Advertisement

பகுதி – 20
உள்ளே கால் எடுத்து வைத்த நொடி பாப் மற்றும் பலூன் ஒன்று அவர்கள் இருவரின் மேல் வெடித்தது. அதில் பயந்த அனு கண்களை மூடி அவன் தோளில் முகம் புதைக்க அதில் சற்று பின் நோக்கி நகர்ந்தனர்.
வெல்கம் Mr. & Mrs. ஆதித்யா”  என்று சத்தமாக கத்தும் சத்தம் கேட்டு முகம் நிமிர்த்தியவள் தான் அறியா புது முகங்களை கண்டாள். கேள்வியாய் தன்னவனை நோக்க அவன் முகத்தில் புன்னகை வெடித்திருந்தது.
அவள் பார்வைக்கான புரிதல் உணர்ந்தவன் அவள் புறம் குனிந்து, “என்னுடன் வேலை பார்ப்பவர்கள். என் ப்ரொஜெக்ட் டீம்.” என்று பதிலளிக்க அவர்களை சூழ்ந்த்தனர் அவன் நண்பர்கள். அதில் சில பெண்களும் அடக்கம்.
என்னடா… உன் வைஃப் பலூன் சத்தத்திற்க்கெல்லாம் பயப்படுகிறார்கள். என்ன சொல்லி அவரை பயமுறுத்தி வைத்திருக்கிறாய்?” என்றாள் அங்கு இருந்த சௌமியா கண்களை உருட்டி.
நான் ஒன்றும் சொல்லவில்லை. நீ இப்படி முகம் முழுக்க கையில் கிடைத்த கிரீம், பவுடர், லோஷன் எல்லாம் பூசி வந்து கதவை திறந்ததும் முதல் ஆளாய் நின்றால் அவள் என்ன செய்வாள் ஏதோ பூதம் என்று பயந்திருப்பாள். பாவம் என் டார்லிங், போய் வேப்பிலை அடிக்க வேண்டும்.” என்றான் ஆதி அவள் தலையில் கொட்டியபடி.
அவன் வார்த்தைகளை கேட்டு பதறிய அனு, “அப்படி எல்லாம் இல்லை, தீடிரென சத்தம் கேட்டதால் பயந்து விட்டேன்.” என்றாள் படபடவென.
இட்ஸ் ஓகே… நாங்கள் எப்பொழுதும் இப்படித் தான். நீங்கள் இதை கண்டுக் கொள்ளாதீர்கள்.” என்று சௌமியா தலையை தேய்த்துக்கொண்டே நட்புக்கரம் வீச ஆதி ஓரமாய் நின்று கொண்டிருந்த முரளியை பார்த்தான்.
நீயாக பார்ட்டி தருகிற மாதிரி தெரியவில்லை. அதனால் நாங்களே வந்து விட்டோம். எல்லாம் வாங்கியாயிற்று உன் கார்டை மட்டும் கொடு.” என்று முரளி முன்னே வந்து ஆதி சுதாரிப்பதற்கு முன் அவனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த வேலட்டை எடுத்தான்.
டேய்… என்று ஆதி கத்த அதை கண்டுகொள்ளாமல் முரளி அவன் கிரெடிட் கார்டை எடுத்து தன் வேலட்டிற்குள் வைத்துக் கொண்டான். இதையெல்லாம் வாய் பிளந்து பார்த்து நின்றாள் அனு. ஏனோ கடவுள் தாய், தந்தை பாசத்தோடு சேர்த்து தோழி, தோழன் என்று பழக விடவில்லை. வேலை செய்யவே நேரம் சரியாக இருந்தது.
உங்கள் ப்ரோமென்ஸை அப்புறம் வைத்துக்கொள்ளுங்கள். முதலில் அவர்கள் உள்ளே வரட்டும்.” என்று மற்றொருவர் கூறவே உள்ளே வந்தனர்.
வீடு முழுக்க பலூன் மற்றும் பூக்களால் அலங்கரித்திருந்தனர். அதை பார்த்த அனுவிற்கு ஏதோ இந்தி சீரியல் வீட்டிற்குள் நுழைந்தது போல் இருந்தது.
ஆதிக்கு இது பெரிதாக வியப்பு தரவில்லை. ஏனென்றால் இது போல் தன் நண்பர்களுடன் சேர்ந்து அவனும் பல பார்ட்டிகள் கொண்டாடி இருக்கிறான். எப்படியும் ஒரு நாள் இவர்கள் வீட்டிற்கு வருவார்கள் என்றும் யூகித்திருந்தான்.
இது தான் அப்பா கூப்பிட்டதா?” என்ற கேள்வியுடன் ஆதி முரளி தோளில் கைபோட்டான்.
ஈஈ… கண்டுபிடித்துவிட்டாயா?” என்று முரளி பல்லை காண்பிக்க ஆதி அடுத்த கேள்வியை தொடுத்தான்.
இதில் எதற்கு கயலை உள்ளே இழுத்தாய்? அவள் எங்களுடனாவது வந்திருப்பாள். நீ அவளிடம் இங்கு வேலை வாங்கி இருப்பாய்.”
பாருடா… அக்கறைய… உன் கொளுந்தியாளை நான் ஒன்றும் வேலை வாங்கவில்லை அவளாகவே செய்தாள்.” என்று  முரளி பதிலளிக்க அடுத்த நொடியே சீரியசானவன், “நான் உன்னிடம் முக்கியமாக பேச வேண்டும்.” என்றான்.
அய்யோ… ஆளை விடுடா… போன முறை இப்படித்  தான் கூப்பிட்டு ஒரு குண்டை தூக்கி போட்டாய். அதுவே இன்னும் செயல் இழக்கவில்லை. அதற்குள் இன்னொன்றா??? வரவர நீ சீரியசாய் பேசினாலே எனக்கு பக்கென்று ஆகிவிடுகிறது.” என்றான் ஆதி பதறியடித்து.
ஹாஹா… நான் வேண்டுமென்றால் பாம் ஸ்குவாடை வர சொல்லவா…” என பதிலுக்கு முரளி நக்கலடிக்க அவன் முதுகிலே ஒன்று வைத்தான் ஆதி.
எங்கே இருந்துடா உனக்கு இந்த அடிக்கிற பழக்கம் எல்லாம் புதிதாக வருகிறது? எத்தனை நாள் கோபம் இது, சுள்லென்று அடித்துவிட்டாய்…” என்று முரளி தன் முதுகை தேய்க்க,
எல்லாம் உன் அருமை தங்கையிடம் தான்.” என்று கண்ணடிக்க மற்ற நண்பர்களும் சேர்ந்துக் கொண்டனர்.
இவர்கள் ஒரு புறம் அரட்டை அடிக்க மறுபுறம் அனுவுடன் கயல், செளயமியாவும் மற்ற பெண் தோழிகளும் கதைத்தனர்.
நான் கூட நிலாவை தான் இவன் திருமணம் செய்வான் என்று நினைத்தேன். அவர்கள் எப்பொழுதும் பெவிக்கால் போல் ஒட்டியே இருப்பர்.” என்று ஒருவள் கூற செளயமியா கண்ணாலே அவளை அடக்கினாள்.
அனு அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதை நேற்று இவர்கள் கூறி இருந்தால் மனம் நொந்திருப்பாள். ஆனால் இன்று தான் நிலாவை பற்றி முழுதும் தெரியுமேஇனி பயப்பட தேவை இல்லை என்று அதை விட்டு விட்டாள். கயல் தான் அதை மனதில் போட்டு உழம்பினாள்.
நீங்க லவ் மேரேஜ் என்று முரளி கூறினான். அப்போ ரொமேன்ஸ்லாம் ரொம்ப தூக்களோ… அதனால் தான் ஆதி சத்தம் இல்லாமல் திருமணம் முடித்து விட்டான்.” என்று செளயமியா கண்ணடிக்க அனு முகம் சிவந்தது மட்டுமில்லாமல் குழப்பத்தில் தலை அசைத்தாள், வேறு என்ன சொல்வது என்று தெரியாமல்.
அனைவரும் ஆதியின் திருமணம் பற்றி அவன் முகப்புத்தக பதிவேட்டில் தெரிந்து கொண்டு முரளியை நச்சரிக்க அவன் யாரிடமும் அசல் காரணத்தை கூறவில்லை. அவன் என்ன சொல்வான் அவனே அந்த திருமணத்தை பார்க்கவில்லை இருந்தாலும் வதந்திக்கு பயந்து அவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அனு வீட்டில் ஒற்றுக் கொள்ளவில்லை என்று  எக்ஸ்ட்ரா பிட் போட்டு விட்டான்.
ஏய்… ஆதி…” என்று சத்தம் போட்டு கூப்பிட்ட செளயமியா, அவன் அருகில் வந்தவுடன், “ஏன்டா உன் வைஃப் படிப்பு முடிவதற்குள் கல்யாணம் செய்திருக்கிறாய். எங்களிடம் இப்படி உன் காதலியை இத்தனை வருடம் மறைத்து வைத்து சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்துவிட்டாய். அவ்வளவு அவசரமா?” என்று அவள் குறும்புடன் கேட்டாள்.
இல்லை என்று சொன்னால் நம்பவா போகிறாய்?” என்று ஆதி புருவத்தை உயர்த்த அனு வெட்கத்தில் கையை பிசைந்தாள்.
சரி வாங்கப்பா … கேக் காத்திருக்கிறது.” என்றதும் இருவரும் சேர்ந்து நண்பர்கள் ஆர்பரிப்புடன் கேக் வெட்டி கொண்டாட அந்த இடமே களைகட்டியது.
சிறிது நேரத்தில் ஆய்ந்து ஓய்ந்து அமர எப்பொழுதும் துடுக்குடன் இருக்கும் செளயமியா கேம் என்று அனைவர் முகத்திலும் கேக் பூசிவிட்டு அனு முகத்தில் மட்டும் எக்ஸ்ட்ரா கேக்கை பூசிவிட்டாள்.
ஹேய்… அது பேசியல் கிரீம் இல்லை, சாப்பிடுகிற கிரீம். வேண்டுமென்றால் உன் முகத்தில் பூசிக்கொள் என் டார்லிங்கை விடு.” என்று அனுவை தன் புறம் இழுத்தான்.
அனுவிற்கு இதெல்லாம் பிடித்திருந்தது. இதுவரை இப்படி ஆனந்தமாக எந்த ஒரு விஷேசத்தையும் கொண்டாடியது இல்லை. 
ஐ டேர் யூ ஆதி… நீ அனு முகத்தில் உள்ள கிரீமை…”  என்று அவள் முடிக்கும் முன் அந்த வீடே அதிர்ந்தது நிலாவின் குரலில்.
இங்கே என்ன நடக்கிறது???” என்ற நிலாவின் அடர்ந்த குரலில் அனைவரும் அமைதியாகினர்.
அவளை கண்டதில் கயலை தவிர மற்ற அனைவருக்கும் அதிர்ச்சி தான்.
ஆதி, முரளி மற்றும் அவன் நண்பர்களுக்கும் இவள் இங்கு எதற்கு வந்தாள், ஏதாவது பிரச்னை செய்ய போகிறாளா? என்று பதற அனுவோ இந்த பெண் தான் தான் மூன்று நாட்களுக்கு முன்பு ஆதி மொபைலில் போட்டோவில் பார்த்த பெண் என்று நினைவு கூர்ந்தாள்.
 
நிலா…” என்ற ஆதியின் வார்த்தைகள் அனைத்தையும் உணர்த்தியது அனுவிற்கும், கயலிற்கும். கயலிற்கு தன் அக்கா வாழ்க்கை பற்றிய கவலையும், அனுவிற்கு நிலாவின் மனம் பற்றிய கவலையும் தொற்றியது.
இங்கு எப்படி வந்தாய்?” என்று ஆதி அவளை நோக்கி சென்றான்.
நான் தான் கூட்டி வந்தேன்.” என்று ஆதியின் தாய் ரேகா முன்னால் வர அவர் பின்னால் கவலை தோன்றிய முகத்துடன் கோபால் மற்றும் நிலாவின் பெற்றோர் வந்திருந்தனர்.
அம்மா… அத்தை… மாமா…” என்று ஆதி தடுமாற அனு முன்னால் வந்து அனைவரையும் வரவேற்றாள்; விருந்தோம்பல் நமக்கே உரிய அடையாளம் அல்லவா…
அவளை அனைவரும் ஏற இறங்க பார்க்க ஆதி தன் கைக்குட்டை கொடுத்து முகத்தை துடைக்க சொன்னான்.
சூழ்நிலை சூடாகப் போவதை உணர்ந்த முரளி, “சரி நாம் கிளம்பலாம். செளயமியா, ராஜ்….” என்று அனைவரையும் கூட்டிச் சென்றான்.
அவர்கள் முகம் கழுவி வரும் வரை அமைதியாக இருந்த ஆதி குடும்பத்தினர் அதுவரை வீட்டை நோட்டமிட்டனர். ஆதி பேச முயன்றும் யாரும் அவனிடம் பேசவில்லை. அனுவின் இரத்த அழுத்தமோ இருநூறை தொட்டது. 
ஆதி கோபால் முகத்தை பார்க்க, அவர் அனுவை பார்க்க அவள் ஆதியை பயத்துடன் நோக்க வீடே மரண அமைதியாய் இருந்தது. ஆதி அனுவை கண்களால் தன் பக்கத்தில் வந்து நிற்க சொல்ல, கயல் அவளை தொற்றிக் கொண்டு அவளுடன் ஒட்டி நின்றாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை தன் தமக்கை முகம் வைத்து ஏதோ பெரிய பிரச்சனை என்று மட்டும் யூகித்தாள்.
தியானம் களைத்த முனிவர் போல் தெளிந்த முகத்துடன் ஆதியிடம் வந்த ரேகா, “அங்கு உன் அத்தை மகள், உன் தோழி உன் செயலால் உடல்நிலை சரி இல்லாமல் இருக்க வீடே தவிக்கிறது. ஆனால் இங்கு நீ எந்த ஒரு சலனமும் இல்லாமல் ஜாலியாக உன் நேரத்தை செலவழிகிறாய்…” என்றவர் பார்வையும் அவனை குற்றம் சாட்டியது.
என்னை பற்றி ஒரு கவலையும் இல்லை அத்தானிற்கு. எப்படி இருக்கும்…? இங்கு இருக்கும் இவள் தான் இவரை கெட்டியாக தன் வசம் முடிந்திருக்கிறாளே.” என்று பல்லை கடித்து ஆதியின் பிடியில் இருந்த அனுவின் கரத்தை ஆங்காரத்தோடு உதறிவிட்டாள் நிலா.
அதில் நிலாவின் நீலமான நகம் அனுவின் கைகளில் கோடிட்டது. அதை கண்ட ஆதியோ “நிலா…” வென்று வேகமாக சத்தம் போட, “நிறுத்துடா… இப்போதே இங்கிருந்து நீ கிளம்பி என்னுடன் வருகிறாய். இல்லையென்றால்…” என்று அவனை மிரட்டினார் ரேகா.
அவர் வரும் வரை நான் இங்கேயே தான் இருப்பேன் அத்தை.” என்றாள் நிலா குறுக்கிட்டு. அதை கேட்டு கோபாலும், ஆதியும் அதிர்ந்தனர்.

Advertisement