Advertisement

பகுதி-3
புது உறவுகள் தேடி வர; புதிதாய் வாழ்க்கை தொடங்கியது என்னவனுடன்!
நாம் ஏன் அவளை இங்கே அழைத்து வரக்கூடாது? நம்முடனே இருந்து விடட்டும்.” என்று ஆதி தன் யோசனையை களைந்து கூறினான்.
அது எப்படி, ஏற்கனவே என்னால் உங்களுக்கு கஷ்டம். நீங்கள் என்னை ஏதாவது வேலையில் சேர்த்து விடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்.” என்ற அனுவை பார்த்து தன் முறைப்பை பரிசளித்தான் ஆதி.
இன்னொரு முறை நீ எனக்கு பாரம் என்று சொன்னால் அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” என்று தன் ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரித்தான்.
நீங்கள் திட்டுறதுனால ஒன்னும் மாறப் போறதுல்ல. ஏற்கனவே இந்த கொஞ்ச நேரத்துல எனக்கு அதிகமா செலவு பண்ணிட்டீங்க. இதில் என் தங்கை வேறு வந்தால், அதெல்லாம் சரியாக வராது. தயவு செய்து எனக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுங்கள். நான் அவள் செலவை சமாளித்து கொள்கிறேன். நான் யார் வீட்டிலாவது முன்பு போல் வேலை செய்தால் உங்களை தவறாகப் பேச வாய்ப்பிருக்கிறது. அதை நான் விரும்பவில்லை. நான் பெரிதாக படித்தவளும் அல்ல. அதனால் அதற்கேற்றது போல் ஒரு வேளை வாங்கிக்கொடுங்கள். உங்களுக்கு சிரமமாக இருந்தால் நானே தேடிக்கொள்கிறேன்.” என்று தன் நிலையை தெளிவாக எடுத்துரைத்து பேசியவளை பார்த்து சற்று வியந்து தான் போனான் அவள் கணவனானவன். 
உன் வயது என்ன?” ஆதி வினவினான் கதவை தாழிட்டபடி.
ஆ… அது பதினெட்டு.” என்று கூற ஆதி அவளை வெறித்து பார்த்தான்.
இவ்வளவு சிறிய பெண்ணா இவள்? பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறக்க வேண்டிய வயதில் தன் குடும்ப பாரத்தை சுமக்கிறாள். மிருதுவாய் இருக்க வேண்டிய கைகள் சுரசுரப்பாய் இருந்தது நினைவுக்கு வந்தது அவனுக்கு. இவள் வயது பெண்கள் எவ்வளவு சந்தோசமாக தன் வாழ்க்கையை கழிக்கிறார்கள். ஆனால் இவளை பார்த்தால் துயரை குத்தகைக்கு எடுத்து வாழ்பவள் போல் தெரிகிறதே. மெலிந்த உடல் மேல் ஒரு பழைய துணி போர்த்தியது போல் தெரிந்தாள் அவள். நீண்ட அழகிய கூந்தல் அவளுக்கு எடுப்பாக இருந்தது. அதையும் மீறி அவள் கண்களை சுற்றிலும் இருந்த கருவளையம் அவள் அழகை தனக்குள் புதைத்து வைத்திருந்தது. எப்போதுமே பெண்கள் முன்னேற்றம், பெண்கள் கல்வி பற்றி அதிக அக்கறை கொண்டவன் இவள் படித்தது எப்படியும் பள்ளி வரையும் தான் இருக்கும் எனக் கருதி தம் அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்தான்.
உன் தங்கை என்ன செய்கிறாள்?” என்று அடுத்து கேட்டான் ஆதி.
ஒன்பதாம் வகுப்பு, அரசுப் பெண்கள் பள்ளியில் படிக்கிறாள்.” என்றவள் தன் பார்வையை தரையை நோக்கி செலுத்தினாள்.
பெண்கள் என்றுமே தலை குனியக்கூடாது. நீ தவறு செய்யவில்லையே தலை குனிவதற்கு. உன் எண்ணம், செயல் நேர்மையாக இருப்பின் தலை நிமிர்ந்து நில்.” என்று அழுத்தமாய் உரைத்து அவள் தாடையை பிடித்து நிமிர்த்தினான் ஆதி.
“ஆங்… அது திமிரான செயல் என்று என் தந்தை எப்போதுமே கூறுவார். பெண் என்பவள் தலை குனிந்து தான் இருக்கவேண்டுமென்று.” அனு மென்று விழுங்கி தனக்கு போதிக்கப்பட்டதை எடுத்துரைத்தாள்.
அப்படியென்றால் நீ எங்காவது சுவரில் தான் முட்டி போய் நிற்பாய்.” என்று கூறி வாய்விட்டு சிரித்தான் அவன்.
ஆங்…” என்று விழித்தவள் அவன் சொல்லிய அர்த்தம் புரிந்து முகம் சிவந்தாள்.
நாளைக்குள் நான் நம் தங்க வேறு ஏற்பாடு செய்கிறேன் அதுவரை அவள் அங்கு இருக்கலாம் அல்லவா?”
ம்ம்… வீட்டில் அவள் மட்டும் தான் தனியாக இருப்பாள். அப்பா… குடித்து… விட்டு …வரு.வா..ர்.” என்று திக்கித்திணறி தலை கவிழ்ந்து கூறினாள்.
அவளுக்கு அம்மா இல்லை என்பதை புரிந்துகொண்டவன் தான் செய்யவேண்டிய கடமைகளை மனதில் குறித்துக் கொண்டு அவளிடம் கேள்வியை தொடுத்தான், சரி இப்போது சென்று கூட்டிட்டு வரலாமா?” 
அவள் ஸ்கூல்ல இருப்பா. மாலை அழைத்துக்கொள்ளலாம். ஏன் இந்த வீட்டில் யாரும் இல்லை? நம் மூவர் தங்க ஒற்றுக்கொள்வர்களா?” என்று வீட்டை நோட்டமிட்டபடி தனக்கு எழும்பிய அடுத்த கேள்வியை கேட்டாள் அனு.
இங்கு என் நண்பன் மட்டும் தான் இருக்கிறான். ஒன்றும் பிரச்சனை இல்லை. இன்று ஒரு இரவு மட்டும் தங்கிவிட்டு நாளை வேறு இடத்திற்கு போகலாம். சென்னையில் வீடு கிடைப்பது அரிது. நான் போய் ஏற்பாடு செய்துவிட்டு வருகிறேன். அதுவரை வீட்டை தாழிட்டுக்கொள். கிட்சனில் எல்லா பொருட்களும் இருக்கும் காபி வேணும்னா போட்டுக்கோ. மதியம் சாப்பாடு வாங்கிட்டு வந்துறேன்.” அவளுக்கு விளக்கிவிட்டு ஆதி கிளம்ப தயாரானான், அதற்குள் ஏதோ நினைவு வந்து அவளிடம்  திரும்பினான், ஹான்…காலைல சாப்டியா?”
ம்ம்… என்று பதிலாய் தலை ஆட்டியவள் அவன் சென்ற பிறகு கதவை தாழித்துக்கொண்டாள்.
***
அக்கா…” என்று ஹை பிட்சில் கூவிக்கொண்டே  அனுவை ஓடி வந்து கட்டிக்கொண்டாள் கயல்விழி, மடந்தை அனுவின் தங்கை. பதினான்கு வயது மங்கை. கடந்த நான்கு வருடங்களாக தன் அக்காளின் அரவணைப்பில் வாழ்பவள். இவர்களின் அம்மா ஒரு விபத்தில் தன் உயிரைத் துறந்தார், நான்கு வருடங்களுக்கு முன்பு. தன் அக்காவிற்கு முடிந்த அளவு உதவுபவள். அனுவிற்கு உடம்பு முடியவில்லை என்றால் கயல் தான் வீடுகளில் வேலை செய்து அன்றைக்கான வயிறை நிரப்புவாள்.
சாரி அக்கா, என்னால் உன் வாழ்க்கையை காக்க முடியவில்லை. நான் எவ்வளவோ அப்பாவிடம் கெஞ்சிப்பார்த்தேன். ஆனால் அவரோ பணம் வாங்கிட்டேன் அனு கல்யாணம் நடந்தே தீரணும்னு சொல்லிட்டாரு. நீ கூட பார்த்தாய் தானே, அவர் எவ்வளவு குடிபோதையில் இருந்தாருன்னு. இப்போது  கூட ஒன்னும் பிரச்சனை இல்லை, இந்த தாலியை கழற்றி கோவில்ல போட்டுட்டு நம்ம வேற எங்காவது போய்விடலாம். வா அக்கா..போலாமா?” அழு குரலில் கயல் கூறிவிட்டு தன் அக்காவை இறுக கட்டிக்கொண்டாள்.
அனுவின் கண்களில் இவ்வளவு நேரம் தேக்கி வைத்திருந்த கண்ணீர் மல மலவென கொட்டியது. என்ன தான் ஆதியிடம் தைரியமாக பேசினாலும் அவள் மனம் அவளிடம் இல்லை. ஒரே நாளில் தன் மொத்த வாழ்க்கையும் இப்படி மாறும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. 
ஆதி தன்னை திருமணம் செய்தது திருப்தி தான் என்றாலும் அவன் வாழ்க்கையை நினைத்து இவள் வருந்தாத நிமிடம் இல்லை. அவனோ பெரிய படிப்பு படித்து நல்ல வேலையில் இருபவன். இவளோ பன்னிரெண்டாம் வகுப்பு தாண்டவில்லை. அவளது எதிர்காலம் ஒரு புரியாத புதிராகவே இருந்தது. ஆதி தன்னிடம் நடந்துகொண்ட விதத்தை பார்த்தால் அவன் நம்பிக்கையானவன், நேர்மையானவன், தன்னை நன்றாக பார்த்துக்கொள்வான் என தோன்றினாலும் ஒரு ஓரத்தில் சிறு பயம் இருக்கவே செய்தது. அவன் இவளிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறான்? இந்த திருமணத்தை எண்ணி வருந்துகிறானா? இல்லை தவறு செய்து விட்டோம் என்ற எண்ணம் இருக்குமோ என்று  நினைக்கும் போதே அவள் மனம் பதறியது.
அனு…” அவ்வளவு நேரம் அமைதியாய் சகோதரிகளின் பிணைப்பை பார்த்து நின்றவன் தன்னை மறந்து விடுவார்களோ என எண்ணி அனுவை கூப்பிட்டான்.
கயல் அவனை மேலும் கீழுமாய் பார்வையை செலுத்தினாள். “யாரக்கா இவர்?” என்று அனு காதை கடித்தாள் கயல்.
ம்ம்ம்… அது…” திடீர் வெட்கம் அவள் தொண்டையை அடைத்தது. திடீரென நடந்த திருமணம் தான், காதல் கற்று, பேசி நடவாதது தான் என்றாலும் அவன் என் கணவன் என்று தன் தங்கையிடம் சொல்ல அவள் வெட்கம் இடம் கொடுக்கவில்லை. அவள் கன்னங்கள் சிவப்பேருவதை கண்ட கயல் குழம்பி நின்றாள்.
நான் தான் இனி உன் பாதுகாவலர் (கார்டியன்).” என்று ஆதி கொக்கி போட்டு விடுகதையாய் நிறுத்த இன்னுமே  குழம்பினாள் கயல். கயலின் முகத்தை பார்த்த ஆதி வேறு பக்கம் திரும்பி தன் புன்னகையை கஷ்டப்பட்டு அடக்கினான்.
அக்கா என்ன உலறுகிறார் இவர்? இவர் எப்படி என் கார்டியன் ஆவார்?”
அவர்… அவர்… அவர் தான் உன் மாமா.” எப்படியோ திக்கி திணறி வெட்கத்துடன் சொல்லிவிட்டாள் அனு.
என்ன???” ஆயிரம் வாட்ஸ் ஷாக் அடித்தது போல் இருந்தது கயலுக்கு.
நிஜமாவா?” அதிர்ச்சியில் இருந்து மீண்டவள் அனு தலை அசைப்பதை பார்த்து துள்ளிக்குதிக்காதது தான் மிச்சம்.
ரொம்ப தாங்க்ஸ் மாமா. நா ரொம்ப அழுதுட்டே இருந்தேன் இவளை அந்த கிழவனுக்கு கல்யாணம் செய்து வைத்துவிடுவார்களோயென்று. நீங்கள் அக்காவை நல்லா பார்த்துக்குவிங்கள்ள?” நிம்மதி பெருமூச்சுவிட்டு பேசிய கயல் கடைசியில் நம்பிக்கையுடன் கேட்டாள்.
அவளை மட்டும் இல்லை உன்னையும் சேர்த்து நல்லா பார்த்துக்குவேன். நீயும் எனக்கு தங்கை மாதிரி தான். தயங்காமல் என்னிடம் நீ உரிமையோடு நடந்துகொள்ளலாம். ம்ம்… அப்புறம் உன் திங்ஸ்லாம் எடுத்துட்டு வா நம்ப வீட்டிற்கு போகலாம்.” என்று ஆதி கூறி அவள் புத்தகப்பையை வாங்கிக்கொண்டான்.
கயல் அனுவை பார்க்க, அனு “வா இனி அவர் இருக்கும் இடம் தான் நம் வீடு. உன்னை அப்பாவிடம் விட்டுச்செல்ல எனக்கு மனம் இல்லை. அவர் உன்னையும் யாருக்காவது திருமணம் செய்யப் பார்ப்பார்.” என்று உறுதி அளித்த பின் மூவரும் ஆட்டோவில் ஏறி அனு வீட்டில் அவர்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு தங்களின் தற்காலிக வீட்டிற்கு சென்றனர்.
அனு, கயல் அறையில் படுக்க ஆதி சோபாவை ஆக்ரமித்தான். முதல் இரவு தனித்தனியே இனிதே முடிந்தது.
காலை சூரியன் உதிக்க அவர்கள் மூவர் வாழ்க்கையும் கதிரவன் ஒளி போல் புதுப் பொலிவுவோடு துவங்கியது.
&*&*&

Advertisement