Advertisement

பகுதி-4
வீடு முதல் உணர்வுகள் வரை புதிதாய் துளிர்விட;
மாற்றங்களை வரவேற்கிறேன் என்னவனுடன்!
மறுநாளே புது வீட்டில் பால் காய்ச்சி குடிபுகுந்தனர். அது இரண்டு அறை, ஒரு ஹால், சமையல் அறை கொண்ட தனி வீடு. பெரியதும் அல்ல சிறியதும் அல்ல, நால்வர் தங்கும் அளவு உள்ள மாடி வீடு. மாடி போர்ஷன் காலியாக இருந்தது.
ஏன் சாப்பிடாம போறீங்க? ஐந்து நிமி்டம் இருங்கள் உப்புமா சாப்பிட்டுவிட்டு போகலாம்.” அனு கிட்சனிலிரிந்து கத்தினாள். முதல் நாள் என்பதால் பெரிதாக இன்னும் பொருட்கள் வாங்கவில்லை. உப்புமாவே மிஞ்சியது அந்த அவசர நாளில்.
உப்புமா என்றதும் உஷாராகிய ஆதி, நான் ஆபீஸில் சாப்பிடுகிறேன். கயலுக்கு குடு.” என்று ரூமிலிருந்து கத்தினான்.
கயல் நீ எப்போ ஸ்கூல் போகணும். நான் ஆஃபீஸ் போற வழியில உன்ன ட்ராப் பண்ணிட்றேன்.” என ஆதி ஹாலில் ரெடி ஆகி வந்து கூற அனு அங்கு வந்து தயங்கி நிற்க, ஏதாவது வேணுமா?” என்று தன் புருவத்தை உயர்த்தி கேட்டான்.
நயிட் நல்லா தூங்கலயா?… உங்க கண்ணு சிவந்து இருக்கு?” என அனு தயக்கத்துடன் கேட்டாள்.
ம்ம்… புது இடம் அதனால் தூக்கம் வரல. நீயும் தூங்கல போல உன் கண்ணும் என்னோட கண்ணோட போட்டி போடுது?” என்று பாதி உண்மையை கூறி அவளிடம் எதிர் கேள்வி எழுப்பினான்.
ஆங்… எனக்கும் புது இடம் தூக்கம் வரல.” என அனுவும் பாதி உண்மை கூறினாள்.
இருவருமே ஒரே சிந்தனையில் தூக்கம் இழந்தனர். அனுவிற்கு அவள் எதிர்காலம் குறித்த பயம். தன் வாழ்க்கையுடன் தன் தங்கை வாழ்வையும் சேர்த்து கரையேற்ற வேண்டும். அனைவரும் போல அனுவும் தன் கனவுகளை கயல் மூலம் நனவாக நினைத்தாள். குடும்ப பாரத்தால் தான் பாதியில் நிறுத்திய படிப்பை தன் தங்கைக்கு முழுமையாக கொடுக்க வேண்டும் என எண்ணினாள். தன் தந்தை தனியாக இருப்பார் என வருந்தினாலும் ஆதியுடன் இருக்கும் போது பாதுகாப்பாய் உணர்ந்தாள். தூக்கம் கண்ணை இழுக்க ஆதி என்ன எதிர்பார்க்கிறானோ அதே போல் நடந்து கொள்ளவேண்டும் என முடிவு செய்து கண்ணயர்ந்தாள்.
ஆதியோ அவனின் பெற்றோர் நினைப்பில் தவித்தான். அனுவை எதிர்பாராமல் திருமணம் செய்தது அவனுக்கே அதிர்ச்சி தான். தன்னை நம்பி வந்த பெண்ணுடன் தன் வீடு சென்ற போது சற்று தடுமாறி விட்டான் என்று சொன்னால் அது மிகையாகாது; தன் பெற்றோரின் முடிவை கேட்டு அதிர்ந்தவன், ஆணுக்கே உரித்தான மிடுக்கில் தன் வீட்டை விட்டு வெளியேறினான் தன் மனைவியின் மரியாதை காக்க. அனுவை திருமணம் செய்ததில் சஞ்சலம் இல்லை. ஆனால் ஏதோ ஒன்று நெருடலாகவே இருந்தது அவன் மனதில். அது என்னவென்றால் தான் ஏன் கோபப்பட்டு அனு கழுத்தில் தாலி கட்டினோமென்று. இது வரை பல பெண்களை கயவர்களிடமிருந்து காப்பாற்றி காப்பகத்தில் சேர்த்தவன், ஏன் அனுவை மட்டும் திருமணம் செய்தோம் என்பது புரியாத புதிராகவே இருந்தது அவனுக்கு. போதாததற்கு அனுவின் கையில் இருந்த கட்டு பயத்தை ஏற்படுத்தியது. அவள் தன் உயிரை மாய்க்க நினைத்திருப்பாளோ? என எண்ணும் போதே படபடப்பு தொற்றிக்கொண்டது அவன் உள்ளத்தில்.
ஒரு கோப்பை தண்ணீர் அருந்திவிட்டு பூனைநடை போட்டு அனு நன்றாக உறங்குவதை பார்த்த பின்பே மனம் சாந்தி அடைந்தது ஆதிக்கு. காலையில் விரிவாக பேசிக்கொள்ளலாம் என்றிருந்த ஆதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. புது வீடு சென்று எல்லாம் செட் செய்வதற்கும் ஆஃபீஸிலிருந்து கால் வருவதற்கும் சரியாக இருந்தது. நேற்றே அவசர விடுப்பு எடுத்ததால் வேறு வழி இல்லாமல் பரபரவென கிளம்பினான்.
நீங்க போங்க மாமா. நான் பார்த்துக்கொள்கிறேன்.” என்று கயல் கூற அவளை உரிமையுடன் கட்டாயப்படுத்த சங்கடப்பட்டு கிளம்பினான்.
***
பாருடா… புது மாப்பிள்ளை ஆஃபீஸ்லாம் ஞாபகம் வச்சியிருக்கான்.” என்று கவுன்டர் கொடுத்து முரளி ஆதியை வரவேற்று, அவன் உள்ளே வந்ததும் மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தான்.
என்னடா பார்வைலாம் வித்தியாசமா இருக்கு?” என்று ஆதி கேட்க,
இல்ல புதுசா ஏதேதோ பண்ணி இருக்க அதான் ஏதாவது வித்தியாசம் தெரியுதாணு பார்த்தேன்.” என முரளி நமட்டு சிரிப்பு சிரித்தான்.
டேய்…” அவனை அடிக்க கை ஓங்கியவன் அவனுடன் வேலை புரியும் நண்பன் வர கையை கீழ் இறக்கினான்.
என்னடா மச்சி, நாங்க கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா? நீ கல்யாணம் பண்ணிகிட்டியாமே? அதுவும் படிக்காத பொண்ண, ஏன்டா இப்படி உன் வாழ்க்கைல நீயே மண்ணல்லி போட்டுகிட்ட? இதெல்லாம் நமக்கு செட் ஆகுமா?” என்று இகழ்ச்சியாய் அந்த நண்பன் பேச ஆதிக்கு கோபம் சுர்ரென்று ஏறிக்கொண்டே போனது.
நிறுத்து டா… என் லைஃ பத்தி பேச நான் யாருக்கும் உரிமை குடுக்கல, சோ நீ கொஞ்சம் ஒதுங்கிக்கிறது பெட்டர்.” என அவனை புறந்தள்ளிவிட்டு முரளியுடன் பேசத்தொடங்கினான். 
என்ன முடிவு பண்ணி இருக்க?” என முரளி கேட்க ஆதி தலையும் புரியாமல் வாலும் புரியாமல் திறு திறுவென முழித்தான்.
அப்பாவும், அம்மாவும் கோபமா இருக்காங்க உன் திங்ஸ கூட என்கிட்ட கொடுத்துவிட்டாங்க, என் கேபின்ல இருக்கு.”
ப்ச்… என்ன பண்றதுனே தெரியல டா. காலை அம்மாவுக்கு போன் பண்ணினேன், அவுங்க அட்டெண்ட் பண்ணல. அப்பாவும் பேச முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அவர்கள் சொல்ற நிபந்தனைக்கு என்னால ஒத்து போக முடியாது. அதனால் கொஞ்சம் ஆற போடலாம்னு நினைக்கிறேன்.” என்று எதையோ யோசித்தபடி வருந்திக் கூறினான் ஆதி.
அப்படி என்ன நிபந்தனை அது?” என்று ஆர்வமாய் வினவினான் முரளி.
அனுவை விவாகரத்து பண்ணனுமாம். அவர்கள் சொல்கிற பெண்ணை திருமணம் செய்யணுமாம்.” என்று கூற முரளி அதிர்ந்து நின்றான்.
முரளி சிறு வயது முதலே ஆதியின் தோழன். இருவரும் பள்ளி முதல் வேலை வரை ஒன்றாகவே தங்கள் வாழ்வை கழித்தவர்கள். ஆதியின் பெற்றோர் சமூக அக்கறை அதிகம் உள்ளவர்கள். இதுவரை பலர் வாழ்க்கையில் ஒளி ஏற்றியவர்கள். அவர்களின் வழிகாட்டுதல் படியே ஆதியும் முரளியும் வளர்ந்தனர். அவர்களின் வழியில், ஆதியும் முரளியும் ஒரு அறக்கட்டளை மூலம் உதவியும் செய்து வருகின்றனர். ஆதலால் முரளிக்கு ஏமாற்றமே ஆதியின் பெற்றோர் நடந்துகொள்ளும் விதத்தை பார்த்து. பொதுச்சேவை, உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும் போல என நினைத்துக்கொண்டான் முரளி.
நீ எடுத்த முடிவு சரி தான் ஆதி. அனு எனக்கு தங்கை போல, ரொம்ப நல்ல பெண். வீட்டில் வேலை செய்யும் போது கூட நேர்த்தியாய் செய்வாள். வீட்டில் உள்ள அனைவரிடமும் நன்றாக பழகுவாள். என்ன ஒன்று அவள் அப்பா கொஞ்சம் குடி பழக்கம் உள்ளவர் போல, அடிக்கடி இவள் மேல் கை நீட்டி விடுவார். பாவம் சின்ன வயதில் தன் தங்கை படிப்பு செலவு தன் அப்பா செலவிற்கு என குடும்பமே இவளை நம்பி தான் உள்ளது. நன்றாக பார்த்துக்கொள் அவளை.” என்று தனக்கு தெரிந்தவற்றை ஆதிக்கு கூறினான் முரளி.
ம்ம்ம்… தங்கச்சி மேல் அதிக பாசமாக்கும்?” என நக்கலடித்து ஒரு சில அடிகளை பரிசாக வாங்கிக்கொண்டான் முரளியிடமிருந்து.
நாளைக்கு சார்பதிவாளர் ஆஃபீஸ்க்கு சென்று எங்கள் திருமணத்தை பதியலாம்னு இருக்கேன். நீயும் வந்துவிடு சாட்சி கையெழுத்து போட. கூட இன்னொருத்தரையும் கூட்டிட்டு வா.” என்று கட்டளை இட்டான் ஆதி.
சூப்பர் பாஸ்.” என்று ஆதியை கட்டிக்கொண்டான் முரளி. 
மாலை வீட்டுக்கு வாடா. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க வேண்டும் வந்து ஹெல்ப் பண்ணு.” என முரளிக்கு அடுத்த உத்தரவிட்டான் ஆதி.
ஆங்… இந்த விளையாட்டுக்கு நான் வரல. நீயும் உன் பொண்டாட்டியும் தான் அந்த வீட்ல இருக்க போறீங்க. உங்கள் விருப்பப்படி வாங்கிக்கோங்க. என்னை ஆலவிடுங்க.” என கும்பிடு போட்டு முரளி கிளம்ப ஆதி யோசனையில் ஆழ்ந்தான்.
***
என்ன சொல்ற கயல், நீங்க வேறு வீட்டிற்கு போய்டீங்களா? அப்புறம் நாம எப்படி சந்திக்கிறது?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் கதிரவன்.
எனக்கும் ஒன்னும் புரியல கதிர். என்னால உங்களை சந்திக்காமல் இருக்க முடியாது.” என்ற கயல் தன் விழிகளில் வழியும் நீரை அவன் கைக்குட்டை கொண்டு துடைத்துக்கொண்டாள்.
அழுகாதே. நான் தான் இருக்கேன்ல, இப்ப பார்த்துக்குற மாதிரி இந்த கடைக்கே தினமும் வந்துடு.” என்று ஆறுதல் கூறினான் கதிர்.
ஏய் கதிர்… வேலை நேரத்தில் என்ன பேசிக்கிட்டு இருக்க. வந்ததே இப்பதான் அதுக்குள்ளவேவா?” என சலித்துக்கொண்டார் அவன் முதலாளி.
நீ போ கதிர். நான் வீட்டிற்கு போகிறேன். மாமா எப்படி என்று தெரியவில்லை. பார்க்க நல்லவராக தான் தெரிகிறார். ஆனால் எனக்கு பயமாக உள்ளது. அவர் நன்றாக படித்திருக்கிறார், அக்காவோ பள்ளி மட்டுமே முடித்திருக்கிறாள். பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.” என்று தன் மனபாரத்தை இறக்கி சலித்துக்கொண்டாள் கயல்.
நம் விஷயம் தெரிந்தால் ஒத்துக்கொள்வாரா? இப்போது நீ அவர் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டாய்?” என்று யோசனையாய் கதிர் தன் கேள்வியை முன் வைத்தான்.
கதிர்…” என மறுபடி அவன் முதலாளி கூப்பிட கயல் அவனை உள்ளே அனுப்பிவிட்டு தன் புது இல்லத்திற்கு நடையை கட்டினாள்.
ஏதோ யோசனையில் நடந்து கொண்டிருந்தவள் வண்டி ஹாரன் கேட்டு தன் வலப்பக்கம் நோக்கினாள்.
கயல், வா பைக்கில் போகலாம்.” அந்த வழியே வந்த ஆதி இவள் போவதை பார்த்து வண்டியை நிறுத்தி கேட்டான்.
இல்ல மாமா… நீங்க போங்க நான் இப்படியே நடந்து வந்துறேன்.” என கயல் கூற சினம் கொண்டவன் போல் நடித்தான் ஆதி.
நீ மாமானு கூப்பிடறது எல்லாமே பொய் தான? உண்மையிலேயே நீ என்ன மாமானு நினைச்சிருந்தா வண்டில எறி இருப்பாய்?” என அவன் கேட்க அவசர அவசரமாக குறிக்கிட்டு அவன் பின் அமர்ந்தாள் கயல்.
அக்காவும், தங்கையும் தப்பாமா ஒரே மாதிரி இருக்கீங்க, என்று தன்னக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.
நாளைலிருந்து நீ ஆட்டோவில் போகலாம். நான் இன்று மாலை சொல்லிவிடுகிறேன், ஸ்கூல் தூரத்தில் இருக்கு.” என்று ஆதி கூற கயல் குறுக்கிட முயன்று தோற்றாள்.
சரியாக பதினைந்தாவது நிமிடத்தில் வீட்டிற்கு வந்தனர்.
அம்மா காபி.” என்று அவனையும் அறியாமல் ஷூ கயற்றும் போதே குரல் கொடுக்க அனு அவன் குரல் கேட்டு ஓடி வந்தாள்.
நான்… காபி போட்டு எடுத்து வரவா?” என்று கேட்டுக்கொண்டே அவனின் லேப்டாப் பை மற்றும் ட்ராவல் பேக்கையும் எடுத்துக்கொண்டாள்.
ட்ராவல் பேக்கை பார்த்ததும் அனுவிற்கு பயம் தொற்றிக்கொண்டது. வீட்டில் சண்டை போட்டு வந்திருப்பனோ? இல்லை தன்னை விட்டு இவன் எங்கும் வெளியில் கிளம்புகிறானோ? அப்படி ஆனால் ஏன் பை கனமாக இருக்கிறது என தன் மனதில் போட்டு குழப்பிக்கொண்டாள்.
அவளின் குரல் கேட்டு, சுயநிலை அடைந்தவன் சுதாரித்துக்கொண்டு “ஆங்… ஸ்ட்ராங்க காபி போட்டு கொடு. பால் இருக்கா வாங்கி வரணுமா?”
இல்ல இருக்கு. பக்கத்து வீட்டில் பால் வாங்குனாங்க நானும் வாங்கிட்டேன். அப்புறம்… பாலுக்கு பணம் கொடுக்கணும், நாளையிலிரிந்து வாடிக்கையாய் வாங்கிக்கலாம். என்கிட்ட கொஞ்சம் பணம் இருந்துது அதை வைத்து வீட்டிற்கு தேவையான கிச்சன் சாமான்களை வாங்கிட்டேன்.” என்று அவள் தயங்கி கேட்ட பிறகு தான் ஆதிக்கு உரைத்தது அவள் செலவிற்கு என்று இவன் எதுவும் கொடுத்து செல்லவில்லை என்று.
ம்ம்… என்று தலையாட்டி விட்டு உள்ளே சென்றான்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் அருமையான காபி அவன் கையில். அதற்குள் அவன் உடை மாற்றி வந்ததை பார்த்த அனுவிற்கு புரிந்தது அவன் வீட்டில் ஏதோ சண்டை என்று. ஏனென்றால் அவன் மாற்று உடை எதுவும் இதுவரை வாங்கவும் இல்லை நேற்று எடுத்து வரவும் இல்லை.
இரவு வெளியில் சாப்பிட்டு கொள்ளலாம். வீட்டிற்கு என்ன தேவை என்று சொல்லு, வாங்கி விட்டு வரலாம்.” என்று காபியை ருசித்தவாறே அவளிடம் கூறலாலான்.
நான் வீட்டிலே சமைத்து விடுகிறேன். நீங்கள் இன்று முழுவதும் வெளியில் சாப்பிட்டு இருப்பீர்கள், உடம்பு கெட்டுவிடும்.” என்ற அவளின் அக்கறையை பார்த்து அவன் மனம் பூரிப்படைந்தது.
ஓகே மேடம்.” என்று ஒரு சலாம் போட்டுவிட்டு வீட்டின் தலைவனாய் வீட்டிற்கு தேவையானது, அதற்கு ஆகும் செலவு என்று கணக்கு வழக்கை பார்க்க ஆரம்பித்தான். அவள் மீதி வேலை முடிக்க எழுந்தாள்.
அனு கயலையும் கிளம்ப சொல்லு. ஆறு மணிக்கு கிளம்பலாம்.” என்றவன் முகம் மலரும் படி ஒரு புன்முறுவல் பூத்துவிட்டு சென்றாள் அனு. 
யாருக்குத்தான் சந்தோஷம் இருக்காது, திருமணம் ஆன எல்லா பெண்களும் விரும்புவது, தன் கணவன் தன் குடும்பத்தையும் அவனுடையது போல் நடத்த வேண்டும் என்பது.
ஏய் கயல்உனக்கு படிக்க வேண்டிய வேலை இருந்தால் இப்போதே முடித்து விடு. மாமா வெளியே போகணும்னு சொன்னார்.” அனு கயலின் துணியை சரி செய்தபடி அவளிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள்.
கயல் இது யாரோட கைக்குட்டை டி, உன்னோடது இல்லையே இது.” என்று ஒரு கைக்குட்டையை தூக்கி காண்பித்து கேட்டாள் கயலிடம்.
கயலுக்கோ வேர்த்து கொட்டி பயத்தில் கைகள் நடுங்க ஆரம்பித்தது. வேகமாக மூச்சிழுத்து கைகளை பிசைய வார்த்தை வரவில்லை கயல் வாயில்.
ஏய் உன்கிட்ட தான் கேட்கிறேன்… யாரோடாது இது. பார்க்க ஆண்கள் உபயோகப்படுத்துற மாதிரி இருக்கு?” என சந்தேகத்துடன் வினவினாள் அனு.
அது… வந்து… ஆங் அது மாமா கர்ச்சிப்.” என்று மென்று முழுங்கி சமாளித்த கயலை நம்பினாள் அனு.
&*&*&

Advertisement