Advertisement

பகுதி – 24
“அவளை பற்றி என்ன இருக்கிறது?” என ஆதி விழிக்க முரளி தனக்கு தெரிந்ததை சொல்ல முடிவெடுத்தான்.
“அவள் ஒரு பையனை விரும்புகிறாள்!…” என்றான் ஆதியின் கண்களை நேராய் பார்த்து.
அதை கேட்டு அதிர்ந்தவன், “உளராதடா… அது சின்ன பொண்ணு, ஸ்கூல் தான் படிக்கிறது. நீ ஏதோ தப்பாக புரிந்திருக்கிறாய்.” என்றான் ஆதி பதறியடித்து.
“நான் ஏன்டா உளரப்போகிறேன்? என் கண்ணால் நேரே பார்த்தேன். அதுமட்டுமில்லாமல்…” என்றவனை குறுகிட்டான் ஆதி.
“நீ வேறு யாரைவது பார்த்துவிட்டு இவள் என்று தப்பாக நினைத்திருப்பாய்.”
“அவளிடமே பேசினேன். அவளே ஒத்துக் கொண்டாள். அதுவும் வேறு ஒருவள் என்று சொல்வாயோ?” என்றான் சற்று முரளி காட்டமாக.
“நம்ப முடியலடா… நிஜமாகத் தான் சொல்கிறாயா?” என்று ஆதி நம்பாமல் மீண்டும் கேட்டான்.
“ஆமாம்… அன்று கோவிலில் உனக்கும், சிஸ்டருக்கும் மேரேஜ் நடந்ததுல, அன்று தண்ணீர் வாங்க போன போது அவள் யாரோ ஒருவனுடன் நெருங்கி நின்று பேசிக் கொண்டிருந்தாள். என்னவென்று விசாரித்ததில் அவர்கள் காதலிக்கிறார்கள், அது சிஸ்டருக்கு தெரியும் என்றும் கூறினாள். அதை உன் காதில் போட்டு வைக்க வேண்டும் என்று பல நாட்களாக நினைத்து இப்போது தான் நேரம் கிடைக்கிறது.” என்றவன் ஆதியை நோக்க அவன் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தான்.
“என்ன யோசனை?”
“எனக்கு தெரிந்த வரை அனுவிற்கு
இது பற்றி எந்த ஐடியாவும் கிடையாது.” என்று ஆதி அனுவின் முந்திய பேச்சை வைத்து யூகித்தான்.
“அப்போ அவள் பொய் சொல்கிறாளோ? பிஞ்சிலே பழுத்தது போலடா.” என்றான் முரளி.
“என்னவோடா…ஏதோவது பிரச்சனை வந்துகொண்டே இருக்கிறது. காண்டாகுது..நான் கயலிடம் பேசுகிறேன். அவள் பாட்டிற்கு ஒரு நாள் நிலா போல் ஷாக் கொடுக்காமல் இருந்தாள் சரி. இது உண்மையாக இருந்தால் அனு எப்படி எடுத்தக் கொள்வாள் என்றும் தெரியவில்லை, கயல் மேல் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறாள்” என்று சற்று சலித்தாலும் வேறு வழி இல்லை, உண்மையை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.
“பார்த்து டீல் பண்ணுடா…டீனேஜ் பொண்ணு எதுவும் பண்ணிக்க போகுது” என்றான் முரளி அக்கரையாய்.
அவனுக்கு தலையாட்டிவிட்டு அன்று மாலையே இதை பற்றி பேசி விட வேண்டும் என்று வீட்டிற்கு விரைந்தான்.
“வந்துவிட்டீர்களா?” என்றபடியே ஓடிவந்து அவன் கையில் இருந்து லேப்டாப் பேகை வாங்கிக் கொண்டாள் அனு.
“காபி கலந்து வருகிறேன்” என்று தேவைக்கதிகமாக புன்னகை வீசிவிட்டு மின்னலாய் மறைந்தாள்.
‘என்னவாயிற்று இவளுக்கு, இவள் சிரிப்பே சரி இல்லையே’ என்று நினைத்தவன் அறைக்கு செல்ல சற்று நேரத்திலே அனு உள்ளே வந்தாள்.
டவலால் முகத்தை துடைத்தபடியே வெளியே வந்தவனிடம் கப்பை நீட்டினாள். டவலை கட்டிலில் போட சென்றவன் அவள் குறுகுறுவென பார்க்கவும் அவள் தோளில் போட்டு விட்டு அமர்ந்தான்.
ஏதும் சிணுங்குவால் என்று நினைத்தவன் ஆச்சர்யப்படும் விதம் அழகாய் அதை காய வைத்துவிட்டு அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.
“என்ன மேடம் குஷியா இருக்கிற மாதிரி தெரிகிறது?” என்று அவள் தோளை இடித்தபடி கேட்டான்.
“ஆங்…உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்?” என்றவள் அவன் மேல் தலை சாய்த்து அவன் சட்டை பட்டனை திருகினாள்.
சந்தேகத்தோடு குனிந்தவன் “என்ன பேபி…?”
“நாம் எங்காவது சென்று வரலாமா? எனக்கும் பரிட்சை முடிந்து விட்டது. ஒருவாரமாக நாம் சரியாக பேசிக்கொள்ள கூட இல்லை” என்று பொடி வைத்து பேச அதை அவன் சரியாக புரிந்து கொண்டான்.
“ம்ம்…கண்டிப்பாக போக வேண்டுமா?” என்று அதை தவிர்க்க நினைத்தான்.
“ஆமாம்… பண்டிகை விடுமுறை வருகிறது ப்ளீஸ்…” என்று கெஞ்சினாள் அழகாய் உதட்டை சுழித்து.
“என்னை படுத்துகிறாய் பேபி..” என்று கிறங்கி அவன் வேறு அர்த்தத்தில் சொல்ல அவள் அதை வேறு விதமாய் புரிந்து கொண்டாள்.
அவன் தன் ஆசையை நிராகரித்து விட்டான் என்பது மட்டுமே அவள் மனதில் பதிந்தது. முத்தாய் விழுந்த அவளது கண்ணீர் அவளையும் அறியாமல் அவன் சட்டையை நனைத்தது.
“நான் உங்களை இம்சை செய்கிறேனா? எனக்கு தெரியும் நீங்கள் கடமைக்காகத் தான் என்னுடன் இருக்கிறீர்கள். நான் தான் உங்களை பிடித்து கொண்டு சுற்றுகிறேன்…” என்று அழுகுரலோடு அவன் மார்பில் அடித்து கொண்டே பிதற்றினாள்.
‘இப்படி மனமுடைந்து போனால் மூளையில் உட்கார்ந்தோ
அல்லது முகத்தை மூடி அல்லவா அழுவார்கள் இவள் மட்டும் என்னை அடித்துக் கொண்டே அழுகிறாள். நான் சமாதானம் செய்ய வேண்டும் என்று இப்படி அழுகிறாளோ, இவளை புரிந்து கொள்வதற்குள் நான் நரைத்து விடுவேன் போலிருக்கே’ என்று மனதில் புலம்ப அவளை சமாதானம் செய்து வெளியில் கூட்டி போகிறேன் என்று ஒற்றுக் கொண்டான்.
“அப்படி ஒன்றும் நீங்கள் சலித்து கொண்டு என்னை வெளியில் கூட்டி போக வேண்டாம். மாமா உங்களிடம் கேட்க சொன்னதால் கேட்டேன், நீங்கள் என்னவோ ரொம்ப தான் அலெட்டுகிறீர்கள்” என்று இந்த பிளான்னுக்கு பின்னால் இருந்த மாஸ்டர் மைண்டை போட்டுடைத்தாள்.
“ஓ…மாமனாரும் மருமகளும் எனக்கு தெரியாமல் கூட்டு சேர்ந்து விட்டீர்களா” என்றவன் கயல் மேல் சந்தேகம் இருக்கும் இந்த நேரத்தில் வெளியூர் செல்வது சரி வராது என்று முடிவெடுத்து அருகிலே கூட்டிப் போனான்.
அனு தன் மாமனாரில் ஒரு தந்தையை கண்டாள். சில பரிமாற்றங்களிலேயே கோபாலிற்கு அனுவை பிடித்து விட்டது. தினமும் ஒரு முறையாவது அனுவிடம் பேசி விடுவார்.
இரண்டு நாட்களும் அனு அவனை விட்டு பிரியாமல் ஒட்டிக் கொண்டே இருந்ததால் கயலிடம் பேச முடியவில்லை. ஆனால் அவன் கண்கள் கயலை நிமிடம் விடாமல் தொடர்ந்தன.
அனு சற்று ஏமார்ந்தாள் என்பதே நிதர்சனம். திருமணமான இரண்டாம் நாள் தன்னுடன் ஆசையாய் இருந்தவன் தற்போது தாங்கள் தனியாக இருந்தாலே ஒரு அடி தள்ளியே நிற்கிறான் என்பது வருத்தமளித்தது. அவள் மனதில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் ஆதி அம்மா ஏற்றுக் கொள்வார் என்ற எண்ணம் வேரூன்றி இருந்தது.
விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறந்தது. இன்று எப்படியாவது கயலிடம் பேசிவிட வேண்டும் என்று கயல் பள்ளிக்கு தன் பைக்கை விட்டான். மறக்காமல் அனுவிடம் கயலிற்கு புத்தகம் வாங்க வேண்டும் அதனால் தான் அவளை வெளியில் அழைத்து செல்வதாகவும் வர நேரமாகும் என்றும் தெரிவித்திருந்தான்.
பள்ளி முடிந்து வகேஷன் போவது போல் சந்தோசமாக வெளியே வந்த கயல் பள்ளி வாசலில் ஆதி பைக்கில் அமர்ந்திருப்பதை பார்த்து சந்தேகத்தோடு அவனிடம் சென்றாள்.
“என்ன மாமா இந்த பக்கம்?” என்று கேட்டாள் தன் தோழிகளிடமிருந்து விடைபெற்று.
“ஆபீஸில் வேலை சீக்கிரம் முடிந்து விட்டது, அதான் உன்னை அழைத்து செல்ல வந்தேன்” என்று கூறி அவளை காபி ஷாப் அழைத்து சென்றான்.
கேள்வியாய் தன்னை நோக்கிய கயலிடம் “உன் அக்கா போடும் காபி குடித்து போரடித்துவிட்டது, இன்று ஒரு நாள் இங்கே குடித்து விட்டு போகலாம்” என்றான் குறும்புடன். மனமோ நீ இப்பொழுது சொன்னது மட்டும் அனுவிற்கு தெரிந்தால் வெளுத்து விடுவாள் என்று எச்சரித்தது.
மூளை அவளுக்கு தெரிந்தால் தானே என்று சமாதானம் செய்ய உள்ளே நுழைந்தனர். கயலுக்கு லேசாக சந்தேகம் எட்டி பார்க்க ஆரம்பித்தது.
அமைதியாய் ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, கயலிற்கு தன்னை சந்தேகத்தோடு நோக்குவதாக தோன்றியது.
“ஏதாவது பேச வேண்டுமா மாமா?” என்று கயலே அவன் அமைதி தாங்காமல் பேச்சை ஆரம்பித்தாள்.
“உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும். என்னையும் உன் அக்காவையும் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்றவன் அவளின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க தவறவில்லை.
இதை கேட்ட பிறகே உயிர் வந்தது கயலிற்கு. எங்கே கதிர் பற்றி தெரிந்திருக்குமோ என்று பயந்திருந்தாள்.
“உங்களை பற்றியா…நீங்கள் அக்காவை நன்றாக பார்த்துக் கொள்கிறீர்கள். அக்கா சந்தோசமாக இருக்கிறாள் நீங்கள் இருக்கும் தைரியத்தில், நானும் தான். எங்களுக்காக நீங்கள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறீர்கள், எனக்கு என் வீட்டில் இருந்ததை விட உங்களுடன் இப்பொழுது இருப்பது பிடித்திருக்கிறது” என்றாள் பளிச்சென்று.
“அப்போது நான் கேட்கும் கேள்விக்கு தெளிவாக மெய்யுரைப்பாயா?” என்றவன் ஆர்டர் செய்தது வரவும் தன் பேச்சை நிறுத்தினான்.
கயல் மூளை எச்சரிக்கை மணி அடித்தது. அவளின் தெளிவற்ற முகத்தை பார்த்தவன் மெதுவாக தன் கேள்விகளை மனதில் தொடுத்து கேட்டான்.
“காதல் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்றான் தன் பார்வையை நேராக நிறுத்தி.
அவன் கேள்வியில் திகைத்தவள் “ஏன் மாமா கேட்கிறீர்கள்?” என்றாள் வியர்வையை துடைத்தபடி.
“உன் அக்கா சொன்னாள் நீ யாரையோ காதலிக்கிறாயென்று, அதான் உன்னிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்” என்றதுமே அவள் கண்கள் விரிந்தது.
“மாமா…” என்ற அவளது குரல் அவளுக்கே கேட்கவில்லை.
“யார் அந்த பையன்? என்னிடம் எல்லாம் அறிமுகப்படுத்த மாட்டாயா இல்லை தேவையில்லை என்று நினைத்தாயா?” என்றவனின் கேள்வி அவளை திக்குமுக்காட செய்தது.
“என் முகத்தில் பதில் உள்ளதா? இல்லை அனுவிடம் தான் சொல்வாயா?” என்றான் சற்று நேர மௌனத்திற்குப் பின்.
“அவரை சென்ற வருடம் என் வீட்டு பக்கத்தில் பார்த்தேன். எலக்ட்ரிகல் கடையில் வேலையை பகுதி நேரமாக பார்க்கிறார். இரண்டாம் வருடம் இளங்கலை படிக்கிறார். பெயர் கதிரவன். முன் வீடுகளில் எலெக்ட்ரிஸியன் வேலை செய்தார் அப்பொழுது தான் எனக்கு பழக்கம் ஏற்பட்டது என் தோழியினால். முதலில் எனக்கு பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை, பின்னர் போக போக ஏதோ என்னவென்று சொல்லத் தெரியாத உணர்வு ஏற்பட்டது. காலப்போக்கில் அது காதல் என்பதை உணர்ந்தேன், நானே அவரிடம் என் காதலை சொன்னேன் அவருக்கும் என்னை பிடித்திருப்பதாக சொன்னார். அதிலிருந்து இருவரும் நேரம் கிடைக்கும் பொழுது பார்த்துக் கொள்வோம். அப்படி பார்க்கும் போது தான் முரளி அண்ணன் பார்த்து விட்டார். அவர் தானே உங்களிடம் சொன்னார், என் அக்காவிற்கு இதெல்லாம் தெரியாது” என்று மென்றுவிழுங்கி உண்மையை கூறினாள்.
“நீ காதலிக்கிறாய் என்பதில் தெளிவாக இருந்தாய் என்றால் நானே உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன், ஆனால் இப்பொழுது அல்ல இன்னும் ஆறு வருடங்களுக்கு பின், உன் படிப்பு முடிந்தவுடன். அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவனை பார்க்காதே என்றெல்லாம் சொல்ல மாட்டேன், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பார்த்து பேசு. உனக்கான முழு சுதந்திரம் உனக்கு கிட்டும் நீ நடந்து கொள்வதை பொறுத்து. ஆனால் எனக்கு தெரியாமல் எதுவும் செய்தாய் என்றால் பிறகு நடக்கும் விஷயங்களுக்கு நான் பொறுப்பாக மாட்டேன். அவன் போன் நம்பர் கொடு நான் அவனை பார்க்க வேண்டும்” என்று தெளிவாக தன் கருத்தை முன் வைத்து அவளிடம் நம்பர் வாங்கிக்கொண்டான்.
ஆதி இப்படி பேசுவான் என்று கனவிலும் கயல் நினைத்ததில்லை. ஏதோ பாரத்தை தன் தலையிலிருந்து இறக்கியது போல் இருந்தது அவளுக்கு. வீட்டிற்கு தெரிந்தால் தடை உத்தரவு போடுவார்கள் என்று நினைத்து தான் மறைத்தாள். ஆதி இப்படி சொன்னது வியப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் அவன் கண்களில் தெரிந்த நேர்மை அவளை நம்ப வைத்தது. இன்னொன்று ஆதி தன் அக்காவிடம் நடக்கும் விதமே அவனுக்கு நன்மதிப்பை பெற்று தந்தது. இருக்காதே பின்னே ஒரு நாள் தாமதமாக வந்ததற்கே தன் அக்காவிடம் மன்னிப்பு கேட்டவராயிற்றே. கயலிற்கு தெரியவில்லை அன்று பெரிய பூகம்பமே தன் அக்கா மனதில் வந்ததென்று.
ஆனால் அவனை பொறுத்தவரை ஒரேடியாக அவளை முடக்காமல் கொஞ்சம் விட்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்தான். எதை செய்யாதே என்று சொல்கிறோமோ அதை தான் செய்வேன் என்று ஏட்டிக்கு போட்டியாய் செய்யும் வயது கயலிற்கு. இப்பொழுது போய் நீ காதலிப்பது தவறு என்று சொல்வது தனக்கு தானே மண்ணை வாரி தலையில் போட்டுக் கொள்வதற்கு சமம். இன்னொன்று அவளுடைய காதல் உண்மையானதாகக் கூட இருக்கலாம். அந்த பையனும் நல்ல பையனாக இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதில் தவறில்லை. அதோடு அவள் படிப்பும் முக்கியம், அவளை தடுமாற விடாமல் அவளை நேர் வழிக்கு கொண்டு செல்ல வேண்டும். ஒருவேளை அந்த பையன் இவளை ஏமாற்றினால் அதை புரிய வைக்க இந்த இடைவெளி அவசியம். வாரம் பார்ப்பதை மாதங்களாக மாற்றி பின் வருடங்களாக்கி விடலாம் என்று கணக்கு போட்டான். இப்படி எல்லாவற்றையும் யோசித்த பின்பே இந்த முடிவிற்கு வந்தான்.
“மாமா…அக்கா….” என்று கயல் இழுக்க அவளிடம் தற்போது சொல்ல மாட்டேன் என்று வாக்கு கொடுத்தான்.
ஆதியின் கணிப்பு, உக்தி எந்த அளவிற்கு வேலை செய்யப் போகிறது என்பதை வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

Advertisement