Advertisement

பகுதி – 13
“என்னடி வாய் ரொம்ப நீளுகிறது? உன் தந்தையை பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறாய். உன் நடவடிக்கை எதுவும் சரி இல்லைடி. ஒழுங்கு மரியாதையாய் வீட்டிற்கு வரும் வழியைப் பார்.” என்று மறைமுக மிரட்டல் விடுத்தார் அவள் அத்தை.
“என் வீட்டில் தான் நான் இருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் அவரை உங்கள் வீட்டிற்கு கூட்டிப் போய் வைத்துக் கொள்ளுங்கள்.” என்று பயமற்று உரிமையாய் அனு கூற அவள் மாமனுக்கு ஒரு புது யோசனையும், அவள் அத்தைக்கோ வயிற்றில் புளியை கரைத்தது.
“சரி. அப்போது கயலை எங்களுடன் அனுப்பி வை. அவள் இங்கிருப்பது சரி இல்லை.” என்று காய் நகர்த்தினார் அவள் மாமா. கயலும், அவள் அத்தையும் திடுக்கிட்டு அவரை ஏறிட, அனு அவரின் தந்திரத்தை அறிந்தவளாய் அசராது குறுகிட்டாள்.
“உங்களை நம்பி என் தங்கையை அனுப்ப முடியாது.” என்றாள் அனு தீர்க்கமாக.
“ஓ… அப்போது உன் கணவனை நம்பி அவளை உன்னால் இங்கு தனியாய் விட்டு எங்காவது வெளியில் போக முடியுமா? உன் சொந்த மாமா வீட்டை விட இவளுக்கு இங்கு பாதுகாப்பு அதிகம் கிடைக்குமோ?” என்று வஞ்சம் பேச, “ஸ்…” என்று மறுநொடியே தன் நெற்றியை தேய்த்தார் அவள் மாமன்.
என்னவென்று அவர் நிமிர அனைவரும் அவரையும், அனுவையுமே மாறி மாறி பார்க்க, கீழே குனிந்தால் ஒரு கைபேசி கேட்பாரற்று இரண்டாக கிடந்தது. அப்பொழுது தான் புரிந்தது அவள் கையில் கிடைத்த போனை அவர் மேல் கோபத்தில் எறிந்துவிட்டாலென்று.
“ஏய் என்ன திமிரா?” என்று குரூரமான அவர் உறும அவள் அசையாமல் உக்கிரமாய் கண்களை விரித்து முறைக்க அனைவருமே கப்சிப் தான்.
நேற்று வரை அமைதியாய், பண்பாய் இருந்த பெண்ணா இவள்? எங்கிருந்து இவளுக்கு இவ்வளவு தைரியம் வந்தது? கையில் கிடைத்ததெல்லாம் வைத்து அடிக்கிறாள். விட்டால் கழுத்தை பிடித்து அசிங்கப்படுத்துவாள் போலிருக்கே? என்று பதறிய அவள் அத்தை, “நீ இதற்கெல்லாம் அனுபவிப்பாய்டி. நினைவில் வைத்துக் கொள் என்றைக்கு இருந்தாலும் எங்கள் ஆதரவு உனக்கு தேவை, நீயும் எவ்வளவு நாள் இப்படி இருக்கிறாய் என்று பார்க்கிறேன்.” என்று சவாலிட்டார்.
“இதுவரை உங்கள் துணை இல்லாமல் தானே இருந்தேன், இனியும் இருப்பேன்.” என்றாள் அனு சற்று திமிர் கலந்த தோணியில்.
“அக்கா…” என்று கயல் அவள் தோளில் அழுத்தி சமாதானம் செய்ய, “நீ உள்ளே போ. இது உனக்கு தேவை இல்லாதது.” என்று அதே அதட்டல் தொனியில் கயலை அடக்கி, பார்வையை அங்கிருந்த பார்வையாளர்களிடம் வீசினாள், “இன்னும் நீங்கள் போகவில்லையா?”
“ஏய்… எனக்கு ஒரு வழி சொல்லிட்டு நீ எங்கே போக வேண்டும் என்றாலும் போ, என்ன வேண்டுமென்றாலும் பண்ணு, எவன் கூடவோ இரு.” என்ற அவளின் தந்தையை அப்பொழுது தான் கவனித்தாள் ஆதியின் தர்மபத்தினி.
ஏதோ ஒரு ஓரத்தில் தன் தந்தை ஒரு நாள் தன்னை புரிந்து கொண்டு பாசம் காட்டுவார் என்ற எண்ணம் சுக்கு நூறாக உடைந்தது அவரின் கடைசி வார்த்தைகளில்.
அந்த வார்த்தையின் வீரியத்தை விட அதை வீசிவிட்டவராலேயே அவள் மனம் அடிபட்டு போனது. வீறிட்டு எழுந்த அழுகையை தொண்டை குழியில் அடக்கியவள், “உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்று தீர்க்கமாக வினவினாள். தன்னை பெற்ற தந்தை என்பதனால். அவரை அப்படியே தலை மூழ்கவும் மனம் வரவில்லை அவளுக்கு.
“உன்னை திருமணம் செய்து வைக்கிறேன் என்று முத்துவிடம் பணம் வாங்கி இருக்கிறேன். நீ தான் அங்கிருந்து தப்பித்து இங்கு வந்து விட்டாய். அவன் இப்போது கொடுத்த காசை கேட்கிறான், இல்லையென்றால் உன்னை கேட்கிறான். ஒழுங்கு மரியாதையாய் பணம் கொடு இல்லை அவனை கல்யாணம் பண்ணிக்கோ.’ என்றவரின் கன்னம் மறுநிமிடம் சிவந்தது. ஏற்கனவே சற்று போதையில் இருந்ததால் வாங்கிய அடியில் சுருண்டு கீழே விழுந்தார்.
“எங்கே வந்து என்ன பேசுகிறாய்? கேட்க ஆள் இல்லை என்று நினைத்தாயா? அவள் என் மகனின் மனைவி. எங்கள் வீட்டு மருமகள். அவளை பார்த்து என்ன கேட்கிறாய்? வாய் கூசாமல் எப்படி உன் பெண்ணிடம் இப்படி கேட்க முடிகிறது? இன்னொரு தடவை அவளிடம் தப்பாக பேசினாய் என்றால் பல்லை தட்டி கையில் கொடுத்து விடுவேன்!” என்று கடிந்தார் ஆதியின் தந்தை கோபால்.
அனுவின் பேச்சில் வியந்த அந்த மூவரில் கோபாலும் ஒருவர். ஒரு அவசர வேலையாக தன் மகனை அழைத்துச் செல்ல வந்தவர் தன் மகனை பற்றி தவறாக பேசுவதை கேட்டதும் கட்டிலடங்கா கோபம் வந்தது, தான் போய் எதிர்பதற்குள் தன் மகனின் மனையாள் தன் குடும்பம் என்றும் பாராது வெளுத்து வாங்கியதில் அசந்துவிட்டார். தன் மகனை விட்டுக்கொடுக்காமல் அவனை பற்றி யாரும் ஒரு வார்த்தை தவறாக பேசக்கூடாது என்பதில் அனு முடிவாக இருந்ததை பார்த்த கோபாலிற்கு இவர்கள் திருமணத்தால் இருந்த சிறு சஞ்சலமும் மறைந்தது. அவள் படிக்காவிட்டால் என்ன? பாசம், காதல் எல்லாம் இருக்கல்லவா? அது போதாதா தன் மகனின் வாழ்க்கை வசந்தமாக, என்று என்றெண்ணிக் கொண்டிருக்கும் போதே அவள் அப்பாவின் நாராச வார்த்தைகளை சகிக்கமுடியாமல் அமைதிகாத்தது போதும் என்று குறுக்கிட்டார் கோபால்.
அவள் அத்தையிடம் திரும்பியவர், “உங்கள் தயவு எங்கள் பெண்ணிற்கு தேவை இல்லை. அவளுக்கு நாங்கள் இருக்கிறோம். ஒழுங்கு மரியாதையாக கிளம்பி விடுங்கள், என் மகன் வந்தால் அசிங்கப்பட்டு போவீர்கள்.” என்று விரல் நீட்டி எச்சரித்தவர் அவள் மாமாவிடம் திரும்பினார்.
“அனு மட்டும் எங்கள் பெண் இல்லை, அவள் தங்கையும் தான். அனு கூறுவதிலிருந்தே தெரிகிறது உங்கள் மகனின் ஒழுக்கம், உங்களுக்கு என் மகன் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை. அவனின் ஒழுக்கத்தை பார்க்கத் தானே போகிறீர்கள். என் மருமகள் கூறியது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், வாசல் கதவு வலது பக்கம் இருக்கிறது.” என்று தன் பங்கிற்கு ஏலனப் பார்வை வீச, அவர்கள் மூக்குடைந்து செல்வதை வெறித்தபடி நிற்க அவள் சித்தி அவர் அருகில் வந்தார்.
“உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. உங்கள் சம்மதம் இல்லாமல் தீடீரென்று நடந்த திருமணம் என்றாலும் எங்கள் பெண்ணை உங்கள் பெண்ணாக நினைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என் அக்கா இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காது… விதி யாரை விட்டது…” என்று வருந்தியவரை தடுத்த கோபால், “நீங்களே சொல்லி விட்டீர்கள் அவள் எங்கள் பெண் என்று. தன் பெண்ணிற்கு செய்வதற்கு யாராவது நன்றி கூறுவார்களா. உண்மையை சொல்லப் போனால் இங்கே வரும் நிமிடம் வரை என் மகன் மேல் வருத்தம் தான். முன் பெண் தெரியாத பெண்ணை திருமணம் செய்து கொண்டு விட்டான் என்று. ஆனால் அதை எல்லாம் தவிடு பொடி ஆக்கி விட்டாள் என் மருமகள். பிள்ளைகள் சந்தோஷத்தை விட கவுரவம் என்ன பெரியதா?” என்று சிரித்தவாறு அனுவை நோக்க அவள் சிலையாய் நின்றிருந்தாள்.
“என்ன மருமகளே…. இந்த மாமாவிற்கு காபி, தண்ணீர் என்று ஏதாவது உண்டா?” என்று குறும்புடன் கேட்க, “இதோ வருகிறேன் மாமா…” என்று சந்தோசத்தில் மின்னலாய் மறைந்தாள். கயல் அவளை பின் தொடர்ந்து கிட்சனில் தஞ்சமானாள்.
“அது வந்து சம்பந்தி… அவளுக்கு அப்பா மாமா என்றால் ரொம்ப இஷ்டம். ஆனால் அவர்கள் இவளை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. அவர்களுக்கு தேவையான பொழுது இவளை வேலை வாங்கிக் கொள்வார்கள். அம்மாவின் பாசம் முழுமையாக கிடைத்தாலும் சில பந்தங்கள் தேவை அல்லவா, கயலிடம் இருவருமே பாசம் காட்டுவதில் சற்று ஏங்கி விட்டாள். அதனால் தான் நீங்கள் அவளை தன் பெண் என்று சொன்னதும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டாள்.” என்று தன் மகளுக்கு சிபாரிசு பேசினார் அவள் சித்தி, இங்கேயாவது அவளுக்கு எல்லா உறவுகளும், பாசமும் கிடைக்கட்டும் என்ற நம்பிக்கையில்.
“நீங்கள் அவளைப் பற்றி கவலைப் படவேண்டாம். என் மேல் நம்பிக்கை வையுங்கள். ஆதி அவளை நன்றாக பார்த்துக் கொள்வான்.” என்று சொல்லும் போதே கடைசியில் அவர் குரல் சற்று தளுதளுத்தது. முகம் ஏனோ சஞ்சலத்தை உணர்த்தியது. அனு வாழ்க்கையில் இனி எல்லாம் வசந்தமே என்ற நினைப்பில் இருந்த அவள் சித்தி இதை கவனிக்க தவறி விட்டார். ஒரு வேளை கவனித்திருந்தால் வரும் நாட்களில் தன் பெண் சிந்தப் போகும் கண்ணீரை சேமித்திருப்பார்.
“அது… நான் உங்களிடம் ஓன்று கேட்க வேண்டும்…” என்று தடுமாறிய அவள் சித்தியை கோபால் ஊக்குவிக்க, “உங்கள் வீட்டில் சம்பந்தி அம்மா…” என்று இழுக்க அதை புரிந்தவராய், “மகன் மகிழ்ச்சியாய் இருப்பதை பார்த்தால் எல்லாம் சரி ஆகிவிடும். அதுவரை சற்று பொறுத்துக் கொள்ளுங்கள்.” என்றவரின் பதிலே விளக்கியது ரேக்காவிற்கு இன்னும் கோபம் தனியவில்லையென்று.
“மாமா…” என்ற மெல்லிய குரல் கேட்டு மேல் நோக்கியவர் அனு தட்டில் காபியுடன் நிற்பதை பார்த்து அதை எடுத்துக் கொண்டு அவளை அமரச் சொன்னார்.
என்ன பேசுவது என்று தெரியாது கையை பிசைந்தவள் தன் மாமனாரின் முகத்தை ஏறிட்டு, “அத்தை வர வில்லையா?”
கோபால் முகத்தில் தோன்றிய அசெளகரியமே அனுவிற்கு நிதர்சனம் உணர்த்தியது. ஏதாவது சொல்லி சமாளிப்போம் என்று நினைத்த கோபால் கால் நீட்டி உட்கார ஏதோ காலில் குத்தியது. என்னவென்று பார்க்க மூவரும் கீழே குனிய அனு உடைத்த மொபைல் துண்டுகள் என புரிந்து அனு சிறு பிள்ளை போல் திறுதிறுவென முழித்தாள். ஏதோ ஒரு உணர்ச்சிப் பெருக்கில் நடந்துவிட்ட ஒன்று தற்போது தெளிவாய் விளங்க அனு செய்வதறியாது திகைத்து நின்றாள்.
அவளின் பாவனை பார்த்து உவகை பொங்க, அதை மறைக்க கோபால் முகத்தை திருப்ப ஆதி உள்ளே நுழைவதை பார்த்தவர், “தம்பி, பெண்டாடிகிட்ட ஒழுங்காக நடந்துக் கொள் இல்லையென்றால் உனக்கும் இதே கதி தான்.” என்று கீழே கிடந்த மொபைல் துண்டுகளை காட்ட அனு முகத்தில் பேய் ஆடியது அவர் கேலி செய்வது தெரியாமல்.
“இல்லை, இல்லை நான் அவரை அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்.” என்று பதறி அடித்து பிதற்றியவளை கண்டு இருவரும் சிரிக்க இப்போது ஆதி திறுதிறுவென முழித்தான். 
கோபால் கூறிய வார்த்தைகளை கொணர்ந்து உள்ளே வந்த ஆதி தான் தன் அனுவின் கணவன், தனக்கு மாப்பிள்ளை என்றுனர்ந்தார் அவள் சித்தி.
“இங்கு என்ன நடக்கிறது?” என்று ஷூவை கழட்டியபடியே உள்ளே வர அனு அவனிடம் சென்று லேப்டாப் பையை வாங்கிக் கொண்டாள். தன் தந்தை வீட்டிற்கு வந்ததில் சற்று சந்தேகம், பதற்றம் இருந்தாலும் அதை அனு முன் காட்டக் கூடாது என்று மறைக்க முயன்றான்.
ஆனால் இவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி இருவரும் வெவ்வேறு காரணங்கள் கூறி வெளியேற ஆதி அறைக்கு சென்றான்.
அவனை தொடர்ந்து சென்றவள் அவனை பின்னாலிருந்து கட்டிக் கொள்ள அவள் விரலுடன் தன் விரல்களை பிணைத்துக் கொண்டு அந்த நொடியை அமைதியாய் ரசித்தான்.
“என்னவாயிற்று அமைதியாய் இருக்கிறாய்?” என்று கேட்டது தான் தாமதம் மடை திறந்த வெள்ளமாய் கண்ணீர் துளிகள் அவன் முதுகை நனைத்தன.
“ஏய்… என்னாச்சு டார்லிங்?” என்று அவன் பதறி, அவளை தன் முன் இழுக்க விம்மி விம்மி அழுதவள், “… நீங்கள்… ஆசையாய்… வாங்கித்… தந்தப் போனை…உடைத்து… விட்டேன்…” என்று அவள் மீண்டும் தன் அழுகையை தொடர ‘ஙே…’ என விழித்தான் ஆதி.

Advertisement