Advertisement

பகுதி – 25
“என்ன புத்தகமெல்லாம் வாங்கியாயிற்றா?” என்று இரவு உணவை பரிமாறிக்கொண்டே இருவரையும் கேட்டாள் அனு.
கயல் ஒன்றும் புரியாமல், “என்ன புத்தகம் அக்கா?” என்றாள். ஏதோ யோசனையில் சாப்பிட்டு கொண்டிருந்தருந்த ஆதி அதை கவனியாமல் சுதாரிக்கும் முன் அனு பேச்சை வளர்த்தாள்.
“நீ ஏதோ புத்தகம் வாங்க வேண்டும் என்றவல்லவா இவர் சொன்னார். அதற்குத் தானே உன்னை பள்ளியிலிருந்து மாமா கூட்டி சென்றார்.” என்று அனு கூற கயலிற்கு சகலமும் விளங்கியது ஆதி பொய் சொல்லி தான் கூட்டி வந்திருக்கிறானென்று.
ஏதும் சொல்லி சமாளிப்போம் என்று நினைத்த கயலிற்கு குறும்பு தோன்ற, “ஆனால் மாமா உன் காபி பிடிக்கவில்லை என்று காபி ஷாப் அல்லவா அழைத்துச்  சென்றார்.” என்று அப்பாவியாய் போட்டுக் கொடுத்துவிட்டு தன் தட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து பறந்தது அந்த குறும்பு சிட்டு.
“ஏன் என்னிடம் சொல்லவில்லை.” என்று அவனிடம் திரும்பி கேட்க அவன் யாரையோ கேட்பது போல் உட்கார்ந்தான்.
“உங்களிடம் தான்…” என்று அவன் கையை பிடுத்து சாப்பிட விடாமல் தடுத்தாள்.
தன் நீண்ட நெடு யோசனையிலிருந்து வெளிவந்தவன் கேள்வியாய் அனுவை நோக்க அவள் தான் முன்னர் கேட்ட கேள்வியை ரீபிலே செய்தாள்.
“என்ன சொல்லவில்லை என்று கேட்கிறாய்?” என்றான் தலையும் புரியாமல் வாலும் புரியாமல்.
“நான் போடும் காபி பிடிக்கவில்லையென்று என்னிடம் சொல்லி இருந்தால் நான் என்னை திருத்தி இருப்பேன். அதை விடுத்து நீங்கள் எப்படி அவளிடம் குறை சொல்லலாம்?” என்றவள் குரலில் என்னை எப்படி அவளிடம் நீ விட்டுக்கொடுக்கலாம் என்ற தொனி இருந்ததை அவன் அறியவில்லை. 
அவனுக்கோ இன்னும் அவள் என்ன பேசுகிறாள் என்பதே பிடிபடவில்லை, “நான் எப்போது சொன்னேன் பிடிக்கவில்லையென்று?”
“கயல் சொன்னாலே…” என்றதுமே அவனுக்கு அனைத்தும் புரிந்து விட்டது. அந்த குட்டிச் சாத்தான் தன்னை பழி வாங்கிவிட்டது என்று மனதில் அவளை வசைபாடியபடி தன் கையை பிடித்திருந்த அவள் விரல்களில் தன் இதழ்களை ஒற்றி எடுத்தான்.
“நான் சும்மா சொன்னேன் பேபி… நாம் உவகையாக  வெளியில் செல்லும் போது அவள் சற்று தயங்கி தள்ளி நிற்கிறாள். அதான் பிடிப்பு வரட்டுமே என்று அவளுக்குப் பிடித்ததை வாங்கிக்  கொடுத்து கூட்டி வந்தேன்.” என்றான் பாதி உண்மையை.
அனுவிற்கு அவனை நினைத்து பெருமையாக இருந்தது. தனக்கு மட்டுமில்லாமல் தன் தங்கைக்கும் பார்த்து பார்த்து செய்கிறானே என்று பொங்கிய காதலில் தன் தட்டிலிருந்து உணவை எடுத்து நீட்டி அவன் உதடுகளின் பிரிவுக்காக காத்திருந்தாள். அவளின் காதல் மொழி அவனையும் தொற்றிக் கொள்ள தன் உதடுகளை பிரித்து அவளுக்கு வழி செய்தான். 
அவனும் தன் பங்கிற்கு தன் உணவிலிருந்து அவளுக்கு ஊட்டி விட்டான். இப்படியே காதல் சீண்டல்களுடன் அவர்கள் இரவு உணவு முத்தத்திற்கும் கடிகலுக்கும் இடையில் முடியவும், கயல் ரூமிற்குள் அடைபட ஆதி ஹாலில் அமர்ந்து டிவியிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.
தன் அறையிலிருந்து இரவு உடை மாற்றி விட்டு வெளிவந்த அனு கயல் ரூம் புறம் தன் பார்வையை ஒட்டிவிட்டு அதன் அடைப்பை உறுதி செய்து கொண்டவள் ஆதி அருகில் வந்து அமர்ந்தாள்.
“ஏன் மாற்றிக்கொண்டே இருக்கிறீர்கள்? ஏதாவது ஒரு சேனல் வையுங்கள்.” என்று என்றும் இல்லா திருநாளாய் அதிகாரம் தூள் பறந்தது.
அவளை ஒரு பார்வை பார்த்தவன் உள்ளுக்குள் அதிர்ச்சியானாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
“என்ன ட்ரெஸ்செல்லாம் புதுசாக இருக்கிறது. இதை எப்போது வாங்கினாய்?” எச்சில் விழுங்கி கூட்டிக்கேட்டான்.
“சென்ற வாரம் செளமியா அக்காவோடு மாலிற்கு சென்றிருந்தேன். அவர்கள் தான் நான் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் இது போல் வாங்கிக் கொடுத்தார்கள்.” என்றாள் தன் புது இரவு நைட்டியை சரி செய்தபடி.
“அவள் எப்போது வந்தாள்? என்னிடம் சொல்லவே இல்லை. நீ எப்போது சென்றாய்.” 
“அதான் நீங்கள் முரளி அண்ணாவோடு வெளியில் சென்று இருந்தீர்களே அன்று தான். உங்களிடம் சொல்ல வேண்டும் என்று தான் நினைத்தேன் ஆனால் மறந்து விட்டது.” என்றவள் தானே ரிமோட் எடுத்து வேறு சேனல் வைத்தாள்.
தெரிந்து செய்ததோ தெரியாமல் செய்ததோ அவள் வைத்த பாடல்கள் அனைத்தும் காதல் ரீங்காரமிட தவித்துப்போனான் ஆதி. அவன் உள்ளமும், தேகமும் கட்டுப்பாட்டை இழக்க பதறியடித்து எழுந்துவிட்டான்.
“எனக்கு தூக்கம் வருகிறது பேபி.” என்று கொட்டாவி விட்டவன் அவள் பதிலுக்கு காத்திராமல் ரூமிற்குள் சென்று கட்டிலில் சரிந்தான்.
அவனின் நிலையை புரிந்து கொள்ளும் அளவிற்கு விவரம் பற்றவில்லை அனுவிற்கு. அவனுக்கு உண்மையாகவே தூக்கம் வந்திருக்கும் என்று நினைத்து அவளும் அவனுடன் கட்டிலில் சரிந்தாள்.
எப்போதும் போல் அவனை கட்டி அணைத்தவள் அவன் மார்பில் முகம் புதைத்து ஆழ்ந்த நித்திரைக்கு செல்ல அவள் மணாளன் அவள் நெருக்கத்தில் நித்திரை இழந்தான்.
இங்கு இப்படி இருக்க மற்றொரு அறையில் கயல் கதிரிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்.
“புரிந்துக் கொள் கதிர். மாமா உண்மையாகவே நமக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார். நான் பார்த்தவரை வாக்கு தவறுபவர் அல்ல அவர். அவரை நான் முழுதாக நம்புகிறேன்.” என்றாள் போனில்.
“எனக்கென்னவோ அவர் பொய் சொல்லி உன்னை அவர் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயற்சி செய்கிறார் என்று தோன்றுகிறது. முட்டாள் போல் அவர் பேச்சை நம்பாதே, நாம் நாளை பார்க்கலாம். நானே உன் பள்ளிக்கு அருகில் வருகிறேன்.” என்றான் கதிர் அதிகாரத்தோடு.
“முடியாது கதிர். அவர் நம்பிக்கையை நான் பொய்யாக்க விரும்பவில்லை. அவர் எனக்கு கொடுத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தவும் மனம் வரவில்லை. சில வருடங்கள் நாம் கட்டுப்பாடோடு இருந்தால் பிறகு சந்தோசமாக இருக்கலாம். யோசித்து பார், இப்படி மறைந்து மறைந்து காதல் செய்து அனைவர் முன்னிலையிலும் நம் காதலை கொச்சைப்படுத்துவதை விட மரியாதையாய் வாழ்ந்து காதலில் ஜெயிக்க முடியும். நான் உன்னை இன்றிலிருந்து சரியாக மூன்றாவது மாதம் வந்து சந்திக்கிறேன். அதுவரை பை… இந்த போனையும் நான் மாமாவிடம் கொடுக்கப் போகிறேன். எனக்கு இனி இதில் கால் செய்யாதே.” என்று கூறி காலை கட் செய்தவுடன் கண்ணீர் எட்டிப்பார்த்தது.
ஒரு உத்வேகத்தோடு வீம்பாய் அதை துடைத்தவள் இனி ஒழுங்காக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து உறங்கினாள்.
மறுநாள் புது காலையாய் கயலுக்கு விடிய அனுவிற்கு குறும்பாக விடிந்தது.
“ஏய்… நானே விழித்துவிட்டேன். நீ என்ன செய்கிறாய்?” என்றான் தன் மேல் இருந்த அனுவை உலுக்கி.
“ஒரு நாள் என்னை தூங்கவிடுங்கள்.” என்று முணுமுணுத்தவள் அவன் கழுத்தை இன்னும் இறுக்கிக் கொண்டாள்.
“நீ தூங்கு. நான் அதை எதுவும் சொல்லவில்லை ஆனால் கொஞ்சம் நகரு நான் எழுந்திருக்க வேண்டும்.” என்றான் மீண்டும் அவள் தோள்களை பற்றி உலுக்கி.
பதிலேதும் கூறாமல் அவன் மேலே இன்னும் படர்ந்தவள் கண் அயர்ந்தாள்.
“ப்ளீஸ்மா… எழுந்திரு…” என்று மீண்டும் உலுக்க இந்தமுறை விழித்தாள்.
வெளிச்சத்தை எதிர்கொள்ள இமைகள் சண்டையிட தன் நிலையை பார்த்து முறுவல் பூத்தது அவள் இதழில். ஒரு கை அவன் கழுத்தை சுற்றி இருக்க அவன் கை அவள் இடையை கெட்டியாக பற்றி இருந்தது. அவள் காலும் அவனுடன் சண்டையிட்டு ஓய்ந்திருந்தது.
“படம் எல்லாம் பார்த்தது இல்லையா மிஸ்டர்?” என்று குறும்புடன் அவன் மார்பிலிருந்து அவன் கன்னம் பற்றி கேட்க, அவளது மற்றொரு கை அவனது மறு கன்னத்தில் கோலமிட்டது.
“ம்ம்… பார்த்திருக்கிறேனே ஏன்?” என்றான் புருவம் உயர்த்தி சந்தேகத்துடன்.
“பார்த்தமாதிரி தெரியவில்லையே…” என்று நிறுத்தியவள் அதற்கு மேல் எப்படி பேசுவது என்று புரியாமல் மனதில் ‘உங்களையெல்லாம் வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது’ என்று மெல்லிய குரலில் முணுமுணுப்புடன் அவன் கன்னத்தில் இதழ் பதித்து அவன் புரிந்துகொள்ளத் தவறுவதை எடுத்துக்கொடுத்தாள். அவன் நெற்றியோடு தன் நெற்றியை முட்டியவள் மெல்லிய குரலில் காதலை வெளிப்படுத்த, “லவ் யூ மாமா…”
.
இம்முறையாவது ஏதும் சொல்வான் என்று எதிர்பார்த்தவள் ஏமாற அவனை விட்டு விலக முற்படும் போது அவளை இழுத்து கீழே தள்ளியவன், “என்ன மேடம் நேற்று பார்த்த பாடலின் எபக்ட்டா?” 
ஆமாம்… என்று தலையசைத்தவள், “நீங்கள் தான் மக்காயிற்றே அதான் நான் புத்திசாலியாக செயல்படுகிறேன்.” என்றவள் கண்ணடிக்க அவளின் வெளிப்படையான பேச்சில் தன் மனதை தொலைத்தவன் அவள் மேல் சரிய அந்த காலை இனிமையானதாக மாறும் என்று மனதில் துள்ளியவளுக்கு தடை போடும் விதமாய் வந்து கதவை தட்டினாள் கயல்.
கதவு தட்டும் சத்தத்தில் தன் நிலை உணர்ந்தவன் வேகமாய் விலக அனு சென்று கதவை திறந்தாள்.
“என்னடி…?” என்றாள் துளிர்விட்ட கடுப்புடன்.
தன் அக்காவின் கோபத்தில் திகைத்தவள் அவள் நிலையை பார்த்து இன்னும் திகைத்தாள். அவள் உடுப்பு தான் கயல் திகைப்பிற்கு காரணம்.
“பால் வந்துவிட்டது. டிபன் செய்யவேண்டாமா?” என்றாள் கயல் பவ்வியமாக. 
“வருகிறேன் போ…” என்று கதவை அறைந்து சாற்ற ஒன்றும் புரியாமல் தன் வேலையை பார்க்கச் சென்றாள் கயல்.
உள்ளே ஆதியோ, “நான் குளிக்கப் போகிறேன். எனக்கு வேலை இருக்கிறது… காபி கொண்டு வா.” என்று அதிகாரத்தோடு கட்டளையிட்டுவிட்டு பாத்ரூமிற்குள் புகுந்தான்.
அவன் சென்ற திசையையே ஏக்கத்தோடு பார்த்தவள் தன் வேலைக்குள் மூழ்கினாள்.
“அனு… அனு…” என்று குளியலறைலிருந்து கத்த ஓடோடிவந்தாள் அனு.
“இந்தாங்க டவள்.” என்று அவன் அழைத்த காரணத்தைக் கேட்காமல் தானே ஒன்று நினைத்து கதவை தட்டி சொல்ல அவனோ மொபைல் சார்ஜ் போடு என்றான்.
காலையிலிருந்தே சற்று கோபத்தனலில் தகித்தவள் இதில் இன்னும் சூடாகிவிட்டாள்.
அவனை திட்டிக் கொண்டே சார்ஜ் போட்டவள் ஏதோ கால் வரவும் எடுத்துப் பார்த்தால் டாட்… என்று ஒளிர்ந்தது.
உடனே சந்தோசத்தில் அதை அட்டெண்ட் செய்து, “மாமா…குட் மார்னிங்… இன்றைக்கு என்ன அருகம்புல் ஜூஸ் குடித்தீர்களா இல்லை நேற்று போல் எஸ்கேப் ஆகிவிட்டீர்களா?” மறுமுனையில் இருப்பவருக்கு வாய்ப்பு அளிக்காமல் அவளே பேசினாள்.
“நான் நிலா…” என்றது மறுமுனையிலிருந்து.
“அவர் குளிக்கிறார்… நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள் அனு சற்று தயங்கி.
“ம்ம்… உன்னிடம் தான் பேச வேண்டும்.” என்றவுடன் ஒரு பெருத்த அமைதி இருபுறமும், “நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன். இனி அத்தான் வாழ்வில் நான் பங்கு கேட்க மாட்டேன். அவரிடமும் சொல்லி வி்டு. என்னை நினைத்து யாரும் கவலைப் படவேண்டாம். எனக்கு டெல்லியில் வேலை கிடைத்திருக்கிறது. நான் அங்கேயே செட்டில் ஆகப் போகிறேன். பி ஹெப்பி… அத்தானை நன்றாக பார்த்துக் கொள். பை…” என்றுவிட்டு இணைப்பை துண்டித்தாள் நிலா.
அனு போனை ஆச்சர்யத்தில் வெறிக்க மறுபுறமோ நிலா கண்ணீரோடு நின்றிருந்தாள்.
“தேங்க்ஸ் மாமா… நீங்கள் சுட்டிக்காட்டியது போல் யாரும் என்னிடம் விளக்கவில்லை. அத்தான் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. அவருக்கு அவளை பிடித்திருந்தால் நான் ஒதுங்கிக் கொள்கிறேன். உண்மையான காதல் என்றும் காதலின் மகிழ்ச்சியை தான் வேண்டும்.” என்று கண்ணீர் சிந்தியவள் திடமாய் இப்படி ஒரு முடிவெடுக்க முக்கிய காரணம் கோபால்.
கவுன்சிலிங் வேலை செய்யத் தொடங்கிய பின்பும் உமா நிலாவின் ஆசைக்கு ஆதரவு கொடுக்க கோபால் சற்று தனித்து தினமும் அவளிடம் பேச்சு கொடுத்து வந்தார். அதில் நிலா சரியான வழிகாட்டுதல் இல்லாததால் தான் இப்படி பிடிவாதம் பிடிக்கிறாள், அவளின் எல்லா செயலுக்கும் பெற்றோர்கள் ஆமாம் சாமி போட்டதே இதற்கு முக்கிய காரணம் என்று அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் எப்படியோ பேசி புரியவைத்து அதில் வெற்றியும் கண்டுவிட்டார். அதன் வெளிப்பாட்டாய் நிலா தன் வேலையை டெல்லிக்கு மாற்றிவிட்டாள்.

Advertisement