Advertisement

பகுதி – 32
“எல்லாம் உங்களால் தான். இன்று எவ்வளவு கஷ்டமாகிவிட்டது தெரியுமா… பார்த்த எல்லோரும் என்ன விசேஷம் என்று கேட்கிறார்கள். இதில் கயல் வேறு… ப்ச்…” என்று சிணுங்கினாள் அனு அவன் மார்பை தலையணையாக்கி.
அவன் விரல்கள் அவள் தேகத்தை தீண்ட அவளின் குற்றச்சாட்டை சிரித்தபடியே ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தான்.
“நான் என்ன செய்தேன்? நீ வெட்கப்பட்டு எல்லோருக்கும் காட்டிக் கொடுத்ததற்கு நான் பொறுப்பாக முடியுமா? எதற்கு இவ்வளவு சங்கோஜப்படுகிறாய்? இதெல்லாம் பொதுவான விஷயம் தான், நீ தான் இதை பெரிது படுத்துகிறாய்.” என்று சமாதானம் வீசினான்.
“ம்ச்… திடீரென்று எனக்கு ஏதோ மாதிரி ஆகிவிட்டது.” என்றவள் அவன் கழுத்தை கட்டிக்கொள்ள, பெருமூச்சிழுத்தவன், “எனக்குப் புரிகிறது… பெரியவர்கள் யாரேனும் இருந்திருந்தால் உனக்குப் புரிய வைத்திருப்பார்கள். பரவாயில்லை நான் தான் இருக்கிறேனே.” என்று தற்பெருமை பேச முயன்றவனை தன் கரத்தை கொண்டு அடக்கினாள்.
“போதும் உங்கள் தற்பெருமை… முதலில் அத்தை கேட்டதற்கான பதிலைக் கூறுங்கள்… அவர்கள் கேட்பது என்னவென்று உங்களுக்கு தெரியுமல்லவா?” என்று அவனை கேள்வியாய் ஏறிட்டாள்.
“ம்ம்… இனி தான் யோசிக்க வேண்டும்…” என்றான் சிந்தனையோடு.
“இதில் யோசிக்க என்ன இருக்கிறது… நமக்கு ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும்.” என்றாள் சற்று வெட்கத்தோடு.
“உன்னிடம் அப்படியா சொன்னார்கள்?” என்றான் வியப்போடு.
“நேரடியாக அப்படிச் சொல்லவில்லை… ஆனால் அதற்கான அர்த்தம் அதுவாகத் தான் இருக்க முடியும்.” என்றாள் துரிதமாய்.
“உன்னிடம் இப்படிச் சொல்லி விட்டு என்னை வேறு மாதிரி குழப்பி விட்டார்கள்…” என்று கூறியவனின் விரல்கள் அவள் விரல்களுடன் சண்டையிட்டன.
“என்ன உங்களையுமா குழப்பினார்கள்?” என்று ஆச்சர்யப்பட வேண்டியது அவள் முறை ஆயிற்று. 
போலிக் கோபத்தோடு முறைத்தவன், “என்ன ஒரு சந்தோசம் உனக்கு…” 
அவனது நடிப்பைக் கண்டு கொண்டவள் அதைத் தவிர்த்து அடுத்த விஷயத்திற்கு தாவினாள், “உங்களிடம் என்ன சொன்னார்கள்?” 
“எல்லாம் நம் எதிர்காலத்தைப் பற்றித் தான்.” என்றவுடன் அவனை சந்தேகமாக ஏறிட்டாள் அனு.
அதை புரிந்துக் கொண்டவனாய் அவளுக்கு ரேகா கூறிய அனைத்தையும் எடுத்துரைக்க அனு அமைதியாய் கேட்டுக்கொண்டாள்.
“என்ன மேடம் ஆர்வமாக கேட்டுவிட்டு இப்பொழுது அமைதியாக இருக்கிறாய்?” என்றவன் குரல் அறையில் நிரம்பிய அமைதியை கிழித்துக்கொண்டு கேட்டது.
“இப்படி நாம் பிரிந்திருக்கும் நிலை வருமென்றால் நான் எக்ஸாம் எழுதவில்லை.” என்ற அவளின் பதிலை கேட்டு திகைத்து அவளை எறிட்டான்.
“என்னடி உளருகிறாய்?” என்று சற்று கோபம் கலந்த தொணியில் அதட்ட,
“நான் ஒன்றும் உளரவில்லை தெளிவாகத் தான் பேசுகிறேன். பிரிந்திருக்க எதற்கு திருமணம்? குடும்பம்? குழந்தை? இதில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை. நான் இங்கேயே ஏதாவது வேலை பார்த்துக் கொண்டு உங்களுடன் இருந்துக் கொள்கிறேன்.” என்று அதற்கு தீர்க்கமாய் பதிலளித்தாள் அனு.
“ஏன்டி வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல் சட்டென்று இப்படி மாறுகிறாய்?”
“நான் ஒன்றும் மாறவில்லை… முதல் நாளிலிருந்து நான் குடும்பம் தான் முன்னிலை என்று சொல்லி இருக்கிறேன். இப்போதும் அதே தான். நாளை பின்னே குழந்தை பிறந்து விட்டால் என் முதல் முன்னுரிமை நம் பிள்ளை மேல் தான் இருக்கும். உங்களுக்கும் அப்படித் தான் இருக்க வேண்டும். என்னை போல் பெற்றோர் பாசத்திற்கு நம் குழந்தை ஏங்கக் கூடாது. தயவு செய்து இதில் என்னை கட்டாயப்படுத்த நினைக்காதீர்கள்.” என்று அழுத்தமாக தன் கருத்தை வெளிப்படுத்தினாள்.
“ப்ச்… என்னவோ நாளைக்கே நம் ஜூனியர் கையில் தவழ்வது போலல்லவா இருக்கிறது உன் நிபந்தனை. வாழ்க்கையை முதலிலேயே பிளான் செய்யாதே. அதன் போக்கில் விட்டுவிடு. நாளைக்கு நடக்கப்போவதை பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம். அதை இப்போதே நினைத்து குழம்ப ஆரம்பித்தால் இன்றைய நாளை வாழ முடியாது.” என்று அவன் தற்காலிக முற்றுப்புள்ளி வைக்க, “அதில்லை…” என்று மீண்டும் ஆரம்பித்தவளை தனக்கு தெரிந்த பிரத்யேக வழியில் அடக்கினான்.
இரண்டொரு மாதங்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஓடிவிட வழக்கம் போல் தன் கல்லூரிக்கு புறப்பட்டாள் அனு. கடந்த ஒரு மாதமாக தனியாகவே ஆதி வாங்கிக் கொடுத்த இரு சக்கர வாகனத்தில் சென்று வருகிறாள். அதே போல் இன்றும் கல்லூரி முடிந்து வர சிக்னலில் நிற்கும் போது செல்போன் சிணுங்க,
“நான் ஆனந்தி அண்ணி.” என்று முறுமுனையில் பேசும்  ஆனந்தி முரளியின் தங்கை என்பதை அனுவுடன் சேர்த்து உங்களுக்கும் நினைவுப் படுத்துகிறேன். பரஸ்பர நல விசாரிப்புக்கு பின் அனு எதற்கு இந்த திடீர் அழைப்பு என்று குழம்ப அதை அடுத்த நொடியே தீர்த்து வைத்தாள் ஆனந்தி.
“நீங்க உடனே கிரீன்ஸ் காஃபி கஃபேக்கு வரமுடியுமா? ஒரு முக்கியமான விஷயம்…” என்று தயங்கி வினவினாள் ஆனந்தி.
“ஏன் அக்கா… ஏதும் முக்கிய விஷயமா? நீங்கள் வீட்டிற்கே வரலாமே… நாம் அங்கு பேசலாம். நான் இப்போது வீட்டிற்கு தான் போகிறேன்.” என்றாள் அனு கிரீன் சிக்னல் விழப் போவதை கவனித்துக் கொண்டே.
“இல்லை… நான் கஃபேவில் தான் இருக்கிறேன். ப்ளீஸ் இங்கே வாருங்கள்.” என்று ஆனந்தி வற்புறுத்த சிக்னல் விழப் போவதால் அவசரத்தில் அனு ஒப்புக் கொண்டாள்.
அனு தன் வண்டியை பார்க் செய்தவுடன் அவளை நோக்கி வேகமாக வந்தாள் ஆனந்தி.
“என்ன விஷயம் அக்கா? பதற்றமாக இருக்கிறீர்கள்?” என்று அனு தன் ஹெல்மெட் மற்றும் பேக்கை எடுத்துக் கொண்டே கேட்க,
“உள்ளே வாருங்கள்.” என்று அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள் ஆனந்தி. எவ்வித குறிப்பும் தெரியாமல் அவளை பின் தொடர்ந்தவாறே என்னவாக இருக்கும் என்று யோசிக்கலானாள் அனு.
உள்ளே நுழைந்து மறைவான டேபிளில் அமர்ந்தவுடன் தேவையானவற்றை ஆர்டர் செய்தனர்.
ஆனந்தி இடையில் அடிக்கடி தன் விழிகளை சுழலவிடுவதை கவனித்த அனு எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்பது தெரியாமல் தன் விழிகளையும் அலையவிட்டாள்.
அடுத்த நொடியே அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அதை கவனித்த ஆனந்தி தான் அழைத்ததற்கான காரணத்தை விளக்கினாள்.
“அது உங்கள் தங்கை தானே அண்ணி? இங்கு ப்ரன்ஸோடு வந்தேன். நான் வருவதற்கு முன்பே அவர்கள் இங்கு அமர்ந்திருந்தனர். போய் பேசலாம் என்று நினைத்தால் அந்த பையன் கையை பிடித்து பேசிக் கொண்டிருந்தாள்… எனக்கென்னவோ சரியாகப் படவில்லை அதனால் தான் உங்களை கூப்பிட்டேன்… முதலில் ஆதி அண்ணனுக்குத் தான் கால் செய்தேன் அவர் எடுக்கவில்லை.” என்று கூறி முடித்தாள் ஆனந்தி.
அனுவின் செவிகள் ஆனந்தி கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தாலும் அவள் பார்வை முழுவதும் கதிர் கையை பிடித்துக் கொண்டிருந்த கயல் மேல் தான் இருந்தது.
அவர்கள் பேசிக் கொள்வதை பார்த்தாலே அனைவருக்கும் புரிந்துவிடும் அவர்கள் உறவுமுறை.
“நான் போய் என்னவென்று பார்க்கிறேன். எவ்வளவு திமிர் இருந்தால் படிக்கும் வயதில் இப்படி… ஸ்கூல் யூனிஃபார்மோடு எவ்வளவு தைரியம் இவளுக்கு…” என்று கோபத்தோடு பல்லை கடித்துக் கொண்டு எழுந்தவள் ஆதி உள்ளே நுழைவதை பார்த்தவுடன் அவனிடம் செல்ல முயல, அதற்குள் அவன் வேகமாக கயல், கதிர் அமர்ந்திருக்கும் டேபிளை நெருங்கிவிட்டான்.
அவனை பார்த்ததும் கயல் எழுந்து வரவேற்றாள். கதிர் அவனை பார்த்து புன்னகைத்தான். முறுவலுடன் தன் இருக்கையில் அமர்ந்த ஆதியை பார்த்ததுமே அனுவிற்கு கோபம் சுர்ரென்று ஏறியது. கண்டிக்க வேண்டியவன் அவளை வையாது அவளுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது எரிச்சலை உண்டு பண்ணியது. கல்யாணமான புதிதில் கயலை அப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும், இப்படி வளர்க்க வேண்டும், அப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கண்டிஷன் போட்டவன் இன்று  கயல் செய்வதை ஆதரிப்பது அவளுக்கு துளியும் பிடிக்கவில்லை. போதாகுறைக்கு அவர்களோடு பல நாட்கள் பழகியவன் போல் சிரித்து சிரித்து பேசுவதை பார்க்க பார்க்க அவள் விழிகள் சினத்தில் சிவந்தது. தன் நம்பிக்கையை பொய்த்துவிட்டாள் கயல் என்பது ஒரு புறம் எரிந்தாலும், தன் கணவனுக்கு அவ்விஷயம் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறான் என்று அவன் மீதும் கோபம் வந்தது. அதுமட்டுமின்றி இத்தனை நாட்கள் இருவரும் சேர்ந்து இதை தன்னிடமிருந்து மறைத்து விட்டார்கள் என்ற வெறுப்பும் அவளை ஆட்கொண்டது. இவர்கள் இருவர் தான் தன் உலகம் என்று வாழ்ந்தவளின் நெஞ்சம் அவர்கள் மறைத்ததற்க்கான காரணத்தை அறிந்து கொள்ள துடிக்கவில்லை மாறாக தன்னை இருட்டில் வைத்து விட்டார்கள் என்றே தோன்றியது.
ஏமாற்றம், கோபம் என உணர்வுகளுக்கிடையில் சிக்கியவள் அவர்களை நோக்கி செல்ல எத்திணிக்க அவளை தடுத்து நிறுத்தினாள் அவளின் கோபத் தனலை உணர்ந்த ஆனந்தி.
“அண்ணி… இது பொது இடம்… இங்கு வேண்டாமே..” என்று மெல்லிய குரலில் சொல்ல ஒன்றும் பேசாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தாள் அனு.
‘இதென்ன வம்பாக போய் விட்டதே… ஏதோ சின்னப் பெண் வழி தவறி சென்று வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டால் என்ன செய்வது என்ற அக்கறையில் அனுவிடம் சொன்னால், ஆதி அண்ணாவிற்கு ஏற்கனவே எல்லாம் தெரிந்திருக்கும் போலும். இப்பொழுது இருக்கும் சூழலைப் பார்த்தால் கயலிற்கும், அண்ணாவிற்கும் பெரிய ஆப்பு காத்துக் கொண்டிருக்கிறது போலவே.’ என்று மனதில் எண்ணிய ஆனந்தி ஆதியிடம் இதை முன்னரே தெரிவித்து எச்சரித்து விடலாம் என்று அவர்கள் டேபிள் நோக்கி நடக்க, வெளியிலிருந்து வந்த அனு அவளை வேகமாக வெளியே இழுத்துச் சென்றாள்.
“இதைப் பற்றி யாரிடமும் நீங்கள் சொல்லக் கூடாது. நான் இதை பார்த்துக் கொள்கிறேன்… என்னை இங்கே வரச்செய்து எனக்கு தெரியப் படுத்தியதற்கு நன்றி…” என்று வேகமாக பொரிந்துவிட்டு கிளம்பினாள் அனு.
விறுவிறுவென மாலை நேரம் கடந்து செல்ல, தாமதமாக வீட்டிற்கு வந்தனர் ஆதியும், கயலும்.
“என்ன இன்று உன் அக்கா ஏன் லேட் என்று கேட்கவேயில்லை? எப்போதும் லேட்டானால் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கால் செய்பவள் இன்று ஒரு போன் கூட செய்யவில்லை, சம்திங் ராங்… நாம் எப்படி ஒன்றாக வந்தோம் என்று கூட கேட்கவில்லை.” என்று கயலிடம் மெதுவாக கிசுகிசுத்தான். 
“அதான் மாமா எனக்கும் ஒன்றும் புரியவில்லை. நான் கூட அவளுக்கு உடம்பு சரியில்லை என்று நினைத்தேன். ஆனால் அவளைப் பார்த்தால் அப்படியும் தெரியவில்லை. காலையில் நன்றாகத் தானே இருந்தாள். இப்போது என்னவாகியிருக்கும்? நீங்கள் போய் பேசுங்கள்…” என்று அவனை கிச்சனுக்குள் தள்ளாத குறையாய் கூறினாள் கயல்.
அவர்களுக்கு வேலைக் கொடுக்காமல் அனுவே வெளியில் வந்து அவர்கள் எதிரில் நின்றாள்.
“இன்று மாலை உங்கள் இருவரையும் பார்த்தேன்!” என்று அனு மொட்டையாக கூற இருவரது விழிகளும் அதிர்ச்சியில் சந்தித்துக் கொண்டன.

Advertisement