Advertisement

பகுதி – 16
தன் பார்வையில் கயல் பட்டதும் வேகமாக தன் பாவனையை மாற்றியவள் அவன் மீது ஒரு பார்வை வீசிவிட்டு அவன் மார்பில் முகம் புதைத்து இடையை கட்டிக்கொண்டாள், “தாமதமாக வந்ததற்கெல்லாம் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள்? இன்றாவது இங்கேயே தங்குகிறீர்களே… அதுவே போதும் எனக்கு.” என்றவளை நம்பாமல் குனிந்து பார்த்தவன் இது கனவா இல்லை நனவா என்று யோசிக்க… கயல் அறைக்குள் போனதும் அனு அவனை விட்டு விலகி அறைக்குள் புகுந்து கொண்டாள்.
இங்கு இப்போது என்ன நடந்தது? கோபமாகத் தானே இருந்தாள்? ஆனால் திடீரென்று ஏன் இப்படி குழைந்து பேசுகிறாள்? என்னை மன்னித்து விட்டாளா? அது சுலபம் இல்லையே… மன்னிக்கவில்லை என்றால் ஏன் சந்தோஷமாக பேசினாள். இப்பொழுது நான் அவள் பின் போக வேண்டுமா? என்று எண்ணியவன் கையை பிசைந்து அவர்கள் அறையையே பார்த்துக் கொண்டு நின்றான்.
இன்னும் இரண்டு நாட்கள் இப்படி இருந்தால் நானும் பைத்தியமாக ஆகி விடுவேன் போலிருக்கு… என்று மனதிற்குள் புலம்ப அவன் மூளை அவனை விட வேகமாய் அவன் நினைத்ததிற்கு உருவம் கொடுக்க பதறியவன்…ச்ச… ச்ச… என்ன வாழ்க்கைடா இது? நிம்மதியாக ஹனிமூன், பிக்னிக், பீச் என்று சுற்ற வேண்டியவன் ஹோஸ்பிடலில் போய் படுத்துக் கொள்வேன் போலிருக்கே…’ என தலையில் அடித்துக் கொண்டு… என்ன ஆனாலும் பரவாயில்லை இன்று எல்லா உண்மையையும் கூறி இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும்… என்று முடிவெடுத்து பம்மி பம்மி அவர்கள் அறைக்கு சென்றான்.
சத்தமில்லாமல் அறைக்குள் சென்று கதவை தாழிட்டவன் அவள் புறம் திரும்ப அவள் வார்டோபில் ஏதோ தேடிக் கொண்டிருந்தாள். அதே அமைதியுடன் அருகே சென்றவன் அவள் செய்து கொண்டிருந்த வேலையை பார்த்து சிரிப்பதா இல்லை கோபப்படுவதா என்று தெரியாமல் முழித்து நின்றான். தீயாய் தகித்துக் கொண்டிருப்பாள் இல்லை அழுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு கிடைத்ததோ ஆச்சர்யம் தான்.
அவளோ கோபத்தில் அழகாக துவைத்து மடித்து வைத்திருந்த அவன் சட்டை பேண்ட்டிடம் சண்டை இட்டுக் கொண்டிருந்தாள். மடித்ததை கலைப்பது, இஸ்திரி செய்த ஃபார்மல் சட்டையை கசக்குவது, அவளுக்கு பிடிக்காத கலர் உடையை தூக்கி தூர எரிவது என்று அவன் இருப்பது தெரியாமல் தன் கோபத்தை உயிரில்லா ஜீவனிடம் காட்டிக் கொண்டிருந்தாள், “அவர் எப்படி அப்படி நினைக்கலாம்? சீ… சொல்கிறார்… நான் அவரிடம் நெருங்காமல் வேறு யார் நெருங்குவார்களாம்? என்னமோ பேசுகிறார்அவருக்கு என் மேல் எப்படி உரிமை இருக்கிறதோ எனக்கும் அப்படி தானே… நான் தான் என்ன பிரச்சனை என்று கேட்டேனேசொல்லப்  பிடிக்கவில்லை என்றால் பேசாமல் தூங்க வேண்டியது தானே… அதை விட்டு விட்டு இப்படி தான் கத்துவதா? ச்ச…” என்று முணுமுணுத்துக் கொண்டே தன் வேலையை தொடர்ந்தாள்.
இந்த ரனகலத்திலும் ஒரு கூதூகலமாய் அவள் முகத்தை ரசித்தவன் மனதில் சிறு குறும்பு தோன்ற அவள் பின் நேரே நின்றவன் கையை மேலே தூக்கி மேல் செல்ப்பில் அவளுக்கு எட்டாமல் இருந்த அவனது துணிகளை எடுத்து அவள் முன் நீட்டினான்.
அதுவரை தன் சினமே கண் என்று இருந்தவள் அவன் தீடீரென்று சட்டையை நீட்டவும் திகைத்து திரும்ப, அவன் மிக அருகில் நின்றான்.
முன்னர் இருந்த அதே கடுப்புடன் “என்ன?” என்றாள்.
உனக்கு உயரத்தில் இருப்பது எட்டாது பேபி… அதனால்  நானே எடுத்துக் கொடுத்தேன். இது போதுமா இல்லை இன்னும் எடுத்துத் தரவா? இந்த துணி எல்லாம் எப்படி கசங்காமல் அசிங்கமாக இருக்கிறது என்று பார்…” என்றான் முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு.
அவன் தன் செயலை பார்த்து விட்டு கேலி செய்கிறான் என்பதை விட அவன் அப்பாவி முகத்தை கண்டு எரிச்சலடைந்தாள். 
இதுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.” என்று அந்த துணியை கையில் வாங்கி தன் போக்கில் வீசிவிட்டு கட்டிலிற்கு சென்றாள்.
அவனும் பூனை குட்டி போலவே அவளை பின் தொடர அவனை கண்டு கொள்ளாமல் தலையணை, பாய், போர்வை எடுத்துக் கொண்டு கீழே விரித்தாள்.
அதை பார்த்தவன் மனம் வாட, “நீ கீழேயெல்லாம் படுக்க வேண்டாம். தவறு செய்தது நான் தானே… நீ ஏன் கஷ்டப்படுகிறாய்? நான் கீழே படுத்துக் கொள்கிறேன்.” என்றான் குற்ற உணர்ச்சியில்.
எப்போது எனக்காக விரிக்கிறேன் என்று சொன்னேன்? அது உங்களுக்கு. நான் மெத்தையில் தான் படுக்கப்  போகிறேன். உங்கள் இடம் இனி கீழே தான்.” என்றாள் எலக்காரமாக.
என்னடா இதுநம்ம கொஞ்சம் இறங்கி போகலாம் அவளும் மனம் மாறுவாள் என்று பார்த்தால்… எனக்கு வழியே கொடுக்க மாட்டேன் என்கிறாள். அப்பா நேற்று எச்சரித்தது சரி தான் அந்த உடைந்த மொபைலின் நிலை எனக்கும் வந்துவிட்டது. சற்று வாய் அடக்கி இருந்தால் இந்த இரவு நீ பிளான் செய்தது போல் சந்தோசமாக இருந்திருக்கும். மடையா… உனக்கு எதிரியே தேவை இல்லை உன் வாயே அந்த வேலையை செய்து விடும்…’ என்று நிதானமாய் தன்னைத் தானே வசை பாட்டிக்கொள்ள அவள் போய் கட்டிலில் சாய்ந்து உறங்க சென்று விட்டாள்.
தலையணையும், பாயையும் வெறித்தவன் தன் பிறந்து வளர்ந்த இத்துணை தினங்களில் தரையில் படுத்ததே இல்லைஅவர்கள் திருமணம் நடந்த அந்த முதல் நாள் தான் சோபாவிலே படுத்தான்இன்று அதையும் விட்டு கீழ் இறங்கி விட்டது இவன் நிலைமை. இதற்கு மேல் நம்மால் முடியாது என்று முடிவெடுத்து, அவளை சற்று சமாதானம் செய்வோம்.’ என்று அவள் அருகில் சென்றான்.
இவன் எங்கே தன் பக்கத்தில் வந்து படுத்துவிடுவனோ என்று அனு தெளிவாய் மெத்தையின் குறுக்கே தலை கவிழ்ந்து படுத்திருந்தாள்.
சதிகாரிஎவ்வளவு உஷாராக இருக்கிறாள் பார். நீயும் தான் இருக்கியேஉன் வாயை கூட உன்னால் உஷாராக கட்டு படுத்த முடியவில்லை.’ என நொந்தவன் அவள் அருகில் சென்று தன்னை ஒடுக்கி படுத்தான். கால் மெத்தைக்குள் பற்றவில்லை தான் ஆனால் வேறு வழி இல்லையே.
தான் அவள் அருகில் இருப்பது அவளுக்கு தெரிந்தும் அமைதியாய் இருக்க மெதுவாக அவள் மேல் ஒரு கரம் போட்டான். மறுநிமிடமே அதை தட்டி விட்டாள். விடாமல் அவன் இரு முறை திரும்ப அவள் இடை பற்ற இந்த முறை தாடையில் அடிபட்டது. இவன் மேல் இருந்த கோபத்தில் வேகமாக அவள் திரும்பியதால் அவனை இடித்து விட இந்த முறை அவன் கனவுலகத்தில் இல்லை என்பதால் நன்றாக வலிக்க, “ஆ… என் மேல் இவ்வளவு கோபமாடி…” என்றபடி தன் தாடையை தேய்த்தான்.
எனக்கு ஒரு சந்தேகம்கோபமாக இருக்கும் பொழுது ஏன் அப்படி ஹாலில் ரொமான்ஸ் பண்ணினாய்?” என்றான் இடக்காய். அவன் மனமோ, உனக்கு வாய் கொழுப்பு அதிகம்டா… எதை மறக்க வைக்க வேண்டுமோ அதையே கேட்கிறாய். அவள் அங்கு பண்ணியது ரொமான்ஸா… நீ பேசிய பேச்சுக்கு இனி இந்த ஜென்மத்தில் உனக்கு ரொமான்ஸ் இல்லை.’ என்று அவன் மனமே கவுன்டர் கொடுத்தது.
இருவரில் ஒருவர் மக்காக இருந்தால் அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு மற்றவருக்கு இருக்கிறது. அதை தான் நான் செய்தேன். உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்து விட்டதில்லை போய் படுங்கள்.” என்றவளின் குரலில் முன்பிருந்த அனல் இப்போதில்லை.
அப்பொழுது அந்த மக்கு நானா? அப்படி என்ன நடந்தது அங்கு? நாங்கள் இருவர் மட்டும் தானே  இருந்தோம்.’ என்று நினைக்கும் போதே கயல் நினைவு வர அனு கூறிய நிதர்சனம் உரைத்தது.
நான் தான் மக்கு என்று தெரிகிறது அல்லவாஇந்த மக்கு பையனை கொஞ்சம் இரக்கம் காட்டி மன்னிக்க கூடாதா?” என்று வெகுளியாய் கெஞ்சினான்.
முடியாது.” என்று ஒற்றை வார்த்தையில் முடித்தவள், திரும்பி படுப்பதற்குள், “நீ தானே கூறினாய்குடும்பம் என்றால் சங்கடம், சஞ்சலம் எல்லாம் இருக்கும் என்று. இதோடு நம் சண்டையை முடித்து விடலாம். இனி நான் உன்னிடம் எதையும் மறைக்க மாட்டேன். தேவையில்லாமல் உன் மேல் கோபம் கொள்ள மாட்டேன்… ப்ராமிஸ்… அது மட்டுமில்லாமல் நீ தான் புத்திசாலி ஆயிற்றே? நான் கத்திய போது திரும்ப கூற வேண்டியது தானே அது என் உரிமை என்று.” என்று சீரியசாக அவன் சொல்ல அவள் அமைதி காக்கவும் மீண்டும் தன் முயற்சியில் இறங்கினான்.
உனக்கே தெரியும் நான் இப்படி எல்லாம் பேச மாட்டேன். என்றும் உன்னை எனக்கு கீழ் நினைக்க மாட்டேனென்று? அந்த வார்த்தைகள் உனக்கானது அல்ல… என் சுய மரியாதையை நான் எப்படி பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பேனோ அப்படி தான் உன் மரியாதையும் எனக்கு முக்கியம். என்னுள் சரி பாதி நீ, உன்னை நான் தவறாக பேசியது என்னை நானே கொச்சை படுத்திக்கொண்டதற்கு சமம்… இனி இந்த தவறு நடக்காது… இன்னும் இரண்டு அடி வேண்டுமென்றாலும் அடித்துக் கொள்… ஆனால் இப்பொழுது என்னுடன் நீ பேசியாக வேண்டும். கட்டாய படுத்துகிறேன் என்று நினைக்காதேகணவன் மனைவிக்குள் விரிசல் விழுந்து விட்டால் அது காலத்திற்கும் நினைவு இருக்கும். நம் உறவு அப்படி ஆக நான் விரும்பவில்லை.” என்று அவன் தீர்க்கமாக பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் கன்னத்தை பதம் பார்த்தது அனுவின் கை.
அதிர்ச்சியுடன் அவளை நோக்க அவள் இன்னும் இரண்டு அடி சேர்த்து கொடுத்தாள்.
ஏய்… என்ன பேபி நீ இப்படி அடிக்கிறாய். தெரியாமல் உன்னிடம் சொல்லிவிட்டேன்இது தான் சாக்கு என்று இவ்வளவு பலமாக அடிக்கிறாய்? வலிக்கிறது… பின்னாளில் அடிக்கவும் கொஞ்சம் சேர்த்து வை…” என்று தன் இரு கன்னங்களை தன் கரம் கொண்டு மூடிக்கொண்டான்.
நீங்கள் தானே சொன்னீர்கள் இரண்டு அடி வேண்டுமென்றாலும் அடியென்று…” என்று குறும்பாய் அவன் வாயை அடைத்தவள், “இனி எப்போதும் தவறான வார்த்தை வாயில் வரும் போதும் இந்த அடி நினைவு இருக்க வேண்டும். ஏதாவது ஏடாகூடம் செய்தீர்கள் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.” என்று மனது மாறி தன் சினத்தை விடுத்து அவள் எச்சரிக்க ஆதி மொபைல் ரீங்காரமிட்டது.
அவன் மீது ஒரு சந்தேக பார்வை வீசியவள் டிஸ்பிலேவில் டாட் என்று வரவும் அமைதியானாள்.
சொல்லுங்கப்பா…” என்று பேச ஆரம்பித்தவன் முகம் மீண்டும் இறுக அனுவின் மனதில் பயம் தொற்றிக் கொண்டது. ஒரு வேளை அவன் அம்மாவிற்கு தான் ஏதோ பிரச்சனை என்றென்னியவளால் ஒரு புற உரையாடலை மட்டுமே கேட்க முடிந்தது. 
என்னால் வரமுடியாதுபா. என் மீது கோபப் படாதீர்கள். நான் தனி ஆள் இல்லை எனக்கும் குடும்பம் இருக்கிறது. என்னை நம்பி இரு பெண்கள் இருக்கிறார்கள். இவர்களை தவிக்க விட்டு என்னால் இப்போது அங்கு வரமுடியாது… எதுவாக இருந்தாலும் நான் காலையில் வந்து பார்க்கிறேன். எனக்கு என் பெண்டாட்டி தான் முக்கியம்.” என்று கோபமாக பேசி மொபைலை அணைத்தவன், கண்களை மூடி தன் மனதை சமன் செய்ய முயன்றான்.
அவனை சமாதானம் செய்யும் நோக்கில் நெருங்கியவள் மனதில் அவன் உதிர்த்த வார்த்தைகள் நிழலாட கண்களை இறுக மூடினாள். அதை கவனித்தவன் அவள் கரம் பிடித்து தன் முகத்தில் வைத்தான்.
நீ தயங்கும் அளவிற்கு ஒன்னும் இல்லை அனு. அதை மறப்பது கடினம் தான்… ஆனால் நிச்சயம் அதை நான் உன் நினைவிலிருந்து அழிப்பேன். மீறி நான் முரடு பிடித்தால் இப்போது கொடுத்தியே அதே மாதிரி இரண்டு அடி போடு எல்லாம் சரி ஆகிவிடும்.” என்று முழுமனதோடு சிரித்தவாறே கூறினான்.
அவளும் முறுவலித்து எக்கி தன் கைத்தடம் பதிந்த கன்னத்தில் தன் இதழ் பதித்தாள், “ரொம்ப வலிக்கிறதா?” என்று வினவினாள் அவன் முகத்தை தடவியபடியே.
இப்பொழுது சுகமாக இருக்கிறது.” என்று தன் கன்னத்தை அவள் கைகளில் இன்னும் அழுந்த புதைத்தான்.
இப்படி ஒவ்வொரு முறையும் நீ என் வலியை நீக்கினால் நான் காலம் முழுக்க உன்னிடம் உதை வாங்குவேன்.” என்று சலுகையாய் தெரிவித்து பூரிப்புடன் அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.
தங்கள் முதல் ஊடலை சரி செய்த சுகத்தில் இருவரும் திளைக்க ஏதோ நினைத்து அவள் அணைப்பிலிருந்து வெளிவந்தான்.
நான் உன்னிடம் ஒன்று கூற வேண்டும். இனி எதையும் மறைத்து வைப்பது சரி அல்ல. நீ கேட்டாய் அல்லவா இரண்டு நாட்களாக நான் எங்கிருக்கிறேன் என்று. இப்படி வந்து உட்கார், நான் தெளிவாக சொல்கிறேன்.” என்று அவளை கட்டிலில் அமர வைக்க அவனும் அவள் அருகில் இடம் புகுந்தான்.
அனுமா… அதற்கு முன் எனக்கு கொஞ்சம் தண்ணீர் வேண்டும். பார் என்னை அழ வைத்து விட்டாய் அதில் டீஹைட்ரேஷன் ஆகிவிட்டது.” என்று நகைத்து மீண்டும் அவளிடம் வாங்கி கட்டிக்கொண்டான். 

Advertisement