Advertisement

பகுதி – 19
ஷிட்… ஷோ கேன்சல் ஆகிவிட்டது.” என்று ஆதி கடுப்பாக அனு முகம் கூம்பிவிட்டது.
அவனின் முகபாவனையை கவனித்து தன்னை சமன்படுத்தியவள், சமாளிப்பாக அவனை ஏறிட்டாள், “பரவாயில்லை வேறு எங்காவது போகலாம்…”
இல்லைடா… உன்னை ஆசையாய் கூப்பிட்டு வந்து விட்டு இப்போது பார்…” தன் ஆசை பொய்த்தது மட்டுமில்லாமல் அனுவின் எதிர்பார்ப்பும் இப்படி சப்பென்று ஆகிவிட்டதே என்ற கடுப்பில் பைக்கில் ஒரு குத்து விட்டான்.
அதை கண்டு பதறியவள் அவனின் புஜத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டாள், “என்ன செய்கிறீர்கள். இது சின்ன விஷயம் இதற்கு போய் இவ்வளவு கோவமா?”
உதட்டை குவித்து பெருமூச்சை வெளியேற்ற, அவன் மனம் அமைதியுற்று நிதானமாய் சிந்திக்கத் தூண்டியது, “வா வேறு ஒரு இடத்திற்கு போகலாம்…” என்றான்.
அவனின் திடீர் துடுக்கை பார்த்தவளின் ஆர்வம் மீண்டும் துவங்கியது, “எங்கே போகிறோம்?” என்று அவன் பின்னால் அமர்ந்தவுடன் கேட்டாள் அனு.
நீ போகாத ஒரு இடத்திற்கு…” என்று சூட்சமமாய் பதில் கூறியவன் தன் தோளில் இருந்த அவள் கையை முன்னால் இழுத்து தன் இடை சுற்றினான்.
முகம் செந்நிறத்தை தத்தெடுக்க தன் கையை உருவியவள் பதற்றத்துடன், “என்ன செய்கிறீர்கள்? வெளியில் இப்படி பைக்கில் போகும் பொழுது?”
ஏன்? இதற்கு தனி ஆள் போட வேண்டுமா என்ன?” என குறும்பு கொப்பளிக்க அவன் கேட்க, பொய்யாய் முறைத்துக்கொண்டே அவனை கட்டிக்கொண்டாள்.
ஒரு சில மணி நேரத்திற்கு பிறகு அவன் வண்டியை நிறுத்த அனு நிமிர்ந்து அந்த இடத்தை ஆராய “குயின்ஸ் லேண்ட்” என்று எழுதி இருந்ததை படித்ததும் பரவசத்தின்  உச்சிக்கே சென்றாள்.
அவளை நிற்க சொல்லிவிட்டு பைக்கை பார்க் செய்ய அனு ஒரு பூரிப்புடன் தன் விழிகளை அலையவிட்டாள்.
வா போகலாம்…” என்று அவன் கையை பிடிக்கும் வரை தன் சிந்தனையிலே மூழ்கினாள். இரண்டு வருடம் முன்பு அவள் வேலை பார்த்த இடத்தில் இருந்தவர்கள் இது போல் அம்யூஸ்மண்ட் பார்க் சென்று வந்த அனுபவங்களை அனுவிடம் பகிர அன்றிலிருந்து இந்த இடத்திற்கு சென்று வர வேண்டும் என்று ஆசை. ஒரு கட்டத்தில் தன் நிலை உணர்ந்தவள் இதையெல்லாம் கனவில் மட்டுமே நினைக்க முடியும் என்று தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டாள். கால ஓட்டத்தில் தன்னுடைய பாதி ஆசைகளை மறந்து விட்டாள் என்பதே நிதர்சனம். அதில் இதுவும் ஒன்று.
உங்களுக்கு எப்படி தெரியும்?” என்ற கேள்வியோடு  அவனை ஏறிட தன் கை வளைவுக்குள் அவளை கொண்டு வந்தவன், “என் டார்லிங் பற்றி எனக்கு எல்லாம் தெரியும்.” என பதிலளித்தான்.
அது தான் எப்படி… கயல் சொன்னாளா?” பரவசம்  மாறாமல் அவள் விழிகள் இமைக்காமல் அவனையே மொய்த்தன.
ம்ம்… என் மனைவி பற்றி தெரிந்துக் கொள்ள எனக்கு கிடைத்த என்சைக்ளோபீடியா அவள்.” என்றான் அவள் நெற்றியில் முட்டி.
எக்ஸ்க்யூஸ்மீ…” என்ற குரலை கேட்டு தங்கள் இணக்கத்திலிருந்து வெளிவந்தவர்கள் திரும்ப அங்கு வெளிநாட்டு ஆசாமி கையில் கேமராவுடன் ஒருவர் நின்றிருந்தார்.
கேன் ஐ டேக் யுவர் பிக்ச்சர்ஸ் ப்ளீஸ்? டோன்ட் மிஸ்டேக் மீ…ஐம் ஸ்டடியிங் அபௌட் இந்தியன் கல்ச்சர். ஐ நீட் ஸ்னாப்ஸ் ஆஃப் நார்மல் பீப்பிள்ஸ் ஃபார் மை ரிசெர்ச் தீசிஸ். கேன் யூ கோஆப்பிரட்? ப்ளீஸ்…” என்று அவன் ஆங்கிலத்தில் பேச ஒன்றும் புரியாமல் நின்றாள் அனு. பள்ளியில் தமிழ் வழியில் படித்ததால் ஆங்கிலம் அவ்வளவாக அவளுக்கு தெரியாது. 
மௌனியாகி அவள் அவர்களை பார்க்க, அந்த வெள்ளைக்கார ஆசாமி இடையில் ஏதோ போட்டோவெல்லாம் காண்பித்தான். ஆதியும் ஏதோ பதில் பேச அனுவிற்கு தாழ்வுணர்ச்சி துளிர் விட ஆரம்பித்தது. அங்கு நிற்பவர்களில் தான் மட்டும் தனித்திருப்பதாய் உணர்ந்தாள். அவளையும் அறியாமல் அவனை விட்டு ஒரு எட்டு தள்ளி நின்றாள்.
அவன் வாய் அசைவதையே பார்க்க பார்க்க அவள் மனம் அச்சம் கொண்டது. வெளியில் எங்காவது செல்லும் போது தன்னை அவன் மனைவி என்று அறிமுகம் செய்ய சங்கடப்படுவானோ? இருக்காதா பின்னே? இது போல் பெரிய இடத்திற்கு அழைத்து போகும் போது தம் துணையும் இடத்திற்கு ஏத்தாற்போல் நடந்துகொள்ள வேண்டும் என நினைப்பது தானே இயல்பு. இந்த அற்ப காரணத்திற்காக எல்லாம் அவன் தன்னை ஒதுக்க மாட்டான் என்பது தெரிந்தும் ஏனோ அவள் மனம் முரண்டியது.
இவள் மனதை படித்தவனாய் அருகில் வந்தவன் “ஒன்றும் பிரச்சனை இல்லைநான் இருக்கிறேன் அல்லவா… நான் எல்லாம் கற்றுத் தருகிறேன். வா…” என்று அவளை அருகில் இழுத்து அவளை தோளோடு அணைக்க, அதே நேரம் பளிச்சென்று பிளாஷ் அடித்ததில் திடுக்கிட்டு அவனை ஏறிட்டாள்.
அவள் ஏதோ சொல்ல எத்தனித்த நேரம் ஆதி குறுக்கிட்டு “தயவு செய்து என்ன செய்கிறீர்கள் இப்படி வெளியில்என்று மட்டும் கேட்டுவிடாதே நீ எதிர்பார்க்கும் பதில் கிடைக்காது.” என்றான் அவள் கரம் பற்றியபடி.
அவர் என்ன சொன்னார்? எனக்கு ஒன்றும் புரியவில்லை…” என்றவளுக்கு அதை விளக்கினான். மேலும் என்ட்ரி டிக்கெட் வாங்கிய கையோடு உள்ளே சென்றனர்.
இங்கே நிறைய வாட்டர் கேம்ஸ் இருக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் நாம் வேறு மாற்று உடை ஏதும் எடுத்து வரவில்லையே?” என்று கவலை ரேகை அவள் முகத்தில் படர அதை பார்த்து புன்னகைத்தவன், “என்னை சொல்லிவிட்டு நீ தான் எதற்கெடுத்தாலும் உன் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்திக் கொள்கிறாய்? இங்கேயே கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்…” என்று அவள் கவலைக்கு முழுக்கு போட்டான்.
இருவரும் மகிழ்ச்சியாக எல்லா ரைடிலும் சென்று குதூகலிக்க ஆதியின் கரம் அவளை தன்னுள் அணைத்தே வைத்திருந்தது. முதலில் பொது இடம் என்று அவள் சிணுங்கினாலும் பின்னர் அவன் அணைப்பை ஏற்றுக் கொண்டாள்.
தூரத்தில் இருந்து தண்ணீரில் குதித்து, நீந்தி விளையாடியக் கொண்டிருப்பவளைக் கண்டவன் தன் பார்வையை அலைபாயவிட அவன் கண்ட காட்சி அவன் விழிகளை சிவப்பேற்றியது. அனுவிடம் புன்னகை வீசிவிட்டு கை முஷ்டிகளை இறுக்கியவன் தண்ணீரில் இறங்கி யார் கண்ணிலும் படாமல் கண நொடியில் அனு இதழில் தன் இதழ் ஒற்றி எடுத்து அவள் துப்பட்டாவை சரி செய்தான். அவன் செயலில் அதிர்ந்தவள் சிலையாய் சமைய அதை தனக்கு சாதகமாய் பயன்படுத்தி அவள் புறத்தே முன்னேறினான்.
அங்கு ஒருவனை தெரிந்தவன் போல் கட்டி அணைத்தவன் பற்களை இடுக்கி, “குடும்பம், குழந்தை என்று வாழ ஆசைப்பட்டால் திரும்பி பார்க்காமல் ஓடிவிடு… இல்லை வாழ்க்கை முழுவதும் ஆஞ்சநேயர் பக்தர் ஆகிவிடுவாய்.” என்று சிரித்த முகத்துடன் வார்த்தைகளை கடித்து துப்பி, எதிர் இருந்தவன் கையை முறுக்க அவன் தப்பித்தோம் என்று ஓடிவிட்டான்.
அவனை விரட்டிவிட்டு அனுவிடம் வர அவன் சட்டையை பிடித்து வேகமாக இழுத்தவள், “வர வர உங்களுக்கு விவஸ்தை இல்லாமல் போயிற்று. குழந்தைகள் எல்லாம் இருக்கிறார்கள் நீங்கள் பாட்டிற்கு என்ன செய்கிறீர்கள்?” என்று பொறிந்தாள்.
நான் என்ன செய்தேன்? நீ தான் உன் புருஷனை கைக்குள் வைத்திருக்கிறாய்…” என்று அவன் இருபொருள்பட கூறி அவள் கையையும், சுற்று புறத்தையும் மாறி மாறி நோக்க அர்த்தம் புரிந்து தன் பிடியை விலக்கினாள்.
கைகளை பிசைந்து தன் முகத்தில் உதிக்கத் துடிக்கும் வெட்க புன்னகையை அடக்க முயற்சித்து தோற்றவள் அதை விடுத்து பேச்சை மாற்றினாள்.
யார் அவர்? உங்கள் பிரன்டா?” என்று வினவினாள் அவ்விடத்தை விட்டு மெல்ல வெளியேறினாள்.
அதை கூறலாமா வேண்டாமா என்று மனதில் உழம்பியவன் வெளிப்படையாய் கூறிவிடுவதே நல்லது என்று நினைக்கலானான்.
இல்லை…” என தொடரும் முன்பே அவனை தடுத்தாள் அனு, “பின்னே கட்டி பிடித்தீர்கள், சிரித்து பேசினீர்களே?”
“ப்ச்… என்னைப் பேச விடுகிறாயா அனு? அவன் உன்னை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.” என்றான் நாடி நரம்புகள் புடைக்க.
அனு ஒன்றும் சிறு பிள்ளை இல்லை அவன் கூறிய விதம் புரியாமல் இருக்க. “ஆனால்… நான் ஒழுங்காக துப்பட்டாவை சுற்றி தானே இருந்தேன்.” என்றவள் கீழே குனிந்து தன் உடையை மறுமுறை சரிபார்த்துக் கொண்டாள்.
நீ சரியாகத் தான் இருக்கிறாய். ஆனால் சில ஜந்துக்கள் மனிதன் என்ற போர்வையில் மிருகங்களாக இருக்கிறார்கள். அவர்கள் பார்வை குழந்தைகளிடம் கூட தப்பாகத் தான் இருக்கும். கேட்டால் பெண்கள் ஆபாச உடை அணிகிறார்கள் என்பார்கள். எல்லோருமா அப்படி உடை அணிகிறார்கள்? பள்ளிச் சீருடை ஆபாசமா? ஏன் பத்து வயது சிறுமி என்ன ஆபாசமாக உடை அணிகிறாள்? அந்த வயது சிறுமிக்கெல்லாம் இவர்களின் பார்வைக்கான அர்த்தம் கூடத் தெரியாது. இவர்கள் எல்லாம் ஒரு பெண்ணின் கருவரையிலிருந்து தான் உருவாகிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். எவ்வளவு உன்னதமான படைப்பு பெண்! 
அன்னையின் அரவணைப்பில் முழுதாக பத்து மாதம் பாதுகாப்பாய் இருந்து இவ்வுலகிற்கு வந்த பின் தந்தையின் வழிகாட்டுதலில் கட்டுக்கோப்பாய் இளவரசியாய் வலம் வரும் பெண் பிள்ளைகள் வயது வந்த பின் மறு வீட்டிற்கு ராணியாய் சென்று அவர்கள் வம்சத்தை காப்பதும் பெண்கள் தான். ஒரு பெண்ணின் உடலை சிதைத்துவிட்டால் தான் பெரிய ஆள், வீரம் உள்ள ஆண் என்று நினைக்கின்றவர்கள் தன் தாய், தமக்கை, தங்கை, மனைவி, சில சமயங்களில் தம் குழந்தை எல்லாம் பெண்களே என்பதை நினைவில் கொள்ள மறந்து விடுகிறான். எவன் ஒருவன் பெண்களை தவறாக பார்கிறானோ அவன் வீட்டு பெண்களையும் ஒருவன் தவறான எண்ணத்தோடு நெருங்குவான் என்ற பயம் இருந்தாலே பாதி தவறு நடக்காது…” என்று அவன் பேசி முடித்த மறு நிமிடம் அவனை அணைத்திருந்தாள் அனு.
ஐ லவ் யூ,” என்றாள் சற்றும் தாமதியாமல்.
அதை சற்றும் எதிர்பார்த்திராதவன் அமைதியாய் அப்படியே நிற்க அனு அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள் தன் வெட்கத்தை ஒதுக்கி.
அவன் பதிலுக்கு தன் காதலை சொல்வான் என்ற எதிர்பார்ப்பு பொய்க்க, எப்பொழுதும் தம் உணர்வுகளை மறைக்க தெரிந்த வித்தையை கையில் எடுத்தாள்.
நேராமாகிறதுஇன்னும் நிறைய ரைட் போக வேண்டும்.” என்று அவன் கரம் பற்றி இழுத்து சென்றவள் ஓயாமல் பேசி தன் ஏமாற்றத்தை மறக்க எண்ணினாள், “கயல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அடுத்து வரும் போது அவளையும் கூட்டி வர வேண்டும். எனக்கு நீங்கள் முதலில் கூட்டி போன ரைட் பிடித்திருந்தது. திரும்ப அதில் போக வேண்டும்…” 
அவள் ஏதேதோ பிதற்ற தன் சுயநினைவு வந்தவன் தலையில் அடித்துக் கொள்ளாத குறை தான். அவளை இப்படி தவிக்க விட்டுவிட்டேனேஎப்படி எதிர்பார்த்திருப்பாள்… முட்டாள் என்பதை நீ நொடிக்கொருமுறை நிரூபிக்கிறாய் மங்குனிஎன்று நொந்துக் கொள்ள இதுவும் நன்மைக்கே என்று நினைத்து புது திட்டம் தீட்டினான்.
அவளை வேறு ஒரு வாட்டர் கேமிற்கு அழைத்து சென்று விட்டவன் ஒதுங்கி நிற்க அவள் மனமில்லாமல் தண்ணீரில் விளையாடினாள்.
சிறிது நேரத்திற்கு பின் நேரமாக, “அனு… போதும் வா… இப்படி தண்ணீரில் அதிக நேரம் இருந்தால் ஜன்னி வந்து விடும்.” என்று கத்தி கூப்பிட எப்போதுடா கூப்பிடுவான் என்று காத்திருந்தவள் போல் ஓடி வந்தாள்.
உடை மாற்றி விட்டு வீட்டிற்கு போகலாம். கயல் முரளி வீட்டில் இருப்பாள். அவன் நம் வீட்டிற்கு கூட்டி விடுவான்.” என்றவன் தன் கையில் தயாராக வைத்திருந்த துண்டால் அவள் தலை துவட்டிவிட அவள் மனத்தாங்கல் பின்னுக்கு போனது. 
மாலை நேர தென்றல் உடலை தீண்ட நெருங்கி பைக்கில் அமர்ந்திருந்த இருவருமே இம்மாலைப் பொழுது இப்படியே நீடிக்காதா என்று ஏங்கிய நிமிடமே வீடு வந்து சேர்ந்தனர்.
இருவரும் வீட்டின் கதவை திறக்க அதிர்ச்சியில் இரண்டடி பின்னே நகர்ந்தனர்.

Advertisement