Advertisement

அத்தியாயம் – 5
“யாரை… யாரைப் பார்த்தாய்?” என்று பதற்றத்துடன் கேட்டான் கோகுல்.
தந்தையின் மடியிலிருந்து இறங்கி துள்ளியாவாறே “அம்மாவை…!” என்று குதித்தாள் நிவேதா.
“என்ன… அம்மாவையா!!” என்றவாறே எழுந்தனர் இருவரும்.
“ஆமா அம்மாவைத்தான். ஆனால்¸ நான் அம்மாகிட்ட போறதுக்கு முன்னால ஆட்டோல ஏறிப்போயிட்டாங்க” என்றாள் சோகத்துடன்.
விஷயம் என்னவோ அதிர்ச்சி தரக்கூடியதுதான். ‘ஆனால் அது எப்படி சாத்தியம்! ம்கூம்… இருக்கவே இருக்காது’ என்று தலையைக் குலுக்கிக் கொண்டான்.
அதிர்ச்சியும் கேள்வியுமாகத் தன்னையே பார்த்திருந்த பெற்றவளிடம் திரும்பாமல் மகளிடம் குனிந்து “அம்மா பாட்டி ஊர்லதான் இருப்பாங்கடா¸ இங்கெல்லாம் வரமாட்டாங்க…” என்றான கோகுல்.
“இல்லப்பா… நான் பார்த்தேன்” என்று அவள் கூறவும்¸ “அது அம்மாவாக இருக்காதுடா குட்டி” என்றான்.
“ம்கூம்… நான் அம்மாவைத்தான் பார்த்தேன். நேற்றைக்கு நாம உங்க கல்யாண ஆல்பத்தில் பார்த்தோமே… அதே அம்மாதான்” என்று அவள் உறுதியாகக் கூறவும்¸ தனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் மகளை அமைதிப்படுத்த வேண்டி “சரி… மறுபடியும் நீ அம்மாவைப் பார்த்தால் என்னிடம் சொல்லு” என்றான்.
தந்தை தன்னிடம் காண்பித்துத் தருமாறு கூறியதும் “அம்மாவை நான் உங்களுக்கு காட்டித் தந்ததும் நம்மளோட கூட்டிட்டு வந்துடலாமா?” என்று கேட்டாள் ஆவலாக.
“ஆமாடா… உடனே அம்மாவை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துடலாம்” என்று அவளுக்கேற்பவே பேசி தான் சாப்பிட்டு அவளையும் சாப்பிட வைத்துத் தூங்க அழைத்துச் சென்றான்.
இன்றும் தூக்கம் அவனைத் தழுவ மறுத்தது. அவளின் நினைவு வந்து தொல்லை செய்தது. எப்படியோ தூங்கிவிட்டான்.
அன்று காலையில் பரபரப்புடன் கிளம்பினாள் நிவேதா.
“அப்பா வாங்க… நாம அம்மாவை பார்க்கப் போகலாம்” என்றுதான் அவனை அழைத்தாள்.
கோகுலுக்கு நூறு சதவீதம் நம்பிக்கைதான் தன் மகள் பார்த்தது வேறு யாரையோதான் என்று, ஆனாலும் மகளது சந்தோஷத்தைக் கெடுக்க விரும்பாமல்… மறுத்து எதுவும் கூறாமல் எப்போதும் போல கிளம்பினான்.
காரில் போகும்போதே மித்ரா அவனை அழைத்து¸ இன்று தந்தையைப் பார்க்க கட்டாயம் வரவேண்டும் என்று அழைக்க சரியென்று வைத்தான்.
மகளை பள்ளியில் விட்டுவிட்டு தன் அலுவலைப் பார்க்கச் சென்றவன்¸ மாலையில் சற்று முன்னதாகவே கிளம்பி சிலவகை பழங்களை வாங்கிக் கொண்டு மித்ராவின் வீட்டை நோக்கிச் சென்றான்.
வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்ததுமே “வாங்கண்ணா….” என்று மித்ராவும்¸ “வாப்பா…” என்று அவள் தாயாரும் ஒருசேர அழைத்தனர்.
வெங்கட்ராமன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகும்வரை நடைபெற்ற ஒவ்வொரு விஷயமும் அவனுக்குத் தெரியுமாதலால் அதைப் பற்றிக் கேட்காமல் “சித்தப்பா எப்படி இருக்கிறார்?” என்று மட்டும் கேட்டான்.
“நல்லா இருக்காங்க, உங்களைப் பார்க்க வேண்டுமென்று ஒரே தொந்திரவுண்ணா. அதனால்தான் நான் உங்களை தொல்லை செய்ய வேண்டியதாகிவிட்டது” என்று சிரித்தாள் மித்ரா.
“தொல்லை என்றில்லை மித்ரா… இப்போது அழைத்தது போல் எந்தத் தேவையென்றாலும் நீ என்னை அழைக்க வேண்டும்” என்று தங்கையிடம் கூறியவன் அவளைப் பெற்றவரைக் காணச் சென்றான்.
விட்டத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவர் “எப்படியிருக்குறீங்க சித்தப்பா?” என்ற குரலில் திரும்பி கோகுலைக் கண்டதும்¸ “உன் புண்ணியத்தில் நல்லா இருக்கேன்ப்பா…” என்றார்.
“என்ன சித்தப்பா இது? பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு…” என்று அவரது பேச்சைத் தடுக்கப் பார்க்க¸ “இல்லைப்பா… நான் உங்களுக்கு செய்த பாவத்துக்குத்தான் எனக்கு இந்த நிலைமை. அவ்வளவுக்குப் பிறகும் நீ என்னைக் காப்பாற்ற வேண்டுமென்ற அவசியம் இல்லையே!” என்று தொடர்ந்து பேசினார்.
“விடுங்க சித்தப்பா, பழசை ஏன் நினைக்கிறீங்க. அதை நினைத்தாலே வீண் கஷ்டம்தான்… அதனால மறந்துடுங்க” என்று அவரது வருத்தமுற்ற பேச்சை நிறுத்த முயன்றான்.
அப்போதும் விடாமல் “எப்படிப்பா மறப்பது?  நான் செய்த பாவம் ஒவ்வொரு நிமிடமும் என்னை வதைக்கும் போது எப்படி மறப்பேன்? நான் மட்டும் உன் அப்பாவிடம் சொத்து பிரித்துக் கேட்டு கோர்ட்டுக்கும் போவேன் என்று சொல்லாமல் இருந்திருந்தால் நான் என் அண்ணனை இழந்திருக்கமாட்டேனே…” என்று தன் வருத்தத்தில் ஆழ்ந்தார்.
சிவராமன்¸ வெங்கட்ராமன் இருவரும் அண்ணன் தம்பிகள். இருவருடைய திருமணத்திற்குப் பிறகும் தனியாகச் செல்லாமல் பல வருடங்கள் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்தனர். மூத்தவரான சிவராமனுக்கு கோகுலகிருஷ்ணனும் நிவேதா என்ற மகளும் இருந்தனர். வெங்கட்ராமனுக்கும் அதேபோல மகன் கமலேஷ் மற்றும் மித்ரா இருந்தனர்.
சிறு வயதில் ஏற்பட்ட டெங்கு காய்ச்சலால் மகளை இழந்த மூத்த தம்பதியினர், வெங்கட்ராமனின் மகளைத் தங்கள் மகளாகவே எண்ணி பாசத்தைப் பொழிந்தனர்.
கோகுலைவிட ஒரு வயது இளையவனான கமலேஷ் இளம்பருவத்திலே ஊதாரித் தனமாக சுற்றித் திரிந்தான். அவனது செயல்களைக் கேள்வியுற்ற சிவராமன் தம்பியிடம் மகனைப் பற்றி எடுத்துக் கூறி அவனைக் கண்டிக்கும்படி கூறினார்.
அண்ணன் சொன்னபோது எல்லாவற்றுக்கும் தலையாட்டிவிட்டு வந்தவரிடம் மனைவி வசுமதி “உங்க அண்ணன் நம் பிள்ளைகளை எப்போதும் மட்டம் தட்டியே பேசுகிறார்…. நம்ம கமலேஷ் ஒன்றும் அப்படித் திரியவில்லை” என்று சொல்லி¸ அத்தோடு விட்டுவிடாமல் “இப்படியே போனால் உங்க அண்ணன் நம் பிள்ளைகளுக்கு ஒன்றுமே தராமல் எல்லாத்தையும் அவர் மகனுக்கே கொடுத்துவிடுவார்… அதனால நாளைக்கே சொத்தையெல்லாம் பிரித்துக் கேளுங்க” என்றும் சேர்த்துச் சொன்னார்.
அப்போது அண்ணனை விட்டுக் கொடுக்காமல் “அண்ணன் அப்படியெல்லாம் செய்வாரா வசுமதி? மாட்டவே மாட்டா…” என்றபோது¸ “ஏன் மாட்டார்? இப்போது அவர் மகனை விட நம்மகன் தாழ்வு என்றவர் சொத்தைப் பிரிக்கும் போதும் தன் மகனுக்குத்தான் அதிகமாகக் கொடுப்பார் அதனால் பிரித்துக் கேளுங்கள்” என்று அடித்துக் கூறவும்¸ ஒருவேளை தன் பிள்ளைகள் சொத்து இல்லாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுமோ என்று பயந்தவர்¸ மறுநாளே மனைவி சொற்படி அண்ணனிடம் தனக்கு சொந்தமான சொத்தைப் பிரித்துத் தருமாறு கூறினார்.
“இப்போதே என்ன அவசரம் தம்பி?” என்று கேட்ட சிவராமனிடம் “அவசரம் இல்லை அண்ணா… அவசியம். அதனால் வேறெதுவும் கேட்காமல் பிரித்துக் கொடுத்துவிடுங்கள்” என்று காரணத்தைக் கூறாமலே பிரித்துக் கேட்டார்.
தம்பி சொத்துக்களைப் பிரித்துக் கேட்ட அன்றே உடல்நலக்குறைவு ஏற்பட்டுவிட சிவராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த சமயத்திலும்¸ ‘உங்கள் அண்ணனுக்கு சொத்தை பிரித்துத் தர விருப்பமில்லை. அதனால்தான் ஆஸ்பத்திரியில் போய் படுத்துக் கொண்டார்’ என்று வசுமதி சொல்ல¸ மனைவி பேச்சை நம்பி மருத்துவமனையிலும் சென்று ‘சொத்தைப் பிரித்துத் தரமுடியுமா? இல்லை நான் கோர்ட்டுக்குப் போகட்டுமா?’ என்று கேட்டு அண்ணனின் உடல்நிலையை மேலும் மோசமாக்கினார்.
ஆனால்… சிவராமன் தம்பி நினைத்தது போலல்லாமல் சொத்துக்களைப் பிரித்துக் கேட்ட உடனே வக்கீலிடம் பேசி மொத்த சொத்துக்களில் அரிசி மண்டி¸ காட்டன் மில் மற்றும் தாங்கள் வசித்து வந்த ஊரைவிட்டு ஒதுங்கியிருக்கும் அந்த வீட்டை மகன் பெயருக்கும்¸ மறுபாதியான அரிசி மண்டி மற்றும் காட்டன் மில்லுக்கு சம மதிப்பீட்டில் இருக்கும் பைனான்ஸ் கம்பெனி மற்றும் டவுணுக்குள் இருக்கும் வீட்டை தம்பியின் பெயருக்கும் பதிவு செய்யுமாறு கூறியிருந்தார்.
அப்படிக் கேட்டதுமே பிரித்துக் கொடுக்க ஏற்பாடு செய்தவரால் தம்பி மருத்துவமனையிலும் வந்து எந்தவித நலவிசாரிப்புமின்றி சொத்தைப் பற்றியே கேட்டதை தாங்க முடியவில்லை. அன்றிரவே அவரது ஆன்மா அவர் உடலைவிட்டுப் பிரிந்துவிட்டது.
இது எதையும் அறியாத கனகவள்ளியும் கோகுலும் சிவராமனின் இறப்புக்கு முன்புவரை சித்தப்பா குடும்பத்தினரிடம் சுமூகமாகவே பழகிக் கொண்டிருந்தனர்.
கணவரை இழந்து துக்கம் தாளாமல் அழுத அன்னையைத் தேற்றி¸ தந்தையின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்தவனுக்கு வக்கீல் மூலம் விஷயம் தெரியவந்தது. அதன்பின் உதவிக்கு வந்த வெங்கட்ராமனின் உதவியை மறுத்து அவரை எந்தவொரு இறுதிச் சடங்கையும் தந்தைக்கு செய்ய அனுமதிக்காதது மட்டுமன்றி அவரை மதிக்கவுமில்லை.
என்ன செய்வது என்று தெரியாததால் வக்கீல் உதவியுடனே எல்லாவற்றையும் சமாளித்தவன்¸ அவரைக் கொண்டே சித்தப்பா குடும்பத்தினர் தகப்பனைப் பார்ப்பதையும் தடுத்தான்.
இதை வெங்கட்ராமன் எதிர்பார்க்கவில்லை. மனைவியின் பேச்சைக் கேட்டுத் தன் பாசமான அண்ணனை இழந்துவிட்டோமே என்ற துக்கத்தில் இருந்தவரை… அண்ணனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய இயலாத இந்த நிலையும் தாக்க¸ அன்பான அண்ணன் குடும்பத்தினரை இழந்துவிட்டதை உணர்ந்து குடும்பத்துடன் வீட்டைவிட்டு வெளியேறினார்.
சிவராமனின் மறைவுக்குப் பிறகு ஆண்டுகள் சில கடந்த பின்னரும் தாயும் மகனும் அவர்களை சந்திப்பதை விரும்பியதில்லை.
படிக்கும்போதே தந்தையுடன் அரிசி மண்டிக்கும் அவர்களது மற்றபிற நிறுவனங்களான காட்டன் மில்¸ பைனான்ஸ் கம்பெனி போன்றவற்றிற்கும் சென்று வந்த கோகுலுக்கு அவற்றைக் நிர்வகிப்பதில் சிரமம் இருந்தாலும் சில மாதங்களிலே அவன் சமாளித்துக் கொண்டான்.
ஆனால்… அண்ணன் தயவிலே இருந்துப் பழகி தொழிலைக் கற்றுக் கொள்ளாத வெங்கட்ராமனால் அது இயலவில்லை. எனவே¸ அவரது தொழில் படுக்கத் தொடங்கியது. தொழிலில் மட்டுமல்லாமல் அவருக்கு மகன் உருவிலும் பிரச்சினை ஆரம்பித்தது.
தந்தைக்கு தொழிலில் எந்தவித உதவியும் செய்யாமல் சுற்றித் திரிந்த கமலேஷ்¸ தங்கை இருப்பதையோ அவளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்பதையோ எண்ணாமல்… காதல் என்று யாமுனாவின் பின்னால் திரிந்து அவளைத் திருமணம் செய்து அழைத்து வந்தான்.
மருமகளாக வந்தவள்¸ வந்த ஒரு மாதத்திலே சொத்துக்களையெல்லாம் கணவன் பெயருக்கு எழுதச் சொன்னாள்.
“எங்க காலத்துக்குப் பிறகு எல்லாம் அவனுக்குத் தானே..” என்று கேட்ட மாமனாரிடம்¸ “எப்படியும் உங்களை நாங்கதான் பார்த்துக்கப் போகிறோம்… இப்பொழுதே எழுதி வைத்தால் என்ன? உங்களிடமே அவர் கையேந்தி நிற்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா?” என்று கேட்டு சண்டையிட்டாள்.
‘தன்னைவிட மோசமாக இருக்கிறாளே தன் மருமகள்’ என்றெண்ணிக் கொண்டார் வசுமதி. தன்வினை தனக்கே திரும்பி வருவதைக் கண்டு கண்ணீர் உகுத்தவாறே கணவனிடம்¸ “நம் பையன் பெயருக்குத் தானே மாற்றச் சொல்கிறாள்… எழுதிக் கொடுத்துவிடுங்கள்” என்றாள்.
“என்ன வசு இப்படி சொல்றே? நமக்கு ஒரு மகள் உண்டு என்பதை மறந்துவிட்டாயா? இன்னும் சில வருடங்களில் அவளுக்கு வரன் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டுமென்பதை யோசிக்காமல் பேசுகிறாயே?” என்று மனைவியை கடிந்து கொண்டார் அவர்.
அதற்கும் வரிந்து கட்டிக்கொண்டு வந்தாள் யமுனா.
“ஏன் அவளுக்கு நாங்கள் செய்யமாட்டோமா? ஊங்கள் பெயரிலிருப்பதை அவர் பெயருக்கு மாற்றிக் கொடுத்தால்… நாங்கள் அவளுக்கு செய்யவேண்டியதை செய்யாமலா விட்டுவிடுவோம்? அதோடு எழுதி வைத்துவிட்டதும் அவளையோ அல்லது உங்களையோ நடுத்தெருவில்தான் விடப் போகிறோமா? நீங்கள் இப்படியெல்லாம் பேசுவது சரியே இல்லை மாமா…. யாருக்கோ எழுதிக் கொடுக்கப் போவது போல மறுக்கிறீர்கள்..” என்று விரல் நீட்டிப் பேசி சண்டையிட்டாள்.
இந்த பிரச்சினையில் சிறு வயதினளான மித்ரா பயந்துவிட்டாள்.
அப்போது பத்தாம் வகுப்பிலிருந்தவள் தேர்வு நேரம் என்பதால் படித்துக் கொண்டிருந்தாள். படிப்பை தொந்திரவு செய்வது போல அறைக்கு வெகு அருகிலிருந்து சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கவும்¸ அறையைவிட்டு வெளியேறியவள் தாயாரிடம் “என்னம்மா… நான் படிக்க வேண்டாமா? இப்படி சந்தைக்கடை மாதிரி சத்தம் கேட்டால் நான் எப்படி படிப்பது?” என்று கேட்டது தான் தாமதம்… அவளிடம் சீறினாள் யமுனா.
“ஏய்…! என்னடி சொன்னே? நான் பேசுறது உனக்கு சந்தைக்கடை மாதிரி தோணுதா? அம்மையார் பெரிய கலெக்டர் படிப்பு படிக்கிறா… சத்தம் கேட்டா படிக்க முடியலையாம்… போடி உள்ளே¸ போய் கதவை சாத்தி வைத்துப் படி…” என்று அவளை அதட்டிவிட்டு மீண்டும் மாமனாரிடம் திரும்பினாள்.
அழுகையுடனே அறைக்குத் திரும்பிய மகளைக் கண்ட வசுமதி¸ “தயவு செய்து கமலேஷ் பேருக்கு சொத்தை எழுதிக் கொடுத்துடுங்க… அவன் தங்கைக்கு செய்யாமலா விட்டுவிடுவான்” என்று கணவரை சமாதானம் செய்தார். வெங்கட்ராமனும் சற்று யோசித்துவிட்டு மறுநாளே அவன் பெயருக்கு மாற்றிவிடுவதாகக் கூறிவிட்டுச் சென்றார்.
வெற்றிக் களிப்பில் மிதந்த யமுனா… சொத்துக்கள் மாற்றி எழுதப்பட்டபின் யாரையும் மதிப்பதில்லை. அவள் சொல்படியே கமலேசும் நடந்து கொண்டதால் வீட்டிலிருந்த மற்ற மூவரும் ஏதோ உண்டு வாழ்ந்தனர்.

Advertisement