Advertisement

பகுதி – 27
“ஏன்டா… உனக்கே இது ஓவராக இல்லை. சிஸ்டெரை அப்படி பார்க்க முடியவில்லை என்றால் ஏன் அங்கு விட்டு வந்து இங்கு புலம்புகிறாய்?” என்றது யாருமல்ல முரளியே. ஆதி குறுக்கும் நெடுக்கும் நடந்து அறையை அளந்து கொண்டிருப்பதை பார்த்து தான் அவன் இப்படிக் கேட்டது.
“எனக்கும் ஒன்றும் புரியவில்லைடா… என்னுடைய காதல் தரும் அருகாமை அவளை பலவீனப்படுத்தி விட்டதென்று நினைக்கிறேன். இதுவரை குடும்ப பாரத்தை தன் தோளில் அலட்டலின்றி சுமந்தவள் இன்று காலேஜ் செல்லப் பயப்படுகிறாள். இப்படி ஒவ்வொன்றிற்கும் பயந்தால் என்ன செய்வது?” என்றான் மனம் வருந்தி.
“அப்படி எல்லாம் இருக்காதுடா… நாமே திங்கட்கிழமை என்றால் எப்படி அலறுகிறோம். சிஸ்டர் அதிக நாள் வெளியில் இப்படி செல்லவில்லை அல்லவா ஹோம்சிக் ஆகியிருக்கும். நீ வேறு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரொமான்ஸ் செய்து உன் நினைவிலேயே அவளை வைத்திருந்திருப்பாய்…” என்று கண்ணடித்தவனை என்ன செய்தால் தகும் என்பது போல் பார்த்தான். 
“சும்மா நீ வேற…” என்று சலித்தவன் அவன் புறம் மீண்டும் திரும்பி, “தேங்க்ஸ்.” என்றான் ஆதி.
‘எதற்கு?’ என்று கேள்வியாய் முரளி நோக்க, “கயல் விஷயத்தை கண்டுபிடித்து அக்கறையுடன் சொன்னதற்கு…” என்றான் ஆதி.
“இதெல்லாம் பத்தாது. உன் கார்டை கொடு.” என்று அவன் சட்டைக்குள் கை விட அவனிடமிருந்து தெறித்து ஓடி தப்பினான் ஆதி. 
***
வியர்த்து விறுவிறுத்து கையை பிசைந்து ஆதி சென்ற திசையையே பார்த்தவள் தன்னை சமன் படுத்திக்கொண்டு உள்ளே சென்றாள்.
இத்துணை தினங்கள், வருடங்களாக வீடு விட்டால் வேலை செய்யும் இடம் இல்லை பஜார் என்று சென்றவள் திடீரென காலேஜிற்குள் நுழைந்ததும் இனம் புரியா படபடப்பு தொற்றிக் கொண்டது. அட்மிஷன் போடுகையில் ஆதியுடன் வந்த சில மணி நேரங்களிலே வேலை முடிந்ததால் அன்று ஒன்றும் தெரியவில்லை. மேலும் அவன் மேலோட்டமாக அன்றே கல்லூரியை சுற்றிக்காட்டி அவள் துறை எங்கிருக்கிறது என்றும் விளக்கியிருந்தான். அதை வைத்தே எப்படியோ தன் வகுப்பறை தேடி சென்றவள் ஒரு இடத்தை பிடித்து அமர அங்கிருந்த அனைவரது பார்வையும் தன்னை மொய்ப்பதை உணர்ந்து இன்னும் பரிதவித்தாள்.
பூமிக்குள் தவறிவிழுந்த ஏலியனாய் தன்னை தானே சித்தரித்துக் கொண்டவள் யாரோ தன் கையை பற்றி கூப்பிடும் உணர்வு தெரிந்து பதறித் திரும்ப, “ஐ எம் வர்ஷினி… யூ?” என்று அந்த மடந்தை கேள்வியாய் நிறுத்த தனக்கு துணையாய் இன்னொரு ஏலியன் வந்துவிட்டதாய் கற்பனையில் எண்ணி நகைத்தவள், “அனு…” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“அக்காவென்று கூப்பிடவேண்டுமா என்ன? அதெல்லாம் வேண்டாமே. நீயும் இந்த கிளாஸ் தானே. ப்ரன்ட்ஸ்?” என்று தன் கையை நீட்ட அன்றே அனுவின் தோழியானாள் வர்ஷினி.
“எப்படி?” என்று அனு வியப்பாய் வினவ வர்ஷினி தங்கத்தில் சற்று தடித்து மின்னிய அனுவின் தாலி சரடை கண் காட்டினாள்.
அதை பார்த்ததும் ஆதியின் நினைவு வர தானாக அவள் இதழ் புன்னகைத்தது.
“என்ன பகல் கனவா மேடம்?” என்ற வர்ஷினியின் குரல் அனு காதுகளில் விழுவதற்குள் ஆசிரியர் நுழைந்துவிட வகுப்பு தொடங்கியது.
அன்று மதியம் வரை எங்கு சென்றாலும் தன்னை வர்ஷினியுடன் பொருத்திக்கொள்ள, துறுதுறு பெண்ணாகிய அவளால் அனுவிற்கு மேலும் சிலர் தோழிகளாகினர்.
மாலை மணியடித்தார் போல் சரியான நேரத்திற்கு காலேஜ் வாசலில் நின்றான் ஆதி. அவனை கண்டுகொண்டதும் வேகமாய் வர்ஷினியிடம் விடைபெற்றுக் கொண்டு அவனருகில் வந்தவளை பார்த்தவனுக்கு வருங்காலத்திற்கு இது ஒரு ஒத்திகையோ என்று தான் தோன்றியது. அவன் கற்பனை வளமோ ஒருபடி மேலே சென்று தன் குழந்தையை பள்ளி விட்டு அழைத்து செல்வது போன்ற பிம்பத்தை மனதில் ஓவியமாய் தீட்டியது.
“கரெக்டாக வந்துவிட்டீர்களே…” என்றபடியே அவன் பின் ஏறி அமர்ந்தாள்.
“காலையிலேயே அழுவது போல் நின்றிருந்தாய்  இப்பொழுது நான் தாமதமாக வந்திருந்தால் இந்த காலேஜ் மூழ்கி இருக்கும்.” என்று அவன் கூற அதனின் பொருள் முதலில் அவளுக்கு விளங்கவில்லை.
“நீங்கள் லேட்டாக வருவதற்கும் காலேஜ் மூழ்குவதற்கும் என்ன சம்பந்தம்? மழை பெய்து வெள்ளம் வந்தால் தானே மூழ்கும்…” என்று வினவும் போதே அவன் சொன்னதற்கான அர்த்தம் விளங்க அவன் முதுகில் ஒரு குத்து விட்டாள்.
அவள் முகத்தை சைடு மிர்ரரில் பார்த்து சிரித்தவன் சிக்னலில் நிறுத்த அவன் மொபைல் ரீங்காரமிட்டது. தன் போனை எடுத்தவன் முரளி என்றிருந்ததும் பேச முற்பட சிக்னல் விழப்போவதால் அனுவிடம் கொடுத்து பேசச் சொன்னான்.
பேசி  முடித்ததும் முன்னால் எக்கி அவன் சட்டை பாக்கெட்டில் போனை திணித்தவள், “அண்ணா வீட்டு வாசலில் நிற்கிறாராம் சீக்கிரம் போங்கள்.” என்று அவனை விரட்டினாள்.
‘இப்போது எதற்கு வீட்டிற்கு வந்திருக்கிறான்? ஆபீஸில் கூட ஒன்றும் சொல்லவில்லையே…’ என்றெண்ணியவன் நேராக வீட்டிற்கு செல்ல வாசலில் நின்றிருந்தவர்களை கண்டு இன்னும் குழம்பினான்.
அனு முதலில் இறங்கி வேகமாக வீட்டை திறந்து, “உள்ளே வாங்க அண்ணா…”
“சந்தியா என்ன இந்த பக்கம்?” என்று ஆதி வினவ, அவள் தயங்கி முரளியை பார்க்க, “சரி உள்ளே வா…” என்றவன் அனுவிற்கு ஜாடை காட்ட அவள் உள்ளே அழைத்துச்  சென்றாள். உள்ளே நுழைய எத்திணித்த முரளியின் சட்டை காலரை பிடுத்து பின்னால் இழுத்தவன், “ஏதும் பிரச்சனையாடா? சந்தியா எதற்கு இங்கு வந்திருக்கிறாள்?” 
“இங்கேயே நின்று பேச வேண்டுமா. உள்ளே வாடா…” என்று முரளி ஆதியை தரதரவென உள்ளே இழுத்துச் சென்றான்.
“இப்போது சொல்…” என்று ஆதி கேட்டவுடன் முரளியும் சந்தியாவும் ஒருவரை ஒருவர் பார்க்க, “என்னடா நடக்குது இங்கே?” என்று மனதில் நினைத்ததை கேட்டான் ஆதி.
முரளி பதில் சொல்வதற்குள் அனு குறுக்கிட்டு, “நீங்க இரண்டு பேரும் லவ் பண்ணுகிறீர்களா?” என்றதுமே மூன்று ஜோடி கண்களும் அதிர்ச்சியாய் அவளை நோக்கின.
அனு சொன்னதில் முதலில் திகைத்த ஆதி முரளியை நோக்கி, “என்ன?… டேய் அவள் சொல்வது உண்மையா?” 
சந்தியா கீழே குனிந்து தரையை ஆராய அசடு வழிந்து சிரித்தான் முரளி.
“டேய்… சொல்லவேயில்லை…” என்ற ஆதி முரளி முதுகில் தட்ட, “அதான் இப்போது சொல்லிட்டேனே…” என்று மீண்டும் குழைந்தான் முரளி.
அவனை பார்த்து முறைத்த ஆதியை கண்டு கொள்ளாமல் அனு பக்கம் திரும்பியவன், “ஆமாம் அனு… இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் இவள் வீட்டில் மாப்பிள்ளை தேட ஆரம்பித்து விட்டார்கள். இவள் எங்கள் காதலை பற்றி அவர்கள் வீட்டில் சொல்ல பயப்படுகிறாள். நான் நேரில் வந்து பேசுகிறேன் என்றாலும் வேண்டாமென்கிறாள்.”
“அதற்கு ஏன் இங்கு வந்தாய்?” அவன் காதல் பற்றி தன்னிடம் மறைத்த கடுப்பில் அலட்சியமாய் கேட்டான் ஆதி.
முரளி இப்படி திடீரென காதலிக்கிறேன் என்று வந்து நின்றதும் கோபமும் ஏமாற்றமும் ஒரு சேர வந்தது. இன்று வரை தான் எதையும் அவனிடம் மறைத்ததில்லை அது போலவே தான் அவனும் என்று எண்ணியிருந்தான். அதற்கு நேர் மாறாக இன்று அவன் இப்படி வந்து நின்றதும் மனம் சற்று விலகிற்று. ஆயினும் நண்பனல்லவா….
“இப்பொழுது என்ன செய்யப் போகிறாய்? என் உதவி ஏதும் வேண்டுமா?”
“எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, நீ தான் ஏதும் செய்ய வேண்டும்.” என்றான் தலை கவிழ்ந்து.
“செய்வதெல்லாம் செய்துவிட்டு இப்போது வந்து முட்டிக்கொள்.” என்று ஆதி தன் கோபத்தை வெளிப்படுத்த அனு அவன் தோள் பற்றி அழுத்தினாள்.
“ரன் அவே மேரேஜ் பண்ணிகிட்டா த்ரில்லா இருக்கும்ல…” என்று முரளி சொல்லி முடித்த மறுநிமிடம் ரேகாவின் கம்பீரமான குரல் அந்த வீட்டில் ஒலித்தது.
“என்ன முரளி நீயும் உன் தோழன் போலவே பெற்றவர்களை புறந்தள்ளி திருமணம் செய்துகொள்ளப் போகிறாயா? இந்தக் காலத்து பிள்ளைகள் எல்லாம் பெற்றவர்களை மதிப்பதே இல்லை. காதல் அது இதுவென்று ஏதேதோ சொல்லி பெற்றோர் கனவை உடைத்து விடுகிறீர்கள். பின்பும் அவர்களை கண்டுகொள்வதில்லை. உங்கள் வாழ்க்கை நன்றாக இருந்தால் போதும், வேறு எதை பற்றியும் கவலை இல்லை. சரி இவ்வளவு மெனக்கெட்டு திருமணம் செய்கிறீர்களே இதிலாவது உருப்படியாக வாழ்கிறீர்களா… நீயாவது பரவாயில்லை உன் பெற்றோருக்கு இன்னொரு பெண் இருக்கிறாள் என்னை போலவா ஒன்றே ஒன்று…” என்று தன்போல் பேசிக் கொண்டே சென்ற ரேகாவை தடுத்தார் கோபால்.
“நிறுத்து. எதற்கு இப்போது சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாய்?”
இவர்கள் வருகையை எதிர்பாராதவர்கள் திகைத்து நிற்க ரேகா தன் ஈகோவை விட்டுக்கொடுப்பதாக இல்லை.
“ஏன் நான் சொன்னதில் என்ன தவறு? நடக்கின்றதைத் தானே சொல்கிறேன். ஒரே பையன் என்று செல்லம் கொட்டி வளர்த்து இன்று நாம் எப்படி நிற்கின்றோம். அதே நிலைமை முரளி வீட்டிலும் வரக்கூடாது என்று நினைக்கிறேன்.” என்று ரேகா பொரிய சந்தியாவும் முரளியும் சங்கடத்தில் நெளிந்தனர்.
“நீ கொஞ்சம் அமைதியாக இரு.” என்று கோபால் ரேகாவை தன் பார்வையால் அடக்கி முரளி புறம் திரும்பினார், “முரளி முதலில் இந்த விஷயத்தை உங்கள் வீட்டில் கலந்து பேசு. உன் பெற்றோர் கண்டிப்பாக உன் காதலுக்கு துணையாக இருப்பர். அவர்களை விட்டு அவள் வீட்டில் முறையாக சென்று பேசச் சொல்லு… எல்லாம் சரியாக நடக்கும். ஏதும் பிரச்சனை என்றால் எங்களிடம் கூறு. நான் வந்து பேசுகிறேன். அதை விடுத்து தவறான முடிவை எடுத்து பின்னர் வருந்தும்படி ஆகிவிடக்கூடாது. இன்றே உன் வீட்டில் போய் பேசு.” எனவும் முரளி தலையாட்டிவிட்டு சந்தியாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
அவர்கள் கிளம்பவும் என்றும் வராத தன் மாமியாரை பயம் கலந்த மரியாதையோடு விழித்தவள், “அத்தை, மாமா உட்காருங்கள்…” என்று அவர்களை வரவேற்று வேகமாக கிச்சனுக்குள் நுழைந்தாள்.
“அம்மா… உங்களுக்கு என்ன தான் பிரச்சனை? நான் என்ன வேண்டுமென்றா உங்களை விட்டு இங்கு வந்து இருக்கிறேன். நீங்கள் தான் எதற்கும் ஒத்துவரமாட்டேன் என்கிறீர்கள்.” என்று சீறியது ஆதியே.
“ஆமா டா… நான் தான் பிரச்சனை செய்கிறேன். எல்லாவற்றிற்கும் நான் தான் காரணம். இதுவரை உன் அப்பா தான் என்னை கரித்து கொட்டினார் உன்னை வீட்டில் சேர்க்க மறுக்கிறேனென்று. இப்பொழுது நீயும் அதற்கு ஜால்ரா அடி. உங்களுக்கெல்லாம் என்னை பார்த்தால் எளக்காரமாக இருக்கிறது.” என்று கண்ணை கசக்கியவர் கோபித்துக் கொண்டு வெளியில் சென்றார்.
அதே நேரம், “அத்தை எங்கே போகிறார்கள்?” என்றாள் காபியுடன் வெளியே வந்த அனு.
“அவளை விடுமா… உன்னை பார்க்கத் தான் கிளம்பினேன். அவளே நானும் வருகிறேன் என்று கிளம்பினாள். நான் கூட மனம் இறங்கிவிட்டாள் என்று நினைத்தேன்…” என்று கோபால் வருந்த ஆதி ஒரு புறம் சங்கடத்தோடு நின்றான்.
“அவர்கள் கோபம் நியாயம் தானே மாமா… நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள் சீக்கிரமே அத்தை எங்களை ஏற்றுக் கொள்வார்கள்.” என்ற அனு ஒரு புன்னகை வீசிவிட்டு வெளியில் இருக்கும் ரேகாவிற்கு ஒரு கப் எடுத்துச் சென்றாள்.
வானத்தை வெறித்தப்படி நின்றிருந்த ரேகாவை கண்டவள் தயங்கி தயங்கி அவரை நெருங்கி, “அத்தை…” என்று கூப்பிட்டு கப்பை நீட்டினாள்.
திருமணமாகி இத்தனை மாதங்களில் இவர்கள் இருவரும் சந்தித்து கொள்வது இது நான்காம் முறை தான். முதல் இருமுறை திருமணம் ஆன புதிது, அதனால் அனு பக்கமே ரேகா திரும்பவில்லை. அடுத்த முறை நிலா பிரச்சனையில் அதை விடுத்து இவர்களால் பேச முடியவில்லை. இன்று எப்படியும் பேசிவிட வேண்டும் என்ற முடிவுடன் தான் வந்திருந்தார் ரேகா. மகனை பிரிந்தது வருத்தம் தந்தாலும் சுற்றி உள்ளவர்கள் பேச்சை தன் கணவர் போல் தவிர்க்க முடியவில்லை ரேகாவால்.

எங்கு வெளியில் போனாலும் ‘உன் மகன் ஏதோ வீட்டு வேலைச் செய்யும் பெண்ணை திருமணம் செய்து கொண்டானாமே. எப்படி ராஜா மாதிரி வாழ்ந்த பிள்ளைக்கு அமைந்த வாழ்க்கையை பார். இதற்கு தான் வைப்பவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டுமென்பது. இருந்தாலும் உங்கள் வீட்டிற்கு இப்படி ஒரு தலையெழுத்தா.’ என்று அபார்ட்மெண்ட் முழுக்க இதே புராணம் தான். இதற்கு எப்படியாவது முடிவு கட்டிவிட வேண்டும் என்ற முனைப்புடன் கோபாலுடன் கிளம்பி வந்திருந்தார் ரேகா.

Advertisement