Advertisement

பகுதி – 9
அவர்கள் சென்ற பின் கிட்சனில் தனக்கு தோசை சுட்டுக் கொண்டிருந்தவளை சத்தம் இல்லாமல் பின்னிருந்து அணைத்தான் ஆதி. நேற்று இருந்த தயக்கங்கள் நேற்றோடு போயிற்று, இருவருக்கும்.
தன் இடை மேல் கரம் பட்டதும் பயந்து திரும்பியவள் “நான் பயந்தே போய் விட்டேன். ஏன் இப்படி செய்தீர்கள்?” என்று அவள் சீற சற்று சுதாரித்தவன், “என்னை தவிர யாருக்கும் உரிமை இல்லை உன்னை நெருங்க.” என்று அவன் கிறங்க அவளும் அதில் கரைந்தாள்.
“இங்கே வியர்க்கும், ஹாலில் போய் அமருங்கள். நான் சாப்பிட்டுவிட்டு வருகிறேன்.” என்று தன் இடையில் கட்டி இருந்த அவன் கரத்தை பிரிக்க அவன் கேட்காமல் தன் பிடி இறுக்கி அவளுடன் நெருங்கி நிற்க வேறு வழி இன்றி தோசை ஊற்றிய பின் அவன் பிடிவாதத்தில் டைனிங் ஏரியாவில் அமர்ந்து சாப்பிட்டாள். அவளுக்கு எப்போதுமே கிச்சனில் நின்றே சாப்பிட்டு பழகியதால் அவன் முன் அமர்ந்து சாப்பிட சற்று தயங்கி கூச்சப்பட்டாள்.
அதை கவனித்தவன் அவளிடம் பேச்சை மாற்றினான் “மேடம் எந்த குரூப் படிக்க ஆசைப் படுகிறீர்கள்? பதினொன்றாம் வகுப்பு புத்தகங்கள் வேண்டுமா?” 
“இல்லை வேண்டாம், நான் பதினொன்றாம் வகுப்பு படித்தேன், பனிரெண்டாம் வகுப்பு தான் பாதியில் நிறுத்தி விட்டேன்.” என்று சகஜமாக பேச தொடங்கினாள் அவள்.
“ஓ… அப்போது சரி. எந்த குரூப் படிச்ச?”
“கம்ப்யூட்டர் சைனஸ். எனக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை அதோடு எனக்கு கலெக்டராக ஆசை. என் ஆசிரியர் தான் கம்ப்யூட்டர் இல்லாமல் இனி இவ்வுலகம் இயங்காது, அதோடு உனக்கு கம்ப்யூட்டர் பற்றி தெரிந்துக் கொள்ள இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று கூறி இந்த குரூப்பில் சேர்த்து விட்டார்கள்.” என்று அவள் ஆர்வமோடு கூறும் ஒவ்வொரு வார்த்தையையும் முத்தாய் தன் மனதில் சேகரித்தான் ஆதி. ஒரு விதத்தில் இப்பொழுது இதை  கேட்டது நல்லது தான், செப்டம்பர் மாதம் தனித்தேர்வு வரும் அதில் எளிமையாக சீக்கிரம் முடித்து விடலாம் என்று மனக்கணக்கு போட்டான் ஆதி.
“வேறு என்ன பிடிக்கும் உனக்கு? வேறு என்ன கற்றுக்கொள்ள ஆசை?” என்று சுவாரஸ்யம் குறையாமல் அவளை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினான்.
“ஆங்… எனக்கு கைவினைப் பொருட்கள் செய்யத் தெரியும். ஒரு இடத்தில் இலவசமாக கற்றுத் தந்தார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதை செய்து தெரிந்தவர்களுக்கு விற்று விடுவேன். அதே போல் நம் வீட்டிற்கும் செய்ய வேண்டும் என்று ஆசை. நான் அலங்கரித்தால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை இருக்கிறதா?” என்று ஆசையுடன் கேட்டவளை மறுக்க எப்படி மனம் வரும் அவனுக்கு “உன் எண்ணம், விருப்பம் போல் செய்து கொள். முன்னர் கூறியபடி இது உன் வீடு இந்த வீட்டின் ராணி நீ தான். ராணிக்கு வீட்டில் எவ்வளவு உரிமை இருக்கும் என்பது உனக்கு தெரியும் அல்லவா?” என்று கேள்வியாய் பதிலளித்தான்.
ஆம் எனத் தலை ஆட்டியவள் சாப்பிட்டு எழவும், அவனும் அவளைப் பின் தொடர்ந்தான். சற்று நேரம் கழித்து அறைக்கு சென்று தயாராகினாள் அனு.
“எங்கே போகிறோம்?”  என்று மறுபடி வினவினாள் அனு, இதுவரை குறைந்தது இருபத்தைந்து முறை கேட்டிருப்பாள் இதே கேள்வியை. ஆனால் ஆதியோ எதற்கும் சளைக்காமல் தன் வேலையே கண் என பார்த்துக் கொண்டிருந்தான்.
வேலை என்றதும் அவன் ஆஃபீஸ் வேலை என்று தப்பு கணக்கு போடாதீர்கள். அவனின் தற்போதைய முழு நேர பணியும் அனுவை இன்ச் பை இன்ச் தன் கண்ணாலே அளவெடுப்பது தான். அவள் கண்ணாடி முன் ஒப்பனை செய்ய ஆதி அதை கட்டிலில் அமர்ந்து பதிந்துக் கொண்டிருந்தான்.
“சொல்லுங்களேன்…” என்று சிணுங்கினாள் அனு.
“சரி, ரொம்ப கெஞ்சுகிறாய் அதனால் உனக்கு சொல்கிறேன். ஆனால் அதற்கு முன் நீ ஒன்று செய்ய வேண்டுமே.” என்று ஏதோ யோசனையில் இருப்பது போல் பாவனை செய்தான்.
“ஸ்…” என்று சலித்தவள் அவனருகில் சென்று “கிளம்பலாம் வாங்க… நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம் நான் நேரில் பார்த்தே தெரிந்துக் கொள்கிறேன்.” என்றவள் முகத்தை அஷ்ட கோணலாக மாற்ற ஆதி வாய்விட்டு சிரித்து நன்றாக அவளிடம் வாங்கிக் கட்டிக்கொண்டான்.
“ஏய் நிறுத்து… அடிக்காத வலிக்குது… இரு… ஏதோ மேசெஜ் வருது… இரு…” என்று அவள் கரத்தை தன்னுள் அடக்கியவன் தன் மொபைலை எடுத்து வாட்ஸாப்பை திறக்க அதில் முரளி ஒரு போட்டோவை அனுப்பி இருந்தான். அதை பார்த்து இரசித்தவன் அனு தன் கையில் துள்ளிவதை கவனிக்க மறந்தான்.
‘நான் இருப்பதை கூட மறந்துவிட்டு இவர் அப்படி என்ன பார்க்கிறார்?’ என்று நினைத்தவள் சிணுங்க, “விடுங்க என்ன…” அதை கவனியாது அவன் மொபைலையே பார்க்க அனுவிற்கு கோபம் சுர்ரென்று ஏறியது.
அதே நேரம் அவள் மொபைல் ரீங்காரமிட அவனிடமிருந்து தன் கையை உருவ முயற்சித்து தோற்றவள் பட்டென்று அவனை நெருங்கி கன்னத்தில் இதழ் பதிக்க, முற்றிலும் அதை எதிர்பாராதவனாய் அதில் தடுமாறி தன் பிடியை தளர்த்த, அவன் அயர்ந்த நேரம் அவனுக்கு போக்கு காட்டி ஓடிவிட்டாள் அனு.
அவள் முத்திரை பதித்த இடத்தை தடவி தனக்குள் பூரித்தவன், தன் வாட்ஸாப் ஸ்டேடசில் முரளி அனுப்பிய தன் திருமண புகைப்படத்தை பதிவேற்ற, டிஸ்பிலே படமாக இவன் அனுவை பின்னாலிருந்து அணைப்பது போல் வீட்டில் எடுத்த புகைப்படத்தை வைத்தான். அதே கையோடு தன் முகப்புத்தகத்திலும் ஜஸ்ட் மேரிட் என்ற ஸ்டேடசை தட்டிவிட்டான். திருமண புகைப்படத்தை வைக்க ஆசை இருந்தாலும் அனுவின் அனுமதி இல்லாது போடக் கூடாது என விட்டு விட்டான். மேலும் இதற்கே எல்லாரும் பார்ட்டி கேட்பார்கள், இன்னும் போட்டோ போட்டால் எல்லோரையும் சமாளிப்பது ரொம்ப கஷ்டம்.
பத்து நிமிடம் கழித்து அங்கு வந்த அனு அவன் இன்னும் மொபைலையே வெறிப்பது கண்டு அதில் என்ன தான் இருக்கிறது என்று அவன் பின் சென்று பார்க்க, ஏன்டா பார்த்தோம் என்று நினைக்க தோன்றியது. அதில் பின்னால் இருந்து ஆதி கழுத்தை பிடித்து ஒரு பெண் அணைப்பது போல் இருந்தது அந்த புகைப்படம். இருவர் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி, பார்க்க அப்படியே தம்பதிகள் போலவே இருந்தனர். அதை பார்த்ததுமே தன் முழு உயிரும் எங்கோ சென்று விட்டதை போன்றே உணர்ந்தாள் அனு. இவ்வளவு நேரம் தான் புதைத்து வைத்திருந்த தாழ்வு மனப்பான்மை இந்த புகைப்படத்தை பார்த்ததும் மீண்டும் முளைக்க துவங்கியது. அந்த பெண் பார்க்க நன்கு படித்தவளாகவும், அவனுக்கு ஏற்றவாறு ஜீன்ஸ், குர்தி, போனி டைல் என்று பார்க்கவே நவீன பெண்ணாகவும் அதே சமயம் நம் கலாச்சாரம் பொருந்திய முகம் என அவள் ஆதிக்கு பொருந்தி இருந்தாள். அவன் நேரம் அப்போது தான் பழைய போட்டோக்களை ஷேர் செய்து ஒரு வருடம் ஆன போஸ்டர்களை காட்டியது முகப்புத்தகம், அதை தற்செயலாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி. அப்போது யாரோ தன் புறம் இருப்பதை உணர்ந்தவனாய் திரும்பினான்.
“ஏய்… எப்போ இங்கு வந்தாய்?” என்று ஆதி கேட்ட பின்னே தன் நிதானம் வந்தாள்.
“இப்போ தான் வந்தேன்.” என்ற குரலில் சுருதி இல்லாமல் வர ஆதிக்கு சந்தேகம் வந்தது. இவ்வளவு நேரம் தன் உற்சாகத்தை அடக்க முடியாமல் தொன தொனவென கேள்வி கேட்டவள் தீடிரென அமைதியின் சொரூபமாக நிற்க, ஒன்றும் புரியாமல் விழித்தான் ஆதி.
“என்னாச்சு டா…” என்று அவளை தன் முன் கொண்டு வந்து கேட்க அவளோ, “வெளியில் போகணும் என்று சொன்னீர்கள், வாங்க போகலாம்.” என்று அவன் பிடியில் இருந்து விலகி வீட்டின் வெளியே நடந்தாள்.
ஏன் இந்த தீடீர் மாற்றம், முத்தமெல்லாம் கொடுத்தாலே; அப்படி என்ன பத்து நிமிடத்தில் நடந்திருக்கும், ஒரு வேளை அவள் போன் பேசினாலே அதில் ஏதாவது சங்கடமோ? அதை என்னிடம் மறைக்க நினைக்கிறாளா? என்று எண்ணிக்கொண்டே வீட்டை பூட்டி கிளம்பினான் ஆதி.
பைக்கில் முதலில் ஒரு கோவிலுக்கு அவளை அழைத்துச் சென்று பின் அவளை தனித்தேர்வு எழுத விண்ணப்பம் வாங்க எஜூக்கேஷ்னல் ஆஃபீஸ்க்கு அழைத்துச் சென்றான். அது தெரிந்ததும் மகிழ்ச்சியில் தன்னை கட்டி அணைப்பாள் அல்லது தன் கரத்தையாவது விடாது பிடித்துக் கொள்வாள் என்று எண்ணியவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவளின் தீடீர் மாற்றத்தின் காரணம் அறியாது மண்டையே வெடித்து விடும் போல் இருந்தது ஆதிக்கு.
***
“ஏய் இங்க பாருடி, அவர் எங்க போட்டோவை ஷேர் செய்திருக்கிறார். இது நாங்க ஒரு வருடம் முன்னால் எடுத்தது. அப்போ நீ சொன்னது பொய் என்று இப்போது தெரிகிறதா?” என்றால் நிலா சந்தோசமாக.
“நீ இன்னும் அவனோட ஸ்டேட்டசை பார்க்கவில்லை அப்படி தானே? அதை முதலில் பார்.” என்றாள் சந்தியா சற்று கோபத்துடன். அவளுக்கு நிலா போகும் பாதை சரியாக இருப்பதாக தோன்றவில்லை. அதை முளையிலேயே கில்லுவது நல்லது எனப் பட்டது.
நிலா வேகமாக அவன் ப்ரொஃபைலை பார்க்க திகைத்துப் போனாள். தன் கண்ணை நம்பாமல், இருமுறை தேய்த்து பின்னர் பார்த்தாலும் அதே ஜஸ்ட் மேரிட் என்றே இருந்தது.
அவசர அவசரமாக தன் வாட்ஸாப்பை திறந்தால் அதில் அந்த ஸ்டேடஸுக்கு சாட்சியாய் அவன் திருமண போட்டோ, அவன் ஒரு பெண்ணை பின்னாலிருந்து அணைப்பது போன்ற புகைப்படம் இருந்தது. அதை பார்த்து சிலையாய் சமைந்தாள் நிலா.
“ஏய்… நிலா. இது தான் நிஜம்டி. அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது. நீ பார்க்கும் இந்த புகைப்படம் தான் அதற்கு சாட்சி. நீ அவனை மறந்து தான் ஆக வேண்டும், அது தான் உன் வாழ்விற்கு நல்லது.” என்று சந்தியா பேச நிலா எதையும் காதில் வாங்காமல் தன் போக்கில் தன் மொபைலை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்பினாள்.
“எங்கடி செல்கிறாய்? நில், நானும் வருகிறேன்.” என்று கூறிய சந்தியாவை நிலாவின் அனல் பார்வை சுடாமல் சுட்டது.

&*&*&

Advertisement