Advertisement

அத்தியாயம் – 2
மகளின் பள்ளியிலிருந்து கிளம்பி நேராக அரிசி மண்டிக்கு சென்றான் கோகுல்.
தந்தை காலத்திற்கு முன்பே குடும்பத்தினர் ஈடுபட்டிருந்த தொழிலை தான் தலையிட்ட பின்னர் விரிவுபடுத்தினான். தரமான நெல் மூட்டைகளை நேரடியாக விவசாயிகளிடமிருந்தே மொத்தமாக வாங்கி¸ அவற்றை அவித்து¸ காயப் போட்டு¸ அரைத்தபின் அதிலிருக்கும் தவிடு¸ உமி நீக்கி… சிறுகல் கூட இல்லாத அளவுக்கு நன்கு பாலிஷ் செய்யப்பட்ட முதல்தர அரிசி¸ அவற்றைத் தயார்படுத்தி சந்தைக்குக் கொண்டு செல்வது அவர்களது தொழில்.
அரிசியிலிருக்கும் தவிடு¸ உமி¸ கற்கள் போன்றவற்றை நீக்கக்கூடிய தரமான பெரிய மிஷின்களை அவன் பல லட்சங்கள் செலவு செய்து ஜப்பானிலிருந்து வரவழைத்து வேலைகளை சுலபமாக்கியதில் தொழிலாளர்களுக்கும் மகிழ்ச்சி.
எந்திரங்களைக் கொண்டு வந்துவிட்டதால் அவன் எந்த பணியாளரையும் பணி நீக்கம் செய்துவிடவில்லை. அவரவர்க்கு ஏற்ற வேலையை பகிர்ந்தளித்து வேலை நீக்கம் செய்யாதவாறு பார்த்துக் கொண்டான்.
அவர்கள் கம்பெனி அரிசிக்கு மார்க்கெட்டில் நல்ல மதிப்பு உண்டு. எனவே தொழில் தடைபடாமல் நடைபெற்றது. நாள்தோறும் காலை¸ மாலை என இருவேளையும் பார்வையிட்டு மேனேஜர் மற்றும் மேற்பார்வையாளரிடம் பேசிவிட்டு திருநெல்வேலி டவுணில் இருக்கும் காட்டன் மில்லை கவனிக்கச் செல்வான்.
அவர்களது காட்டன் மில்லிலிருந்து தமிழகத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் மற்றும் சில மாநிலங்களுக்கும் கூட துணி நெய்வதற்குத் தேவையான நூல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாரத்தில் ஒருநாள் தொழிற்சாலைகளில் மோட்டார் ஓட்டக்கூடாது என்று அரசு அறிவித்ததைத் தொடர்ந்து ராட்சத ஜெனரேட்டர்களை வாங்கி தொழில் பாதிப்படையாமல் பார்த்துக் கொண்டான்.
அவர்களது ராமன் காட்டன் மில்லில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் இருபாலரும் இருந்தனர். அனைவருக்கும் மாதத்தின் நான்கு நாட்கள் விடுமுறையும்¸ பண்டிகைகால விடுமுறை மற்றும் போனசும் தவறாமல் வழங்கினான்.
இங்கும் வேலைகளை கவனிக்க சரியான பதவியில் திறமையான ஆட்களை அமர்த்தியிருப்பதால் பிரச்சினை கிடையாது. அதற்காக அவன் பாராமலும் இருந்துவிட முடியாதே. எனவே தினமும் பணிகளை மேற்பார்வையிடுதல் செய்வதைத் தொடர்ந்தான்.
இவையிரண்டையும் விடுத்து அவனுக்கு தினசரி அலுவலகப் பணிகளும்¸ கொடுக்கப்பட்ட ஆர்டர் குறித்து பிற நபர்களை சந்தித்துப் பேசுவது¸ நூலுக்குத் தேவையான தரமான காட்டனை பணியாளர் உதவியுடன் பார்வையிட்டு வாங்குவது எனப் பல வேலைகள் இருந்தன.
இவற்றால் அவனுக்கு மகளைப் பற்றி சிந்திக்க அதிக நேரம் கிடைத்ததில்லை. இன்றுதான் அவளுக்கும் தன்னிடம் பேச நிறைய விசயங்கள் இருக்கும். ஆனால்¸ அவன் காலையில் சீக்கிரமாகவே கிளம்பி இரவு வீடு திரும்ப அதிக நேரமாவதாலே அவளால் எதையும் பகிர முடியவில்லை என்பதை புரிந்துகொண்டான்.
அப்போதும் இரவு நேரங்களில் அவன் மகளைப் பார்க்க செல்வதுண்டு. ஆனால், ஒரு நாலு வயது குழந்தையால் தினமும் பத்து மணிவரை விழுத்திருப்பதும் இயலுகிற காரியமல்லவே. தூங்கிக் கொண்டிருப்பவளைப் பார்த்துவிட்டு அப்படியே சற்றுநேரம் தோட்டத்தில் உலாவிவிட்டு வந்து தானும் தூங்கிவிடுவான். இதே கதை எந்நாளும் தொடரும்.
“ம்கூம்…” என்று பெருமூச்சொன்றை வெளியிட்டவன்¸ இனி மகளுக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டான்.
அவனது வாழ்வை எண்ணி அவனுக்கே சலிப்பு தட்டியது. ‘என்ன வாழ்க்கை இது? ஒரு சுவாரசியமில்லை¸ மகிழ்ச்சியில்லை¸ ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை’ ஒருவேளை அவன் மனைவி அவனுடன் இருந்திருந்தால் இப்படியெல்லாம் தோணாதிருக்கலாம். ஆனால் அவள்தான் அவர்களுடன் இல்லையே!
தன் வாழ்க்கையை நொந்தபடியே வீட்டிற்குக் கிளம்பினான் கோகுல். காரிலிருந்த சி.டி.பிளேயரை ஓடவிட¸
‘அவள் பறந்து போனாளே! என்னை மறந்து போனாளே!’
என்ற பழைய பாடல் ஒலித்தது. அவனுக்கு அறுபது எழுபதுகளில் உள்ள பாடல்கள் என்றால் பிடிக்கும். இப்போது என்னதான் பாட்டு வருகிறதோ, அநேக பாடல்களின் முதல் வரியைக் கண்டுபிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும்.
  
நிவேதாவின் பள்ளிக்கூடம் வீட்டுக்கு அருகாமையிலேயே இருப்பதால் அவள் சீக்கிரமே வீடு திரும்பிவிடுவாள். அவனுக்கும் அரிசி மண்டி சற்றுதூரத்தில் தான் இருந்தது. ஆனால்¸ மில்லை அடைய அவன் அரைமணி நேரத்திற்கும் அதிகமாக பயணிக்க வேண்டியிருந்தது.
மகளுடன் செலவிட நேரம் ஒதுக்க எண்ணியவன்¸ அன்று வெகுவிரைவில் வீடு திரும்பிவிட்டான்.
  
வீட்டிற்குள் நுழையும் போது அவனது தாயார் பேத்தியுடன் அமர்ந்து ‘போகோ’ சேனல் பார்த்துக் கொண்டிருந்தார். மகள் டி.வி.யிலே கவனமாக இருக்க அவளுக்கு பின்புறமாகச் சென்று கண்களைப் பொத்தி சற்றுநேரம் கழித்து கைகளை விலக்கினான்.
யாரென்று கேட்டுப் பார்த்தும் பதில் வராததால் சற்று கோபமாகத் திரும்பியவள் அவனைக் கண்டதும் “அப்பா..!!” என்று கட்டிக் கொண்டாள்.
“இன்னிக்கு சீக்கிரமே வந்துட்டீங்க? தினமும் இப்படியே வாங்கப்பா… நாம மூணு பேரும் சேர்ந்து விளையாடலாம். கவிதா வீட்ல அவ அப்பா¸ அம்மா எல்லாரும் சேர்ந்து விளையாடுவாங்களாம்…. எனக்கும் அப்படி விளையாட ஆசையா இருக்குப்பா.” என்று தன் ஏக்கத்தை வெளியிட்டாள்.
“இனிமேல் அப்பா சீக்கிரமே வந்துவிடுவேன்… வந்ததும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு விளையாடலாம்¸ ஓ.கே.வா?” என்று கேட்டபடி மகளைத் தோளில் தூக்கினான்.
தகப்பனின் தோளில் நன்றாகப் பொருந்திக் கொண்டவள்¸ தன் சந்தேகத்தைத் தெளிவிக்க “ஆனா… நம்மளோட விளையாட அம்மா இல்லையே¸ அம்மா எப்ப வருவாங்க?” என்று கேட்டாள்.
மகளின் கேள்விக்கு பதிலேதும் கூறாமல் அதிர்ந்துபோய் தாயாரைப் பார்க்க¸ அவரும் அவனையே பார்த்தபடி “இன்றைக்கு பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததிலிருந்து இதே கேள்வியைத்தான் என்னிடமும் கேட்டுக் கொண்டிருந்தாள்” என்று சற்று வருத்தத்துடன் கூறினார். தானும் அதைக் கேட்க விரும்பினாலும், மகனுக்காக அவரது மனம் அந்தக் கேள்வியைக் கேட்க விடவில்லை.
தாயாரும் தன் பதிலை எதிர்பார்ப்பார் என்பதை அறிந்திருந்தும்¸ அதைப் பற்றி பேசாமல் மகளிடம் திரும்பி “குட்டிக்கு என்னாச்சு¸ இன்றைக்கு ஏன் திடீர்ன்னு அம்மா நியாபகம்?” என்று கேட்டான்.
“என்னோட படிக்கிற நிறைய பிள்ளைங்களோட அம்மா தினமும் ஸ்கூலுக்கு வந்து அவங்களுக்கு ஊட்டி விடுவாங்கப்பா. எனக்கும் அதேபோல அம்மா கையால சாப்பிட ஆசையாயிருக்கு… சொல்லுங்கப்பா அம்மா எப்ப வருவாங்க?” என்று தகப்பனின்
தாடையைப் பிடித்து கொஞ்சலுடன் கேட்டாள்.
சிரித்தபடியே “நிவிக்குட்டி சாப்பிட்டாச்சா? இன்றைக்கு சோட்டா பீம் என்ன சண்டை போட்டான்?” என்று பேச்சை மாற்றிவிடவும் அவளும் அம்மாவை மறந்து தன்னுடைய கார்ட்டூன் கதாநாயகனைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டாள்.
ஆனால் சாப்பிட்டு முடித்து தூங்கப் போவதற்குமுன் மீண்டும் தன் அம்மா எப்போது வருவாள் என்று கேட்டு அழத் தொடங்கிவிட்டாள்.
மகள் அழுவது நெஞ்சைப் பிசைய¸ அணைத்து ஆறுதல்படுத்தினான்.
“அழாதடா கண்ணம்மா… அம்மா பாட்டி வீட்டுக்குப் போயிருக்காங்க… சீக்கிரமே வந்துடுவாங்க” என்று சொன்னதும்¸ “நாம அங்கே போய் அம்மாவைக் கூட்டிட்டு வந்துருவோமாப்பா?” என்று கேட்டாள்.
“இல்லைடா…” என்று அவன் ஏதோ சொல்லத் தொடங்க¸ அவனது பதிலைக் கேட்காமலே “ஏம்ப்பா…? அம்மா உங்ககூட சண்டை போட்டுட்டாங்களா?” என்று பெரிய மனிதத் தன்மையுடன் கேட்டாள்.
‘இப்படிக் கேட்பவளிடம் என்ன சொல்லித் தப்பிக்க முடியும்?’ என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு¸ மகளை நினைத்து பெருமையாக இருந்தது. இன்னும் ஐந்து வயது கூட முடிவடையவில்லை, அதற்குள் தகப்பனையே பதிலளிக்க முடியாத கேள்விகளால் திணறடிக்கிறாளே என்று.
பெருமிதமாகவே இருந்தாலும் பதிலளிக்க வேண்டியிருப்பதால் “இல்லடா குட்டி… அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரு சின்ன சண்டை” எனவும்¸ “சண்டையில்லைன்னு சொன்னீங்க…?” என்றாள் அவனைப் பேசவிடாமல்.
“நீ நினைக்கிற அளவுக்கு பெரியதில்லைடா… இது ரொம்ப சின்ன சண்டை. அம்மா கோவிச்சிக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டா¸ நான் கூப்பிடப் போனேனா… அப்போ பார்த்து உன் அம்மா பாட்டிக்கு உடம்பு சரியில்லை. சரி கொஞ்சநாள் அங்கேயே இருந்து அம்மாவை பார்த்துக்கோன்னு சொல்லிட்டு வந்தேன். இங்கே நான்… நீ¸ பாட்டி¸ அப்புறம் அப்பாவோட வேலை எல்லாத்தையும் பார்க்கணும். சோ, டைம் கிடைக்காமல் அம்மாவை கூப்பிடப் போகமுடியல” என்று தான் மனைவியை அழைத்து வராததற்கான காரணமொன்றை மகளிடம் கூறி சமாளித்துவிட்டான்.
ஆனால் அவள் அந்த விளக்கத்திலும் சமாதானமடையாமல் “நான் சின்னப் பொண்ணுதானே? என்னை ஏன் அம்மா விட்டுட்டுப் போனாங்க?” என்று சரியான கேள்வியைக் கேட்டாள்.
பேத்தி கேள்விமேல் கேள்விகளைக் கேட்டு மகனைப் பாடாய்படுத்தியபோதும் அவர்கள் பேச்சில் தலையிடாமல் கனகவள்ளி பார்த்திருக்க¸ “பாட்டிக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது அம்மா உன்னை பார்ப்பாங்களா? இல்ல பாட்டியை பார்ப்பாங்களா?” என்று ஏற்றுக் கொள்ளத்தக்க பதிலை கேள்வியாக்கினான்.
யோசனையுடனே “ஆனாலும்… அம்மாவைப் பார்க்காமல் நான் அழுதால் அதுவும் கஷ்டமாத்தானே இருக்கும். அப்புறமும் ஏன்ப்பா அம்மா என்னை விட்டுட்டுப் போனாங்க?” என்று அதிலேயே நின்றாள்.
தன் வேதனையைக் காட்டாமல் மகளது கூந்தலை மெதுவாகக் கோதிவிட்டவாறு “நானும் பாட்டியும் உன்னைப் பார்க்காமல் எப்படிடா இருப்போம்? அதனால் நான்தான் உன்னை அனுப்பவில்லை” என்றான்.
“எனக்கு அம்மாவைப் பார்க்க ரொம்ப ஆசையாயிருக்குப்பா…” என்றவள்¸ முதல்நாள் பள்ளியில் பார்த்திருந்த ஆசிரியையின் திருமண ஆல்பத்தின் நினைவில் “அப்பா! உங்க கல்யாண ஆல்பம் இருக்குமில்லையா¸ அதை எடுங்கப்பா… நான் அம்மா போட்டோவைப் பார்க்கிறேன்” என்றாள் தாயாரையே பார்க்கப் போவதைப் போன்ற குதூகலத்துடன்.
அவன் தாயாரைப் பார்க்க “நீங்களும் வாங்க பாட்டி…” என்று அவரது கையையும் பிடித்தாள்.
“இல்லை நிவிம்மா நீங்க ரெண்டுபேரும் பாருங்க¸ பாட்டிக்கு தூக்கம் வருது” என்று சொன்னவர் மகனைப் பார்த்து தலையசைத்தவாறு தன்னறைக்கு சென்றார்.
மகளுடன் அறைக்குச் சென்றவன் விருப்பமின்றியே பீரோ மேலிருந்த தன் திருமண ஆல்பத்தை எடுத்தான்.

Advertisement