Advertisement

பகுதி – 10
அவள் மனதை அரிக்கும் விஷயம் அறிய ஆவலாய் இருந்தாலும் அவள் சோர்வுற்றதை கண்டு ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்தினான் ஆதி.
“வா, இங்கேயே மதிய உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பலாம்.” என்று கூறி அவள் கரம் பற்ற முனைந்தவனை சிடுசிடுத்தாள் அனு, “என்ன பண்றிங்க? இப்படி வெளியில் எல்லாம் என்னை தொடாதீர்கள்.” என்று தன் முகத்தில் அருவருப்பை அணிந்திருந்தவளை கண்டு சற்று பதறிவிட்டான்.
இவள் என் மனைவி தானா? இல்லை வேறு யாரோவா? நேற்று இரவு என்னவோ என் கையை விடாமல் பிடித்திருக்க வேண்டும் என்று ஆசைபட்டவளா இவள்? என் மேல் எப்போதும் பாசமாக இருங்கள் என்று கூறிவிட்டு இவள் இப்போது என்ன செய்கிறாள்? பெண்கள் மனதை புரிந்து கொள்வது இயலாதது, என்று தன் தந்தை கூறிய கூற்று உண்மை தான் போலும் என்று தன்னை தானே நொந்துக் கொண்டான்.
“பார்த்தால் சிறு பிள்ளை போல் இருக்கிறாய், தொலைந்து விட்டால் என்ன செய்வது என்று உன் கரம் பிடித்து கூட்டி போக பார்த்தால் நீ ரொம்ப தான் அலட்டுகிறாய்.” என்று ஆதி சற்று திமிராக பேச அவன் நினைத்தது நிறைவேறியது.
“நான் ஒன்றும் சிறு பிள்ளை அல்ல. பாருங்கள் நீங்கள் கட்டிய தாலி என் கழுத்தில் இருக்கிறது, ஆபீஸில் பதிவு கூட செய்தாகிற்று. இது போதுமா நான் சிறு பிள்ளை இல்லை என்பதற்கு.” என்று தான் புத்திசாலி தனமாய் செயல்படுவதாய் எண்ணி வீராப்பாய் பேசினாள் அனு.
“ஆங்… இப்போது தான் சரியாக பேசுகிறாய்.” என்றவனின் கூற்றில் அனு பெருமிதம் கொள்வதற்குள், “நீயே சொல்லிவிட்டாய் அப்புறம் என்ன நான் என் மனைவி கையைத் தான் பிடித்தேன், உனக்கென்ன?” என்ற ரீதியில் பேசிவிட்டு அவள் யோசிக்க நேரம் கொடுக்காமல் வேகமாக அவளை உள்ளே இழுத்துச் சென்றான் ஆதி.
தான் ஏன் இப்படி இருக்கிறோம் என்று புரியாமல் குழம்பினாள் அனு. அவளுக்கே தெரியவில்லை தனக்கு முன் வேறு பெண்ணை அவன் விரும்பி இருப்பான் என்பதில் வருத்தமா இல்லை தான் அவனுக்கு ஏற்றார் போல் இல்லை என்ற தாழ்வுணர்ச்சியா என்பதை அலசி ஆராய்வதற்குள் ஆதி ஹோட்டலிற்கு கூட்டி வந்து விட்டான். தன் மனப்போராட்டத்தில் தவித்த நேரத்தில் அவன் கரம் பற்ற ஏதோ யோசனையில் அவனிடம் சிடுசிடுத்தாள். ஆனால் அவன் எதேதோ பேச இவள் தன் குழப்பத்தை மறந்து ஆதியின் மேல் கவனம் செலுத்தினாள்.
தனியாக அமர்ந்து சாப்பிடும்படி ஏதேனும் இருக்கை இருக்கிறதா என்று ஏசி அறையில் தேடிய ஆதிக்கு ஜாக்பாட் போல் கிடைத்தது தனிமையில் ஒரு ஓரத்தில் இருவர் அமர்ந்து சாப்பிடும் சோபா. ஏசி ஹால் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது.
அவளை சுவர் ஒட்டி அமர வைத்து தானும் அவள் அருகில் அமர்ந்தான்.
“இங்கே ஏன் கூட்டி வந்தீர்கள், இங்கு எல்லாம் விலை அதிகமாக இருக்கும்.” என்றவளை பார்த்து அவன் கோபப் பார்வை வீச சாதுவாய் அடங்கினாள் அனு.
“உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நீ உன் இஷ்டபடி இரு. உனக்கு தோன்றுவதை தயங்காமல் சொல் என்று மட்டும் சொல்ல தெரியும். ஆனால் நான் ஏதாவது சொன்னால் மட்டும் முறைக்க வேண்டியது.” என்று தனக்குள் முணுமுணுத்தாள் அனு. ஏனோ அவன் முறைத்தால் மட்டும் அவளுக்கு பயம் தொற்றிக் கொள்கிறது.
“எனக்கு சரியா காதில் விழவில்லை, என்ன சொன்ன?” என்று அவன் கேட்க அவள் பதிலுக்கு பழுப்பு காண்பித்தாள். சிறு குழந்தை போல் கோபித்து சுவரையே வெறித்தவளை பார்த்து இதழ் மூடி தன் சிரிப்பை அடக்கியவன் அவள் காதருகில் சென்று “நீ சொன்னது என் காதில் விழுந்தது. அதற்கான விளக்கத்தை நான் வீட்டிற்கு வந்து சொல்கிறேன், இப்போ என்ன சாப்பிடுகிறாய்?”
“ஆங்…” என்று அவன் கூறிய விஷயத்தில் இருந்து மீண்டவள் தனக்கு பிடித்தவற்றை ஆர்டர் செய்தாள். தான் முணுமுணுத்ததை கேட்டு அவன் கோபித்து கொள்வான் என்று ஒரு நொடி அவள் மனம் பதைபதைத்ததை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இது வரை யாரையும் எதிர்த்தோ, கோபித்துக் கொண்டோ இருந்ததில்லை, ஆகையால் அவளின் மாற்றம் அவளையே ஆச்சர்யப்பட வைத்தது. ஒரு சில நேரம் தன் தந்தை மேல் வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொண்டதில்லை. ஆனால் ஆதியுடன் தன் சிறு சிறு உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவது வியப்பாகவே இருந்தது. தன் மனம் அவன் அருகாமையில் சடுதியில் மாறுவதை உணர்ந்தாள் அனு.
ஆர்டர் செய்த உணவு வரும் வரை என்ன செய்யலாம், அவளை எப்படி பேச வைக்கலாம் என்று யோசித்தவனுக்கு காலையில் முரளி அனுப்பிய போட்டோக்கல் நினைவு வர தன் மொபைலை வேகமாக எடுத்து அவன் அனுப்பிய ஒரு போட்டோவை அனுவிடம் காண்பித்தான்.
நெற்றி சுருக்கி அதை ஆர்வமோடு வாங்கியவள் அதை பார்த்த வேகத்தில் அவனிடம் மொபைலை திணித்தாள். அது அவள் ஆதியை முதல் நாள் எழுப்பும் முன் எடுத்த புகைப்படம். அவன் இவள் மடியில் தலை வைத்து படுத்திருக்க, அனு அவன் மேல் சாய்ந்து இருக்கும் படம். அன்று கேட்ட சத்தத்தின் பொருள் இப்போது விளங்கியது அனுவிற்கு.
அவள் வெட்கப்பட்டு தலை கவிழ்ந்ததை பார்த்து தன் உள்ளூர ஏற்பட்ட சிலிர்ப்பை அடக்கியவன், ”இது எப்போ எடுத்தது என்று தெரியுமா?”
அவள் பதில் கூறாமல் தன் வெட்கத்தை கட்டுப்படுத்த சிரமப்பட்டு மேஜையை ஆராய அவளை நெருங்கி அமர்ந்தவன் அவளை சுற்றி தன் கை போட்டு தன்னவளை சீண்டுவதற்குள் உணவு வர ஆதிக்கு தான் கோபம் உச்சத்தை எட்டியது. அனுவோ அப்பாடா தப்பித்தோம் என்று அவன் நினைவை விடுத்து உணவை தொடர்ந்தாள்.
ஆதி பேச முற்படும் போதெல்லாம் ஏதோ மழுப்பி அவனிடம் சிக்காமல் தப்பித்தாள் அனு. இப்படியே இவர்கள் மதிய உணவு முடிய வெட்கத்தில் திளைத்திருந்தவள் தன் பழைய வருத்தத்தை மறந்தாள்.
***
“இங்கே எதற்கு வந்தாய் கதிர்? ஸ்கூல்ல யாராவது பார்த்தால் பிரச்சனை ஆகிவிடும்.” என்று நெஞ்சம் பதைபதைக்க கதிரை கடிந்து கொண்டாள் கயல்.
“நீ நேற்று இரவு ஏன் கால் பண்ணவில்லை? நீ கால் பண்ணுவாய் என்று வெகு நேரம் காத்திருந்தேன்.” என்றான் கதிர். நேற்று தான் புது மொபைல் வாங்கி கொடுத்து, இரவில் பேசச் சொல்லி சொன்னான். அவள் அதை காதில் வாங்கி கொண்டபடி தெரியவில்லை ஆகையால் நேரிலேயே வந்துவிட்டான்.
“ம்ச்… நேற்று எல்லோரும் வீட்டில் இருந்தார்கள். என் கூடவே ஆன்டி இருந்தார்கள். நான் எப்படி பேசுவது? நீ இதற்காக தான் இங்கு வந்தாயா?” என்றவள் சுற்றும் முற்றும் தன் கண்களை அலைய விட்டாள்.
“ஓ… அப்போது சரி. இன்று கூப்பிடு, இனி நாம் நேரில் பார்ப்பது அரிது. நான் வேலை பார்க்கும் இடத்திலும் ஓனர் திட்டுகிறார், பகல் முழுவதும் கல்லூரியிலே போய் விடுகிறது. இன்று உனக்காக லீவ் போட்டு வந்தேன்.” என்ற கதிர் ஒரு அரசு கல்லூரியில் இளங்கலை இரண்டாம் வருடம் படிக்கிறான்.
“சரி, நான் இரவு கூப்பிடுகிறேன். இப்போது கிளம்பு நான் சாப்பிட வேண்டும். உன்னிடம் முக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டும்.” என்றவளை தடுத்து, இரவு பேசிக் கொள்ளலாம் என்று சமாளித்து அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
***
“ஏய் நிலா… சாப்பிட வந்து விட்டு ஏன்டி இப்படி உட்கார்ந்து இருக்க? சாப்பிடுடி.” என்று சந்தியா தன் தோழியை கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
“இது ஒன்று தான் இப்போது குறைச்சல். நான் வீட்டுக்கு போகவேண்டும். ஆனால் அந்த ஹச்.ஆர் லீவு கொடுக்க மறுக்கிறார்.” என்று கோபத்தில் தன் கையை இறுக மூடிக்கொண்டாள். பல்லை கடித்துக்கொண்டு தன் கோபம், ஏமாற்றத்தை கட்டுப்படுத்த நினைத்தவளை முரளி வந்து களைத்தான்.
“ஹாய்… நிலா!” என்று புன்னகையுடன் முரளி அவர்கள் மேஜையின் அருகில் வந்து சேரில் அமர்ந்தான்.
“என்ன சார், உங்க தோஸ்த் இல்லாததால நாங்க எல்லாம் உங்க கண்ணுக்கு தெரிகிறோமா?” என்று அவனை சீண்டினாள் சந்தியா.
“அதில் என்ன சந்தேகம்?” என்று தோளை குலுக்கியவனை கண்டு வாய் பிளந்தாள் சந்தியா.
“ஒரு மரியாதைக்குக் கூட எங்களை பார்க்க வந்தேன்னு சொல்லக்கூடாதா?” என்று சலித்தாள் சந்தியா.
“சரி உன்னை… ஆங்… உங்களை தான் பார்க்க வந்தேன்.” என்று திருத்தினான் முரளி.
“சரி சரி… ஏய் நிலா என்ன ஒன்றுமே பேசாமல் இருக்கிறாய்?” என்று நிலாவை நோண்டினாள் சந்தியா.
“இப்போ என்ன செய்ய வேண்டும்? நான் சாப்பிடனும் அதானே?” என்றவள் கடுப்புடன் அவசர அவசரமாக உணவை வாயில் திணித்து அங்கிருந்து கிளம்பினாள்.
“என்னாச்சு இவளுக்கு? ஏன் இப்படி கோபமாக இருக்கிறாள்?” என்று வினவினான் முரளி.
“உங்களுக்கு தெரியாதா என்ன?” என்று கேள்வியாய் பார்த்தாள் சந்தியா.
“ஏய்… நிஜமாக எனக்கு எதுவும் புரியவில்லை.” என குழம்பினான்.
“பொய் சொல்லாதீங்க. நிலா ஆதியை விரும்புவது உங்களுக்கு தெரியாது? ஏன் இது அவருக்கு கூட தெரிந்திருக்கும்.” என்று முரளியை சினந்தாள்.
“என்ன…?” என்று அதிர்ந்தான் முரளி. இது என்ன புது பூதம் என்று அவன் மனம் பதறியது.
“முரளி நேரம் ஆகிவிட்டது. நான் என் கேபின் போகிறேன். அப்புறம் பார்க்கலாம்.” என்று அங்கிருந்து விடைபெற்றாள் சந்தியா.
***
“அனு… அனு… அனு…” என்று ஹாலிலிருந்து அவள் பெயரை ஏலம் விட்டுக் கொண்டிருந்தான் ஆதி.
“இதோ வருகிறேன்…” என்றபடியே அவனுக்காக தண்ணீர் கொண்டு வந்தாள் அனு.
“இப்படி உட்கார்.” என்று அவளை தன் பக்கத்தில் இழுத்து தன் வளைவுக்குள் கொண்டு வந்தவன் தன் அருகில் இருந்த சிறு பெட்டியை கொடுத்து அவளை திறக்கச் சொன்னான்.
என்னவாக இருக்கும் எனும் ஆர்வமோடு திறந்தவளுக்கு தன் கையில் அடங்காத பெரிய மொபைல் இருந்தது. இது எதற்கு என்பது போல் அவள் கண்ணால் கேட்க அவனும் உனக்கு என்று கண்ணாலேயே பதிலளித்தான். வேண்டாம் என்று மறுக்க நினைத்தவள் எப்போதும் போல் அவன் முகத்தை பார்த்தவுடன் வாங்கிக் கொண்டாள்.
பின் ஆதி தன் வருமானம் எவ்வளவு, அதை எப்படி பகிர்ந்து செலவிடுவது, மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும், கயல், அனு படிப்பிற்கு தேவையான செலவு, அவசர செலவு வந்தால் சமாளிக்க தேவையான பணம், அனுவிற்கு வங்கி கணக்கு என குடும்பத்தை நிர்வகிக்க அனுவுடன் சேர்ந்து திட்டம் வகுத்தான். குடும்பம் என்பது ஆசாபாசம், காதல், சந்தோசம் மட்டுமில்லாது அதை நிர்வகிப்பதிலும் அடங்கும். என்னதான் மகிழ்ச்சி இருந்தாலும் பணம் வாழ்வில் இன்றியமையாதது. அதை சரியாக நிர்வகித்தால் பணக்காரன் முதல் ஏழை வரை நிம்மதியாக வாழ முடியும். அதையே பின் பற்றினான் ஆதி. வீட்டு நிர்வாகத்தில் முன் அனுபவம் இல்லை என்றாலும் அனுவின் பங்கு அதில் முக்கியம் என்பதை மட்டும் உணர்ந்திருந்தான். குடும்பத்தில் வரும் வருவாய் பற்றி அனைவரும் தெரிந்திருந்தால் தான் அதற்கேற்றார் போல் செலவு செய்வார்கள் இல்லையென்றால்  அரசனும் ஒன்றுமில்லாமல் போகவேண்டியது தான், என்று தன் தாய் கூறியது அவன் மனதில் நங்கூரமாய் பதிந்திருந்தது.

Advertisement