Advertisement

பகுதி – 11
மதிய நேர களைப்பிற்கு சற்று ஓய்வு எடுக்க ஆதி திவானில் சாய, அனுவையும் தன் மேல் சாய்த்துக் கொண்டான்.
“நான் உங்களிடம் ஒன்று கேட்கவா?” என்று எதற்கோ அடித்தளம் போட்டாள் தன் முகத்தை அவன் மார்பிலிருந்து மேல் எழும்பி.
தலையசைத்து அவளை பேசத் தூண்டியவன், அவள் என்ன கேட்கப் போகிறாள் என்ற ஆர்வத்தோடு தன் காதுகளை விரித்தான்.
“நான் உங்களை எப்படி கூப்பிடுவது?” என்று அசடு வழிந்தாள் அனு.
“ப்உ… இதுக்குத் தான் இவ்வளவு அக்கப்போரா?” என்று தான் அடக்கிய மூச்சை வெளியிட்டான் ஆதி. 
“விளையாடாதிங்க… சொல்லுங்க…” என்று பதிலுக்கு சிணுங்கினாள் அனு.
“இதெல்லாம் ஒரு கேள்வி என்று நீ கேட்கிறாய் ?அதற்கு நான் பதில் வேறு கூற வேண்டுமோ?” என்று அலுத்துக் கொண்டவனை பார்த்தவளுக்கு கோபம் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.
“நீங்கள் செய்வது ஒன்றும் சரி இல்லை. அதென்ன நான் எது கேட்டாலும் சலித்துக் கொள்கிறீர்கள் இல்லை கேலி செய்கிறீர்கள். தெரியாமல் தானே கேட்கிறேன்.” என்று குரல் உயர்த்தியவளை தன் கண்களை உருட்டி முறைக்கிறேன் என்ற பெயரில் ஏதோ செய்ய அனு குபீரென சிரித்து விட்டாள்.
“உங்களுக்கோ சிறிய கண். உங்கள் முகத்தில் அது தெரிவதே பெரிய விஷயம் அதில் நீங்கள் என்னவோ உருட்டி எல்லாம் முறைக்கிறீர்களா? எனக்கு சிரிப்பாக வருகிறது.” என்று கேலி பேசியவள் வாய் பொற்றி சிரிப்பை அடக்க, அவளை தன் கீழே தள்ளி அவள் மேல் சரிந்தான் ஆதி.
“என்னடி ரொம்ப ஓவராக கலாய்க்கிறாய். ஒரு நாளில் ரொம்ப தான் உனக்கு குளிர் விட்டு விட்டது.” என்று அவன் பொலியாய் மிரட்ட அதை உண்மை என்று நம்பியவள் அவனை கீழ் இழுத்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
“இப்போது கோபம் குறைந்து விட்டதா?” என்று கேட்டபடியே அவன் பதிலை எதிர்பாராமல் தன் செயலில் நாணம் கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்தாள்.
“அப்போது உண்மையாக கோபப்பட்டால் நிறைய கிடைக்கும் போலிருக்கே.” ஆவலாய் விசிலடித்து கேலி செய்தவன் தன் இதழை அவள் முகத்தில் படர விட்டான்.
அவன் தாக்குதலிலிருந்து பிரயத்தனப்பட்டு வெளி வந்தவள் அவன் முகத்தை தன் கைகளில் ஏந்தி, “அப்பொழுது நிஜமாகவே கோபம் இல்லையா. நான் தான் ஏமார்ந்து விட்டேனா?” என்றாள் அப்பாவியாய்.
“ஆமாடி செல்லம்.” என்று ஆசை மொழி பேசி அவள் மூக்கை பிடித்து ஆட்ட அவன் கையை உதறியவள், “நான் கேட்டதற்கு இன்னும் பதில் கூற வில்லை நீங்கள்.” என்று தான் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றாள் அனு.
“கெட்டிக்காரிடி நீ… உனக்கு வேண்டியது கிடைக்காமல் தூங்க மாட்டியோ? உனக்கு எப்படி கூப்பிடனும் என்று தோன்றுகிறதோ அப்படியே கூப்பிடு. ஆனால் இந்த மாமா, அத்தான் என்றெல்லாம் கூப்பிடாதே.” என்றவன் அவளிடமிருந்து விலகி தன் புறம் படுக்க அவளும் அவனை அணைத்துக் கொண்டாள்.
“ஏன்?” அவன் சட்டை பட்டனை திருகியபடி கேட்டாள்.
“கயலும் மாமா என்று தான் கூப்பிடுகிறாள், அத்தான் என்ற வார்த்தை கேட்டு அலுத்து விட்டது. நீ வேறு மாதிரி செல்லமாக கூப்பிடு. நானும் என் மனைவியின் கொஞ்சலை கேட்க வேண்டுமே.” என்று கண்ணடித்தான்.
“பார்க்க நல்ல பிள்ளை மாதிரி இருந்து கொண்டு செய்வதெல்லாம் சேட்டை.” என்றவள் தன் மேல் சீண்டலுடன் சுதந்திரமாய் வலம் வந்த அவன் விரல்களை தடுத்தாள்.
“நான் என்று நல்ல பிள்ளை என்று கூறினேன்? நீயாக புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. மேலும் நீ என்னுடன் பேசவே கூச்ச பட்டதால் கொஞ்சம் உனக்கு நேரம் கொடுத்தேன் அவ்வளவு தான். இனி அதெல்லாம் கிடையாது என் செல்ல பொண்டாட்டி.” என்று அவளை கிழே தள்ளி முன்னேற நினைத்தவனை மீண்டும் தடுத்தாள் அனு.
அவளின் விருப்பமின்மையை உணர்ந்தவன் தன் மோன  நிலையிலிருந்து ஷாக் அடித்தது போல் தெளிந்தான். அவளை கட்டாயப்படுத்தி விட்டோமோ என்று தன்னுள்ளே கூனிக் குறுகினான். அவள் முகத்தை பார்க்க சங்கடப்பட்டு மறுபுறம் உருண்டு அவளுக்கு தன் முதுகு காட்டி படுத்தான்.
‘முட்டாள்… முட்டாள்… அறிவில்லையாடா உனக்கு. அவள் சம்மதம் இல்லாமல் எப்படி நீ அவளை நெருங்கலாம். முன்பின் தெரியாமல் உன்னை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைத்தவள் டா அவள். அவளை எப்படி உன் ஆசைக்கு கட்டாயப்படுத்தலாம்.’ என்று தன்னை தானே வசைப்பாடிக் கொண்டிருந்தவன் அவளின் மூச்சு காற்றை தன் காது மடலில் உணர அடித்து பிடித்து திரும்பினான்.
அவனின் செய்கையை எதிர்பாராதவள் அவன் திரும்பிய வேகத்தில் நிலை தடுமாறி அவன் மேல் விழ, அனுவின் இதழ்கள் தன் இணையுடன் சேர்ந்தது. அவன் கரங்கள் அவனிடத்தே இருக்க அனு சந்தேகத்தோடு நிமிர்ந்தாள்.
“என்ன கோபமா?” என்றாள் கண்களில் பரிதவிப்போடு. தான் ஒன்று நினைத்து அவனை தடுத்தால் அதை அவன் தப்பாக புரிந்து கொண்டு விடுவானோ என்ற பயத்தோடு அவன் அருகில் சென்றாள் அனு.
“அதெல்லாம் இல்லடா. என்னை மன்னித்து விடு. இனி இந்த தவறு நடக்காது.” என்று அவள் கன்னம் ஏந்தி பதறினான்.
“ஐயோ… மன்னிப்பெல்லாம் கேட்டு என்னை சங்கடப் படுத்தாதீங்க. உங்களுக்கு என் மேல் முழு உரிமை இருக்கு ஆனால்… எனக்கு ஒரு சந்தேகம்…” என்று முதலில் பதறி பின் இழுத்தாள்.
அவள் சொல்லில் சற்று தெளிந்தவன், “என்ன சந்தேகம், என்கிட்ட கேட்க ஏன் தயங்குகிறாய்?” என்று ஆதி அவளை ஊக்குவிக்க அவளும் திக்கித்திணறி கேட்டாள்.
“நீங்கள் யாரையாவது இதற்கு முன்… முன்… முன்…” என்று தேய்ந்த ரெகார்ட் போல் இழுத்தவள் அவன் முறைப்பைப் பார்த்து கடகடவென ஒப்பித்தாள் “காதலித்தீர்களா?”
இரண்டு நிமிடம் மௌனமாய் அவள் முகம் நோக்கியவனின் மனைவியோ ஒவ்வொரு நொடியையும் கரணம் தப்பினால் மரணம் என்று கடந்தாள்.
“இல்லை.” என ஆதி கூறிய மறு நிமிடம் அனு அவனை இறுக கட்டிகே கொண்டாள். அவனின் மறுப்பு அவளுள் இருந்த அத்தனை தவிப்பையும் தவிடுபொடி ஆக்கியிருந்தது.
“மேடம்… கொஞ்சம் பொறுங்க… ஏய்… ஏய்… மூச்சு விட கொஞ்சம் இடைவெளி கொடுடி.” அவளது இறுகிய அணைப்பை அவன் கேலிப்பேச அந்த அறையே சிரிப்பொலியில் அதிர்ந்தது.
“அனு, கொஞ்சம் தள்ளு. யாரோ கால் செய்கிறார்கள்.” என்று அனுவிடம் கெஞ்சினான். அவளோ முடியாது என்று அவனை எழ விடாமல் விளையாடிக் கொண்டிருந்தாள்.
“சரி மொபைலையாவது எடுக்க விடு.” என்றபடி அவளின் இடையை கிள்ள வலியில் துள்ளியவளை ஏமாற்றி ஹாலிற்கு மொபைலை எடுத்துச் சென்றான்.
அவனை பின்னே துரத்தி வந்தவள், அமைதியாய் அவன் எதிரில் சென்று பழுப்பு காணப்பித்து கிட்சனில் தஞ்சம் புகுந்தாள்.
“உன்னை இரவு பார்த்துக் கொள்கிறேன்.” என்று கத்தியவன் அடுத்து அவர்கள் வாழ்வில் வீசப் போகும் புயல் தெரியாமல்  மொபைலை ஆன் செய்தான்.
“ஆதி, மாலை நாம் எப்போதும் போகும் காபி ஷாப் வந்துவிடு. உன்னிடம் ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும்.” என்றான் முரளி மறுமுனையிலிருந்து.
“நாளைக்கு ஆபிஸ் வந்துவிடுவேன். நாளை பேசிக் கொள்ளலாம். மாலை அனுவை வெளியே கூட்டி போகிறேன்டா.” என்று முரளி கூறியதை மறுத்தான் ஆதி.
“நீ வேற ஏன்டா. முக்கியமான விஷயம் என்று சொன்னால் புரியாதா. உன் வாழ்க்கை மேல் அக்கறை இருந்தால் வா.” என்று சிடு சிடுத்து அழைப்பை துண்டித்தான் முரளி.
‘என்ன ஆயிற்று இவனுக்கு?’ என்று மொபைலை வெறித்தவனை பார்த்தவள், “ஏதாவது பிரச்சனையா? ஒரு மாதிரி இருக்கிறீர்கள்.”
“ஒன்றும் இல்லை. மாலை வெளியில் செல்ல வேண்டும். நீயும், கயலும் பத்திரமாக இருங்கள்.” என்று யோசனையினூடே கூறினான். இதுவரை முரளி இப்படி கோபப்பட்டு பேசியதே இல்லை. அப்படி என்ன தலை போகிற விஷயமாக இருக்கும், அதுவும் என் வாழ்க்கை விஷயம் என்கிறான், என்று மூளை பதிலை தேடிக் கொண்டிருக்க அவன் கை அனுவை தன் வளைவில் கொண்டு வந்தது.
அவனின் சிந்தனை பரவிய வதனத்தை பார்த்தவள், “என்னவாயிற்று உங்களுக்கு?” என்று அவன் கன்னம் ஏந்தி கேட்டாள் அனு. அவனின் முகம் சுருங்குவதை கண்டதுமே தானும் இனம் புரியா கஷ்டத்தை உணர்ந்தாள். இதற்கு பெயர் தான் காதலோ, என்று அவள் உள்ளுணர்வு ஒரு புறம் கூச்சலிட அவள் மூளை அவனின் அசைவுகளை நுணுக்கமாக பதிவித்துக் கொண்டது.
“ஒன்றும் இல்லைடா. ஆங்… சொல்ல மறந்து விட்டேன் பார், கயல் பள்ளி போக ஆட்டோ சொல்லி இருக்கிறேன். இங்கிருந்து அவள் இனி நடந்து போக வேண்டாம். காலையில் அவள் கிளம்பும் நேரம், மாலை அவள் திரும்ப வரும் நேரம் மட்டும் சொன்னால் போதும். நாளை உனக்கு புத்தகமும், கம்ப்யூட்டரும் நெட் கனக்ஸ்சனுடன் வந்து விடும். உனக்கு தேவையான விஷயங்களை அதிலிருந்து பார்த்துக் கொள்ளலாம். கயலுக்கும் உபயோகமாக இருக்கும். எக்ஸாமிர்க்கு இன்னும் கொஞ்ச நாட்களே உள்ளது. நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல் படி. சந்தேகங்களை என்னிடம் கேள். வேண்டுமென்றால் நான் தெரிந்தவர்களிடம் சொல்லி டியூஷன் ஏற்பாடு செய்கிறேன்.” என்றவன் அவளின் பெருமிதப் பார்வையில் தன்னை பறி கொடுத்தான்.
“ஏய்… இப்படி எல்லாம் பார்த்து என்னை உசுப்பேற்றாதே டி…” அவள் மடல்களை தன் இதழால் உரசியபடி கிசுகிசுத்தான்.
“ம்… அதெல்லாம் முடியாது. அதெப்படி நீங்கள் இவ்வளவு பொறுப்பாக, பண்பாக, பாசமாக இருக்கிறீர்கள்? எனக்கு இப்போதெல்லாம் உங்களுடன் பல வருடங்கள் வாழ்ந்த மாதிரி இருக்கிறது.” என்று பெருமூச்சிட்டு எக்கி அவன் முகத்தில் தன் முத்திரை பதித்தவள் அவனுடன் ஒன்றினாள்.
“இன்னொரு விஷயம் கயல் இருக்கும் போது இப்படி சிறு பிள்ளை போல் பழுப்பு காண்பிப்பது, கட்டி அணைப்பது, முத்தம் கொடுப்பது என்று இருக்க கூடாது புரிகிறதா. இப்போது அவளுக்கு மனம் அலைபாயும் வயது ஆதலால் முன் உதாரணமாக நாம் தான் இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் இரவு நம் அறையில் பேசிக் கொள்ளலாம். ஆனால் அவள் முன் சண்டை இருந்தால் வெளிக்காட்டக் கூடாது. இனி அவளை பொறுத்தவரை நாம் இருவர் தான் அவள் குடும்பம், அதற்கேற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் அவள் தனிமையை உணரக் கூடாது.” என்று கண்டிஷன் போட்டான்.
“இதில் சில விஷயங்கள் தவறு. குடும்பம் என்றால் சண்டை, சச்சரவு எல்லாம் இருக்கத் தான் செய்யும். அதை பார்த்து வளர்ந்தால் தான் அவளுக்கு உலக நியதி புரியும். இல்லையென்றால் அவள் ஒரு கனவு உலகம் கட்டி அதில் சந்தோசம் மட்டுமே இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பாள். அது சரி வராது. தனிமை, அவளுக்கு பழகியது. நான் வெளியில் சில நேரம் அதிக நேரம் வேலை செய்வேன் அப்போதெல்லாம் அவள் தனியாகத் தான் இருப்பாள். மற்றபடி எனக்கு அவள் மேல் நம்பிக்கை இருக்கிறது, அவள் என்றும் தவறான வழியில் செல்ல மாட்டாள். நீங்கள் அதை பற்றி கவலைப் படாதீர்கள்.” என்று தன்னிலை விளக்கி புன்னகைத்தாள் அனு. அவளின் நம்பிக்கை பொய்க்குமா இல்லை காப்பாற்றப்படுமா? என்பதற்கு காலமே பதில்.
&*&*&

Advertisement