Advertisement

அத்தியாயம் – 6
“ம்கூம்…” என்று ஒரு நெடுமூச்சுடன் தன் நினைவுகளிலிருந்து மீண்ட வெங்கட்ராமன் அண்ணன் மகனை சாப்பிடச் செல்லுமாறு கூறினார்.
“இல்லை சித்தப்பா நான் வீட்ல போய் சாப்பிட்டுக்கிறேன் எனக்காக அம்மாவும் நிவேதாவும் காத்திருப்பார்கள்” என்றதும்¸ “நிவேதா யாருப்பா?” என்று கேட்டார் அவர்.
“என் மகள்¸ நான்கு வயதாகிறது…” என்றவுடன்¸ “ஓ…! உனக்குதான் அப்போதே கல்யாணம் ஆகிவிட்டதே… மருமகள் எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டவர்¸ அவனது தயக்கத்தை கவனிக்காமல் தானே தொடர்ந்து பேசினார்.
“அடுத்தமுறை வரும்போது அண்ணி¸ மருமகள்¸ பேத்தி எல்லாரையும் அழைச்சிட்டு வருவியா கோகுல்¸ எனக்கு அண்ணிகிட்ட மன்னிப்பு கேட்கணும்” என்று கேட்கவும் முயற்சி செய்வதாகக் கூறியவன் மூவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினான்.
கோகுல் வீட்டுக்குள் நுழைந்ததும் “அப்பா…!” என்று ஓடிவந்தாள் நிவேதா.
“பார்த்து… பார்த்து வாம்மா…” என்றவன்¸ அருகில் வந்ததும் அவளைத் தூக்கித் தோளில் வைத்துக் கொள்ளவும் தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு “அப்பா… இன்னிக்கு அம்மா என்கூட பேசினாங்களே!” என்று சொல்லி சிரித்தாள்.
இரண்டாவது முறையாக மகள் அதையே சொல்வது ஆச்சர்யத்தைத் தோற்றுவிக்க கோகுல் தாயாரைப் பார்த்தான். அவர் உதட்டைப் பிதுக்கினார்.
“என்ன நிவி சொல்றே? அம்மா உன்கிட்ட பேசினாங்களா?” என்று சந்தேகத்துடனே கேட்க “ம்…” என்று தன் பெரிய கண்களை விரித்து ஆமோதித்தாள்.
“சரிடா¸ அம்மாவை எங்கே? எப்படி பார்த்தாய்?” என்று கேட்டவன் தொடர்ந்து¸ “இன்றைக்கும் அம்மா யாரோ ஒரு பையனை கூட்டிட்டுப் போக வந்தாங்களா?” என்று கேட்க “ஆமாப்பா, அந்த வருண்கூட அம்மா ஆட்டோ பக்கத்துல நின்னுட்டு இருந்தாங்களா… நான் அம்மாகிட்ட பேசுறதுக்காக ஓடிப் போகும்போது கால் தடுக்கி கீழே விழப்போனேன்… அப்போ அம்மா நான் கீழே விழாமல் தாங்கிப் பிடிச்சாங்க. நல்ல அம்மா…” என்று அம்மா புராணம் பாடினாள்.
“கால் முட்டியில் அடிபட்டுதா…” என்று மகள் தொடர்ததும்¸ “என்ன அடிபட்டதா? எங்கே காட்டு” என்று மகளை இறக்கிவிட்டு ஆராய முற்பட¸ “அப்பா சின்ன அடிதான்… அதுக்கும் அம்மாவே தண்ணி வைத்து கழுவி அவங்க பேக்ல வைச்சிருந்த மருந்தை போட்டுவிட்டாங்கப்பா” என்று காலிலிருந்த லேசான கீறலைக் காட்டியவள் மீண்டும் தோளில் ஏறிக் கொண்டாள்.
“ம்… வேற என்ன செய்தாங்க?” என்று கோகுல் கேட்க “அப்புறமா நான் அம்மான்னு கூப்பிட்டேன்… உடனே ‘அம்மா’ இல்லை ‘ஆன்ட்டி’ன்னு சொன்னாங்க. ஏன்ப்பா அப்படி சொன்னாங்க? அப்புறம் அம்மாவை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டேன்¸ வரவில்லை… நாளைக்கு ஈவ்னிங் நீங்க ஸ்கூலுக்கு வாங்கப்பா. நாம ரெண்டு பேரும் சேர்ந்து அம்மாவை கூட்டிட்டு வந்துடலாம்” என்று தகப்பனையும் துணைக்கு அழைக்க¸ அவன் புன்னகையுடனே “சரிடா குட்டி” என்றான்.
“அப்பா அந்த வருண் இல்லேப்பா அம்மாவை அத்தைன்னு கூப்பிடுறான். அம்மாவும் எனக்கு பை சொல்லி¸ கன்னத்துல முத்தம் கொடுத்துட்டுப் போயிட்டாங்க. எனக்கு அம்மா வேணும்ப்பா… அம்மாவை சீக்கிரம் கூட்டிட்டு வாங்க. இல்லைன்னா, நாம அம்மாகிட்ட போகலாம்” என்று சொல்லி அழத் தொடங்கிவிட்டாள்.
“என் பொண்ணு தைரியசாலின்னு நினைத்தேன்… நீ இப்படி எப்போதும் அழுதால் நான் என்ன நினைப்பது? அம்மா மாதிரி அழகான பெண்ணாக இருக்க வேண்டுமானால் எப்போதும் சிரித்துக் கொண்டிருக்க வேண்டாமாடா?” என்று கேட்க¸ “நான் அம்மா மாதிரி அழகுதான்! நான் இனி அழமாட்டேன்ப்பா” என்று அழுகையை நிறுத்தியவள்¸ “ஆனா… நீங்க நாளைக்கு என்னைக் கூப்பிட ஸ்கூலுக்கு வருவேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க” என்று தன் கையை நீட்டினாள்.
“சரிடா குட்டி. உனக்காக அப்பா கட்டாயம் வருவேன்¸ ஓ.கே.வா?”  என்று அந்தப் பேச்சை முடித்துவிட்டு¸ “என் செல்லம் சாப்பிட்டாச்சா?” என்று கேட்டான்.
“இல்லை…”
“வா… சாப்பிடலாம்¸ சாப்பாடு எடுத்து வைங்கம்மா நான் இதோ வந்துவிடுகிறேன்” என்றவன்¸ உடைமாற்றி வந்து மகள் மற்றும் தாயாருடன் பேசியவாறே சாப்பிட்டான்.
வித்யாவுக்கு அன்று தூக்கமே வரவில்லை.
அன்றுதான் என்றில்லை எப்போது இங்கு… இந்த பெரியம்மா வீட்டுக்கு வந்தாளோ அன்றிலிருந்து இப்படித்தான். தூக்கம் என்பது அவளுக்கு எட்டாத ஒன்றாகவே போய்விட்டது.
தூக்கமின்றி புரண்டு கொண்டிருந்தவளுக்கு அருகில் வருண் தூங்கிக் கொண்டிருந்தான். அவள் வந்த அன்றே அவளுடன் படுக்க ஆரம்பித்துவிட்டான். கதை சொல்லி தன்னைத் தூங்க வைக்கச் சொல்லும் பெரிய மனிதன்.
அவனது தூக்கத்தைக் கலைத்து விடக்கூடாது என்றெண்ணி எழுந்து ஜன்னல் பக்கம் சென்றவள்¸ பெருமூச்சொன்றை வெளியிட்டாள்.
முதலில் கும்மிருட்டாகத் தோன்றிய சூழல் கண்களுக்குப் பழக்கப்பட வெளிப்புறத்தையே வெறித்தவாறு நின்றிருந்தாள்.
எவ்வளவு மகிழ்ச்சியானது அவர்கள் குடும்பம்… திடீரென தீ விபத்து ஏற்பட்டு மொத்த குடும்பமும் போகுமென்று தெரியாமல் போய்விட்டதே..! அப்படி மட்டும் தெரிந்திருந்தால் தானும் அவர்களுடன் சேர்ந்து போயிருப்பாளே!
வாரா வாரம் ஹாஸ்டலிலிருந்து சனிக்கிழமை மாலையில் வீடு திரும்பிவிடுபவள் அந்த வாரம் மட்டும் ஏன் மறுநாள் கிளம்ப வேண்டும்? அப்படி மட்டும் நடக்காமல் எப்போதும் போல வந்திருந்தால்… இன்று இப்படித் தனியாக நின்று தவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காதே…! அவளும் அவர்களுடனே போயிருக்கலாமே…!
‘நான் என்ன பாவம் செய்தேன்? என் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு என்னை மட்டும் ஏன் இப்படி  கஷ்டப்படுத்துகிறாய்?’ என்று எப்போதும் கடவுளைக் கேட்பவள்¸ அன்று தன்னை இந்த நிலைமையில் வைத்திருக்கும் கடவுளைத் திட்டினாள்.
அவர்கள் வீட்டில் மொத்தம் நான்கு பேர்தான். காதல் மணம் புரிந்த அன்பான பெற்றோர்¸ சுட்டித் தங்கை தன்யா. அவள் மற்றும் தங்கையின் வாழ்வு குறித்து எத்தனை கனவு கண்டிருப்பார்கள் அந்த அன்பான தாய் தந்தை. உலகை விட்டுப் போகும் போதும்கூட மூத்த மகளைத் தனியே விட்டுப் போகிறோமே என்று எவ்வளவு தவித்தார்களோ!
அன்றைய நாள் அப்படியே நினைவிற்கு வந்தது.
வாரந்தோறும் சனிக்கிழமை இரவு வீடு திரும்புகிறவள் அன்று தோழியருடன் சுற்றிவிட்டு வெகுநேரம் கழித்து ஹாஸ்டலுக்குத் திரும்பியதாலும்¸ “ஒருநாள் கழித்துப் பார்த்தால் என்னவாகிவிடுமாம்?” என்று கேட்ட ஹாஸ்டல் தோழியரின் வற்புறுத்தலாலும் ஊருக்குச் செல்லாததால் வீட்டினருடன் போனில் பேசினாள்.
அவள் விஷயத்தை சொல்லி முடித்ததும் “நாளைக்கு வீட்டுக்கு வந்ததும் உனக்கு ஒரு சர்ப்பிரைஸ் காத்திருக்கு…” என்றார் அம்மா சிரித்தவாறே.
அப்பா “காலையில் முடிந்த அளவு சீக்கிரமாகவே வந்துடுடா வித்யா குட்டி” என்றார். எங்கே மகள் நேரம் தாழ்ந்து வந்துவிடுவாளோ என்ற அக்கறையுடன் கூடிய கவலை.
பெற்றோரிடம் என்னவென்று கேட்கத் தயங்கியவள்¸ தங்கையிடம் “என்ன விஷயம் தன்யா?” என்று கேட்க¸ அவளோ தமக்கையின் கேள்விக்கான பதிலைக் கூறாமல் “நாளையிலிருந்து நாட்களை எண்ணிக்கோக்கா… அதன்பின் நீ நினைத்தாலும் எங்களுடன் வந்து இருக்க முடியாது” என்று என்னென்னவோ பேசினாள்.
“தன்யா என்ன விஷயம்டா? சொல்லு… ஆளாளுக்கு சஸ்பென்ஸாவே பேசுறீங்க… எனக்கு தலை வெடித்துவிடும் போல இருக்கு. ராத்திரி தூக்கமே வராது¸ சொல்லிடும்மா… என் குட்டித் தங்கையல்லவா நீ?” என்று ஐஸ் வைத்துப் பார்த்தாள் வித்யா.
அவளோ “அக்கா… இன்றைக்கு நீ நல்லா தூங்கிக்கோ. அப்புறம் நீ நிம்மதியா தூங்கவே முடியாது…” என்று அப்போதும் மனதில் எதையோ வைத்து கேலி பேசினாள்.
ஏதோ ஒருமாதிரியாகப் புரிந்தாலும் தங்கையின் பேச்சு வெட்கத்தை வரவழைக்க “போடி! நீ சொல்லவே வேண்டாம். நான் நாளைக்கு வீட்டுக்கு வந்தே தெரிந்துகொள்கிறேன்” என்றவள் குட்நைட்டுடன் போனை வைத்தாள்.
வீட்டினரின் பேச்சினால் மனதில் சிறு படபடப்பு¸ எதிர்பார்ப்பு என எதுவுமின்றி ஊரைச் சுற்றித் திரிந்ததால் ஏற்பட்ட களைப்பினால் விரைவில் தூங்கிவிட்டாள். நிம்மதியாகத் தூங்கி எழும்போதே¸ செல்போனுக்கு புது எண்ணிலிருந்து அழைப்பு வர அதை எடுத்துப் பேசினாள்.
அதில் வந்த செய்தியில் துடித்துப் போனாள்.
தோழி துணையுடன் பஸ் ஏறி வந்து சேர்ந்தபோது தந்தையும் தங்கையும் உயிரில்லாமல் கரிக்கட்டையாகக் கிடக்க¸ அருகில் படுக்க வைக்கப்பட்டிருந்த தாயார் செண்பகம் அவளுக்காக மட்டுமே உயிரைப் பிடித்து காத்திருந்தார்.
நெருங்கி தாயாரின் முகத்தைப் பார்த்தவள் அலறிவிட்டாள். எவ்வளவு மங்களகரமான பால்நிற சருமம் அவளுடைய தாயாருக்கு… அது தீயில் வெந்து…
“அம்மா..!” என்று அவரருகில் விழுந்தாள்.
மகளைக் கண்டதும் செண்பகம் தனக்கு நேராக நின்ற ஒரு நடுத்தர வயதுடைய பெண்மணியை நோக்கிக் கையைத் தூக்க¸ அவர் இவர்களருகில் வந்தமர்ந்தார். மகளின் கையைப் பிடித்து அந்தப் பெண்மணியின் கரங்களில் வைத்துவிட்டுக் கண்களை மூடிவிட்டார்.
யாருக்காக அழுவது என்று தெரியாமல் ஒவ்வொருவரையும் மாற்றி மாற்றி கட்டிப் பிடித்து கதறியவளை¸ அவர்களிடமிருந்து விலக்கி “ஏற்கனவே தீ பட்ட உடம்பு நீ வேற விழுந்து அழுது பிய்த்துவிடாதே…” என்று விலக மறுத்தவளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார் அந்தப் பெண்மணி.
பெற்றவர்களையும் உடன்பிறந்தவளையுமே கண்ணீருடன் பார்த்தவாறே நடந்தவளின் முகத்தைத் தன்புறம் திருப்பி “உனக்காகத் தான் காத்திருந்தோம். இப்படி வா… இனி மேற்கொண்டு செய்வதை சரவணன் செய்யட்டும்” என்று அந்தப் பக்கமாக நின்றிருந்த யாரையோ அழைத்தார்.
அவன் அருகில் வந்ததும் “எல்லாம் ரெடி பண்ணியாச்சா?” என்று கேட்க¸ “ஆமாம்¸ வித்யா வந்தாச்சுல்ல இனிமேல் ஒவ்வொன்றாகச் செய்ய வேண்டியதுதான்” என்றான் அவரது மகன் சரவணன்.
மீண்டும் தன் சொந்தத்திடம் செல்ல முயன்றவளைப் பிடித்திருந்தவளின் முகமும் கைகளைப் போலவே இறுக்கமாக இருந்தது.
ஆனால் எதையும் கவனிக்கும் நிலையில் வித்யா இல்லாததால் “ப்ச்… என் கையை விடுங்க¸ நான் அங்கே போகணும்” என்று கையை விலக்க முயற்சிக்கவும்¸ வித்யாவின் கையை இறுகப் பற்றியவாறே “போய் என்ன பண்ணப் போறே?” என்று கேட்டார் அவர்.
“இழப்பு உங்களுக்கு வந்திருந்தால் இப்படிப் பேசமாட்டீர்கள்” என்று அவள் சொல்ல¸ “இழப்பு உனக்கு மட்டும்தான் என்று யார் சொன்னது?” என்று கேட்டார் அவர்.
அப்போதும் யாரோ தூரத்து உறவினராக இருக்கும் என்றெண்ணி “உங்களுக்கென்ன நீங்க இன்றைக்கு இருந்துவிட்டுப் போய்விடுவீர்கள். நான்…” என்றவள் தொடர்ந்து பேசத் தடுமாறி¸ அந்தப் பேச்சை விடுத்து மீண்டும் “கையை விடுங்க” என்று அவரிடமிருந்து செல்ல முயன்றாள்.
மூவரின் உடல்களையும் தூக்கிச் சென்றதைப் பார்த்தவள் “ப்ளீஸ்… என்னைப் போக விடுங்க” என்று கெஞ்சிப் பார்த்தாள். அப்போதும் அவர் விடாமல் “ஏன் நீயும் அவர்களோடு குழியில் படுத்துக் கொள்ளப் போகிறாயா?” என்று சுள்ளென்று கேட்கவும்
“நான் என்ன வேண்ணா பண்ணிட்டுப் போகிறேன் உங்களுக்கென்ன? யாருங்க நீங்க? என்னைத் தடுத்து நிறுத்துறதுக்கு உங்களுக்கு என்ன உரிமையிருக்கு?” என்று இயலாமையால் விளைந்த ஆத்திரத்தில் கேட்டாள்.
உண்மையாகவே அவளுக்கு ஆத்திரம் மட்டுமல்லாமல் எரிச்சலும் உண்டாகியிருந்தது. இன்று வரை அவள் பார்த்திராத யாரோ ஒருவர் திடீரென வந்து அவளை அவளது ரத்த சொந்தத்திடமிருந்து விலக்குவதைத் தாங்க இயலவில்லை. எனவே¸ சாதாரணமாகப் பெரியவர்களிடம் பண்புடன் பழகும் தான் எடுத்தெறிந்து பேசுவதைக் கூட அவள் உணரவில்லை.
“நான் யாருன்னு தெரியணும் அவ்வளவுதானே? உன் அம்மாவின் அக்கா¸ உனக்கு பெரியம்மா. பெயர்…” என்று அவர் ஆரம்பிக்கவும் “காஞ்சனா!” என்று முடித்தாள் வித்யா.
இவள் இனி அவர்களை நோக்கி ஓடமாட்டாள் என்பதை புரிந்து கொண்டவர் கைகளை விடுவித்து¸ “ஆமாம்¸ உன் பொறுப்பை என்னிடம் விட்டுப் போயிருக்கிறாள் உன் அம்மா. அதனால இனிமேல் உனக்கு யாருமே இல்லையென்று நினைக்காதே.. நாங்க இருக்கிறோம்” என்று ஆறுதலாகவே பேசினார்.
ஆறுதல் தேட ஒரு தோள் கிடைத்துவிட்டதாக எண்ணியவள் “ஆனா…! பெரியம்மா என்னால தாங்க முடியலையே!” என்று அவர் தோளில் சாய்ந்து அழுதாள்.
“மனிதப் பிறவி எடுத்தால் என்றாவது ஒருநாள் அனைவரும் இந்த உலகைவிட்டு போய்த்தான் ஆகவேண்டும். இருக்கும்வரை ஒழுக்கமான மனிதர்களாய் வாழ்ந்தால் போதும்” என்று வியாக்கியானம் பேசியவர்¸ ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று இவர்களையே பார்த்திருந்த தன் மருமகளிடம் “ஒரு கப் டீ போட்டு எடுத்துட்டு வா விஜயா” என்றார்.
இடுப்பில் இருந்த வருணை கீழே இறக்கி விட்டுவிட்டு பக்கத்து வீட்டை நோக்கித் தாயார் சென்றதும்¸ வித்யாவிடம் வந்து நின்றான் சிறுவன்.
தான் அனாதையாகிவிடவில்லை தனக்கும் சொந்தங்கள் இருக்கிறார்கள் என்று தன் மனதை ஓரளவு தேற்றிக் கொண்டவள்¸ சிறுவனைத் தூக்கி மடியில் அமர்த்தித் தன் அழுகையைக் கட்டுப்படுத்தியவாறு “எப்படி பெரியம்மா விபத்து நடந்தது?” என்று கேட்டாள்.
“இரவு படுக்கப் போகும் போது ரெகுலேட்டரை சரியா க்ளோஸ் பண்ணலையா இல்லை ஏற்கனவே கேஸ் கசிவு இருந்ததா என்று தெரியவில்லை காலையில் லைட் போட்டதும் சிலிண்டர் வெடிச்சிருக்கு. உன் அப்பாவும் தங்கச்சியும் தூக்கத்துல இருந்ததால அப்படியே போய்ட்டாங்க. செண்பகம் உன்னை என்கிட்ட ஒப்படைக்கிறதுக்குத் தான் உயிரை பிடிச்சிக்கிட்டு காத்திருந்தான்றது நீ வந்த போதுதான் புரிந்தது” என்று முடித்தார்.
சிறுவனை மடியில் வைத்திருப்பதைக் கூட மறந்து அவரது தோளில் சாய்ந்து நன்றாக அழுதாள்.
“நீங்க எப்படி வந்தீங்க?” என்று கேட்க¸ “செண்பகம்தான் பக்கத்து வீட்டுக்காரங்க மூலமாக தகவல் சொன்னாள்” என்றதுடன் முடித்துக் கொண்டார் அவர். அதுபற்றி மேலே பேச விரும்பவில்லை என்பதை அவரது பேச்சின் சுருக்கமே தெரிவித்துவிட தன் கவலையில் ஆழ்ந்தாள் அவள்.
‘இப்படி ஆகுமென்று அவர்களுக்குத் தோன்றியிருந்து அதனால்தான் நேற்று அப்படிப் பேசினார்களோ?’ என்றெண்ணியே அழுதாள் வித்யா.

Advertisement