Advertisement

பகுதி-5
அக்கா நான் வரல, நீங்க போய்ட்டு வாங்க.” என்று களைப்புடன் கூறினாள் கயல். அனுவின் திடீர் கேள்வியால் வியர்த்து விறுவிறுத்த அந்த ஐந்து நிமிடங்கள், போதுமான தலைவலியை தேடிக்கொடுத்தது கயலுக்கு.
என்னடி ஆச்சு உனக்கு?” உடல் சுருங்கி படுத்திருக்கும் கயலின் நெற்றியை மென்மையாக வருடி கேட்டாள் அனு.
தலை வலிக்குது அக்கா.” என்றுவிட்டு தன் தலையை அனுவின் மடியில் சாய்த்து அவள் இடையை கட்டிக்கொண்டாள்.
ரொம்ப வலிக்குதா டி. ஏன் திடீர்ன்னு வலிக்குது? அழுதியா?” என கயலின் தாடையை நிமிர்த்தி கேட்டாள் அனு. கயலின் ஒவ்வொரு அசைவும் அனுவிற்கு அத்துப்படி. விவரம் புரிய ஆரம்பிக்கும் நேரத்தில் தாயை பறிகொடுத்ததோ ஏனோ அனு அவளை தன் பிள்ளை போல் வளர்த்தாள். ஆகையால் தான் தயங்கினாலும் ஆதியிடம் கயலை பற்றி முதலிலேயே கூறிவிட்டாள்.
ம்ச்… முந்தின நாள் இரவு அழுதது இப்ப வேலைய காட்டுது.” என்று  சலித்துக்கொண்டாள் கயல்.
தைலம் தேய்த்துவிடவா?”  
அதெல்லாம் வேண்டாம். மாத்திரை போட்டுட்டேன் தூங்கினால் சரி ஆகிவிடும். நீ எங்கேயோ போகணும்னு சொல்லிட்டு இருந்த, எப்போ கிளம்புற?” கயல் தன் தமக்கை மடியிலிருந்து தலையை உயர்த்தி கேட்டாள்.
நாளை போய்க்கொள்கிறேன். ஒன்றும் அவசரம் இல்லை.” என்று பதிலளித்துவிட்டு கயலை திரும்ப தன் மடியில் கிடத்திக்கொண்டாள்.
என்னக்கா நீ; மாமா முதல் முறையா உன்னை வெளியில் கூட்டி போறேன்னு சொல்லியிருக்காரு இந்த வாய்ப்பை போய் தவற விடுரியே. உன்னையெல்லாம் என்ன பண்றது?” என்று பொய் கோபத்துடன் அவளை முறைத்தாள் கயல்.
அதைப் பற்றி நீ கவலைப் படாதே. நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன்.” என்று கயல் வாயை அடைத்தாள் அனு.
நீ சும்மா இரு. உனக்கு நேற்று தான் கல்யாணம் ஆச்சு, நீ நடந்துக்குறதா பார்த்தா அப்படி தெரியலையே?” என்று பெரிய மனிதி போல் வினவினாள்.
ப்ச்… நீ மட்டும் சின்ன பெண் போலவா நடந்துக்கொள்கிறாய்? வாய் அதிகமாகிவிட்டது டி உனக்கு!” என தன்பாட்டிற்கு சலித்துக்கொண்டாள் அனு.
அனு…” ஆதியின் கணீர் குரல் இவர்கள் இருக்கும் அறையில் ஒலித்தது. வீடு பொருட்கள் இல்லாமல் வெறுமையாய் இருந்தமையால் அவன் கூப்பிடுவது எக்கோ அடித்தது.
சட்டென்று ஒரு நிமிடம் திகைத்த தன் அக்காவை உலுக்கினாள் கயல், “என்ன அப்படியே மரம் போல அசையாம இருக்க? உன்னைத்தான் கூப்பிடுகிறார் போக்கா.” 
சுதாரித்துக்கொண்டு ஆதி இருக்கும் ஹாலுக்கு வந்தாள் அனு.
கூப்பிடிங்களா?” என்று கேட்டவளை, கண்ணால் தன் பக்கத்தில் ஜாடை காட்டினான். ஒன்றும் புரியாமல் விழித்தவளை பார்த்து “கிழே என் பக்கத்தில் உட்கார்.” என்று வாய்மொழி உத்தரவிட்டான்.
அவன் சொல் கேட்டு அமர்த்தவள் அவனையே உற்று நோக்கினாள். அவனோ தன் மொபைலில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தான்.
இதைப் பார். உனக்கு எது பிடித்திருக்கிறதென்று சொல்லு அதையே வாங்கிவிடலாம்.” என்று தன் மொபைலில் ஆன்லைன் கார்ட்டை ஓபன் செய்து காண்பித்தான்.
முரளி கூறும் வரை ஆதிக்கு அனுவை கலந்தாலோசிக்கும் எண்ணம் தோன்றவே இல்லை. அவன் விளையாட்டாய் கூறிய பிறகே இவனுக்கு குடும்பத்தின் பொறுப்பு புரிந்தது. இவ்வளவு நாள் வரவு, செலவு, விருப்பம் என அனைத்தையும் பார்த்து கொண்டது தன் பெற்றோர் என்றமையால் சற்று தடுமாறியது உண்மையே. மேலும் மூவர் எல்லா கடைகளிலும் ஏறி இறங்கி கட்டில், சோபா எல்லாம் வாங்குவது கடினம் என்பதால் ஆன்லைன் ஷாப்பிங்கை நாடினான்.
இது தான் ஆன்லைன் ஷாப்பிங்கா?” என்று அவள் ஆர்வமுடன் பார்க்க ஆரம்பித்தாள். இதுவரை காதில் மட்டுமே கேட்டு தெரிந்துகொண்ட விஷயங்களை தான் அனுபவிப்பது அனுவிற்கு உற்சாகத்தை தந்தது.
இது நல்லா இருக்கு. அப்புறம் அது… எல்லாமே நன்றாக இருக்கே!!!” என்று சிறு குழந்தை போல் தனக்கு பிடித்தவற்றை காட்டிக்கொண்டே வந்தவள், தான் அனைத்தையும் ஆர்வத்தில் பிடித்திருக்கிறது என்று கூறியது நினைவிற்கு வந்தவளாய் அவனை சங்கோஜப்பட்டு ஏறிட்டாள்.
அவளின் ஆர்வமிக்க முக பாவனைகளை உற்று நோக்கிக்கொண்டிருந்தவன் அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்து புருவம் உயர்த்தி என்ன என்பது போல் வினவினான்.
ஆங்… உங்களுக்கு எது நல்லா இருக்குன்னு தோணுதோ அதை வாங்குங்க.” என்றாள் சற்று தயங்கி.
ப்ச்…அப்புறம் ஏன் உன்கிட்ட கேட்கிறேன். உனக்கு எது வேணும் சொல்லு, நாம் அதையே வாங்கிக்கொள்வோம். இப்ப சொல்றது தான் நன்றாக நினைவில் வைத்துக்கொள். இது உன் வீடு. உனக்கு எப்படி தோணுதோ அப்படி அலங்காரம் பண்ணிக்கோ. என்ன புரியுதா?” என்றவனின் கேள்விக்கு புரிகிறது என்று தலை ஆட்டியவள் தன்னையும் மறந்து தன் பழைய நினைவுகளுள் மூழ்கினாள்.
அப்பொழுது பத்து வயது இருக்கும் அவளுக்கு, அவள் தாய் ஆசையாய் வீட்டு வாசலில் தொங்க விடும் வின்ட் சைம்ஸ் வாங்கினார். அவ்வளவு தான் இரவு வேலை முடிந்து சற்று போதையுடன் வந்த அவள் தந்தை வீட்டை ஒரு வழி பண்ணிவிட்டார். என்னை கேட்காமல் எதற்கு வாங்கினாய் என்று ஒரே சண்டை. அவள் அப்பா அம்மாவை அடிக்க அதை பார்த்துக் கொண்டிருந்த அனுவின் மனதில் ஆண் என்றால் இப்படி தான். அவர்கள் சொல் பேச்சு கேட்கா விட்டால் ஒரு வழி பண்ணி விடுவார்கள். தொடர்ந்து வந்த நாட்களும் அதை நிரூபிக்கும் வகையாகவே அமைந்தது. பின்பு தான் விவரம் புரிய ஆரம்பித்தது, இத்தனை வருடங்கள் தன் பெற்றோர்க்குள் சண்டையை தவிர வேறெதுவுமில்லை என்று. சிறு பிள்ளை என்பதால் அவள் அம்மா அனுவை இந்த சண்டையிலிருந்து தள்ளியே வைத்தார். நாட்கள் செல்ல செல்ல அவள் தந்தையின் நடவடிக்கையும் மாறிக்கொண்டே இருந்தது. தாய் இறந்த பின்பு வீட்டு பாரம் அனு தலையில் விழ, வெளியில் வேலைக்கு சேர்ந்தாள். அங்கு சற்று மாற்றத்தை கண்டவள், கணவன் மனைவிக்கு இடையில் தான் பார்த்திராத காதல் என்ற ஒன்று அந்த அருமையான உறவை தாங்கிப்பிடித்திருக்கிறது என்பது தான். தானும் அக்காதலை பாசத்தை, அனுபவிக்க ஆவல்கொண்டாள். ஆனால்..
அனு…” ஆதி அவள் வேறு ஏதோ சிந்தனையில் மூழ்கியிருப்பதை கண்டு அவளை அழைத்தான். பதில் வராதமையால் அவள் தோள் பற்றி அவளை மீண்டும் கூப்பிட திடுக்கிட்டு அவனை ஏறிட்டாள்.
எந்த உலகத்துல இருக்கிங்க மேடம்?”
செய்வதறியாது அவனையே விழித்து பார்த்துக்கொன்றவளை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் மெல்ல அவளை உற்று நோக்கினான். முதல் முதலாய் அவளை நெருக்கத்தில் உணர்ந்தவன் அவளின் சிறு சிறு பாவனைகளையும் மனதில் பதித்துக்கொண்டான். அவன் விழிகள் அவளை தீண்டுவதை உணர்ந்தவள், நெளிய ஆரம்பித்தாள். அவளை அளவெடுத்துக்கொண்டிருந்த கண்கள் தீயைத் தொட்டது போல் திடீரென்று விரிந்தது.
விறுவிறுவென அவள் இடக் கையை தன் கையில் தாங்கியவன், அவள் போட்டிருந்த கட்டை ஆராய்ந்தான்.
எப்படி அடி பட்டது?” என்று கேட்டான் உள்ளுக்குள் அவள் தவறான முடிவை நோக்கி சென்றிருக்க கூடாது என்று வேண்டிக்கொண்டு.
அது… நான் கல்யாணத்திற்கு ஒற்றுக்கொள்ளவில்லை என்று நடந்த சண்டையில் அப்பா கூர்மையாக இருந்த கம்பியை தூக்கி போட்டதுல அடி பட்டது.” என்றாள் தன் தலையை கவிழ்த்துக்கொண்டு.
டாக்டர்ட போகலாமா?” என்று அக்கரையாய் கேட்டான் மேலும் காயத்தை ஆராய்ந்தப்படி.
இல்லை வேண்டாம். சரி ஆகிடும்.” என்றாள் தன் கையை மெல்ல அவனிடமிருந்து உருகியபடி.
ம்ம்… போட்டவன், அவளின் விருப்பங்களிர்க்கேற்ப பொருட்களை ஆர்டர் செய்தான். அனுவிற்கு தான் அவன் நெருக்கம் ஏதேதோ செய்தது.
பின்னர்  இருவரும் கயலை பத்திரமாக இருக்க சொல்லிவிட்டு வெளியில் கிளம்பினர். அனு முன்னர் கூறியது போலவே வீட்டிலேயே இரவு உணவை செய்துவிட்டாள். மேற்கோடிட்டு கூறினால் ஆதிக்கு பிடித்த உணவுகளையே தயார் செய்தாள், அவனிடம் கேட்டு தெரிந்துகொண்ட பின்பு. 
ஆதியோ எல்லா இடங்களிலும் அனுவின் விருப்பத்தையே முன் நிறுத்தினான். தனக்கு பிடித்ததை வாங்கி தாருங்கள், இதுவரை யாரும் அப்படி தனக்கு செய்ததில்லை என்று அனு கூறிய வார்த்தைகள் அவன் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டே இருந்தது, ஆகையால் எல்லாவற்றையும் அவள் விருப்பத்திற்கே விட்டுவிட்டான். ஒவ்வொரு முறையும் தனக்கு பிடித்ததை வாங்குகிறோம் என்ற சந்தோசத்தில் அனுவின் முகம் இரவிலும் சூரியனாய் பிரகாசித்தது. அதை பார்த்த ஆதிக்கு மனதில் ஏதோ சாதித்து விட்டோம் என்ற திருப்தி.
வீட்டில் அனைத்தையும் ஒழுங்குபடுத்த கதிரவன் விலகி, சந்திரன் தன் ஆதிக்கத்தை செலுத்த, அனு கயலுடன் ஒரு அறையிலும், ஆதி மற்றொன்றிலுமாய் நித்திரையில் ஆழ்ந்தனர்.
***
சேவல் கூவுவதற்கு முன் காலையிலேயே அவர்கள் வீட்டு காலிங் பெல் ஒலிக்க தூக்கக் கலக்கத்தோடு அனு வாயில் கதவை திறந்து அதிர்வுற்றாள்.
முரளி, அவன் குடும்ப சகிதமாய் அங்கு நின்றிருந்தான். முரளி, அவன் தாய், தந்தை மற்றும் தங்கை.
என்னடி உன் வீட்டிற்கு வருபவர்களை வா என்று கூப்பிடமாட்டியா?” என்று பொய் கோபத்தோடு வாஞ்சையோடு கேட்டார் முரளியின் தாய் சாரதா.
ஐயோஅப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அம்மா. தீடிரென வந்தீர்களா அதான்…உள்ள வாங்க…” என்று சுதாரித்து அவர்களை வரவேற்றாள்.
என்ன கும்பகர்ணன் இன்னும் தூங்குறாரா?” என்று கேட்டான் முரளி வீட்டை நோட்டமிட்டபடி.
அனு ஒன்றும் புரியாமல் நிற்க, “ஆதியை கேட்கிறான்.” என்று தெளிவுப் படுத்தினார் முரளியின் அப்பா. அதற்குள் சாரதா உரிமையுடன் கிச்சன் சென்று காபி போட, முரளியின் தங்கை அவர்கள் எடுத்து வந்த பையை அடுக்கிக் கொண்டிருந்தாள். ஐந்து நிமிடத்தில் வெளியே வந்த சாரதா,
ஆதியை எழுப்பு அனு. இந்தா இந்த காபியை போய் கொடு.” என்று அவள் கையில் ட்ரேவை திணித்தாள்.
அனு தயங்கி நிற்பதை பார்த்த சாரதா அவளை தனியே அழைத்து சென்று விசாரித்து, எடுத்துக்கூறி அனுவை அவன் இருக்கும் அறைக்குள் அனுப்பினாள்.
ஆதியோ தான் இந்த உலகத்தில் இல்லை என்பது போல் உறங்கிக் கொண்டிருந்தான். அவன் அருகில் சென்றவள் எப்படி அவனை எழுப்புவது என தெரியாமல் குழம்பி நின்றாள்.
ஸ்ஸ்ஸ்…” என்று பாம்பு போல் சத்தம் கொடுத்து பார்த்தாள் அனு. இதுவரை அவன் கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் கூறியவள் அவனை எப்படி கூப்பிடிவது என தெரியாமல் விழித்தாள்.
ஸ்ஸ்ஸ்…” என்ன இவர் அசையக்கூட மாட்டேனென்கிறார், என்று முனகி கொண்டவள் அவனை நெருங்கினாள்.
எழுந்திரிங்க… முரளி அண்ணா, அம்மா வந்து இருக்காங்க.” என்று சிணுங்கியவளுக்கு கிடைத்ததோ வெறும் அமைதி தான். பின்னே கும்பகர்ணனை எழுப்புவது என்பது சுலபமா என்ன??

&*&*&


Advertisement