Advertisement

பகுதி – 35 
“எதற்கு இவ்வளவு பயப்படுகிறாய் அனுமா… இதுவும் உன் வீடு தான் அங்கு எப்படி இருந்தாயோ அப்படியே இங்கும் இருக்கலாம்.” என்று கோபாலும் தன் பங்கிற்கு அனுவை தேற்றினார்.
இதையெல்லாம் காதில் வாங்கிக்கொண்டே அங்கே வந்தார் ரேகா, “நீயும் என் மகன் போல் என்னை வில்லி என்று நினைத்து விட்டாயோ?” என்று கேட்டதும் அனுவின் கண்கள் அகலமாயின.
“இல்லை இல்லை அத்தை…” என்றாள் பதறியடித்து.
“ரே டார்லிங்… உன்னைப் பார்த்து தான் பயப்படுகிறாள்.” என்று சிரித்துக் கொண்டே தன் மனைவியை சாக்காய் வைத்து தன் தாயை கேலி செய்தான்.
“நீ தான் எதுவும் சொல்லி கூட்டி வந்திருப்பாய்.” என்று பதிலுக்கு அவனை வாரினார் ரேகா.
“ஆல் இஸ் வெல் ரே டார்லிங்.” என்று சம்மந்தம் இல்லாமல் சொல்லி ரேகாவை கட்டியணைக்க அவர்கள் சம்பாஷனையை பார்த்து மலைத்தாள் அனு. ஆதியின் முகத்தில் தெரிந்த பிரகாசம் ரேகாவுடன் இருக்கும் போது சற்று அதிகரித்திருப்பதை உணர்ந்தாள். ஒருவர் வாழ்வில் யார் வந்தாலும் சென்றாலும் மாறாத ஒரு உறவு என்றால் அது தாய்க்கும் சேய்க்கும் உள்ள உறவு மட்டும் தான்.
“போய் ரெஸ்ட் எடுங்கள்… முரளி வீட்டில் தான் நமக்கு இரவு டின்னர்…” என்று இருவரையும் உள்ளே அனுப்ப கயலையும் அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கச் செய்தார்கள்.
“நீ எப்படி இவ்வளவு சீக்கிரம் மனம் மாறினாய் ரேகா?” என்று அவர்கள் தனிமையில் இருக்கும் போது கேட்டார் கோபால்.
“சீக்கிரம் என்றெல்லாம் சொல்ல முடியாது. நன்கு யோசித்த பின்பே இந்த முடிவிற்கு வந்தேன். எவ்வளவு நாட்கள் தான் அவர்களை அப்படியே விடுவது, என்றாவது ஏற்றுக்கொள்ளத் தானே வேண்டும். அதை முன்னரே செய்து விட்டேன்.”
“மருமகள் மேல் கோபமில்லை என்கிறாய் அப்படித்தானே?” என்று தன் அடுத்த சந்தேகத்தை வினவினார்.
“அதை இந்நேரம் புரிந்து கொண்டிருப்பீர்கள்.” என்று பட்டும் படாமல் பதிலளித்து சத்தமில்லாமல் கிளம்பினார்.
கோபால் அவரின் மனதை புரிந்து கொண்டாலும் ரேகாவே நேரடியாக ஒத்துக்கொள்ள வேண்டும் என்றே அப்படி கேட்டார் ஆனால் அதை தன் பேச்சுத்திறமையால் தவிர்த்துவிட்டார் ரேகா.
… 
“ஓய்… என்ன இன்றும் வந்ததிலிருந்து பிரகாசமாய் இருக்கிறாய்? வெட்கப்படுகிறாயா என்ன?” என்று கட்டிலில் சாய்ந்து கொண்டு சீண்டினான்.
அவனருகில் படுத்தவள் தன் முகத்தை அவன் மார்பில் புதைத்துக் கொண்டு, “சந்தியா அக்காவை அலங்காரம் செய்யும் போது சுற்றி இருந்தவர்கள் கேலி செய்தார்களா அதில் ஆனந்தி அக்கா என்னையும் இழுத்துவிட்டார்.” என்று சற்றுச் சிணுங்கினாள்.
அவள் தன் முகத்தைப் பார்க்க வெட்கப்படுகிறாள் என்று புரிந்து கொண்டவன் ஆர்வமிகுதியில், “அப்படி என்ன கேலி செய்தார்கள் நீ இப்படி பம்முகிறாய்?” என்று கேட்டான்.
“அது…அதுஎனக்குஎக்ஸ்பீரியன்ஸ்ஜாஸ்திஅக்காவிற்குஎந்தச்சந்தேகமாகஇருந்தாலும்என்னிடம் கேட்டுக்கொள் என்றதும் எனக்கு சங்கோசமாகி விட்டது நான் எப்படி?”
சற்று தாமதமாகவே அவள் கூறியதை புரிந்து கொண்டவன் சத்தமாக சிரிக்க இரண்டு அடியும் சேர்த்து வாங்கிக் கொண்டான்.
“லவ் யூ சோ மச்டி க்யூட் பெண்டாட்டி.” என்று எதிர்பாரா நேரத்தில் அவள் காதில் கிசுகிசுத்து அவள் மடல்களை முத்தமிட்டான்.
இரண்டு நிமிடம் அவன் கூறியதில் வாயடைத்திருக்க தன் இதழை அவளோடு பொருத்தி அவளை நினைவிற்கு  கொண்டுவந்தான்.
“இப்போதாவது சொல்ல வேண்டுமென்று தோன்றியதே.” என்று அவள் பெருமூச்சிலுக்க அவன் கடிகாரத்தை கண் காட்டினான்.
அது பன்னிரெண்டை தொட்டிருக்க, “ஹாப்பி அனிவெர்சரி.” என்று மீண்டும் அவள் மடல்களில் தன் இதழை ஒற்றி எடுத்தான்.
முகம் முழுக்க பல்லாய் ஒளிர்ந்தவள் அவனை கட்டியணைத்தாள், “இதை விட வேறு எந்த பரிசும் எனக்குத் தேவையில்லை… இன்னொரு முறை சொல்லுங்கள்.” என்று அவன் சட்டை பொத்தானை  திருகியபடி கேட்டாள்.
“லவ் யூ டி பேபி…” என்றான் இம்முறை சத்தமாகவே; மகிழ்ச்சியில் அவன் மேல் ஏறி புரள கதவு தட்டும் ஓசை அவர்களை கலைத்தது.
“ம்ச்… இந்த நேரத்தில் வந்து யார் தொந்தரவு செய்வது?” என்று அவன் சலித்துக் கொள்ள அனு சென்று கதவை திறக்க கயல், கோபால், ரேகா மூவரும் வாழ்த்த ரெடியாக நின்றிருந்தனர். கயல் கையில் ஒரு பெரிய கேக்கும் இருந்தது.
அவர்களை பார்த்ததும் ஆதியும் எழுந்து வந்தான். அவர்கள் அறையிலே கேக் வெட்டி கொண்டாட முதல் முறையாக நிறைவான குடும்பமாக கொண்டாடும் விஷேஷமாகி விட்டது அவர்களின் திருமணநாள்.
ஆதியின் சார்பாக இரண்டு ஏ போட்ட மோதிரத்தை தன்கொன்றும் அவளுக்கொன்றும் ஜோடியாக வாங்கிப் பரிசளித்தான். ஆதியின் பெற்றோர் அனைவருக்கும் புது உடையோடு ஆதிக்கு காரையும் பரிசளித்தனர்.
நாட்கள் விரைந்தோட அனு ரேகாவுடன் நன்கு பழகிவிட்டாள். அவ்வப்போது கருத்து வேறுபாடு வருவதுண்டு தான், ஆனால் அதை இருவருமே மற்றவர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்லாது சமாளித்தனர். இரண்டு மூன்று முறை ஆதியிடம் அனு கை நீட்டுவதை வேறு பார்த்துவிட்டார் ரேகா. கோபால் தான் அதை பெரிது படுத்தவிடாமல் சமாளித்தார். அதிலிருந்து அனு சற்று கவனமாகிவிட்டாள் என்றே சொல்ல வேண்டும். தனிமையில் இருக்கும் போதும் மட்டும் அவனின் சீண்டல்களை தாங்காது கை நீட்டிவிடுவாள் மற்றபடி அவர்களுக்குள் எதுவும் மாறவில்லை.
கயல் மற்றும் கதிரின் சந்திப்பு மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதங்களானது அவனின் புதிய வேலையால். கயலும் நல்ல மதிப்பெண்களோடு அனு படித்த கல்லூரியிலேயே படிக்கிறாள்.
வெற்றிகரமாக கல்லூரி முடித்து யூ.பி.எஸ்.சி தேர்வும் எழுதிவிட்டாள் அனு. அதனுடைய ரிசல்ட் அன்று வீடே பரபரப்பானது.
அனுவின் உழைப்பும், கோபாலின் பயிற்சியும், ரேகாவின் வேண்டுதலோடு சேர்த்து ஆதி மற்றும் கயலின் ஊக்கமும் வீண் போகவில்லை.
… 
அறையில் நுழைந்த ஆதி அவள் சூட்கேசுடன் மன்றாடியதை பார்த்து, “தேவையானதை எடுத்து வைத்துக்கொண்டாயா? அங்கே நினைக்கும் பொழுது எதுவும் வாங்க முடியாது.” என்றான் அவள் அருகில் வந்தவுடன்.
அவனை எறிடாமல் ம் போட்டவள் சூட்கேஸை தள்ளி வைத்துவிட்டு தலை வரை போர்வையை இழுத்துப் போர்த்தி படுத்துக் கொண்டாள்.
அவளின் மனநிலையை உணர்ந்தவன் சத்தமில்லாமல் அவள் அருகில் சாய்ந்து அவள் மேல் கை போட்டான். லேசாக அசைந்தவள் அவன் புறம் திரும்பாமல் இருக்க வலுகட்டாயமாக அவளை திருப்பினான்.
“இப்போது எதற்கு இப்படி முகத்தை தொங்க போட்டு கொண்டு எல்லோரையும் கஷ்டப்படுத்துகிறாய்?”
அவள் அமைதியையே பதிலாய் தர மீண்டும் அவளை சமாதானம் செய்ய இறங்கினான். “எல்லாம் கொஞ்ச நாட்களுக்கு தான், நான் ஒரு வாரம் அங்கு வந்து தங்குகிறேன்… வாராவாரம் யாராவது ஒருவர் பார்க்க வருகிறோம். அதிக நாட்கள் என்று நினைத்தால் தான் கஷ்டமாக இருக்கும் பாசிட்டிவாக யோசி. இங்கு இருக்கின்ற முசோரிக்கு தான் செல்கிறாய். காலை பார்க்க வேண்டும் என்று தகவல் சொன்னால் மாலைக்குள் வந்துவிடப் போகிறேன்.” என்று தைரியம் சொல்ல சற்று சமாதானமானவள்,
“கண்டிப்பாக வரவேண்டும்.” என்று கை நீட்டி சிறு குழந்தை போல் மிரட்ட சிரித்துக் கொண்டே அவள் பேச்சிற்கு கட்டுப்பட்டான்.
ஆம்… அனு அனைத்து கட்ட தேர்விலும் தேர்ச்சி பெற்று, இப்போது பயிற்சிக்கு உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள “Lal Bahadur Shastri National Academy of Adminstration” செல்கிறாள்.
மறுநாளே ஆதியுடன் பயிற்சிக்கு கிளம்பினாள் அனு. அவன் வாக்களித்தது போலவே அவளுக்கு அங்கு பழகும் வரை தங்கியிருந்தான். வாராவாரம் யாராவது ஒருவர் அவளை சந்தித்து வந்தனர். அதிக தினங்கள் ஆதி தான் சென்றிருந்தான். அவளுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நன்றாக இருவரும் எவ்வித தொந்தரவு இல்லாமல் குளிர் பிரதேசமான முசோரியை சுற்றினர். இதற்கிடையில் அனுவின் தந்தையும் குடித்து விட்டு ரயிலில் விழுந்து இறந்து விட்டார். அவர் ஏன் அனுவை வெறுத்தார் என்பதற்கான காரணம் அவருடனே கருகி போய்விட்டது.
இப்படியே வருடங்கள் ஓடி அவளுக்கு போஸ்டிங்கும் போட்டாயிற்று. ரேகா பயந்தது போலவே தென்மாவட்டத்தில் அவளுக்கு வேலை. வேறு வழியின்றி இரு வாரமாக தனியாக அங்கே தங்கி இருப்பவளை பார்க்கச் சென்றிருந்தான் ஆதி. அங்கு,
“என்னால் இனி உங்களையெல்லாம் விட்டு இங்கு தங்க முடியாது.” என்று அவனிடம் சண்டையிட்டாள் அனு.
“எனக்கு மட்டும் ஆசையா? வேறு வழி ஏதும் இருக்கிறதாவென்று பார்ப்போம்.” என்று அவன் சற்று தணிந்து பேச அதை ஏற்றுக் கொள்ளவில்லை அவள்.
“வேறு என்ன வழி இருக்கிறது? முன்னர் போல் என்னை பேசி சமாதானம் செய்துவிடலாமென்று மட்டும் நினைக்காதீர்கள்.” என்று எச்சரித்தவளிடம் தன்னம்பிக்கை, தைரியம் அதிகமானதோடு மட்டுமில்லாமல் அவனிடம் பிடிவாதம் பிடிப்பதிலும் அதிகமாகியிருந்தது. அது அவன் காதல் தந்த உரிமை, அவனுடன் வாழ்ந்த வாழ்க்கை தந்த தைரியம்.
“உடனேயெல்லாம் என் வேலையை விட்டு வர முடியாது அனு. ப்ராஜெக்ட் வேறு போய் கொண்டிருக்கிறது, பாதியில் வரமுடியாது.” என்று சற்று கோபத்துடனே பதிலளித்தான். அவனும் என்ன தான் செய்வான் பாவம், இரண்டரை வருட பிரிவிற்கு பின் ஒன்றானவர்களுக்கு மீண்டும் இப்படி ஒரு சிக்கல் வர ஆற்றாமை முந்தி கொண்டது.
“நீங்கள் என்ன சொன்னாலும் சரி நான் இனி தனியாக தங்கமாட்டேன்.” என்று மீண்டும் பிடிவாதம் பிடித்தாள் அவள்.
“சும்மா சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லாதே அனு… நான் தான் வேறு வழி இருக்கிறதாவென்று பார்க்கிறேன் அது வரை இப்படியே இருப்போம் என்றால் சிறு பிள்ளை போல் பிடிவாதம் பிடிக்கிறாய்.” என்று இம்முறை அவன் அதட்ட அவளும் குரலை உயர்த்தினாள்.
“ஆமாம் சிறுபிள்ளை சுமக்கிற சிறுபிள்ளை. போங்க எப்போதும் நீங்கள் சொல்வதை தான் நான் கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.” என்றதுமே அவன் உறைந்துவிட்டான்.
வேகமாக அவளிடம் சென்றவன் கையை பிடித்து தன் மேல் சாய்த்துக் கொள்ள அவனது அணைப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டாள் அவனவள்.
“உண்மையாகவா சொல்கிறாய்?.. எப்படி?” என்று திணற செல்லமாக அவன் மார்பில் குத்தினாள்.
“என்ன எப்படி? செய்வதையெல்லாம் நன்றாக செய்துவிட்டு இப்போது வந்து… ம்ச்… இப்போதாவது சொல்லுங்கள் இங்கேயே தங்குவீர்களா மாட்டீர்களா?” என்றவளின் விரல்கள் அவன் மேல் கோலமிட்டன.
“என் பேபிக்காக தங்குவேன்.” என்றான் மகிழ்ச்சியில் விசிலடித்தபடி.
குறும்போடு அவன் நெஞ்சிலிருந்து முகம் தூக்கியவள் “எந்த பேபிக்காக?” என்றாள் புருவத்தை உயர்த்தி.
“இதில் என்ன சந்தேகம் இன்னும் ஒன்பது திங்களில் வரப்போகும் என் பேபிக்காக…” என்று போலி அப்பாவிதனத்தை பூசிக்கொண்டு சொன்னான்.
“உங்களை…” பல்லை கடித்தவள் அவனை அவ்வறை முழுக்க ஓடவிட்டாள். அந்த வீடே சிரிப்பொலியில் நிரம்ப அவர்களோடு சேர்ந்து நாமும் விடைபெறுவோம்…
நாம் நினைத்தது கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கையில் எல்லாம் முடிந்து விட்டது என்றில்லை… அனு நினைத்திருந்தால் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் ஆனால் அதை செய்யாமல் வாழ்க்கை போன போக்கில் காத்திருந்ததால் தான் ஆதி அவள் வாழ்வில் வந்தான். அதே போல் நமக்காக எங்கோ என்றோ ஒரு நல்ல வழி காத்துக்கொண்டு தான் இருக்கிறது… அதை டோர் டெலிவரியாய் எதிர்பார்க்காமல் நாம் தான் அலைந்து திரிந்து கண்டுபிடிக்க வேண்டும். எப்போதுமே அதில் ஒரு சுகம் இருக்கும்…
?❤சுபம்❤?

Advertisement