Advertisement

பகுதி – 21
“என்ன…?” என்று ஆதியும், கோபாலும் சேர்ந்து அதிர  ரேகா இருவரையும் முறைத்தார்.
“நிலா இதெல்லாம் தவறு. வேண்டுமென்றால் அங்கு வந்து இரு, இங்கு எதற்கு?” என்றார் கோபால் முன்னெச்சரிக்கையாக.
“அத்தான் எங்கு இருக்கிறாரோ அங்கு தான் நானும்  இருப்பேன். இனியும் நீங்கள் என்னை ஏமாற்றமுடியாது.” என்றாள் நிலா தீர்க்கமாக.
“உமா… என்ன இதை எல்லாம் நீ கேட்க மாட்டாயா?” என்று தன் தங்கையை கடிந்தார் கோபால்.
“இதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது… உங்கள் மகனால் தான் என் பெண் இப்படி பித்து பிடித்தாற் போல் இருக்கிறாள்.” என்று உமா மூக்கை உறிஞ்ச அனு குறுகிட்டாள்.
“அக்கா ஆசைப்பட்டால் அவர் சரியாகும் வரை இங்கேயே இருக்கட்டும். நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று அனு கரிசனம் காட்டி தன் கணவனின் கோபத்திற்கு ஆளானாள்.
“நீ கொஞ்சம் அமைதியாக இருக்கிறாயா?” என்று ஆதி கண்டிக்க அனு அவனை மேலும் கோபப்படுத்த விரும்பாமல் கப்சிப் என்றாகிவிட்டாள்.
“அவளே ஒத்துக் கொண்ட பிறகு உனக்கு என்ன பிரச்சனை?” என்று ரேகா குறுக்கிட தன் பங்கிற்கு ஆதியின் மாமாவும் குறுகிட்டார்.
“நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது… ஒன்று என் மகளை ஆதிக்கு திருமணம் செய்து வையுங்கள் இல்லை அவளை குணப்படுத்தி நல்ல மனநிலைக்கு கொண்டுவாருங்கள். இதற்கெல்லாம் முழு காரணம் உங்கள் குடும்பம் தான்.” என்று அவர் கோபாலிடன் சாட ஆதிக்கு சினம் ஜிவ்வென்று ஏறியது.
“நானும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன், நீங்கள் என்னவோ இதெல்லாவற்றிற்கும் காரணம் நானும் என் குடும்பமும் என்கிறீர்கள். இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன், என்றாவது நான் நிலாவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்கு கொடுத்தேனா? இல்லை அப்படி நம்ப வைத்து ஏமாற்றினேனா? எந்த ஒரு நேரத்திலும் நானோ என் குடும்பத்தில் உள்ளவர்களோ ‘நீ தான் இந்த குடும்பத்தின் மருமகள்’ என்று நிலாவிடம் கூறவும் இல்லை. நீங்களாக அவள் மனதில் ஆசையை வளர்த்துவிட்டு இன்று எங்கள் மேல் பழி போடுகிறீர்கள்.” என்று ஆதி தன் பங்கிற்கு கோபத்தில் ஏகிற அங்குள்ளவர்களின் முகம் அஷ்டகோணலாகியது.
“பார்த்தீர்களா அண்ணி… என்றும் சொல் பேச்சு கேட்கும் பிள்ளையாக இருந்தவன் இன்று எப்படி பேசுகிறானென்று? நீங்கள் சொல்லவில்லை ‘நிலா தான் என் வீட்டு மருமகளென்று?’ அதை கேட்டு ஏமார்ந்து விட்டேன்.” என்றார் உமா கண்ணை கசக்கியபடி.
“அத்தை… அம்மா ஒன்றும் உங்களைப் போல் நிலா சிறு பிள்ளையாய் இருக்கும் போதிலிருந்தே சொல்லவில்லையே. இன்னும் தெளிவாக சொன்னால் நான் திருமணம் செய்த பிறகு தான் அவர்கள் ஆசையை வெளியில் சொன்னார்கள்.” என்று தன் தாயிற்கு ஆதி வக்காலத்து வாங்க வீடே கோப அனலில் தெறித்தது.
இங்கு இவர்கள் இப்படி சண்டையிட நிலா தன் கால் போன போக்கில் வீடை சுற்ற காலையில் எடுத்துக் கொண்ட ஸ்லீப்பிங் பில்ஸ் வேலையை காட்டியது. தூக்கம் வரவில்லை என்றாலும் தலை சுற்றுவது, பார்வையில் தெளிவின்மை என்று அவதிபட, கிடைத்த ரூமில் கட்டிலில் சரிந்தாள்.
கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை புரிய ஆரம்பித்த கயலிற்கு எங்கு ஆதியின் பெற்றோர் அவரை தன்னுடன் கூட்டி சென்று விடுவார்களோ என்று படபடக்க தன் அக்கா வலிந்து தனக்கு சக்காலத்தி ஆக துடிக்கும் நிலாவை தான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூற இன்னும் கடுப்பானாள்.
அதுவரை அமைதி காத்த ரேகா இப்படியே இது தொடர்ந்தால் இரு வீட்டின் உறவும் எலியும் பூனையும் போல் ஆகிவிடும் என்பதை உணர்ந்தார், “இப்பொழுது என்ன செய்யலாம் என்கிறாய்?” என்றார் ஆதியிடம் திரும்பி.
அனுவின் கரம் தன் தோளில் அழுந்தவும் சற்று அமைதியானவன் ஒரு பெருமூச்சை வெளியேற்றி தன் முடிவை தெரிவித்தான், “அவளை இப்பொழுது உங்கள் வீட்டிற்கு கூட்டி போங்கள் அத்தை. மற்றதை பிறகு பேசிக் கொள்ளலாம்.”
“முடியாது… இப்படி தான் நீ முதலில் அவள் மருத்துவமனையில் இருந்த போது கூறினாய். பின் என்ன செய்தாய்?… இங்கு வந்து உன் வாழ்க்கையை மட்டும் பார்த்துக் கொண்டு என் மகளை நட்டாற்றில் விட்டு விட்டாய்.” என்று மீண்டும் உமா மூக்கை உறிஞ்ச ஆதிக்கு மட்டுமில்லை அவன் பெற்றோருக்கும் கடுப்பேரியது.
இந்த முறை ரேகாவிற்கே உமா பேசியது பிடிக்கவில்லை. தன் மகன் மேல் வருத்தம் இருந்தாலும் அவன் சந்தோசமாக இருப்பதை உமாவாள் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பது தெரிந்ததுமே உமா சுயனலமாக யோசிக்கிறாளோ என்று தோன்றியது. தாயுள்ளம் என்றுமே தம் பிள்ளைகளுக்கு கெடுதல் நினைக்காது. என்றாவது அவர்கள் ஈகோ அவர்கள் கண்ணை மறைத்தாலும் என்றுமே தன் பிள்ளைகளுக்கு கெடுதல் நினைக்கமாட்டார்கள்… நினைப்பவர்களையும் ஒதுக்கி விடுவார்கள்… இல்லை அவர்களிடமிருந்து தன்னால் முடிந்த அளவு தம் உயிர்களை காப்பார்கள்.
“ஆமாம்… நேற்று அவளை பாதியில் விட்டு வந்துவிட்டாய். இன்று உன்னை தேடும் பொழுது போனை எடுக்காமல் பார்ட்டி கொண்டாடுகிறாய். அவள் எப்படி போனால் உனக்கென்ன… அப்படித்தானே?” என்றார் உமாவிற்கு ஆதரவாக அவரின் கணவர்.
“அப்படியெல்லாம் இல்லை… நீங்கள் அவரை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் மாமா… இன்று நடந்தது…” என்று அனு ஆதிக்கு பரிந்து பேச அதை கை நீட்டி தடுத்தார் உமா.
தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் தன்னவனை அனைவரும் குற்றம் சாட அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எப்படி இருந்தாலும் நிலாவை சரி செய்வது மட்டுமே இப்பொழுது முக்கியம் என்று எண்ணினாள் அனு.
“நீ பேசாதே… உன்னால் தான் எல்லாம் நடக்கிறது. தகுதிக்கு ஏத்தாற்போல் ஆசைபட வேண்டும். ஏதோ உனக்கு உதவும் நோக்கில் அவன் தாலி கட்டினான் என்றால் நீ அதற்கு மரியாதை கொடுத்து அவனை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவனை பேசவைத்து வேடிக்கை பார்க்கிறாய்.” என்று உமா அனுவை நோக்கி விரல் நீட்டி தன் வஞ்சத்தை வெளிப்படுத்தினார்.
அனு கண்ணில் விழுந்து விடுவேன் என்று பயமுறுத்தியது அவள் கண்ணீர்.
“உமா… அவள் என் வீட்டு மருமகள். பார்த்துப் பேசு.” என்றார் கோபால் குறுக்கிட்டு.
“பார்… உன் மாமனார் கூட உன் பக்கம் தான். அப்படி என்னதான் இருக்கிறது இவளிடம்… ஜாக்கிறதையாய் இருங்கள் அண்ணி.” என்று உமா வெறுப்பை கக்க ஆதியால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.
“போதும் அத்தை… இதற்கு மேல் பேசாதீர்கள் தப்பாகி விடும்.” என்றவன் தன் கண்ணாலே தன் தந்தைக்கு ஜாடை காட்ட, ஏதோ குழப்பத்தில் இருந்த ரேகாவை தட்டி எழுப்பினார்.
“என்னதான் சொல்ல வருகிறாய்?” என்றவர் நிலாவை தேட அவள் கண்ணில் தென்படவில்லை அவள்.
“நிலா எங்கே?” என்று உமா ஹாலில் தன் பார்வையை செலுத்த அனைவரும் அப்போழுது தான் அவள் இல்லாததை கவனித்தனர்.
ஆதி வெளியில் சென்று தேட அனு உள்ளே தேடினாள். கயல் அவள் பின்னே பூனைக்குட்டி போல் அவள் கூடவே சென்றாள்.
“இங்கே இருக்கிறார்கள்.” என்ற அனுவின் குரலை கேட்டு அனைவரும் ரூமிற்கு வர அங்கு கலைந்து கிடந்த ஆதியின் துணிகளை பார்த்து அது அவன் ரூம் என்று தெரிந்து கொண்டார்கள்.
பதறி நிலாவை எழுப்ப அவள் அசரவில்லை. இது போல் ஏற்கனவே நடந்தமையால் அவளை அப்படியே விட்டுவிட்டனர், அவள் எழும்பும் வரை காத்திருக்கலாமென்று. உமாவும், ரேகாவும் கட்டிலில் அவள் தலை கோத மற்றவர்கள் அமைதியாய் நின்றனர்.
“வீட்டு வேலைக்காரிக்கே வீட்டை எப்படி வைத்துக்கொள்ள வேண்டுமென்று தெரியவில்லை.” என்றார் ரேகா அவன் கலைந்த துணிகளை காட்டி.
அதை பார்த்த ஆதிக்கு நேற்று இரவு அனு தன் துணிகளுடன் சண்டையிட்டது நினைவு வர புன்னகை அரும்பியது அவன் முகத்தில். இரவு அப்படியே தூங்க காலையும் அவளை அவசர படுத்தியதால் இதை ஒழுங்குபடுத்த அவளுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவன் முறுவலை இரு கண்கள் தவறாக எடுத்துக் கொண்டது. அதற்கு நேர்மாறாக திகைத்த அனு அவசர அவசரமாக அதை எடுத்து வார்டோபில் வைத்தாள்.
“இப்பொழுது என்ன இரவு முழுவதும் இங்கேயே இருக்கப் போகிறீர்களா? வேண்டுமென்றால் நான் அவளை வீட்டில் வந்து விடுகிறேன்.” என்று ஆதி கிளம்ப அவனை தடுத்தார் ரேகா,
“தூங்கி எழுந்தவுடன் உன்னை தேடுவாள் எங்களால் அவளை சமாளிக்க முடியாது.” என்று அவன் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டார்.
“இரவு இங்கேயே இருந்து விடுங்கள். அக்கா எழுந்தவுடன் மற்றதை பார்த்துக் கொள்ளலாம்.” என்ற அனு, ஆதியை கெஞ்சும் பார்வை பார்த்தாள்.
அவனும் வேறு வழி இல்லாமல் ஒற்றுக் கொள்ள இரவு அங்கேயே தங்கினர். அனு தான் உணவு தயாரித்து அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்தாள். பாரமுகமாய் தான் அவளை நடத்தினர் கோபாலை தவிர.
ரேகா, கோபால் கயல் அறையில் தங்க; நிலா பெற்றோர் நிலாவுடன் ஆதி ரூமில் தங்கினர். கோபால் கிளம்பலாம் என்று தான் நினைத்தார் தான், ஆனால் தன் மனைவியையும் தங்கையையும் அனு விஷயத்தில் நம்ப முடியாமல் அங்கேயே தங்கினார்.
இப்படி இவர்கள் ரூமை ஆக்கிரமிக்க நம் நாயகன், நாயகி அவள் தங்கை ஹாலில் பாய் விரித்து படுத்தனர். நேற்று அனு அவனுக்கு பாய் விரித்த போது முகம் சுளித்தவன் இன்று வேறு வழி இல்லாமல் கீழே படுத்தான்.
அவன் பக்கத்தில் படுத்த அனு, அப்பொழுது தான் நினைவு கூர்ந்தாள் ஆதி அவளிடம் வீட்டிற்கு வந்த பின் பேசவில்லையென்று. அவன் புறம் திரும்பினால் அவளுக்கு முதுகை காட்டிப் படுத்திருந்தான்.
கண்டிப்பாக ஏதோ கோபமாக இருக்கிறான் என்றுணர்ந்தவள் கயல் புறம் திரும்ப அவள் இழுத்து போர்த்தி தூங்கி விட்டாள். கயல் முகத்திற்கு எதிரே தன் தலையணையை தடுப்பு போல் அமைத்தவள் இவன் புறம் திரும்பி அவன் முதுகில் சுரண்டினாள்.
அதை கண்டுகொள்ளாதது போல் படுத்திருந்தவன் அவள் திரும்ப சுரண்டவும் தன் கோபம் மறைந்து வேறு உணர்வுகள் துளிர்விடுவதை உணர்ந்தான்.
“என் மேல் கோபமா?” என்று அவன் தோளில் கை வைத்து காது மடலில் மெலிதாக பேச உடல் சிலிர்ந்தான்.
கடினப்பட்டு அதை மறைத்து கண்களை இறுக மூடியவன் அவள் அடுத்து கூப்பிட்டதில் கரைந்தே விட்டான்.
“ஆ..தி…” என்று அவனை முதல் முதலில் பெயர் சொல்லி அழைக்க ஒவ்வொரு எழுத்தை உச்சரிக்கும் முன்பும் தன் இதழை அவன் மடலில் ஒற்றி எடுத்தாள் அனு. காதல் மழையில் நனைந்த இந்த ஜோடிகளை இரு கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன.

Advertisement