Advertisement

பகுதி – 12
“அக்கா இன்னும் மாமா வரவில்லையா? கொஞ்சமாவது சாப்பிடு அக்கா மணி பத்தாகிறது பார்.” என்று தன் அறையிலிருந்து வெளிவந்து மனம்தாளாமல் கயல் கேட்க அனுவோ,
“ப்ச்… எனக்கு இப்போது வேண்டாம். அவர் வரட்டும், நான் அவருடன் சாப்பிட்டுக் கொள்கிறேன்.” என்று விட்டேற்றியாய் பதிலளித்தாள் தன் பார்வையை வாயிலிலிருந்து பிரிக்காது.
சட்டென்று ஏதோ நினைவு வந்தவளாய் கயலிடம் திரும்பி, “நீ போய் தூங்கு. நாளை உனக்கு பள்ளி உண்டு.” என்று கூறி வாயிற் கதவை மீண்டும் வெறிக்க ஆயுத்தமானாள்.
“நான் உனக்கு துணையாக மாமா வரும் வரை இங்கிருக்கிறேன்.” என்று மறுத்தாள் கயல்.
“அதெல்லாம் வேண்டாம். நீ போய் தூங்கு.” என்று அவளை அறையில் தள்ளாத குறையாய் விரட்டினாள்.
இரவு முழுவதும் அவனுக்காக காத்திருந்து அனு சோபாவிலே உறங்கிப் போனாள். கயல் தான் கதவு திறந்தே இருந்தமையால் கதிருடன் பேச முடியாமல் பரிதவித்தாள்.
சூரியன் தன் கதிர்களை வீசத் துவங்க, அதன் ஒளியில் துயில் களைந்தாள் அனு.
‘இரவு இப்படியே தூங்கிவிட்டேனா? அப்பொழுது அவர்?’ என்று அனு திடுக்கிட்டு வாசலுக்கு ஓடினாள். இரவு தான் எப்படி கதவை பூட்டினோமோ அப்படியே இருந்தது, ‘இரவு முழுவதும் அவர் வரவில்லையா? எங்கே சென்று  இருப்பார்? சாப்பிட்டாரா? என்று ஒன்றும் தெரியவில்லையே!’ என்று நினைத்தவள் அவனுக்கு போன் செய்தாள். அவன் எடுக்காமல் இருக்கவும் பதறியவள் கடிகாரத்தை பார்க்க மணி ஆறென்று காட்டியது.
நேற்று மாலை ஆறு மணிக்கு போனவர் இன்னும் வீடு திரும்பவில்லை என்றதுமே வெடவெடத்துப் போனவள் அவசர அவசரமாக முரளிக்கு போன் செய்ய அவனும் எடுக்கவில்லை.
‘வேறு எங்கு போய் தேடுவது? வேறு யாரைக் கேட்டால் தெரியும்? அவர் வேலை செய்யும் இடம் கூட எனக்கு தெரியாதே?’ என்று பதறிய மனதிற்கு ஆறுதலாய் அவள் போனிற்கு மேசேஜ் வந்தது ஆதியிடமிருந்து.
‘வர நேரமாகும். பிறகு கால் செய்கிறேன்.’ என்ற அவனது குறுஞ்செய்தியை படித்த பின்பே அவள் மனம் நிலையானது.
விறுவிறுவென தன் வேலைகளை முடித்து கயலை பள்ளிக்கு அனுப்பி விட்டு அமர்ந்தவள் காலிங்பெல் சத்தம் கேட்டு கதவை திறக்க ஒரே நாளில் தன் மொத்த சந்தோஷத்தையும் இழந்தவன் போல் நின்றிருந்தான்  ஆதி.
“என்னவாயிற்று உங்களுக்கு?” என்று முகம் சுருங்கியவள் தாமதிக்காமல் அவன் கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்.
“பிரெஸ்ஸா ஏதாவது குடிக்க கொண்டுவா.” என்று கட்டளையிட்டவன் சோர்வாக சோபாவில் தலை சாய்ந்தான்.
“இதோ வருகிறேன்…” என்று சிட்டாக பறந்தாள் அனு.
சில நிமிடங்கள் கழித்து, பின்னாலிருந்து தன் நெற்றியை  அனு நீவி விடுவதை உணர்ந்தவன் பெருமூச்சை வெளியேற்றி கண்களை திறக்க, பிரகாசமாய் பளிச்சென்று ஒளிர்ந்த அனுவை தன் கரம் கொண்டு கீழே சாய்த்து அவள் நெற்றியில் இதழ் பதிக்க அவள் இதழ்கள் அழகாய் விரிந்தது.
“ஏதும் பிரச்சனையா?” என்ற அவளது கேள்விக்கு அவன் முகம் இறுகுவதை கண்டு மெல்லிய அச்சம் படருவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
“ஒன்றும் இல்லை. சரி டிபன் எடுத்து வை. நான் குளித்து விட்டு வருகிறேன் ஆபிஸ் போக வேண்டும்.” என்றவன் அவள் எடுத்து வந்திருந்ததை பருக,
“சோர்வாக தெரிகிறீர்கள்? விடுப்பு போட்டு ஓய்வு எடுங்கள்.”
“ப்ச்… இந்த வாரம் ஏற்கனவே மூன்று நாட்கள் விடுப்பு எடுத்தாகிற்று இன்று கண்டிப்பாக போக வேண்டும்.” என்று அங்கிருந்து நகர்ந்தான் அவன்.
அவன் முதுகையே வெறித்தவள் மனதில் ஏனோ இனம் புரியா பயம் சூழ்ந்தது.
‘தேவை இல்லாமல் ஏதேதோ யோசிக்காதே! போய் அவருக்கு உதவு!’ என்று அவள் மூளை ஊந்த அவள் மனம் கேட்க மறுத்தது. அவன் முகம் இறுகிய அந்த இரண்டு நொடிகள் பல கதைகளை கூறியது.
“அனு, டவல் எடுத்து வா. மறந்து விட்டேன்.” என்ற அவனது சத்தமே அவளை வெளிக்கொணர்ந்தது.
வேகவேகமாக சிற்றுண்டியை உள்ளே தள்ளிவிட்டு விரைந்தான் ஆதி.
பகல் முழுதும் வீட்டை ஒழுங்குபடுத்துவது, எம்பிராய்டரி போடுவது என கழித்தவள் இடைஇடையில் ஏனோ வெறுமையை உணர்ந்தாள். இதுநாள் வரை எப்பொழுதும் வேலை செய்தே பழக்கப் பட்டவளுக்கு இந்த தனிமை அமைதிக்கு மாறாய் மனச்சோர்வையே தந்தது. முன்தினம் தான் வாழ்க்கையின் மொத்த மகிழ்ச்சியையும் ஒரே தினத்தில் அடைந்ததாய் உணர்ந்தவள் மறுநாளே சோகமே உருவாய் உணர்ந்தாள். சோகம் என்று கூட சொல்ல முடியாது, ஏனெனில் சோகத்திற்கான காரணமே தெரியாத பொழுது என்னவென்பது? அவனுக்கு கால் செய்யலாம் என்று தோன்றினாலும் அவனை தொந்தரவு செய்யக் கூடாது என அவ்வெண்ணத்தை விட்டாள்.
வீட்டின் அழைப்பு மணி ரீங்காரமிட தன் எம்பிராய்டரி வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு வெளியே வர அங்கு நின்றவர்களை பார்த்து ஆச்சர்யமானாள்.
“மாமா, அத்தை, சித்தி…” என ஆர்பரிக்க அவர்களுடன் கயல் இருப்பதை பார்த்ததுமே புரிந்தது, வீடு தெரியாததால் அவளுடன் வந்திருக்கிறார்களென்று. ஏனோ அவளது கண்கள் கடைசியில் இருந்த அவள் தந்தையை காணத் தவறியது.
அவர்களை உள்ளே வரவேற்க அவர்களின் கண்களும், மனமும் இவள் இவ்வளவு சொகுசாக வாழ்கிறாளா? சோபா, பெரிய டிவி, சுவர் முழுக்க அழகிய வேலைப்பாடுகள், சாப்பிட தனியே டைனிங் டேபிள், ஒரு ஓரத்தில் இன்னும் தன் வேலையை தொடங்கா புதிய கம்ப்யூட்டர், குனிந்து பார்த்தால் முகம் தெரியும் டைல்ஸ் என்று ஓரளவு விசாலமான வீடே அவர்களுக்கு ஒரு பெரிய வீடு போல் தோன்றியது. அந்த நால்வரில் அவளுக்காக சந்தோஷப்பட்டது ஒரு ஜீவன் தான்.
அடுப்படியில் அவர்களுக்கு காபி போட்டவள் பக்கத்தில் சத்தம் இல்லாமல் வந்து நின்றார் அவள் சித்தி. வாஞ்சையுடன் அவள் கன்னம் பற்றியவர்,
“எப்படி இருக்கிறாய்? உனக்கு திருமணம் நடந்த விஷயமே நேற்று இரவு தான் எனக்கு தெரியும். கயலும் உன்னுடன் தான் இருக்கிறாலாமே? மாப்பிள்ளை பெரிய இடம் என்று கேள்விப்பட்டேன். உன்னை நன்றாக பார்த்துக்கொள்கிறாரா? உனக்கு பிடித்திருக்கிறதா? ஏதும் சிரமம் இருக்கிறதா? நன்றாக பழகுகிறாரா, உன் தந்தை போல் இல்லையே?” என்றவர் கண்ணில் பயம் அப்பட்டமாக வெளிப்பட்டது.
தன் தாய் இல்லாக்குறையை எப்போது தன்னை பார்க்க வந்தாலும் போக்குபவர் இன்றும் அந்த குறை வைக்கவில்லை.
மென்மையாக அவரை பார்த்து கண்சிமிட்டிய அனு, “நான் சந்தோசமாக இருக்கிறேன் சித்தி. அவர் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார். எனக்கு பிடித்ததெல்லாம் வாங்கித் தருகிறார், என் படிப்பை தொடரக்கூட முழு முயற்சியுடன் எனக்கு உதவுகிறார். உங்களுக்கு தெரியுமா நேற்று தான் நான் இறுதி பரிட்சை எழுத விண்ணப்பித்து வந்தோம். பெரிய மொபைல் எல்லாம் வாங்கித் தந்திருக்கிறார். கயலையும் தன் சொந்தமாக நினைத்து அவளுக்கும் எல்லாம் செய்கிறார்.” என்று அவர் தோளில் வசதியாய் முகம் புதைத்து அவன் புகழ் பாடினாள்.
“அதெல்லாம் சரி, உனக்கு அவரை பிடித்திருக்கிறதா?” என்று சற்றும் பதைபதைப்பு குறையாமல் கேட்டார் அவள் சித்தி. தாய் மனம் என்றுமே தன் பிள்ளைகள் நிம்மதியையே வேண்டும். நாம் நேசித்தவர் நம்முடன் இருக்கும் பொழுது எந்தக் கஷ்டமும் பெரிதாய் தெரியாது; அதுவே நேர்மாறானால் தினம் தினம் நரகமே.
நாணத்தில் முகம் தாழ்த்தி ம்…என்றவளை நிமிர்த்தி “பதில் சொல்லுடி, உன்னுடைய வார்த்தையில் தான் உன் வாழ்க்கை இப்போது அடங்கி இருக்கிறது. உனக்கு தெரியாதா உன் மாமாவும், அத்தையும் காரணம் இல்லாமல் உன்னை தேடி வர மாட்டார்களென்று?” என்று படபடப்புடன் புருவம் சுருங்க வினவியரை பார்த்தவள், “எனக்கு அவரை பிடித்திருக்கிறது.” என்று சூழ்நிலை உணர்ந்தவளாய் பதிலளித்தாள்.
“ஏய் அனு… உள்ளே என்ன செய்கிறாய்? உன் வீட்டில் விருந்து சாப்பிட வரவில்லை நாங்கள்…” 
வெளியில் தன் அத்தையின் விகார குரல் கேட்டு திடுக்கிட்டவள் வேகமாய் வெளியே ஓடினாள்.
அதுவரை வீட்டையே முழுங்குவது போல் பார்த்தவர்கள் அனுவும், அவள் சித்தியும் வெகு நேரமாய் வெளியில் வராததை கண்டு எங்கு தம் திட்டம் வீணாகி விடுமோ எனும் பயத்தில் தான் வந்த காரியத்தை ஆரம்பித்தார்.
கயலும் அவள் தந்தையும் எங்கு என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது, முன்னரே அனு கூறியது போல் கயல் மேல் சற்று அதிக பாசம் வைத்தவராகிய அவள் தந்தை அவளிடம் நலம் விசாரித்ததோடு தன்னுடன் வருமாறு அவளிடம் விண்ணப்பம் போட்டுக் கொண்டிருந்தார்.
“அத்தை ஏன் அப்படி சொல்கிறீர்கள்? முதல் முறையாய் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள் இருந்து சாப்பிட்டுவிட்டு தான் செல்ல வேண்டும்.” பாசம், பிணைப்பு என்ன விலை என்பவர்களிடம் பணிவாய் கோரிக்கை வைத்தாள்  அனு.
“என்னடி வசதியாக இருக்கிறாய் என்று குத்திக்காட்டுகிறாயா?” அவரின் திமிரான வார்த்தைகளில் இருந்த நஞ்சு அவளை வெகுவாய் தாக்கியது.
“அய்யோ… அப்படி எல்லாம் நான் ஒரு போதும்  நினைத்ததில்லை. நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்.”
“எல்லாம் எங்களுக்கும் தெரியும்டி. கொஞ்சம் சொகுசு வாழ்க்கை கிடைத்தவுடன் உன் அப்பாவை கழட்டி விட்டுவிட்டாய். நீ தெளிவாகத் தான் இருக்கிறாய்.” என்று நாக்கில் நரம்பில்லாமல் சாடினார் அவள் தந்தையின் தங்கை.
“வார்த்தையை அளந்து பேசுங்கள். நான் இதையெல்லாம் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.” என்று குறுக்கிட்டார் அவள் சித்தி.
“நான் அப்பொழுதே கூறினேன் இவளை கூப்பிடாதேனு, கேட்டாயா நீ? உன் தங்கை பேச்சு சரி இல்லை. கண்டித்து வை.” என்று தன் கணவரிடம் பொறிந்தார் அவள் அத்தை. அவருக்கோ எங்கு தன் அண்ணன் அனு இல்லாததால் தன் வீட்டிற்கு வந்துவிடுவாரோ, அவரை வைத்து கஞ்சியும் தான்தான் ஊற்ற வேண்டுமோ என்கின்ற பயம்.
அனு தாயுடன் பிறந்தவர்கள் இருவர் ஒரு அண்ணன், ஒரு தங்கை. அனுவின் தாய்மாமன் அவள் அத்தையையே மணந்துக்கொண்டார்.
“நீ குறுக்கே வராதே. எவனோ ஒருவன் திடீரென்று அவள் கழுத்தில் தாலி கட்டி யாருக்கும் தெரியாமல் இங்கே தங்க வைத்து குடித்தனம் நடத்துவான். பற்றாக்குறைக்கு கயலையும் இங்கு அழைத்து வந்து கூத்தடிப்பான். நீ அதற்கு வாக்காளத்து வாங்குகிறாயா?” என்று அனுவின் மாமன் தன்  தங்கையை சாட, தன் மணவாளனை பற்றி தன் மாமன் அவதூறு பேசுவதை கேட்ட அனு சினம் கொண்ட பசுவாய் மாறினாள். அவள் மாமனின் கணக்கோ வேறு, அனுவை தன் வீட்டு மருமகள் ஆக்கினால் தன் வீடு செல்வ செழிப்பாகும் என்று ஏதோ ஒரு ஜோசியர் கூறியது பலிக்க வேண்டும். அதற்கு இந்த திருமண பந்தத்தை உடைக்க வேண்டும் என்ற குறிக்கோள். 
“நீங்கள் யார் அவரை பற்றி பேசுவதற்கு? என்னைப் பற்றி பேச மட்டுமே உங்களுக்கு உரிமை இருக்கிறது. என் கணவரை பற்றி பேச இங்கு யாருக்கும் உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை. ஏதோ தாய்மாமன், அத்தை என்று கொஞ்சம் பரிந்தால் தலையின் மேல் உட்கார்கிறீர்களா? முதலில் உங்கள் வீட்டு பிள்ளையின் ஒழுக்கத்தை பாருங்கள், தன்னை விட பத்து வயது சிறிய பெண் என்று கூட பாராது அவளிடம் தப்பாக நடக்க முயன்றானே.” என்று எகிறியவளின் மூளை அவளை பின்னோக்கி அழைக்க சுதாரித்தவள், “என் கணவருக்கு மரியாதை கொடுப்பதாக இருந்தால் உட்காருங்கள் இல்லையேல் வாயில் கதவு வழி தெரியும் என நினைக்கிறேன்.” என்று தன் விழியை திருப்பிக்கொண்டாள்.
இவளின் இந்த புதிய அவதாரத்தை பார்த்து மூன்று பேர் வியக்க மற்றவர்கள் வாயடைத்துப் போனார்கள். 

Advertisement