Advertisement

பகுதி – 26
“சார்ஜ் போட சொன்னால் என்ன அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்றான் குளித்து முடித்து அவள் அருகில் வந்து.
“உங்களுக்கு அழைப்பு வந்தது.” என்றவள் கடகடவென நிலா கூறிய அத்தனையும் ஒப்புவித்தாள்.
“நல்லதாகப் போயிற்று. இனி நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.” என்றுக் கூறி அவளை பின்னிருந்து அணைத்தான்.
“ம்… எப்படியோ அக்கா சரியாகிவிட்டார்கள்.” என்று ஆனந்தமடைய கயல் வந்து மீண்டும் கதவை தட்டினாள். அவளை பார்த்ததும் தான் அவளுக்கு காலை கயலிடம் தேவையில்லாமல் கோபப்பட்டது நினைவு வந்தது.
“உள்ளே வாடி…” என்று அவளை அழைக்க ஆதி வேகமாக தன் பனியனை மாட்டிக் கொண்டான்.
‘என்னடி?’ என்று அனு பார்வையாலே கேட்க, “அது… புதிய புத்தகம் வாங்க வேண்டும்.” என்றாள் சற்று தயங்கி குறும்புடன். அப்படியே ஓரக் கண்ணால் ஆதியை பார்க்க அவன் முறைத்ததும் ஈ என்று இளித்து வைத்தாள்.
“குறும்பு ஜாஸ்தி அக்காவுக்கும், தங்கைக்கும்…” என்றான் சற்று கையை உயர்த்தி அடிப்பது போல் செய்கை செய்து.
“மாமா… நோ வயலென்ஸ்.” என்றவள் சிரித்து விட்டு ஓட அனு அவளை விசித்திரமாய் பார்த்தாள்.
“உன் தங்கச்சி தான் அது. ஏன் புதிதாக பார்க்கிற மாதிரி பார்க்குற?” என்றான் தன் சட்டைக்கு பட்டனிட்டபடி.
கொக்கி போட்டுக் கொண்டிருந்த அவன் கையை தட்டிவிட்டு அந்த வேலையை தனதாக்கிக் கொண்டவள் அவன் மீது காதல் பார்வை வீசினாள்.
“என்ன இரண்டு பேரும் கூட்டு சேர்ந்துவிட்டீர்கள் போல…” என்று கேட்ட அவள் முகத்தில் மலர்ச்சி தென்பட்டது.
“ஏன் கூடாதா என்ன? நீயும் உன் மாமனாரும் சேர்ந்து பிளான் போடும் போது இதெல்லாம் கம்மி தான்.” என்றான் சற்று மெல்லிய குரலில்.
கடைசி பட்டனை போட்டுவிட்டவள் அவன் முகத்தை கைகளில் ஏந்தி, “எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? இவ்வளவு நாள் அவள் உங்களிடம் சற்று தயங்கி நிற்கிறாள், உங்களிடம் பேச நூறு முறை யோசிக்கிறாள் என்று கவலையாக இருந்தது. ஆனால் இன்று அதெல்லாம் மறைந்து விட்டது. நேற்று ஏதோ நடந்திருக்கிறது அப்படித்தானே? உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது. அத்தை மட்டும் சரியானால் என் வாழ்வே நிறைந்த மாதிரி. அப்புறம் நமக்கு கு…” என்று பேசியவளை அவள் அடுத்து என்ன பேசப் போகிறாள் என்பதை யூகித்து தடுத்தான் ஆதி,
“எல்லாம் சரி ஆகிவிடும்… உன் கனவென்று ஒன்று இருக்கிறது நினைவிருக்கிறதா, மேடம்? நீங்கள் ஐ. ஏ. எஸ் படிக்க ஆசை பட்டீர்கள். அதையும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். உன்னுடைய இலக்கு அது தான். திருமணம் ஆகி விட்டதால் குடும்பத்தை மட்டுமே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றல்ல. உன்னை ஏளனமாக பார்த்தவர்களுக்கு உன்னாலும் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்று நிரூபி. மற்றதை என் கையில் விட்டுவிடு.” என்றான் தீர்க்கமாக.
“இல்லை அது வந்து…”
“என்ன வந்து போயி… நீயே சொல் உன் மாமா மகனையோ இல்லை அந்த கிழவனையோ திருமணம் செய்திருந்தால் என்னவாகி இருக்கும்? இந்நேரம் கையில் குழந்தையுடன் நின்றிறுப்பாய். அப்போது அவனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? அப்பொழுதெல்லாம் படிக்க வேண்டும் என்று ஆசை பட்ட நீ இப்பொழுது எதற்கு தயங்குகிறாய்? குழந்தை வேண்டும் என்று ஏன் பிடிவாதத்தோடு இருக்கிறாய்? நானும் உன் செய்கையெல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். உனக்கு என்ன பத்தொன்பது வயது தானே ஆகிறது, தாயாகிற வயதா இது? படிக்கிற வயது… அதை மட்டும் செய். உன்னை விட்டு ஒதுங்கி போகிறேன் என்றால் அதற்கான காரணம் இதுதான். உன்னை முன்னுக்கு கொண்டுவருவதே என் வாழ்க்கையின் தற்போதைய லட்சியம். என்னை தோற்க வைப்பதும், ஜெயிக்க வைப்பதும் உன் கையில் தான் இருக்கிறது.” என்று பேசியவனை கண்டு விவரிக்கமுடியாத உணர்வுகளை அனுபவித்தாள் அனு.
இன்று வரை தந்தையாய் தனக்கு பிடித்ததை வாங்கிக் கொடுத்து, தோழனாய் தெரியாத விஷயங்களை படிப்பில் சொல்லித் தந்து, காதலனாய் தனக்கு பிடித்த எல்லா இடத்திற்கும் அழைத்துச் சென்று, இன்று கணவனாய் தன் ஆசையை, இலட்சியத்தை அவனுடையதாய் நினைத்து செயல் படுபவனை என்னவென்று சொல்வது… தன்னுள் சரி பாதியா? இல்லை அவன் தான் தானா? எப்படி இருந்தாலும் அவன் என்னவன் என்று மனமும் மூளையும் ஒரு சேர கூப்பாடு போட்டது.
“என்ன பதிலையே காணும்?” என்றான் கேள்வியாய் அவள் தாடையாய் தன் ஒற்றை விரலால் நிமிர்த்தி.
“எனக்கு உங்கள் காதலை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று ஆசை. அதனால் தான் குழந்தை வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தேன். இன்னும் சொல்லப் போனால்… அதற்கு பிளான் கூட ரெடி. நீங்கள் தான் ஒவ்வொரு முறையும் தள்ளியே செல்கிறீர்கள். ஆனால் இன்று நீங்கள் கூறியது பசுமரத்தானியாய் என் மனதில் ஏறிவிட்டது. உங்களை நான் தோற்க விடமாட்டேன். என் முழு கவனமும் இனி உங்கள் லட்சியத்தை நிறைவேற்றுவது தான்.” என்று சூலூரைக்காத குறையாய் தீர்மானம் ஏற்றுக்கொண்டாள்.
அவளை அணைத்தவன் முதுகை வாஞ்சையாய் தடவ இவ்வளவு நேரம் சீரியசாக இருந்த நம் நாயகனுக்கு குறும்பு எட்டிப்பார்த்தது, “என்ன பிளான்?” என்றான் உதட்டில் புன்னகையுடன்.
“என்ன பிளான்…?” என்று அவளும் அவனது கேள்வியை புரியாமல் திரும்பி கேட்க, “அதான் சொன்னியே பிளானெல்லாம் ரெடி என்று அது என்ன?” என்றான்.
“ச்சி… போங்க…” என்று அவனுள் புதைத்தாள்.
“ஓ… பிளான் போடும் போது அது ச்சி.. இல்லை நான் கேட்பது தானா… இதற்கு யார் மாஸ்டர் பிளான் நீயா உன் மாமனாரா?”
“அய்யோ… மாமாவா… அவர் எப்படி இதெல்லாம் சொல்லுவார். இதற்கு நானே போதும்.” என்றவள் நாக்கை கடித்தாள்.
“ஓ… அப்போது ஒழுங்காக சொல்லு இல்லை…” என்று சற்று மிரட்டும் தோணியில் கேட்க,
“இந்த ட்ரெஸ்… செளமியா அக்கா வற்புறுத்தவில்லை நானாகத் தான் வாங்கினேன்.” என்று வெட்கத்தில் இதழை கடித்தாள்.
‘கள்ளி… இவளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வெகுளியாய் முகத்தை வைத்துக் கொண்டு என்ன வேலை செய்கிறாள்.’ என்று மனதில் நினைத்தவன் குனிந்து அவள் தலையில் முத்தமிட்டு தன் கன்னத்தை அவள் தலையில் வைத்து அணைத்திருந்தான்.
அவன் சட்டை கசங்கும் அளவுக்கு இறுக்கி அணைத்தவள் ஏதோ நினைவு வந்தவளாய் விலகினாள்.
“நீங்கள் இன்னும் காபி கூட குடிக்கவில்லை. இருங்கள் உங்களுக்கு எடுத்துவந்து கொடுத்து விட்டு நான் குளிக்க போகிறேன்.” என்று திரும்பியவளை இழுத்து மேலிருந்து கீழ் வரை பார்க்க வெட்கத்தில் குறுகினாள்.
“நீ போட்ட பிளானை பாராட்ட வேண்டுமல்லவா?” என்று நெருங்க, “சீ… போடா…” என்ற சிணுங்கலோடு அவனை தள்ளி விட்டு ஓடிவிட்டாள்.
‘என்னது டாவா?…’ என்று எண்ணியவன் முகத்தில் முப்பத்திரண்டு பல்லும் தெரிந்தது.
நாட்கள் விரைந்தோட நிலா டெல்லிக்கு பயணமானாள், ரேகா இன்னும் இறங்கி வரவில்லை. அனுவிற்கு ஆதியின் மேல் மரியாதை, காதல் கூடிக்கொண்டே போனது. அவனின் தூண்டுதலில் ஆங்கிலம் கற்க ஆரம்பித்தாள். அவள் காலேஜ் செல்லும் போது உதவியாக இருக்குமென்று நேரம் கிடைக்கும் போது அவனே வண்டி ஓட்ட கற்றுக் கொடுத்தான். அதேபோல் அவளின் கைவினை பொருட்களும் தன் வடிவம் பெற்று விற்களாயின. அதனை கயல் படிப்பிற்கென்று அவள் சேர்த்து வைத்தாள். அவளுக்கென்று தனியே ஆதி பேங்க் அக்கவுண்ட் ஓபன் செய்து அனு கையில் கிரெடிட் கார்ட் கொடுத்து தேவைப்படும் போது உபயோகப் படுத்தச் சொன்னான். அவனிடம் வாக்கு கொடுத்த பின் ஆதியை பெரிதாக நெருங்க முயற்சிக்கவில்லை அவள்.
அவள் ரிசலட்டும் வந்து நல்ல மதிபெண்களோடு தேர்ச்சி பெற்றாள். மெரிட்டில் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் சீட் கிடைத்தது. கயல் தற்போது பத்தாம் வகுப்பில் அடி எடுத்து வைத்துள்ளாள்.
இதற்கிடையில் கயல் ஆதியிடம் போனை ஒப்படைத்தாள். கதிரை தொடர்பு கொள்வதையும் நிறுத்தி விட்டாள். அவள் உறுதியளித்தபடி ஆதியின் அனுமதியுடன் கதிரை ஒரு நாள் சந்தித்துப் பேசினாள். கதிர் கோபப்பட்டாலும் கயலிற்காக ஒத்துக் கொண்டான்.
ஆதி தனக்கு தெரிந்த டிடெக்ட்டிவ் ஏஜென்சியில் கதிரின் அடையாளங்களை கொடுத்து அவனின் முழு செயல்பாடு, குடும்ப பின்னணி என எல்லாவற்றையும் தெரிந்து கொண்டான்.
***
‘முருகா… முருகா…’ என்று காலையிலிருந்து ஜபம் செய்பவளை விசித்திரமாக பார்த்தனர் அவளது தங்கையும், கணவனும். கயல் இவள் செய்கையில் கடுப்பாகி தன் பள்ளிக்கு சென்று விட்டாள்.
“போருக்கு போகிற மாதிரி கிளம்புகிறாள் பார்.” என்று தன்னவலை கேலி செய்து கொண்டிருந்தான் ஆதி.
“என் உடை சரியாக இருக்கிறதா? இந்த பை ஓகேவா? ரொம்ப சிறியதாக இல்லை?… பேனா போதுமா…” என்று தன் சல்வாரை சரி செய்தபடி பையையும் திரும்ப திரும்ப சரி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நீங்கள் சரியான நேரத்திற்கு வந்து விடுவீர்களா? எனக்கு அங்கு யாரையும் தெரியாது. நான் எப்படி, எங்கே நிற்பது? எல்லோரும் என்னை ஒதுக்கி விடுவார்களோ? ஒரு தோழியாவது இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்…” என்று பிதற்றியவளை தன் அருகில் இழுத்துப் போட்டவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தினான்.
“ரிலாக்ஸ் பேபிமா… நீ முதல் நாள் காலேஜிற்கு தான் செல்கிறாய் போருக்கல்ல. யாரும் உன்னை ஒதுக்க மாட்டார்கள்.” என்றவனை குறுகிட்டாள்.
“இல்லை… அவர்களைவிட நான் பெரிய பெண்…” என்றவள் இதழை தன் விரலால் மூடினான்.
“நீ ஒன்றிரண்டு வயது தான் பெரியவளாக இருப்பாய். அதனால் என்ன… உன் குறிக்கோளை மறக்காத. அதற்காக எப்பொழுதும் புத்தகத்தோடு போராடாதே. எல்லா ஆக்ட்டிவிடீசிலும் கலந்து கொள். கடைசியாக என்னை நம்பு நான் இருக்கிறேன். உனக்கு எதுவும் பிடிக்கவில்லையென்றால் என்னிடம் தயங்காமல் வந்து சொல். என்ன ரிலாக்ஸ்…” என்று அவள் முதுகை வருடி முகம் முழுத்திலும் தன் இதழை படர விட்டான்.
அவள் சற்று அமைதியான பின் முதல் நாள் என்பதால் அவனே அழைத்துச் சென்றான். காலேஜ் வாசலில் பைக்கை நிறுத்தியவன் அவளுக்கு கையசைத்து விடைபெற அவன் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
“உள்ளே வந்து விடுகிறீர்களா?… காலேஜ் பெரிதாக இருக்கிறது… ராகிங் இருக்கும்…” என்று அப்பாவியாய் கேட்டவளை பார்த்து மறுக்க மனம் இல்லை என்றாலும் அவள் என்றும் தன்னை சார்ந்து இருக்க கூடாது என்பதில் உறுதியாய் இருந்தான்.
“கலெக்டர் மேடம் இதற்கே பயந்தால் எப்படி? ஆல் தி பெஸ்ட்!” என்று கூறி விட்டு அவளுக்கு நிற்காமல் வண்டியை கிளப்பினான். அவனுக்குத் தெரியும் இதற்கு மேல் தான் அங்கிருந்தால் அவளை பலகீனப்படுத்தி விடுவோமென்று.

Advertisement