Advertisement

பகுதி – 33
“என்ன அமைதியாகிவிட்டீர்கள்?” என்றவள் குரல் காட்டமாகவே வந்தது.
“என்ன சொல்ல வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய்?” என்றான் தனக்குள் இருந்த உணர்ச்சித் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு.
“நீங்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு தெரியாமல் என்னென்னவோ நடக்கிறது.” என்று அதே கோபத்துடன் புருவத்தை உயர்த்த கயல் அவளருகில் சென்றாள்.
“அக்… அக்கா… சாரி… எல்லா தவறும் என் மேல் தான்… நான்… நான் அவரை…” என்று கயல் திக்கித்திணற அவளை இடைமறித்தான் ஆதி.
“உள்ளே போ கயல்…” என்று ஆதி அதிகாரத்தோடு கூற அதைத் தடுத்தாள் அனு.
“நில்லுடி… செய்வதையெல்லாம் செய்துவிட்டு எங்கு ஒளியப் பார்க்கிறாய்?” என்ற அனுவின் குரலில் சீற்றம்  அப்பட்டமாக வெளிப்பட்டது.
“நீ போ கயல்.” என்று ஆதி மீண்டும் கூற அனுவின் கோபம் ஆதி மேல் திரும்பியது.
“உங்களை பிறகு கவனித்துக் கொள்கிறேன்… இதில் குறுக்கே வராதீர்கள்.” என்றவள் கயலை தன் புறம் வேகமாக இழுத்தாள்.
“என்னடி இதெல்லாம்? காதல் செய்கிற வயதா இது? உனக்கு என்னத் தெரியும்? இதற்காகத் தான் உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேனா? இன்னும் வேறு என்னவெல்லாம் செய்து வைத்திருக்கிறாய்?” என்று அனு கத்த அவள் விழிகள் கண்ணீரை தத்தெடுத்தன.
தன் தமக்கையை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் தலை கவிழ்ந்தாள் கயல்.
“நீங்கள் எப்படி அவளுக்கு சப்போர்ட் செய்யலாம்? தினமும் எவ்வளவு செய்திகள் பார்க்கிறோம், கேட்கிறோம்? யாரேனும் இவளை ஏமாற்றிவிட்டால்?… கொஞ்சம் கூட அக்கறையில்லையா??” என்று ஆதியை விலாச அதுவரை பொறுமை காத்தவன் அக்கறையில்லையா என்று அவள் கேட்ட வார்த்தைகளால் காயப்பட்டான்.
“ஏய்… விட்டால் ஓவராக பேசுகிறாய்… உனக்கு மட்டும் தான் அவள் மேல் பாசம் இருக்கிறதா? நான் அன்றே உனக்கு வாக்கு கொடுக்கவில்லை கயலுடைய முழு பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேனென்று?” என்று தன் பங்கிற்கு அவளிடம் எகிற,
“வாக்கு கொடுத்தீர்கள்… ஆனால் அதுபடியா நடந்து கொள்கிறீர்கள்? அவள் தான் ஒன்றும் தெரியாமல் காதல் கண்றாவி என்று சுற்றினால் உங்களுக்கு எங்கே போயிற்று?” என்று கத்தியவளை பாய்ந்து வந்து தடுத்தாள் கயல்.
“ஐயோ அக்கா… ஏன் மாமாவிடம் சண்டையிடுகிறாய்? தவறெல்லாம் என் மேல் தான்… ப்ளீஸ்கா…” என்று கயல் கண்ணீரோடு கெஞ்ச அதை கண்டு தன் அழுகையை கட்டுப்படுத்தினாள் அனு.
“கயல் உள்ளேப் போ என்று ஒரு முறை சொன்னால் புரியாதா இல்லை உனக்கும் உன் அக்கா போல் மறை கழன்றுவிட்டதா?” என்று ஆதி கூற தலையாட்டிவிட்டு உள்ளே சென்றாள் கயல்.
“என்ன எனக்கு மறை கழன்றுவிட்டதா? மறை கழன்றவள் என்ன செய்வாள் தெரியுமா?” என்று பல்லை கடித்துக்கொண்டு அவனை நெருங்க சுதாரித்துக் கொண்டவன் அவளை அறைக்கு இழுத்துச் சென்றான்.
அவனிடமிருந்து கையை உருவ முயன்று தோற்றுப் போனாள், “என்னை விடுங்கள்… ப்ச்…”
“இப்பொழுது என்ன கேட்க வேண்டுமோ கேள்.” என்றான் அவளை தன் பிடியிலிருந்து விடுவித்து.
“அவளுக்கு எதற்கு துணை நிற்கிறீர்கள்? இழுத்து நாலு அறை விட்டால் சரி ஆகிவிடுவாள். அதை விடுத்து அவள் போக்கிற்கு துணை போவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று திடமாகக் கூறியவள் தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டாள்.
“அறைந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைக்கிறாயா?” என்று நிதானமாக பக்கத்தில் இருந்த சேரில் அமர்ந்து வினவினான்.
“பின்னே… அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்று பழமொழியே இருக்கிறது.” என்றாள் சற்றும் பணியாமல்.
“அப்போது உனக்கு தான் முதலில் அடி போட வேண்டும்.” என்றவனின் குரலில் மருந்துக்கும் கேலியில்லை.
“செய்வதெல்லாம் நீங்கள்…” என்று அனு எகிற தன் கரம் நீட்டி தடுத்தான்.
“இத்தனை வருடம் அவள் கூடவே இருந்திருக்கிறாய் ஆனால் அவள் என்ன செய்கிறாள், எங்கு செல்கிறாள், யாருடன் பழுகுகிறாள் என்று உனக்கு ஒன்றும் தெரியவில்லை. இதில் என்னை அக்கறையில்லாதவன் என்று மட்டும் சொல்லத் தெரியும். உன் அக்கறை எங்கே போயிற்று… உழைத்து படிக்க வைத்து சோறு போட்டால் மட்டும் போதுமா? எனக்கென்னவோ உன் அலட்சியத்தால் தான் அவள் காதலில் விழுந்திருக்கிறாள் என்று தெரிகிறது.” என்று அவன் அதட்ட அவனின் கடைசி வார்த்தைகளில் துடித்துபோய் அவனை ஏறிட்டாள்.
“என்ன கண்ணை உருட்டுகிறாய்? மூன்று வருடங்களாக காதலிக்கிறாளாம்… நமக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகப் போகிறது அதற்கு முன்பே உன் கட்டுப்பாட்டில் இருந்தபோதே அவள் அந்த பையனை விரும்ப ஆரம்பித்துவிட்டாள். இப்பொழுது சொல் யாருக்கு அக்கறையில்லை?” என்று சவாலிட்டவனை சந்திக்க முடியாமல் மூன்று வருடம் என்பது மட்டுமே மனதில் ஒலித்தது.
மூன்று வருடங்களாக விரும்புகிறாள். அப்படியென்றால் அந்த பையனுடன் நிறைய நேரம் செலவழித்திருப்பாள் ஆனால் தனக்கு அதைப் பற்றி துளி சந்தேகம் கூட வரவில்லை. இதுவரை அவளை நன்றாக பார்த்துக் கொண்டு, அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறோம் என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தாள். தன் அரவணைப்பில் ஏதோ குறை இருக்கிறது அதனால் தான் அன்பை வெளியில் தேடியிருக்கிறாள் என்ற எண்ணங்கள் அனு மனதில் ஆறாய் ஓடின.
அவள் அமைதியை கவனித்தவன் அருகில் சென்று தன் விரல்களால் அவள் தாடையை மென்மையாக நிமிர்த்த அவள் விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டான்.
“கொஞ்சம் அமைதியாக யோசிடி… எதற்கெடுத்தாலும் ஆத்திரப்படுவது, கை நீட்டுவது மட்டுமே தீர்வாகாது. அன்பால் எதையும் சாதிக்க முடியும், கட்டுப்படுத்த முடியும். எப்பொழுது இதை நீ புரிந்து கொள்கிறாயோ அன்று கயல் விரும்பும் பையன் பற்றிய அனைத்தையும் உன்னிடம் சொல்கிறேன்.” என்றவன் அவளை கண்டுகொள்ளாமல் கட்டிலில் சரிந்தான்.
அவளது விழிகள் அவனை வெறிக்க, அவன் கூறியதை மனதில் அசை போட தன் மேலும் தவறு இருக்கிறது என்று புரியத் துவங்கியது. வீடு, வேலை என்று ஓடியவள் செலவு செய்து கயலை படிக்க வைத்தால் தன் கடமை நிறைவு பெற்றுவிடும் என்றே நினைத்திருப்பாள் போலும்…
கண்ணீரை துடைத்துக் கொண்டு அவன் அருகில் படுக்க அவன் முதுகை காட்டிக் கொண்டு படுத்திருந்தான்.
“சாரி…” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில். அதை காதில் வாங்காதது போல் சிலையாய் இருந்தான் அவன். தான் குரலை உயர்த்தி கத்தியதிலுருந்தே அவன் முகம் இறுகி இருந்தது நினைவு வந்தது.
“இனி அவளை திட்டி ஒரு பிரயோஜனமும் இல்லை, அதே போல் நீங்கள் கோபப்படுவதிலும் நியாயம் இல்லை…” என்று குரல் கம்ம கூறியவள் அவன் அசையாது படுத்திருப்பதை கண்டு மீண்டும் தொடர்ந்தாள் இம்முறை உடைந்த குரலுடன்.
“நான் ஏதோ உணர்ச்சிப்பெருக்கில் அப்படி பேசிவிட்டேன், அதற்கு ஏன் என்னிடம் பேச மறுக்கிறீர்கள்?”
அமைதியே மீண்டும் சூழ, “எனக்கு உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது… ஆனால் நீங்கள் என்னிடம் மறைத்தது தான் எனக்கு கோபம்… உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இல்லை அப்படித் தானே… என் தங்கை வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள எனக்கு உரிமையில்லையா?” என்றாள் விழி ஓரத்தை துடைத்துக் கொண்டு.
“இப்போது நான் என்ன செய்தால் பேசுவீர்கள்?” என்று கேட்டாள் மீண்டும் அசராது.
“சென்று அவளிடம் பேசு… உன் கோபத்தைப் பார்த்து பயந்திருப்பாள். நான் சொன்னதை நினைவில் வைத்துக் கொள்… அதிகாரம் செய்தால் நேர்மாறான வினைதான் கிடைக்கும்.” என்று திரும்பாது பதிலளித்தான்.
தலையாட்டிவிட்டு திரும்பியவள் அவனுக்கு தான் செய்வது தெரியாது என்பது நினைவு வந்து தலையில் அடித்துக் கொண்டு, “சரி.” என்று வாய்மொழியில் பதிலளித்து கயல் அறைக்கு சென்றாள்.
அவன் கூறியது போலவே பயத்தில் தன் நகங்களை தன் வயிற்றிற்கு உணவாக்கிக் கொண்டிருந்தாள் கயல்.
“நகம் கடிப்பது நல்ல பழக்கம் அல்ல… நீ தான் வாழ்க்கையை புரிந்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்து விட்டாய் பின்னர் ஏன் இந்த கெட்டப் பழக்கம்?” என்றபடியே உள்ளே நுழைந்தாள் அனு.
“நான் என்றுமே உன் குட்டி தங்கை தான் அக்கா.” என்ற கேவலுடன் அனுவை கட்டிக்கொண்டாள் கயல்.
“சாரி… நான் செய்தது தப்பு தான்…” என்று அவள் அணைப்பிலே பிதற்ற தன் கரங்களால் அணைத்துக் கொண்டாள் அனு.
“மாமா எல்லாவற்றையுமே புரிய வைத்துவிட்டார். மாமா தான் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கதிரை பார்க்க அனுமதி கொடுத்தார். அதோடு அவர்கள் வீட்டிலும் பேசி, நான் படித்து முடிக்கும் வரை அவர்களை காத்திருக்கச் சொல்லி அனுமதி வாங்கினார்… இப்போதே உனக்குத் தெரிந்தால் கஷ்டப்படுவாய் என்று தான் மறைத்துவிட்டோம்… சாரிக்கா…” என்று அழுது கொண்டே பேச அனுவின் கண்ணீர் சுரப்பிகளும் கயலுக்கு போட்டியாய் தன் வேலையில் இறங்கின. கூடுதலாக தன் தங்கை மனம் கவர்ந்தவன் பெயர் கதிர் என்றும் தெரிந்து கொண்டாள்.
கயல் தோள் பற்றி அணைப்பை பிரித்தவள், “ஏன்டி இப்படி செய்தாய்? என் அன்பு உனக்கு போதவில்லையா? இல்லை நான் ஏதும் குறை வைத்து விட்டேனா?” என்றாள் உடைந்த குரலில்..
“ம்கூம்… அப்படியில்லை அக்கா… உன் அன்பில் எந்தக்  குறையும் இல்லை… நீயே சொல் நீ என் மேல் வைத்திருக்கும் பாசத்திற்கும், மாமா மேல் வைத்திருக்கும் அன்பிற்கும் வித்தியாசம் இருக்கிறதா  இல்லையா? அதே தான் நீ என்னிடம் கேட்ட கேள்விக்கும் பதில்.” என்று நிதானமாய் கேள்வியையே பதிலாய் அளித்தாள் கயல்.
“பெரிய மனுஷி போல் பேசுகிறாய்.” என்று அனு சிரிப்பை உதிர்க்க கயலும் தன் பழைய நிலைக்கு வந்தாள்.
“என்ன செய்வது அக்கா மக்காக இருந்தால் தங்கை புத்திசாலியாக இருக்க வேண்டுமே.” என்று கயல் பொய்யாக சலித்துக் கொள்ள ‘இது இவர்கள் குடும்ப டயலாக் போல’ என்று அதுவரை அமைதியாய் கதவோரத்தில் நின்றிருந்த ஆதி நினைத்துக் கொண்டான்.
அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி ஆதி அங்கிருந்து கிளம்பினான்.
சிறிது நேரம் மனம் திறந்து பேசிவிட்டு தன் அறைக்கு வந்தாள் அனு. தான் செல்லும் முன் எப்படி படுத்திருந்தானோ அதே நிலையில் தான் இருந்தான் அவன் .
புன்னகையுடன் அவன் அருகில் சென்றவள் கதவு தாழிட்டிருப்பதை உறுதி செய்து கொண்டு அவன் அருகில் படுத்து அவனை கட்டிக்கொண்டு முதுகில் முகம் புதைத்தாள். தனக்காக விழித்திருப்பான் என்பது தெரிந்து பேச ஆரம்பித்தாள்.
“கயல் எல்லாவற்றையும் சொன்னாள்… உங்களுக்குத்  தெரியுமா இன்று கூட பேப்பரில் படித்தேன், தமிழ்நாட்டில் வருடத்திற்கு ஆயிரத்தி அறநூறு வழக்குகள் பெண்கள் பாதுகாப்பின்மை, பாலியல் தொல்லை சம்மந்தமாக பதிவாகிறதாம்… அதான் பயந்து விட்டேன்.” என்றவளை தடுக்கும் விதமாக அவள் புறம் திரும்பி அவள் கரம் பற்றினான் ஆதி.
“அதில் ஒன்றாக நம் வீட்டுப் பெண் இருக்கமாட்டாள்.”
“எனக்குத் தெரியும்…” என்றவள் அதே புன்னகையுடன் அவனை தன்னுள் இறுக்கிக்கொண்டாள்.

Advertisement