Advertisement

பகுதி – 15
அழைப்பு மணி ஒலி கேட்டு விழித்த கயல் தன் தமக்கை உறங்குவதை கண்டு அவளை எழுப்ப மனம் இன்றி தானே கதவை திறக்க அங்கு சோர்வாக நின்றிருந்தான் ஆதி.
மாமா…” என்று அவனுக்கு வழி விட அவன் யாரையும் கண்டுகொள்ளாமல் நேராக தன் அறையில் புகுந்து தன் மேலாடை துறந்து கட்டிலில் தலை கவிழ்ந்தான்.
தான் பாட்டிற்கு போனவனை கண்ட கயல் முகம் சுளித்து அனுவை எழுப்பினாள்.
அக்கா… எழுந்திறு. உன் வீட்டுக்காரர் வந்து விட்டார் பார்.” என்று சிறு நக்கல் ததும்ப கூறியவள் அனு பக்கத்தில் சாய்ந்து போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டாள்.
அவன் வந்து விட்டான் என்றதுமே படக்கென்று விழிகளை பிரித்து விழித்தவள், அவனை தேடி அவர்கள் அறைக்கு செல்ல, சாந்தமாய் இருந்த அவனது முகத்தில் கவலை ரேகை பாய்ந்திருந்ததை கண்டு அவன் அருகில் அமர்த்தவள் மிருதுவாய் அவன் நெற்றியை வருடிவிட இதமாய் தூக்கத்திலே அவள் அருகில் நகர்ந்தான். அனாசியமாய் இதழ் பதித்து விட்டு அவனை விட்டு விலகியவள் தன் காலை வேலைகளுள் மூழ்கினாள்.
முன்தினம் போலவே கடமைக்கென்று வேகமாக சிற்றுண்டி முடித்து விட்டு கிளம்பியவனை ஒரு இயலாமையோடு நோக்கினாள் அவன் மனைவி. மறக்காமல் அவளுக்காக புத்தகங்கள் வாங்கி வந்திருந்தான், அதையும் கொடுத்து விட்டு தான் சென்றான்.
அவன் சென்ற சில நேரங்களுக்கு பின் அனுவிற்கு புத்தகங்கள் நினைவிற்கு வர அதை எடுத்து ஆராய்ந்தாள். ஒரு புத்தகம் மட்டும் இல்லாமல் இருந்தது. அவன் ஏதும் வேண்டும் என்றால் தனக்கு தயங்காமல் கால் பண்ணலாம் என்று கூறியதை நினைவு கொண்டு அவனுக்கு கால் செய்தாள், தன் உடைந்த போனிலிருந்து.
ஹலோ…” என்ற பெண் குரல் மறுமுனையில் கேட்டதும் தாம் சரியான நம்பருக்கு தான் கால்  செய்தோமா என்று டிஸ்பிலேவை பார்க்க, அது தன் உடைந்த துகல்களுக்கிடையில் ஆதி என்றே காட்டியது.
என்ன கேட்பது என சிறு நொடி யோசித்தவள் முகத்தில் செம்மை பரவ, “ஆதி இல்லையா?” என்று கேட்க மறு முனையில் ஏதோ ஆண் குரல் பின் புறம் கேட்டது. அது பரிட்சயமான குரலாக இருக்கிறதே என்று நினைத்தவள் அது கண்டிப்பாக ஆதி குரல் இல்லை என்ற முடிவுக்கு வந்தாள். ஏனெனில் மறு புறம் கேட்டது ஒரு வயதானவர் குரல் போல் இருந்தது.
ஹலோ… அவர் இல்லையா.” என்று மறுபடி அனு கேட்க அந்த பெண் கூறிய பதில் கோபத்தை தூண்டியது.
இப்படி எல்லாம் அவர் பர்சனல் நம்பருக்கு கூப்பிடாதீர்கள். எதுவாக இருந்தாலும் அவர் ஆபீஸ் வரும் போது பேசிக் கொள்ளுங்கள்.” என்று அந்த கால் கட்டானது.
எவ்வளவு திமிர் அந்த பெண்ணிற்கு? நான் அவர் பர்சனல் நம்பருக்கு கூப்பிடக்கூடாதா? அதை சொல்வதற்கு அவள் யார்? என்னைவிட அவருக்கு பர்சனல் யாராக இருக்கமுடியும்!!என்று தான் பார்த்திராத பெண்ணை மனதில் வசை பாடி முறுமுறை அவனை அழைத்தாள்.
இந்த முறை தெரிந்த குரலே வரவேற்றது ஆனால் அவள் எதிர்பார்த்தவர் அல்ல, “ஆதி வேலையாக இருக்கிறான் மா. நான் பிறகு பேசச் சொல்லவா? இல்லை உனக்கு எதுவும் முக்கியமாக பேச வேண்டுமா?” என்ற குரலை பதிவதற்குள், “நான் யாரென்று தெரிகிறதா? தெரிந்தால் தான் ஆச்சர்யம், ஒரு முறை தானே பேசினோம். நான் ஆதியின் அப்பா மா.” என்றார் கோபால்.
ஒன்றும் முக்கியமான விஷயம் இல்லை மாமா. நீங்களும் அவர் கூட தான் இருக்கிறீர்களா?” என்று கேட்பதற்குள் மறுமுனையில் சஞ்சலம் ஏற்பட்டு லைன் கட்டானது.
என்ன நடக்கிறது? இவர்கள் என்னிடம் ஏதோ மறைக்கிறார்கள் என்று ஏன் எனக்கு தோன்றுகிறது. மாமாவும் அவருடன் இருக்கிறார் என்றால் அவர்கள் வீட்டில் ஏதாவது பிரச்சனையோ? அங்கு தான் இரண்டு நாட்களாக இவர் தன் இரவை கழிக்கிறாரா? அப்படியென்றால் என்னிடம் சொல்லி இருக்கலாமே? ஒரு வேளை என்னை இன்னும் அவர் நெருக்கமானவளாக கருதவில்லை போலும்… இல்லையென்றால் என்னிடம் அவர் துன்பத்தை பகிர்ந்திருப்பார். நான் தான் ஏதோ ஏதோ நினைத்து அவரை ஒட்டிக் கொண்டு சுற்றுகிறேன். ஒரு வேளை அது அவருக்கு சங்கடமாக இருக்குமோ. எப்படி கண்டுபிடிப்பது?’ என்று எண்ணி தன்னை தானே வருத்திக் கொண்டு அந்த பகல் பொழுதை ஓட்டினாள்.
மாலை பொழுது வர கயல் தன் அறையில் படிக்கிறேன் என்று ஏதோ பண்ண அனு தன்னவனுக்காக காத்திருந்து ஏமாந்து போனாள்.
ஏன் இவர் வர இவ்வளவு நேரம்?’ என்று மனதில் நினைத்த படியே தானும் இரவு உணவு உண்டு கயலுக்கும் பரிமாறினாள்.
சிறிய முள் ஒன்பதை தொட்டு நிற்க, கடிந்த முகத்துடன் உள்ளே வந்தான் ஆதி. அவன் இறுகிய முகத்தை பார்த்த அனுவிற்கு ஏதோ தவறாய் பட்டது. எது கேட்டாலும் அமைதியாய் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பவனை நெருங்கவே சற்று தயங்கி ஓரத்தில் நின்றாள் அனு.
அவனை அப்படியே விடமனமின்றி தைரியத்தை திரட்டிக் கொண்டு பின்னிலிருந்து அவன் தோள் பற்றியவள், “சாப்பிடுகிறீர்களா?” என்க, அவனோ  கேள்விக்கு பதில் கூறாமல் அமைதியாய் இருந்தான். அவன் அமைதி சஞ்சலம் ஏற்படுத்த அவன் தோளில் அழுத்தம் கொடுத்தாள் அனு. 
மௌனமே விடையாய் கிடைக்க செய்வதறியாது திணறியவள் மெல்ல அவனை நெருங்கி அவன் அருகில் அமர்ந்து தன் கைகளில் அவன் கன்னம் ஏந்தினாள், “என்ன பிரச்சனை?” என்று மெல்லிய குரலில் வினவ அவள் விரல்கள் தன் போக்கில் அவன் நெற்றியில் பிடிவாதமாக படிந்திருந்த முடியை நகர்த்தின.
அவள் கண்களையே கூர்ந்தவன் எந்த ஒரு அசைவையும் கொடுக்காததால் சற்று எக்கி அவன் நெற்றியில் இதழ் பதிக்க சிலையாய் அமர்ந்திருந்தான். நான் இருக்கிறேன் என்ற அவளது ஆதரவிற்கு அவனின் பதில் பூஜ்யமே. ஆயினும் அவன் முகத்தில் இறுக்கம் தளறுவதை கண்டவள் தைரியத்துடன் தன் இதழை அவன் முகத்தில் படர விட்டாள். அவளின் முயற்சிக்கு சற்று அசைந்தவன் அவன் இதழை தன்னுள் மூடிய மறுநிமிடம் அவளை உதறி தள்ளினான்.
விழிகள் படபடவென்று அடித்துக்கொள்ள அதற்கு போட்டியாய் அவள் இதயமும் டமாரம் அடிக்க என்னவென்று அவள் சுதாரிப்பதற்குள் எண்ணெய்யிலிட்ட கடுகாய் பொரிந்தான், தன் வார்த்தைகள் சீராய் சென்றுகொண்டிருக்கும் தன் திருமண வாழ்க்கையை புரட்டிப் போடப் போவது தெரியாமல், “அறிவிருக்கிறதாடி உனக்கு? மனுஷன் கஷ்டம் புரியாமல்… சீ… என்ன பண்ணுகிறாய்? உன்னை நான் என்னவோ என்று நினைத்தேன். ஆனால் நீயோ நான் எந்த நிலைமையில் இருக்கிறேன் என்று தெரியாமல் நீ…” என்றதை கேட்டதுமே இரண்டு நாட்களாக வானத்தில் சிறகடித்துக் கொண்டிருந்த அவள் மனம் சூக்கு நூறானது.
“உன் அப்பா செய்தது சரி தான். நான் தான் தெரியாமல் வந்து புதை குழியில் விழுந்து விட்டேன்.” என்றவனின் கன்னத்தில் ஐந்து விரல்கள் பதிந்து அவனின் நிலையற்ற நிலையை நிலைக்கு கொண்டுவந்தது.
போதையிலிருந்து தெளிந்தவன் போல் விழித்து தன் சுற்று புறம் உணர்ந்தவனின் மனதில் தான் கொட்டிய வார்த்தைகளின் வீரியம் புரிய அவளை குற்ற உணர்ச்சியோடு ஏறிட்டவன் அப்பொழுது  உணர்ந்தான் திருவள்ளுவரின் கூற்றை…
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே,
நாவினால் சுட்ட வடு.”
கொட்டிய நீரை எப்படி அள்ள முடியாதோ அதே போல் தான் வார்த்தையும்… கணப்பொழுதில் மாற்றத்தை கொண்டுவரும் வரம் வார்த்தைகளில் உள்ளது. வார்த்தைகளால் பிரிந்தவர்களை சேர்க்கவும்முடியும், சேர்ந்து இருப்பவர்களை பிரிக்கவும் முடியும்.
வழிந்த நீரை பிடிவாதமாக உள் இழுத்தவள், “என்ன சொன்னீர்கள்? நான்… அதுவும் என்னை பார்த்து… உங்கள் மனதில் என்னை பற்றி இப்படி தான் நினைக்கிறீர்களா? இப்போது நான் செய்தது அசிங்கம் என்றால் முந்தினம் நீங்கள் என்ன செய்தீர்கள்? அப்பொழுது தெரியவில்லையா… அப்படி அருவருப்பாக இருந்தால் ஏன் என்னுடன் இரண்டு நாட்கள் இருந்தீர்கள்? என் நடவடிக்கை அசிங்கம் என்றால் உங்கள் எண்ணம் அதை விட கீழ். இன்று வரை என் வாழ்க்கையில் வீச வசந்தம் நீங்கள் என்று நினைத்தேன் ஆனால் இன்று தானே தெரிகிறது அது புயல் என்று.” என்றவளை இடைமறித்தவன்,
அனு… அனு… நான்… நான்… ஏதோ மனநிலையில் அப்படி சொல்லி விட்டேன். என்னை மன்னித்து விடு. நான் கூறிய வார்த்தைகள் எல்லாம் வேறு ஏதோ கோபத்தில் வந்தது. அதற்கு காரணம் நீ இல்லை. நீ… இன்னும் என்னை இரண்டு அடி வேண்டுமானாலும் அடித்துக் கொள்.” என்று அவள் அருகில் சென்று பதறினான்.
அடித்து? அடித்தால் அந்த வார்த்தை எல்லாம் திரும்ப போய் விடுமா? இல்லை அது தான் என் மனதை விட்டு அகன்று விடுமா? கூறுங்கள் உங்கள் மன்னிப்பு அந்த இரண்டு நொடி உங்கள் வார்த்தையால் நான் அனுபவித்த வேதனை தான் மறையுமா? என்னை பார்த்து எப்படி சொல்லலாம்?”
இல்லை எனக்கு ஒரு சந்தேகம், இரண்டு இரவுகளாக நீங்கள் எங்கே தங்கினீர்கள்? எந்த கணவன் தன் புது மனைவியை விட்டு வெளியில் தங்குவர். ஒன்று உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை இல்லையென்றால் உங்களுக்கு…” என்று மேலும் பேசியவளை தன் கரத்தால் அவள் வாயை மூடி அடக்கினான்.
இப்படி எல்லாம் பேசாதே அனு. நான் ஒத்துக் கொள்கிறேன்என் மீது தான் முழு தவறும் இருக்கிறது. திடீரென்று நிறைய பிரச்சனைகளில் மாட்டியதால் எனக்கு எப்படி அதை முறைப்படுத்துவது என்று தெரியாமல் உன்னிடம் கத்தி விட்டேன். பிளீஸ்டி… பேபி நம்பு… நான் இனி இப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டேன். உன்னை தவிர யாருக்கும் என் மீது உரிமை இல்லை. யாரையும் நான் நெருங்கவும் மாட்டேன், நெருங்க விடவும் மாட்டேன். ப்ளீஸ்டி…ஏதாவது பேசு…” என்று வியர்த்து விறுவிறுத்து நெஞ்சம் பதறியவனுக்கு தீப்பொறியாய் இருக்கும் அவள் பார்வையையும் அவள் அமைதியும் கண்டு கண்ணீர் சுரந்தது.
அவன் கரத்தை உதறி விட்டவள் அவனுக்கு பதில் அளிப்பதற்குள் தன் கடைக்கண் பார்வையால் கயல் நிற்பதை கண்டு அதிர்ந்தாள்.

Advertisement