Advertisement

பகுதி – 22
தன் பெயரை முதன்முதலாய் அவள் குரலில் கேட்டதும் தன் கோபமெல்லாம் எங்கோ பறந்தோடிய உணர்வு.
‘ம்ம்…’ என்று கண்களை திறவாமல் முணுகியவனை பார்த்தவளுக்கு வெற்றிப் புன்னகை அரும்பியது.
“என் மேல் கோபமா?” என்று மீண்டும் அவன் காதுகளில் அவள் முணுக அதற்கும் ம்… போட்டான். போடுவதை தவிர வேறெதுவும் செய்யும் நிலையில் அவன் இல்லை என்றே சொல்லவேண்டும்.
“ஏன்?”…
“எதற்கு நீ அவளை இங்கே தங்க வைத்தாய்? நான் தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என்றேனே? பிறகு ஏன் வேலியில் போகின்ற ஓநாயை எடுத்து வேட்டியில் விட்ட கதையாய் மொத்த குடும்பத்தையும் இங்கே தங்க வைத்தாய்? நிலாவின் உடல் நிலையை காரணம் காட்டி அவளை இங்கேயே டேரா போட வைக்க போகிறார்கள். அவர்களுக்கு என்ன சேவகம் செய்ய போகிறாயா?” என்றான் எரிச்சலுடன்.
“இல்லை… அது வந்து…” என்று அனு வார்த்தைகளை அளக்க அவளை தன் மேல் உருட்டி முன்னால் இழுத்தான்.
“ஆ… என்ன நீங்கள்?” என்று பதறியவள் சற்று எம்பி யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க அவள் கண்கள் ரூம் கதவோரத்தில் நின்ற ஒரு உருவத்தை பார்க்கத் தவறியது.
அவளை மீண்டும் தன் மேல் இழுத்துப் போட்டவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தினான்.
“அவர்கள் சொன்னதையெல்லாம் மறந்து விடு. நாளை அவர்களை அனுப்பி விடலாம். நீ உன் எக்ஸாமிற்கு படி. அடுத்த வாரம் உனக்கு பரிட்சை இருக்கிறது தானே? தேவையில்லாததை போட்டு மனதில் உழம்பாதே.” என்று அவள் காதுகளில் ரகசியம் போல் பேச, இதை பார்த்துக் கொண்டிருந்தவற்கு ஒன்றும் புரியவில்லை.
“என் படிப்பை பற்றி பயப்படாதீர்கள். நான் படித்து விடுவேன். அதெப்படி அவர்களை அப்படியே அனுப்புவது… ஏதோ ஒரு முறையில் நாமும் நிலா அக்கா நிலைமைக்கு காரணம். இவ்வளவு வருடம் அவர்களுடன் பழகியும் நீங்கள் அவரை சரியாக புரிந்து கொள்ளவில்லை. தங்கை போல் நீங்கள் பார்த்தால் மட்டும் போதாது, அக்காவின் நடவடிக்கையிலும் கண்டிப்பாக மாற்றம் தெரிந்திருக்கும் நீங்கள் கவனிக்க தவறிவிட்டீர்கள். ஆகையால் அவரை சரிசெய்வதில் நமக்கும் பங்கு இருக்கிறது.”
“சரிங்க பாட்டிமா…” என்று அவன் சத்தமில்லாமல்  குலுங்கி சிரிக்க, விளையாட்டாய் அவன் கையில் ஒரு அடி போட்டாள்.
“ஆனாலும் உனக்கு கை நீளம்டி… ஆ, ஊவென்றால் அடிக்க கை ஓங்குகிறாய்.” என்றான் கைகளை தேய்த்து நாடகமாடி.
அவனை புரிந்தவள், “உங்கள் நடிப்பெல்லாம் இங்கு செல்லாது.” என்று சிரித்தாள்.
அவள் நெருக்கத்தில் தடுமாற ஆரம்பித்தவன் அவளை சீண்ட நினைக்க,
“என்னை என்னவென்று கூப்பிட்டாய்? மறுபடி கூப்பிடு…” என்றவனின் பேச்சில் குறும்பு தெறிக்க அனுவிற்கு வெட்கம் பீறிட்டு வெளியேறியது.
இருட்டில் அவள் செம்மேனி தெளிவாக தெரியவில்லை என்றாலும் அவள் கன்னக்கதுப்பே அவள் நிலையை உணர்த்தியது அவனுக்கு.
“இன்னொரு முறை கூப்பிடு…” என்றவன் கெஞ்ச, முடியாது என்று மறுத்து அவன் மார்பில் முகம் புதைத்தாள் அனு.
“ஏய்… ப்ளீஸ்… ஒரு முறை டார்லிங்…” என்று மீண்டும் கொஞ்ச ஏமாற்றமே மிச்சம்.
“கோல்டன் ஆஃபர் ஒரு முறை மட்டும் தான்.” என்ற பதிலே கிடைத்தது .
“என்னை இவ்வளவு கெஞ்ச விடுகிறாய் அல்லவா பார்த்துக் கொண்டே இரு, ஒரு நாள் நீ என் பெயர் சொல்லி கூப்பிட்டும் பொழுது அதை கேட்க நான் இருக்க மாட்டேன்.” என்று அவன் விளையாட்டாய் சொல்ல வினையாய் முடிந்தது.
“ஏன் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்?” என்றவள் கண்ணில் கண்ணீர் துளிர்விட அவள் கரங்கள் அவனை ஒரு வழி ஆக்கிவிட்டது. அதன் பின் தான் உணர்ந்தான் அவள் தன் வார்த்தைகளை தவறாக எடுத்தக் கொண்டாளேன்று.
“அய்யோ… போதும் மகராசியே… இருட்டில் உன் கை போன போக்கில் அடிக்கிறாய்… என் மூக்குடி…”என்று அவன் தன் குரலை உயர்த்த அவன் வாயை பொற்றினாள்.
“பின் ஏன் அப்படி பேசினீர்கள்?” என்றாள் மூக்கை உறுஞ்சியபடி.
“நான் தூங்கும் போது கூப்பிட்டால் அதை உணரும் நிலையில் நான் இருக்க மாட்டேன் என்றேன். நீ ஏதோ கற்பனை செய்துகொண்டு என்னை தண்டிக்கிறாய்.” என்று ஏதோ கூறி சமாளித்தான்.
சில நிமிடங்கள் தங்கள் அணைப்பிலேயே இருந்தவர்கள், அனுவின் மறுப்பில் வெளிவந்தனர்.
“நகருங்கள்… எனக்கு தூக்கம் வருகிறது. நீங்களும் காலை சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்.” என்றவள் விலகி தன் புறம் படுத்தாள்.
“நான் ஏன் சீக்கிரம் எழும்ப வேண்டும்?” என்றான் அவள் முகம் நோக்கி திரும்பி.
“கலைந்த துணிகளை மடிக்க வேண்டுமல்லவா?” என மிகச்சாதாரணமாக கூறியவள் அவனுக்கும்  போர்த்திவிட்டாள்.
“எந்த துணி?” என்று அவன் தலையை சொரிய, “நேற்று நான் கலைத்த உங்கள் துணி.” என்றாள் அனு.
‘அடிப்பாவி…’ என்று மனதில் நினைத்தவன் அவளை கட்டி அணைத்து தூங்கினான், வேறு என்ன செய்ய? மனைவி தன் மேல் உரிமையெடுப்பது அவனுக்கு பிடித்திருந்தது. அவன் அணைப்பை உடைக்க முயற்சித்து தோற்று உறங்கிப் போனாள் அனு.
அதுவரை அவர்கள் சம்பாஷனையை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த இரு கண்களில் ஒரு தெளிவு பிறந்திருந்தது.
“ரேகா… இந்த நேரத்தில் என்ன செய்கிறாய்?” என்ற கோபாலின் சத்தத்தில் தம் நினைவு விடுத்து உள்ளே சென்றார் ரேகா. ஆம் இவ்வளவு நேரம் தன் மகன் மற்றும் மருமகளை பார்த்துக் கொண்டிருந்தது ரேகா தான்.
… 
மதி மறைந்து சுடர்கள் படர வெளிச்சத்தில் மெல்ல கண் திறந்தாள் அனு. இரவு எப்படி உறங்கினார்களோ அதை விட நெருக்கம் அதிகமாகி இருக்க முறுவல் துளிர்த்தது அவள் இதழில்.
கண்களை இரு நிமிடம் மூடியவள் அவனுள் புதைய எத்தனித்த நேரம் படாரென கண்ணை திறந்தாள் ஏதோ நினைவு வந்து. கண்ணை விரித்து தன் விழிகளை பின் நோக்கி சுழற்ற அங்கு அவர்களை வெறித்தப்படி அமர்ந்திருந்தாள் நிலா.
பதறியடித்து எழுந்திருக்க நினைத்த அனுவை தடுத்தது அவள் இடையில் பரவியிருந்த ஆதியின் கரம். அவன் தடுப்பையும், நிலாவையுமே மாறி மாறி அனு நோக்க ஆதியை எழுப்ப முயன்றாள்.
என்று அவன் சீக்கிரம் விழித்திருக்கிறான் இன்று விழிக்க? மனதில் அவனை வசை பாடியவள் அவன் கரத்தை வேகமாக உதறிவிட அசையாமல் தன் வேலையே கருமம் என்று தூங்கிக் கொண்டிருந்தான் ஆதி.
இவள் எழுந்து நிலாவிடம் திரும்பி, “உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என்று கேட்க அவள் கூறிய பதில் ஏன் இவளை கேட்டோம் என்றாக்கியது.
“என் அத்தான் வேண்டும், தருவாயா?” என்று எந்த ஒரு உணர்வும் இல்லாமல் கேட்டாள் நிலா.
“அது முடியாது…” என்று அனு மறுத்த மறுநொடி இன்னொரு குரல் “முடியாது” என்றது.
இருவரும் குரல் வந்த திசையில் திரும்ப அங்கு ரேகா தான் தன் அக்மார்க் இறுகிய வதனத்துடன் நின்றிருந்தார்.
“அத்தை…” என்று இருவருமே கூப்பிட நிலா அருகில் வந்தார்.
“நான் உன்னிடம் பேச வேண்டும். வா…” என்று நிலாவை மட்டும் உள்ளே அறைக்குள் அழைத்துச் சென்றார்.
அவர்களையே வெறித்து நோக்கிய அனு என்ன செய்வது என்று தெரியாமல் தன் அன்றாட வெளியை கவனிக்கச் சென்றாள்.
“என்ன பேச வேண்டும் அத்தை?” என்று வினவினாள் உள்ளே வந்த மறு நிமிடம். இவர்கள் சத்தம் கேட்டு உமாவும், அவர் கணவரும் சேர்ந்து கொண்டனர்.
“நீ நினைப்பது நடக்காது நிலா. குறைந்த நாட்களிலேயே அவளிடம் பிரிக்க முடியாத அளவிற்கு ஆதி ஒட்டிக்கொண்டான். நீ அனுவை எந்த அளவிற்கு வெறுக்கிறாயோ அதற்கு மேல் அவன் அவளிடம் ஒன்றி இருக்கிறான். அவனை நீ நெருங்க நெருங்க உன்னிடமிருந்து அவன் விலகிக் கொண்டிருக்கிறான்.” என்ற ரேகாவின் விழிகளில் எதையோ தேடினாள் நிலா. அது தனக்காக அவர் எந்த அளவிற்கு உதவுகிறார் என்பது தான்.
“என்ன செய்யலாம் என்கிறீர்கள்?” என்று நிலா வினவ உமா ஆர்வமாக ரேகாவையே பார்த்தார். அவருக்கு தன் பெண் சரியாக வேண்டும் அவ்வளவே.
“இப்பொழுது இங்கிருந்து கிளம்பலாம். இங்கிருக்கும் வரை ஆதி உன்னிடம் வர மாட்டேன். அனுவை பகைக்காதே. நான் சொல்வதை கேள், உன் வாழ்க்கைக்கு நான் கேரன்டீ.” என்றதும் சிறிது நேரம் யோசித்து விட்டு அதற்கு சம்மதித்தனர் நிலா குடும்பத்தினர்.
காலை முதலே பரபரப்பாக காணப்பட்ட வீட்டில் நிலா, உமா, ரேகா ரூமில் அடைந்திருக்க, கயல் பள்ளிக்கு கிளம்பினாள். ஆதி ஆஃபீஸ்க்கு விடுப்பு எடுத்திருந்தான்.
“நான் வேண்டுமென்றால் உனக்கு உதவவா?” என்று கேட்டபடியே கிட்சனில் நுழைந்தார் கோபால்.
“அய்யோ… மாமா அதெல்லாம் வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்கு என்ன வேண்டுமென்று சொல்லுங்கள்.”
“உனக்கு அடுத்த வாரம் பரிட்சையென்று ஆதி சொன்னான். வேண்டுமென்றால் வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக் கொள். நான் அவனிடம் பேசுகிறேன்.” என்று தன்மையாய் சொல்ல,
“இல்லை வேண்டாம் மாமா… மூவர் தானே நானே பார்த்துக் கொள்கிறேன்.” என்று இவர்கள் இங்கு பேச அங்கு ஆதியிடம் ஏதோ தனியாக பேசினார் ரேகா.
“நான் சொன்னது நன்றாக நினைவில் வைத்துக்கொள். இப்பொழுது எங்களை வந்து வீட்டில் விடு.” என்று அவர்களின் உரையாடலின் கடைசியில் ஆதியிடம் கட்டளை இட்டார் ரேகா.
சில நிமிடங்களில் கோபாலும் வெளியில் செல்ல அனுவை கூப்பிட்டான் ஆதி.
“நான் அவர்களை வீட்டில் விட்டு வருகிறேன்.” என்று கூறிவிட்டு செல்ல கோபால் மட்டும் அவளிடம் பிறகு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
அனுவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை. நிலா பேசிய பேச்சுக்கு குறைந்தது ஒரு மாதமாவது இங்கேயே ஆதிக்காக தங்குவாள் என்று கணக்கு போட்டிருந்தாள் அனு. ஆனால் அவள் இப்படி அடம் பிடிக்காமல் சென்றது ஆச்சர்யமளித்தது. அதை விட வியக்க வைத்த விஷயம் என்னவென்றால் தன் மாமியாரின் பதில். நேற்று வரை ஆதிக்கு நிலாவை திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னவர் இன்று நிலா ஆதி வேண்டும் என்று கேட்டவுடன் முடியாது என்று மறுப்பு தெரிவித்தது. அப்படி என்றால் தன்னை ஏற்றுக்கொண்டாரோ என்று அவள் மனம் துள்ளியது.
குழப்பத்தில் வீடை சுத்தம் செய்தவள் சில மணி நேரம் கழித்து அழைப்பு மணி ரீங்காரமிட கதவை திறந்தால் ஆதி புன்னகையோடு ரோஜா போக்கே மற்றும் தன் உயரம் உள்ள பெரிய பார்சலோடு நின்றான்.
“என்ன இது?”
பதில் கூறாமல் பொக்கேவை நீட்டவும் வாங்கியவளிடம் அந்த பெரிய பார்சலையும் நீட்டினான்.
“என்ன கனமாக இருக்கிறது?” என்றபடியே ரோஜாவை ஒரு கையிலும் பார்சலை மற்றொரு கையிலும் பிடித்தாள்.
“பிரித்து பார்…” என்று அவளுக்கு உதவ அதை பிரித்த அனுவிற்கு இன்ப அதிர்ச்சி. அதில் அவளுக்கு பிடித்த டெடி பியர் இருந்தது.
“இவ்வளவு பெரிதாக உள்ளது… சாப்டாக இருக்கு.” என்று சிலாகித்து அதனை கட்டி அணைத்துக் கொண்டவளின் முகத்தில் புன்னகை புகுந்து விளையாடியது.
“ஹலோ… மேடம்… அதை வாங்கி வந்த எனக்கு எதுவும் கிடையாதா?” என்ற ஏக்க குரலை கேட்டதும் டெடியை விட்டு விட்டு அவனை கட்டிக்கொண்டாள்.
அவள் முகத்தில் இருந்த மலர்ச்சியை பார்த்தவன் அவளை தூக்கி தட்டமாலை சுற்ற, “நிலா இனி நம் வாழ்வில் வரமாட்டாள்.” என்றபடியே தன் இதழை கிடைத்த இடத்தில் பதித்தான்.

Advertisement