Advertisement

பகுதி-6
எழுந்திருங்க…” என்று காப்பி ட்ரேயை கட்டில் பக்கத்தில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு அவன் அருகில் சென்று சிணுங்கினாள் அனு. அவன் தனக்கும் இந்த உலகிற்கும் சம்பந்தம் இல்லை என்ற ரீதியில் ஆழ்ந்த நித்திரையில் இலயித்திருந்தான்.
வேறு வழி தெரியாமல் விழி பிதுங்கியவள் அவன் புறம் நெருங்கி அவன் தோள் பற்றி உளுக்கினாள். உடலில் எவ்வித அசைவும் இல்லாததை கவனித்தவள், முரளி கூறியது நினைவு வந்தவளாய் அவனையே கூர்ந்து நோக்கினாள்.
கும்பகர்ணன் போல் தூங்கினாலும் அமைதியே உருவாய் உறங்கியவனின் முகம், தேன் தேனீக்களை ஈர்ப்பது போல் அவளை ஈர்த்தது. அவனருகில் அமர்ந்தவள் தன் நடுங்கும் கரங்களால் அவன் முகத்தில் கோலமிட அவள் வருடலில் நெளிந்தவன் அவள் மடியில் தலை வைத்து படுத்து, “இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன் அம்மா.” என்று கூறிவிட்டு அவளை கட்டிக்கொண்டான்.
அவனின் திடீர் செயலில் திக்கித் திணறியவள் தன் மூச்சை உள் இழுத்துக்கொண்டாள். சிறிது நேரம் அப்படியே இருந்தவளால் மூச்சை கட்டுப்படுத்த முடியாமல் தன்னையும் மீறி அவன் தலையை வருடி தானும் அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.
கிளிக்… எனும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அனு தன் அகண்ட விழிகளை அங்கும் இங்கும் பயத்தில் பாயவிட்டாள். ஆதி எழுந்து எதுவும் திட்டிவிடுவானோ என்ற பயம் வேறு தொற்றிக்கொண்டது அவளை.
மெதுவாக அவன் தலையை தன் மடியிலிருந்து விலக்க முற்பட்டு தோற்று போனாள்.
அனுஅனு…” என்ற சாரதவின் உரத்த குரலில் ஆதி தன் நித்திரையிலிருந்து கலைந்தவன், தான் எங்கு எப்படி இருக்கிறோம் என்பதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தான்.
சுற்றும் முற்றும் தன் விழிகளை அலையவிட்டவன் அனு முகத்தை பார்க்க சங்கடப்பட்டு செய்வதறியாது திகைத்தான். எவ்வளவு நேரம் தான் இவ்வாறு அவள் மடியில் படுத்திருந்தோம், தன் நெருக்கத்தில் அவள் கஷ்டப்பட்டிருப்பாலோ, அவள் கால் வலித்திருக்குமோ என்று பல கேள்விகளை மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருந்தான்.
புடவை சுருக்கத்தை சரி செய்து விட்டு தடுமாறி எழுந்தவள், “முரளி அண்ணா அவர் குடும்பத்தோடு வந்திருக்கிறார். வெளியில் காத்திருக்கிறார்கள். சீக்கிரம் வாங்க…” என்று கடகடவென கூறிவிட்டு அவனிடம் காபி கப்பை கொடுத்துவிட்டு சரசரவென வெளியேறினாள் அனு.
என்னடா காலையிலேயே இந்த பக்கம்?” என்று முரளியிடம் ஆதி வினவ சாரதா கிட்சனிலிருந்து வெளியே வந்து, “உங்க அரட்டையெல்லாம் அப்புறம் வச்சிக்கோங்க. ஆதி சீக்கிரம் கிளம்பு. முரளி மசமசனு நிற்காம அவனுக்கு உதவி பண்ணு.” என்று இருவரையும் அங்கிருந்து விரட்டினார்.
இதே நிலை தான் அனுவிற்கும் வேறொரு அறையில்.
அண்ணி சீக்கிரம் கிளம்புங்க. ஏன் என் முகத்தையே பார்க்கிறிங்க?” என்று முரளியின் தங்கை ஆனந்தி அவள் கையில் புது புடவையை திணித்தாள்.
சீக்கிரம் கிளம்பு அக்கா. அவர்கள் தான் சொல்றாங்கல்ல.” என்று எதுவும் புரியவில்லை என்றாலும் தன் பங்கிற்கு தன் அக்காவை விரட்டினாள் கயல்.
புது துணி உடுத்தி இருவரும் ஒரே நேரத்தில் வெளியில் வர இருவரும் தன் இணையைக் கண்டு மெய்மறந்தனர்.
தங்க நிறப் புடவையில் தலை நிறைய பூ வைத்து தங்கமாய் மின்னிய அனுவை கண் சிமிட்டாமல் ஆழ்ந்து நோக்கினான் ஆதி. அனுவின் நிலையும் அதுவே. பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாய் நின்றவனை பார்த்ததும் உள் மனதுள் அவன் என்னவன் என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. அவனுக்கு தன்னை பிடிக்குமா? தன்னை போல் அவனும் என்னை அவனுக்கானவள் என நினைப்பானா? என்ற கேள்வியே அவளை அரித்தது.
கொசுத் தொல்லை தாங்க முடியல பா…” என்று நமட்டு சிரிப்போடு தன் கையை காற்றில் ஆட்டினான் முரளி.
எங்க போகிறோம்னு முதலில் சொல்லு. அப்புறம் கொசு அடிச்சிக்கலாம்.” என ஆதி அவன் தலையை கொட்ட அந்த இடமே சிரிப்பொலியால் நிறைந்தது. ஆதி, அனுவிற்கு தான் ஒன்றும் புரியவில்லை, இருந்தாலும் முரளியின் பெற்றோர் சொல் மீறக் கூடாது என்பதால் இருவரும் பொறுமை காத்து அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலை ஆட்டினர்.
முரளி போய் கார் ஸ்டார்ட் பண்ணி ரெடியா இரு. இன்னும் ஐந்து நிமிடத்தில் நல்ல நேரம் வந்ததும் கிளம்பலாம்.” என்று சாரதா தன் மகனிடம் ஆணையிட்டப்படியே ஆதியையும் அனுவையும் ஒன்றாக நிற்க வைத்து திருஷ்டி கழித்தார்.
அண்ணா ஒரு செல்பி…” என்ற கோரிக்கையோடு ஆதி மறுப்பதற்குள் ஆனந்தி தன் மொபைலை எடுத்துக்கொண்டு அவர்களை நெருங்கினாள்.
நீங்க எடுங்க அண்ணா. நீங்க தான் உயரமா இருக்கீங்க. ஹைட்லேந்து எடுத்தா தான் நல்லா இருக்கும்.” என்று ஏதேதோ கூறி அவர்கள் இருவரையும் நெருங்க நிற்க வைத்தாள். அதோடு நில்லாமல் அனைவரையும் அழைத்து குரூப் செல்பி என கிடைக்கும் இடங்களிலெல்லாம் அனு ஆதியை வைத்து ஒரு குறும்படமே ஓட்டிவிட்டாள்.
என்னை வெளியே நிற்க சொல்லிட்டு இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று முரளி உள்ளே வந்து கடுப்புடன் கேட்கவும் தான் அனைவரும் கிளம்பினர்.
சில நிமிடங்களில் அனைவரும் கோவிலில் வந்து இறங்கினர்.
உள்ளே போகலாம் வாங்க…” என்று சாரதா தலைமை பொறுப்பெடுத்து அவர்களை உள் அழைத்து சென்று அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த மணையில் அமரவைத்தார். ஆம், அவர்களின் எதிர்பாரா  திருமணத்தை முறை படி மீண்டும் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்கள் முரளி குடும்பத்தினர்.
ஆதிக்கோ இது பேரதிர்ச்சி, அவன் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை. மாப்பிளை தோரணை ஜில்லென்று வந்து ஒட்டிக்கொண்டது அவனிடத்தில். அனுவின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. முதல் முறை ஏதோ அவசரத்தில் நடந்ததால் அவள் மனதில் ஒரு நெருடல் இருந்தது. அது தற்போது சரியாவது பேரானந்தம் தந்தது. மணபெண்ணிற்கே உரித்தான நாணம் அவளை வெகுவாக தாக்கியது உண்மையே.
மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த தம்பதியர் முகம் திடீரென மாறுவதை உணர்ந்த முரளி தன் பார்வையை அவர்கள் விழி பாயும் இடம் நோக்கி செலுத்தினான். அங்கு தன் பெற்றோருடன் ஆதியின் பெற்றோர் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். தெளிவாக கூறவேண்டுமென்றால் வாக்குவாதம் நடந்தது. எப்படியோ ஒரு வழியாய் அவர்களை சமாதானம் செய்து மணவரைக்கு அழைத்து வந்தனர் முரளியின் பெற்றோர்.
அதுவரை திக் திக் நிமிடங்களாய் இருந்தது ஆதிக்கும் அனுவிற்கும். ஆதி தன் பெற்றோரை கண்டதும் எழும்ப முற்பட அவனை தடுத்து நிறுத்தினார் அதுவரை அமைதியாய் இருந்த புரோகிதர்.
எவரும் இல்லாமல் மணமக்களே தங்கள் திருமணத்தை திருமணமாய் உணராது இருந்தது மாறி அனைவரது ஆசியுடன் இனிதே நடந்தது இவர்களின் இத்திருமணம். ஆசிர்வதித்த மங்கலநாண் அவள் கழுத்தில் மின்னிக்கொண்டிருக்க, அவள் நெற்றி வகுட்டில் தன் கடினமான விரலால் மென்மையாய் அவன் குங்குமம் இட அவள் வதனமும் குங்கும நிறத்தை பூசிக்கொண்டது. இம்முறை அனு மயக்கம் கொள்ளவில்லை மாறாக மகிழ்ச்சியில் தத்தளித்தாள். தாலி கட்டும் முதல் அக்னி வலம் வரும் வரை ஆதியின் விழிகள் அனுவை விட்டு நகர மறுத்தது. அவன் பார்வையை உணர்ந்த அனுவிற்கு வெட்கம் பீறிட்டு கொப்பளித்தது. ஒவ்வொரு முறை அவன் ஸ்பரிசம் அவள் மேல் பட்டும் படாமல் படும் போதும் மின்சாரம் பாய்வதை உணர்ந்தாள் அனு. அக்னியை வலம் வரும் முதல் அவன் தன் கரங்களை விடாமல் அவனுள் பற்றியிருந்தது அவளுள் தோன்றிய எதிர்மறை கேள்விகளுக்கு விடையாய் அமைந்தது.
மாலை மாற்றிய கையோடு தன் பெற்றோரிடம் ஆசி வாங்கிய பிறகே நிம்மதி அடைந்தது அப்புது தம்பதியரின் மனது. ரேகா சற்று கோபமாய் இருந்தாலும் வேறுவழியின்றி தன் மகனின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
சாரதா அவர்களிடம் உண்மையை மறைத்து கோவிலில் சிறப்புப் பிரார்த்தனை என்று கூறி வர செய்தார். என்னதான் அவரும் அவர் கணவரும் பெற்றோர் எனும் முறையில் திருமணம் செய்து வைத்தாலும் ஆதியின் பெற்றோர் இல்லை என்ற குறை இறுதி வரை இருக்கும், அதை போக்குவதற்க்காகவே இந்த ஏற்பாடு. வாழ்த்திய கையோடு அவர்கள் கிளம்ப ஆதியின் தந்தை கோபால் மட்டும் ஆதியின் இருப்பிடம் விசாரித்துவிட்டு கிளம்பினார்.
அதனுடன் அனு முதலில் கட்டி இருந்த மாங்கல்யத்தை கோவில் உண்டியலில் சேர்த்து விட்டனர்.
பிரகாரம் சுற்றிவிட்டு வரலாம்.” என்று சாரதா அனைவரையும் கிளப்ப கயல் தன் தோழி அங்கு வந்திருப்பதாகவும் தான் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறி அங்கிருந்து நழுவினாள்.
வெளியில் முறுவலித்தாலும் உள்ளுக்குள் ஆதி வேதனை படுவதை கவனித்த முரளி தன் தங்கை யோசனையை பயன்படுத்தினான். அதாங்க போட்டோஷூட்.
அண்ணன், தங்கை போட்டோஷூட் என்ற பெயரில் செய்த குறும்புகளில் ஆதிக்கும் அனுவிற்கு இடையே இருந்த தயக்கம் குறைந்து அன்னோன்யம் அதிகரித்தது. தயங்காமல் அவள் கரம் பற்றுவது, தான் எங்கு போனாலும் அவளையும் தன்னுடன் அழைத்து செல்வது, சகஜமாக அவள் தோள் மேல் கை போட்டு போட்டோ எடுப்பது என தன் உரிமையை நிலை நாட்டினான் ஆதி. அனு கூச்சப்பட்டாலும் அவனை விடாமல் ஒட்டிக்கொண்டாள். காதல் இல்லை என்றாலும் இவன் என் கணவன், இவள் என் மனைவி என்ற ஈர்ப்பு அவர்களுக்குள் இருக்கத் தான் செய்தது.
முரளி பெற்றோர் முன்னர் நடக்க பின்னால் வந்த அனு ஆதியின் கரம் பற்றி தன் பக்கம் இழுத்து “தண்ணீர் வேண்டும்.” என்று அவன் காதில் முணுமுணுக்க, அவன் முரளியை அருகில் அழைத்து வாங்கி வரச் சொன்னான்.
அதுவரை அங்கு படியில் அமரலாம், வா.” என்று தன் கரத்தில் அவள் கரம் சேர்த்து சிறிது தூரம் தள்ளி அமர்ந்தான் ஆதி.
முரளி குடும்பத்தினர் அவர்களுக்கு தனிமை தரும் பொருட்டு வேறு இடத்தில் அமர்ந்தனர்.
அதற்குள் வெளியில் தண்ணீர் வாங்கிக் கொண்டிருந்த முரளியின் கண்ணில் அனுவின் தங்கை கயல் பட, அவள் ஏன் தனியாக நிற்கிறாள் தம்முடன் அழைத்து செல்லலாம் என்றெண்ணியவன் அவளை நெருங்கியதும் அதிர்ச்சியுற்றான்.
அங்கு அவள் காலேஜ் போகும் வயதில் உள்ள ஒரு பையனிடம் பேசிக்கொண்டிருந்தாள். வேறு யாரும் இல்லை கதிருடன் தான். எந்த விஷயமும் தெளிவாக தெரியாமல் ஒரு முடிவிற்கு வர கூடாது என்று முடிவெடுத்த முரளி அவர்களை நெருங்க, கதிர் சுவரில் சாய்ந்து கொண்டு கயலை தன் புறம் இழுப்பதை கண்டு திடுக்கிட்டான். யார் வேண்டுமென்றாலும் இவர்களை இப்படி பார்க்கலாம், அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் இருவரும் வேறு உலகில் கொஞ்சி பேசிக்கொண்டிருந்தனர்.
தான் போய் அவர்களை கேட்டால் சரியாக வருமா, எந்த உரிமையில் கேட்பது என்று குழம்பியவன் இதை இப்படியே விடக்கூடாது என்று அவர்கள் எதிரில் போய் நின்றான். கயல் ஒரு நிமிடம் திகைத்துப் போய் வேகமாக கதிரிடமிருந்து விலகியவள் தன் விழிகளை சுற்றிலும் படரவிட்டாள் முரளியின் கண்களை சந்திக்காதபடி.
யார் நீங்க?” என்று கதிர் விரைப்பாய் கேட்டாலும் மனதுள் அவன் தான் கயல் அக்காவை மணம் முடிந்தவனாக இருக்குமோ என்று அச்சம் கொண்டான்.
முதலில் இங்கு என்ன நடக்கிறது என்று சொல்லுங்கள்?” என்று முரளி கடின பார்வை வீசினான் கயல் மேல்.
எல்லாம் அக்காவிற்கு தெரியும் அண்ணா. நீங்கள் இதில்  தலையிடாதீர்கள்.” என்று ஒற்றை வரியில் முரளியின் விசாரணைக்கு சற்றுத் திமிருடன் முற்று புள்ளி வைத்தாள் கயல். அதைக் கண்ட முரளிக்கோ அனுவிற்கு இப்படி ஒரு தங்கையா? எனத் தோன்றியது.
&*&*&

Advertisement