாள் என்று தெரியும். ஆனால் வானதி?! டீ போடவே அவள் பட்டபாடு அவன் பார்த்தானே.

இதில் சமைப்பது எல்லாம்?!!!! பெரும் சந்தேகமே…

இதைக் கேட்டதும்  தெய்வாவோ “ம்மா.. எனக்கு வேலை இருக்கு.. படிக்கணும்… நீயும் அண்ணியும் பண்ணுங்க…” என்றவள் நழுவிவிட,

“நான் மட்டும் சும்மாவா இருக்கேன்… எனக்கும் வெளிய வேலை இருக்கு…” என்ற மோகனா, மகனிடம் “கொஞ்சம் கூட இருந்து பார்த்துக்கோ நான் வர எப்படியும் ஒருமணி நேரம் மேல ஆகிடும்…” என்று சொல்லி கிளம்பியும் கூட விட்டார்.

“ம்மா…! என்னம்மா..!” என்று இளா கத்தியது எல்லாம் மோகனாவின் காதுகளில் விழவே இல்லை.

தெய்வாவோ “சமையல் ஆச்சுன்னா கூப்பிடுங்க…” என்று மேலே அவளின் அறையில் இருந்தே ஒரு சத்தம் விட்டு கதவினை அடைத்துக்கொண்டாள்.

இளம்பரிதிக்கு நன்கு புரிந்தது, மோகனா காரணம் இல்லாது இப்படி செய்வது இல்லை என்று. தங்களுக்குள் ஒட்டுதலும், வீட்டில் வானதியும் பொருந்தவேண்டும் என்று செய்கிறார் என்று புரிய, வானதியைத் தான் பார்த்தான்.

அவளோ உதடு பிதுக்கி நின்று இருக்க, “என்ன சமைக்கப் போற..?” என்றான்.

“என்னது??!!”

“இல்ல என்ன சமைக்கப் போறன்னு கேட்டேன்…”

“என்னைக் கேட்டா..? எனக்கு அதெல்லாம் தெரியாதுன்னு தெரியும்தானே…” என்றாள் பாவமாய்.

சற்று நேரத்திற்கு முன்னே கோபித்துக்கொண்டு அறைக்குள் சென்றது எல்லாம் அவளுக்கு மறந்து போனது போல. அங்கே அவளின் பிறந்த வீட்டில் சமையலுக்கு ஆள் இருந்தார். பிருந்தா எப்போதாவது ஏதாவது செய்வாள். ராதா சொல்லிக்கொண்டே இருப்பார், அடிப்படை சமையலாவது பழகு என்று.

இவள் எங்கே அதெல்லாம் காதில் போட்டுக்கொண்டாள்..

‘அப்போவே எங்கம்மா சொல்லுச்சு…’ என்று நினைக்க மட்டுமே முடிந்தது.

“ஹலோ மேடம்… இப்படியே நின்னா எப்படி?” என்று இளா நக்கலாய் பேச,

“ம்ம்ச் என்ன செய்றது?!” என்றாள் சமையல் அறை நோக்கி நடந்தபடி,

“என்னை கூட இருந்து பார்த்துக்க மட்டும்தான் எங்கம்மா சொன்னாங்க.. நீ செய் நான் பாக்குறேன்…” என,

“விளையாடாதீங்க.. எனக்கு ஒன்னும் செய்ய வராது…” என்றாள்.

“வராது இல்ல. தெரியாதுன்னு சொல்லு…”

“சரி தெரியாது…” என்றவள் “ஐடியா…!” என,

“என்ன?!” என்றான்.

“யூ டியூப் இருக்கே…” என்றவள் அவளின் போன் எடுக்கப் போக, வேகமாய் அவளை இழுத்து நிறுத்தினான் இளம்பரிதி.

அவள் சென்ற வேகத்திற்கும், அவன் இழுத்த வேகத்திற்கும் வானதி அவன்மீதே மோதி நிற்க, இருவருக்கும் இடையில் இடைவெளி என்பது எதுவுமில்லை. ஆனால் அதெல்லாம் அவளுக்கு கருத்தில் கூட இல்லை.

“என்ன..?!” என்றாள்.

அவனுக்குத்தான் சற்று சங்கடமாய் இருந்ததுபோல். அவளின் கரத்தினை விடவும் முடியவில்லை. இப்படி நெருக்கமாய் இருக்கவும் முடியவில்லை. வெகு அருகினில் தெரியும் வானதியின் முகம் அவனை எதுவோ செய்ய,

“யூ டியூப் பார்த்து யாராவது சமைப்பாங்களா?!” என்றான் ஒருவித மாறுபட்ட குரலில்.

“உலகத்துல பாதி பேரு இப்போ அப்படிதான் சமைக்கிறாங்க…” என்றவளுக்கு இப்போது தான், தான் நிற்கும் நிலை புரிந்து மெல்ல விலக நினைக்க,

“நான் சொல்லித் தர்றேன்…” என்றான் அப்போதும் அதே குரலில்.

“எது.. என்னது??!” என்றாள்.

“சமையல்…”

“ஓ..!!!”

“வேறென்ன நினைச்ச..?!” என்றவனுக்கு புது உற்சாகம் வந்தது போலிருக்க, வானதி இப்போது சற்று தள்ளியே நின்றிருந்தாள்.

“ஒண்ணுமில்ல…” என்றவள் “என்ன சமைக்கலாம்…” என, அவன் முகத்தை அவள் பார்க்கவே இல்லை. திடீரென ஒரு சங்கோஜம் வந்து ஒட்டிக்கொண்டது.

“நீயே சொல்லு…” என்றவன் பிரிட்ஜில் என்ன காய்கறி இருக்கிறது என்று ஆராய,

“இங்க எல்லாம் எப்படி சப்பிடுவாங்கன்னு தெரியாதே…” என்றாள்.

“என்னது?! எல்லாரும் கைல தான் சாப்பிடுவாங்க…” 

“இந்த ஜோக்குக்கு எனக்கு சிரிப்பு வரலை.. வந்து சீக்கிரம் வேலை ஆரம்பிங்க…” என்று இரு கைகளையும் தட்டி அவள் நிற்க

‘தோடா..!!’ என்று பார்த்து வைத்தான் இளம்பரிதி.

விளைவு, அவன் சமைக்க, அவள் நன்கு பார்த்துக்கொண்டு இருந்தாள். சமைத்தது என்னவோ அவன்தான். ஆனால் வியர்த்தது அவளுக்கு. இத்தனை வருடங்களில் அவள் இப்படி இத்தனை நேரமெல்லாம் சமையல் அறையில் நின்றதே இல்லை. அத்தனை ஏன் டைனிங் டேபிள் அளவில் மட்டுமே அவளுக்கு. அதற்குமேலே நேரமும் இல்லை.

எப்போதுமே ‘ஜிங்கிள்ஸ்…’ தான்.

“வேடிக்கை பார்க்கிறதுக்கு உனக்கு இவ்வளோ வேர்க்குது…” என்று கிண்டல் செய்ய, வானதி எதுவும் சொல்லவில்லை.

இப்போதும் அவள் சுடிதாரிலேயே இருக்க, “ட்ரெஸ் மாத்துறதுன்னா மாத்திட்டு வா.. ந… வானதி.. கொஞ்சம் ப்ரீயா இருக்கும்..” என்றான்.

“ம்ம் பரவாயில்ல.. சமைச்சிட்டு திரும்ப குளிக்கணும்..” என்றாள் பாவனையாய்.

இளம்பரிதி அவளை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லவில்லை.

‘இது ஏன் இப்படி பண்றீங்க..?’

‘அதுல ஏன் அவ்வளோ போடுறீங்க…’ என்று இடைப்பட்ட நேரத்தில் வானதி அவனை கேள்வி கேட்டே ஒரு வழி செய்திட, அனைத்திற்கும் இளா பொறுமையாகவே பதில் சொல்ல, இறுதியாய் “ஆமா உங்களுக்கு சமையல் யாரு கத்து கொடுத்தா…?” என்றாள்.

“சமையல் எல்லாம் யாரும் கத்து கொடுக்கல.. சும்மா எனக்கா தோணும் போது ஏதாவது செய்வேன்.. அப்படி பழகினதுதான்…”

“ஓ..!!!” என்றவள் “இனிமே நானும் ஏதாவது செய்யணும்…” என, வந்த சிரிப்பினை அடக்க இளம்பரிதி பெரும்பாடு பட்டுப் போனான்.

ரொம்பவும் அவளைப் பிடித்து கிண்டல் செய்துவிடக் கூடாது என்று. அவள் இவ்வளவு முயல்வதே பெரிய விஷயம் இல்லையா?! சொல்லப்போனால் இந்த அளவு இலகுத்தன்மை அவன் அவளிடம் எதிர்பார்க்கவில்லை.

குடும்பத்தினரோடு பேச வைக்கவே கொஞ்சம் சிரமப் பட வேண்டி இருக்குமோ என்று தான் நினைத்தான். ஆனால் வானதி அத்தை மாமா என்று சுளுவாய் அவர்களை முறை வைத்து அழைத்துப் பேச, அவனுக்கு சற்றே அங்கே ஆறுதலாய் இருந்தது.

இப்படியே பேசிக்கொண்டே சமையல் வேலை செய்ய, இளம்பரிதியே அவளிடம் கேட்டான் “என்ன செய்யலாம்னு இருக்க..?” என்று.

முதலில் வானதிக்கு புரியவில்லை…!

சற்று முன்னே நடந்த சண்டை பற்றி எதுவும் கேட்கிறானோ என்று நினைக்க, அதையெல்லாம் அவன் சண்டை எனும் சங்கதியில் சேர்கவே இல்லை என்பது அவளுக்கு எங்கே தெரியப் போகிறது?! வானதி யோசிப்பது கண்டு,

“அதுதான்… உன்னோட ஜிங்கிள்ஸ்… என்ன செய்யலாம்னு இருக்க…?” என, அவனாகவே அதனைப் பற்றி கேட்டது வானதிக்கு சந்தோசமாகிப் போனது.

கண்கள் விரிய “கண்டிப்பா ஏதாவது செய்யணும்…” என்றவள் “முன்ன இங்க மாத்திக்கலாம்னு நினைச்சேன்…” என்றாள் சற்றே இறங்கிய குரலில்.

“ம்ம்ம்.. இங்க மாத்துறதுல எதுவும் இல்லை.. ஆனா பழநிக்கும் திண்டுக்கல்க்கும் நடுவில இருந்தா இன்னும் பெட்டரா இருக்கும்…” என்றான் இளா.

“நல்ல ஐடியாதான்.. அண்ணாட்ட சொல்லிட்டா கார் அனுப்பிடுவாங்க.. சோ போயிட்டு வர ஒன்னும் பிரச்சனை இருக்காது…” என,

‘மறுபடியும் டிரைவர் வேலை பார்க்க விடுவாளோ…’ என்று அவனறியாது தோன்றினாலும்,

“அதெல்லாம் வேண்டாம்…” என்றான் சற்றே சீரியசாக.

“ஏன்??! இப்போ நீங்கதானே சொன்னீங்க…”

“முதல்ல ஜிங்கிள்ஸ் வைக்க அதுக்கான இடம் பார்ப்போம்.. ஊருக்குள்ள உள்ளாம கொஞ்சம் அமைதியான இடமா இருந்தா இன்னும் நல்லாருக்கும்னு தோணுது. இடம் செட்டாகட்டும் அப்புறம் பார்த்துப்போம்..” என,

வானதி எதுவோ சொல்லவர “எவ்வளோ தூரமானாலும் நான் பைக்ல கூட்டிட்டு போறேன். கார் வேணாம்… அவ்வளோதான்…” என்றவன் எதையோ எடுக்கும் சாக்கில் திரும்பிக்கொள்ள,

‘இப்போ என்னவாம் இவனுக்கு…’ என்று பார்த்தாள்.

வானதி சொன்னது அவளினது கார். அவளின் சொந்த உழைப்பில் வாங்கியது. அதனை சொல்லக் கூட இவன் இடம்கொடாது இருக்க, அன்றைய தினம் மாலையே கதிர்வேலன் தங்கையின் காரை அனுப்பியிருந்தான்.

அவள் கேளாமலேயே… அவளிடம் கேட்காமலேயே…

டிரைவர் வந்து விட்டுவிட்டு சாவி கொடுத்துச் சென்றிட, இளம்பரிதிக்கு அப்படியொரு கோபம். வேண்டாம் என்று சொல்லியும் வரவழைத்துவிட்டாளே என்று. காரோடு சேர்த்து அவளையும் முறைக்க,

“நான் சொல்லவேயில்லை…” என்றாள்.

“பின்ன.. எப்படி எப்படி கார் அதுவா வந்ததா?!!” என்று அறையினுள் வந்து கத்த,

“ம்ம்ச் இப்போ ஏன் இப்படி பேசுறீங்க…” என்றாள் பட்டென்று.

“உனக்கு மட்டும் உங்க பிறந்து வீட்டு கௌரவம் முக்கியம்னு என்னை அங்க வேலைக்கு போகக் கூடாது சொல்வ? இப்போ இது மட்டும் எனக்கு ரொம்ப கெளரவமோ…” என,

‘ஓ..!!! காட்…’ என்று முணுமுணுக்க,

“இங்க பாரு எனக்கு இந்த பாசாங்கு எல்லாம் பிடிக்காது…” என்றான் கோபமாகவே.

காலையில் இருந்து அவனுக்கு இருந்த இதம் மறைந்துவிட, தன்னை என்னவென்று நினைத்துக்கொண்டாள், சொல்லியும் கூட இப்படி செய்துவிட்டாளே, இப்போது இல்லை என்றாலும் இன்னும் சற்று நாளில் கார் வாங்கிடலாம் என்றுதான் எண்ணினான். அதற்கான வசதியும் இப்போது உண்டுதான்.

திடீர் திருமணம், உடனே கார் அது இதென்று வாங்கினால் தேவையில்லாத பேச்சுக்கள் வரும் என்று நினைத்து பொறுமையாய் போக, வானதிக்கோ இதில் என்ன இவனுக்கு குறைந்து போனது என்றுதான் தோன்றியது.

வானதி எந்த பதிலும் சொல்லாது இருக்க “என்ன நான் பேசிட்டு இருக்கேன்.. நீ பதிலே சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்…” என,

“ம்ம்ம் உங்களுக்கு புரியுற மாதிரி எப்படி சொல்றது யோசிக்கிறேன்னு அர்த்தம்…” என்றாள் அவளும் கடுப்பாகவே.

“என்னது?!!!”

“இப்போ உங்க பைக் எதுக்கு இங்க இருக்கு…?”

“அது என்னோடது..”

“அதேபோல இந்த காரும் என்னோடது…” என, நெற்றியை சுருக்கிப் பார்த்தான் இளா.

“என்னோடதுன்னா… எனக்கு நானே என் சம்பாத்தியத்துல வாங்கினது. புரிஞ்சதா? அப்போ அதுவும் நான் எங்க இருக்கேனோ அங்கதானே இருக்கும்…” என,

“ஓ..!!” என்றவன் எதுவும் சொல்லவில்லை.

அடுத்து எதுவும் பேசாது இளா அமைதியாகவே இருக்க, “எதையும் முழுசா கேட்கிறது இல்லை. எப்பவும் உங்களுக்கு நீங்க நினைக்கிறது மட்டுமே சரி…”  என்றவள், அவனுக்கு முன்னே நேருக்கு நேர் நின்று,

“இனிமே இப்படி இருக்காதீங்க… அதுவும் என்கிட்ட இப்படி இருக்கவே இருக்காதீங்க…” என்று தீவிரமாய் ஒரு பாவனைக் காட்டி சொல்ல,

அவளின் அந்த பாவனையில் லேசாய் வியந்தவன் “இருந்தா என்ன செய்வ??” என்றான் இன்னும் அவளை நெருங்கி நின்று…

“நீங்க அப்படி இருந்தா, நம்மளோட இந்த கேப்…” என்று இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளியை சுட்டிக்காட்டியவள் “இது ஜாஸ்தியாகும்…” என,

“அப்படி இல்லைன்னா நம்மளோட இந்த கேப்…” என்று அவளைப் போலவே சுட்டிக்காட்டியவன் “இது கம்மியாகுமா என்ன…?” என்று வினவ,

அவனை அலட்சியமாய் பார்ப்பது போல் பார்த்தவள் “சொல்ல முடியாது…!” என்றுவிட்டுப் போனாள்.

ஆனால் இளாவின் மனதில் நம்பிக்கை இன்னும் உறுதியானது. இயல்பானதொரு இல்லறம் அமைந்திடும் என்று..             

                  

           

 

                         

 

   

     

     

Advertisement