Advertisement

பகுதி – 23
அவன் கழுத்தை கட்டிக்கொண்டவள், “என்ன சொல்கிறீர்கள்? நிஜமாகாவா?” 
“ஆம்… இனி நிலா நம் வாழ்வுக்குள் வர மாட்டாள். ஆனால் அது தற்காலிகம் தான்…” என்றான் சற்று தயக்கத்துடன்.
“என்னை கீழே இறக்கி விடுங்கள்.” என்று அவன் தோள்களை குலுக்க ‘முடியாது’ என்று தலை அசைத்தான்.
“அப்பொழுது கதவையாவது மூட விடுங்கள்.” என்று சிணுங்க அவளை இறக்கிவிட்டான். அவள் கதவை சாற்றிவிட்டு அறைக்கு வரவும் அவன் டெடியை வைக்கவும் சரியாக இருந்தது.
“என்னவாயிற்று? நீங்கள் சந்தோசமாக இருக்கின்ற மாதிரி தெரிகிறது?” என்றாள் அவன் துணிகளை மடித்தபடியே.
“அதான் சொன்னேனே நிலா இனி நமக்கு தொந்தரவாக இருக்க மாட்டாலென்று…!” என்றான் அவள் அருகில் வந்து தோள்களை குலுக்கி.
“பொய் கூறாதீர்கள்… வேறு ஏதோ இருக்கிறது.” என்று அவனை படித்த மனைவியாய் சந்தேகத்தோடு வினவ அவன் கையில் சில துணிகளை கொடுத்து மடிக்கச் சொன்னாள்.
“பரவாயில்லையே என் பேபி என்னை பற்றி நன்றாக தெரிந்து வைத்திருக்கிறாள்.” என்று அவளை கொஞ்சியபடியே லாவமாக அவளிடமே தன் துணிகளை தள்ளினான்.
“கொஞ்சியது போதும் என்னவென்று சொல்லுங்கள்.” என்றபடியே மீண்டும் துணிகளை அவனிடம் திணித்தாள்.
“உன்னிடம் பேசி ஜெயிக்க முடியாதே அது என்வென்றால்… அம்மா…” வார்த்தைகளை வேண்டுமென்றே பிரேக் போட்டு நிறுத்த,
அவன் கூறவருவதை ஆர்வமாக காதில் வாங்கியவள் அவன் நிறுத்தவும் சந்தேகத்தில் புருவம் உயர்த்த அதை மறுநிமிடமே தெளிவு படுத்தினான். 
“சும்மாவெல்லாம் சொல்ல முடியாது. பதிலுக்கு நீ ஏதாவது தர வேண்டும். டீல்?” என்று அவன் லாபம் பேச முறைத்தவள் எப்படியோ விஷயம் கிடைத்தால் சரி என ஒப்புக் கொண்டாள்.
“அப்பொழுது இதை மடித்து விடு பேபி நான் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறேன்.” என்று அவளிடமே மீண்டும் துணிகளை திணித்தான்.
அவன் வேறு ஏதும் கேட்பான் என்று நினைத்து மனதில் ஆசை வளர்த்தவள் அவன் வேண்டுவதை கேட்டு கடுப்பானாள்.
“முடியாது என்றால் என்ன செய்வீர்கள்?” என்றாள் காரம் குறையாது.
“அனுமா… பிலீஸ்… எனக்கு இதெல்லாம் தெரியாது.” என்றான் இதழ்களை பிதுக்கி அப்பாவியாய்.
முறைத்துக்கொண்டே அவன் வேலையையும் சேர்த்து செய்ய, அவன் சில நிமிடங்களுக்கு முன் நடந்தவற்றை முன்வைத்தான். 
ஆதியை தனியாக மாடிக்கு அழைத்துச் சென்ற ரேகா,
“நிலாவை என்ன செய்யலாம் என்று நினைக்கிறாய்? அவள் வாழ்க்கைக்கான முடிவு என்ன?” என்று வினவியவரிடம் கோபம் தணிந்திருப்பதை உணர்ந்தான் ஆதி.
“அவளை சரி செய்து நாமே ஒரு நல்ல வரன் பார்த்து திருமணம் செய்து வைத்து விடலாம்.” என்றவன் தன் தாயின் பாவனையை கூர்ந்து கவனித்தான்.
சில நொடி ஏதோ யோசித்தவர், “ஆதி நான் ஒரு யோசனை… அவளை வெளியூரில் வைத்து வைத்தியம் பார்க்கலாம். இங்கு இருக்க இருக்க உன் நினைப்பாகவே இருக்கிறாள். புது இடம், புது மனிதர்களை சந்தித்தால் அவள் மனமும் கொஞ்சம் புத்துணர்ச்சி அடையும். அதற்கு ஏற்பாடு செய்தால் என்ன?”
அவர் கூறுவதும் சரி என்றுபட அதற்கு ஒப்புக்கொண்டான்.
“ஆனால் என்னையும் கூப்பிடுவாளே. இப்பொழுதே சொல்லி விடுகிறேன் என்னாலெல்லாம் அனுவை இப்படி விட்டு விட்டு வர முடியாது.”  
“டேய்… உன்னை என்ன பெண்டாட்டியை விட்டுவிட்டு நிலாவுடன் வாழு என்றா சொல்கிறேன். சில நாட்களுக்கு  எங்களுடன் வெளியூரில் இரு என்று தானே சொல்கிறேன். அதெல்லாம் உன் பெண்டாட்டி தனியாக இருந்து விடுவாள். ஏதோ அவள் சிறு பிள்ளை போல் பதறுகிறாய். ஊரில் உனக்கு மட்டும் தான் திருமணம் ஆகி இருக்கிறது பார். உன் அப்பாவெல்லாம் நம்மை வருட கணக்கில் தனியாக விட்டு வெளியூரில் வேலை செய்திருக்கிறார்.” என்றார் சற்று கடுப்பு கலந்த ஏலனத்துடன்.
தன் மகன் தன் குடும்ப வாழ்வில் சந்தோசமாக இருந்தாலும் ஒரு ஓரத்தில் தன் மகன் எங்கு தன்னை விட்டு தூர போகி விடுவானோ என்ற பயம் தாயுள்ளத்தில் இருக்கும். எப்படி ஒரு பெண் திருமணமாகி வேறு வீட்டிற்கு செல்லும் போது தாய், தந்தை அவளை இனி தான் உரிமை கொண்டாட முடியாது என்று எண்ணுகிறார்களோ அதே போல் தான் மகனுக்கு திருமணமானாலும். தனக்கென்று ஒரு குடும்பம் என்றான பின்பு தன்னை இதுவரை சுற்றிச் சுற்றி வந்த தன் புதல்வன் மனைவியிடம் எல்லாவற்றிற்கும் மன்றாடுவது ஒரு வித வெற்றிடத்தை உருவாகும். அதை கையாள தெரியாமல் சற்று தடுமாறுவதே மாமியார், மருமகளுக்கு இடையில் வரும் சண்டை. அதுவும் இங்கு ஆதி ஒற்றை பிள்ளை ஆயிற்று, ரேகா இதை எப்படி சமாளிக்கிறார் என்று பார்ப்போம்.
“அது போல் நடக்கக்கூடாது என்று விரும்புகிறேன். நீங்கள் எப்படி என்னை வைத்துக் கொண்டு தனியாக அப்பா இல்லாமல் கஷ்டப்பட்டீர்களோ அந்த நிலை அனுவிற்கும் வரவிடக்கூடாது என்பதில் நான் தெளிவாய் இருக்கிறேன்.” என்றான் அவர் கண்களை நேராக பார்த்தபடி.
“இதெல்லாம் நடக்கின்ற விஷயமா? நாளை உனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கிறது அவளை உன்னுடன் அங்கு அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலை, அப்பொழுது என்ன செய்வாய்?” தன் மகன் முன் தன் வீம்பை விட்டுத் தரக்கூடாது என்ற கர்வத்தில் வார்த்தைகளை விட்டார் ரேகா.
“என்னால் முடிந்த அளவு அவளை தனியே விடமாட்டேன். மற்றதை காலம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். நாளை என்ன நடக்கப்போகிறது என்று நினைத்து, கணித்து ஒவ்வொரு நொடியும் வாழ முடியாது” என்றான் ஏதோ இது போன்ற சூழ்நிலை பிற்காலத்தில் வரும் என்று கணித்தவன் போல்.
“என்னவோ செய்… நான் அவளிடம் வேறு மாதிரி சொல்லி இங்கிருந்து அழைத்துச் செல்கிறேன். மற்றதை உமா பார்த்துக் கொள்வாள். அவளிடமும் சற்று சேர்த்து சொல்லி இருக்கிறேன். நிலா சரியானால் எல்லாம் சரியாகிவிடும்.” என்றவர் ஆதியிடம் மற்ற விவரங்களை சொல்லிவிட்டு தங்களை வீட்டில் விட்டுவிட சொன்னார். 
அதுவரை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த அனு, “ஓ… நிலா அக்கா சம்மதம் சொன்னார்களா?” என்று வினவினாள் துணிகளை அடுக்கியபடி.
“ம்ம்… சில பல பொய்களைக் கூறி சம்மதிக்க வைத்துவிட்டேன்.” 
அந்த பொய்களில் சில, அனுவை ஒரு நல்ல ஹோமில் சீக்கிரம் சேர்த்து விட்டு நிலாவுடன் வருவதும் அடக்கம்.
“சரி… அப்பொழுது அத்தை நம்மை ஏற்றுக் கொண்டார்களா?” என்றவள் குரலில் ஆர்வம், ஏக்கம் தேங்கி நின்றது.
“கொஞ்சமே கொஞ்சம்… முன்னே இருந்த வெறுப்பு குறைந்திருகிறது. நிலா சரி ஆகட்டும் நானே அம்மாவிடம் பேசுகிறேன்.” என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைக்க அதில் அனு கரைய அவன் தன் நிதானத்தை இழக்கவில்லை.
“ம்… எங்காவது வெளியில் போகலாமா? நேற்றே நீ படம் பார்க்க ஆசைபட்டாய்.”
“வேண்டாம்…” என்றவள் தன் பரீட்சைக்கு படிக்க வேண்டும் என்று கூற, அவனும் அவளுக்கு உதவினான்.
படிப்பின் இடையினூடே அவனை நோக்கியவள், “ஆங்… சொல்ல மறந்து விட்டேனே… எனக்கு புது போன் வேண்டும். அன்றைக்கு நீங்கள் இருந்திருந்தால் அந்த போன் பிழைத்திருக்கும்.” என்று கடைசியில் கேலியாய் உச்சி கொட்டினாள் அனு.
“ஏன்? அதை உடைப்பதிற்கு பதில் என்னை அடித்திருப்பாயோ…!?” என்று விழிகளை விரித்து பதறியவனை பார்த்தவளுக்கு சிரிப்பு முட்டியது. அவன் முகபாவனையும் அவளை கட்டி இழுக்க,
“என் செல்லம் மாமா நீ…” என்று அவன் கன்னம் கிள்ளி தன் குவிந்த விரல்களுக்கு முத்தமிட்டாள்.
அவள் செயலில் அவன் உதடு மென்னகை பூக்க, தன் மறுகன்னத்தையும் காண்பித்தான். அதை தாங்கியவள் நாணத்தோடு அவன் கண்களை தன் கைகளால் மறைத்து இதழ் பதித்தாள்.
அவள் தன் கண்களை பொத்தியதில் வியந்தவன், “இதென்ன புதிதாக வெட்கம்!” என்று அவள் கைகளை விலக்க தன் முகத்தை காட்டாமல் அவன் தோளில் முகம் புதைத்தாள் அனு.
“அதெல்லாம் அப்படித் தான். பெண்களின் உணர்வுகளின் இரு மிகப்பெரிய வெளிப்பாடு வெட்கம் மற்றும் அழுகை. இதற்கெல்லாம் நீங்கள் காரணம் கேட்கக்கூடாது.” என்றுவிட்டு சலுகையாய் அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள். தன் போக்கில் அவன் கரங்களும் அவளை சுற்றின.
“ஏன் போனை உடைத்தாய்? இன்னும் நீ அதற்கான காரணத்தை கூறவில்லையே…” என்று அடுத்த விஷயத்தை அவன் வினவவும் அன்று நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள் அனு.
“என்ன தைரியம் அவர்களுக்கு… உன் அப்பாவிற்கு கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லை… ச்ச… நீ கரெக்டாக தான் செய்திருக்கிறாய் பேபி. இதற்கு நீ எவ்வளவு போன் கேட்டாலும் வாங்கித் தருவேன்.” என்றவன் அதற்கு பரிசாய் அழுந்த தன் முத்திரையை பதித்தான்.
“இன்னொரு நாள் உன் சித்தியை போய் பார்த்து வரலாம். அன்று சரியாக முகத்தை கூட பார்க்கவில்லை.” என்ற வருத்தத்துடன் அந்நாள் நிறைவுற்றது.
இப்படியே நாட்கள் தன் போக்கில் யாருக்கும் நிற்காமல் ஓட, நிலாவை பெங்களூருக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து சீரான இடைவெளியில் அவளுக்கு கவுன்சலிங் கொடுக்கப்பட்டது. இடைஇடையில் ஆதி போனில் பேசி நலம் விசாரித்துக் கொண்டான். கயலுக்கு கால் பரிட்சை விடுமுறை விட்டதால் தன் போக்கிற்கு காதலை போனிலே வளர்த்தாள். அனுவும் படிப்பில் கவனம் செலுத்தியதால் கயலை கவனிக்க தவறி விட்டாள் என்பதை விட அவள் மேல் இருந்த நம்பிக்கையில் விட்டுவிட்டாள். அனு தன் பரிட்சைகளுக்கு ஆதி உதவியுடன் எப்படியோ படித்து வெற்றிகரமாக தேர்வு எழுதினாள்.
சிரத்தை எடுத்துக் கொண்டு இரவு அனுவிற்கு துணையாய் இருப்பது, சில நாட்கள் அவளுக்காக சீக்கிரம் எழுந்து காபி போட்டு தருவது, தினமும் அவளை எக்ஸாம் சென்டருக்கு அழைத்துச் சென்று வருவது, ஒரு வருடம் இடைவெளி விழுந்ததால் படிப்பில் ஏற்பட்ட தடுமாற்றத்தை சரி செய்து, ஊக்கம் அளித்து ஒவ்வொரு முறையும் துவண்டவளை மேலே தூக்கி எழுப்புவது என அவளுக்கு தூணாக மாறினான் ஆதி. 
“நான்கு நாட்கள் பண்டிகை விடுமுறை வருகிறதே… என்ன பிளான்?” என்று கேள்வி எழுப்பியபடியே ஆதி பக்கத்தில் வந்து அமர்ந்தான் முரளி. 
“இரண்டு நாள் அப்படியே ஊட்டி போய் வரலாம் என்றிருக்கிறேன். அனு ஃபிரீ ஆகிவிட்டாள். கயலுக்கும் அடுத்த வாரம் பள்ளி ஆரம்பித்துவிடும். நிலாவும் பதினைந்து நாளில் வருகிறாள். அவள் வந்தால் தான் அவள் நிலை தெரியும். அதற்குள்…” 
“கொஞ்சம் ரொமான்ஸ் செய்யப் போகிறாய்…” என்று முடித்தான் முரளி.
“ஏன்டா… நீ வேற… இங்க ஒன்றுக்கும் வழி இல்லை இப்போது வந்து…” என்று பல்லைக் கடித்தவனை வினோதமாக பார்த்தான் முரளி.
“என்னடா… ஏதாவது பிராப்ளமா? உன்னையும் சிஸ்டெரையும் பார்த்தால் அப்படி தெரியவில்லையே…” என்றவன் தீவிரமாக கேட்கிறானா இல்லை கேலி செய்தானா என்பது முரளிக்கே வெளிச்சம்.
“அதெல்லாம் ஒன்றும் இல்லை… நீ ஏதோ முக்கிய விஷயம் என்று கூறினாய் அது என்ன?” என்று பேச்சை மாற்றினான் ஆதி.
“என்ன முக்கிய விஷயம்?” என்று முரளி தன் மூளையை அலசும் அளவிற்கு அந்த விஷயத்தை மறந்து விட்டான். பாவம் அவன் என்ன செய்வான் அவன் பேச வரும் போதெல்லாம் ஆதி ஏதோ சொல்லி தட்டிக்கழிக்க அதை மறந்தே விட்டான் முரளி.
“நல்லா வருவடா… நீ…” என்று வலிக்காமல் முரளி தலையில் கொட்டு வைக்க,
“நியாபகம் வந்து விட்டது. எல்லாம் உன் அருமை கொளுந்தியாள் பற்றி தான்…” என்று முரளி இழுக்க ஆதி குழம்பினான்

Advertisement