Advertisement

அத்தியாயம் – 3
சில வருடங்களாக எடுக்காமலிருந்ததால் அடர்த்தியாக தூசு படர்ந்திருந்தது. தூசை கை கொண்டு ஒருமுறை தட்ட இருவருக்கும் இருமல் வந்தது. மகள் சிரித்துவிட தானும் அவளுடன் சேர்ந்து சிரித்துவிட்டு¸ ஒரு துணி கொண்டு ஆல்பத்தின் மேல்புறத்தை துடைத்துவிட்டுக் கொடுத்தான். அதிகமாகப் பார்த்திராத ஆல்பத்தின் பக்கங்கள் புதியது போலவே காட்சியளித்தன.
திருமண மாலையுடன் பட்டு வேட்டி¸ சட்டையில் தந்தையைப் பார்த்தவள்¸ அருகில் பட்டுப்புடவையில் அதீத அழகுடனும் பளீரென்ற புன்னகையுடனும் நின்ற தாயையே வெகுநேரம் பார்த்திருந்தாள்.
பளீர் புன்னகையுடன் உடைய தாயாரின் பெரிதாக்கப்பட்டிருந்த புகைப்படத்தை முத்தமிட்டவள்¸ “அம்மா அழகு இல்லப்பா…?” என்று தகப்பனிடம் சொன்னாள்.
மகளிடம் விளையாட எண்ணி “அம்மா அழகா….இல்லையா?” என்று கேட்டான்.
“ம்… என் அம்மா ரொம்ப ரொம்ப அழகு… என்னை மாதிரியே” என்று தன்னையும் சேர்த்துக் கொண்டாள்.
தகப்பன் சிரித்துவிட “அம்மா எப்ப வருவாங்கப்பா?” என்று ஏக்கத்துடன் கேட்டாள்.
“போச்சுடா!!” என்று அவன் தலையில் கைவைத்துவிட¸ “என்னாச்சுப்பா… தலைவலிக்குதா? நான் மருந்து போட்டுவிடட்டுமா?” என்று கேட்டாள் அவள்.
மகளின் கைகளைப் பற்றி இதழில் ஒற்றிவிட்டு “உன் அம்மா ரொம்ப சீக்கிரமே நம்மகிட்ட வந்துடுவாங்க… இப்ப அப்பாவுக்கு தூக்கம் வருது¸ தூங்கலாமா?” என்று கேட்டு மகளைப் படுக்க வைத்து தானும் படுத்துக் கொண்டான்.
குழந்தை முகம்பார்க்கத் தொடங்கியதிலிருந்தே தாயைப் பார்த்ததில்லை. அதனால்தான் தாயை அதிகமாகத் தேடுகிறாள் என்றெண்ணியவன் மகளைத் தட்டிக் கொடுத்தவாறு தானும் தூங்க முயன்றான்.
ஆனால்¸ மகள் தூங்கி வெகுநேரமான பின்னரும் அவனால் தூங்க முடியவில்லை. அவளது நியாபகம் அதிகமாக வரக்கூடும் என்ற காரணத்தாலே அவன் திருமண ஆல்பத்தை பார்ப்பதில்லை. இன்று கண்களை மூடினால் அவள் முகமே வந்து நின்று இம்சை செய்தது.
தூக்கத்தின் இடையில் ஏதோ சத்தம் கேட்டு விழித்தால்¸ “அம்மா…! அம்மா…!” என்று பிதற்றிக் கொண்டிருந்தாள் நிவேதா. அவளைத் தூக்கித் தன் மார்மேல் போட்டு தட்டிக் கொடுத்து தூங்க வைத்தான்.
மறுநாள் காலையில் அவளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது¸ ஒரு கடையிலிருந்த விளையாட்டுக் காரைக் காட்டி “அப்பா எனக்கு அந்த கார் வாங்கித் தருவீங்களா?” என்று கேட்டாள்.
“ம்ம்… ஈவ்னிங் வரும்போது வாங்கிட்டு வர்றேன்டா…” என்றவன்¸ “ஏன் உனக்கு இந்த கார் பிடிக்கலையா?” என்று கேட்டான்.
“ஐயோப்பா…!!” என்று சிரித்தாள் நிவேதா.
சற்றுநேரம் சிரித்துவிட்டு “அப்பா… அது குட்டி கார். நான் எங்கெல்லாம் போறேனோ அங்கெல்லாம் தூக்கிட்டுப் போகலாம். ஆனா… இந்த காரை உங்களால எங்கேயும் தூக்கிட்டுப் போகமுடியாதே..!” என்று பேசிக் கொண்டே இருந்தவள்¸ சிந்தனையுடனே “இந்த கார் நம்மளை எவ்வளவு தூரம் தூக்கிட்டுப் போய் விடுது.. பாவம் இல்லப்பா..?” என்று காருக்காக பரிதாபப்பட்டாள்.
மகளது பரிதாபத்தைக் கண்டதும் அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
குழந்தைகள் என்றாலே இப்படித்தான்… உயிரில்லாத பொம்மையிடம் அன்பு காட்டுவது போல உயிரில்லாத ஒரு பொருளுக்காக பரிதாப்படுவதும் அவர்களது இயல்பாகிவிட்டது.
இருந்தாலும் அவளுக்குப் புரிகிற அளவுக்கு காரின் உயிரற்ற தன்மையை எடுத்துக் கூறி பள்ளியில் இறக்கிவிட்டான்.
தன் வழக்கமான பணிகளில் ஈடுபட்ருடிந்தபோது¸ வெகுநாட்களாக தொடர்பின்றி இருந்த ஒரு நபரிடமிருந்து அழைப்பு வந்தது.
போனை ஆன் செய்து “சொல்லு மித்ரா… என்ன விஷயம்?” என்று கேட்டான்.
எதிர் முனையிலிருந்தவள் எப்படி சொல்வதென்று தெரியாமல் “அண்ணா..!” என தயங்கினாள். “சொல்லும்மா…” என்று பரிவுடன் அவன் கேட்கவும் அழுதுவிட்டாள்.
தங்கை வீட்டாரின் மேல் கோபமிருந்தாலும் அங்கு எதுவும் பிரச்சினையோ என்று பயந்தவன்¸ “மித்ரா என்னாச்சு? ஏன் அழறே? என்னாச்சுன்னு நீ சொன்னாத்தானே எனக்குத் தெரியும்… சொல்லும்மா…” என்றான் மென்மையாக.
அவள் மீண்டும் அழத் தொடங்கவும் “மித்ரா!” என்றான் அதட்டலாக.
அழுகையை நிறுத்திவிட்ட போதும் அவள் எதுவும் சொல்லாமலே இருக்கவும்¸ “என்ன விஷயமென்று சொல்வதாக இருந்தால் சொல்லு… இல்லையென்றால் போனை வைத்துவிடு எனக்கு நிறைய வேலையிருக்கிறது” என்றான் சற்று கோபத்துடனே.
தமையன் கோபப்படத் தொடங்கியதும்¸ தன்னை திடப்படுத்திக் கொண்டு விஷயத்தை கடகடவென்று ஒப்புவித்துவிட்டாள்.
விஷயம் இதுதான்.
மித்ராவின் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவளது அண்ணனுக்கு போன் செய்து விபரம் தெரிவிக்க¸ எங்களால் பணம் செலவழிக்க முடியாது என்று சொல்லிவிட்டாள் அண்ணி யமுனா.
“அண்ணா.. நீங்கதான் அப்பாவைக் காப்பாத்தணும். பழசு எதையும் மனசுல வைச்சுக்காதீங்கண்ணா… உங்களைத் தவிர எனக்கு வேற யாரையும் தெரியாது. நீங்கதான் அப்பாவைக் காப்பாத்தணும்…” என்று அவள் அழுது கொண்டே சொல்லவும்¸ “டாக்டர் என்ன சொன்னார்?” என்று விபரம் கேட்டான்.
அழுகையினூடே “ஹார்ட்ல ரெண்டு இடத்துல பிளாக் இருக்குதாம்… உடனே ஆபரேஷன் செய்து அதை நீக்கினாத்தான் அப்பா பிழைப்பாராம்¸ இல்…” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்பே “எந்த ஹாஸ்பிட்டல்?” என்று கேட்டான்.
அவள் சொன்னதும் “சரி நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லி போனைத் துண்டித்துவிட்டான்.
தேவையான அளவு பணத்தை எடுத்துக் கொண்டவன்¸ தன் தாயாருக்கு சொல்வதா¸ வேண்டாமா என்று யோசிக்க… மருத்துவமனையிலிருந்து வந்தபின் சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து சொல்லாமலே விடுத்தான்.
காட்டன் மில்லிலிருந்து வெளியேறும் முன்னரே பேச வேண்டிய டாக்டர்களிடம் பேசி ஆபரேஷனுக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டான்.
கோகுல் மருத்துவமனையை அடைந்து விசாரிக்கும்போது ஆபரேஷன் முடிகிற நெரம்தான் என்றாள் ரிசப்ஷனிஸ்ட். பணத்தைக் கட்டி ரசீதை பெற்றுக் கொண்டவன்¸ ஆபரேஷன் நடக்கும் அறை நோக்கிச் சென்றான்.
மித்ராவும் அவள் தாயாரும் வாய் பொத்தி அழுகையை அடக்கியவாறே சுவற்றில் சாய்ந்து டாக்டரின் வருகைக்காக காத்து நின்றனர்.
“மித்ரா!” என்று தங்கையின் தோளில் கைவைத்து அழைத்ததும் “அண்ணா…!” என்று அவன் தோளில் சாய்ந்து அழத்தொடங்கிவிட்டாள்.
அவளது கூந்தலை மிருதுவாக வருடியவாறே எதுவும் பேசாமல் கோகுல் சித்தியை பார்த்திருக்க¸ “அப்பா எங்களை எப்படி பயமுறுத்திட்டார் தெரியுமாண்ணா? எப்பவும் போல காலையில் பேப்பர் வாசித்து¸ சாப்பிட்டுவிட்டு வெளியே போகும்போது தண்ணீர் கேட்டாருன்னு அம்மா கொண்டு போனாங்க… திடீர்ன்னு நெஞ்சை பிடிச்சிக்கிட்டு விழுந்துட்டார்” என்று காலையில் நடந்ததை கூறினாள்.
சொல்லி முடித்தபின்னரும் அவளது அழுகை நிற்கவில்லை என்றதும் “சரி.. சரி… அதுதான் ஆபரேஷன் நல்லபடியா முடிந்தால் எல்லாம் சரியாகிடும் என்று  டாக்டர் சொன்னாரே… அத்தோடு ஆபரேஷனும் இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிந்துவிடும். அப்புறமும் என்ன அழுகை?” என்று சற்று கடுமையுடன் பேசி அவளை இயல்பு நிலைக்கு கொண்டுவர முயன்றான்.
அவனது பேச்சை தவறாக எடுத்துக் கொள்ளாதவள் சிரித்தவாறே கண்களைத் துடைத்துக் கொண்டு தமையனின் தோளிலிருந்து விலகி நின்றாள்.
அதுவரை கணவனை எண்ணி பயந்து கொண்டிருந்த மித்ராவின் தாயார் வசுமதி¸ கோகுலின் பேச்சைக் கேட்டதும் தானும் தெம்புற்று “உண்மையாகவே இனி பிரச்சினை இல்லையாப்பா?” என்று கேட்டார்.
“நீங்களே பாருங்க… இன்னும் ஐந்து நிமிஷத்துல டாக்டர் வந்து எல்லா பிளாக்கையும் நீக்கியாச்சு.. நீங்க சீக்கிரமே வீட்டுக்குப் போயிடலாம்ன்னு சொல்லப் போகிறார்” என்று அவன் சாதாரணமாகப் பேசவும்¸ அவருக்கும் எல்லாம்  நல்லபடியாகவே முடியும் எனத் தோன்றிவிட தன் மகனைப் பற்றிப் பேசினார்.
“நாங்க உனக்கு எவ்வளவு கெடுதல் செய்திருந்தும் நீ எங்களுக்காக வந்திருக்கே…! ஆனால் நான் பெத்துப் போட்ட அந்த கடன்காரனுக்கு அப்பாவோட உயிர் முக்கியமாப்படல… அவன் பொண்டாட்டி பேச்சுதான் முக்கியமாப் போச்சு” என்று சொல்லி அழுதார்.
“என்ன சித்தி இது? தைரியமா இருக்க வேண்டிய நீங்களே இப்படி அழுதால், பாவம் மித்ரா என்ன செய்வா? இப்படி நீங்களும் அழுது அவளையும் பலவீனமாக்காதீங்க…” என்றான்.
வசுமதி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட அதே நேரத்தில் ‘ஆபரேஷன் சக்சஸ்’ என்னும் விதமாய் அறை வாசலில் இருந்த பச்சை விளக்கு ஒளிர்ந்தது.
மருத்துவர் வெளியே வந்து ஆபரேஷன் நல்லபடியாக முடிந்ததாகக் கூறியதும்¸ மித்ரா கோகுலைக் கட்டிப்பிடித்து “தேங்ஸ் அண்ணா…” என்றாள்.
சிரித்தவாறே அவர்களிடம் வெங்கட்ராமனை நன்றாக கவனித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, மருத்துவருடன் சென்று இனி எந்த பிரச்சினையும் இல்லை என்பதை அறிந்து வந்து இருவரிடமும் அதைத் தெரிவித்துவிட்டு விடைபெற்றுக் கிளம்பினான்.

Advertisement