Advertisement

பகுதி-2
எங்கிருந்தோ வந்தான்;
என்னவனாக மாறிக்கொண்டிருக்கிறான்!!!
ஏதோ ஒரு வேகத்தில் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டான் ஆதி. அப்பார்ட்மெண்டை விட்டு வெளியே போவதற்குள் அவன் மனம் ஒரு பெரிய போராட்டமே நடத்தியது. என்னதான் கோபம் இருந்தாலும் வீட்டிற்கு ஒரே பிள்ளையாய் போனதால் பாசத்தை கொட்டி வளர்த்திருந்தனர் அவன் பெற்றோர். அவர்களை பிரிவது வாய் வார்த்தையாய் சொல்லியது போல் அவ்வளவு எளிதாய் இருக்கவில்லை. அனுவின் அழுகையும் அவனை ஒருபுறம் வாட்டியெடுத்தது என்றே சொல்லவேண்டும். இத்தனை வருடங்கள் பாசத்தை எதிர்பார்ப்பின்றி கொட்டி வளர்த்து தனக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து வளர்த்த பெற்றோரை விடமுடியாமலும் தன்னை நம்பி வந்த  மனைவியையும் விடமுடியாமல் மிகவும் சிரமப்பட்டு போனான் ஆதித்யா.
தன்னை சமன்படுத்தி கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்ள தயாரானவனிற்கு போக்கிடமின்றி போக தன் நண்பனுக்கு போன் செய்து தற்காலிகமாக அவர்கள் தங்க ஏற்பாடு செய்தான். தொடர்ந்து தன் அலுவலகத்திற்கும் விடுப்பு சொல்லிவிட்டு தன் பைக்கை ஸ்டார்ட் செய்து அனுவை பின்னால் உட்கார சொன்னான்.
“இப்ப நாம எங்க போகிறோம்?” அத்துனை நேரம் அமைதியாக இருந்த அனு அவனுடன் பைக்கில் ஏற தயங்கி தன்னுள் இருக்கும் சந்தேகங்களை கேட்க நினைத்தாள்.
அவள் தயக்கத்தையும் பயத்தையும் உணர்ந்தவன், “நம்ம தங்க புது வீடு பார்க்கணும் அதுவரைக்கும் என் பிரெண்ட் வீட்டில் தங்கி கொள்ளலாம். பயப்படாமல் வா.” என்று ஆறுதல் அளித்து நம்பிக்கை விதையை விதைத்தான்.
ஆனால் அவள் எண்ணமோ வேறாக இருந்தது. சற்று தயங்கியபடி, “அது வந்து… நான்… இப்படியே எங்கயாவது போயிடுறேனே உங்களுக்கு தொந்தரவு இல்லாமல்… என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி. என்னால் உங்கள் குடும்பத்தில் பிரச்சனை வேண்டாம்.” என்று அவள் பேசியதுதான் தாமதம் அவன் கடுப்பில் பொரிய ஆரம்பித்துவிட்டான்.
“லூசா நீ… இப்போ நான் வீட்டில் பேசியதை கேட்டுக்கொண்டு தானே இருந்தாய்? எத்தனை தடவை சொல்றது…” என்று இழுத்தவன் அவள் முகம் போன போக்கில் திடீர் ஞானோதயம் பெற்று தன் வழியை மாற்றினான்.
“நான் யார் உனக்கு?” என்று நிதானமாக தன் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தான்.
“ஆங்…” அவனின் திடீர் மாற்றத்தை கண்டு சற்று தடுமாறிவிட்டாள் அனு.
அவளின் பதிலின்மையை தவிர்த்துவிட்டு ஆதி அடுத்த கேள்வியை கேட்டான், “என்னை உனக்கு முன்னர் தெரியுமா? என்னை பார்த்திருக்கிறாயா?” 
“ம்…உங்க பக்கத்து வீட்டில் வேலை செய்யும் போது பார்த்திருக்கிறேன்.” என்று சற்று தயங்கி பதிலளித்தாள் அனு.
“அப்போது என்னை உனக்கு முன்னரே தெரியும் அப்படித்தானே?” என்று கேள்வியாய் இழுத்தான்.
ம்… என்று தலை ஆட்டியவளை பார்த்து, “என்னை நம்பி உன் வாழ்க்கையை ஒப்படைக்க கடினமாக இருக்கும்னு எனக்கு தெரியும், திடீர் என்று முன் பின் தெரியாத ஆண் தாலி கட்டிவிட்டால் சிரமம் தான். உனக்கு எப்படி இந்த திருமணம் புதிதோ அதே போல் தான் எனக்கும். இந்த உறவு நாம் இருவருமே எதிர்பாராரது, புதிது. இதை இருவரும் சேர்ந்து தான் எதிர்கொள்ள வேண்டும். நம்பிக்கை வைத்து என்னுடன் வா.” என்ற அவனது அழுத்தமான, தெளிவான, நிதர்சனமான வார்த்தைகள் அனு மனதில் புது நம்பிக்கையை துளிர்த்தது.
என் துயர் கண்டு கடவுள் மனம் இறங்கி இருப்பார் போலும்; ஆதலால் தான் தன் வயதில் ஒரு பெண் இருக்கும் ஒருவருடன் நடக்கவிருந்த திருமணத்தில் இவர் புகுந்து என்னை திருமணம் செய்துவிட்டார், என்று தன்னுள் எண்ணியவள் ஆதியின் பைக்கில் அவன் தோல் பற்றி ஏறி அமர்ந்தாள்.
தன் பின் அவள் இருப்பை உறுதி செய்தவன் தங்கள் பயணத்தை தொடங்கினான். அவன் ஒவ்வொரு ஸ்பீட் பிரேக்கரையும் தவிர்த்து ஒரு ஓரமாய் சென்றதில், நட்டநடுவே பசுமரத்தாணி போல் நங்கூரமிட்டான் அனு மனதில். அவன் செயலில் அவள் மனம் என்னோவோ துள்ளி குதித்து வெளியே விழாத குறைதான். இரண்டு நாட்களாக கண்ணீரை மட்டுமே வார்த்த கண்கள் ஒளி பெற்றன. பற்களுக்கு இடையே துயரப்பட்டிருந்த அவள் இதழ்களில் தற்போது வெளிப்பட்ட புன்முறுவளை கடினப்பட்டு அடக்கினாள் அனு. இத்துனை தினங்கள் அவளை நெருங்க காரணம் தேடிய ஆண்களுக்கு மத்தியில் ஆதி கடவுள் போல் தோன்றினான் அவள் கண்களில். அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்து வந்த ஆதிக்கு அவள் மனம் ஓரளவு புரியத்துவங்கியது.
முதலில் வண்டியை ஒரு பெரிய துணிக்கடையில் நிறுத்தினான் ஆதி.
அந்த ஆளுயர கட்டிடத்தை மல்லாந்து பார்த்து கேட்டாள் அனு, “இங்கே எதற்கு வந்தோம்?” 
“ம்ம்… சாப்பிட வந்தோம்.” என்று நக்கலடித்தவனை பார்த்து தன் கருவிழிகளை உருட்டி முறைத்தாள் அவன் மனையாள்.
உள்ளுள் பீறிட்டு எழுந்த சிரிப்பை அடக்கியவன், “உனக்கு ட்ரெஸ் எடுத்துட்டு போகலாம் வா.” என்று அவள் கரத்தை லேசாக இழுத்தான். வேண்டாம் என மறுக்க போனவள் அவன் முறைப்பை பார்த்து அமைதியாக அவனை பின்தொடர்ந்தாள்.
“உனக்கு என்ன ட்ரெஸ் வேணும்?” என ஆதி அவள் விருப்பம் கேட்க அவளோ அவன் முகத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
யார் இவன்… ஸ்… இவர்? எதற்காக தன் குடும்பத்தையும் விட்டுவிட்டு எனக்கு இவ்வளவு மதிப்பளிக்கிறார்? தாலி கட்டிய ஒரே காரணத்திற்காகவா? ஏன் முதலில் தாலி கட்டினார்? அவர் நினைத்திருந்தால் என்னை மீட்டு வேறு எங்காவது அனுப்பி இருக்கலாமே? அல்லது என்னை தங்கையாக ஏற்றுக்கொண்டு இருக்கலாமே? 
அவனுக்கு தங்கை என்ற எண்ணமே வெறுப்பை  கொடுத்தது அனுவிற்கு. எல்லாம் மஞ்சள் கயிற்றின் மாயமோ? ஏனோ அவள் மனம் உள்ளுக்குள் சந்தோசப் பட்டுக்கொண்டிருந்தது ஆதி அவளை தங்கை என்று கூறாததை நினைத்து.
“ஏய்… எந்த உலகத்துல இருக்க?” என்று ஆதி அவள் தோளில் தட்டிய பிறகே தெரிந்தது அவள் பார்க்கிங்கின்  நட்ட நடுவே நின்றிருப்பது.
“ஒன்னும் இல்லை.” என்று பதில் அளித்துவிட்டு அவன் அருகில் சென்றாள்.
“நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லையே?” என தன் புருவத்தை உயர்த்தி கேட்டான் ஆதி.
“ஆங்… அது வந்து… சுடிதார் போட்டால்… உங்களுக்கு… ஒரு பிரச்சனையும் இல்லையே?” என்று அவன் கேள்விக்கு மறுகேள்வி கேட்டால் அனு.
“ஸ்ஸ்ஸ்… இதுக்கு இவ்ளோ நேரம். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, உனக்கு என்ன போடணும்னு ஆசையா இருக்கோ அதை வாங்கிக்கோ. ஆங்.. விலையை பற்றி கவலை படாத, உன் புருஷன் நிறைய சம்பாதிக்கிறான்.” ஆதி யோசிக்காமல் மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லிவிட்டான். 
அவளின் கன்னங்கள் சிவப்பேறுவதையும், இதழ்கள் வெட்க சிரிப்பை உதிர்ப்பதையும் பார்த்து குழம்பி, தான் என்ன சொன்னோம் என்று யோசித்தான் அவன். மூளையில் ஒளி தட்டியவனாய் தன் முகத்தை திருப்பி சங்கடப்பட்டு நின்றான், தன் வார்த்தைகளை நினைவு கூர்ந்து. அவனுக்கே தான் என்ன உணர்கிறோம்? எப்படி அவ்வளவு உரிமையான வார்த்தைகள் அவனிடத்தில் வெளிப்பட்டது என்பது விளங்கவில்லை. இது தான் ஆண்களுக்கான மஞ்சள் கயிறு மந்திரமோ?
“வா உள்ள போகலாம்…” அவர்களுக்கு இடையில் விழுந்த அசவுகரிய மெளனத்தை கலைத்து அவள் கை பற்றி அவனே உள்ளே அழைத்து சென்றான்.
“எனக்கு நயிட் ட்ரெஸ் வேணும், எடுத்துத் தருவீர்களா? இதுவரை யாரும் என் விருப்பம் கேட்டு இதுபோல் எனக்கு பிடித்ததை எடுத்து தந்தது இல்லை.” அவன் உரிமையில் நெகிழ்ந்தவள், தன் தயக்கங்களை உடைத்து, கண்களில் விழுந்துவிடுவேன் என்று பயமுறுத்திக்  கொண்டிருக்கும் உவர்நீரை தன் முந்தானையால் துடைத்துகொண்டு அவன் காதுகளில் கிசுகிசுத்தாள்.
இவ்வளவு நேரம் தன்னிடன் தயங்கித் தயங்கி பழகி வந்த அனு முதல் முறையாக தன் உரிமையை நிலைநாட்டி அவள் ஏக்கம், ஆதங்கத்தை வெளிப்படுத்தியது அவனுள் அவள் தன்னவள் என்ற எண்ணம் தோற்றுவிக்க அவள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் ஒரு டஜன் நயிட் ட்ரெஸ் எடுத்து கொடுத்தான்.
“ஏய்… அந்த மேனுகுயூன்ல இருக்கிற ட்ரெஸ்ஸ பாரு, உனக்கு புடிச்சி இருக்கா?” என்று தனக்கு பிடித்திருந்த ஒரு துணியை காட்டி கேட்டான்.
“என்ன? மெனிகுயின் அப்படினா?” தன் புருவம் சுருங்க கேட்டாள் அனு.
அவள் மேல் ஒரு பார்வை செலுத்தியவன், “ட்ரெஸ்லாம் போட்டு ஒரு பொம்மை வச்சி இருக்காங்கள்ள, அந்த பொம்மைக்கு இங்கிலிஷ்ல மெனிகுயின்னு பெயர்” என்று அவளுக்கு புரியும்படி விளக்கினான்.
“அது… வந்து… அந்த புடவை எல்லாம் விலை அதிகமாக இருக்கும்.” என்று பதில் அளித்தவள் அவன் செய்கையை பார்த்து திகைத்து நின்றாள்.
அவள் விலை அதிகம் என்று சொல்லும் போதே அந்த புடவை அவளுக்கு பிடித்து விட்டது என்பதை உணர்ந்தவன் சேல்ஸ்கேலை கூப்பிட்டு அந்த புடவையை எடுத்து கொடுக்க சொன்னான். கூடவே சேர்த்து அந்த புடவையை அவள் தோளில் வைத்து அழகு பார்த்தான்.
ஆனால் அவளோ விலையை பார்த்து மூச்சுமுட்டி போய் நின்றாள். அதன் விலை பதிணைந்தாயிரம் என்று இருந்தது. அதை பற்றி எல்லாம் சட்டைசெய்யாதவனாய் அவன் பில்லை கட்டிக்கொண்டு இருந்தான்.
அவள் தன்னையே வெறித்து பார்ப்பதை உணர்ந்த ஆதி அவளை கூப்பிட முற்பட்டபோது தான் தெரிந்தது அவள் பெயர் என்னவென்று அவன் அறியாதது. அவள் வேலை செய்வது மட்டும் தான் அவனுக்கு தெரியும், மற்றபடி வேறு எதுவும் தெரியாது.
“வா போகலாம்.” என்று அழைத்து ஆதி அவள் கரம் பிடிக்க அவள் இவ்வுலகுக்கு வந்தாள்.
சுற்றிமுற்றி பார்த்தவன் மெல்லஅவள் காதருகில் குனிந்தான், “உன் பெயர் என்ன?” 
“அனு.” அவன் மூச்சு காற்று அவள் காதில் பட்டதில் உறைந்து போனவள் தன் பெயரை முணுமுணுத்தாள்.
“என் பெயர் ஆதித்யா.” அவள் கேட்கும் முன் அவனே முந்திக்கொண்டு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
ஆனால் அவளோ குறும்பாய், “எனக்குத் தெரியும்.” என்றாள்.
“ஆங்…எப்படி?” என்றான்ஆச்சர்யமாய்.
“உங்கள் வீட்டு பக்கத்தில் வேலை செய்யும் போது உங்கள் அம்மா கூப்பிடுவதை கேட்டிருக்கிறேன்.” என்று புன்னகை மறையாமல் கூறினாள் அனு.
ம்.., போட்டவன் நிமிர்த்து சுற்றுப்புறத்தை பார்த்தால் அவர்கள் பேசிக்கொண்டே பார்க்கிங்கிற்கு வந்துவிட்டனர்.
“பையை என்னிடம் கொடு.” என்று அவளிடம் வாங்கி பைக்கில் தன் முன் வைத்துக்கொண்டான். அவளை பின்புறம் ஏற சொன்னான். அவளும் மறுபேச்சு பேசாது அவன் பின் ஏறி அவன் தோளை இறுகப்பற்றி கொண்டாள். இதுபோல் பைக்கில் செல்ல வேண்டும் என்பது அவளின் நீண்ட கால கனவு, ஆசை. அது நிறைவேறியது மகிழ்ச்சி தான் என்றாலும் ஒரு ஓரத்தில் அவனின் வாழ்க்கை இவளால் கெட்டு விட்டது எனும் நினைவு அவளை அரிக்கத் துவங்கியது.
“அனு…” அவள் அமைதியாய் எதையோ யோசித்து வருவதை பார்த்த ஆதி முதல் முறையாக அவள் பெயர் சொல்லி கூப்பிட்டான்.
“சொல்லுங்க…” அவனின் மென்மையான குரல் கேட்டு தன் சிந்தனையிலிருந்து வெளிவந்தாள் அனு.
“வீடு வந்துவிட்டது.” கீழே இறங்கு என்று சொல்லாமல் சொன்னான் ஆதி.
தலை ஆட்டியவள் மெல்ல இறங்கி, அவனிடமிருந்து பைகளை எடுத்துக்கொண்டாள்.
இருவரும் அவன் நண்பன் வீட்டை சென்றடைந்தனர். நடுவில் ஆதி தன்னிடம் இருந்து எல்லா பைகளையும் வாங்கிக்கொண்டது அனுவின் மனதில் ஆதி மேல் பெரும் மரியாதையை பிறக்கவைத்தது.
“இன்றைக்கு ஒரு நாள் இங்கே தங்கிக்கொள்ளலாம். நாளை நான் வேறு வீடு பார்த்து விடுகிறேன்.” என்று ஆதி கூற அனு ஏதோ பேச ஆயுத்தமானாள்.
கண்சிமிட்டி அவளை பேச தூண்டியவன் அவள் சொல்வதை கேட்டு யோசனையில் ஆழ்ந்தான்.
&*&*&

Advertisement