Advertisement

பகுதி – 34
அணைப்பிலிருந்து வெளிவந்தவள், “ஆமாம் அங்கு வெளியில் இருக்கும் போது கயலிடம் என்ன சொன்னீர்கள்? ஹான்… நினைவு வந்துவிட்டது… உன் அக்கா போல் மறை கழன்று விட்டதா என்றா கேட்டீர்கள். இரண்டு அடி போட்டால் எல்லாம் சரியாகிவிடும்.” என்று முறைக்க அவள் கரங்கள் ஏற்கனவே அவனை பதம் பார்த்தன.
“உனக்கு மறை டைட்டா இருக்கிறது என்று ஒத்துக் கொள்கிறேன்… அடிக்காதடி… பிறகு நீ தான் கஷ்டப்படுவாய்…” என்று சிரிப்போடு அவன் பேச அவளும் வேண்டுமென்றே அவனை உசுப்பேற்ற அவ்வறையே சிரிப்பொலியால் நிரம்பியது.
“உங்களுக்கு எப்படி இந்த விஷயமெல்லாம் தெரியும்? நீங்கள் இருவரும் வீட்டில் இருக்கும் போது நானும் தான் இருக்கிறேன் ஆனால் எனக்கு இதை பற்றி எந்த ஐடியாவும் இல்லை.” என்று தன் சேட்டையை நிறுத்தி கேட்டாள் அனு.
“அதற்கெல்லாம் மூளை என்கிற ஒரு உறுப்பு வேண்டும் செல்லம்.” என்று அவள் மூக்கை பிடித்து ஆட்ட வேகமாக அவன் கையை தட்டிவிட்டாள்.
“இன்றைக்கு போதும் போதும் என்கிற அளவிற்கு அனைத்து உணர்வுகளையும் அனுபவித்தாயிற்று ஒன்றைத் தவிர.” என்றவளின் கரங்கள் குறும்போடு அவன் கழுத்தை சுற்றி வளைத்தன.
“அது என்ன? மகிழ்ச்சி, ஏமாற்றம், துக்கம், கோபம்… வேறு என்ன?” என்று அவன் தீவிரமாய் யோசிக்க ‘உங்களையெல்லாம் வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது’ என்று தலையில் அடிக்காத குறையாய் தன்னை நொந்துக் கொண்டவள் அவன் முகத்தை கீழ் இழுத்து தன் இதழை பதித்தாள்.
“அடிக்கும் கை தான் அணைக்கும் என்று சரியாகத் தான் சொல்லி இருக்கிறார்கள்.” என்று ஆதி சீட்டியடிக்க, முறுவலுடன் அவனை அணைத்துக் கொண்டாள் அவனவள்.
“நாளை மறுநாள் முரளிக்கு நிச்சயதார்த்தம்… அடுத்த வாரம் திருமணம் என்று இன்று தான் முடிவானது.” என்று அடுத்த செய்தியை ஆரம்பித்தான் ஆதி.
புருவம் சுருங்க அவனை பார்த்தவள், “ஏன் இவ்வளவு சீக்கிரம்?” என்றாள்.
“சந்தியா வீட்டில் மனம் மாறுவதற்குள் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று முரளி பார்க்கிறான். அவர்களை சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.”
“ம்ம்…”
“ஏய்… அங்கு நிலா வருவாள் உனக்கு ஏதும் பிரச்சனை இல்லையே? நாம் எப்படியும் முன்னரே போக வேண்டும், நிலா சந்தியாவோட க்ளோஸ் ஃபிரன்ட்…” என்று அவன் இழுக்க அதை புரிந்து கொண்டவளாய் முறுவலை உதிர்த்தாள்.
“எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை…” என்று அவன் கன்னம் ஏந்தியவள் “லவ் யூ” என்றாள் தன்னை கட்டுப்படுத்த முடியாது. ஒவ்வொரு முறையும் பதிலை எதிர்பார்த்து அவள் காதலை சொல்ல இம்முறையும் அவன் ம்.. போட அதை பெரிதாய் எடுத்தக் கொள்ளவில்லை அவள். வார்த்தையால் வெளிபடுத்தினால் தான் காதல் என்று முதலில் நினைத்தவள் அவனுடன் முழுதாக வாழ ஆரம்பித்தவுடன் புரிந்துகொண்டாள் அவனின் ஒவ்வொரு செய்கையிலும் காதல் இருக்கிறதென்று. அன்றிலிருந்து வார்த்தைகள் தேவைப்படவில்லை ஆனால் அனைவருக்கும் பேண்டஸி இருப்பது போல அவளுக்கும் அவன் காதலை வாய்மொழியால் கேட்க வேண்டும் என்ற ஆவல் ஒரு ஓரத்தில் பூட்டிக் கிடக்கிறது.
எப்பொழுதும் போல் ஒரு வாரம் அவர்கள் வாழ்வு நகர முரளி திருமண நாளும் வந்தது. மூவரும் முதல் நாள் இரவே முரளி திருமணம் நடக்கும் மண்டபத்திற்கு வந்துவிட நிலாவை நேரெதிரே சந்திக்கும் நிலை வந்தது. நிலா அவர்களை பார்த்து முறுவலித்து அவர்கள் அருகில் வந்து ஆதியிடம் கை நீட்டினாள்.
அவன் கேள்வியாய் நோக்க நிலாவே தன் கரத்தை அவன் கரத்தோடு சேர்த்தாள். இதை பார்த்த அனுவிற்கு ஒன்றும் விளங்கவில்லை. எங்கே மறுபடி முதலிலிருந்து ஆரம்பிப்பாளோ என்ற படபடப்பும் தொற்றிக் கொண்டது.
“அட்வான்ஸ் ஹாப்பி அனிவெர்சரி அத்தான்.” என்று எதிர்பாரா விதமாய் வாழ்த்தினாள் பளிச்சென்ற புன்னகையுடன். இதை கேட்டவுடன் ஆதிக்கும் அனுவிற்கும் அப்பாடாவென்று ஆகியது.
அதே சிரித்த முகத்தோடு அனு புறம் திரும்பியவள் அவளை அணைத்துக் கொண்டு வாழ்த்தினாள்.
சில நிமிடம் பேசிவிட்டு அவள் விடைபெற கயல் அனு கையை சுரண்டினாள்.
“அக்கா எப்போது உங்கள் அனிவெர்சரி?” என்று அவள் காதில் கிசுகிசுப்பாய் கேட்க,
“நாளை மறுநாள்.” என்று பதிலளிக்கும் போதே ரேகாவும் கோபாலும் அங்கு வந்தனர்.
“என்னடா முரளிக்கு துணையாய் இல்லாமல் இங்கு உட்கார்ந்திருக்கிறாய்?” என்று அவனை நெருங்கியவுடன் கேட்டார் ரேகா.
“இவளுக்கு இங்கே யாரையும் தெரியாது… எப்படி இங்கேயே விட்டு செல்வது…” என்று அசடு வழிய கோபால் அவன் தோள் தட்டினார்.
“நீ இப்படி அவளை செல்லும் இடமெல்லாம் உன்னை சார்ந்திருக்கும்படி செய்தால் அவள் எப்படிடா பின்னாளில் வெளியில் தயங்காமல் செல்வாள்? எப்படி வெளியில் தங்கிப் படிப்பாள், வேலை செய்வாள் போ போய் முரளிக்கு உதவு… இப்போது தான் நாங்கள் வந்து விட்டோமே…” என்று கோபால் கூற அது நிதர்சனம் என்று உணர்ந்தாலும் ஏனோ அவளை தனியாக விட்டுச்செல்ல மனம் வருவதில்லை. தன்னுடன் இருக்கும் போதாவது வெளியுலகில் தேவைப்படும் தற்பாதுகாப்பு பற்றி நினைத்து கவலைப்படாமல் இருக்கட்டுமே என்ற எண்ணம் அவனுக்கு. அவன் அவளைப் பார்த்து கண்ணசைக்க லேசாக கலங்கியிருந்த கண்களோடு தலையசைத்தாள். ஏனோ தனியாக தங்கி வேலை செய்யவேண்டும் என்று கோபால் கூறியவுடன் அவள் கண்கள் கலங்கிற்று. தன் வாழ்க்கை பக்கங்களை புரட்டிப் பார்த்தால் இதுவரை யாரையும் பெரிதாக சார்ந்திருக்கவில்லை அவள். ஆனால் ஆதியை விட்டு பிரியநேரிடும் என்று நினைக்கும் போதே மனம் பாரமானது. மூளை மட்டும் பிரிவு தற்காலிகம் தான் என்று கத்தியது.
“வீட்டிற்கு வராதே என்று ஏதோ கோபத்தில் சொன்னால் அதற்காக ஒரு வருடமாக வீட்டிற்கே வரமாட்டாயா? உன் வீடு அது தான் நினைவு இருக்கட்டும்.” என்று கண்டிப்புடன் கூறிய ரேகா அவள் அருகில் அமர்ந்து கொண்டார்.
அதை கேட்ட அனு தன் காதுகளையும் நம்பாமல் ரேகாவை விசித்திரமாய் பார்க்க, “உன் மாமியார் தான் அவள், ஏலியன் இல்லை.” என்று கோபால் கேலி செய்ய சங்கடப்பட்டு திரும்பிக் கொண்டாள். 
“நாளை வந்துவிடுகிறேன் அத்தை.” என்று பிரகாசமாய் கூற அவர்களுக்குள் இருந்த இறுக்கம் விலகி சுணக்கம் உருவானது. 
… 
கண்ணாடியின் முன் நின்று தன் அலங்காரங்களை அனு கலைக்க அதை பார்த்துக் கொண்டிருந்தவன், “என்ன அனுமா இன்றைக்கு பளிச்சென்று இருக்கிறாய்? உன் முகத்தில் அசதிக்கான சாயலே தென்படவில்லையே.” என்று கட்டிலில் படுத்தபடியே கேட்டான்.
“நம் எல்லா உடைகளையும் பேக் செய்ய வேண்டும்… வீட்டை காலி செய்ய ரெடி பண்ணுங்கள்.” என்று ஒரே மூச்சில் பேசியவள் துணிகளையெல்லாம் மடிக்க ஆரம்பித்தாள்.
“ஏய்… அசதியாக இல்லை என்பதற்காக எதற்குடி துணியெல்லாம் இப்போது அடுக்குகிறாய்? இங்கே வா நீ தூங்குவதற்கு நான் வழி செய்கிறேன்.” என்று கை நீட்டி கூப்பிட்டான்.
“காது கேட்கவில்லையா… வீட்டை காலி செய்ய வேண்டும்.” என்று கத்த அவள் கூச்சலில் கயலே அவர்கள் அறைக்கு வந்துவிட்டாள்.
“என்னவாயிற்று?… என்ன சத்தம்?” என்று பதறியடித்து உள்ளே ஓடி வந்தாள் கயல்.
“எல்லாம் உன் மறை கழன்ற அக்கா தான்.” என்று ஆதி கூற அவள் கையில் இருந்த துணி அவன் முகத்தை பதம் பார்த்தது.
“அக்கா உனக்கு கை ரொம்ப நீளுது… பாவம் மாமா என் முன்னாலே இப்படி அடிக்கிறாயே நான் இல்லையென்றால்???” என்று அதிர்ச்சியாவது போல் வாயில் கை வைத்தாள் கயல். அவனும் தன் பங்கிற்கு அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டான்.
“போதும் ரொம்ப நடிக்காதடி… போய் உன் துணிகளையெல்லாம் பேக் பண்ணு.” என்று அவளை விரட்டிக் கொண்டே மீண்டும் வார்டோபை காலி செய்ய எத்திணிக்க அவள் கரம் பற்றி தடுத்தான்.
“இப்போ எதற்கு வீடு காலி செய்யவேண்டும் என்கிறாய்? உண்மையாகவே மறை கழன்று விட்டதா.” என்று முகத்தை ஆராய்ந்தான்.
முகத்தை சுழித்தவள் தன் கையில் இருந்த துணியை அருகில் போட்டுவிட்டு அவன் மார்பில் சாய்ந்தாள் “அத்தை நம்மை வீட்டிற்கு வரச்சொன்னார்கள். நம் மேல் இருந்த கோபம் குறைந்துவிட்டது.”
அதை உறுதி செய்யும் விதமாய் இருந்தது கயலின் பதில், “ஆமாம் என்னிடம் கூடச் சொன்னார்கள் அக்காவோடு நீயும் வந்து விடென்று.”
கயல் குரல் கேட்டு அவனிடமிருந்து துள்ளிக் குதித்து நகர்ந்தாள் அனு.
‘இவள் இன்னும் போகவில்லையா?’ என்று மனதில் நினைக்க அதை கலைக்கும் விதமாக ஆதி குறுக்கிட்டான்.
“அம்மா சொன்னார்களா? எப்பொழுது… என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே?” என்று கேட்டுக் கொண்டே தன் செல்போனை எடுத்தான்.
அவன் பேசி முடித்து வருவதற்குள் இவர்கள் பாதி லக்கேஜை பேக் செய்துவிட்டார்கள்.
அதை பார்த்தவன் கண்களை அகல விரித்து, “என்ன ஒரு வேகம்… நாம் இப்போது அங்கு போகவில்ல.” என்றதுமே இருவர் முகத்திலும் ஈயாடியது.
“சும்மா சொன்னதற்கே இந்த ரியாக்ஷனா… அப்போது இது உண்மையாக இருந்தால்…” என்று அவன் முடிக்கும் முன்னே பாய்ந்து வந்து அவனை இரண்டு அடி போட்டாள் அனு.
“பார்த்தியாடி உன் மாமாவை… இப்பொழுது தெரிந்து கொள் எனக்கு ஏன் கை நீளுகிறதென்று.” என்று தன் தங்கையிடம் தன் செயலுக்கு வாதாடினாள் அனு.
“சின்னப் பொண்ணை கெடுக்காதடி… நீ உன் அக்காவை போல் இருக்காதே, பாவம் கதிர் ஓடிவிடப்போகிறான். ஏதோ நானாக இருக்கப் போக இவளை சமாளிக்கிறேன்.” என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொள்ள கயல் சிரித்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
“என்ன கொழுப்பா?” என்று அவள் பல்லை கடிக்க அவளை லாவகமாக தூக்கி கட்டிலில் கிடத்தினான்.
தன் மேல் சாய்ந்தவன் மார்பில் கை வைத்து தடுத்து “அவள் உள்ளே வந்துவிடப் போகிறாள்.” என்று கதவை கண்காட்டினாள்.
வேகமாக கதவை தாழிட்டு வந்தவன் அவள் அருகில் சாய, “இன்று அத்தை என்னுடனே இருந்தார்கள் தெரியுமா. என் கூடவே சாப்பிட்டார்கள்… நிலா அக்கா வந்த போது கூட அவருடன் செல்லவில்லை…” என்றவளின் குரலிலும் முகத்திலும் மகிழ்ச்சி நயனமாடியது.
“மாமியாரும் மருமகளும் ஒன்று சேர்ந்து விட்டீர்கள் என்று சொல்லு.” என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைக்க அவ்விரவு அனைவருக்கும் சந்தோசமாக கழிந்தது. 
மறுநாள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் முரளி திருமணம் முடிய இவர்கள் மூவரும் ஆதி வீட்டிற்கு பயணமாயினார். ஆதி வீடு இருக்கும் இரண்டாம் தளத்திற்கு செல்வதற்குள் விழி பிதுங்கி விட்டார்கள்.
கண்ணில் பட்ட அனைவரும் அனுவை விசாரிக்க ஒரு சிலர் அவளை மறைமுகமாக சாடவும் செய்தனர். மக்களின் மனதில் பதிந்தது மறைய ஒரு வருடம் போதாது போல… அவளை விசாரித்த கால்வாசி பேர் அவள் இன்னும் அவர்களுக்கு கீழ் பணிபுரிபவள் போலவே பேசினர். அது அவனுக்கு வருத்தத்தை தந்தாலும் அனு அது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவளை பொறுத்தவரை இன்று தான் தன் புகுந்த வீட்டிற்க்கு செல்கிறாள் அதுவே பாதி பதற்றத்தை தந்தது.
இருவரும் வாசலில் நிற்க ரேகா ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றார். வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றிய கையோடு அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
“ஏய்… ரிலாக்ஸ்… ஏன் இவ்வளவு பதற்றம்?” என்றான் அவள் கையை பிடித்து. ரேகா கயலுடன் கிச்சன் உள்ளே சென்றிருக்க இவர்கள் இவர்கள் ஹாலில் அமர்ந்திருந்தனர்.
அவனுக்காக சிரித்து வைத்தாலும் உள்ளுக்குள் புதுமணப் பெண் எப்படி தன் கணவன் வீட்டிற்கு முதலில் வரும் போது உணர்வாளோ அப்படியே உணர்ந்தாள் அனு.

Advertisement