Advertisement

அத்தியாயம் – 4
வீட்டிற்கு வந்து தாயாரிடம் விஷயத்தைக் கூறியதும்¸ “அவங்க நமக்கு செய்ததெல்லாம் மறந்து போச்சா?” என்றார் கோபத்துடன்.
“இல்லைம்மா! மித்ரா பாவம்… போன் செய்து அழுதாள். அத்தோட நாமளும் அவர்களைப் போலவே நடந்துக்கிட்டா நமக்கும் அவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் போயிடும். அவருக்கு நான் உதவி பண்ணாமலிருந்து அவர் உயிர் போய்விட்டால் நாம இழந்ததெல்லாம் திரும்பக் கிடைத்துவிடுமா?” என்று கேட்டான்.
தாயார் பதில் பேசாமலிருக்க “நம்ம குடும்பத்துல இருக்கிற ஒரே பெரிய மனிதன் அவர்தான். அவர் பொண்ணோட வாழ்க்கை நல்லபடியாக அமையும் வரையாவது இருக்க வேண்டாமா? கமலேஷ் ஒன்றுக்கும் உதவமாட்டான்” என்று சொல்லி அவன் மனைவி பேச்சைக் கேட்டு வராமலிருந்ததைக் கூறினான்.
மகன் பேசி முடித்ததும் “சாரிப்பா.. நான் இந்த மாதிரி இருக்குமென்று நினைக்கவில்லை. எனக்கு அவங்க செய்த அநியாயம் தான் நினைவிற்கு வந்தது. அதனாலதான் அவர்களுக்கு எதற்கு நாம் செய்யணும் என்று தோன்றிவிட்டது என்று நினைக்கிறேன்” என்றார்.
“அவர்கள் நமக்கு அநியாயம் செய்தது உண்மையும் தானேம்மா… எனக்கும் முதலில் கோபமாகத்தான் இருந்தது. ஆனால்… கமலேஷ் இல்லாமல் மித்ரா மட்டும் எப்படி சமாளிப்பாள்? அதுவும் அப்பாவோட இழப்பு வந்தபோது ஆண்பிள்ளை நானே எவ்வளவு சிரமப்பட்டேன் என்பது எனக்குத் தெரியும். அந்த கஷ்டம் மித்ரா படவேண்டாம் என்றுதான் பண உதவி செய்தேன்” என்று தான் செய்ததற்கான காரணத்தைக் கூறினான்
மருத்துவமனையிலிருந்து புறப்படும்போது மித்ரா சொன்னதை எண்ணி சிரித்தவாறு¸ “மித்ராவுக்கு இருக்கிற சுய கௌரவம்…” என்று பாராட்டுதலாக ஆரம்பித்தவன் முடிக்காமலே நிறுத்தினான். “அப்படி என்னப்பா சொன்னாள்?” என்று கேட்டார் தாயார்.
“இந்தப் பணத்தை கடனாகத்தான் தந்திருக்கிறீங்க¸ நான் வேலைக்குப் போய் இதை திருப்பித் தரும்போது கண்டிப்பா வாங்கிக்கணும் என்று சொன்னாள் நானும் சரியென்று வந்தேன்”
“வேண்டாமென்று சொல்ல வேண்டியதுதானே கோகுல்?”
“நானும் அப்படித்தான் சொல்ல நினைத்தேன். ஆனா… அது அவளை அப்படியே கீழே சாய்த்துவிடும்¸ தன்னம்பிக்கை இல்லாமல் போய்விடும். அதனால் இப்படி இருப்பதே நல்லதுதான்” என்றான்.
“அவளிடம் ஏதாவது தேவையென்றால் என்னைக் கூப்பிடு என்று சொன்னதற்கு என்ன சொன்னாள் தெரியுமா?” என்று அவள் சொன்னதையெல்லாம் கூறினான்.
“சித்தப்பாவிற்கு சரியாகும்வரை அவளே வேலைக்குப் போய் பார்த்துக் கொள்வாளாம். இடையில் ஏதாவது தேவையென்றால் என்னைக் கூப்பிடுவாளாம்.. அவளது கவலையிலிருந்து விடுபட ஒரு வழியை அவளே தேடிக் கொள்ளும்போது  அதை ஏன் நாமத் தடுக்கணும்” என்றான்.
“சரிப்பா¸ உனக்கு சரியெனப்படுவதை செய்” என்று சொல்லிவிட்டு “போய் டிரெஸ் மாத்திட்டு வாப்பா… சாப்பிடலாம்” என்றார்.
“நிவிக்குட்டி எங்கேம்மா? நான் வந்ததிலிருந்து அவளைப் பார்க்கவில்லை… என்ன பண்ணுகிறாள்?” என்று கேட்டான்.
“பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் பால் குடிச்சிட்டு உன் ரூமுக்குப் போனவதான் இன்னும் கீழே வரவில்லை” என்றவர் டைனிங் டேபிளை நோக்கி நடக்கவும்¸ “நான் அவளைப் பார்த்துவிட்டு வர்றேன்மா…” என்று தன்னறை நோக்கிச் சென்றான்.
பெற்றோரது திருமண ஆல்பத்தைக் கட்டியணைத்தவாறு தூங்கிக் கொண்டிருந்தாள்.
மகளது தூக்கம் கலையாதவாறு ஆல்பத்தை எடுத்தவன் புகைப்படத்தில் தன்னருகில் நின்ற மனைவியை ஆசையோடு வருடினான். அடுத்த கணமே அவனது விழிகள் கோவைப்பழச் சிவப்பு நிறத்திற்கு மாற¸ ஆல்பத்தை வீசிவிட்டு முகம் கழுவி உடைமாற்றி கீழே சென்றான்.
மகனைக் கண்டதும் வந்த பெற்றவளைப் பார்த்து அவன் புன்னகைக்க “நிவேதா என்ன பண்றா கோகுல்? தூங்கிவிட்டாளா?” என்று கேட்டார்.
ஆமாமென்று பதிலளித்துவிட்டு பொதுவான சில விஷயங்களைப் பேசியபடியே சாப்பிட்டான். தாயார் படுக்கச் சென்றதும்¸ வெளியே சென்றவன்…. பல நிமிடங்களை அங்கேயே கழித்துவிட்டுத் தானும் சென்று படுத்தான்.
“அப்பா…!!” என்று அவனை உலுக்கிக் கொண்டிருந்தாள் நிவேதா.
விழிகளைத் திறந்து “என்னடா?” என்று கேட்டபடியே கடிகாரத்தைப் பார்க்க¸ அது எட்டு முப்பதைக் காட்டியது.
திரும்பி மகளைப் பார்த்தால் அவள் பள்ளிச் சீருடையில் இருந்தாள்.
“அப்பா சீக்கிரம் வாங்க… நேரமாகிவிட்டது” என்று அழைத்தால் மகள். “கீழே போய் வெயிட் பண்ணு நிவிம்மா… நான் ஐந்தே நிமிடத்தில் வந்துவிடுவேன்” என்று அவளை போகச் சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான்.
வேக வேகமாக எல்லா வேலைகளையும் முடித்து சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு அவர்கள் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது மணி ஒன்பது.
பயணத்தின் போது “எனக்கு அம்மாவோட போட்டோ தருவீங்களாப்பா?” என்று கேட்டாள் நிவேதா.
“எதற்கு?” என்று கேட்க¸ “என் பிரண்ட்ஸ்கிட்ட காட்டத்தான்” என்றாள் அந்த அருமைபுத்திரி.
“என்னடா குட்டி… நீ இப்படி திடீர்ன்னு போட்டோ கேட்டால் நான் எங்கே போவேன்?” என்று விளையாட்டாகவே கேட்டான்.
“அதுதான் ஆல்பத்தில் நிறைய போட்டோஸ் இருக்குதே! அதிலிருந்து ஒன்னு எடுத்து தந்தால் போதும்…” என்று சாதாரணமாகக் கூறினாள் அவள்.
“அது சிந்தெடிக் ஆல்பம்டா செல்லம்¸ அதிலிருந்து போட்டோவை பிரித்தெடுக்க முடியாது…” என்றான்.
தனக்கு எப்படியும் வேண்டும் என்ற அவளது ஆசை¸ தகப்பன் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல் அடம்பிடிக்கச் செய்தது. பேசிப் பார்த்தும் அடங்காமல் நிவேதா சத்தத்தை அதிகரிக்க அந்த சத்தத்தில் எரிச்சலடைந்தவன் “நிவேதா சத்தம் போடாதே…! அன்ட் ஒன் மோர் திங் நீ இனிமேல் அம்மா பற்றி என்கிட்ட பேசக்கூடாது” என்று உயர்ந்த குரலில் கூறினான்.
தந்தையின் குரலில் அடங்கியவள் “எனக்கு அம்மா வேணும்… எப்ப வருவாங்கன்னு சொல்லுங்கப்பா?” என்று சாதுவாகக் கேட்டாள்.
சிரிப்பு வந்தாலும் சிரித்தால் அவள் மீண்டும் ஏதாவது கேட்கத் தொடங்கிவிடுவாள் என்பதால் சிரிப்பை அடக்கிக் கொண்டு¸ “சீக்கிரமே வருவாங்க… வர்றவரைக்கும் நீ இப்படி கேட்டு தொந்திரவு செய்யக்கூடாது புரிந்ததா?” என்றான்.
தந்தையின் கோபக்குரலுக்கு பயந்தோ அன்றி அவனது பதிலில் திருப்தி அடைந்ததாலோ என்னவோ… அப்போதைக்கு அம்மா பேச்சை விடுத்து¸ சாலையோரத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள் அவள்.
“அப்பா அந்த மரத்தைப் பாருங்க…” என்று குதூகலத்துடன் மகள் கூறவும்¸ “எந்த மரத்தை?” என்று கேட்டான் அவன்.
“அதோ அங்கே… யெல்லோ கலர்ல நிறைய பிளெவர்ஸ் இருக்கே அந்த மரம்” என்று அந்தப் புறமாக இருந்த மரத்தை சுட்டிக்காட்டினாள்.
மகள்  பார்ப்பதற்காக காரை சற்று நேரம் நிறுத்தியவன்¸ தானும் அதைப் பார்த்துவிட்டு காரைக் கிளப்பினான்.
“அந்த மரத்தோட பெயர் சரக்கொன்றை… நம்ம வீட்டு முன்னாடியும் அந்த மரம் நிற்கிறதே! நீ பார்த்ததில்லையா?” என்று கேட்டான்.
“இல்லையே! இந்த மாதிரி நிறைய பிளெவர்ஸோட நான் பார்த்ததே இல்லை…” என்றாள். தான் அதைப் பார்க்காமல் விட்டுவிட்டோமே என்ற வருத்தம் இருந்தது அவள் குரலில்.
“அது இதைவிட ரொம்ப சின்ன மரம்டா¸ அதனால பிளெவர்ஸ் குறைவாகத்தான் இருக்கும்…” என்று அவள் கவனிக்காததற்கான காரணத்தைக் கூறினான்.
“அப்படின்னா… நாம இந்த மரத்தை எடுத்துட்டுப் போயி நம்ம வீட்ல வைப்போமா? நிறைய பிளெவர்ஸ் வரும் இல்லப்பா?” என்று அவள் கேட்க கோகுல் பக்கென்று சிரித்துவிட்டான்.
பொதுவாகவே எவ்வளவு மனக்கஷ்டம் என்றாலும் குழந்தைகளைப் பார்த்தாலே அது பாதியாகக் குறைந்துவிடும் என்பார்கள். அவர்களது பொக்கை வாய்ச் சிரிப்போ அல்லது அவர்களது மலர்ந்த முகமோ¸ ஏதாவதொன்று நமக்கிருக்கும் கவலையைப் போக்கிவிடும். அவற்றையெல்லாம் விட அவர்களிடம் பேசும் சந்தர்ப்பம் வாய்த்தால் நமக்கு கவலைகள் இருப்பதே நினைவில்லாமல் போய்விடும்.
மகளது இப்படிப்பட்ட பேச்சுக்களைக் கேட்கும்போது¸ மனக்கவலைகள் பின்னோக்கிச் சென்றுவிடுவது உண்மையே என்பதை அவனும் ஒத்துக் கொண்டான்.
மகளை இறக்கிவிட்டபின் அரிசி மண்டியைப் பார்வையிட்டுவிட்டு¸ காட்டன் மில்லை அடைந்தவனுக்கு மித்ராவின் நினைவு வரவும் அவளுக்கு அழைத்துப் பேசினான்.
கோகுலின் அழைப்பைக் கண்டதும் உடனே எடுத்துப் பேசியவள்¸ “அப்பா சரியாகிட்டாங்கண்ணா… உங்களைப் பார்க்க ஆசைப் படுறாங்க¸ எப்போது வர்றீங்கண்ணா?” என்று கேட்டாள்.
இரண்டு நாள் பொறுத்து வருவதாகக் கூறியவன்¸ தன் அன்றாட வேலைகளில் ஆழ்ந்தான்.
அன்று மாலை அவன் வீடு திரும்பும்போது, அவனது வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாள் நிவேதா.
தற்போது  தான் தனக்குள் எடுத்துக் கொண்ட உறுதியின்படி முயன்று ஏழு மணிக்கு வீடு திரும்பினான் கோகுல். கார் காம்ப்பவுண்டுக்குள் நுழையும்போதே மகளைப் பார்த்தான். வேலைக்காரப் பெண்ணுடைய மகளுடன் விளையாடிக் கொண்டிருந்தவளின் முகத்தில் எப்போதும் இல்லா மகிழ்ச்சித் தெரிந்தது.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி… தனது தாய்¸ தந்தை மற்றும் ஒரு சகோதரனுடன் கோகுலின் வீட்டுக்குப் பின்னால் வசிக்கிறாள். அவளுக்கு கோகுலைக் கண்டாலே பயம். இவனது காரைக் கண்டதும் வீட்டுக்குள் ஓடிவிட்டாள். அவளது இந்த செய்கையைப் பார்த்து சிரித்தவாறே காரை பார்க் செய்தான் அவன்.
காரை பார்க் செய்யும்போது தகப்பனைக் கண்ட நிவேதா¸ காரை விட்டிறங்கவும் அவனை அடைந்து “அப்பா… சீக்கிரம் வாங்க.. வாங்கப்பா¸ வந்து உட்காருங்க…” என்று கையைப் பிடித்திழுத்து ஆரவாரமாக வரவேற்றாள்.
மகளது முகத்தைக் கூர்ந்து கவனித்தான் கோகுல்.
மகிழ்ச்சியான ஏதோ ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஆவல் இருந்தது அந்த முகத்தில். அப்படி இல்லையென்றால்¸ அவனை இந்த அளவுக்கு அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள் என்பது அவனுக்குத் தெரியும்.
“என்ன விஷயம் நிவிக்குட்டி இன்றைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறாய் போல?” என்று கேட்டபடியே சோபாவில் அமர்ந்தவன்¸ அவளைத் தூக்கித் தன் மடியில் அமர்த்தி “ஏதாவது சர்ப்பிரைஸ் இருக்கா?” என்று கேட்டான்.
காபியுடன் வந்த கனகவள்ளி மகனிடம் கப்பைக் கொடுத்துவிட்டு¸ “வந்தவுடனே இன்றைக்கு ஒரு சர்ப்பிரைஸ் இருக்கு என்றாள்… என்னவென்று கேட்டால் நீ வந்த பிறகுதான் சொல்வேன் என்று சொல்லிவிட்டு விளையாடப் போய்விட்டாள்…” என்றார்.
“அவள் ரொம்பவும் சந்தோஷப்படும் படியான விஷயம் என்று நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குத் திரும்பினார்.
அவரைத் தடுத்து¸ “பாட்டி நீங்களும் உட்காருங்க ரெண்டுபேருக்கும் சேர்த்து சொல்கிறேன்” என்று அவரையும் அமரச் சொல்ல அவரும் அவர்களுக்கருகில் அமர்ந்தார்.
தாயும் மகனும் சேர்ந்து நிவேதா முகத்தையே பார்த்தால்¸ அவள் ஒன்றும் பேசாமல் எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.
“நிவிக்குட்டி கிளாஸ் டெஸ்ட்ல பர்ஸ்ட் வந்தாங்களா இன்றைக்கு? இல்ல ஸ்கூல்ல ஏதாவது பங்ஷனா?” என்று கோகுல் கேள்வி கேட்கத் தொடங்கினான்.
“இல்லை இன்றைக்கு காலையில் பார்த்த மரத்தை நம் வீட்டுக்கு கொண்டு வரணுமா?” என்று கேட்டான் சிரித்தபடி.
“அப்பா நீங்கதான் காலையிலே சொன்னீங்களே! அப்படி ஒரு பெரிய மரத்தை பிடுங்கி வர முடியாதுன்னு… மறந்துட்டீங்களா?” என்று கேட்டாள்.
“அடடா மறந்து போச்சே! அப்படின்னா இது மர விஷயமும் இல்லையா?” என்று கேட்க¸ “ம்கூம்… நான் சொல்ல இருப்பது வேற விஷயம்…” என்றாள் ஏதோ ரகசியத்தைக் கூறப் போவதைப் போன்ற குரலில்.
“என்ன விஷயமென்று சீக்கிரம் சொல்லுடா… அப்போதான் சாப்பிட்டுவிட்டு தூங்கப் போகமுடியும். காலையிலே அப்பா ஆபீஸ் போகணும்¸ நிவி ஸ்கூல் போகணும்… ம்…. சீக்கிரம்…” என்று துரிதப்படுத்தினான் கோகுல்.
“அப்பா இன்னிக்கு காலையில் நான் உங்ககிட்ட அம்மா போட்டோ கேட்டப்போ நீங்க அம்மா பத்தி பேசக்கூடாது சொன்னீங்க…” என்று மகள் சொன்னதும்¸ “ஆமாம் அதற்கென்ன?” என்றான் அவன்.
“ஆனா… நான் இன்றைக்கு அம்மாவை நேரிலே பார்த்தேனே!!” என்று துள்ளினாள் மகள்.

Advertisement